ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 3

சி. ஜெயபாரதன்.

kahlil-gibran

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

காதலியுடன் வாழ்வு

 

“காதல் அன்பு தன்னைத் தவிர வேறெதையும் தருவதில்லை. தன்னைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. காதல் அன்பு எதனையும் தனக்கென பற்றிக் கொள்வதில்லை. அதை எவரும் கைப்பற்ற முடிவதில்லை. ஏனெனில் காதல் அன்புக்கு காதல் அன்பே போதுமானது.”
– கலில் கிப்ரான்

“ஒவ்வொருவருக்கும் உன் உணவைப் பங்கிட்டுக் கொடு. ஆனால் அதே உண்டியிலிருந்து எடுத்து நீ உண்ணாதே. ஆடிப் பாடிக் கூடிக் களித்திரு. ஆனால் உங்களில் ஒவ்வொருவரும், வீணைக் கருவியின் நாண்கள் தனித்தனியாய் ஒலித்து ஒருங்கே கீத இசையை எழுப்புவதுபோல் தனித்த உரிமையோடு வாழ்ந்திருக்கட்டும்.”
– கலில் கிப்ரான்

காதலியுடன் வாழ்வு
(வசந்த காலம்)
____________________________________________

என் கண்மணியே ! வா
இந்தக் குன்றின் மேல்
இருவரும் உலாவி வருவோம் !
பனிப் பொழிவுகள்
நீராய் ஓடும் !
உறக்கத்தி லிருந்து வாழ்க்கை
உயிர்த் தெழுந்து
மேடு பள்ளங்களில்
திரிந்து வருகிறது !
வசந்த காலம்
வைத்த தடங்களைப்
பின்பற்றுவோம்
தூரத் தளங்களில் !
பசுமைக் குளிர்
வயல்களுக்கு மேல்
உயர்ந்த
மலை உச்சிக்கு நாம்
ஏறுவோம்
மகத்தான உள்ளெழுச்சி நம்மை
இழுத்துக் கொள்ள !

விடிந்துள்ள வசந்த காலம்
குளிர் காலத்து
அங்கியை
மடித்து வைத்து
எலுமிச்சை மரங்கள் மேல்
படிய விட்டது !
பார்ப்பதற்கு
இரவில் அலங்கரித்த
பெருநகர்த்
திருமணப் பந்தலில் உள்ள
மணப்பெண் போல்
தெரிகிறது !

ஒருவரை ஒருவர்
தழுவிக் கொள்ளும்
காதல் ஜோடிகள் போல்
தெரிகின்றன
திராட்சைக் கொடிகள் !
பாறைகளுக் கிடையில்
நடனமிடும்
சிற்றோடைகள் களிப்புடன்
பாடிக் கொண்டு !
மொட்டுகளில் சட்டென
முகிழ்த் தெழும் பூக்கள்
இயற்கை இதயத்தில்
களஞ்சியாய்ச் செழித்த
கடல் வயிற்றி லிருந்து வரும்
நுரை போல் !

என் கண்மணியே ! வா
மல்லிகைக் கிண்ணத்தில்
கடந்த காலத்தில் குளிர்ந்த
கண்ணீர்த் துளிகளைக்
குடித்துத்
தேற்றுவோம் நம் ஆத்மாவை !
பறவைகள் பொழிந்திடும்
கீதங்களைக் கேட்டு
உலாவித் திரிவோம்
உவகை யோடு
மதி மயக்கம் உண்டாக்கும்
தென்றலில் !

ஊதாப் பூக்கள்
ஒளிந்திருக்கும்
அந்தப் பாறை அருகிலே நாம்
அமர்ந்தி ருப்போம் !
அவை கொடுக்குக் கொள்ளும்
இனிய முத்தங்களை
பரிமாறிக் கொள்வோம்
நாமிருவரும் !

 

காதலியுடன் வாழ்வு
(வேனிற் காலம்)
____________________________________________

வயல் வழியே செல்வோம்
வா என் கண்மணி !
வருகிறது
அறுவடைக் காலம் !
பரிதியின் விழிகள்
பக்குவ மாக்கும் பயிர்களை !
காசினி விளைத்திடும்
கனிகளைக்
கண்காணித்து வருவோம்
இதயத்தின் ஆழத்தில்
விதைக்கும்
காதல் வித்துக்கள்
விளைவிக்கும்
களிப்புத் தானி யங்களை
ஊட்டி வளர்ப்பது
அந்த ஆன்மா !

முடிவில்லாக் கொடைகள்
அளிப்பது இயற்கை !
இதயத்தை ஆட்கொண்டு
வாழ்வு செழிப்படைந்து
மூழ்கிப் போவதால்
நிரம்பட்டும் நமது
சேமிப்புக் களங்சியம்
இயற்கையின் விளைவுப்
பயிர்களால் !
பூக்களால் நமது படுக்கை
ஆக்கப் படட்டும் !
ஆகாயம் நமது போர்வை யாய்
அமையட்டும் !
மெல்லிய வைக்கோல்
தலையணை மேல்
சாயட்டும்
நம்மிரு தலைகளும் !
உடல் உழைப்பில் சற்று
ஓய்வெடுத்து
ஓடை முணு முணுப்பைக்
கேட்போம் நாம் !

 

காதலியுடன் வாழ்வு
(இலையுதிர் காலம்)
____________________________________________

வா நாமிருவரும் போவோம்
முந்திரிப் பழத் தோப்புக்கு
திராட் சையைச்
பறித்துச் சாரெடுக்க !
பழரசத்தை விட்டு வைப்போம்
பழைய குடங்களில் !
காரணம் :
யுக யுகமாய்ச்
சேர்ந்திடும் அறிவை
ஆன்மா
முடிவில்லா நீடிப்புப்
படகுகளில்
வடித்துள்ளதால் !

மீளுவோம் நமது குடிலுக்கு !
வீழ்ந்திட வைக்கும்
மஞ்சல் இலைகளை
வீசிடும் காற்று !
வேனிற் காலத் துக்கு
இலைகள் மூடும்
உதிரும் பூக்கள்
இரங்கற் பா பாடும் !
எனக்கென்றும் உரியவளே !
வீட்டுக்குள் வா என் கண்மணி !
வேனிற் தளம் நோக்கிப்
புள்ளினம்
புரிந்திடும் பயணம் !
குளிர்ந்து போன
அறுவடை வயல்கள்
அழுது வாடும் தனிமையில் !
கண்ணீர் வரண்டு போகும்
மல்லிகைச் செடிக்கும்
முல்லைக் கொடிக்கும் !

திரும்பிச் செல்வோம் நாம்
பாடிக் களைத்த அந்த
ஓடைக்கு !
பொங்கி எழுந்த ஊற்றுகள்
அடங்கி விட்டன
அழுது தீர்த்த தீவிரத்தில் !
பழங் குன்றுகள்
கழற்றிச் சேமிக்கும் தமது
பன்னிற உடுப்புகளை
எச்சரிக்கை யோடு !
வா என் கண்மணி !
இயற்கை ஓய்ந்து போனது
நியாயமே !
மகிழ்ச்சிக்கு விடைகூறி
வழியனுப்பி வைக்கும் இயற்கை
மௌன மாக
மனத் திருப்தி யோடு
சோக கீதம் இசைத்து !

காதலியுடன் வாழ்வு
(குளிர்  காலம்)
____________________________________________

குளிர் காலம் விரைவில் வரும் …..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.