இந்த வார வல்லமையாளர்!
ஜூன் 22, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு “சூப்பர் 30 – ஆனந்த் குமார்” அவர்கள்
கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வசதி குன்றிய நிலையில், ஆனால் நல்ல ஆர்வமும் கல்வித் திறனும் கொண்டு பொறியியல் படிக்க விரும்பும் 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காததுடன் தங்குமிடமும் உணவும் கணிதப் பயிற்சியும் கொடுத்து மாணவர்களின் பொறியியல் கல்விக் கனவுகள் நினைவாக உதவும் “சூப்பர் 30” நிறுவனர் “ஆனந்த் குமார்” அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. பொதுநுழைவுத் தேர்வுகள் (The Indian Institute of Technology Joint Entrance Exam – IIT-JEE) மிகவும் கடினமான நுழைவுத் தேர்வுகள் என்று பெயர்பெற்றவை. நான்கு இலட்சத்திற்கும் மேல் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களில் 2.5% மாணவர்களே ஐ.ஐ.டி. யில் கல்விபெற தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அத்தேர்வின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்காகவே இலட்சம் ரூபாய்கள் வரை செலவழித்து பயிற்சி பெரும் செல்வநிலையை உடைய மாணவர்களுக்கு இடையே, தினக்கூலியாக வாழ்வை நடத்தும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இத்தேர்வுக்கான பயிற்சி என்பது ஓர் எட்டாதக் கனவு. இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் உள்ள இடைவெளியால் வாய்ப்புகள் தவறிப் போகும் நிலையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொள்வோர் வெகு சிலரே. அவர்களில் ஒருவரான ஆனந்த் குமார், இந்த மாணவர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்து, இந்திய தொழில்நுட்ப நிலைய நுழைவுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்தி, ஒரு ஆண்டிற்கான முழுச்செலவையும் ஏற்று, அதில் பெரும்பாலானவர்களை வெற்றிபெற வழிசெய்து வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு இவரது சூப்பர் 30 திட்டம் துவக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, 30 மாணவர்கள் 2003 ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தேர்வுக்குச் சென்றார்கள். தொடர்ந்து இந்த ஆண்டுவரை, ஆண்டுக்கு 30 மாணவர்கள் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 390 மாணவர்களுக்கு கட்டணமின்றி, உதவிகளும் வழங்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 85% விழுக்காட்டினர் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று பொறியியல் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள். முன்னூறுக்கும் அதிகமான எளிய மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுத்துவது, அதுவும் யாருடைய நிதியுதவியும் இல்லாத நிலையில் இச்செயலைச் செய்வது ஒரு சாதனை என்பதை மறுப்பதற்கில்லை.
வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் சென்று தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டால், அவர்களுடன் சேர்ந்து தாமும் மகிழும் பெற்றோர்கள் பலருக்குத் தங்கள் பிள்ளைகள் என்ன சாதனை செய்துவிட்டோம் என இவ்வாறு மகிழ்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை என்பதும்; ஐ.ஐ.டி. என்பதைக் கூட ஐ.டி.ஐ. என்று மாற்றிக் கூறும் அளவிற்குப் பெற்றோர் சிலர் பொறியியல் கல்வி பற்றியே அறிந்திராதவர்கள் என்பதும் ஒவ்வொரு ஆண்டும் வெற்றி பெரும் மாணவர்கள் தரும் நேர்காணல் செய்திகள் அறியத் தருகிறது. இதுவரை பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் குடும்பங்களும் கட்டுமானத் தொழிலில் உள்ளவர்கள், வயலில் வேலை பார்க்கும் தினக் கூலிகள், நடைபாதைக் கடை வைத்திருப்பவர்கள், பெட்டிக் கடை வைத்திருப்பவர்கள், வாடகை டாக்சி வண்டி, ரிக்க்ஷா வண்டி ஆகியவை ஓட்டுபவர்கள், காவல்காரர்கள், வீட்டு வேலை பார்ப்பவர்கள், தையல்வேலை செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள், ட்ரக் மெக்கானிக்கள் என்ற உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. ஆனந்த் குமார் உதாவாது விட்டிருந்தால், திறமையுள்ள இந்த மாணவர்களின் பொறியியல் கல்வி பற்றிய கனவு நிறைவேறாமல் வாழ்க்கையே திசை திரும்பியிருக்கும் என்பதுதான் உண்மையும் கூட.
இது போன்ற பொருளாதார வசதியற்ற நிலையில் வாழ்க்கையைத் தொடங்கியவரே ஆனந்த் குமாரும். பீகார் மாநிலத்தில் அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்தவர் இவரது தந்தை. ஆனந்த் குமார் ஐ.ஐ.டி. யில் படித்தவர் அல்ல. சிறுவயது முதலே கணிதப்பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டவர், கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் பயின்ற பொழுதே கணித ஆய்வு இதழ்களிலும், ஆய்வு பத்திரிக்கைகளிலும் இவர் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவரது திறமையைக் கண்ட இவரது ஆசிரியர் வெளிநாட்டிற்குச் சென்று படித்து இவரது கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ள ஆலோசனை கூறினார். அதையடுத்து ஆனந்த் குமார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துப் படிக்க இடமும் கிடைத்தது, ஆனால் வெளிநாட்டில் சென்று படிக்கவோ பணவசதி இவருக்கு இருந்திருக்கவில்லை. இவரும் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் முதற்கொண்டு பலரிடம் உதவி கேட்டுப் படியேறி இறங்கியிருக்கிறார், பலனில்லை. அரசியல்வாதிகள் ஆலோசனை வழங்க மட்டுமே தயாராக இருந்திருக்கிறார்கள். குழப்பத்திலிருந்த நேரத்தில் இவரது தந்தையும் இறந்துவிடவே குடும்பப் பொறுப்பை ஏற்றுத் தாய்க்கு உதவ வேண்டிய நிலையில் இருந்தார். கேம்ப்ரிட்ஜ் கல்விக்கு முற்றிலும் வழியில்லாது முற்றுப்புள்ளி விழுந்தது. தனது ஆர்வத்தின் காரணமாக கிடைத்த நேரங்களில் கணிதம் பயிற்சி செய்தாலும் தாயார் தொடங்கிய ‘பப்படம்’ செய்து விற்கும் தொழிலில் தாயுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். தானும் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து ‘இராமானுஜன் கணித கல்வி நிலையம்’ (Ramanujan School of Mathematics) என்ற பள்ளியைத் தொடங்கி கணிதப்பாடம் நடத்தி வந்திருக்கிறார்.
கட்டணம் செலுத்தி பலர் இவரிடம் பயிற்சி பெற்றுவந்த காலத்தில், கூலித்தொழிலாளியின் மகன் ஒருவர் இவரை அணுகி ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. பொதுநுழைவுத் தேர்வுக்கு இவரிடம் பயிற்சி பெற விரும்புவதாகவும், ஆனால் கட்டணம் செலுத்த வசதி இல்லை என்று சொல்லியிருக்கிறார். அன்று தொடங்கியது “சூப்பர் 30” என்ற இவரது கட்டணமற்ற பயிற்சித் திட்டம். மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை ஒதுக்கி தன்னைப் போன்று வசதியற்ற நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவ ஒரு திட்டம் தயாரித்தார். இவரது அன்னை உணவு தயாரித்து உதவ, சகோதரர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள, இவர் பயிற்சிக் கல்வி வழங்குவதை மேற்கொண்டார். முதன்முறையாக 30 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து 2003 இல் நுழைவுத் தேர்வுக்கு அனுப்பினார். இவர்களில் 18 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. யில் இடம் கிடைத்தது. பின்நாட்களில், 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் பயிற்சிபெற்ற 30 மாணவர்களுமே வெற்றி பெற்றார்கள். இந்த ஆண்டு 25 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள், முப்பதில் ஒருவர் தேர்வு எழுதவில்லை, அதற்குள் ஜப்பான் பல்கலைக்கழகத்தில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு கல்வியைத் தொடரச் சென்றுவிட்டார்.
பொறியியல் கல்வித்திட்டத்தில் அரசு ஏதேனும் ஒரு மாற்றம் அல்லது திட்டம் அறிவித்தால், உடனே அது பொருளாதாரத்தில் பின்னடைந்தவர் அல்லது கிராமப்புற பள்ளிமாணவர் வாய்ப்பில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று ஆராய்வது இவரது வழக்கம். விளைவுகள் மாணவர்களுக்கு எதிராக இருந்தால் அதனை அரசுக்குத் தெரிவிப்பதைத் தனது கடமையாகக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் கணிதம் பொறியியல் கல்விகளில் எவ்வாறு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற தனது கோணத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களையும், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும் சந்தித்து விளக்கியுள்ளார்.
கல்வியில் சிறந்த மாணவர்களையும் சராசரி மாணவர்களையும் தனித்தனியே பிரித்து பள்ளிகளில் பாடம் நடத்துவது சிறந்த மாணவர்களை மேலும் விரிவான வகையில் பாடங்களைப் பற்றி சிந்திக்க வாய்ப்புகளை உருவாக்கும்; கிராமப்புற பள்ளி மாணவர்களின் பின்தங்கிய நிலையை உணர்ந்து அவர்களுக்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வுகளில் மூன்றுமுறை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
இதுவரை இவரது சூப்பர் 30 வழங்கிய தொண்டைப் பாராட்டியவர்கள் பல நாடுகளும், உள்நாட்டு அயலக ஊடகங்களும், அரசியல்வாதிகளும், அமைச்சர்களும், பெருந்தலைவர்களும் எனப் பற்பலர். டிஸ்கவரி சேனல், ஜப்பான் தொலைக்காட்சி ஆகியவை இவரது கல்வித் தொண்டைப் பற்றிய டாக்குமெண்டரிகள் தயாரித்துள்ளன. நியூ யார்க் டைம்ஸ், டைம் மேகசின், நியூஸ் வீக் மேகசின், பி.பி.சி. போன்ற அயல்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் இவர்பற்றிய சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பாராட்டைத் தெரிவித்தத்துடன், நிதிஉதவியும் அளிக்க இயலும் என்ற செய்தி அனுப்பியிருக்கிறார். ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகம் இவரது முயற்சியில் உருவான இந்திய மாணவர்களுக்குத் தங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பளிக்க ஆர்வத்தை வெளியிட்டுள்ளது. இவர் சிறப்புரையாற்ற வேண்டும் என்று கோரி பலநாடுகளில் இருந்தும், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம் போன்ற உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்தும் வரவேற்கப்பட்டுள்ளார். உலகின் சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த பள்ளிக்கான விருது போன்ற விருதுகளும் வழங்கப்பட்டு பாராட்டப் பட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதுகளும் பெற்றுள்ளார். கோவையின் கற்பகம் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது.
திட்டத்தை விரிவுபடுத்தி 30 மாணவர்களுக்கு மேல் உதவவேண்டும் என்ற எதிர்காலத் திட்டமும் ஆனந்த் குமாருக்கு உண்டு. இவரது வெற்றியை அறிந்த பின்னர் இவரது திட்டத்திற்கு நிதி உதவி, நன்கொடை வழங்க எனப் பலர் உதவ முன் வந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் இத்திட்டத்தை தனது சொந்த முயற்சியாக, இராமானுஜம் கணிதக் கல்விநிலையம் மூலம் கிடைக்கும் நிதிகொண்டே நடத்த விரும்புகிறார். ஆனால், இவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி இது போன்ற பல பயிற்சிப் பள்ளிகள் உருவாக்க உதவி செய்து வருகிறார். தற்பொழுது நலிவடைந்த இஸ்லாமிய மாணவர்களுக்கு என்பது போன்று மேலும் சில நிறுவனங்களும் பயிற்சிகள் தொடங்கி வெற்றி பெற்று வருகின்றன. அந்த பயிற்சிப்பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பற்றிய செய்திகளும் “சூப்பர் 30” செய்திகளுடன் சேர்ந்தே வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன், அதையே என் மாணவர்களுக்கும் சொல்லித் தருகிறேன் என்று கூறுகிறார் ஆனந்த் குமார். மேலும் , தெளிந்த மனநிலை, உறுதியான லட்சியம். திட்டமிட்ட பாதை இதுதான் “சூப்பர்-30′ பயிற்சி நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம் என்று கூறும் ஆனந்த் குமார், பொருளாதார வசதியின்மையால் தனது உயர்கல்விக் கனவுகள் தகர்ந்தாலும், தன்னால் இயன்றவரை தனது சொந்த முயற்சியில் வசதிவாய்ப்பு அற்ற மாணவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களது பொறியியல் கல்லூரிக் கனவுகளை நினைவாக்க உதவி வருகிறார். திரு. ஆனந்த் குமார் அவர்கள் மேலும் பல மாணவர்களுக்கு பயிற்சியளிக்க விரும்பும் திட்டம் வெற்றியடையவும், அவர் முயற்சியால் மேலும் பலரது வாழ்வில் நல்லதொரு திருப்பங்களை ஏற்படுத்தவும் வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
தொடர்பு கொள்ள:
Postal Address:
Ramanujan School of Mathematics
Shanti Kutir, Chandpur Bela, Patna 800 001
email: mail@super30.org
Web Site: http://www.super30.org/
படங்களும் தகவல்களும் வழங்கிய www.super30.org இணையதளத்திற்கு நன்றி.