பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: தீயன ஆவதே போன்று கெடும்
அல்லது செய்வார் அரும்பொரு ளாக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ? – ஒல்லொலிநீர்
பாய்வதே போலும் துறைவ! கேள் தீயன
ஆவதே போன்று கெடும்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ?-ஒல் ஒலி நீர்
பாய்வதே போலும் துறைவ! கேள்;-தீயன
ஆவதே போன்று கெடும்.
பொருள் விளக்கம்:
அறநெறி வழியல்லாத செயல்களில் ஈடுபட்டு ஒருவர் ஈட்டிய செல்வத்தை நன்னெறியினைக் கடைப்பிடிப்பவர் விரும்புவார்களோ? (விரும்புவதில்லை, எனவே) ஒலியுடன் பாறையில் நீர் பாய்வது போன்று அமைந்த துறையைச் சேர்ந்தவரே, கேட்பாயாக. தீயவழியில் சேர்த்த செல்வம் பெருகுவது போலத் தோற்றம் தந்தாலும் விரைவில் அழிந்துவிடும்.
பழமொழி சொல்லும் பாடம்: தீயவழியில் பொருள் சேர்க்கக்கூடாது. நல்வழி நடப்போர் தீயவழியில் வந்த பொருளை விரும்புவதில்லை, தீயவழியில் சேர்த்த செல்வமும் வளர்வது போன்று தோன்றினாலும் அழிந்து போகும். இக்கருத்தையே வள்ளுவரும்,
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். (குறள்: 283)
கொள்ளையடித்துப் பொருள் குவிப்பதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோற்றத்தைத் தந்தாலும், தீய வழியில் ஈட்டிய பொருளானது முன்னர் சேர்த்திருந்த செல்வத்தையும் இல்லாது அழித்துவிடும் என்று அறிவுறுத்துகிறார்.