படக்கவிதைப் போட்டி 17-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் போட்டிக்கான புகைப்படத்தின் சொந்தக்காரர் திரு. ஆதித்யா நாகராஜுக்கும், இப்படத்தைப் போட்டிக்கு ஏற்றது எனத் தேர்ந்தெடுத்துத் தந்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை இதழின் நன்றி.

sun

உயர்ந்தோரெல்லாம் போற்றும் வகையில் ஞாலத்தின் இருளகற்றி ஒளிகூட்டும் ஞாயிற்றைக் காணும்போதெல்லாம் நம் உள்ளத்தில் எல்லையிலாப் பரவசம் ஏற்படுகின்றது இல்லையா? ஞாயிற்றைப் போன்றே இருளகற்றும் அருட்பணியை வேறொன்றும் செய்கின்றது. அஃது எது தெரியுமா? ’நம் அகஇருளை நீக்கி அறிவொளி கூட்டும் தன்னேரிலாத் தமிழ்தான் அது!’ என்கிறது தண்டியலங்கார மேற்கோள் செய்யுளொன்று. ஞாயிற்றை நிகர்த்த நம் தமிழைத் தாய்மொழியாய்ப் பெற்ற நாம் பேறுபெற்றோரே அல்லவா!

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னே ரிலாத தமிழ். (தண்டியலங்கார மேற்கோள் செய்யுள்)

இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைச் சுவைத்துவிடலாம் இனி!

***

அலைமகளின் அழகைத் தன் கவிதையில் சொல்லோவியமாக்கியிருக்கிறார் திருமிகு. ரேவதிஸ்ரேயா.

அலை மகளின் அழகு !
இனிய இந்த பொன் மாலை பொழுதிலே
அலை மகள் அசைந்து இசைந்து இன்னிசை கவி பாடி
அலை மோதி ,விளையாடி
தன்னை தேடி ரசிக்கவரும் ரசிகர்களை
தனது அழகினால் மயக்கி தன்வசப்படுத்தி
கவலைகளை நீக்கி முகத்தில் புன்னகைப்பொலிவூட்டும்
எங்கள் கடல் அன்னையே நீ என்றும் இம் மண்ணில் வாழ்க வாழ்க !

***

பிறவிப் பெருங்கடலில் பிறப்பும் இறப்பும் எவ்வாறு மாறிமாறி வருகின்றாதோ அதுபோன்றதுதான் சூரிய உதயமும் அத்தமனமும் எனும் வாழ்க்கை நியதியை நமக்கு நினைவூட்டுகின்றார் திரு. ஜெயபாரதன். 

செந்நிறச் சினமோடு 
கீழ்வானில்
பொன்னிற விளக்கு எழுந்தது !
காலையில் போட்ட விளக்கு
அந்தி மாலையில்
வேர்த்து
ஓய்வு பெறும் பரிதி
செந்நிறச் சினமோடு தான்
அத்தமிக்கும் !
பிறவிப் பெருங்கடலில்
பிறப்பும் இறப்பும்
சுழற்சி நிகழ்ச்சியே ! 
பிரபஞ்ச நிகழ்ச்சி அனைத்தும்
பம்பரச் சுழற்சி தான் !
[…]

நீர்க்கோள மான நமது
நில மடந்தைக்கு
ஒப்பான பூமி
வேறெங்கும் உள்ளதா வெனக்
கூற முடியுமா ?
[…]
கடல்நீர் வற்றாது !
கதிர்ப் பரிதி அணையாது !
மானிடம் தழைக்க 
சூரிய உதயம் தவறாது !
மரணம் மரிக்காது !
அத்தமனம் உண்டு 
அத்தனைப் பிறவிக்கும் !

***

பெருநீராய் விரிந்திருக்கும் தன் உள்ளத்தின் விரிவை நமக்குத் திறந்துகாட்டுகிறார் திருமிகு. மணிமேகலை தன் கவிதையில்.

விரிந்த மணல் பரப்பில்
அலை படர்ந்த கடற்கரையில்
தொலைதூர கதிர் ஒளியில்
எங்கும் பரவிக் கிடக்கின்ற
உனதன்பை வியந்து
பெரு நீராய் விரிந்து
கிடக்கிறது எனதுள்ளம் ..
வா வந்து கொஞ்சம்
அணை இட்டு தேக்கிப்போ …

***

காதலனாம் ஆதவன் தந்த நீலப்புடவை அணிந்த கடற்கன்னியின் காதலைப் பேசுகிறார் திருமிகு. கிர்த்திகா.

நீல பார்டரில்
தங்க உடலில்
புடவைப் பரிசு
ஆர்ப்பரிக்கும்
கடற்கன்னிக்கு
ஆதிச் சூரியன்.

புடவைக்கு
அடங்கிடுவாளா
மோதிப் பார்க்கிறாள்
கரையில்..விடாமல்
ஆதவனை அடைய..

மோதிய வலியில்
இரவில் அடங்கி
பகலில் எட்டிப்
பழுத்து கொதிப்பவனை
நீல புடவையில்
முடிந்து சூடாக இவள்
குளிர்ந்தே இவளுள்
அவன்.

***

’ஆதவனின் உறக்கத்திற்காய்க் காத்திருக்கும் நீலப்போர்வையே கடல்’ என்று கவிநயத்தோடு குறும்பா படைத்திருக்கிறார் திருமிகு. சிவகாமி.

 நீ உறங்குவதற்காகவே காத்திருக்கிறது 
அலையெனும் நீலப் போர்வை 

***

வெள்ளி நீரைத் தங்கமாக்க நினைக்கும் ஆதவனின் செப்படி வித்தையை நம்மிடம் செப்புகிறார் திரு. ஆதி வெங்கட்.

வெள்ளியெனத் தோன்றும்
கடல் நீரை
தங்கமாக்க முயற்சிக்கிறதோ
இந்தச் சூரியன்!

***

இயற்கையன்னை தந்ததெல்லாம் எல்லார்க்கும் சொந்தமெனும் பொதுவுடைத் தத்துவத்தைப் பதமாய் உரைக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

கீழ்வானில் எழுந்து  குமரியிலே  மறைந்து
பொன்மாலை பொழுதிற்  அலைகள்  அசைந்து
நின்னை  காணுங்கால்  ஓர்  இயற்கை  அழகு 

இயற்கை அன்னை தந்தெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா ,
எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா !

 ***

பொற்கதிரோன் அழகில் சொக்கி கவிபுனையாக் கவிஞரும் உளரோ? என்று கேட்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், விடியாத இருளும் விலகாத துயரும் உலகிலில்லை எனும் நன்மொழிகளோடு கவிதையை நிறைவுசெய்துள்ளார்.

பொற்கதிர்       பரப்பி          வையம்
பூரிக்கபகல்      தந்த         கதிரோன்
அற்புதமாய்     வேலை     முடித்து
அழகாய்         மறைய       துவங்குகிறான்
[…]

தினம் உன்   வருகை      மறைவு அழகை
இனிதாய்     காண்கிலேன்   எனில்
இம்மண்ணில்  கவிஞர்    கள்யாரோ?
சூரியன்        நிலவாய்     ஆகும் அங்கே
சுடர்பரப்பி    நிலவு      காலை சூரியனாகுமோ?
விடியாத     இருளும்   இல்லை 
விலகாத     துயரமும்   இல்லை இது
இறைவன்  செய்யும்     லீலை 

***

’இயற்கைக் கவிஞனொருவன் ’பார்’ திகைக்கப் பிரசுரித்திருக்கும் வானத் தீயைப் பார்!’ என்று நயமாய்க் கவி வார்த்திருக்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

எரிதணல் கக்கி  இடர்வழங்கும் சேவை
புரிந்து இளைப்பாறும் போதுபரிதி
விரிவானில் நின்று விழுந்த ஒளியால்
தெரிவிக்கும் வண்ணம்  உழைப்பு!

பொங்கும் கடல்மேல் புதுக்கவிதை யாத்து
எங்கும் படர்த்தி மனதுக்குள்தங்கும்
வகைசெய் இயற்கைக் கவிஞன் புவனம்
திகைக்க பிரசுரித்தத் தீ!

உழைத்துக் உருகும் உழைப்பாளி வாழ்வில்
பிழைத்தோங்க சிந்தும் உதிரம்   – மழையாய்
பொழிந்து கடல்கலக்கத் தோன்றச் சிவந்த
விழியாமோ மாலை விசும்பு?

***

’ஆதவனின் இதயம் தொட்ட கடலன்னைக்கு நீலப்பட்டாடை கட்டியது யார்?’ என நமைப்பார்த்து வினவுகின்றார் திருமிகு. லட்சுமி.

அலைகடல் ஓசையிலே
ஆதவனின் செம்பஞ்சுத் தங்க நீரோடையிலே
இதயம் தொட்ட
ஈன்றவளுக்கு நீலப்பட்டாடை
உடை உடுத்தியது யார்?
ஊசிக் கதிரொளியினிலே 
எட்டுதிக்கும் தமிழ்த் தாயன்பை
ஏந்திழையாள் வடிக்கின்றாள்!
ஐந்திறம் நிறைந்த
ஒல்காப் புகழ் தமிழ்மண் தேடி
ஓவியக் கடலாய் 
ஔடதமாய் மன்பதைக்கு
அஃதென உரைப்பவர் எங்கே?

***

’அழகின் சிரிப்பு’க்குப் பின்னே ஆபத்து ஏதும் மறைந்திருக்குமோ? என்று நம்மை எச்சரிக்கின்றார் திரு. எஸ். பழனிச்சாமி.

தங்க நிறத்தில் வானம்
தகதகக்கும் இளஞ் சூரியன்
துள்ளி வரும் வெள்ளலைகள்
கொள்ளை கொள்ளும் மணல்வெளி
[…]
இயற்கையின் சிரிப்பை ரசிப்போம்
இன்பமான வாழ்வில் மகிழ்வோம்
எல்லாம் சரிதான் – ஆனால்…
எச்சரிக்கை செய்கிறது மனது 
அழகின் பின்னே மறைவாய்
ஆபத்தும் இருக்கலாம்  ஜாக்கிரதை!
இன்று போல்தான் உலகம்
அன்றும் விடிந்தது நமக்கு
அமைதியாய் தோன்றும் கடலும்
ஆக்ரோஷமாய் சீறிப் பாய்ந்தது
சுனாமி பேரலையாய் புகுந்து 
சுருட்டிக் கொண்டு போனது
மனித உயிர்கள் எல்லாம்
[…]
ஒரே நாளில் வாழ்வு
உருக்குலைந்து போனது 
அழகான உதயம் அன்று
அஸ்தமனமாய் ஆனது 

***

இன்ப இம்சை அழகியான தன் சூரியக் காதலியைச் சிலிர்ப்போடு வர்ணித்திருக்கிறார் திரு. சந்தோஷ் குமார்.

விடியல்
ஒளி விரல்களால்
காலை மணி ஆறில்
எனை எழுப்பத் தூண்டியவள்..

மதியம் பண்ணிரெண்டில்
தன் அக்னி இதழ்கீற்றிகளினால்
என் மேனியை
முத்து வியர்வையில்
குளிப்பாட்டினாள்.

இப்படியான இன்ப இம்சை
அழகியை காதல் கொஞ்ச
கவிதைத் தூரிகையால்
சீண்டலோவியமிட
கடற்கரைக்கு விரைந்தேன்
மாலைவேளையான
மணி ஆறில்..!

பாருங்களேன்…!
இவளுக்கு என்ன திமிரு…!

என் மன்மத சொல்வித்தைக்கு
கிறங்கிவிடக்கூடாது என்பதற்காகவே
ஆழி மெத்தையில்
வெள்ளச்  சரிகையுள்ள
மஞ்சள்பட்டுப் போர்வைக்குள்
வெட்கச்சிவப்போடு
ஒடி ஒளிந்துக்கொள்ள
விரைகிறாள்
இந்த கள்ளி
என் சூரியத்தேவதை…! 

***

’கதிர் காட்டும் வழி நடந்தால் வாழ்வில் ஒளி பிறக்கும்’ என்று நம்பிக்கை விதைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

கடலும் வானும் நிறம்மாறின
காணும் இடமெலாம் அழகாகின,
உடலில் அழகுடன் எழுகதிரே
உனக்குச் சொல்லிடும் பலகதையே, 
கடமை இருக்குது உழைத்திடவே
காட்டிடு ஒளியை உலகினுக்கே,
அடைதல் இயற்கை அதன்முன்னே
ஆற்றிடு நற்பணி உலகினிலே…!  

***

கவின் நிலவைத் தேடும் கடற்பாவையை எழிலோவியமாய் நம்மெதிரில் நிறுத்துகின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

நீலநிறப் பட்டாடை நெடுமணல் மேல் உலர்த்தி
மஞ்சள் ஆடையுடுத்தி காதலனாம் மதியைத் தேடி
நெஞ்சத்துக் காதல் அலையலையாய்ப் பொங்கி வர
கொஞ்சி குதித்தோடி குரலெழுப்பி கூவும் கடற்பாவை

தன்னழுகு காதலனாம் கவின் நிலவைக் காணாது
என்ன நேர்ந்தது என வானோக்கி வருந்தி வியப்புற்று
இன்னமும் இருக்கின்றாயா நீ மறைவதெப்போது என
அன்ணணாம் கதிரவனை கேட்கின்ற அழகுதான் என்ன?

***

நீலத்தரங்கத்தின் மேலுள்ள வான அரங்கில் கதிர்விரிக்கும் கதிரோனைப் பரவுகின்றார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

நீலத் தரங்கத்தில் நீராடி மெல்லெழுந்து
கோலக் கதிர்விரித்தான் கோகபந்து ! –ஓலமிட்டுத் 
துள்ளும் அலைகளும் தூக்கக் கலக்கத்தில் 
மெள்ளத் தவழும் விழித்து !

***

’வெண் சீருடை கழுவ, மாயக்கண்ணனின் நீலநிற வண்ணத்தை இங்கே (கடலில்) கலக்கியது யார்?’ என்று கேள்விக்கணை தொடுக்கிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

வெண் சீருடை கழுவ
கண்ணன் மாயனின் வண்ணமாம்
கண் பறிக்கும் நீலப்பொடியை
எண்ணிக் கலக்கியது யாராகும்!
அன்றி –
விண்முகில் இங்கு சடுதியாய்
மண்ணில் தெரியும் மாயை!
திண்ணமோ இது நானறியேன்! 
கண்ணின் எண்ண மயக்கமோ!…

***

நல்ல சிந்தனைகளை அள்ளித் தெளித்திருக்கின்றீர்கள் கவிஞர்களே! உளப்பூர்வமான பாராட்டுக்கள்!

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துவருவோம்!

செந்நிறப் புரவியில் கம்பீரமாய்ப் பவனிவரும் பகலவனை அலைகள் ஆர்ப்பரித்து வரவேற்கும் அற்புதக்காட்சியை மிகைப்படுத்தலின்றி மிக இயல்பாய், எளிய சொற்களால் வனப்போடு தீட்டியிருக்கின்றார் திருமிகு. தமிழ்முகில். அவரே இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பைப் பெறுகின்றார்.

அவருடைய கவிதை…

செந்நிறப் புரவியது
சிறகு
விரித்து
பறந்து
வர
நடு
நாயகமாய்
கதிரோனும்
அதிலேறி
பவனி
வர
சமுத்திரம்
தன்
அலை
கரம் அசைத்து
நடனமாடி
வரவேற்க
வானும்
தன் பங்கிற்கு
அழகினை
வாரி இறைக்க
நீலம்
சுமந்த கடலும்
மணல்
கொண்ட கரையும்
கைகோர்த்து
மகிழ்ந்தாட
கலைக்
கண்களுக்கு
இவையனைத்தும்
விருந்தாக
இயற்கையின்
எழிலான
அரங்கேற்றம்
!

***

காதலியின் மடிசாய்ந்துகிடந்த அந்த மாலை நேரத்து மயக்கத்தை மனம்வருடும் கவிதையாக்கியிருக்கிறார் திரு. கவிஜி. அவரின் கவிதையைப் பாராட்டுக்குரியது எனத் தேர்வு செய்கிறேன்.

கடக்க கடக்க
அங்கேயே நிற்கிறது
இந்தக் காதல்
[…]
அத்து
மீறியும்
தொடமுடியாத பக்கத்தில்
அச்சடித்த கண்களுடன்
சிரிக்கிறது மஞ்சள் வெயில்
[…]
கறிவேப்பிலை
பழங்கள்
போல
கருஞ்சிவப்பு கூட்டுக்குள்
மருதாணி முரண்பாட்டை
கொத்தாய் பிடுங்குகிறது
மணல் வெளி…….

யாரோ நடந்த
ஒற்றையடியில் அழிக்க
முடியாத பாதங்களாய்
கற்பனை விரிக்கிறது….

சொல்லிவிட முடியாத
தருணத்துக்குள் சொல்லிக்
கொண்டே பேதலித்துக்
கிடக்கிறது
கடக்கவே முடியாத
உன் மடி சாய்ந்து  கிடந்த
இந்த மாலை
நேரத்து மயக்கம்

***

கவிஞர்காள்!  சிந்தனைக்கு ஓய்வு தராமல், ஒவ்வொரு கவிதைப் போட்டியிலும் உங்கள் ஆர்வத்தையே நெய்யாக வார்த்துக் கவிதைப் பந்தம் கொளுத்தி அறிவு வெளிச்சம் கூட்ட வாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்!

 

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 17-இன் முடிவுகள்

  1. வெற்றி பெற்ற தமிழ்முகில், கவிஜி இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !

  2. சகோதரி தமிழ்முகில் கவிஜிக்கு  இனிய வாழ்த்தகள்.
     பங்கு பற்றிய அனைவருக்கும் 
    வல்லமை பணியாளர்களிற்கும் இனிய வாழ்த்துகள்

  3. தேர்வாகிய கவிஞர்களுக்கு  வாழ்த்துக்கள் 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க