தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே …

—  கவிஞர் காவிரிமைந்தன்.

 

தங்கத் தோணியிலேதங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே …

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றில் மைல் கற்களாய் அமைந்த திரைப்படங்கள் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவையாகும். மேலும் இவ்விரண்டு திரைப்படங்களையும் தானே இயக்கிய பெருமையும் எம்.ஜி.ஆருக்கு உண்டு. 1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70 எனும் கண்காட்சியை முழுக்க முழுக்க தமிழ் மக்கள் காண வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பியதால், இப்படத்தின் திரைக்கதையோட்டம் ஜப்பான் நோக்கித் திரும்பியது.

எம்.ஜி.ஆர் அவர்களின் பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கே உண்டு. அவ்வரிசையில் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்கள் உலகப் புகழ் பெற்றவை. இத்திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னரை ஒப்பந்தம் செய்தபோது எம்.ஜி.ஆர். அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றார். திரைப்படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள், அனைத்தும் முத்துப் பாடல்கள் எனலாம். கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், புலவர் வேதா ஆகிய கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் இன்றும் மின்னுகின்றன. இப்பாடல்கள் பதிவான பின் எம்.ஜி.ஆர். அவர்கள் மெல்லிசை மன்னரை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாராம். மெச்சிப் புகழ்ந்தாராம்.

அப்பாடல்களில் ஒன்று இதோ, கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் தமிழ் வார்த்தை விளையாட்டு நடக்கிறது பாருங்கள்.

மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ 

பத்மஸ்ரீ கே.ஜி.யேசுதாஸ் பி. சுசீலா குரல்களில் இழைந்து வரும் இசைத் தென்றல் இது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அபூர்வ ராகம் இது. காட்சியமைப்பும் காண வெகு கச்சிதமாய் மக்கள் திலகத்தின் திரைச் சரித்திரத்தில் மற்றுமொரு மாணிக்க மகுடம். கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் இளமை நந்தவனம் நர்த்தனமிடுகிறது, அதற்கு மெல்லிசை மன்னரின் இசை கவரி வீசி விடுகிறது! வாழ்க்கையின் அன்றாடப் பரபரப்பிலிருந்து சற்று விலகி இளைப்பாற இப்பாடல் அழைக்கிறது…

தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ
இல்லை காதல் தேவதையோ
தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ
இல்லை காதல் தேவதையோ

வண்ணப் பாவை
கன்னித் தேனை
கன்னம் என்னும்கிண்ணம்
கொண்டு உண்ணச் சொன்னாளோ
தங்கத் தோணியிலே
தவழும் பொன்னழகே
நான் கனவில் வந்தவளோ
உன் மனதில் நின்றவளோ

மின்னல் கோலம் கண்ணில்
போட யார் சொன்னதோ

கோலம் போடும் நீலக் கண்ணில்
யார் நின்றதோ

மென்மை கொஞ்சும் பெண்மை
என்ன பாடல் பெறாததோ

இன்னும் கொஞ்சம் சொல்லச்சொல்ல
காதல் உண்டானதோ
(தங்கத் தோணியிலே)

அல்லி பூவைக் கிள்ளிப்
பார்க்க நாள் என்னவோ

கிள்ளும்போதே கன்னிப்
போகும் பூ அல்லவோ

அஞ்சும் கெஞ்சும் ஆசை
நெஞ்சம் நாணம் விடாததோ

அச்சம் வெட்கம் விட்டுப்
போனால் தானே வராததோ
(தங்கத் தோணியிலே)

காணொளி: https://www.youtube.com/watch?v=I-qRFUpdqME

 

Leave a Reply

Your email address will not be published.