இலக்கியம்கவிதைகள்பொது

ஓய்வூதியம்

– எஸ்ஸெம்  நிலாம், இலங்கை

ஒப்பந்தத்தில்
ஒப்பமிடும்போதே
இளமை முழுவதையும்
குத்தகைக்கு
எடுத்து விடுகிறார்கள்!

உடம்பின்
வலுவத்தனையையும்
பூரணமாய்ச்
சுரண்டி விட்டு
முடிவில்…
விட்டெறியும்
பிச்சைக் காசு!

சுதந்திர வாழ்க்கையைச்
சுத்தமாய்ச்
சிறையெடுத்து விட்டு
“இப்படித்தான்”
வாழுவென
ஆணை வேறு!

இருக்கும்போதே
எதையுமே செய்ய
இயலுவதில்லை
ஈற்றில் இதைப்
பெற்று எதைக்
கிழிப்பது?

ஒன்றுமில்லாததற்குத்தானே
உள்ளமும்
நாயாய் பேயாய்
அலைகிறது

அடுத்த நொடியே
நமக்கில்லையெனும்போது
அதற்குள்
நாளையை
நம்புகிறோம்!

மழையாய் வெயிலாய்
காற்றாய் தீயாய்
காலமாய் நிரந்தரமற்றது
யாக்கையும் வாழ்க்கையும்!

வேலையிலுள்ளபோதே
அடிபணிந்து அவமானப்பட்டு
கேவலப்பட்டே பெறுகிறோம்
எச்சில் காசை!

ஓய்வைப் பெறுகையில்
நிறைய நோய்களையும்
சேர்த்தே பெறுகிறோம்!

மருந்துக்கே போதாது
இந்தப் பாதிப் பணம்?
பிறகெப்படி
வாழ்க்கை வண்டி
சீராய் ஓடும்?

“ஓய்வூதியமென்ற”
ஒற்றை மந்திரத்திற்காய்
ஆயுளின் பாதியைத்
தாரை வார்க்கிறோம்;
வாழ்வின் தருணங்களைத்
தரைமட்டமாக்குகிறோம்!

இருந்தும் இந்தக்
குரங்கு மனசும்
அதைத்தானே நாடுகிறது,
அரசு வேலையைத்தானே
தேடுகிறது!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க