ஒரு கவிதையின் பிரசவம்!

0

-இரா.சந்தோஷ் குமார்

இது சுயப் பிரசவம்
வினோதப் பிரசவம் 

காலில் சலங்கை கட்டிக்கொண்டே
சத்தமில்லாமல் சில
களவாடும் நிகழ்வும்
அவ்வப்போது நிகழும்!

கற்பனைக் கன்னியைக்
கட்டியணைத்துக்
கலவியில் ஈடுபடும்
ஒற்றை ஜீவன்
கருத்தரிப்பின் போது
உலக உருண்டையினைக்
கர்ப்பப்பையாக
ரகசிய உடன்பாட்டில்
கைகுலுக்கிக்கொள்ளும்!

பத்தாவது மாதத்தில்
அல்லது
பத்தாவது நிமிடங்களில்
அல்லது
பத்தாவது நாளில்
சில சமயம்
பத்தாவது நாழிகையில்
அரிதாகப்
பத்தாவது திங்களிலும்
பிரசவக் குத்தின்
தீவிரத்தினால்
பிரசவ சிகிச்சை
மூளை அறையில்
நடந்தேறும்! 

உருவாகிய சிசுவின்
அவசர உதையில் எழும்பும்
சிந்தனைத்தாய் கதறலொலி
மெளனக் காதுகளில்
கேட்டுக்கொண்டிருக்கும்!

ஒரு குடுவை
அமிலத் திரவத்தினுள்
சிக்கித்தவிக்கும்
பூச்சியினைப்போல
நாடி நரம்புகள்
துடிதுடிக்கும்!

துடித்திட்ட நரம்புகளினூடே
உலக உருண்டையிலுள்ள சிசு
மூவிரலுக்கு வந்துவிழும்
அந்த நொடியில்… 

பேனா மருத்துவச்சியால்
எழுத்து உடலோடு
மொழி உயிரோடு
ஒரு கவிப்பிள்ளை
காகிதத் தொட்டிலில்
பிரசவம் செய்திருக்கும்! 

உண்மையில்
கவிதை மழலையுடன்
விமர்சனங்களில்
மரணித்த
ஒரு கவிஞனும்
பிரசவமாகியிருப்பானாம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *