இலக்கியம்கவிதைகள்

காலம் (10)

மீ. விசுவநாதன்

vallamai111-300x1501111

ஒருபாட்டுக் கேட்டேன் உளம்மகிழ்ந்தேன் ; இன்னும்
ஒருபாட்டுக் கேட்டேன் உடலே ஒருதளர்வாய்ப்
போனது ! இந்தப் புரளும் மனந்தானே
போகமாம் வைக்கோல் பொதி. (91) 31.03.2015

அனைவரும் வேண்டும் ; அகம்மலர வேண்டும் !
நினைவிலே நன்றிதான் நின்று பனைபோல
பல்லாண்டு காணவேண்டும் ; பற்றினை நீக்கவும்
கல்மனங் கண்டு கட. (92) 01.04.2015

திராவிட ஆரிய தீண்டத் தகாத
சராசரிச் சண்டையைத் தாண்டி , நிராதர
வானவரின் வாழ்வு வளம்பெற எண்ணினால்
வானம் வசப்படும் வா. (93) 02.04.2015

குல்மோகர், சில்வண்டு, கொல்சிரிப்பு , புல்வெளிகள்,
மல்லிப்பூ , பல்லக்கு , மல்வேட்டி , வில்வித்தை ,
மல்லாரி , கல்யாணி , வல்லூறு , எல்லாமே
சொல்லுக்குள் வில்லடிக்கும் சொல். (94) 03.04.2015

பஞ்சாக மேகம் பறந்து திரியுது ;
குஞ்சாக ஆனை முகனாகக் கொஞ்சம்
தெரியுது ; மாயை திரிந்தேதான் தோன்றும் !
புரிந்தாலே சொர்க்க புரி. (95) 04.04.2015

உண்பதுவும் தூங்குவதும் ஒவ்வொரு நாளுமே
கண்ணெனவே கொண்டவர்க்குக் காலனை எண்ணிப்
பயமிருக்கும் ; தர்மத்தின் பாதையிலே போனால்
பயமிருக்கும் காலனுக்கே பார். (96) 05.04.2015

வாதமும் செய்திடார் ; மௌனியாய்க் கூடத்தில்
ஏதொரு பந்தமும் இன்றியே வீதியில்
காதுகள் வைத்திருப்பார் ; கண்ணே இவர்களே
சாதுபோல் தோன்றும் சதி. (97) 06.04.2015

பள்ளிக்குச் செல்லும் பருவம் கிராமத்தில்
அள்ளிய பாடம் அனந்தமே ; வெள்ளை
உடைக்குள் கருப்பான உள்ளமும் கண்டேன்
எடைக்கெடை எல்லா(ம்) இருக்கு. (98) 07.04.2015

காரியமாய்ப் பேசியும் , காரியம் தீர்ந்ததும்
ஓரிடமாய்ப் பார்த்து ஒதுங்கியே வேறிடம்
சேரத் துடிப்பதுவும் , சேர்ந்து விலகுவதும்
காரிய வாதி கலை. (99) 08.04.2015

எனக்காம் உரைகல் எனதுசெயல் என்றே
உனக்குத் தெரிய உரைக்க மனமில்லை !
என்னை அறிய எளிய வழியாக
உன்னை அறிந்து உயர். (100) 09.04.2015

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க