-செண்பக ஜெகதீசன்

பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல். (திருக்குறள்-196: பயனில சொல்லாமை)

புதுக் கவிதையில்…

வயலில் மதிப்பு
விளையும் நெல்மணிக்குத்தான்,
வையத்தில் பாராட்டு
பயனள்ள பேச்சுக்குத்தான்

பயனிலாச்சொல் பேசுபவனும்
பாராட்டுபவனும்
பதர்தான் மக்களில்…!

குறும்பாவில்…

பயனுள பேசுபவர்கள்
மக்கள் வயல் நெல்மணிகள்,
பயனில பேசுவோர் பதர்கள்…!

மரபுக் கவிதையில்…

வயலில் வளரும் பயிரினிலே
–விளையும் நல்ல நெல்மணிகள்
உயர்வு பெறுமே நல்மணியாய்
–உலகோர் பலரும் உளம்மகிழ,
பயிரில் விளையும் நெல்மணிபோல்
–பயனுள வார்த்தை பேசிடுவாய்,
பயனிலாச் சொற்கள் பேசுவோரே
பாரதன் மக்களில் பதராமே…!

லிமரைக்கூ…

பயனுள பேசுவோர் மக்கள்வயல் நெல்,
பயனிலாச் சொற்கள் பேசுவோரை
பாரிலுள்ள மக்களில் பதரென்றே சொல்…!

கிராமிய பாணியில்…

நெல்லுநெல்லு நல்லநெல்லு
நஞ்சநெலத்து நல்லநெல்லு,
சொல்லுசொல்லு நல்லசொல்லு
நாலுவருக்கு நல்லசொல்லு,
இதச் சொல்லுறவன்
நெல்லுநெல்லு நல்லநெல்லு
நஞ்சநெலத்து நல்லநெல்லு..

ஒருத்தருக்கும் ஒதவாத
சொல்லுசொல்லு கெட்டசொல்லு,
இதச் சொல்லுறவன்
நெல்லுயில்ல நெல்லுயில்ல
பதருபதரு,
ஒருத்தருக்கும் ஒதவாத
ஒண்ணுமில்லா பதருபதரு..

நெல்லுநெல்லு நல்லநெல்லு
நஞ்சநெலத்து நல்லநெல்லு…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *