Blog

  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 22, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு “சூப்பர் 30 – ஆனந்த் குமார்” அவர்கள் 

    Anand_Kumar

    கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வசதி குன்றிய நிலையில், ஆனால் நல்ல ஆர்வமும் கல்வித் திறனும் கொண்டு  பொறியியல் படிக்க விரும்பும் 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காததுடன் தங்குமிடமும் உணவும் கணிதப் பயிற்சியும் கொடுத்து மாணவர்களின் பொறியியல் கல்விக் கனவுகள் நினைவாக உதவும் “சூப்பர் 30” நிறுவனர் “ஆனந்த் குமார்” அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. பொதுநுழைவுத் தேர்வுகள் (The Indian Institute of Technology Joint Entrance Exam – IIT-JEE) மிகவும் கடினமான நுழைவுத் தேர்வுகள் என்று பெயர்பெற்றவை. நான்கு இலட்சத்திற்கும் மேல் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களில் 2.5% மாணவர்களே ஐ.ஐ.டி. யில் கல்விபெற தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அத்தேர்வின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்காகவே இலட்சம் ரூபாய்கள் வரை செலவழித்து பயிற்சி பெரும் செல்வநிலையை உடைய மாணவர்களுக்கு இடையே, தினக்கூலியாக வாழ்வை நடத்தும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இத்தேர்வுக்கான பயிற்சி என்பது ஓர் எட்டாதக் கனவு. இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் உள்ள இடைவெளியால் வாய்ப்புகள் தவறிப் போகும் நிலையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொள்வோர் வெகு சிலரே. அவர்களில் ஒருவரான ஆனந்த் குமார், இந்த மாணவர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்து, இந்திய தொழில்நுட்ப நிலைய நுழைவுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்தி, ஒரு ஆண்டிற்கான முழுச்செலவையும் ஏற்று, அதில் பெரும்பாலானவர்களை வெற்றிபெற வழிசெய்து வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு இவரது சூப்பர் 30 திட்டம் துவக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, 30 மாணவர்கள் 2003 ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தேர்வுக்குச் சென்றார்கள். தொடர்ந்து இந்த ஆண்டுவரை, ஆண்டுக்கு 30 மாணவர்கள் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 390 மாணவர்களுக்கு கட்டணமின்றி, உதவிகளும் வழங்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 85% விழுக்காட்டினர் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று பொறியியல் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள். முன்னூறுக்கும் அதிகமான எளிய மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுத்துவது, அதுவும் யாருடைய நிதியுதவியும் இல்லாத நிலையில் இச்செயலைச் செய்வது ஒரு சாதனை என்பதை மறுப்பதற்கில்லை.

    வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் சென்று தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டால், அவர்களுடன் சேர்ந்து தாமும் மகிழும் பெற்றோர்கள் பலருக்குத் தங்கள் பிள்ளைகள் என்ன சாதனை செய்துவிட்டோம் என இவ்வாறு மகிழ்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை என்பதும்; ஐ.ஐ.டி. என்பதைக் கூட ஐ.டி.ஐ. என்று மாற்றிக் கூறும் அளவிற்குப் பெற்றோர் சிலர் பொறியியல் கல்வி பற்றியே அறிந்திராதவர்கள் என்பதும் ஒவ்வொரு ஆண்டும் வெற்றி பெரும் மாணவர்கள் தரும் நேர்காணல் செய்திகள் அறியத் தருகிறது. இதுவரை பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் குடும்பங்களும் கட்டுமானத் தொழிலில் உள்ளவர்கள், வயலில் வேலை பார்க்கும் தினக் கூலிகள், நடைபாதைக் கடை வைத்திருப்பவர்கள், பெட்டிக் கடை வைத்திருப்பவர்கள், வாடகை டாக்சி வண்டி, ரிக்க்ஷா வண்டி ஆகியவை ஓட்டுபவர்கள், காவல்காரர்கள், வீட்டு வேலை பார்ப்பவர்கள், தையல்வேலை செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள், ட்ரக் மெக்கானிக்கள் என்ற உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. ஆனந்த் குமார் உதாவாது விட்டிருந்தால், திறமையுள்ள இந்த மாணவர்களின் பொறியியல் கல்வி பற்றிய கனவு நிறைவேறாமல் வாழ்க்கையே திசை திரும்பியிருக்கும் என்பதுதான் உண்மையும் கூட.

    இது போன்ற பொருளாதார வசதியற்ற நிலையில் வாழ்க்கையைத் தொடங்கியவரே ஆனந்த் குமாரும். பீகார் மாநிலத்தில் அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்தவர் இவரது தந்தை. ஆனந்த் குமார் ஐ.ஐ.டி. யில் படித்தவர் அல்ல. சிறுவயது முதலே கணிதப்பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டவர், கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் பயின்ற பொழுதே கணித ஆய்வு இதழ்களிலும், ஆய்வு பத்திரிக்கைகளிலும் இவர் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவரது திறமையைக் கண்ட இவரது ஆசிரியர் வெளிநாட்டிற்குச் சென்று படித்து இவரது கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ள ஆலோசனை கூறினார். அதையடுத்து ஆனந்த் குமார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துப் படிக்க இடமும் கிடைத்தது, ஆனால் வெளிநாட்டில் சென்று படிக்கவோ பணவசதி இவருக்கு இருந்திருக்கவில்லை. இவரும் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் முதற்கொண்டு பலரிடம் உதவி கேட்டுப் படியேறி இறங்கியிருக்கிறார், பலனில்லை. அரசியல்வாதிகள் ஆலோசனை வழங்க மட்டுமே தயாராக இருந்திருக்கிறார்கள். குழப்பத்திலிருந்த நேரத்தில் இவரது தந்தையும் இறந்துவிடவே குடும்பப் பொறுப்பை ஏற்றுத் தாய்க்கு உதவ வேண்டிய நிலையில் இருந்தார். கேம்ப்ரிட்ஜ் கல்விக்கு முற்றிலும் வழியில்லாது முற்றுப்புள்ளி விழுந்தது. தனது ஆர்வத்தின் காரணமாக கிடைத்த நேரங்களில் கணிதம் பயிற்சி செய்தாலும் தாயார் தொடங்கிய ‘பப்படம்’ செய்து விற்கும் தொழிலில் தாயுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். தானும் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து ‘இராமானுஜன் கணித கல்வி நிலையம்’ (Ramanujan School of Mathematics) என்ற பள்ளியைத் தொடங்கி கணிதப்பாடம் நடத்தி வந்திருக்கிறார்.

    கட்டணம் செலுத்தி பலர் இவரிடம் பயிற்சி பெற்றுவந்த காலத்தில், கூலித்தொழிலாளியின் மகன் ஒருவர் இவரை அணுகி ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. பொதுநுழைவுத் தேர்வுக்கு இவரிடம் பயிற்சி பெற விரும்புவதாகவும், ஆனால் கட்டணம் செலுத்த வசதி இல்லை என்று சொல்லியிருக்கிறார். அன்று தொடங்கியது “சூப்பர் 30” என்ற இவரது கட்டணமற்ற பயிற்சித் திட்டம். மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை ஒதுக்கி தன்னைப் போன்று வசதியற்ற நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவ ஒரு திட்டம் தயாரித்தார். இவரது அன்னை உணவு தயாரித்து உதவ, சகோதரர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள, இவர் பயிற்சிக் கல்வி வழங்குவதை மேற்கொண்டார். முதன்முறையாக 30 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து 2003 இல் நுழைவுத் தேர்வுக்கு அனுப்பினார். இவர்களில் 18 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. யில் இடம் கிடைத்தது. பின்நாட்களில், 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் பயிற்சிபெற்ற 30 மாணவர்களுமே வெற்றி பெற்றார்கள். இந்த ஆண்டு 25 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள், முப்பதில் ஒருவர் தேர்வு எழுதவில்லை, அதற்குள் ஜப்பான் பல்கலைக்கழகத்தில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு கல்வியைத் தொடரச் சென்றுவிட்டார்.

    super-30-1

    super-30-1a

    Anand_Kumar3

    பொறியியல் கல்வித்திட்டத்தில் அரசு ஏதேனும் ஒரு மாற்றம் அல்லது  திட்டம் அறிவித்தால், உடனே அது   பொருளாதாரத்தில் பின்னடைந்தவர் அல்லது கிராமப்புற பள்ளிமாணவர் வாய்ப்பில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று ஆராய்வது இவரது வழக்கம். விளைவுகள் மாணவர்களுக்கு எதிராக இருந்தால் அதனை அரசுக்குத் தெரிவிப்பதைத் தனது கடமையாகக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் கணிதம் பொறியியல் கல்விகளில் எவ்வாறு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற தனது கோணத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களையும், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும் சந்தித்து விளக்கியுள்ளார்.

                   Photo-1-Shri_Anand_Kumar_meeting_with_Hon_ble_PresidentPhoto-1-Shri_Anand_Kumar_meeting_with_Hon_ble_Prime_Minister4-741x517

    கல்வியில் சிறந்த மாணவர்களையும் சராசரி மாணவர்களையும் தனித்தனியே பிரித்து பள்ளிகளில் பாடம் நடத்துவது சிறந்த மாணவர்களை மேலும் விரிவான வகையில் பாடங்களைப் பற்றி சிந்திக்க வாய்ப்புகளை உருவாக்கும்; கிராமப்புற பள்ளி மாணவர்களின் பின்தங்கிய நிலையை உணர்ந்து அவர்களுக்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வுகளில் மூன்றுமுறை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

    இதுவரை இவரது சூப்பர் 30 வழங்கிய தொண்டைப்  பாராட்டியவர்கள் பல நாடுகளும், உள்நாட்டு அயலக ஊடகங்களும், அரசியல்வாதிகளும், அமைச்சர்களும், பெருந்தலைவர்களும் எனப் பற்பலர். டிஸ்கவரி சேனல், ஜப்பான் தொலைக்காட்சி ஆகியவை இவரது கல்வித் தொண்டைப் பற்றிய டாக்குமெண்டரிகள் தயாரித்துள்ளன. நியூ யார்க் டைம்ஸ், டைம் மேகசின், நியூஸ் வீக் மேகசின், பி.பி.சி. போன்ற அயல்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் இவர்பற்றிய சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பாராட்டைத் தெரிவித்தத்துடன், நிதிஉதவியும் அளிக்க இயலும் என்ற செய்தி அனுப்பியிருக்கிறார். ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகம் இவரது முயற்சியில் உருவான இந்திய மாணவர்களுக்குத் தங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பளிக்க ஆர்வத்தை வெளியிட்டுள்ளது. இவர் சிறப்புரையாற்ற வேண்டும் என்று கோரி பலநாடுகளில் இருந்தும், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம் போன்ற உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்தும் வரவேற்கப்பட்டுள்ளார். உலகின் சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த பள்ளிக்கான விருது போன்ற விருதுகளும் வழங்கப்பட்டு பாராட்டப் பட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதுகளும் பெற்றுள்ளார். கோவையின் கற்பகம் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கிப்  பெருமைப்படுத்தியுள்ளது.

    திட்டத்தை விரிவுபடுத்தி 30 மாணவர்களுக்கு மேல் உதவவேண்டும் என்ற எதிர்காலத் திட்டமும் ஆனந்த் குமாருக்கு உண்டு. இவரது வெற்றியை அறிந்த பின்னர் இவரது திட்டத்திற்கு நிதி உதவி, நன்கொடை வழங்க  எனப் பலர் உதவ முன் வந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் இத்திட்டத்தை தனது சொந்த முயற்சியாக, இராமானுஜம் கணிதக் கல்விநிலையம் மூலம் கிடைக்கும் நிதிகொண்டே நடத்த விரும்புகிறார். ஆனால், இவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி இது போன்ற பல பயிற்சிப் பள்ளிகள் உருவாக்க உதவி செய்து வருகிறார். தற்பொழுது நலிவடைந்த இஸ்லாமிய மாணவர்களுக்கு என்பது போன்று மேலும் சில நிறுவனங்களும் பயிற்சிகள் தொடங்கி வெற்றி பெற்று வருகின்றன. அந்த பயிற்சிப்பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பற்றிய செய்திகளும் “சூப்பர் 30” செய்திகளுடன் சேர்ந்தே வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன், அதையே என் மாணவர்களுக்கும் சொல்லித் தருகிறேன் என்று கூறுகிறார் ஆனந்த் குமார். மேலும் , தெளிந்த மனநிலை, உறுதியான லட்சியம். திட்டமிட்ட பாதை இதுதான் “சூப்பர்-30′ பயிற்சி நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம் என்று கூறும் ஆனந்த் குமார், பொருளாதார வசதியின்மையால் தனது உயர்கல்விக் கனவுகள் தகர்ந்தாலும், தன்னால் இயன்றவரை தனது சொந்த முயற்சியில் வசதிவாய்ப்பு அற்ற மாணவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களது பொறியியல் கல்லூரிக் கனவுகளை நினைவாக்க உதவி  வருகிறார். திரு. ஆனந்த் குமார் அவர்கள் மேலும் பல மாணவர்களுக்கு பயிற்சியளிக்க விரும்பும் திட்டம் வெற்றியடையவும், அவர் முயற்சியால் மேலும் பலரது வாழ்வில் நல்லதொரு திருப்பங்களை ஏற்படுத்தவும் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

    தொடர்பு கொள்ள:
    Postal Address:
    Ramanujan School of Mathematics
    Shanti Kutir, Chandpur Bela, Patna 800 001
    email: mail@super30.org
    Web Site: http://www.super30.org/

    படங்களும் தகவல்களும் வழங்கிய www.super30.org இணையதளத்திற்கு நன்றி.

    Share
  • வள்ளுவர் கூறும் ​நேர ​மேலாண்​மை

    — மு​னைவர் சி.​சேதுராமன்.

     

    வள்ளுவர் கூறும் ​நேர ​மேலாண்​மை
    (Time Management)

     

     

    காலம், ​பொழுது என்று ​நேரத்​தைக் குறிப்பிடுவர். ​நேரம், காலம், ​பொழுது எல்லாம் ஒரு​பொருட் பன்​மொழிகளாகும். சிலருக்கு ​நேரம் ​போதவில்​லை என்பர்; சில​ரோ ​பொழு​தே ​போகவில்​லை என்று கூறுவர். காலத்​தை மு​றையாக ஆளக் கற்றுக் ​கொண்டால் நாம் உயர்நி​லை​யை அ​டையலாம். கால ஆளு​மை என்பது நம்மில் பலருக்கும் இயலாத ஒன்றாக உள்ளது, இன்னும் கூறப்​போனால் காலத்​தை ஆளு​மை ​செய்ய அவர்களுக்குத் ​தெரியவில்​லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.

    காலத்​தை ஆளக் கற்றுக் ​கொண்டவன் ​வெற்றிக​ளைக் குவிக்கிறான். காலத்​தைப் ​போக்கி வாழ்க்​கை​யை ​வெறு​மையாக்கிக் ​கொண்டவர் பலர். அவர்கள் காலத்​தை வி​ரையமாக்கியதால் ​வெறு​மையாகிப் ​போனவர்கள். அன்றிலிருந்து இன்றுவ​ரை காலத்​தைப் ​போற்றிப் பாதுகாக்க ​வேண்டும் என்று நம் முன்​னோர்கள் கூறிப்​போந்துள்ளனர். இலக்கியங்களிலும் கால ​மேலாண்​மை என்பது பரவலாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர்களின் ​பெரு​மை​யைப் ப​றைசாற்றும் திரும​றை நூலாக விளங்கும் திருக்குறள் கால ​மேலாண்​மை​யைக் குறித்து மிகத் ​தெளிவாக எடுத்து​ரைக்கின்றது.

    திருக்குறளில் ​பொருட்பாலில் அரசியலில் அரசனுக்கு இருக்க ​வேண்டிய​வை குறித்து வள்ளுவர் குறிப்பிடும்​போது காலம் அறிதல் என்ப​தையும் மன்னர் அறிந்து ​செயற்படுதல் ​வேண்டும். காலத்​தை ஆளும் திறன் மன்னர்களுக்கு இருத்தல் ​வேண்டும். அப்​போதுதான் மன்னர்கள் நாட்​டை நன்கு திறம்பட ஆள முடியும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

    காலம் அறிதல்:
    காலம் அறிதல் என்ற அதிகாரத்தி​னை விளக்கும் பரி​மேலழகர், “வலியான் மிகுதியுடையனாய்ப் பகைமேல் சேறலுற்ற அரசன், அச்செலவிற்கு ஏற்ற காலத்தினை அறிதல், அதிகார முறைமையும் இதனானே விளங்கும்” என்று உ​ரை வகுக்கின்றார். இத​னை​யே அதன் பின்னர் வந்த அ​னைத்து  உ​ரையாசிரியர்களும் வழி​​மொழிந்துள்ளனர்.

    வள்ளுவர் மன்னர்களுக்கு மட்டும் கால ஆளு​மை​யைப் பற்றிக் கூறியிருக்க மாட்டார்.   ஏ​னெனில் இது  அ​னைவருக்கும் வாழ்விய​லை எடுத்து​ரைக்கும் நூலாக விளங்குகின்றது. கால ஆளு​மை என்பது சிறப்பாக அரசனுக்குப் ​பொருந்துவதாக இருந்தாலும் இன்று வாழும் சாதரணக் குடிமகனுக்கும் ​பொருந்தும். அரசன் முதல் க​டைநி​லையில் உள்ள மனிதர் வ​ரை இந்​நேர ஆளு​மை என்பத​னை அறிந்திருத்தல் ​வேண்டும்.

    காலத்​தை நிர்வகிப்பது என்பது அ​னைவருக்கும் ​கைவந்துவிடாது. அத​னை ஒரு சிலர் தான் நன்கு பின்பற்றுவர். மனிதனுக்குத் ​தெரியாமல் மனிதனிடம் இருக்கும் ​பொக்கிஷம் தான் காலமாகும். இத​னை அறியாது மனிதன் காலத்​தை வீணாக்கிக் ​கொண்டிருக்கிறான். காலம் மனிதனிடத்தில் எந்தவிதமான  ஓ​சையுமின்றி ​பெரிய மாற்றத்​தைச் ​செய்து வருகிறது. இத​னை அ​னைவரும் அறிவர். காலம் வய​தைக் காட்டி வாழ்நா​ளைக் கு​றைக்கிறது.

    காலம் என்பது இருபுறமும் கூர்​மை ​கொண்ட கத்தி ​போன்றது என​வே காலத்​தைச் சரிவரப் பயன்படுத்தாவிட்டால் அக்கால​மே நம்மு​டைய முதல் ப​கைவனாக மாறி விடுகிறது. அ​னைவரும் அறிந்து ​கொண்ட பல ​செயல்க​ளைவிடக் காலவிரயம்   ​என்பது மிகவும் ​மோசமானது என்ப​தை அ​னைவரும் உணர்தல் ​வேண்டும்.

    ஒருவன் இழந்துவிட்ட எ​தையும் ​பெறமுடியும் ஆனால் கடந்த காலத்​தை மீண்டும் ​பெறமுடியாது. நாம் இழந்த பல வாய்ப்புகளுக்குக் காரணம் நம்​மைவிட்டுக் கடந்து ​போன காலம்தான் என்ப​தை நாம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். நாம் ஒரு நாளில் எத்த​னை மு​றை ​நேரதின்​மை​யைக் காரணம் காட்டுகி​றோம் என்பது ஒவ்​வொருவரும் நி​னைத்துப் பார்க்க ​வேண்டிய ஒன்றாகும். சரியான ​நேரத்திற்கு வந்துவிடு என்பது வீடுகளிலும் கல்வி நி​லையங்களிலும் அலுவலகங்களிலும் அடிக்கடி ​சொல்லப்படுகின்ற, அ​னைவ​ரையும் எச்சரிக்கின்ற வார்த்​தைகளாகும். காலங்கடந்து ​போனால் பிரச்ச​னைகளும் ​தே​வையற்ற இ​டையூறுகளும் ஏற்படும். காலதாமதமாக வரும் ​பேருந்திற்காக யாரும் காத்திருப்பதில்​லை. காலதாமதமாக வரும் நாளிதழுக்கு ஒரு​போதும் மதிப்பு கி​டையாது. அ​னைத்து இடங்களிலும்  அ​னைவராலும் காலந்தவறா​மை​யே எதிர்பார்க்கப்படுகிறது.

    ​கையில் இருக்கும் தங்க நாணயத்​தைப் ​போன்று ஒவ்​வொரு விநாடி ​நேரத்திற்கும் மதிப்பு உண்டு. காலத்​தை நாம் எவ்வாறு தங்கமாக, ​வைரமாக, ​வைடூரியமாக மாற்றப் ​போகி​றோம் என்பதில்தான் நம் வாழ்வின் ​வெற்றியின் இரகசியம் அடங்கி இருக்கிறது.

    நாம் ​சேமிக்கும் ஒவ்​வொரு விநாடியும் நம் வாழ்க்​கையின் ஒவ்​வொரு ​வெற்றிப் படிக்கட்டுக்களாகும். நமது ​நேரத்​தை நம்வசப்படுத்தினால் முன்​னேற்றம் என்பது உறுதியாகிவிடும். காலமறிதல் அதிகாரத்திற்கு விளக்கம் கூறவந்த மணக்குடவர், “காலம் அறிதலாவது வினை செய்தற்கு ஆம்காலம் அறிதல். வலியறிந்தாலும் வினை செய்யும் காலமும் அறிந்து செய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது” என்று குறிப்பிடுகின்றார். காலம் அறிதல் என்பது நாட்​டை ஆளும் அரசனுக்கு மட்டுமல்லாது அ​னைவருக்கும் ​உரிய ஒன்றாகும்.

    காலம் அறிந்து ​செயல்படுதல்:
    நாட்​டை ஆளும் மன்னன் காலம் அறிந்து ​செயல்பட ​வேண்டும். அவ்வாறு ​செயல்படவில்​லை எனில் அழிவு ​நேரும். எந்தச் ​செய​லை எந்தக் காலத்தில் ​செய்ய ​வேண்டு​மோ அந்தக் காலத்தி​லே​யே ​செய்தல் ​வேண்டும். அ​தைவிடுத்துக் காலமல்லாத காலத்தில் ​செய்தால் அதனால் இன்ன​லே ​நேரும். வலி​மையாக இருப்பினும் காலமறிந்து ​செயல்படாது ​போனால் ​தோல்வி​யே ஏற்படும். இத​னை,

    “பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
    வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (481)

    “பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
    தீராமை யார்க்குங் கயிறு” (482)

    காகம் தன்னினும் வலிய கோட்டானை அதற்குக் கண்தெரியாத பகல் வேளையில் வென்று விடும். அது போலப் பகைவரைப் போரில் வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கேற்ற காலம் வேண்டும். காலத்தொடு பொருந்த அரசன் வினைசெய்தொழுகுதல்; நிலையில்லாத செல்வத்தைத் தன்னிடத்தினின்று நீங்காவண்ணங் கட்டிவைக்கும் கயிறாம். காலத்​தை அறிந்து நடந்து ​கொள்ளாததால்தான் ​நெப்​போலியன், ஹிட்லர் இருவரும் அழி​வைத் ​தேடிக் ​கொண்டனர். ரஷ்யா மீது காலமல்லாக் காலத்தில்   ப​டை​யெடுத்துச் ​சென்று இருவரும் தங்களுக்குத் தாங்க​ளே அழி​வைத் ​தேடிக் ​கொண்டனர். காலத்தின் அரு​மை​யை இக்குறட்பாக்கள் நமக்குத் ​தெளிவுறுத்துவது ​நோக்கத்தக்கதாகும்.
    ​
    நேர ஆளு​மை:
    காலத்​தை அறிந்து ஒரு ​செய​லைச் ​செய்தால் அது எளிதில் முடியும். காலம் அறிந்து ​​செயல்படும் எவருக்கும் ​செய்ய முடியாத ​செயல் என்று எதுவும் இல்​லை. அவர்கள் மிகவும் சரியாகச் ​செய்து எந்தச் ​செய​லையும் ​தெளிவாக முடித்துவிடுவர். ​நேர ஆளு​மை​யைப் பற்றி,

    “அருவினை யென்ப வுளவோ கருவியாற்
    கால மறிந்து செயின்”(483)

    என்று வள்ளுவர் குறிப்பிடுவது உன்னற்பாலதாகும். இக்குறட்பாவிற்கு உ​ரை​யெழுதிய பாவாணர், “சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின்; அரசர்க்கு முடித்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ? இல்லை” என்று விளக்கிச் ​செல்கின்றார். இன்றுள்ள நி​லையில் அ​னைவரும் உணர்ந்து ​செயல்படுத்த ​வேண்டிய வாழ்க்​கை ​நெறியாக இந்​நேர ஆளு​மை​யை இக்குறளில் வள்ளுவர் கூறியிருப்பது மிகவும் ​பொருத்தமான ஒன்றாகும்.

    உல​கையும் ​வெல்லலாம்:
    காலத்​தை ஆளு​மை ​செய்து தக்க இடம்பார்த்து எந்தச் ​செய​லையும் ​செய்தல் ​வேண்டும். அவ்வாறு ​செய்வார் உலகத்​தை​யே ​வென்றுவிடலாம். காலமும் இடமும் சரியாக அ​மைந்து விட்டால் ​வெற்றி என்பது எளிதில் கி​டைக்கும். இத​னை​யே,

    “ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
    கருதி யிடத்தாற் செயின்”(484)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஒருவன் தகுந்த கால மறிந்து ஒரு ​செய​லை இடத்தொடு பொருந்தச் செய்தால் அவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும். ​நேர ஆளு​மையின் முக்கியத்துவத்​தை இத்திருக்குறள் நமக்குத் ​தெளிவுறுத்துகிறது.

    காத்திருத்தல்:
    வாய்ப்புகளுக்காக நாம் காத்திருத்தல் ​வேண்டும். மண்ணில் விழுந்து மண்மூடிக் கிடக்கும் வி​தையானது எவ்வாறு ம​ழைத்துளிக்காகக் காத்திருக்கிற​தோ அ​தைப் ​போன்று நல்ல வாய்ப்புகள் எப்​போது வரும் என்று ஒருவன் காத்திருத்தல் ​வேண்டும். வாய்ப்புகள் வந்தவுடன் அத​னைப் பயன்படுத்திக் ​கொள்ளுதல் ​வேண்டும். உல​கை ​​வெற்றி ​கொள்ள ​வேண்டும் என்று நி​னைப்பவர் தகுந்த காலத்திற்காகக் காத்திருப்பர். காத்திருக்கி​றோ​மே என்று அவர் கலங்கமாட்டார். ​பொறு​மையாக ஒருவர் காத்திருந்து ​செயல்பட​வேண்டும். இத​னை,

    “காலங் கருதி யிருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர்”(485)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். காலத்​தை ஆளுவதற்கு காத்திருப்பும் ​தே​வை என்பது இக்குறள் எடுத்து​ரைக்கும் ​நேர ஆளு​மை குறித்த கருத்தாகும்.

    இத்திருக்குறளுக்கு உ​ரை எழுதும் பாவாணர், “உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதும் அரசர்; மனக்கலக்கமின்றி; தமக்கு வலிமிக்கிருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி, அது வருமட்டும் அமைதியாகவும் பொறுமையுடனும் காத்திருப்பர்.

    ‘கலங்காது’ என்பது வலிமிகுதியையும் அதனால் ஏற்படும் நம்பிக்கையையும் உணர்த்தும். நட்பாக்கல், பகையாக்கல், பிரித்தல், கூட்டல், மேற் செல்லல், இருத்தல் என்னும் அரசர் அறுவகைச் செயல்களுள், இருத்தல் என்பது மேற்செல்லலின் மறுதலை, ‘காலஞ்செய்வது ஞாலஞ் செய்யாது’, என்பராதலின், ‘காலங் கருதியிருப்பர் ‘என்றார்” என்று உ​ரை வகுக்கின்றார்.

    தெளிந்த அறிவுடைய அரசர் தம் பகைவர் அவர் பகைமையைக் காட்டின வுடனேயே அவரறிய வெளிப்படையாகச் சினங்கொள்ளார்; அவரை வெல்லு தற்கேற்ற காலம் வரும் வரை தம் சினத்தை உள்ளே அடக்கி வைப்பர் என்பத​னை,

    “பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
    துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.”(487)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இங்கு அரசருக்கு மட்டு​மே ​நேர ஆளு​மை குறித்து வள்ளுவர் குறிப்பிடுகின்றார் என்று எடுத்துக் ​கொள்ளக் கூடாது. வள்ளுவர் குறிப்பிடும் ​நேர ஆளு​மை குறித்த இக்கருத்து மாந்தர் யாவருக்கும் ​பொருந்தும் ஒன்றாகும். இது அரசர்க்குரிய கருத்து என்று புறந்தள்ளிவிடுதல் கூடாது. ஏ​னெனில் மக்களாட்சி மு​றை ​செயற்படுத்தப்படும்   இந்நாளில் அ​னைவருக்கும் வள்ளுவர் கூறும் இக்கருத்துப் ​பொருந்தும்.

    எந்த ​​​நேரத்திலும் நாம் ​பொறு​மை இழக்கக் கூடாது. நமக்கான ​நேரம் வரும் வ​ரை நாம் ​பொறு​மையுடன் காத்திருத்தல் ​வேண்டும். ​கொக்கு எவ்வாறு காத்திருந்து தனக்கான மீன் வரும்​போது அத​னைக் ​கொத்தித் தின்று தனது பசி​யைப் ​போக்கிக் ​கொள்கிற​தோ அ​தைப் ​போன்று நாம் தகுந்த காலம் வரும்வ​ரை காத்திருந்து ​செயலாற்ற ​வேண்டும். இத​னை,

    “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த விடத்து”(490)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ​நேரத்தின் அரு​மை அறிந்து அ​னைவரும் அத​னைத் திட்டமிட்டு ஆளக் கற்றுக் ​கொள்ள ​வேண்டும். இந்​நேர ஆளு​மை​யை​யே வள்ளுவர் காலம் அறிதல் என்று குறிப்பிடுகின்றார். ​நேரம் ​பொன்​போன்றது எனபர்; ஆனால் அது உயிர் ​போன்றது.

    தவறவிட்ட காலமும் தவறிய உயிரும் மீளப் ​பெற முடியாது. இத​னை உணர்ந்​தே வள்ளுவர் காலம் அறிதல் என்று அந்த அதிகாரத்திற்குப் ​பெயரிட்டுள்ளார். காலத்​தை அறிந்தால் மட்டு​மே ​செயற்படுத்தி வாழ்வில் அத​னைப் பயன்படுத்திக் ​கொள்ள இயலும். ​நேரத்​தைச் சரியாகப் பயன்படுத்தினால் மட்டு​மே வாழ்வில் உயர முடியும். வள்ளுவர் கூறுகின்ற மு​றையில் ​நேரத்​தை ஆளக் கற்றுக் ​கொண்டு வாழ்வில் வளம் ​பெறு​வோம்.

     

     

    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத்து​றைத் த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),
    புதுக்​கோட்​டை-1
    E-mail: Malar.sethu@gmail.com

     

    Share
  • உறவுகளும் விரிசல்களும்!

    -துஷ்யந்தி

    இன்னும் இருக்கின்றோம்
    உண்மை உணராதவர்களாய்!

    உறவென்று நினைத்தவர்கள்
    நம்மை –
    பொருட்படுத்துவதே இல்லை                         relationship and breakups
    வாசல்வரைவந்து  அவ்வப்போது
    காலைவாரி விடுபவர்கள்!

    புதிய உறவுகள் வந்து
    பெரிதாய்க் கிழித்துவிடும்
    என்றிருக்க,
    பொய்களுக்குக் கூட
    அவர்கள் முலாம்
    பூசிவிட்டார்கள்!

    ஏமாறுவது – எங்கள்
    இரத்தத் துணிக்கையாய்!

    உண்மைகள் ஏராளம்
    கட்டுப் படுத்துகையில்-

    மனிதாபிமானம் எமக்குள்
    உன்னிப்பாய் இருக்கையில்-

    இயற்கையைச் சிலநேரம்
    மலைக்க வைக்கும் போது-

    மாறிவிட்டேன்
    மறந்துவிட்டேன்- என
    உறவுகள் கொஞ்சம் தலைகாட்டும்!

    மாங்காய்க் கொட்டைக்குள்
    பத்திரமாய் அடங்கிக் கிடக்கும்
    வித்தின் பருப்பு போல,
    தேசியக் கடலுக்குள்
    இணையப்படாத கிணறாக,
    சின்னச் சுகங்களிலே
    சந்தோஷம் கண்டுகொண்டு
    இன்னும் இருக்கிறோம்
    உண்மை உணராதவர்களாய்
    உறவுகளில் விரிசல்களாய்!!

    ***

    படத்திற்கு நன்றி: கவிதை வயல்

     

    Share
  • ஓய்வூதியம்

    – எஸ்ஸெம்  நிலாம், இலங்கை

    ஒப்பந்தத்தில்
    ஒப்பமிடும்போதே
    இளமை முழுவதையும்
    குத்தகைக்கு
    எடுத்து விடுகிறார்கள்!

    உடம்பின்
    வலுவத்தனையையும்
    பூரணமாய்ச்
    சுரண்டி விட்டு
    முடிவில்…
    விட்டெறியும்
    பிச்சைக் காசு!

    சுதந்திர வாழ்க்கையைச்
    சுத்தமாய்ச்
    சிறையெடுத்து விட்டு
    “இப்படித்தான்”
    வாழுவென
    ஆணை வேறு!

    இருக்கும்போதே
    எதையுமே செய்ய
    இயலுவதில்லை
    ஈற்றில் இதைப்
    பெற்று எதைக்
    கிழிப்பது?

    ஒன்றுமில்லாததற்குத்தானே
    உள்ளமும்
    நாயாய் பேயாய்
    அலைகிறது

    அடுத்த நொடியே
    நமக்கில்லையெனும்போது
    அதற்குள்
    நாளையை
    நம்புகிறோம்!

    மழையாய் வெயிலாய்
    காற்றாய் தீயாய்
    காலமாய் நிரந்தரமற்றது
    யாக்கையும் வாழ்க்கையும்!

    வேலையிலுள்ளபோதே
    அடிபணிந்து அவமானப்பட்டு
    கேவலப்பட்டே பெறுகிறோம்
    எச்சில் காசை!

    ஓய்வைப் பெறுகையில்
    நிறைய நோய்களையும்
    சேர்த்தே பெறுகிறோம்!

    மருந்துக்கே போதாது
    இந்தப் பாதிப் பணம்?
    பிறகெப்படி
    வாழ்க்கை வண்டி
    சீராய் ஓடும்?

    “ஓய்வூதியமென்ற”
    ஒற்றை மந்திரத்திற்காய்
    ஆயுளின் பாதியைத்
    தாரை வார்க்கிறோம்;
    வாழ்வின் தருணங்களைத்
    தரைமட்டமாக்குகிறோம்!

    இருந்தும் இந்தக்
    குரங்கு மனசும்
    அதைத்தானே நாடுகிறது,
    அரசு வேலையைத்தானே
    தேடுகிறது!

    Share
  • ஒரு கவிதையின் பிரசவம்!

    -இரா.சந்தோஷ் குமார்

    இது சுயப் பிரசவம்
    வினோதப் பிரசவம் 

    காலில் சலங்கை கட்டிக்கொண்டே
    சத்தமில்லாமல் சில
    களவாடும் நிகழ்வும்
    அவ்வப்போது நிகழும்!

    கற்பனைக் கன்னியைக்
    கட்டியணைத்துக்
    கலவியில் ஈடுபடும்
    ஒற்றை ஜீவன்
    கருத்தரிப்பின் போது
    உலக உருண்டையினைக்
    கர்ப்பப்பையாக
    ரகசிய உடன்பாட்டில்
    கைகுலுக்கிக்கொள்ளும்!

    பத்தாவது மாதத்தில்
    அல்லது
    பத்தாவது நிமிடங்களில்
    அல்லது
    பத்தாவது நாளில்
    சில சமயம்
    பத்தாவது நாழிகையில்
    அரிதாகப்
    பத்தாவது திங்களிலும்
    பிரசவக் குத்தின்
    தீவிரத்தினால்
    பிரசவ சிகிச்சை
    மூளை அறையில்
    நடந்தேறும்! 

    உருவாகிய சிசுவின்
    அவசர உதையில் எழும்பும்
    சிந்தனைத்தாய் கதறலொலி
    மெளனக் காதுகளில்
    கேட்டுக்கொண்டிருக்கும்!

    ஒரு குடுவை
    அமிலத் திரவத்தினுள்
    சிக்கித்தவிக்கும்
    பூச்சியினைப்போல
    நாடி நரம்புகள்
    துடிதுடிக்கும்!

    துடித்திட்ட நரம்புகளினூடே
    உலக உருண்டையிலுள்ள சிசு
    மூவிரலுக்கு வந்துவிழும்
    அந்த நொடியில்… 

    பேனா மருத்துவச்சியால்
    எழுத்து உடலோடு
    மொழி உயிரோடு
    ஒரு கவிப்பிள்ளை
    காகிதத் தொட்டிலில்
    பிரசவம் செய்திருக்கும்! 

    உண்மையில்
    கவிதை மழலையுடன்
    விமர்சனங்களில்
    மரணித்த
    ஒரு கவிஞனும்
    பிரசவமாகியிருப்பானாம்!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (18)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11425292_850420451678822_1064748056_n

    122677713@N07_rதிரு. திவாகரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.06.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • விபத்தின் முகமாய் இருக்கிறது!

    -கவிஜி

    காடு தேடும் பாதையைத்
    தொலைத்த பாதங்களே
    கண்டு பிடிகின்றன!

    ***

    வளைந்து கொண்டே
    சென்ற மனதில்
    சட்டெனப் புகுந்த முடிதல்
    ஒரு விபத்தின்
    முகமாய் இருக்கிறது!

    ***

    நிறங்களின் கதைகளில்
    கருப்பு வெள்ளை
    நாயகனும் வில்லனும்!

    ***

    பலியாடுகளின் தேசத்தில்
    ஒரு கத்தியாவது 
    உடைந்து கிடக்க, வேண்டும்
    அய்யனார்
    மீசை முறுக்காதவராக
    இருக்கிறார்!

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 43

    ​அஞ்சல்தலை அருங்காட்சியகம், வாடூஸ், லிக்ஸ்டஸ்டைன்

    சுபாஷிணி

    இளம் பிராயத்தில், பள்ளியில் படிக்கும் காலங்களில், அஞ்சல் தலை சேகரிப்பு என்பது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காக, பலருக்கும் இருந்திருக்கும். எனது அனுபவத்திலும் அப்படியே. முன்பெல்லாம் இணைய வசதி என்பது இல்லாத சூழலில், ஈமெயில் என்பதே என்ன என்று தெரியாத காலகட்டத்தில், வீட்டில் பெற்றோருக்கு வருகின்ற எல்லா கடிதங்களையும் பார்க்கும் போது அதிலிருக்கும் அஞ்சல் தலைகள் தான் என் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தன. கடிதத்தில் இருக்கும் அஞ்சல் தலையை வெட்டி அதனை தண்ணீரில் லேசாக நனைத்து தாளிலிருந்து அகற்றி பின்னர் மிதமான வெயிலில் உலர்த்தி அஞ்சல் தலை சேர்க்கும் ஆல்பத்தில் சேர்த்து விடுவது என் வழக்கம். நம்மில் பலரும் இதே போல செய்தது இப்போது நினைவுக்கு வரலாம்.

    அஞ்சல் தலைகளில் பல்வேறு வடிவங்கள் இருக்கின்றன. பொதுவாக நாம் பார்க்கும் பல அஞ்சல் தலைகள் சதுர வடிவமானவை என்றாலும், நீள் சதுரம், முக்கோணம், வட்டம், என்ற வடிவிலும் அஞ்சல் தலைகள் வெளியிடப்படுகின்றன. சிறப்பு வெளியீடுகளாக வருகின்ற அஞ்சல் தலைகள், அதாவது சுதந்திர தின வெளியீடு, முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் வெளியீடு, அல்லது முக்கிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பற்றிய செய்தியை பரவலாக்கும் வகையில் வெளியிடப்படும் அஞ்சல் தலைகள் ஆகியவை அஞ்சல் தலைகள் சேகரிப்போரின் கவனத்தை எப்போதுமே ஈர்க்கத் தவறுவதில்லை.

    asu4

    ​அஞ்சல் அட்டைகள் – இதே அருங்காட்சியகத்தில்

    உலகளாவிய அளவில் அஞ்சல் தலை சேகரிப்பு என்பது சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களாலும் விரும்பி மேற்கொள்ளப்படும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. தனி நபர் அஞ்சல் தலைகள் சேகரிப்பு என்பது ஒரு புறமிருக்க, அரசே அஞ்சல் தலைகள் சேகரிப்பிற்காக அருங்காட்சியகங்களை அமைத்து பராமரிப்பதும் உண்டு. அமெரிக்காவின் சில மாநிலங்களிலும். கனடா, சுவிட்சர்லாந்து, டென்மார்க், பாக்கிஸ்தான், எகிப்து, ஜெர்மனி, மோனாக்கோ, இந்தியா, ஜப்பான், ஹங்கேரி, ஃபின்லாந்து, இங்கிலாந்து மற்றும் சில நாடுகளிலும் அஞ்சல் தலைகளுக்கென்றே பிரத்தியேகமாக அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. இதேபோல சுவிட்சர்லாந்திற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் இருக்கும் சிறிய நாடான லிக்ஸ்டஸ்டைன் நாட்டின் தலைநகர் வாடூஸிலும் ஒரு அஞ்சல் தலை அருங்காட்சியகம் இருக்கின்றது.

    asu3

    ​அருங்காட்சியக முகப்பு பகுதி

    இந்த அருங்காட்சியகம் வாடூஸ் நகரின் மையச் சாலையிலேயே அமைந்திருக்கின்றது. 1930ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியம் முழுமைப்படுத்தப்பட்டு 1936ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. லிக்ஸ்டஸ்டைன் தேசிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது தனித்து இயங்கும் ஒரு அருங்காட்சியகமாகவே அமைந்திருக்கின்றது.

    asu2

    ​அஞ்சல்தலை சேகரிப்புகள் வரிசையாக அலமாரியில்

    இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாக லிக்ஸ்டஸ்டைன் நாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் சேகரிப்புகளே நிறைந்துள்ளன. 1912ம் ஆண்டு தொடக்கம் லிக்ஸ்டஸ்டைன் அரசால் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள் அனைத்தும் இங்கு சேகரித்து வரிசை வரிசையான காட்சிப் பலகைகளில் பொறுத்தி கண்ணாடிக் கதவுகள் பாதுகாப்பாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. அஞ்சல் தலை சேகரிப்புகள் மட்டுமன்றி இங்கு வைக்கப்பட்டிருக்கும் அஞ்சல் தலை தயாரிப்பு பணிகளோடு தொடர்பு கொண்ட கருவிகளும் இங்கு வரும் பார்வையாளர்களுக்குக் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக அமைகின்றன.

    asu1

    ​அஞ்சல்தலைகளில் சில..

    இந்த அருங்காட்சியகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் http://www.postmuseum.li/ என்ற முகவரியில் முக்கிய தகவல்களைப் பெறலாம். நான் இந்த அருங்காட்சியகத்திற்கு இவ்வாண்டு மே மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் சென்றிருந்தேன். அருங்காட்சியகம் திறக்கும் நேரத்தை அறிந்து செல்வது ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். திங்கட்கிழமைகளில் இந்த அருங்காட்சியகம் திறப்பதில்லை.

    asu
    ​பழங்காலத்தில் கடிதம் கொண்டு வரும் குதிரை வண்டியின் ஓவியம்

    சுவிட்சர்லாந்து செல்பவர்கள் வாய்ப்பு கிடைத்து லிக்ஸ்டஸ்டைன் வந்தால் தவறாது இந்த அருங்காட்சியகம் சென்று வரவேண்டும். ஒரு தளத்தில் மட்டுமே சேகரிப்புகளும் கருவிகளும் இருந்தாலும் அஞ்சல் தலை தயாரிப்பு பற்றிய விரிவான விளக்கத்தை வழங்க இந்த அருங்காட்சியகம் தவறவில்லை.

    சரி.. இந்த அருங்காட்சியகத்திலிருந்து மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அடுத்த வாரம் அழைத்துச் செல்கிறேன். காத்திருக்கவும்!.

    Share
  • உன்னையறிந்தால் … (10)

    நிர்மலா ராகவன்

    சமர்த்தா, கர்வியா?

    உனையறிந்தால்1 (1)

    கேள்வி: நான் ரொம்ப சமத்து, இல்லே?’ என்று என் மூன்று வயதுக் குழந்தை அடிக்கடி கேட்கிறான். ஏன் இப்படி? கர்வமா?

    விளக்கம்: கர்வத்தால் இல்லை. தன் நல்ல குணத்தைத் தானே உறுதிப் படுத்திக்கொள்ளும் முயற்சி அது.

    குழந்தைகளின் இயல்பு நம்மிலிருந்து வேறுபாடானது. அதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை நம் கோணத்திலிருந்து பார்க்க முடியாது. வீட்டிலிருக்கும் பெரியவர்கள் குழந்தையைப் புகழ்வது அவசியம். `நீ எவ்வளவு சமர்த்து!’ என்று அடிக்கடி கூறி வளர்த்தால், அவனும் அதை அப்படியே ஏற்று, பிறர் மெச்சும்படி நடக்க முயல்கிறான்.

    சிலர் அந்த முயற்சியைத் தவறாகப் புரிந்துகொண்டு, `உனக்கு ரொம்பத்தான் தலைக்கனம்!’ என்று திட்டுவார்கள். தனக்கு ஏதோ வேண்டாத குணம் இருக்கிறது என்று குழந்தையின் மனம் நொந்துவிடும்.

    பெரியவர்களுக்கே தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படித்தெரியும்? பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அதனால்தான், குழந்தைகளை அசடு, முட்டாள், சோம்பேறி, கறுப்பு என்று பலவாறாகப் பழிக்கக்கூடாது. அவர்கள் முகம் வாடினால், என்னமோ வேடிக்கை என்று நினைத்துச் சிரிப்பவர்கள் இங்கிதம் தெரியாதவர்கள். நாம் `வேடிக்கை’ என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் பிறரை வருந்தச் செய்தால், அதில் என்ன வேடிக்கை இருக்கிறது?

    குழந்தைகளைப் புகழ எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன!

    குளித்துவிட்டு வரும்போது, `பளபளன்னு இருக்கியே!’ சாப்பிட்டு முடித்தவுடன், `தொப்பை அழகா, குண்டா இருக்கே!’ அழுது அமர்க்களம் செய்து, கடையில் முடியை வெட்டிக்கொண்டு வந்த சிறுவனிடம், `யாரிது! அழகா இருக்கு, அடையாளமே தெரியலியே!’ — இப்படி வயதுக்கேற்றபடி பாராட்டினால், குழந்தையும் மகிழும், அடுத்த தடவை நம் வேலையும் சுலபமாகும்.

    சிறு வயதில் பாராட்டுக்கும், புகழுக்கும் ஏங்கியவர்கள் காலம் பூராவும் அதைப் பெறத் துடிப்பார்கள்.

    `பெரிய பதவியிலிருக்கும் பெண்களிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்களைக் கொஞ்சம் புகழ்ந்தால் போதும். நாம் நினைத்ததைச் சாதிக்கலாம்!’ என்று ஆண்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.

    அதாவது, ஒருவர் செய்ய யோசிக்கும் காரியத்தைச் புகழ்ச்சியால் செய்ய வைப்பது பிறரது சூழ்ச்சி.
    இது தெரிந்தாலும், இன்னொரு முறை ஏமாறாது இருக்க முடியாது இவர்களால். பாவம்!

    நாம் ஒரு கதை சொன்னால், மறுநாளும் அதே கதையைச் சொல்லச் சொல்வார்கள் குழந்தைகள். அப்படிச் செய்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என்ற அர்த்தமில்லை. இம்முறையால் ஞாபகசக்தி நன்கு வளரும் என்று இயற்கையாகவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

    துணிச்சல் பெற ஒரு வழியை எங்கள் ஆசிரியையிடமிருந்து கற்றேன்.

    கதை: அப்போது எனக்குப் பதினான்கு வயது . எங்கள் ஆசிரியை கண்டிப்புக்குப் பேர்போனவர். அவர் சிரித்தே யாரும் பார்த்ததில்லை.

    `எனக்கு இந்தக் கணக்கு வரவில்லை, மிஸ்!’ என்று எங்கள் வகுப்பில் யாராவது சொன்னால், `நான் வரமாட்டேன்னு கணக்கு ஒன்கிட்ட வந்து சொல்லிற்றா?’ என்று ஏசுவார்.

    நான் ஒரு முறை துணிந்து, `எனக்கு இந்தக் கணக்கைப் போட வரவில்லை,’ என்று சொல்லிவிட்டேன்.

    எனக்குப் புத்தி மட்டு என்று ஒத்துக்கொள்ள அவமானமாக இருந்தாலும், எனக்குச் சவாலாக அமைந்த ஒன்றை எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது.

    வகுப்பிலிருந்த அனைவரும் பயத்துடன் என்னையே பார்த்தார்கள். எல்லாவற்றிற்குமே திட்டும் ஆசிரியை! இதை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்?

    ஆசிரியை முகத்தில் சிறு புன்னகை. என்னை அவரருகே அழைத்து, தனியாகச் சொல்லிக்கொடுத்தார். அதன்பின், மற்ற மாணவிகளைப்போல, நான் அந்த ஆசிரியையைக் கண்டு அஞ்சவில்லை. பல முறை கணக்கில் சந்தேகம் கேட்க அவரை நாடினேன். நான் கற்று வந்து, சகமாணவிகளுக்குப் போதித்தேன். வேறு யாருக்கும் அவரருகே செல்லத் துணிவிருக்கவில்லை!

    அன்று கற்ற பாடம், தவறு செய்வதோ, ஒரு விஷயம் புரியாமலிருப்பதோ அப்படி ஒன்றும் அவமானத்துக்குரியது அல்ல என்பதே. தோல்வியால் மனம் துவளாமல், எந்த வயதிலும் புதிய காரியங்களில் ஈடுபட அது பெரும் உதவியாக இருந்திருக்கிறது. `எனக்குத் தெரியவில்லை. சொல்லிக் கொடுங்களேன்!’ என்று கேட்பதில் என்ன வெட்கம்?

    சிறு குழந்தைகளுக்கு இயற்கையாகவே இது தெரியும். தூங்கப் போகுமுன் ஒரு கதை சொன்னால், தினமும் அதேதான் வேண்டும் என்பார்கள். திரும்பத் திரும்ப ஒரே கதையைக் கேட்டாலோ, அல்லது படித்தாலோ ஞாபக சக்தி அதிகரிக்குமாம். இது புரியாமல், `மந்தம்!’ என்று அவர்களைப் பழித்தால், யாருக்கு புத்தி மட்டு?

    சில சமயம், மாணவர்கள் கேட்கும் ஏதாவது கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குப் பதில் தெரியாமல் இருக்கலாம். `என்னைச் சோதிக்கப் பார்க்கிறாயா?’ என்றுதான் பலரும் ஆத்திரப்படுவார்கள். ஆனால், `எனக்குத் தெரியாது. படித்துத் தெரிந்துகொண்டு, இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறேன்,’ என்று சொல்லிப் பாருங்கள். (அடிக்கடி அல்ல!) அவர்கள் கணிப்பில் உங்களுடைய மதிப்பு உயர்ந்து போகும்.

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(77)

    -செண்பக ஜெகதீசன்

    பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
    மக்கட் பதடி யெனல். (திருக்குறள்-196: பயனில சொல்லாமை)

    புதுக் கவிதையில்…

    வயலில் மதிப்பு
    விளையும் நெல்மணிக்குத்தான்,
    வையத்தில் பாராட்டு
    பயனள்ள பேச்சுக்குத்தான்

    பயனிலாச்சொல் பேசுபவனும்
    பாராட்டுபவனும்
    பதர்தான் மக்களில்…!

    குறும்பாவில்…

    பயனுள பேசுபவர்கள்
    மக்கள் வயல் நெல்மணிகள்,
    பயனில பேசுவோர் பதர்கள்…!

    மரபுக் கவிதையில்…

    வயலில் வளரும் பயிரினிலே
    –விளையும் நல்ல நெல்மணிகள்
    உயர்வு பெறுமே நல்மணியாய்
    –உலகோர் பலரும் உளம்மகிழ,
    பயிரில் விளையும் நெல்மணிபோல்
    –பயனுள வார்த்தை பேசிடுவாய்,
    பயனிலாச் சொற்கள் பேசுவோரே
    பாரதன் மக்களில் பதராமே…!

    லிமரைக்கூ…

    பயனுள பேசுவோர் மக்கள்வயல் நெல்,
    பயனிலாச் சொற்கள் பேசுவோரை
    பாரிலுள்ள மக்களில் பதரென்றே சொல்…!

    கிராமிய பாணியில்…

    நெல்லுநெல்லு நல்லநெல்லு
    நஞ்சநெலத்து நல்லநெல்லு,
    சொல்லுசொல்லு நல்லசொல்லு
    நாலுவருக்கு நல்லசொல்லு,
    இதச் சொல்லுறவன்
    நெல்லுநெல்லு நல்லநெல்லு
    நஞ்சநெலத்து நல்லநெல்லு..

    ஒருத்தருக்கும் ஒதவாத
    சொல்லுசொல்லு கெட்டசொல்லு,
    இதச் சொல்லுறவன்
    நெல்லுயில்ல நெல்லுயில்ல
    பதருபதரு,
    ஒருத்தருக்கும் ஒதவாத
    ஒண்ணுமில்லா பதருபதரு..

    நெல்லுநெல்லு நல்லநெல்லு
    நஞ்சநெலத்து நல்லநெல்லு…!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 171

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    மேலான தன் கணவன் கூறியதைப் பின்பற்றி,
    அக்குரங்கு இறந்த பின்னும் கூட
    அதன் தீய பிறவி ஒழிய வேண்டும் எனக்கருதி  Donating gold
    தானம் செய்கையில் அதற்கான ஒரு பங்கை
    ஒதுக்கி வந்தாள் அப்பெண்.

    மத்தியதேசத்தில் வாரணாசி என்ற ஊரில்
    உத்தர கௌத்தர் என்பவர்க்கு மகனாய்
    மீண்டும் பிறந்தது அக்குரங்கு.

    அப்புதல்வன்
    அழகு, அறிவு, செல்வம் இவற்றில்
    சிறந்து விளங்கினான்.
    வள்ளல்தன்மையுடன் தானங்கள்
    பலவும் செய்து வாழ்ந்தவன்
    தன் முப்பத்தியிரண்டாம் வயதில் இறந்து
    தேவர் வடிவம்தனை அடைந்தான்.

    பெரிய செல்வத்தைப் பெற்ற பயன் யாவும்
    தன்னைப் பாதுகாத்துத் தானம் செய்து வளர்த்த
    சாயலன் மனைவியினால்தான் என்பதைக்
    கருத்தில் கொண்டு,
    அந்த நன்றிக்கடனை
    உலகத்தோருக்கு அறிவுறுத்த
    ஒரு கையைக் குரங்கின் கையாகக் கொண்டு
    இவ்வானவன் பிறந்தான்’ என்று
    சாரணர் கூறினார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 175- 191
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    aatamaa3கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் கவிஞர் பிறைசூடன் இயற்றிய பாடல் இது.

    வெற்றிச் சித்திரமான இப்படத்தில் இந்தக் காட்சி வில்லன்கள் இருவரின் கூடலை கொண்டாட்டம் போட காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா. களிநடனம் புரிய மங்கையாக ரம்யா கிருஷ்ணன். இசையும் பாடலும் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட, திரையிலும் வரவேற்பு மிக அதிகமாகவே இருந்தது.

    ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் வெள்ளித்திரை கண்ட வெற்றி சித்திரம். பிரம்மண்டாமான பொருட்செலவில் அடர்ந்த காடுகளின் இடையே, சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். காதால் கேட்ட கதைதான், செய்தித் தாள்களில் வாசித்தகதைதான் என்றாலும் தக்க பாத்திரங்களை பொருத்தி அக்கதையை முழுமையாக நம் கண்களுக்கு விருந்தாக்கி படைக்கப்பட்ட இப்படம் விஜயகாந்தின் 100வது படம் என்பதும், இப்படத்திற்குப் பிறகு அவர் கேப்டன் என்றே அழைக்கப்படுவதும் கூடுதல் தகவல்களாகும்.

    மறைந்த பின்னணிப்பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் குரலில் இனிமையும், புதுமையும், நிறைய துள்ளலும், ஆட்டமும் முழுவதும் நிரம்ப அசத்தலான நடனம்புரிந்த ரம்யா கிருஷ்ணனைப் பாராட்டத்தான் வேண்டும். பொதுவாக திரைப்படங்களில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சியில் நடனமாடும் மங்கையின் குறி வில்லனை நோக்கித்தான், அந்த வகையில் இந்தப்பாடல் நம்மைக் கவர்ந்த ஒன்று என்பது நிச்சயம்.

     

    ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
    ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
    வெகு நாளாக உன்னைத்தான்
    எண்ணித்தான் கன்னி நான்
    ஆடுறேன் வலை போடுறேன்
    பாடுறேன் பதில் தேடுறேன்

    ஏ ரம்பா சம்பா சம்பாதான்
    அம்மா பொண்ணு ரம்பாதான்
    சம்பா ரம்பா சம்பாதான்
    ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
    (ஆட்டமா..)

    ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி
    ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
    யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
    அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
    ராக்கோழி சத்தம் கேட்குது – என் ராசாவே…
    பூ வாசம் வட்டம் போடுது
    வீராப்பு கண்ணில் பட்டது – நீ என்னை தேட
    மாராப்பு மெல்ல தொட்டது
    பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ
    புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
    கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
    (ஆட்டமா..)

    ஏ ரம்பா சம்பா சம்பாதான்
    அம்மா பொண்ணு ரம்பாதான்
    சம்பா ரம்பா சம்பாதான்
    ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
    (ஆட்டமா..)

    யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
    நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
    நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு
    நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
    கண்ணாலே கட்டி வைக்கவா – அட மாமா என்
    கையாலே பொட்டு வைக்கவா
    பூ பந்தல் போட சொல்லவா – அட மேளங்கள்
    தாளங்கள் சொல்லி தட்டவா
    பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா
    போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
    கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
    (ஆட்டமா..)

    ஏ ரம்பா சம்பா சம்பாதான்
    அம்மா பொண்ணு ரம்பாதான்
    சம்பா ரம்பா சம்பாதான்
    ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    படம்: கேப்டன் பிரபாகரன்
    வரிகள்: பிறைசூடன்
    இசை: இளையராஜா
    பாடியவர்: ஸ்வர்ணலதா

    காணொளி: https://www.youtube.com/watch?v=vsTbNwqEDb0

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

     

    Share
  • பாரினில் பாரதப் பெண்கள் (3)

    சுலோசனா

    பாரினில் பாரதம்

    பெண்களின் தந்தை பெரியார் – பகுத்தறிவு பகலவன் – தந்தை பெரியார்

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

    யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்; அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு

    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.

    எலும்பில்லாத புழு பூச்சிகளினால் வெப்பத்தை தாங்க முடியாது.சுருண்டு விடும். அது போன்றுதான் மனித நேயம் எனும் அன்பிலாத முதுகெலும்பில்லாத மனிதர்களை அறக்கடவுள் தண்டிக்கிறார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். சகமனிதர்களை சாதி போன்ற பேதங்களை உண்டாக்கி, தாழ்த்தி அவமானப்படுத்தியதோடு அல்லாமல் தன்னில் பாதியான பெண்ணை சாதி மத பேதமின்றி அடிமைப்படுத்தி வைத்தது பழகிய யானையைக் கொண்டே புதிய யானைகளைப் பழக்கப்படுத்துவது போல மாமியார் நாத்தனார் போன்ற உறவு முறைகளைக் கொண்ட பெண்ணே பெண்ணிற்கு எதிரியானாள்.

    மகன் சகோதரன் என்ற உறவில் உள்ள ஆணுக்கு கொடுமையை கடுமையாகப் போதித்தாள். சில நோய்களால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும்.பல மருந்துகளைக் கொடுத்துப் பார்த்துவிட்டு பலனின்றி பிறகு கடுமையான மருந்தை பிரயோகிப்பார்.அது போல் சமூகத்திற்கு கிடைத்த அரு மருந்து பெரியார்.தன் மனதில் உருவாகும் உஷ்ணமான உண்மைகளை அதன் வெப்பத்தோடு அப்படியே வெளியிட்டார். நாகரீகம் கருதி அதற்கு மேல் பூச்செல்லாம் பூசவில்லை. உச்சி வேளை சூரியனாக உதித்து வந்த கருத்துக்கள் பல சமூக விரோதிகளை உருவாக்கியது.

    பெண்ணடிமை செய்யும் ஆதிக்க மனப்பான்மையாளர்களை அதட்டியது. மூட பழக்கவழக்கங்களினால் பாதிப்பால் நடுங்கிக் கொண்டிருந்த பெண் இனத்திற்கு அந்த சிந்தனை கதிர்கள் இதமான வெப்பமளித்து நடுக்கத்தை விரட்டியது. இவர் சிந்தனையின் சிகரமாகத் திகழ்ந்தவர். அவர் கொண்ட கொள்கைகளின் பூரண செயல் வடிவமாகத் திகழ்ந்தார். சில சிறந்த சிந்தனையாளர்களுக்கு இந்த வாய்ப்பு சீர்திருத்தங்களை செம்மையாக செயல் படுத்தினர். தன் குடும்பத்தோடு தேச சேவையில் ஈடுபட்டவர். கள்ளுக்கடை போராட்டத்தின் போது தன் சகோதரியோடும் துணைவி நாகம்மையோடும் அந்த போர்க்களத்தில் ஈடுபட்ட தியாக மகாத்மா காந்திக்கும் கூட அந்த பெண்கள் சேவை தெரிந்திருந்தது. அவர்கள் குறித்து அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.

    பெண்களின் சரீர உடல் அழகைப் புகழ்ந்து பேசி அவர்களை மூளை சலவை செய்யும் ஆண்களை கடுமையாகக் கண்டித்திருக்கின்றார். அழகு பதுமைகள் தங்களின் சொத்துக்களுக்கு தங்களுடைய வாரிசுகளை பெற்றுத்தரும் இயந்திரங்களாக உபயோகிக்கும் ஆண் திகழ்வதாகக் கூறுகின்றார். தங்களின் சுக அனுபவத்திற்காகவே பெண்கள் படைக்கப்பட்டிருப்பதாக ஆண் என்பவன் கருதுகின்றான்.அலங்காரப் பதுமைகளாக பாதுகாக்கின்றான். சொந்த உபயோகத்திற்கு மட்டுமே என்று வைத்து கல்யாணம் என்ற பெயரில் அழகிய மாளிகைகளில் அடக்கி வைத்திருக்கின்றனர் என்று செல்வந்தர்களைப் பற்றி கிளியை தங்கக் கூண்டில் வைத்து பால் பழம் தருவது போல.பணம் படைத்தவர்களின் வாழ்வினில் தான் ஆணாகப் பிறந்தவன் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்.,என்று இருமாப்புடன் வாயினால் கூறாமல் செயல் மூலம் செய்து காட்டுவது போல் வாழ்கின்றான், என்கிறார்.

    கலைத்திறமை வாய்ந்த பெண்கள் தங்கள் கலைத்திறனால் மட்டும் இன்றி பெண் என்ற முறையிலும் ஆணை மகிழ்விக்க வேண்டிய ஒரு சூழ்நிலை பெண் சமூகத்தில் ஒரு நோய் போல் தோன்றியது. ஜமீன்தாரர்கள் மிட்டா, மிராசுதார்கள் , பணம் படைத்த தனவான்கள் கொண்ட ஒரு கூட்டம் இப்படிப்பட்ட ஒரு பெண்கள் கூட்டத்தை உருவாக்கியது. இந்த மகிழ்விக்கும் கூட்டத்தில் ஈடுபாட்டுடன் ஈடுபட்டவர்களும் இருந்தனர். சிறிதும் விருப்பம் இன்றி தாய் தந்தை தமக்கை இவர்களின் வற்புறுத்தலுக்கு உட்பட்டு இந்த வாழ்வில் தள்ளப்பட்டவர்களும் இருந்தனர். இதிலும் கூட சில பெண்கள் ஒரே நபருடன் வாழ்ந்தனர். இந்த இடத்தில்தான் தந்தை பெரியார் பெண்களுக்கு கூறிய அறிவுரைகள் என்றும் நினைத்துப் பார்க்கத்தக்கவை.

    பெண்கள் எளிமையுடன் வாழப் பழக வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையானால் பணமுள்ள ஆணுக்கு பலியாக வேண்டிவரும் எனும் உண்மையை ஒளிக்காமல் ஒசையுடன் கூறுகிறார். உடல் அழகை வெளிச்சம் போட்டு காட்டும் அலங்கோல அலங்காரம் மற்ற ஆண்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அலங்காரத்தில் பெண்களின் கவனம் செல்லக்கூடாது. உன் முகம் நிலவு போல் உன் ஸ்பரிசம் மலர் போல் மிருதுவானது. மருண்டு விழிக்கும் உன் விழிகள் மான் போல அஞ்சி அஞ்சி அல்லது சஞ்சி சஞ்சி நடக்கும் உன் நடை அன்னம் போல என்றெல்லாம் ஒரு ஆணால் புகழப் பட வேண்டும் என்பதற்காகத்தானே.மு.வரதராசனாரின் கள்ளோ காவியமோ எனும் நாவலில் வரும் கதா நாயகி மங்கை,வீட்டு வேலை செய்து கொண்டே கல்லூரியிலும் படிப்பவள் அவளை அந்த வீட்டுத் தலைவரின் மகன் காதலிக்கின்றான்.தன்னிடம் காதலை வெளிப்படுத்தி மனம் புரிய வேண்டுபவரிடம் மங்கை சொல்கின்றாள்

    ஐயா நீங்கள் எதோ உணர்வில் உந்தப்பட்டு என்னிடம் கேட்கின்றீர்கள். நான் கல்லூரியில் படித்தாலும் என் தாய்க்கு உதவியாக என் படிப்பிற்காகவும் உழைத்து உழைத்து உரமேறிவிட்ட தன் மென்மையை இழந்துவிட்ட என் கைகளைத் தொட்டுப் பாருங்கள்.என்னிடம் நீங்கள் கொண்ட காதல் சில வருடங்கள் கூட நீடிக்காது. என்னிடம் நீங்கள் மென்மையும் நளினத்தையும் நாசூக்கையும் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்களுக்கேற்ற மனைவியை தேர்த்தெடுங்கள் என்று கூறி முதலில் மறுக்கிறாள்.

    பெரியார் ,சுயமரியாதையைஇழ்ந்து பின் சுகப்படும் சோம்பேறியாக இராதீர்கள், நீண்ட கூந்தலை குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். பட்டு போன்ற விலையுயர்ந்த புடவைகளை அணிந்து கொண்டு அலையாதீர்கள். உடுத்த சுலபமான உழைக்க வசதியான ஆடைகளையே அணியப்பழகுங்கள்.

    பெற்றோரை சார்ந்து வாழவேண்டும் என்ற மனப்போக்கை விடுங்கள்.ஆணுக்கு நிகராக உடலையும் உள்ளத்தையும் பலப்படுத்துங்கள்.

    இவ்வாறெல்லாம் உரமூட்டி பேசுபவர் பால்ய விவாகம் இளம் விதவைகளும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நீதி கேட்கும்பொழுது தந்தை பெரியார் பிறக்கின்றார்.

    ஆனின் சுய நலத்தின் உச்ச கட்டமே கற்பு என்ற நிலை.கற்பு என்ற ஒரு ஒழுக்க நிலை ஆண் பெண் என்ற உறவில் மட்டும் அன்றி சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் இருக்க வேண்டும். என ஒழுக்கத்தில் ஒரு புதிய பார்வையை கொண்டு வருகின்றார்.

    தந்தை பெரியார் காட்டும் பாதையில் தயக்கமின்றி நடைபோடும் பெண் மக்கள் (மகள்கள்) எவ்வளவு பெயர்கள் என்று தெரியவரும்.தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பார்கள்.தந்தை பெரியார் சொற்களும் மந்திரம் போன்ற சக்தி வாய்ந்த சொற்களாகும்.அந்த சக்தியின் ஒளியை தாங்க முடியாமல் கண்கள் கூசி கண்களை தாழ்த்திக் கொண்டவர்கள் தான் அதிகம் என்பதே உண்மை.

    ஒரு நாடு முழுவதற்குமான சமுதாய ன்நெறிகள் சமய நெறிமுறைகள் – நெறிமுறைகள் அற்றவைகள் பண்பட்ட பழக்கவழக்கங்கள் பண்பாடற்ற புண்பட்ட பழக்கவழக்கங்கள் அனைத்துமே கலந்தே இருந்து வருகின்றன. இந்த நெறிமுறைகள் பழக்க வழக்கங்கள் அனைத்திற்குமே தங்களால் இயன்றவரை அவைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை பின் பற்றும் மக்களே எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர்.

    அடுத்து சிந்திக்கும் திறன் உள்ளவர்கள்

    “எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்பொருள் காண்பரிது.

    என்ற தமிழ் திருமறையின் குறளின் பொருள் அறிந்தவர்களாக இருக்கின்றனர்.இவர்கள் தங்களின் அறிவின் பாற்பட்ட மனதிற்கு ஏற்ற வகையில் இருப்பவைகளை மட்டுமே பின்பற்றுவர்.தங்களின் அறிவிற்க்கும் மனச்சான்றிற்கும் ஏற்பில்லாவற்றை விட்டுவிடுவார்கள் .முதலில் குறிக்கபட்டவர்களை விடவும் இவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களே. மூடப்பழக்கங்களைபின்பற்றுபவர்கள் அறிந்தோ அறியாமலோதெரிந்தோதெரியாமலோ பலர் மனதை புண்படுத்தி விடுகின்றனர்.இந்த வேதனைக்கு ஆளானோர்கள,பெரும்பாலும் பெண்களே. இதற்கு பலி ஆனவர்கள் ஆகிக் கொண்டிருப்போர்கள்,ஆகப்போகின்றவர்கள் யார் என்றால் 10 சதவீதம் ஆண்கள் மீதி 90 சதவீதம் பெண்களே.ஐந்து மாபெரும் வீரர்களானா ஐவரை கணவர்களாகத் கொண்ட பாஞ்சாலி .ஞானியரும் சாண்றோர்களும் வீரர்களும் கூடியுள்ள சபையில் ஒரு ஆணால் துகில் உரியப்பட்டாள்.இப்படி ஒரு சம்பவம் மஹாபாரதத்தில் வருகிறது.மன்னன் ஜனகனின் மகள் ஸ்ரீராமனின் ப்ரிய பத்தினியான சீதா பிராட்டி கணவனோடும் காவலாக கானகம் வந்த இளைய பெருமாள் இலக்குவனோடும் கானகம் சென்றது ஒரு முறை. இரண்டாவது முறை-முறையற்ற முறையில் தான் கானகத்தில் தனித்து விடப்படபோகின்றோம் என்பதை அறியாமல் விடப்படுகின்றனர்.தெய்வமே அவதாரம் எடுத்து வந்தது என்றபோதே மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.இப்படி இருக்கும் போது கீழ்சாதிகள் என அழைக்கப்பட்ட பற்பல சாதிகளில் பிறந்தப்பெண்களின் அவல நிலையைப் படிக்கும் பொழுதேப்மனம் பதறுகிறது.பார்த்தாலே பாவம் தொட்டாலே தீட்டு என்று மட்டும் இல்லாமல் நடைமுறை பழக்கவழக்கங்களில். எத்தனையோ வேறுபாடுகள்.கீழ் சாதியை சேர்ந்த பெண்கள் சிறுமியானாலும் சரி பருவப் பெண்னாலும் சரி முதிர்ந்த மூத்த மூதாட்டியானாலும் சரி ஒரு சரியில்லாதா நடைமுறைக் கொடுமை . மார்பை மறைத்து மேலாடை அணிதல் கூடாது. இடுப்பில் மட்டும் துணி.இந்த நிலையில் அண்ணிய ஆடவர் முன் கூட அரை நிர்வாணம். கீழ்சாதி தகப்பனுக்கு பிறந்து கீழ்சாதி கணவனோடு வாழ்ந்து கீழ்சாதி குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு பெண்———-ஆணால் அவள் சற்றேனும் அழகு படைத்தவளானால் ,மிக உயர்ந்த சாதி என அழைக்கப்படும் சாதிகளில் பிறந்த காமுகனின் கண்ணில் பட்டுவிட்டால் அப்பொழுது அந்த கீழ்சாதி இளம் பெண்கள் காமுகனான கயவனான் அந்த கண்ணியவானுக்கு அந்த சமயத்திற்கு மட்டும் தீண்டதக்கவர்களாகி விடுவார்கள் இதில் அந்த பெண்களின் விருப்ப்பத்தை எல்லாம் பற்றி கவலையே படமாட்டார்கள். கீழ்சாதி ஆனாலும் அவளுக்கு அந்த உயர் சாதிக்காரன் அந்நியன் தானே .எவனோ ஒரு அந்நியனால் உடலும் மனமும் புண்பட்டு எந்த அளவிற்கு எத்தனை பெண்கள் துடித்தனரோ.

    உயர்ந்த இனத்தைச் சேர்ந்த அத்தனை ஆண்களில் சிலரோ அல்லது பலரோ தீண்டாமை இனத்தை சேர்ந்த இளம் பெண்களை தீண்டி நாங்கள் இன்புற்று அவர்களை துன்புறுத்தியது என்பதுசரித்திரங்களில் சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இன்றும் கூட சில இடங்களில் இந்த தாழ்ந்த சாதியினர் கொத்தடிமைகளாகப் பட்டு ஆண் பெண் சிறுவர் அடங்களாக அநியாய கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர் இந்த செய்திகள்.தொலைகாட்த்சியிலும் வருகின்றன.

    ஒரு பெண் கணவனை இழ்ந்துவிட்டால்,பூவைவிடவும் மென்மையான மனம் படைத்த பூவைக்கு தெய்வப்பிரசாதமான பூ பிரசாதமாக கிடைப்பதில்லை.மறுக்கப்படுகிறது.இந்த அநாகரிமான நடவடிக்கைகளை செயல்படுத்துபவர்கள் பெரும்பாலும் பெண்களே.தன் கையே ,தன் கண்களைக் குத்துவது போல் பெண்ணெ பெண்ணுக்கு அவமரியாதை செய்து வருகின்றார்கள்.காலங்காலமாக வந்த பழக்கங்களுக்கு கீழ்படிகின்றோம்.

    மனைவியை இழந்த ஆண்களுக்கு இந்த மரியாதைகள் எல்லாம் கிடையாது. அவன் மீண்டும் புதுமாப்பிள்ளையாக வேறு ஆகி விடுகிறான்.இதற்கு சமூகத்தீன் அங்கீகாரமும் முழு அளவில் கிடைத்துவிடுகிறது.

    எந்த விதமான துன்பம் என்றாலும்,காலப் போக்கில் அதன் தீவிரம் குறைந்து இயல்பான வாழ்விற்கு திரும்புவது என்பது மனித இயல்பாக இருக்கிறது.அந்த வகையில் பார்த்தாலும்கூட பெண் அப்படி எல்லாம் இயல்பாக நடந்து கொண்டுவிட முடியாது. பெரிய பெரிய நகரங்களில் நன்கு படித்து வேலை பார்க்கும் பெண்கள் ஒரு வேளை இந்த அவமதிப்பில் இருந்தும் கொடுமைகளில் இருந்தும் தப்பலாமோ என்னவோ ,சிறிய நகரங்களில் கிராமங்களில் வசிப்போருக்கு இன்றும் எல்லாவற்றையும் சந்திக்கவேண்டிதான் உள்ளது.இதிலும் இன்னும் ஒரு அறிவீனம் என்ன வென்றால் நியானமான காரணத்தினால் நீண்ட காலம் தாம்பத்திய வாழ்வில் இருந்து விடுபட்டு அல்லது விடுவிக்கப்பட்டு தாய் வீட்டில் வாழ்ந்து வரு பெண்களுக்கு ம் அந்த விதி விடுவதில்லை. 7 ஆண்டுகள் பிரிந்திருந்தால் இருவருக்குள்ளும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தால் அந்த பந்தம் தானாகவே முறிந்துவிடும்.இந்த விதியே மனுதர்மத்திலும் கூறப்பட்டுள்ளது.மனிதர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு ப்ந்தம் சூழ்நிலை முதலிய பல தவிர்க்கமுடியாத பல காரணங்களால்மனிதர்களால் உண்டாக்கப்பட்ட சட்டங்களாலும் மனி தர்மத்தினாலும் மனித நேயத்தாலும் விடுவிக்கப்படுகின்றன.இந்நிலை சிலசமயம் அரிதாக ஆண்களுக்கும் கூட ஏற்படுகின்றது.இந்த உண்மையை மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.ஆனால் நடைமுறையில் மிக மிக அரிது.எங்கோ ஆயிரத்தில் ஒன்று லஷ்ஷத்தில் ஒன்றுதான்,ஆணுக்கு அசம்பாவிதம் என்பது.அடுத்து விதவைகள் மறுமனம்,சும்மர் 50 வருடங்களுக்கு முன்னரும் சமீபத்திலும் கூட அடேயப்பா அவளுக்கென்ன கொழுப்பு?இன்னொரு கல்யாணம்,பொம்பலைக்கு கூட இன்னொரு ஆம்பளை கேக்குது பாரப்பா,என கேவலமான பொருளில் எள்ளி நகையாடுகின்றனர்.

    பெரும்பாலும் தனியாகவாழ இயலாத உலகம் இதில் ஒருவருக்கொருவர்துனையாக கைபிடித்துக்கொண்டு– ஒருவருக்கு இடரும் பொழுது ஒருவர் பாதுகாப்பாக கை கொடுக்க இதற்கெல்லாம் தானே துணை என்பது.

    “கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே

    இங்கே வேரில் பழுத்த பலா”

    என பாடிய பாரதி தாசன் வார்த்தை எவ்வளவு பொருள் பதித்தவை.இந்த விஷயத்திலும் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்தே காட்டினார்.உலகறிந்த விவரம் இது.தனக்குத் தொண்டாற்றி வந்த மணியம்மை எனும் கணவனை இழந்த பெண்ணை தனக்கு த் துணையாகக் கொண்டு அவருக்கு பகுத்தறிவும் அறிவுக் கண்களாகவும் திகழ்கின்றார்.ஒரு வகையில் பார்த்தால் கணவனின் துனையை இழந்த பெண்கள் அனைவருக்குமே மறுபடியும் திருமணம் தான் தீர்வு என்பது முடிவான முடிவல்ல. அவரவர் மனநிலைக்கு ஏற்ப ஒரு உதவி சமூகத்தில் அந்தஸ்து எந்த விதத்திலும் குறைவு படாமல் பார்த்துக் கொள்வது நியாயத்தின் அடிபடையில் அவரவர் வாழ விரும்பியபடி வாழலாம் என்பதற்கான சூழல் வேண்டும்.பொருத்தமான மனமக்களாக அமைந்து இன்பமாக வாழ்ந்தவர்கள் அனேகமாக இன்னோரு ஆடவரோடு இல்வாழ்வில் ஈடுபடவிரும்புவதில்லை .விரும்பினால் மற்றொரு வாழ்வை அமைத்துக் கொள்வது அது அவரவர் சொந்த விருப்பம்.குடிகார கொடுமையான பெண்பித்தனான நடவடிக்கை உடைய ஆண்கள் இந்த வித பழக்கங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் கூட கடூரமான வார்த்தைகளை மனைவி மேல் அக்னி மழை போல் கொட்டும் ஆடவர்களும் உள்ளனர்.இதற்கு சில சமயம் பெண்களே உடந்தை .இந்த வகையான வார்த்தைகளால் கணவனை வாட்டும் பெண்களகூட உள்ளனர்.எங்கோஒரிருவர்கள் படாதபாடுபட்டு ஒரு வழியாக கனவன் என்ற கொடுமை யில் தப்பி அப்பா ப்ட்டதே போதும் ,இன்னொரு கல்யாணமா ? கனவில் கூட வேண்டாம் என்று முடிவெடுத்து

    தெனாலிராமன் வளர்த்த சூடு கண்ட பூனை போல் வாழ பயந்து விலகி ஒடுபவர்களும் இருப்பது சகஜமே .தேசிய மகாகவி பாரதியார் அவர்கள் தெளிவாகவும் தீரத்துடனும் பேசுகின்றார். பொதுவாகவே விதவை விவாகம் என்பது சான்றோர் நூறு சதவீதம் ஆமோதிக்கப்படவில்லை .என்பதே வருந்ததக்க உண்மை. இல் வாழ்வை ஏதொ ஒருவகையில் இழந்து விட்ட பெண்கள்,தியாக குணம் கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் சேவை செய்ய முன் வர வேண்டும். என்றே எதிர்பார்த்தனர்.

    ஆனால் பெண்களுக்காக குரல் கொடுத்த பாரதியார். தீர்க்கமாக தீர்மானமாகவீர முழக்கமிட்டார். என்றே சொல்லவேண்டும்.ம்காகவி பாரதியார் அவர்கள் “நான் ஸ்வாமி விவேகானந்தரையும் மகாத்மா காந்தி அவர்களையும் உயிரினும் மேலாக நேசிக்கின்றேன்.

    ஆனால் விதவைகளின் மறுமனம் பற்றிய கருத்துக்களில் இருந்து வேறுபடுகின்றேன்.என தீரத்துடன்தன் கருத்தை வெளியிடுகிறார்.(இந்த தகவல் சொல்லின் செல்வர் சுகி. சிவம் அவர்களின் சொற்பொழிவில்

    கிடத்ததாகும்.)

    மஹாகவி பாரதியார் ஒரு மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரிநிவேதிதா தேவியை சந்தித்து பெண்களை ஆண்கள் நடத்துவதைப் பற்றியும் நடத்தவேண்டிய முறைப்பற்றியும் கருத்துக்களை கேட்டறிந்து அது பற்றி சிந்தித்து பிறகே அந்த கருத்துக்களின் உண்மையை மனசாட்சியுடைய உந்துதலன் அறிந்து தெளிந்த பிறகே வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்றும் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றும் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காண் என்று கும்மியடி என தன்னுடைய மகிழ்வான சுதந்திர வெளிப்பாட்டை கும்மியடித்து கொண்டாடுகிறார் என்கிறார்.

    இதில் இருந்து நாம் உணர்வது வஞ்சனையின்றி ,பகையின்றி சூதின்றி வையக மாந்தரெல்லாம் வாழ நேர்மையே உருவானவளாக ,உண்மையே உரைப்பவளாக ஞானத்தின் செல்வியாக கலைமகளின் மகளாக வருகின்றாள் பாரதியின் புதுமைப்பெண்.சுத்தானந்த பாரதி கண்ட புதுமைப்பெண்
    தங்கதட்டான் உதவி யின்றி ,சாய மினுக்கின்றி ,ஒப்பனைகள் ஏதுமின்றி சுதந்திரமே வடிவாக , ஞானமே அழகாக ஒப்பில்லாக்கன்னிஅவள் உலக வலம் வ்ருகின்றாள்.இந்தியப் பெண்கள் அனைவரிடமுமே இந்த குண நலன் களையே இன்றும் எதிர் நோக்கி ஏங்கி நிற்கின்றனர்.சமூக நல ஆர்வலரான சான்றோர்கள் அப்படியின்றி இன்றுள்ள ஆபாசமான சுவரொட்டிகள் அருவருப்பான காட்சிகள் கொண்ட அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனும் நாற்குணங்கள் நாற்படையாக நடந்தால் —-

    நீச்சல் தெரிந்தவர்க்கு கூட ஆற்றின் போக்கோடு நீச்சல் அடிப்பது சுலபமாக இருக்கலாம். ஆனால் நீச்சல் தெரிந்தவருமே கூட எதிர் நீச்சல் அடிப்பது சிரமமே .இதில் கல்லை கட்டி ஆற்றில் தள்ளினால் சிலர் அப்படியும் அமைந்தும் அதயும் சமாளித்து எதிர் கரைஏறிய சிலர் அந்தந்த காலகட்டத்தின் சூழ் நிலைகளுக்கு ஏற்ப காலத்தின் கட்டாயத்தின் பிடியில் சிக்கித் திணரி சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற ஆயுதங்களோடுபோருக்கு வரும் உறவினர்களின் தாக்குதல்களுக்கு நடுவே, நியாயமான விருப்பங்களுடன் நேர்மையான நடத்தையும் கூடவே இவர்களைப் படைத்த இறைவன் தானே என்னையும் படைத்தான் என்ற திட நம்பிக்கைதுனைவர போர்புரிகின்றனர்.முட்புதர்களுக்கு நடுவே வெற்றுக் கால்களோடு நடந்து ஒற்றையடி பாதை ஒன்று உருவாக அதில் பாதுகை அணிந்த பல பாதங்கள் நடந்து நடந்துபாதை சிறிது சீர்பட்டது,அகலப்பட்டது.அப் பாதையில் இன்று வண்டிகள் செல்ல தொடங்கி விட்டன,

    முட்புதரில் வெற்றுக்காலோடு நடக்கத் தொடங்கியவர் டாக்டர் சுப்பு லட்சுமி ரெட்டி .இக்கட்டான காலகட்டத்தில் மருத்துவம் படிப்பதற்காக புதுக்கோட்டை மன்னர் வரை சென்று அழுது தொழுது போராடி அனுமதி பெற்றார்.ஆண்களோடு சமமாக அமர்ந்து படிக்க அனுமதியின்றி திரையிட்டு வாசலுக்கு அருகில் அமர்ந்த முதல் பெண்மணி மருத்துவரான டாக்டர் முத்து லஷ்மி ரெட்டி.

    தொடரும்

    Share
  • மரணத்தை முன்வைத்து….

    எஸ் வி வேணுகோபாலன்

    நண்பர் ஒருவர் மரணச் செய்தி ஒன்றைச் சொல்வதற்காக தொலைபேசியில் அழைத்தார். ‘இன்னார் போய்விட்டார்’ என்றார். தொடர்ந்து, “நீங்கள் எப்போது போவீர்கள்” என்று அவர் கேட்கவும், “தெரியலியே, வேளை வந்தால் போகவேண்டியதுதான்!” என்றேன். “அய்யய்யோ, என்ன தோழர், என்னென்னவோ பேசுகிறீர்கள். இறந்தவரின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த எப்போது போவீர்கள் என்றுதானே கேட்டேன்” என்றார். நான் சிரித்துக் கொண்டேன்.

    மரணம் என்றாலே அலற வேண்டியதில்லை. அது யாரது இசைவையும், தயார் நிலையையும், முன்மொழிதல் -வழிமொழிதல்களையும், ஏற்புரையையும் கோருவதில்லை. அது நிகழ்கிறது. மரணத்தின் சுவாரசிய ரகசியம், மீதம் இருப்போரை வாழுங்கள் என்று அது கேட்டுக் கொள்வது. அந்தக் குரல்தான் நமக்குச் சரிவர கேட்பதில்லை. ஒவ்வொரு மரணத்திலும் அது மறு ஒலிபரப்பு செய்யப்படுவதை கவனித்தால் மரணம் அல்ல, வாழ்க்கையும் கசந்துபோகாத சூட்சுமம் பிடிபட்டுவிடும் வரம் காத்திருக்கிறது.

    விழுப்புரம் புத்தகக் கண்காட்சி விழா ஒன்றில் பங்கேற்க சில ஆண்டுகளுக்கு முன்பு சென்று வந்த அனுபவம் மறக்க முடியாதது. டி வி எஸ் 50 வாகனத்தில் எளிமையாக வந்து இறங்கினார் நகராட்சி தலைவர் திரு ஜனகராஜ். என்னை இன்னார் என்று அறிமுகப் படுத்திக் கொள்ளுமுன்பாகவே, “சார் கொஞ்சம் என் கூட வாங்க, உங்களுக்கு ஒண்ணு காட்டணும்” என்று அழைத்துப் போனார்.

    டிசம்பர் மாதத்தின் எதிர்பாராத மழை, வீதிகளின் சேற்றைக் குழைத்து வைத்திருந்தது. உடைத்துக் கொண்டிருந்த சாலையில் ஆட்கள் பணியில் இருந்தனர். அவர்களை விரைந்து நிவாரணப் பணிகளை முடிக்குமாறு கண்டிப்பான குரல் கொடுத்துக் கொண்டே என்னை ஒரு புதிய கட்டிடத்தின் முன் கொண்டு நிறுத்தினார். பெரிய காம்பவுண்ட் சுவர். உள்ளே மரங்கள். செடி கொடிகள். மனத்தைக் கவரும் சூழல் அது. மூடி இருந்த கதவுகளின் அருகே பெரிய பலகையில், நவீன தகன மேடை என்று எழுதி இருந்தது. வேறொன்றுமில்லை, சுடுகாட்டிற்கு அழைத்து வந்திருந்தார் நகரத் தந்தை.

    “இடம் அருமையாக இருக்கிறதே, இதில் எரியக் கொடுத்து வைத்த முதல் பாக்கியசாலி யாரோ?” என்று அவரைக் கேட்டேன்.

    “இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை சார்” என்ற அவரிடம், “நான் வெளியூர்க்காரன், எனக்கு வாய்ப்பு இருக்காது” என்றேன்.

    “என்ன சார், இப்படி சொல்றீங்க!” என்றவரிடம், “ஆமாம், நீங்கள் மட்டும் முன்ன பின்ன தெரியாத ஆளை சுடுகாட்டுக்குக் கூட்டி வந்து காண்பிக்கலாம், நான் சொல்லக் கூடாதா?” என்றேன். வஞ்சனையில்லாமல் சிரித்தார்.

    மரணம் ஒரு சுவாரசியமான பேசுபொருளாக இருக்கிறது. மரணத்தைப் பார்ப்பது வேறு. சிந்திப்பது முற்றிலும் வேறு.

    மரணத்தை முன்வைத்து எழுதப்படும் கவிதைகள், கதைகள் தத்துவ தரிசனமாக நகர்கின்றன. ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ என்று தொடங்கும் திருக்குறளை விடவா?

    மரண இல்லத்தில் நிலவும் பேரமைதி, வெளியே பேசப்படும் செய்திகள், சமாதான மொழி, அடுத்தடுத்து நகரும் காரியங்கள் எல்லாம் வாழ்க்கையின் இயல்பை நோக்கி விரைகின்றன. ஒரு மரண வேளையில் எத்தனையோ முந்தைய மரணங்கள் நினைவுக்கு வருகின்றன – ஒரு விபத்தின்போது பேசப்படும் வேறு விபத்துக்களைப் போல.

    ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு விதத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது. சில நிலைகுலைய வைக்கின்றன. சில குற்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றன. சில விடுதலையடைந்த உயிரின் அவஸ்தையை வழியனுப்ப வைக்கின்றன. சில மௌனத்தில் ஆழ்த்திவிடுகின்றன. மரணம் நிகழ்ந்த வீட்டுக்குச் செல்வது சிலருக்கு இயல்பாகவும், சிலருக்கு நிர்ப்பந்தமாகவும், சிலருக்கு தேடலாகவும் அமைகிறது.

    மரணத்தின்முன் மௌனமாக நிற்கும்போது மனிதர்கள் கொஞ்சம் சுயமிழக்க இயற்கை வாய்ப்பு நல்குகிறது. சொந்த கிரீடங்களின் பளுவிலிருந்து விடுவிக்க முயல்கிறது. ஏற்கெனவே இறந்த மனிதர்களிடமும், இப்போது நேர்ந்திருக்கும் புதிய மரணத்திடமும் சொல்ல விடுபட்டவற்றை, கேட்கத் தவறியவற்றை, பேசாது தவிர்த்தவற்றை, வழங்க மறுத்த கருணையை, பெற இயலாதுபோன மன்னிப்பை, பகிர வெறுத்த புன்னகையை, இன்ன பிறவற்றை அந்த நொடியில் சரி செய்துகொள்ளப் பார்க்கும் மனங்கள் அப்போதாவது இலேசாகும் தருணத்தை வரமாக்கிக் கொள்கின்றன. அப்போதும் தங்களது மேலாதிக்க மனநிலையில் மிதப்பவர்களை மரணங்கள் பெருந்தன்மையுடன் மன்னிக்கவே செய்கின்றன. இறந்த மனிதரின் வங்கிக் கணக்குகளை முடித்துக் கொடுக்கும் சமூகம், அவரோடு இருந்த வம்பு வழக்குகளை முடித்துக் கொள்ள இசைவதில்லை என்பது மரணத்தைக் கடந்தும் தொடரும் துயரம்.

    ஒரு நகைச்சுவை துணுக்கு மின்னஞ்சலில் வந்திருந்தது. வெளியூர்ப் பயணம் செல்லும் கணவன், இப்படி ஒரு மின்னஞ்சலை மனைவிக்கு அனுப்பி வைக்கிறான்: “கண்ணே, நான் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டேன். நீ நம்பமாட்டாய். எதிர்பாராத வசதிகள் எல்லாம் இங்கே இருக்கின்றன. அருமையான தங்குமிடம். இணையதள இணைப்பு. குளிர்பதன அறை. அருமையான வேலையாட்கள். உனக்கும்கூட இங்கே ஏற்பாடு செய்துவிட்டேன். நீ ஏன் உடனே புறப்பட்டு என்னிடம் வந்து சேரக் கூடாது?”

    அவருடைய அவசர தட்டலில், இந்த மெயில் வேறொரு பெண்மணிக்குச் சென்றுவிடுகிறது. அவரோ அதைத் திறந்து படித்து அதிர்ந்துபோய், மகனே இங்கே வாயேன், அய்யோ என்ன இது…என்று அலறுகிறார். மகனும் அதைப் படித்ததும் அதிர்ச்சி அடைகிறார். அப்புறம் தெளிகிறார்.

    அந்தப் பெண்மணியின் கணவர் அன்று காலைதான் இறந்துவிட்டிருந்தார். அவரைப் புதைத்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கும் நிலையில் மேற்படி மின்னஞ்சல் அவரிடமிருந்துதான் வந்திருக்கிறது என்று நினைத்துவிட்டார். இப்போது அந்த மெயிலை நீங்களே இன்னொருமுறை படித்துப் பாருங்கள், அதிர்ச்சிக்கான காரணம் தெரியும்.

    ஆனந்த் (பிரபல மலையாள எழுத்தாளர் சச்சிதானந்தன்) அவர்களது ‘மரண சர்டிபிகேட்’ (கேரளா சாகித்ய அகாதமி விருது பெற்றது) தனது இல்லத்தில் நேரும் மரணத்தைத் துயரத்தோடு அணுகும் பதட்டம் நிறைந்த மனிதர் ஒருவரைப் பேசுகிறது. அருமையான தமிழ் மொழிபெயர்ப்பில் பல ஆண்டுகளுக்குமுன் வாசித்த அந்தக் கதையில் ஒரே ஒரு மனிதரே அதிகம் இடம் பெறுகிறார். அவரது மொழியிலேயே கதை நகர்கிறது. அவரது வீட்டில் தற்செயலாக வந்து தங்கும் ஒருவர் மரித்துப் போய்விடுகிறார். அவரைக் குறித்த மேலதிக விவரங்கள் ஏதும் இவரிடம் கிடையாது என்று கொஞ்சம் வித்தியாசமாகத் தொடங்கும் கதை.

    உடல் நலம் குன்றியிருக்கும்போது பயன்படுத்திய ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் உபகரணங்களை திருப்பிக் கொடுக்க சம்பந்தப்பட்ட கடைக்குச் செல்கிறார் இவர். “வருந்துகிறேன் சார்..அந்த மரணம் எப்போது நேர்ந்தது?” என்று கேட்கும் கடைக்காரன் இவரை வியப்பில் ஆழ்த்துகிறான். “உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்கிறார். “இந்த சாதனங்கள் ஒருமுறை கடைக்கு வெளியே சென்றால், நோயாளி மரிக்காமல் ஒருபோதும் திரும்புவதில்லை” என்கிறான் அவன்.

    தகனம் செய்யுமிடத்தில் விறகு வாங்கும்போது ரசீது தருபவன், இது மிகவும் முக்கியம். பத்திரமாக இருக்கட்டும். இல்லையெனில் மரண சான்றிதழ் கிடைக்காது என்கிறான். ஆனால் அதை கிரிமடோரியம் கிளார்க் பின்னர் பெற்றுக் கொண்டுவிடுகிறான், சான்றிதழ் ஏற்பாடு செய்ய.

    முதல்முறை பிரேதத்துடன் அச்சத்தோடு செல்லும் சுடுகாட்டுக்கு, பின்னர் சான்றிதழ் பெற திரும்பத் திரும்பச் செல்ல நேர்கிறது அவருக்கு. அச்சம் மெல்ல மெல்ல அகன்றாலும், மரணத்தின் நிழல் அவரை எதிர்ப்படும் எல்லா மனிதர்களையும் சூழ்ந்திருப்பதாகவே உணர்கிறார். சுடுகாட்டில் வேலையாளின் குடும்பம் வசிப்பதும், குழந்தைகள் அநாயசாமாக அங்கே ஓடியாடி விளையாடுவதும் அவருக்கு விசித்திரமாகப் படுகிறது. நிறைய கற்றுக் கொடுக்கிறது அந்த ஒரே ஒரு மரணம்.

    சுடுகாட்டு எழுத்தர் மாற்றலில் சென்றுவிடுகிறார். புதிய ஆள், விறகுக் கடை ரசீது எங்கே என்று இவரிடமே கேட்கிறார். சுமார் 190 பக்கங்கள் கொண்ட நாவலில் கடைசி கடைசியாக மாநகராட்சி அலுவலகத்தின் முக்கிய பொறுப்பு அதிகாரியிடம் சான்றிதழ் கையொப்பம் ஆகும் நேரத்தில் அவரெதிரே நிற்கிறார்.

    அந்த உயர் அதிகாரியோ எல்லாத் தாள்களையும் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்துவிட்டு, மன்னிக்கணும், மறைந்த அந்த மனிதரின் பிறப்புச் சான்றிதழ் நகலை நீங்கள் இணைக்கவே இல்லையே என்கிறார். இவருக்கு எரிச்சல் எடுக்கிறது.

    அந்த உயரதிகாரி சொல்கிறார்: “உங்கள் கோபம் நியாயமானது…இறந்த மனிதனுக்கு எதற்கு பிறப்பு சான்றிதழ் என்று நீங்கள் நினைப்பீர்கள்! ஓர் அடிப்படை சிக்கலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பூவுலகில் பிறக்காத ஒரு மனிதன் இங்கே மரித்தான் என்று எப்படி நான் சான்றிதழ் தர முடியும்?”

    கதை இப்படி முடிகிறது: பிறப்பின் சாட்சி வாழ்க்கை. வாழ்க்கையின் சாட்சி மரணம். மரணத்திற்குச் சாட்சியைத் தேடி அலைகிறேன்….

    நன்றி: செம்மலர் (மே, 2015)

    ***************

    Share
  • படக்கவிதைப் போட்டி 17-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் போட்டிக்கான புகைப்படத்தின் சொந்தக்காரர் திரு. ஆதித்யா நாகராஜுக்கும், இப்படத்தைப் போட்டிக்கு ஏற்றது எனத் தேர்ந்தெடுத்துத் தந்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை இதழின் நன்றி.

    sun

    உயர்ந்தோரெல்லாம் போற்றும் வகையில் ஞாலத்தின் இருளகற்றி ஒளிகூட்டும் ஞாயிற்றைக் காணும்போதெல்லாம் நம் உள்ளத்தில் எல்லையிலாப் பரவசம் ஏற்படுகின்றது இல்லையா? ஞாயிற்றைப் போன்றே இருளகற்றும் அருட்பணியை வேறொன்றும் செய்கின்றது. அஃது எது தெரியுமா? ’நம் அகஇருளை நீக்கி அறிவொளி கூட்டும் தன்னேரிலாத் தமிழ்தான் அது!’ என்கிறது தண்டியலங்கார மேற்கோள் செய்யுளொன்று. ஞாயிற்றை நிகர்த்த நம் தமிழைத் தாய்மொழியாய்ப் பெற்ற நாம் பேறுபெற்றோரே அல்லவா!

    ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
    ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
    மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
    தன்னே ரிலாத தமிழ். (தண்டியலங்கார மேற்கோள் செய்யுள்)

    இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைச் சுவைத்துவிடலாம் இனி!

    ***

    அலைமகளின் அழகைத் தன் கவிதையில் சொல்லோவியமாக்கியிருக்கிறார் திருமிகு. ரேவதிஸ்ரேயா.

    அலை மகளின் அழகு !
    இனிய இந்த பொன் மாலை பொழுதிலே
    அலை மகள் அசைந்து இசைந்து இன்னிசை கவி பாடி
    அலை மோதி ,விளையாடி
    தன்னை தேடி ரசிக்கவரும் ரசிகர்களை
    தனது அழகினால் மயக்கி தன்வசப்படுத்தி
    கவலைகளை நீக்கி முகத்தில் புன்னகைப்பொலிவூட்டும்
    எங்கள் கடல் அன்னையே நீ என்றும் இம் மண்ணில் வாழ்க வாழ்க !

    ***

    பிறவிப் பெருங்கடலில் பிறப்பும் இறப்பும் எவ்வாறு மாறிமாறி வருகின்றாதோ அதுபோன்றதுதான் சூரிய உதயமும் அத்தமனமும் எனும் வாழ்க்கை நியதியை நமக்கு நினைவூட்டுகின்றார் திரு. ஜெயபாரதன். 

    செந்நிறச் சினமோடு 
    கீழ்வானில்
    பொன்னிற விளக்கு எழுந்தது !
    காலையில் போட்ட விளக்கு
    அந்தி மாலையில்
    வேர்த்து
    ஓய்வு பெறும் பரிதி
    செந்நிறச் சினமோடு தான்
    அத்தமிக்கும் !
    பிறவிப் பெருங்கடலில்
    பிறப்பும் இறப்பும்
    சுழற்சி நிகழ்ச்சியே ! 
    பிரபஞ்ச நிகழ்ச்சி அனைத்தும்
    பம்பரச் சுழற்சி தான் !
    […]

    நீர்க்கோள மான நமது
    நில மடந்தைக்கு
    ஒப்பான பூமி
    வேறெங்கும் உள்ளதா வெனக்
    கூற முடியுமா ?
    […]
    கடல்நீர் வற்றாது !
    கதிர்ப் பரிதி அணையாது !
    மானிடம் தழைக்க 
    சூரிய உதயம் தவறாது !
    மரணம் மரிக்காது !
    அத்தமனம் உண்டு 
    அத்தனைப் பிறவிக்கும் !

    ***

    பெருநீராய் விரிந்திருக்கும் தன் உள்ளத்தின் விரிவை நமக்குத் திறந்துகாட்டுகிறார் திருமிகு. மணிமேகலை தன் கவிதையில்.

    விரிந்த மணல் பரப்பில்
    அலை படர்ந்த கடற்கரையில்
    தொலைதூர கதிர் ஒளியில்
    எங்கும் பரவிக் கிடக்கின்ற
    உனதன்பை வியந்து
    பெரு நீராய் விரிந்து
    கிடக்கிறது எனதுள்ளம் ..
    வா வந்து கொஞ்சம்
    அணை இட்டு தேக்கிப்போ …

    ***

    காதலனாம் ஆதவன் தந்த நீலப்புடவை அணிந்த கடற்கன்னியின் காதலைப் பேசுகிறார் திருமிகு. கிர்த்திகா.

    நீல பார்டரில்
    தங்க உடலில்
    புடவைப் பரிசு
    ஆர்ப்பரிக்கும்
    கடற்கன்னிக்கு
    ஆதிச் சூரியன்.

    புடவைக்கு
    அடங்கிடுவாளா
    மோதிப் பார்க்கிறாள்
    கரையில்..விடாமல்
    ஆதவனை அடைய..

    மோதிய வலியில்
    இரவில் அடங்கி
    பகலில் எட்டிப்
    பழுத்து கொதிப்பவனை
    நீல புடவையில்
    முடிந்து சூடாக இவள்
    குளிர்ந்தே இவளுள்
    அவன்.

    ***

    ’ஆதவனின் உறக்கத்திற்காய்க் காத்திருக்கும் நீலப்போர்வையே கடல்’ என்று கவிநயத்தோடு குறும்பா படைத்திருக்கிறார் திருமிகு. சிவகாமி.

     நீ உறங்குவதற்காகவே காத்திருக்கிறது 
    அலையெனும் நீலப் போர்வை 

    ***

    வெள்ளி நீரைத் தங்கமாக்க நினைக்கும் ஆதவனின் செப்படி வித்தையை நம்மிடம் செப்புகிறார் திரு. ஆதி வெங்கட்.

    வெள்ளியெனத் தோன்றும்
    கடல் நீரை
    தங்கமாக்க முயற்சிக்கிறதோ
    இந்தச் சூரியன்!

    ***

    இயற்கையன்னை தந்ததெல்லாம் எல்லார்க்கும் சொந்தமெனும் பொதுவுடைத் தத்துவத்தைப் பதமாய் உரைக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    கீழ்வானில் எழுந்து  குமரியிலே  மறைந்து
    பொன்மாலை பொழுதிற்  அலைகள்  அசைந்து
    நின்னை  காணுங்கால்  ஓர்  இயற்கை  அழகு 

    இயற்கை அன்னை தந்தெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா ,
    எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா !

     ***

    பொற்கதிரோன் அழகில் சொக்கி கவிபுனையாக் கவிஞரும் உளரோ? என்று கேட்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், விடியாத இருளும் விலகாத துயரும் உலகிலில்லை எனும் நன்மொழிகளோடு கவிதையை நிறைவுசெய்துள்ளார்.

    பொற்கதிர்       பரப்பி          வையம்
    பூரிக்கபகல்      தந்த         கதிரோன்
    அற்புதமாய்     வேலை     முடித்து
    அழகாய்         மறைய       துவங்குகிறான்
    […]

    தினம் உன்   வருகை      மறைவு அழகை
    இனிதாய்     காண்கிலேன்   எனில்
    இம்மண்ணில்  கவிஞர்    கள்யாரோ?
    சூரியன்        நிலவாய்     ஆகும் அங்கே
    சுடர்பரப்பி    நிலவு      காலை சூரியனாகுமோ?
    விடியாத     இருளும்   இல்லை 
    விலகாத     துயரமும்   இல்லை இது
    இறைவன்  செய்யும்     லீலை 

    ***

    ’இயற்கைக் கவிஞனொருவன் ’பார்’ திகைக்கப் பிரசுரித்திருக்கும் வானத் தீயைப் பார்!’ என்று நயமாய்க் கவி வார்த்திருக்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    எரிதணல் கக்கி  இடர்வழங்கும் சேவை
    புரிந்து இளைப்பாறும் போது –பரிதி
    விரிவானில் நின்று விழுந்த ஒளியால்
    தெரிவிக்கும் வண்ணம்  உழைப்பு!

    பொங்கும் கடல்மேல் புதுக்கவிதை யாத்து
    எங்கும் படர்த்தி மனதுக்குள் –தங்கும்
    வகைசெய் இயற்கைக் கவிஞன் புவனம்
    திகைக்க பிரசுரித்தத் தீ!

    உழைத்துக் உருகும் உழைப்பாளி வாழ்வில்
    பிழைத்தோங்க சிந்தும் உதிரம்   – மழையாய்
    பொழிந்து கடல்கலக்கத் தோன்றச் சிவந்த
    விழியாமோ மாலை விசும்பு?

    ***

    ’ஆதவனின் இதயம் தொட்ட கடலன்னைக்கு நீலப்பட்டாடை கட்டியது யார்?’ என நமைப்பார்த்து வினவுகின்றார் திருமிகு. லட்சுமி.

    அலைகடல் ஓசையிலே
    ஆதவனின் செம்பஞ்சுத் தங்க நீரோடையிலே
    இதயம் தொட்ட
    ஈன்றவளுக்கு நீலப்பட்டாடை
    உடை உடுத்தியது யார்?
    ஊசிக் கதிரொளியினிலே 
    எட்டுதிக்கும் தமிழ்த் தாயன்பை
    ஏந்திழையாள் வடிக்கின்றாள்!
    ஐந்திறம் நிறைந்த
    ஒல்காப் புகழ் தமிழ்மண் தேடி
    ஓவியக் கடலாய் 
    ஔடதமாய் மன்பதைக்கு
    அஃதென உரைப்பவர் எங்கே?

    ***

    ’அழகின் சிரிப்பு’க்குப் பின்னே ஆபத்து ஏதும் மறைந்திருக்குமோ? என்று நம்மை எச்சரிக்கின்றார் திரு. எஸ். பழனிச்சாமி.

    தங்க நிறத்தில் வானம்
    தகதகக்கும் இளஞ் சூரியன்
    துள்ளி வரும் வெள்ளலைகள்
    கொள்ளை கொள்ளும் மணல்வெளி
    […]
    இயற்கையின் சிரிப்பை ரசிப்போம்
    இன்பமான வாழ்வில் மகிழ்வோம்
    எல்லாம் சரிதான் – ஆனால்…
    எச்சரிக்கை செய்கிறது மனது 
    அழகின் பின்னே மறைவாய்
    ஆபத்தும் இருக்கலாம்  ஜாக்கிரதை!
    இன்று போல்தான் உலகம்
    அன்றும் விடிந்தது நமக்கு
    அமைதியாய் தோன்றும் கடலும்
    ஆக்ரோஷமாய் சீறிப் பாய்ந்தது
    சுனாமி பேரலையாய் புகுந்து 
    சுருட்டிக் கொண்டு போனது
    மனித உயிர்கள் எல்லாம்
    […]
    ஒரே நாளில் வாழ்வு
    உருக்குலைந்து போனது 
    அழகான உதயம் அன்று
    அஸ்தமனமாய் ஆனது 

    ***

    இன்ப இம்சை அழகியான தன் சூரியக் காதலியைச் சிலிர்ப்போடு வர்ணித்திருக்கிறார் திரு. சந்தோஷ் குமார்.

    விடியல்
    ஒளி விரல்களால்
    காலை மணி ஆறில்
    எனை எழுப்பத் தூண்டியவள்..

    மதியம் பண்ணிரெண்டில்
    தன் அக்னி இதழ்கீற்றிகளினால்
    என் மேனியை
    முத்து வியர்வையில்
    குளிப்பாட்டினாள்.

    இப்படியான இன்ப இம்சை
    அழகியை காதல் கொஞ்ச
    கவிதைத் தூரிகையால்
    சீண்டலோவியமிட
    கடற்கரைக்கு விரைந்தேன்
    மாலைவேளையான
    மணி ஆறில்..!

    பாருங்களேன்…!
    இவளுக்கு என்ன திமிரு…!

    என் மன்மத சொல்வித்தைக்கு
    கிறங்கிவிடக்கூடாது என்பதற்காகவே…
    ஆழி மெத்தையில்
    வெள்ளச்  சரிகையுள்ள
    மஞ்சள்பட்டுப் போர்வைக்குள்
    வெட்கச்சிவப்போடு
    ஒடி ஒளிந்துக்கொள்ள
    விரைகிறாள்
    இந்த கள்ளி
    என் சூரியத்தேவதை…! 

    ***

    ’கதிர் காட்டும் வழி நடந்தால் வாழ்வில் ஒளி பிறக்கும்’ என்று நம்பிக்கை விதைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கடலும் வானும் நிறம்மாறின
    காணும் இடமெலாம் அழகாகின,
    உடலில் அழகுடன் எழுகதிரே
    உனக்குச் சொல்லிடும் பலகதையே, 
    கடமை இருக்குது உழைத்திடவே
    காட்டிடு ஒளியை உலகினுக்கே,
    அடைதல் இயற்கை அதன்முன்னே
    ஆற்றிடு நற்பணி உலகினிலே…!  

    ***

    கவின் நிலவைத் தேடும் கடற்பாவையை எழிலோவியமாய் நம்மெதிரில் நிறுத்துகின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    நீலநிறப் பட்டாடை நெடுமணல் மேல் உலர்த்தி
    மஞ்சள் ஆடையுடுத்தி காதலனாம் மதியைத் தேடி
    நெஞ்சத்துக் காதல் அலையலையாய்ப் பொங்கி வர
    கொஞ்சி குதித்தோடி குரலெழுப்பி கூவும் கடற்பாவை

    தன்னழுகு காதலனாம் கவின் நிலவைக் காணாது
    என்ன நேர்ந்தது என வானோக்கி வருந்தி வியப்புற்று
    இன்னமும் இருக்கின்றாயா நீ மறைவதெப்போது என
    அன்ணணாம் கதிரவனை கேட்கின்ற அழகுதான் என்ன?

    ***

    நீலத்தரங்கத்தின் மேலுள்ள வான அரங்கில் கதிர்விரிக்கும் கதிரோனைப் பரவுகின்றார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

    நீலத் தரங்கத்தில் நீராடி மெல்லெழுந்து
    கோலக் கதிர்விரித்தான் கோகபந்து ! –ஓலமிட்டுத் 
    துள்ளும் அலைகளும் தூக்கக் கலக்கத்தில் 
    மெள்ளத் தவழும் விழித்து !

    ***

    ’வெண் சீருடை கழுவ, மாயக்கண்ணனின் நீலநிற வண்ணத்தை இங்கே (கடலில்) கலக்கியது யார்?’ என்று கேள்விக்கணை தொடுக்கிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

    வெண் சீருடை கழுவ
    கண்ணன் மாயனின் வண்ணமாம்
    கண் பறிக்கும் நீலப்பொடியை
    எண்ணிக் கலக்கியது யாராகும்!
    –
    அன்றி –
    விண்முகில் இங்கு சடுதியாய்
    மண்ணில் தெரியும் மாயை!
    திண்ணமோ இது நானறியேன்! 
    கண்ணின் எண்ண மயக்கமோ!…

    ***

    நல்ல சிந்தனைகளை அள்ளித் தெளித்திருக்கின்றீர்கள் கவிஞர்களே! உளப்பூர்வமான பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துவருவோம்!

    செந்நிறப் புரவியில் கம்பீரமாய்ப் பவனிவரும் பகலவனை அலைகள் ஆர்ப்பரித்து வரவேற்கும் அற்புதக்காட்சியை மிகைப்படுத்தலின்றி மிக இயல்பாய், எளிய சொற்களால் வனப்போடு தீட்டியிருக்கின்றார் திருமிகு. தமிழ்முகில். அவரே இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பைப் பெறுகின்றார்.

    அவருடைய கவிதை…

    செந்நிறப் புரவியது
    சிறகு
    விரித்து
    பறந்து
    வர
    நடு
    நாயகமாய்
    கதிரோனும்
    அதிலேறி
    பவனி
    வர
    சமுத்திரம்
    தன்
    அலை
    கரம் அசைத்து
    நடனமாடி
    வரவேற்க
    வானும்
    தன் பங்கிற்கு
    அழகினை
    வாரி இறைக்க
    நீலம்
    சுமந்த கடலும்
    மணல்
    கொண்ட கரையும்
    கைகோர்த்து
    மகிழ்ந்தாட
    கலைக்
    கண்களுக்கு
    இவையனைத்தும்
    விருந்தாக –
    இயற்கையின்
    எழிலான
    அரங்கேற்றம்
    !

    ***

    காதலியின் மடிசாய்ந்துகிடந்த அந்த மாலை நேரத்து மயக்கத்தை மனம்வருடும் கவிதையாக்கியிருக்கிறார் திரு. கவிஜி. அவரின் கவிதையைப் பாராட்டுக்குரியது எனத் தேர்வு செய்கிறேன்.

    கடக்க கடக்க
    அங்கேயே நிற்கிறது
    இந்தக் காதல்…
    […]
    அத்து
    மீறியும்
    தொடமுடியாத பக்கத்தில்
    அச்சடித்த கண்களுடன்
    சிரிக்கிறது மஞ்சள் வெயில்…
    […]
    கறிவேப்பிலை
    பழங்கள்
    போல
    கருஞ்சிவப்பு கூட்டுக்குள்
    மருதாணி முரண்பாட்டை
    கொத்தாய் பிடுங்குகிறது
    மணல் வெளி…….

    யாரோ நடந்த
    ஒற்றையடியில் அழிக்க
    முடியாத பாதங்களாய்
    கற்பனை விரிக்கிறது….

    சொல்லிவிட முடியாத
    தருணத்துக்குள் சொல்லிக்
    கொண்டே பேதலித்துக்
    கிடக்கிறது
    கடக்கவே முடியாத
    உன் மடி சாய்ந்து  கிடந்த
    இந்த மாலை
    நேரத்து மயக்கம்…

    ***

    கவிஞர்காள்!  சிந்தனைக்கு ஓய்வு தராமல், ஒவ்வொரு கவிதைப் போட்டியிலும் உங்கள் ஆர்வத்தையே நெய்யாக வார்த்துக் கவிதைப் பந்தம் கொளுத்தி அறிவு வெளிச்சம் கூட்ட வாருங்கள்!

    மீண்டும் சந்திப்போம்!

     

    Share