பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11425292_850420451678822_1064748056_n

122677713@N07_rதிரு. திவாகரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.06.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

17 thoughts on “படக்கவிதைப் போட்டி (18)

 1. உதிரும் இலைகள்.

  சி. ஜெயபாரதன்

  இலையுதிர் காலமா ? இல்லை 
  தலையுதிர் காலம் இது !
  சரித்திரம் மீள்கிறது !
  கற்கால மானது 
  தற்காலம் !
  மத மூர்க்கர் 
  முகமூடி அணிந்து,
  தொலைக் காட்சி 
  முன்னே
  மனிதர் தலை அறுக்கும்
  புனித பூமி இது !
  பச்சை இலைகள்
  பழுப்பு இலைகளாய்
  மாறும் காலம்.
  நீல வானப் புடவை கட்டி
  மேகக் கன்னி
  மயக்க வரும் காலம் !
  குளிர்காலம் 
  பச்சை நிறச் சேலையை
  உரிக்கப் போகுது !
  மரத்தின் மீது
  கிருஷ்ணன் வருவானா
  மஞ்சள் நிறப் புடவை
  அளிக்க ! 
  வெண்ணிலா தென்படும்
  பொன் முலாம் பூச !
  பருவக் கால கன்னி
  மரத்திலே பன்னிற 
  ஓவிய 
  இலைகள் வடித்து வானில்  
  கோலமிட வருவாள்
  நம்முள்ளம்
  கொள்ளை கொள்ள !

  ++++++++++++++

 2. ஒரு நிறமா ? 

  சி. ஜெயபாரதன்

  எந்த நிறம் பெரிது ?
  வெள்ளை நிறம் பெரிதா ? 
  பிங்க் நிறம் அழகா ?
  கரிய நிறம் தாழ்வா ?
  வெள்ளை நிறப் பூனையின்
  பிள்ளை சாம்பல் நிறம் !
  பழுப்பு நிறக் குட்டியும்
  போடும் !
  எல்லா நிறங்களும் 
  ஒற்றை நிறத்தின் வயிற்றில்
  உதித்த பிள்ளைகளே !
  பசுமை இலை மஞ்சலாய் மாறி
  முதுமை அடையும் !
  வெளுத்த நிறம் கருப்பாகி
  விழுந்து விடும் !
  நிறச் சண்டை 
  இரத்தத்தில் கலந்தது !
  நிற வெறிக் கலகங்கள் 
  ஆப்பிரிக் காவில் மட்டுமல்ல  !
  நாகரீக நாடு
  அமெரிக்காவிலும் 
  நடக்குது !
  எல்லோரும் ஓர் இனமா ?
  எல்லாரும் ஓர் குலமா ?
  எல்லாரும் ஓர் நிறமா ?
  சொல்வீர் !

  ++++++++++++++

 3. கிளை ஒன்றுதான் !
  ஆயினும் அதிலே
  உதிரப் போகும் இலைகளும்
  பச்சை நிற இலைகளும்
  கலந்தே துலங்குது !

  ஆம்
  இயற்கை
  அது நமக்கு
  போதிக்கும் உண்மை
  வாழ்வும் அது போலத்தான்

  உதிரும் இலைகள்
  சருகாக !
  மீண்டும் தன்னை
  வாழவைத்த மண்ணுக்கு
  உரமாக . . .

  மனிதனாய்ப் பிறந்தோம்
  மறைந்த பின்பு
  நாம் வாழ்ந்த மண்ணுக்கு
  பயனாய் எதை
  விட்டுச் செல்கிறோம் ?

  சிந்தையைக் கிளறிடும்
  விந்தையான பொறியைத்
  தட்டி விட்டு
  நம்மைப் பார்த்துச்
  சிரிக்கிறதோ
  அப் போதி மரம் ?

  நிலைத்திடும் என்று
  அகந்தையில் உழன்று
  நர்த்தனமாடிடும் எமக்கு
  காற்றிலசையும் இலைகள்
  கற்றுத் தருகின்ற ஞானம்
  தொட்டு நிற்கிறதோ
  முற்றுப் பெறாத காவியமாய் !

  ஆடை களைந்து
  நிர்வாணமாகப் போகும்
  ஒற்றைக் கிளை
  வரப்போகும் தன் நிலை
  எண்ணி நாணாமல்
  வருவதை ஏற்கும்
  பண்பதை மானிடர்
  எமக்குப் பறைசாற்றும்
  வாழ்க்கைப் புத்தகத்தின்
  வரலாற்று அத்தியாயமாய் . . . . .

 4. இலையாகினும் இருக்கிறது கிளை…

  கிளை முட்டி 
  சமாளித்து பயணித்த 
  லாரியில் 
  அனாதையாய் 
  ஒரு கொத்து இலைகள்…

  கவிஜி 

 5. பாரம்பரியம்

  *
  உதிர்ந்த இலைகள்
  விட்டுச்சென்ற
  கருகும் காம்புகள்
  உறவின் சாட்சிகள்

  மிஞ்சியிருப்பதில்
  பச்சையென்றும்
  வெழுப்பென்றும்
  பேதமா?

  உன்னை படைத்திட
  என்னை இழக்கிறேன்
  நீ தரும் சக்தியில்
  என்னைக் கழிக்கிறேன்
  நானாக விழுவேன்
  அதுவரை
  உன்னைத் தாங்குவேன்!
  *
  – கனவு திறவோன்

 6. சாகசம்

  பழுத்த இலை காத்திருக்கிறது
  காற்றின் சிறு வருகைக்கு
  ஒரு பறவையின் அமர்வுக்கு
  அல்லது காம்பின் தளர்வுக்கு
  தன்னை விடுவித்துக் கொள்ள.

  பென்டுலம் போல் அசைந்துகொண்டோ
  உருளையைப் போல் சுழன்றுகொண்டோ
  தரையிறங்கும் இறுதி சாகசப் பயணத்தை
  யாரேனும் பார்த்து வியக்கக்கூடுமென
  அது காத்திருக்கிறது

  தன்னிடத்தை விட்டு
  இவ்வளவு தூரம் வந்ததை
  சிலர் வியந்து பேசவும் கூடும்
  ஓர் எறும்பைச் சுமந்து
  அது இறங்கும் அதிசயத்தை
  இரு கூரிய கண்கள்
  வியந்து பாடவும் கூடும்.

  பழுத்த இலை காத்திருக்கிறது
  தன் இறுதி சாகசப் பயணத்துக்கு.

 7. நீல  வாழ்க்கைப் பாதையில்
  எழுதிய வினாக்குறி 
  பழுத்த இலை முதியோர்!
  முகவரி நரம்புகள் இழையோட
  ஒட்டியும் ஒட்டாத துளிர் இலைகள்
   துளிர்இலை மனிதர்களுக்காக
  நிகழ்வாழ்வின் மகிழ்ச்சியை
  ஈந்து வாழும் 
  வாழும் தியாக ஊற்றுகள்!
  பழுத்த இலைகள் சுயநலப் பெருங்காற்றினால்
  உதிர்வதுண்டு!
  தாமரை இலைத்தண்ணீர் பாசம் இருந்திருந்தால்
  பழுத்த இலைகள் என்றோ
  ஆரவாரமாக சலசலத்திருக்கும்!
  ஒட்டாத பாசந்தனில்
  ஒட்டிய கிளையில் பழுத்த இலைஉயிர்கள் அசைந்தாட
  சுயநலப் பந்தாட்டம் சுதந்திர உலகில்
  நடக்குதப்பா!

 8. மரத்தின் மூளை எங்கே ?

  சி. ஜெயபாரதன்

  சிரத்தில் உள்ளது 
  மனிதனுக்கு மூளை !
  மரத்துக்கு மூளை எங்கே 
  இருக்குது ?
  வேரிலா, கிளையிலா அன்றி
  விதையிலா ?
  விதை மறு பிறவி எடுத்து
  விந்தை மரமாகுது ?
  ஆயிரக் கணக்கில் பூத்துக் குலுங்கி
  புளிக்கும் காய்களாவதும், 
  இனிக்கும் கனிகளாவதும் 
  எவ்விதம் நிகழுது ?
  பளிச்சென இலைகள் துளிர்ப்பதும் 
  பசுமை ஆவதும்,
  பச்சோந்தி போல் பன்னிறம் 
  மாறுவதும் எப்படி ?  
  பழுப்பு நிறமாறி ஏன் இலைகள் 
  விழுகின்றன ?
  வேர்கள் எப்படிப் பூமி
  நீர் உறிஞ்சி
  கிளைக்கும், இலைக்கும்
  மேல் நோக்கி
  அனுப்புது ? 
  மரத்தின் பம்ப் எங்கே ?
  பம்ப்பை இயக்கும் 
  மரத்தின்
  மூளை எங்கே ? 
  இறைவனுக் குத்தான் 
  தெரியும் !

  ++++++++++++

 9. மரத்தின் படைப்பு.

  சி. ஜெயபாரதன்

  பழுப்பு நிற இலைகள்
  புயலில் 
  பறக்கும் தட்டுகள் ! 
  பகலில் ஒளிக்கதிர் திரட்டிடும்
  ரேடார்  தட்டுகள் !
  பரிதிக் கதிர்கள் பெற்று
  பச்சைப் பசேலென்று
  பசுமை ஆக்கும் 
  இலைகள் ! 
  பச்சை இலைகளைக் குளிர்ப் 
  பருவ காலம்
  பழுப்படிக்கச் செய்யும் !
  மங்கிய இலைகள் 
  தொங்கும் காட்சி ! 
  இலைகள் இல்லையேல்
  கிளைகள் இல்லை !
  மரங்கள் வளரா,
  கிளைகள் இல்லையேல் !
  இலைகள் பெரிதா ?
  இல்லை,
  கிளைகள் பெரிதா 
  தரையில்
  மரங்கள் தழைக்க ?

  ++++++++++++

 10. இலைகள்
  —————
  இலைகள் உணவு தயாரிக்கின்றன
  இலைகள் உணவாகின்றன
  இலைகள் உணவு பரிமாறுகின்றன
  இலைகள் எரிபொருளாகின்றன
  இலைகள் உரமாகின்றன
  இலைகள் நிழல் தருகின்றன
  இலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன
  இலைகள் குடையாகின்றன
  இலைகள் ஆடையாகின்றன
  இலைகள் பாடையாகின்றன
  இலைகள் வர்ணங்கள் செய்கின்றன
  இலைகள் தோரணாமாகின்றன
  இலைகள் எழுதும் மடலாகின்றன
  இலைகள் மருந்தாகின்றன
  இலைகள் படுக்கையாகின்றன
  இலைகள்  புகைக்கப்படுகின்றன
  இலைகள்  போதை தருகின்றன
  இலைகள் பூசாரிகளால் மந்திரிக்கப்படுகின்றன
  இலைகள் மந்திரிகளாக்குகின்றன
  இலைகளின் பயன்களைப் பட்டியலிட்ட கல்வி
  கடைசிவரை சொல்லவே இல்லை
  இலைகள் கனிகளை மறைப்பதையும்
  கவிதைகள் சமைப்பதையும்

 11. மனிதா உனக்கும்தான்…

  பச்சை மாறி பழுப்பாகி
       பருவம் முதிர்ந்து சருகாகி
  மிச்ச மின்றி மண்ணாதல்
       மரந்தரு கிளைக்கு மட்டுமல்ல,
  இச்சை உடலில் கொண்டவனே
       இதுவும் முதுமை வந்தழியும்,
  நிச்சயம் இதனை நினைத்திருந்தால்
       நிம்மதி வாழ்வில் நிலைத்திடுமே…!

  -செண்பக ஜெகதீசன்…

 12. கைகாட்டியாய் தடுக்கும் மரக்கிளை

  மனிதன் பிரித்த விதங்கள்தான் எத்தனை
  மனத்தால் மதமும் மதத்தால் இனமும்
  இனத்தால் மொழியும் மொழியால் நிலமுமாய்
  இவ்வுலகைப் பிரித்து துண்டாடி நின்றாய்
  தனித்தனித் தீவுகளாய் ஆகிவிட்ட மானுடமே
  தனியேவிடு நீலநிற வானத்தை என்கிறதோ
  தனித்தன்மை யோடுபல வண்ண இலைகொண்ட
  தகுதியால் கைகாட்டி ஆகநின்றே!

 13. காலத்திற்கேற்ப  இலைகள்  தன் நிறத்தை மாற்றுகிறதே 
  மனிதனின் குணமும், சமயத்திற்கேற்ப மாறுகிறதே 
  ஏனோ, பச்சோந்தி  போல்  வாழும் வாழ்க்கை,
  மனித வாழ்வின் மாற்றத்தினால் ஏற்படும் சேர்க்கை!

  பூத்த விழிகள் கதை பேச, பூங்காற்று மெல்லசைந்து,
  மரத்தின் இலையும்,கிளையும் கைகோர்த்து இன்னிசைத்து 
  காதலர்களை, கையசைத்து வாவென்று அழைக்கின்றதே  
  பசலை கொண்டதுபோல்   தன்னிறத்தை மாற்றுகிறதே !

  பசுமை இலைகளை கண்டாலே கண்ணுக்கு குளிர்ச்சி 
  பல நிற இலைகளை கண்டாலே மனதிற்கு மகிழ்ச்சி 
  அயல் நாட்டில் இலைகளே அழகிய பூக்களாய் மிளிரும் 
  வசந்தத்தின் சிறப்பினை இலைகளே நினைவூட்டும் !

  வசந்தத்தில் இலைகளே மலர்களாய் மலர்ந்து காட்சி தரும் 
  இதுவே காண்போர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி  தரும்,
  வான்னின்றும், சிகரத்தின் மேல் நின்று  கீழ் நோக்கின் 
  மலர்ச்செண்டுகள், நட்டதுபோல்  காட்சி  தரும்.

  ரா.பார்த்தசாரதி          

 14. மழை சுமந்து திரிந்த மேகங்கள்
  மண்ணின் மடிதனில் மழைதனை
  இறக்கி வைத்திட்டு – ஆகாய வீதியில்
  காற்றுடன் தவழ்ந்தாட
  எழில் நீலம் சூடிய ஆகாயம்
  மெல்ல மேகத் திரை விலக்கி
  பூமிக்கு முகம் காட்டி
  புன்னகை வீசி வகீகரிக்கிறது !

  வானின்று மண் நோக்கி
  வருகின்ற மழை துளியை
  தன் கிளைதனில் ஏந்தி
  வைரம் சூடிய பெருமிதத்தோடு
  ஆதவன் சற்றே முகம் காட்டினால்
  தக தகவென ஜொலித்து – காணும்
  மனங்களை சொக்க  வைத்திட
  ஆவல் மேலோங்க அசைந்தாடும் மரம் !

  இலையதுவே மரத்திற்கு
  ஆடையாகிப் போக
  பச்சை நிற ஆடையே உடுத்தி
  சலித்துப் போனதோ
  இந்த மரப் பெண்ணிற்கு ?
  மஞ்சளும் அடர்சிவப்புமாய் – இளம்
  தளிரையும் பழுத்த இலையையும்
  உடுத்தி தன் அழகினை இரசிக்கிறாளோ ?

  இயற்கையில் ஆயிரமாயிரம்
  வண்ணங்கள் – வண்ணங்களின் எழிலில்
  மனதில் தோன்றும் பலவகை
  எண்ணங்கள் – எண்ணங்கள் எழுத்தானால்
  பிறக்கும் மகிழ்வுடன் புதுப் புது
  கற்பனைகள் – கற்பனைகள் வடிவு பெறின்
  உரு பெறும் புதுக் கவிதைகள்
  கவிதைகள் – மனங்களின் பிம்பங்கள் !

 15. 18  பட வரிகள்
  சாவோலை உறுதி….

  காவோலை விழ குருத்தோலை துளிர்த்தலாய்
  சாவோலை உறுதி பிறப்போலை வந்தால்
  தீர்வோலை இதுவெனத் தீட்டிய விதியைப்
  பாரேன் படமெனக் காட்டுதிங்கு.

  எம் கண் பறிக்கும் நீலமேகம்
  தன் வண்ணப் பின்ணனி மயக்க
  தலை நீட்டும் இலைக் கொத்து
  நிலையற்றது வாழ்வு என்கிறது.

  விலையற்ற பெரும் தத்துவ உண்மை
  தலைக்கு எடுப்பார் எவர்! அழியும்
  கலையே வாழ்வெனும் அரிய ஞானம்
  நிலைநிறுத்தினால் வாழ்வு சுலபம்!

  வரியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.
  27-6-2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.