எஸ் வி வேணுகோபாலன்

நண்பர் ஒருவர் மரணச் செய்தி ஒன்றைச் சொல்வதற்காக தொலைபேசியில் அழைத்தார். ‘இன்னார் போய்விட்டார்’ என்றார். தொடர்ந்து, “நீங்கள் எப்போது போவீர்கள்” என்று அவர் கேட்கவும், “தெரியலியே, வேளை வந்தால் போகவேண்டியதுதான்!” என்றேன். “அய்யய்யோ, என்ன தோழர், என்னென்னவோ பேசுகிறீர்கள். இறந்தவரின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த எப்போது போவீர்கள் என்றுதானே கேட்டேன்” என்றார். நான் சிரித்துக் கொண்டேன்.

மரணம் என்றாலே அலற வேண்டியதில்லை. அது யாரது இசைவையும், தயார் நிலையையும், முன்மொழிதல் -வழிமொழிதல்களையும், ஏற்புரையையும் கோருவதில்லை. அது நிகழ்கிறது. மரணத்தின் சுவாரசிய ரகசியம், மீதம் இருப்போரை வாழுங்கள் என்று அது கேட்டுக் கொள்வது. அந்தக் குரல்தான் நமக்குச் சரிவர கேட்பதில்லை. ஒவ்வொரு மரணத்திலும் அது மறு ஒலிபரப்பு செய்யப்படுவதை கவனித்தால் மரணம் அல்ல, வாழ்க்கையும் கசந்துபோகாத சூட்சுமம் பிடிபட்டுவிடும் வரம் காத்திருக்கிறது.

விழுப்புரம் புத்தகக் கண்காட்சி விழா ஒன்றில் பங்கேற்க சில ஆண்டுகளுக்கு முன்பு சென்று வந்த அனுபவம் மறக்க முடியாதது. டி வி எஸ் 50 வாகனத்தில் எளிமையாக வந்து இறங்கினார் நகராட்சி தலைவர் திரு ஜனகராஜ். என்னை இன்னார் என்று அறிமுகப் படுத்திக் கொள்ளுமுன்பாகவே, “சார் கொஞ்சம் என் கூட வாங்க, உங்களுக்கு ஒண்ணு காட்டணும்” என்று அழைத்துப் போனார்.

டிசம்பர் மாதத்தின் எதிர்பாராத மழை, வீதிகளின் சேற்றைக் குழைத்து வைத்திருந்தது. உடைத்துக் கொண்டிருந்த சாலையில் ஆட்கள் பணியில் இருந்தனர். அவர்களை விரைந்து நிவாரணப் பணிகளை முடிக்குமாறு கண்டிப்பான குரல் கொடுத்துக் கொண்டே என்னை ஒரு புதிய கட்டிடத்தின் முன் கொண்டு நிறுத்தினார். பெரிய காம்பவுண்ட் சுவர். உள்ளே மரங்கள். செடி கொடிகள். மனத்தைக் கவரும் சூழல் அது. மூடி இருந்த கதவுகளின் அருகே பெரிய பலகையில், நவீன தகன மேடை என்று எழுதி இருந்தது. வேறொன்றுமில்லை, சுடுகாட்டிற்கு அழைத்து வந்திருந்தார் நகரத் தந்தை.

“இடம் அருமையாக இருக்கிறதே, இதில் எரியக் கொடுத்து வைத்த முதல் பாக்கியசாலி யாரோ?” என்று அவரைக் கேட்டேன்.

“இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை சார்” என்ற அவரிடம், “நான் வெளியூர்க்காரன், எனக்கு வாய்ப்பு இருக்காது” என்றேன்.

“என்ன சார், இப்படி சொல்றீங்க!” என்றவரிடம், “ஆமாம், நீங்கள் மட்டும் முன்ன பின்ன தெரியாத ஆளை சுடுகாட்டுக்குக் கூட்டி வந்து காண்பிக்கலாம், நான் சொல்லக் கூடாதா?” என்றேன். வஞ்சனையில்லாமல் சிரித்தார்.

மரணம் ஒரு சுவாரசியமான பேசுபொருளாக இருக்கிறது. மரணத்தைப் பார்ப்பது வேறு. சிந்திப்பது முற்றிலும் வேறு.

மரணத்தை முன்வைத்து எழுதப்படும் கவிதைகள், கதைகள் தத்துவ தரிசனமாக நகர்கின்றன. ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ என்று தொடங்கும் திருக்குறளை விடவா?

மரண இல்லத்தில் நிலவும் பேரமைதி, வெளியே பேசப்படும் செய்திகள், சமாதான மொழி, அடுத்தடுத்து நகரும் காரியங்கள் எல்லாம் வாழ்க்கையின் இயல்பை நோக்கி விரைகின்றன. ஒரு மரண வேளையில் எத்தனையோ முந்தைய மரணங்கள் நினைவுக்கு வருகின்றன – ஒரு விபத்தின்போது பேசப்படும் வேறு விபத்துக்களைப் போல.

ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு விதத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது. சில நிலைகுலைய வைக்கின்றன. சில குற்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றன. சில விடுதலையடைந்த உயிரின் அவஸ்தையை வழியனுப்ப வைக்கின்றன. சில மௌனத்தில் ஆழ்த்திவிடுகின்றன. மரணம் நிகழ்ந்த வீட்டுக்குச் செல்வது சிலருக்கு இயல்பாகவும், சிலருக்கு நிர்ப்பந்தமாகவும், சிலருக்கு தேடலாகவும் அமைகிறது.

மரணத்தின்முன் மௌனமாக நிற்கும்போது மனிதர்கள் கொஞ்சம் சுயமிழக்க இயற்கை வாய்ப்பு நல்குகிறது. சொந்த கிரீடங்களின் பளுவிலிருந்து விடுவிக்க முயல்கிறது. ஏற்கெனவே இறந்த மனிதர்களிடமும், இப்போது நேர்ந்திருக்கும் புதிய மரணத்திடமும் சொல்ல விடுபட்டவற்றை, கேட்கத் தவறியவற்றை, பேசாது தவிர்த்தவற்றை, வழங்க மறுத்த கருணையை, பெற இயலாதுபோன மன்னிப்பை, பகிர வெறுத்த புன்னகையை, இன்ன பிறவற்றை அந்த நொடியில் சரி செய்துகொள்ளப் பார்க்கும் மனங்கள் அப்போதாவது இலேசாகும் தருணத்தை வரமாக்கிக் கொள்கின்றன. அப்போதும் தங்களது மேலாதிக்க மனநிலையில் மிதப்பவர்களை மரணங்கள் பெருந்தன்மையுடன் மன்னிக்கவே செய்கின்றன. இறந்த மனிதரின் வங்கிக் கணக்குகளை முடித்துக் கொடுக்கும் சமூகம், அவரோடு இருந்த வம்பு வழக்குகளை முடித்துக் கொள்ள இசைவதில்லை என்பது மரணத்தைக் கடந்தும் தொடரும் துயரம்.

ஒரு நகைச்சுவை துணுக்கு மின்னஞ்சலில் வந்திருந்தது. வெளியூர்ப் பயணம் செல்லும் கணவன், இப்படி ஒரு மின்னஞ்சலை மனைவிக்கு அனுப்பி வைக்கிறான்: “கண்ணே, நான் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டேன். நீ நம்பமாட்டாய். எதிர்பாராத வசதிகள் எல்லாம் இங்கே இருக்கின்றன. அருமையான தங்குமிடம். இணையதள இணைப்பு. குளிர்பதன அறை. அருமையான வேலையாட்கள். உனக்கும்கூட இங்கே ஏற்பாடு செய்துவிட்டேன். நீ ஏன் உடனே புறப்பட்டு என்னிடம் வந்து சேரக் கூடாது?”

அவருடைய அவசர தட்டலில், இந்த மெயில் வேறொரு பெண்மணிக்குச் சென்றுவிடுகிறது. அவரோ அதைத் திறந்து படித்து அதிர்ந்துபோய், மகனே இங்கே வாயேன், அய்யோ என்ன இது…என்று அலறுகிறார். மகனும் அதைப் படித்ததும் அதிர்ச்சி அடைகிறார். அப்புறம் தெளிகிறார்.

அந்தப் பெண்மணியின் கணவர் அன்று காலைதான் இறந்துவிட்டிருந்தார். அவரைப் புதைத்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கும் நிலையில் மேற்படி மின்னஞ்சல் அவரிடமிருந்துதான் வந்திருக்கிறது என்று நினைத்துவிட்டார். இப்போது அந்த மெயிலை நீங்களே இன்னொருமுறை படித்துப் பாருங்கள், அதிர்ச்சிக்கான காரணம் தெரியும்.

ஆனந்த் (பிரபல மலையாள எழுத்தாளர் சச்சிதானந்தன்) அவர்களது ‘மரண சர்டிபிகேட்’ (கேரளா சாகித்ய அகாதமி விருது பெற்றது) தனது இல்லத்தில் நேரும் மரணத்தைத் துயரத்தோடு அணுகும் பதட்டம் நிறைந்த மனிதர் ஒருவரைப் பேசுகிறது. அருமையான தமிழ் மொழிபெயர்ப்பில் பல ஆண்டுகளுக்குமுன் வாசித்த அந்தக் கதையில் ஒரே ஒரு மனிதரே அதிகம் இடம் பெறுகிறார். அவரது மொழியிலேயே கதை நகர்கிறது. அவரது வீட்டில் தற்செயலாக வந்து தங்கும் ஒருவர் மரித்துப் போய்விடுகிறார். அவரைக் குறித்த மேலதிக விவரங்கள் ஏதும் இவரிடம் கிடையாது என்று கொஞ்சம் வித்தியாசமாகத் தொடங்கும் கதை.

உடல் நலம் குன்றியிருக்கும்போது பயன்படுத்திய ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் உபகரணங்களை திருப்பிக் கொடுக்க சம்பந்தப்பட்ட கடைக்குச் செல்கிறார் இவர். “வருந்துகிறேன் சார்..அந்த மரணம் எப்போது நேர்ந்தது?” என்று கேட்கும் கடைக்காரன் இவரை வியப்பில் ஆழ்த்துகிறான். “உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்கிறார். “இந்த சாதனங்கள் ஒருமுறை கடைக்கு வெளியே சென்றால், நோயாளி மரிக்காமல் ஒருபோதும் திரும்புவதில்லை” என்கிறான் அவன்.

தகனம் செய்யுமிடத்தில் விறகு வாங்கும்போது ரசீது தருபவன், இது மிகவும் முக்கியம். பத்திரமாக இருக்கட்டும். இல்லையெனில் மரண சான்றிதழ் கிடைக்காது என்கிறான். ஆனால் அதை கிரிமடோரியம் கிளார்க் பின்னர் பெற்றுக் கொண்டுவிடுகிறான், சான்றிதழ் ஏற்பாடு செய்ய.

முதல்முறை பிரேதத்துடன் அச்சத்தோடு செல்லும் சுடுகாட்டுக்கு, பின்னர் சான்றிதழ் பெற திரும்பத் திரும்பச் செல்ல நேர்கிறது அவருக்கு. அச்சம் மெல்ல மெல்ல அகன்றாலும், மரணத்தின் நிழல் அவரை எதிர்ப்படும் எல்லா மனிதர்களையும் சூழ்ந்திருப்பதாகவே உணர்கிறார். சுடுகாட்டில் வேலையாளின் குடும்பம் வசிப்பதும், குழந்தைகள் அநாயசாமாக அங்கே ஓடியாடி விளையாடுவதும் அவருக்கு விசித்திரமாகப் படுகிறது. நிறைய கற்றுக் கொடுக்கிறது அந்த ஒரே ஒரு மரணம்.

சுடுகாட்டு எழுத்தர் மாற்றலில் சென்றுவிடுகிறார். புதிய ஆள், விறகுக் கடை ரசீது எங்கே என்று இவரிடமே கேட்கிறார். சுமார் 190 பக்கங்கள் கொண்ட நாவலில் கடைசி கடைசியாக மாநகராட்சி அலுவலகத்தின் முக்கிய பொறுப்பு அதிகாரியிடம் சான்றிதழ் கையொப்பம் ஆகும் நேரத்தில் அவரெதிரே நிற்கிறார்.

அந்த உயர் அதிகாரியோ எல்லாத் தாள்களையும் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்துவிட்டு, மன்னிக்கணும், மறைந்த அந்த மனிதரின் பிறப்புச் சான்றிதழ் நகலை நீங்கள் இணைக்கவே இல்லையே என்கிறார். இவருக்கு எரிச்சல் எடுக்கிறது.

அந்த உயரதிகாரி சொல்கிறார்: “உங்கள் கோபம் நியாயமானது…இறந்த மனிதனுக்கு எதற்கு பிறப்பு சான்றிதழ் என்று நீங்கள் நினைப்பீர்கள்! ஓர் அடிப்படை சிக்கலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பூவுலகில் பிறக்காத ஒரு மனிதன் இங்கே மரித்தான் என்று எப்படி நான் சான்றிதழ் தர முடியும்?”

கதை இப்படி முடிகிறது: பிறப்பின் சாட்சி வாழ்க்கை. வாழ்க்கையின் சாட்சி மரணம். மரணத்திற்குச் சாட்சியைத் தேடி அலைகிறேன்….

நன்றி: செம்மலர் (மே, 2015)

***************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *