வள்ளுவ மாலை

-சுரேஜமீ​​

வாழ்(வு)நீட்டின் யாதுபயன் மெய்யது கண்டிலார்
சூழ்கேடும் கொண்டு விதியென்பர் – சூத்திரம்
வள்ளுவம் ஏகிட்டுச் செல்பாதை மாற்றிட
ஊழும் தொலையும் பார்!

செவிச்சுவை சொல்கேளார் கண்ணெழில் காட்சியிலார் valluvar
இன்சொல் பகர்மறுத்தார் தோள்கொடு சொந்தமிலார்
காற்றின் மணமேகார் ஆறறிவை வென்றிடப்
போற்றின் திருக்குறள் மேல்!

இலக்கில்லா வாழ்வும் துடுப்பிலா ஓடமும்
வீழுமொரு நாளே அதன்முன்னே – வள்ளுவம்
வந்திட்டால் நிச்சயம் பெற்றிடலாம் போமுயிர்
மருந்தாம் காக்கும்  குறள்!

தந்தைதாய்ச் சேர்ந்தார் வணங்கிச் செய்செயல்
யாவும் பிறழ்நெறியில் போகா – திருக்குறள்
கொண்டு வகுக்கும் பண்போடு வாழ்ந்தால்
மானுடம் போற்றும் தலை!

புலன்வழிச் செல்மாந்த ரென்றும் நிலைகொள்ளார்
தீவினைசூழ் துன்பம் மிகக்கொண்டு – ஆழ்நிலை
சென்றுணர்வார் வாழ்வின் வசந்தம் ஏகிட
வள்ளுவம் சாற்றும் வழி!

 

 

About சுரேஜமீ

என்னைப் பற்றி! என் இயற்பெயர் கல்யாணசுந்தரராஜன் காளீஸ்வரன். புனைப் பெயர் 'சுரேஜமீ' (என் அழைப்புப் பெயர் 'சு'ந்தர்; மனைவி பெயர் 'ரே'வதி; இரட்டை மகள்களின் பெயர்களான 'ஜ'னனி மற்றும் 'மீ'ரா வின் முதலெழுத்துக்கள் இணைக்கப் பட்டதுதான் புனைப்பெயர்). தொழிலால் ஒரு பட்டயக் கணக்காளன். மதுரையில் பிறந்து , முகவையில் வளர்ந்து, தலைநகர் ஏகி, தற்போது வளைகுடா நாட்டில், மஸ்கட்டில் வசித்து வருகிறேன். தமிழின் மீதும், தமிழினத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டு, சமூகத்தைச் சரியான பாதையில் நகர்த்த கவிதை, கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுவதை சமுதாயப் பணியாகக் கருதுபவன். என்னுடைய வலைப்பூ http://kksr-aurosun.blogspot.com

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க