Author: admin

  • கர்ணன் எங்கு சென்றான்

    நந்திதா

     

    அலுவலக வாசல்

    தோளில் எனது தோழனின் கை

    உதிர்ந்தன சொற்கள்

    அவன் வாயிலிருந்து

    இன்று “ல்ஞ்ச்” எனது “ட்ரீட்”

     

    இனித்தது என் இதயம்

    கையிலோ கனத்தது தயிர் சாத பொட்டலம்

     

    புளித்துப் போகும்முன்

    அதற்கோர் புகலிடம் தேவை

     

    தெருவைப் பார்த்தேன்

    தென்பட்டது ஏந்திய கரம் ஒன்று

     

    தானமாய் தயிர் சாதம்

    கை மாறும் வேளையில்…….

     

    இது சாப்பாடா சாமி

    நீட்டிய கரம் திசைக் காட்ட

    அங்கு காலில்லாத ஒருவர்

     

    இதை அவருக்குக் கொடுத்தா புண்ணியம்

    எனக்கு காலிருக்கு எப்படியும்

    பொளச்சுக்குவேன்

     

    எனக்குள் நின்ற கர்ணனை

    சொல் அம்புகளால் கொல்லாமல்

    கொன்று புதைத்தாள் அந்த பிச்சை அம்மா….

     

    Share
  • வெண் நிலவுகள் – 2

    பசுந்திரா சசி

    வெளியில் மழை சிலு சிலு வென சிணுங்கிக் கொண்டு  இருந்தது.  “ ஐரோப்பாவில் இது பனிக்காலம் என்றாலும்,  இந்த மழைக்கு காலமே இல்லை வருடம்  பூராகவும் இப்படித்தான் வடிக்கிறது  ”  என அலுத்துக் கொண்டு  இரா போசனத்தை  முடித்து மாடியில் உள்ள  தன் படுக்கை அறைக்கு சென்றார் இந்திரனின் மாமா.  மறு அறையில் தாய்க்கும் தம்பிக்கும் இடையில் கிடந்தபடி

    “ அப்பா விட்ட குறையில இருந்து கதையை சொல்லுங்கோ….. ” என்று அடம் பிடித்துக்கொண்டு அழுதாள் பார்கவி .

    “சரி சரி… எங்க விட்டனான்.”
    “ அந்த பிச்சக்காற ஐயா முதல் முதலா இளம் பிச்சக்காறியை எப்ப பாத்தார்….  என்ற இடத்தில ”

     அந்த பிச்சிக்கார முதியவர் ஜோனிடம்  சொன்னார் ..

      ” அது ஒரு வெள்ளிக்கிழமை  மாலைப் பொழுது . 2009 சித்திரை முதல் பகுதி , கிளிநொச்சியின் கரையோர புதுமாத்தலன் கிராமம் – நாலா புறமும் புகையும் , வெடிச்சத்தமும் , ஓலக் குரலும் , பிஞ்சு போன அங்கங்களும் , பெரு வாரியான பிரேதக் குவியல்களுமாய் இருந்தது . விளக்கில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகள் போல மக்கள் பாதுகாப்பு என ஓடிய இடமெல்லாம் படு குளிகள் ஒளித்திருந்தன . தணலில் விழுந்த நண்டு தாவி அணைச்சதெல்லாம் நெருப்புக் கட்டிகள் என்பது போல் ஒதுங்கிய இடமெல்லாம் குண்டுகள் இருந்தது . நான் – செல் விழுந்து இறந்த என் மனைவி கற்பகமேரியின் கால்களை பிடித்தபடி கதறிக் கொண்டு இருந்தேன். அவ் வளியால் ஓடிய சனம் எல்லாம்  ‘ இந்த கிழவன்  இதில இருந்து அழுது சாகப்போகுது ‘என என்னை திட்டியது . நான் காதில் போட்டுக்கொள்ள வில்லை . எனக்கு பின்னால் – இறந்த தாயின் மார்பை முட்டியபடி ஒரு குழந்தை – அழுது கொண்டு கிடந்தது . எங்கள் பக்கமாக ஓடி வந்த ஒரு பெண் அந்த குழந்தையை கையில் எடுத்தபடி  என்னிடம் ” இதில இருந்தால் நீங்களும் சாக வேண்டியது  தான்  எழும்பி வாங்கோ ” என்றாள்.  ” நான் மாட்டேன் என் மனைவியோடு நானும் போறன்  இனி எனக்கு யார் இருக்கு ” என அழுதேன் . ” அப்பா… .! பிச்சை எடுத்தெண்டாலும் நான் உங்களுக்கு கஞ்சி ஊத்துறன் எழும்பி என்னோட வாங்கோ…” என்ற அவள்  வேறு  யாருமல்ல – அதோ  பிச்சையே எடுத்துக்கொண்டு இருக்ககும் அந்த பெருமாள் கோயில் இளம் பிச்சக்காறி தான் ‘ என கண்ணீர் வடித்தார் . காய்ந்து வெடித்த தரையில் பாச்சிய நீர் போல அழுக்கேறிய அவரின் கன்னதோலில் கண்ணீர் உருண்டோடி நரைத்த தாடியை நனைத்து வடிந்தது . ‘ என்ர ஒரே ஒரு பிள்ளையும் சுனாமியில போயிற்றான்  .  அவள் எப்ப  என்னை  அப்பா…! என்றாளோ… அப்பவே அவள் என் மகள் ஆகி விட்டாள் . இங்கால வந்து என்னை தன் அப்பா என்றும் , குழந்தையை தன் மகள் என்றும் , கணவன் செல்லடியில் செத்தப் போயிற்றார் என்றும் பதிவு செய்தாள். இரண்டு வருசமா செட்டிகுளம் கதிர்காமர் முகாமில இருந்தோம் . பிறகு மீள் குடியேற்றம் எண்டு மாங்குளத்தில கொண்டு வந்து ஒரு காட்டுக்குள்ள இறக்கிப்  போட்டுப் போயிற்றாங்கள் .  நான் கடல் தெழில் செய்யிறனான். வீடு வளவு , காணி ஒண்டும் இல்லை . அவளோ செஞ்சோலையில இருந்து வளர்ந்த பிள்ளை  உறவினர் யாருமே இல்லை. குழந்தைக்கு எங்கள்   இருவரையும் தவிர யாரும் இல்லை . வீடு வீடா ,கடை கடையா , வேலை கேட்டு திரிஞ்சம் . எனக்கு வேலை இல்லை என்று விட்டு அவளின் மேலைப் பார்த்து ‘ வேலை தரலாம் பின்னேரம் வீட்ட வா..’ என்றார்கள் . போனால் வேலையை மறந்து விட்டு சேலையை பிடித்தார்கள். உதறி விட்டு வந்துவிட்டாள் .   அரை வயிறு கால் வயிரோட கிடந்தோம். வாழ வளி இல்லை . யாரோ ஒருவர்  யாழ்ப்பாணம் கோயில்ல கஞ்சி  ஊத்துறார்கள் என்றார் . இங்கு வந்தால் வெள்ளிக்கிழமையில மட்டும் தான் ஏதாவது எங்காவது கொடுக்கிறார்கள். பசியால் பிள்ளை வதங்கியது அதன் முகத்தை பார்க்கவே முடியவில்லை . பிள்ளையின் பசிக்காக  நான் கை நீட்டினேன் , எனக்காக அவள் கை நீட்டினாள் , எங்கள் இருவருக்குமாக பிள்ளை கை நீட்டியது –  இதோ இன்று பிரபல்யமான பெருமாள் கோயில் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டோம்.

    ‘பிள்ளை வரம் வேண்டும் என்று தவம் கிடக்கும் பல தாய்களுக்கு மத்தியில் எத்தனை பிள்ளைகள் ஒரு தாய் வேண்டும் என ஏங்கி நிற்கிறார்கள் ‘ என்று தன்னையே தாயாக்கிக் கொண்டு வாழும் அந்த தெய்வ விக்கிரகத்திற்கு எத்தனை இழிசொல் ! , எத்தனை வசைகள் ! . தம்பி… உங்களை கை எடுத்து கும்பிடுறன் ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைக்க எங்களுக்கு ஒரு வளி காட்டுங்கோ…. ” என கண் கலங்கினார்  முதியவர்.

    அதற்குள் ஜோனின் கை  தொலைபேசி சிணுங்கியது , எடுத்தான் அவன் காதலி மோகனா.

     ” கலோ… , கலோ… , நான் ஜோன்  கதைக்கிறன்.”

    “ ஜோன் நான் உங்களை பார்க்க வாறது அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு . கலியாணத்திற்கு முதல் தனிய உங்களோட வெளிய போக வேண்டாம் எண்டு சோல்லிப் போட்டா ! நாளைக்கு இதே நேரம் எப்படியும் கோயிலுக்கு வருவன் ,  நாம்  ஒருவரை ஒருவர் முதல் முதல் கோயில்ல  தான் பார்க்க வேண்டும் . நீங்கள் திரும்பி விடுதிக்கு போங்கோ இரவு போன் பண்ணுறன். ”  என்று விட்டு வைத்தாள் மோகனா .

    இன்னும் அந்த முதியவர் அவன் முன்னாலே நின்றார். ” ஐயா ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ , எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் கனடா  கோயில் ஒன்றில  தலைவரா இருக்கிறார் . அவை இங்க உள்ள பல கைவிடப்பட்ட ஆட்களை பராமரிக்கினம் , உங்கிட பெயர் விபரத்தை தாங்கோ , நான் அவரோட கதைச்சுப் போட்டு உங்களுக்கு சொல்லுறன்.”  என்று விட்டு தானே விபரத்தை எழுதி வேண்டினான். மெதுவாக மழை தூற ஆரம்பித்தது.  ” சரி ஐயா நான் கொஞ்ச நாளைக்கு இங்க தான் நிப்பன் பிறகு உங்களை பார்க்கிறேன் ” என்று விட்டு கிழம்பினான்.

    (தொடரும்)

    Share
  • வெண் நிலவுகள் – 1

    பசுந்திரா சசி

    “பிச்சை எடுக்கிறதுக்காகவே  பிள்ளையை பெறுவது , பிறகு – பேத்தி ,பேத்தி – எண்டு சொல்லித்திரியிறது ‘பேத்தியின்ர அப்பாவும் நான் தான் ! ‘எண்டு சொல் வேண்டியது தானே….”   என எரிந்து கொண்டு பெருமாள் கோயில் படி ஏறினார் ஒரு நடுத்தர வயது பெண் – அந்த பிச்சைக்காற முதியவருக்கு இது ஒன்றும் புதிதில்லை  . சேற்றில் தோய்த்தெடுத்த கோலத்தில்  இருந்தாலும் பார்ப்பதற்கு  அழகான சிலை போல்   ஒரு கையில்  பிள்ளையும் மறு கையில் பிச்சைத்தட்டும் ஏந்திய படி இருக்கும் மகளையும் ,  மனம் கல்லாகி மரத்துப் போய் எதற்கும் பதிலோ இல்லை கேள்வியோ கேட்காத  அவரையும் இப்படி ஊரார் எள்ளி நகை யாடுவது இன்று நேற்று அல்ல இரண்டு வருடத்திற்கு மேலாக நடக்கிறது . ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம் ‘ என்ற பாரதியின் கூற்றுக்கு ‘மாதர் தம்மை  (தாமே ) இழிவு செய்யும் மடமையைகொழுத்துவோம்   ‘ . என்ற  எழுத்தாளர் ஜெயகாந்தனின் விபரிப்பை எண்ணி மனதில் நகைத்தபடி . தாடியை தடவிக் கொண்டு அனேகமாக காதலிக்காக காத்திருந்த அந்த இளைஞனை நோக்கி நடந்தார்  பேச்சு வேண்டிய பிச்சைக்காற முதியவர் .

    யாழ் மாநகரிலே பிரசித்திவாய்ந்த கோயில்களில்  பெருமாள் கோயிலும் ஒன்று . அழகான சுற்றுசூழலில் இருக்கும் இந்த கோயிலில் தினமும் பூசைகள் தவறாது நடைபெறும் .  இவ் ஆலயம் அதிக பக்தர்கள் சூழும்  இடம் என்பதால் காதலர்கள் முதல் வியாபார நிலையங்கள் வரை ஏன்  பிச்சைக்காறர்களுக்கு கூட பஞ்சமில்லை .

    எதையுமே கண்டு கொள்ளாமல்  அவனது காணாக் காதலி மோகனா ‘ எப்ப வருவாள் ? , நேரில் எப்படி இருப்பாள் ? , என்னை இனம் காணுவாளா..? , கண்டால்  நாணுவாளா , இல்லை பிரமிப்பாளா …? பெரியோரால் திருமணமே நிச்சயிக்கப்பட்டு . இரண்டு வருடம் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசிய பின்னும் ஏன் நாண வேண்டும் !  . ஒடி வந்து கட்டிக் கொண்டாலும் தப்பில்லை . – இந்த கோயில் முன்றலிலா ? , முதல் சந்திப்பை வேறு எங்காவது வைத்திருக்கலாமோ… , பெருமாள் கோயிலில் வைத்தது தப்பாகி விட்டது . ஒரு வேளை அவள் அப்படி நினைத்தாலும் இந்த கூட்டத்தின்முன்  எப்படி கட்டிக் கொள்வாள்…? – சீ… என்  கற்பனைக்கு இங்கிதமே இல்லை. ‘ தலையை குனிந்த படி தன்னை தானே கடிந்து கொண்டான் ஜோன் . ஏறக்குறைய அவன் இவ் உலகில் இல்லை. வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்காக வந்திருக்கிறான் . மனைவி பற்றிய கற்பனைகள் இருக்காதா என்ன ?.

    அவன் முன்னால் ஒரு அழகிய பூங் கொத்து  நீண்டது  ‘மோகனா’என உச்சாடனம் செய்துகொண்டு  பிரமிப்போடு நிமிர்ந்தான். முன்னால் ஒரு வயோதிபர் பூச் செண்டுடை நீட்டிய படி  நின்றார் . அவர் கையில் பிச்சைப்பாத்திரமும் இருந்தது ஜோன் புரியாமல் விழித்தான் .

    ” மன்னிக்க வேண்டும் தம்பி ! என்ர பேத்தி உங்கட மோட்டார் வண்டியில் இருந்த பூச் செண்டை இழுத்து விழுத்தி விட்டாள். ”  என்று பூங்கொத்தை அவனிடம்  நீட்டினார் . திரும்பி  பார்த்தான்  பூவை தவிர மோகனாவுக்காக வாங்கி வந்த மீதிப் பொருட்கள் எல்லாம் இருந்தது.

    பின்னால் குழந்தை ஒன்று பலமாக வீரிட்டு  அழுது கேட்டது அத்திசையில் திரும்பினான் .

    “சைலஞ்சர் நல்லா சுட்டுப்போட்டுது  ” என்றபடி பிள்ளையை மடியில் வைத்து நெற்றியை உரஞ்சிக்கொண்டு இருந்தார்  தாய்.

    “அதுதான் என்ர பேத்தி , அது மகள்.  இந்த  பூங்கொத்தை எடுக்க வந்து பூவையும் விழுத்தி , தானும்  தடக்கி விழுந்து விட்டது.  வண்டியின் சைலென்னர் நெற்றில நல்லா சுட்டு போட்டுது . நானும் மகளும் பிச்சை  தட்டை குலுக்கிக் கொண்டு  இருந்ததால பிள்ளையை கவனிக்க இல்லை” . என்றார் அந்த பிச்சைக்காற முதியவர் .

    “பறவாய் இல்லை ஐயா .. ” என்று விட்டு மலரை வேண்டினான். தான் காதலிக்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு  வந்த ‘கற்பறி கன்டோஸை ‘அவரிடம் கொடுத்து பிள்ளையிடம் கொடுக்கச் சொன்னான்.

    அவ் வீதியால் கோயிலுக்கு  சென்ற  இளைஞர்களில் ஒருவன். பிள்ளையோடு இருந்த அவ் இளம் பிச்சைக்காறியை காட்டி

    “ டேய்.. தொங்கல்ல இருக்கிறத பாத்தியா….?  மணித்துண்டு ” என்றான் . இன்னொருவன் இந்த முதியவரைப் பார்த்து ” தாத்தா கொடுத்து வைச்ச கட்டை !” என்றான்.

    ஜோன் முதியவரை பற்றுதல் இன்றி பார்த்தான் . சற்று முன் அவன் காதுகளில் விழுந்து அவன் கிரகிக்காமல் போன அந்த பெண்ணின்  தூற்றல் மீண்டும் எதிரொலித்தது .

    “ இந்த வயதிலும் கிழடுக்கு …. சீ…. கறுமம் , கறுமம் . போயும் போயும் இதுகளை கோயில் வாசல்ல விட்டுக்கிடக்கு …..”  .

    ஜோன் முகத்தை சுளித்துக்கொண்டு   மறு பக்கம் திரும்பி நெற்றியை தடவினான்.

    பிச்சைக்காற முதியவர் புளுப் போல நெளிந்தார் . அவன் கொடுத்த சொக்லேட் கையில் இருந்து நழுவியது. பேத்தியை கூப்பிட்டு  அதை கொடுத்து விட்டு .

    “தம்பி உம்மை பார்த்தால் நல்ல பிள்ளை மாதிரி தெரியுது . யாருக்கும் சொல்லத்தேவை இல்லை  என்று விட்டதை  ஏனோ என் மனம் உமக்கு சொல்ல வேண்ணும் எண்டு  நினைக்குது . நான் உண்மையை சொல்லிப் போடுறன் தம்பி  ! இவையள் சொல்லுறது உண்மை தான் ; அது என்ர மகளும் இல்லை , இது என்ர பேத்தியும் இல்லை .   இரண்டும் என்னை காப்பாற்றும்  கடவுள் ! ” என்று கண்ணீர் உருகினார்.

    ‘ பின்பு ஏன் பேத்தி என்று பொய் சொல்ல வேண்டும் ? ‘ என எண்ணிக்கொண்டு முதியவரை மேலும் கீழும் பார்த்தான் ஜோன் . முதியவர் தொடர்ந்தார்.

    “அவளை நான் முதன் முதலாக பார்த்தது ஒரு வெள்ளிக்கிழமை .”

    “ பாரு…,  பாருகுட்டி …,  அடி பார்கவி !  நான் மினக்கட்டு கதை சொல்லுன் நீ என்னடா எண்டால் நித்திரை கொள்ளுறியா…? ” என்ற படி கதையை நிறுத்தி விட்டு மடியில் நித்திரை கொண்ட மகளை உலுப்பினான் இந்திரன்  . அவளோ மடியில் கிடந்த படி யன்னல் ஊடாக நட்சத்திரங்கள் ஊடே  கதையின் பாத்திரங்களை மனக்கண்ணில் உலாவ விட்டிருந்தாள் . தந்தை கதையை  நிறுத்தியும்  அவள்

    சிரிஷ்டித்த பாத்திரங்கள் திரையில் நின்றும் மறையாமல் நீண்டு கொண்டு போயின . அந்த இளம் பிச்சைக்காறியின் தட்டில் கிடந்த வெள்ளிக்காசுகளாய் வான் வெள்ளிகள் மின்னின – திடீரென திடுக்கிட்டவளாய் .

    “அப்பா ஏன் கதையை நிப்பாட்டிப்போட்டீங்கள்.” என்றாள்.  “உனக்கு நாளைக்கு பள்ளிக்கூடம் நேரத்திற்கு சாப்பிட்டு விட்டு படுக்க வேண்டும்” என்றான் இந்திரன்  . “ சனிக் கிழமையில யாரப்பா பள்ளிக்கூடம் வைக்கிறது” என்று விட்டு சிரித்தாள். ஆறே வயதான மகள் பார்கவி.

    “சரி சரி சாப்பிட்டாப்பிறகு  மிச்சத்தை செல்லுறன்” என்றான்  .

    “அப்பா… அந்த இளம் பெண் எப்படி இளம் பிச்சைக்காறி ஆனாள்  ? அதை இன்னும் நீங்கள் சொல்லவே இல்லை ! ” என்றபடி தந்தையின் நாடியை பிடித்து அங்கும் இங்கும் ஆட்டினாள்.  இருவரும் மாடியால் இறங்கி கீழே வந்தார்கள்.

    “ இண்டைக்கு இங்க லண்டன் – M 25 – ரோட்டில விபத்தாம் தம்பி கேள்விப்பட்டனியளோ.. ? ” என்றபடி தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு எழும்பி சமையல் கட்டை நோக்கி  வந்தார் இந்திரனின் மனைவி நிலானியின் தந்தை  யோசப்பர் . “ஓம் மாமா  அதுதான் நானும் வேலையால வர சுணங்கியது அண்டகிறவுண்ட ரெயின் எண்டால் கெதியா வந்திருக்கலாம் கார் எண்டதால பெரிய கஸ்டமாப் போச்சு”என்றான். கத்தரிக்காய் கறி வாசனை மூக்கோடு  சேர்த்து அவனையும்  இழுத்தது .

    சமையல்கட்டுக்குள் நுழைந்தான்-  நிலானி பொரித்து காச்சிய  கத்தரிக்காய் குளம்பை அடுப்பை விட்டு இறக்கிக் கொண்டு இருந்தாள்.

    ” தம்பி எழும்பீற்றானா என்று ஒருக்கா பாரம்மா.. ” என்றாள் நிலனி மகள் பார்கவியிடம் .

    கத்தரிக்காய் கறியை பார்த்துக்கொண்டு “ தக்காளிக் கறி எப்படி சமைத்தாள் …?  இப்படி ஆளை மயக்குது.. ” .  என்றபடி நிலானியை நெருங்கினான்  இந்திரன். ” தக்காள் – இக்கறி –  சமைத்த முறை எல்லாம் இருக்கட்டும். தக்காள் – தகாதவள் ஆகமுதல் உடுப்பை மாத்துங்கோ… நாளைக்கும் இதைத்தான் வேலைக்கு போட வேணும் ; கறி மணக்கப்போகுது . தமிழ் பள்ளிக்கூடத்தில கொஞ்சம் வேலை இருந்ததால வீட்ட வர நேரமாகிப்போட்டுது  நாளைக்குதான் உடுப்பு தோய்க்க வேண்டும் . ” என்றபடி அகப்பைக் காம்போடு திரும்பினாள் நிலானி.

    (தொடரும்)

    Share
  • நானறிந்த காதல்!

    ஷஹான் நூர்

    அன்பு, பாசம், பிணைப்பு, நேசம் இவை போன்ற உணர்வுகளின் ஒரு கவர்ச்சிகரச் சொல்லாடலே காதல் எனப்படுவது. இந்த அளவுகோலில் இருந்துதான் காதலை நாம் நோக்க வேண்டும்.

    “காதல் எங்கு இருக்கிறதோ, அங்குதான் வாழ்க்கை இருக்கிறது” என்று கூறினார் அண்ணல் காந்தி அவர்கள்.

    “காதல் பேய் மாதிரி, எல்லோரும் அதைப் பற்றி பேசுவார்கள். ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்” என்று ஒரு வரைவிலக்கணம் தருகிறார், திரு.லே-ரோச்சி ஃபோகால்ட்.

    இப்படித்தான் நாம் காதலைப் பார்க்க வேண்டியுள்ளது. அன்பு என்பதின் ஆகச்சிறந்த பரிணாமமே காதல். இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டுள்ள அத்துனை உயிர்களும் காதலால் பிணையப்பட்டுள்ளவைகளே. பரந்து விரிந்த இப்பூமியில் எங்கும் வியாபித்துள்ளது காதல். நமக்கெல்லாம் அநேகமாக இது மனித இனத்திற்க்குண்டான ஒரு சொத்தாக மட்டுமே பார்க்கப்படுகின்றது. இது முற்றிலும் அறிவுக்கு ஒவ்வாத ஒரு பார்வை. காதலானது, பூக்கும் மலருக்கும், செடிக்கும் இடையில் உள்ளது. ஒரு பறவைக்கும் அதன் குஞ்சுக்கும், முளைக்கும் தாவரத்திற்க்கும், மண்ணிற்க்கும், இப்படித்தான் இன்ன பிற விலங்குகளுக்குமாக காதல் ஊன்றி இருக்கிறது. காதல் என்பது வெறும் ஊடல் சார்ந்த நிகழ்வல்ல, அது உயிரின் நுட்பம்.

    பலரும் இவைகளை மறந்துவிடுகின்றனர் அல்லது அறியாதிருக்கின்றனர். இளம் பருவ, இரு பாலினர்களுக்கிடையே உருவெடுக்கிற சில அற்பத் தேடல்களுக்குக் கூட இங்கு காதல் ஒரு குறியீடாக காட்டப்படுகிறது. ஆனால் ஒரு தாய்க்கும், சேய்க்குமான பாசமோ, சகோதரர்களுக்கிடையேயான பந்தமோ, நல்ல நட்புகளுக்கு இடைப்பட்ட உறவோ இங்கு அவ்வாறாகப் பார்க்கப்படுவதில்லை, குறிப்பாகக் காட்டப்படுவதில்லை.

    காதல் எனும் ஒரு இயற்கை உணர்வை, ஆபாசமாகச் சித்தரிப்பதில் பெரும்பாலும் இன்று ஊடகங்கள் முன்னனியில் உள்ளன. அதன் அசுர வளர்ச்சியில் இருக்கும் சினிமா இன்றியமையாதப் பங்கினை ஆற்றுகிறது. திரைப்படங்கள் யாவுமே இலக்கியங்களின் பிரதிபலிப்புகளே. இலக்கியங்கள் யாவும் வாழ்வின் பிரதிபலிப்புகளே. ஆனால் அவ்விலக்கியங்கள் எடுத்து இயம்புகின்ற நற்க்-காதல் உறவுகளை ஊடகங்கள் மறந்து விடுகின்றன. ஒரு பெரும் கலாச்சார, நாகரீக அழிவுகளுக்கு வித்திடும் மேலை நாடுகளின் கவர்ச்சிகள் இங்கு காதலாகப் பிண்ணப்படுகிறது.

    பிப்ரவரி-14 என்கிற தினமே கூட காதலை முன்னிலைப்படுத்தும் நிகழ்வாக இல்லை. காதலுக்கு என்று எந்த தினமும் கிடையாது, அது தேவையுமற்றது. ‘வெலடைன்ஸ் டே’ என்பது முழுக்க, முழுக்க வணிகப் படுத்தும், வாழ்த்து அட்டைகளை சந்தைப் படுத்தும் ஒரு இலாப நோக்குடன் பரப்பப்பட்ட ஒன்றே. உலகில் கிருஸ்த்துமஸ் பண்டிகைகளுக்கு, அடுத்தாக வாழ்த்து அட்டைகள் அதிகம் விநியோகம் ஆவது பிப்ரவரி14 நிகழ்வில்தான் என்று, அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு அறிக்கை கொடுக்கிறது. இங்கு சமூக அமைப்பு அப்படி கட்டமைக்கப்பட்டுவிட்டது. இதில் ஆளும் அரசுகளின் பெரும் சதிகள் பொதிந்துள்ளது என்பது அரசியல். இங்கு இவ்வளவான விசயங்களுக்குள் நுழையத் தேவையில்லை. கிடைப்புகளிலே காதல் ஒரு அழகான கிடைப்பு.

    நான் மேற்க்கூறியது போன்று, காதல் என்பது பருவம் எட்டிய ஆண்,பெண் இருபாலருக்கு இடையேயான மோகமாகச் சித்தரிக்கப்படுவிட்டது. ஆனால் அது ஒரு காதலின் வகையே அன்றி. அதுவே காதல் அல்ல, மேலும், அப்படியான காதல் வகையிலே, இங்கு அது அதன் அளவீடுகளைக் கடந்துதான் பயணிக்கிறது, இளைய வட்டங்களின் மத்தியில்.

    “மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும் பொழுதும், மாறாதிருப்பதுதான் காதல்” என்கிறார், ஷேக்ஸ்ஃபியர்.

    “என்றும் மாறாத காதல், பார்த்ததும் வருவதில்லை” என்கிறார் கிறிஸ்டோபர் மார்லோவ்.

    “கடுகளவு நம்பிக்கையே, காதல் பிறப்பதற்க்கு போதுமானது” என்கிறார், ஸ்டென்தாஸ்.

    இவைகள்தான் வயது வந்த பருவத்தினருக்கு இடையே மலரும், மனம் மாற்றி, திருமணம் முடித்து வாழ முற்பட எண்ணி நிகழும் உயிர் கலப்புச் சம்பவமான காதலின் ஒரு வகை. மேற்ச் சொன்னவர்கள் சிறந்த தத்துவியலாளர்கள், இவர்களின் கூற்றும் காதலை இப்படித்தான் சித்தரிக்கின்றது. ஆனால் இன்றுள்ள காதல் என்பது இப்படியானதாகவா உள்ளது என்பதனை நான் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை. அதே சமயம் மேற்க்கூறியவைகளைத் தவிர்த்து, வெறுமனே உடல் உராய்வுகளில் தொடர்வது காதலல்ல. காமத்தின் தொடக்க நிலைகளை காதல் என்று அறிந்து வைத்திருக்கும் மடமை. அதேசமயம் காமம் அற்று காதலில்லை. காமம் மட்டுமே காதலுமில்லை. ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது காமம் என்ற சொல்லாடல் என்பது ஒருவகையான இன மோகம். இது காதல் இல்லாதவனிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் காமம் மட்டும் தேடி அலையும் மாந்தரிடத்திலோ, அற்ப பொருள்களுக்காக உடல் விற்க்கும் மாந்தரிடத்திலோ காதல் ஒரு நாளும் வராது, இருப்பதில்லை, என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான் காதல் புனிதப்படுகின்றது.

    திருமண பந்தத்திற்க்குப் பிறகு நிகழ வேண்டிய பலவும், காதல் என்கிற பெயராலே பரிமாற்றிக் கொள்வதன் விளைவு, திருமணத்திற்குப் பிறகு அவைகளெல்லாம் சலிப்படைந்துவிடுகிறது. சதை, சரும ஈர்ப்புகளால் கொள்ளப்படும் காதலானது, அதன் தேவை முடிந்தவுடன், கலங்கப்பட்ட காதலும் முடிந்துவிடுகிறது. மேற்ச்சொன்ன கிறிஸ்டோபர் மார்லோவின் கருத்தினை நான் மீண்டும் நினைவு படுத்துகிறேன். அநேகப் பேரின் காதல்கள் பார்த்த மாத்திரத்தில் வந்து விடுகின்றது. இது அப்பட்டமாக வயதின் ஈர்ப்பே அன்றி வேறில்லை. அதேசமயம் மணவாழ்வு சிறக்க வேண்டுமெனில் இரு உள்ளங்களும், தங்களின் எதிர்பார்ப்புகளைக் கொண்டே துணை அமைக்க வேண்டும். அதில் வெறுமனே உடல் கட்டமைப்பு, அழகு, வெளுப்பு போன்றவைகளை எதிர்நோக்கும் அதே நேரம் குணம் என்ற ஒன்றையும் சேர்த்தே நோக்க வேண்டும். இவைகளில்தான் மரணிக்கும் வரையில் அப்பந்தமானது நீடிக்க வழி வகுக்கும். அதே சமயம் இரு மனங்களும் பார்த்துக் கொள்ளாமல், பெற்றோர்களின் முடிவுப்படி தலையசைப்பது, எதிர்காலத்தில் ஆழ்பெரும் இன்னல்களை உருவாக்கிக் கொடுக்கும். காதல் காலத்தில் காமம் தவறு, திறுமணத்திற்க்குப் பிறகு காமம் மட்டுமே தவறு.

    இறுதியாக காதலைப் பற்றி ஷேக்ஸ்ஃபியரின் இந்தக் கூற்றை வைக்கிறேன்.

    “காதலிக்காதவர்கள் என்று யாருமில்லை. தங்கள் காதலை வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால் இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

    இதுதான் உண்மை, காதல் அப்படி எங்கும் எவரிடத்திலும், எதன் மீதும் பற்றி வியாபித்திருக்கிறது. வயது எய்திய பாலினருக்கு இடையே மலர்வது மட்டுமல்லக் காதல், அது ஒவ்வோர் வயதினரிடத்தும், பிறப்புகளினிடத்தும், தோன்றிய ஓர் உடன் பிறப்பு. அதில் பல வகைகள் உண்டு. அதில் ஒரு வகையே நாமெல்லாம் பேசிக் கொள்கிற ஆண்,பெண் உறவான காதலென்பது. இறைவனைக் கண்ணால் காணாமல் நாம் வைக்கின்ற நம்பிக்கையில் இருப்பதும் கூட ஒரு வகையான காதலே.

    ஆக இப்படியாக, காதல் எனும் ஓர் அழகிய இயற்கை வரத்தினை வகைப்படுத்தலாம். இன்னும் நீளமாகச் செல்லவோ, விரிவாகச் சொல்லவோ நிறைய இருந்தாலும், காதலை அனுபவித்தவர்களுக்கு, நுகர்ந்தவர்களுக்கு இச்சிறு எழுத்துக் கோர்வைகளே ஓர் விளங்கியல் உணர்வை தருமென கருதுகிறேன்.

    Share
  • பிரான்சில் ‘புலம்பெயர் தமிழர் திருநாள் – 2014’ : மக்கள் சங்கமித்த பெருவிழா

     குணன்

    pongal 6

    பாரிஸ் பெரு நகர மையத்தினுள் அமைந்திருக்கும் மண்டபத்தில் அரங்கம் நிறைந்த  மக்களை பார்த்தவுடன் ஆச்சரியமாகத்தான் இருந்தது. காரணம் நான் சென்றிருந்தது குடும்ப கொண்டாட்டத்திற்கோ, ஆண்டு விழாவுக்கோ, மதம் சார்ந்த நிகழ்வுக்கோ அல்ல. புலம்பெயர் வாழ்வில் எமது அடுத்த தலைமுறையினர்க்கு நாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் பிரான்ஸ் சிலம்புச் சங்கம் ஏற்பாட்டில் 19.01.2014 அன்று நடாத்தப்பட்ட எட்டாவது புலம்பெயர் தமிழர் திருநாள் நிகழ்வு.

    pongal 4

    இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக, புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் வானொலி தொகுப்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட், சுவீடன் கீழத்தேய மத வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பீட்டர் சல்க் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மங்கள விளக்கேற்றல், அமைதி வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

    pongal 14

    அரங்க வெளி முற்றத்தில் அழகான கோலப் பின்னணியில் அடுப்பு வைத்து விறகிட்டு தீ மூட்டி மட்பானையில் பொங்கல் நிகழ்வு தொடங்க, குழுமியிருந்த கலைஞர்கள் பறையடித்து முழங்க ஆடல் பாடலாக வெளியரங்கம் களைகட்டியது. பாரீஸ் பெருநகர மையத்தில் முதற்தடவையாக நடந்த நிகழ்வாகையால் பெரும்பான்மையோருக்குப் இது புதுமையானதாக இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ஒளிப்படமெடுத்தபடி மலர்ந்த முகத்துடன் வருகைதந்தோர் காணப்பட்டனர்.

    Pongal 17

    பிரான்சு கலைஞர்களுடன் இலண்டனிலிருந்து வருகை தந்திருந்த சந்தோஷ் குழுவினரும் பறையிசை முழக்கம் செய்தனர். இவர்களுடன் முன்னைநாள் கிழக்கிலங்கைப் பல்கலைக் கழக நுண்கலைப் பீடாதிபதி பாலசுகுமார் அவர்களும் இணைந்துகொண்டு பறை வாத்திய இசையின் அருமையான தொன்மையையும் விபரித்து பறையை இசைத்தது சிறப்பாக இருந்தது. இவர்களுடன் மக்களும் கலந்து ஆடிப் பாட, குதிரையாட்டக் கலைஞர்களும் இணைந்துகொள்ள பல்லின பல்தேசியப் பார்வையாளர்களுடன் வெளியரங்கம் குதூகலித்தது. குவாதூப் வழி வந்த 160 ஆண்டுப் புலம்பெயர் நீட்சியின் தலைமுறை பெண் கலைஞர்கள் குதிரைட்டத்தில் ஈடுபட்டது சிறப்பாக இருந்தது.

    pongal 8

    இதேவேளையில், உள்ளரங்கில் தமிழர்களின் பாரம்பரியப் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையிலான இசைக் கருவிகள், நூல்கள், பாவனைப் பொருட்கள், உணவு வகைகள் என கண்கொள்ளாக் காட்சியரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    காட்சியரங்கம். புலம்பெயர் வாழ்வில் வாரிசுகளாகி எம்முடன் வளரும் சிறார்கள் எமது பண்பாட்டு ஓவியக் கலைக்கூடத்திலும், கோலமிடல் போட்டியிலும் உற்சாகமாகப் பங்கேற்றது மிகுந்த நம்பிக்கையுடன் மகிழ்வைத் தந்தது.  எமது வளரும் புலம்பெயர் வாரிசுகளுக்கு எம் பாரம்பரிய உணவுகளின் பெயர்கள் தொடர்பான புரிதலைப் பரிசோதிக்கும் வகையில் பி. எச். அப்துல் ஹமீத் அவர்களால்  திடீரென நிகழ்த்தப்பட்ட போட்டியில் பலரும் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினர். இந்நிகழ்வு அரங்கத்தினுள் புதியதொரு அதிர்வலையாகப் பரவி மகிழ்வூட்டியது.

    மதிப்புக்குரிய தமிழ் வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது கைபிடித்து எமது சிறார்கள் அகரம் எழுதிய காட்சி தமிழின் வாழ்வின்  அர்த்ததை உணர்த்தியதாக பார்வையாளரை புளங்காகிதமடைய வைத்தது.

    அரங்கத்தினுள் பல் வயதையும் கொண்ட ஆண்களில் பலரும் வேட்டி சட்டையுடன் எமது கலாச்சாரத்தை விளக்கும் வகையில் வலம் வந்தனர். கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுவானவர்கள் எனப் பலரையும் சந்தித்து உரையாடக்கூடியதாக இருந்தது.

    Pongal 19

    மேடை நிகழ்வாக, சிறுவர்களின் நடனம், பாடல்கள் என்பன தமிழ்த் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் இருந்தமை இந்நிகழ்விற்கு மேலும் சிறப்பைத் தந்தது. கடும் குளிர் காலம், பசி வேளை என்பன மறந்து இந்நிகழ்வை மக்கள் அனைவரும் பொறுமையாக இரசித்ததை பதிவிடவேண்டும். குவதூலூப் வழி வந்த ஐந்தாம் ஆறாம் தமிழ்த் தலைமுறையினைச் சேர்ந்த பெண்ணின் ஆடல் அரங்கம் மறக்கப்பட முடியாததாக கால நீட்சியில் மூல அடையாளக் குறியீடாக இந்நிகழ்வு அதிர்வுகளை கிளறிவிட்டுள்ளது.

    சிறப்பு விருந்தினர் உரையில், அப்துல் `ஹமீது அவர்கள், « ஒரு பிள்ளையின் தாய் மொழி அப்பிள்ளை தாயின் கருவறையில் தனது 13ம் வாரத்திலிருந்து கேட்கத் தொடங்கும் மொழியாகும். இது எம் சந்ததியினருக்கு அந்தந்த நாட்டு மொழியாக அமையும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தையின் பத்து வயதிற்குள் பத்து வகை மொழிகளைக் கற்கும் திறனுடையதென அறிஞர்களது ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. அந்த வகையில் நம் சந்ததியினர் தமிழைக் கற்று அதன் வழி சிறக்க வேண்டும். இலண்டனில் எம் பாடகனொருவன் குறிப்பிடுவது போல் ‘I  am a tamil, but i don’t know tamil ‘ என்ற அவலம் நிகழக் கூடாது. சூழல் மொழி வேறாயினும் வீட்டு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும். இதற்காக முகுந்தன் போன்ற பல சமூக ஆர்வலர்கள் செயற்படுகிறார்கள். இப்படியானதொரு நிகழ்வரங்கை பிரான்சு மண்ணில் நிகழ்த்திய சிலம்புச் சங்கம் பெரும் பாராட்டுதலுக்குரியது. சங்கம் கண்டு வளர்ந்த தமிழின் பாராம்பரிய வாழ்வில் நான்காவது சங்கமாக சிலம்பு திகழ்வதை பாராட்டுகிறேன். » என கரவொலியுடன் கூறினார்.

    எமது புலம்பெயர்வு வாழ்வின்  நீட்சியில் மூலத்தொடர்பின் தகவமைப்பு தொடரோட்டமாக அடுத்த தலைமுறையிருக்கு கையளிக்கும் மக்கள் நிகழ்வரங்காக இந்நிகழ்வை அமைத்திருந்தது சிலம்புச் சங்கம் என்பதை பெருமிதத்துடன் குறிப்பிடவேண்டும்.

    புலம்பெயர்வு வாழ்வில் தமிழால் ஒருத்துவமாகி, சாதி, மத, தேச, அரசியல் பேதம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்த நிகழ்வில் கலந்து கொண்டது மிகுந்த மனத் திருப்தியைத் தந்தது. விழா முடிவுற்று வீடு திரும்புகையில், பிரான்சில் தமிழ் வழி ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் எனது மகனிடம் நிகழ்வைப் பற்றி கேட்டேன். தனக்கு மிகவும் சிறப்பாகவும் தனக்கு நன்றாகப் பிடித்திருப்பதாகவும் மலர்ச்சியுடன் கூறினான்.

    வாழ்கை என்பது அஞ்லோட்டம் போன்றது எம்முன் சந்ததியினர் எம்மிடம் வழங்கிச் சென்ற வரலாற்று அடையாளத் தடியை புதிய மெருகுடன் அடுத்த தலைமுறையினரிடம் கையளிப்பதென்பது தார்மீகக் கடமை. இந்த அரிய செயலைப்புரியும் சிலம்புச் சங்கத்தை பாராட்டுவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.

    விழியப் பதிவைக் காண:

    http://youtu.be/WWFjHjxmqpY

     https://mail.google.com/mail/ca/u/1/#inbox/14410877872d2870?projector=1

    குணன்

    25.01.2014

    Share
  • மாதொரு பாகன் – பெருமாள் முருகன் – புத்தக மதிப்புரை

     வீரக்குமார்

     

    நாவலின் வழியே ஒரு ஆவணம்…

    mathoru

    நல்ல படைப்புகள் எப்பொழுதுமே வாசிப்பவர்களுக்கான கேள்விகளைத் தனக்குள் தாங்கியே நிற்கும். அவ்வகையில் “மாதொருபாகன்” ஒரு காலகட்டத்திய வாழ்க்கை முறையை  நம்முன் நிறுவி, அதுகுறித்த உளவியல் கேள்விகளை மனதுக்குள் கிளர்த்திவிடக்கூடியது.

     சுதந்திரத்திற்கு சற்று முந்தைய ஆண்டுகளில் கொங்குப்பகுதியின் திருச்செங்கோடு மலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிகழ்கிறது இந்த நாவல் சொல்லும் வாழ்க்கை. அப்பகுதியின் வனங்கள் முற்றிலும் அழிந்துவிடாமல் இருந்த காலகட்டத்தில் வாழ்வாதாரமாக விவசாயத்தையும் கால்நடைவளர்ப்பையுமே நம்பி வாழ்ந்த ஒரு குடும்பத்து உறுப்பினர்களைக் கதாபாத்திரங்களாக்கி அக்காலகட்டத்து வாழ்க்கையின் ஒரு முக்கியமான நடைமுறை வழக்கத்தை அந்தப் பகுதிக்கே உரித்தான வட்டார மொழியில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார் பெருமாள்முருகன்.

    திருமணஉறவின் மூலம் உருவாகும் குழந்தைப்பேறுதான்  அந்த உறவை அர்த்தப்படுத்தும் என்கின்ற எதார்த்தம்  இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. அந்தப் புதிய உயிருக்கான எதிர்பார்ப்பும், காத்திருப்பும் வெறுங்கனவாய் நீளும்போது அதற்கான தீர்வாக மிக மேலான நீதியுணர்வுடன் கடவுளைத் துணைகொண்டு கிராமத்து முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த ஒரு வழக்கம்தான் இந்த நாவலின் மிக ஆச்சர்யமான  திறப்பு.

    குழந்தைப்பேறு இல்லாதபோது அதற்குப் பெண்களைக் காரணம் காட்டி மலடிப்பட்டம் சூட்டி, மறுமணம் செய்துகொண்ட ஆண்மேலாண்மை நிலவியதாக நம்பும் ஒரு காலகட்டத்தில் ஆண்களுக்கும் குறையிருக்கலாம் என்னும் கோணத்தில் எளிய கேள்வியை முன் வைத்து நம் சமூகம் ஒரு தீர்வைச் சிந்தித்திருப்பது உண்மையிலேயே பெருவியப்புத்தான்.

    இந்தத் தீர்வை அவர்கள் எங்கிருந்து கண்டடைந்தார்கள்? எவ்வளவு காலத்துக்கு முந்திய வழக்கமாக அது இருந்து வந்தது? இவ்வழக்கம் கொங்குப்பகுதியில் மட்டும் நடைமுறையில் இருந்ததா அல்லது மற்ற பகுதிகளிலும் இருந்ததா? இந்தத் தீர்வுகளை நாடிய தம்பதியர்கள், அவ்வழியின் மூலம் உருவான பிள்ளைகளின் மனோநிலை, இதை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்த அல்லது மறுதலித்த சுற்றத்தாரின் நிலை போன்ற சமூக மற்றும் உளவியல் கூறுகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த நாவல் நவீன சமூகவியலின் ஆராய்ச்சிக்குத் தீவிரமாக உட்படுத்தப்படவேண்டிய அவசியம் கொண்டது.

    முதல் அத்தியாயத்திலேயே நாவலை நகர்த்திச் செல்லும் பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் குணாதிசயங்கள் தொட்டுக்காட்டப்பட்டு, அவற்றுக்கு இடையே உள்ள உறவுகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு விடுகின்றன. இரண்டாவது அத்தியாயத்தில் நாவலின் கூறுபொருள் திறக்கப்பட்டுவிடுகிறது. அடுத்தடுத்த விரிவுகளில் குழந்தைப் பேறின்மையால் காளியும் பொன்னாளுமாகிய மையப்பாத்திரங்கள் தங்கள் இல்லறவாழ்க்கையின் துயரம் கவிக்கும் கேள்விகளைச் சுற்றத்தார் மற்றும் நட்புகளின் மூலம் எதிர்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். சகலவிதமான அகப் புற நிலவரங்களை தங்களின் குறைபாட்டுடனேயே பொருத்திப் பார்த்துத் துன்பம் மிகுகின்றனர். தழையத்தழையக் காய்த்துச் செழிக்கும் தங்கள் பூவரசன் மரமும் கன்றுகளைத் தொடர்ந்து ஈனும் தன்வளர்ப்பான வளமான கிடாரியும் தாங்களே அள்ளி முடியும் கூந்தலும்கூடத் தங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டி இவர்களைப் பரிகாசம் செய்வது போல் உணர்கிறார்கள்.

    தொன்மங்களையும் முன்னோர்களின் நம்பிக்கைகளையும் தடம் பற்றி அந்தத் தம்பதிகள் தங்களின் குழந்தைப்பேறு அற்ற குறையை நிவர்த்திக்க முனையும் தொடர்முயற்சிகள் ஒவ்வொன்றாக நழுவிக்கொண்டே போகின்றன. அவர்களின் நம்பிக்கைகள் சிதையும் ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்  உடைகிறார்கள். தங்களுக்குத் தாங்களே ஆறுதல்படுத்திக் கொள்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அறியாமலேயே அவர்களின் ஆழ் மனம் தனித்தனியே சில தீர்மானங்களைத் தங்களுக்காக உருவாக்கி வருவதையும் அதன் துாலவெளிப்பாடாக அவர்களின் நடவடிக்கையில் மாற்றங்கள் நிகழ்வதையும் மிக நுட்பமான உளவியல் தன்மைகளோடு பதிவுசெய்து கொண்டே வருகிறது நாவல். காளியின் மறுதாரம் பற்றிய மனக்குழப்பத்திலும் சாபக் குடும்பத்துக்கு வாழ்க்கைப்பட நேர்ந்துவிட்ட பொன்னாளின் வருத்தத்திலும் அவற்றை நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.

    ஒரு குழந்தையின் கருவை உருவாக்கிவிட எடுத்த அத்தனை முயற்சிகளும் பலனற்றுப் போன நிலையில் அந்தத் தம்பதிகளின் மேல் இறுதியாகக் காலம் ஒரு தீர்வை முன் வைக்கிறது. அது குறையுள்ள தம்பதிகளுக்காக மூதாதையர்களால் கண்டடையப் பெற்ற கடவுளின் தீர்வு.

    இதுவரை ஒரே பாதையில் பயணித்த அந்த இருவரின் தேடல்கள் அந்தத் தீர்வை ஒட்டி வேறுவேறு பாதைகளில் பயணிக்க ஆரம்பிக்கின்றன. இறுதியாகத் தங்கள் தரப்பின் நிலைக்கு உட்பட்டு இருவரும் தேர்ந்தேடுக்கும் முடிவுகள் ஆன்மாவை அலற வைத்துவிட்டு அமரிக்கையாக நிலைத்துவிடுகிறது.

    பெருமாள்முருகனின் படைப்பூக்கம் நின்று நிறுவிய படைப்புக்களில் இதுவும் ஒன்று. உயிர்ப்பான சித்தரிப்புகள் மூலம் காட்சித் துல்லியத்தைக் கொண்டுவருவதிலும் கதாபாத்திரங்களின் மனநிலைகளை விசாலமாக ஆராய்வதிலும் வரலாற்றுச் செய்திகளை நாவல் நெடுக விரவவிட்டு அவற்றைக் காலத்தின் குறீடாக்குவதிலும் வாட்டார மொழியின் சாத்தியங்களைப் பிரயோகித்து வார்த்தைகளைக் காலப் பெட்டகத்தில் சேமித்து வைப்பதிலும் அவரின் எழுத்தாளுமை பிரமிக்க வைக்கிறது.

    ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் கால்நடைகளுக்கான ஓய்விடத்தைத் தங்களின் இருப்பிடமாகவே பாவிப்பார்கள். பொதுவாக மாட்டுத் தொழுவம் அல்லது மாட்டுக் கொட்டகை என்று குறிப்பிடப்படும் அந்த இடத்தைக் கொங்குப் பகுதி விவசாயிகள் ‘தொண்டுப்பட்டி’ என்று சொல்வார்கள்.

    தொண்டுப்பட்டியின் சுகத்தை உணர்ந்தவனுக்கு அது சொர்ககம். கிலுவன் மரக்கன்றுகளால் வரையறுக்கப்பட்ட எல்லை. திறப்பு வாயிலுக்குச் செய்யப்பட்டிருக்கும் படல் நேர்த்தி. உள்ளுக்குள் ஓங்கி உயர்ந்து நிற்கும் வைக்கோல் போர். சேகரப்படுத்தப்பட்ட உழவு உபகரணங்கள். இவற்றினுடாக உழைத்தும் மேய்ந்தும் சலித்துப்போய்த் தங்களுக்கே உரித்தான சாய்மானங்களில் படுத்தபடி ஓய்வெடுக்கும் ஆடு மாடுகள். வயிற்றுக்குள் தள்ளிய தீனியை வாய்க்கு மீட்டு வந்து கண்கள் சொருக அவை அசைபோடும் அழகு. கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி அப்துல்ஹமீதின் குரலை ரேடியோவில் கேட்டுக்கொண்டு அவற்றை ரசித்த மாலைப் பொழுதுகள். அமைந்த தனிமையில் மெலிதாக எல்லைமீறிச் செய்த தவறுகள், எல்லோருக்கும் பரிச்சயமான பாலியல் ஆய்வுகள், போதையின் பல பரிமாணச் சுவைகள், சோக்காலிகளுடன் இணைந்து தீட்டிய கலவரத் திட்டங்கள் என எனது பிரத்யேகமான விஷயங்களை மீட்டுக் கொண்டுவந்து கொடுக்கின்றன பெருமாள்முருகனின் ‘தொண்டுப்பட்டி’ பற்றிய சித்தரிப்புகள். அதே போல்தான் மலையுச்சியில் இருக்கும் வரடிகல் பற்றிய சித்தரிப்புகளும் கவனம் கொள்ளத்தக்க எழுத்துத் திறன்.

    அவருடைய ஆழ்ந்த அவதானிப்புக்குச் சாட்சியாக இதில் இன்னொரு இடத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். நாவலின் ஒரு இடத்தில் இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் அதைச் செலுத்துவதற்காக ஒருவர் ஏற முற்படுவார். இரட்டை மாட்டுவண்டியில் ஏறுவதற்கு அதில் பூட்டப்பட்ட ஒரு காளைமாடு சற்று வெளிப்புறமாக நகர்ந்து இடம் கொடுக்க வேண்டும். லேசாகத் தட்டினால் மாடு நகர்ந்து இடம் கொடுக்கும். அந்த நுட்பமான இடத்தை பெருமாள்முருகன் எழுத்தில் தொட்டுக்காட்டியிருப்பார்.

    ஒரு சமூகத்தின் வரலாற்றுப் பின்புலத்தை, நாகரிகத்தை, அவர்களின் பொருளாதார நிலையை ஒரு வீட்டின் விஸ்தாரத்தைக் காட்சிப்படுத்துவதிலேயே வாசகனுக்கு இந்த நாவல் உணர்த்திவிடுகிறது. கோழிக் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து காக்கும் சாமர்த்தியம், கொம்பு நுனியில் சாணம் வைத்து மரம் நடுவதில் உள்ள நேர்த்தி, அதற்குத் தண்ணீர் பாய்ச்சும் சமயோசிதம், மாட்டுவண்டி ஓட்டுவதில் உள்ள லாவகம், கோயிலாட்டத்தில் எடுத்துவைக்கும் அடிகள், குறிதவறாமல் கவண் எறியும் திறன், ஆண்பெண் பேதமற்று மதுவை நுகரும் பொதுமை, எருக்கலங்கோலைப் பெண்ணின் குறிக்குள் செலுத்தி அதன் உஷ்ணத்திலேயே கருவைக் கலைத்துவிடும் மருத்துவம் என்று கிராமத்தின் வழமைகள் பலவற்றையும் தொட்டுச்செல்கிறது நாவல்.

    நாவல் உருவாக்கத்தில் காலம் எப்போதுமே தனக்கான ஒரு பங்கை முன்மொழிகிறது. அதுவும் இதுபோன்ற கலாச்சாரம் சார்ந்த கதையாடல்களுக்கு அதன் அவசியம் மிக அதிகம். அந்த அடிப்படையில் இதில் காலம் மிகச் சரியாக வரையறுக்கப்படுகிறது. 1930 களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட சென்னை மாகானத்தின் முதல்வராக இருந்த ராஜாஜியின் மதுவிலக்குச் சட்டம் காலத்தை உறுதிசெய்யக் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா டாக்கீசும் ஸ்ரீவள்ளி திரைப்படமும் அதற்குத் துணை நிற்கின்றன. இப்படி நிர்ணயிக்கப்பட்ட காலம் நாவலின் போக்கில் முன்பின் எனத் தடம்மாறித் தன் இருப்பை உணர்த்திச் செல்கிறது.

    இவையெல்லாம் நாவலின் புறக்காரணிகள். ஆனால் இந்த நாவலின் அடிநாதம் அதன் அகநிலையில் மையம் கொண்டு உள்ளிருந்து ஒலிக்கும் சுயத்தின் குரலால் எழுப்பப்படுகிறது. காளிக்குள் படிந்திருக்கும் ஆண்வர்க்கக் கசடுகளும் சாதிபற்றிய கற்பிதங்களும் அவனைத் தீர்வுக்கு எதிர்த்திசையில் நகர்த்துகின்றன. மறுமணம் பற்றிய அவன் தவிப்பு, தான் வரடன் ஆகிவிடக்கூடாது என்பது பற்றிய அச்சம், தனக்குச் சாதகமில்லாத சடங்குகள் மீதான எதிர்நிலை என்று பலவிதமான உணர்ச்சிகளின் ஊசலாட்டத்திலேயே அவன் இழுத்துச்செல்லப்படுகிறான். காலம் இடம் பற்றிய கவலைகள் ஏதுமற்றுக் கவியும் பொன்னாள் மீதான காமம் அவனுக்குள் ஒரு விதமான ஆசுவாச உணர்வைத் தந்தாலும் அது தற்காலிகத் தீர்வாகவே அமைந்துவிடுவது காளியின் துரதிர்ஷ்டம். பொன்னாளின் உடல் மேல் அவனுக்கிருந்த காமத்தின் அளவை ஒப்பிடுகையில் அவளுடைய மனதின்பால் அவனுக்கிருந்த கரிசனம் குறைவுதான் என்பதை அவனின் இறுதி உறுதிசெய்கிறது.

    ஆனால் சுற்றத்தார்களின் தொடர்ந்த அழுத்தங்களுக்கு எதிராக விடுதலையுணர்வை வேண்டிநிற்கும் பொன்னாளின் மனம், தன் குறைக்குத் தீர்வைக் கண்டடைந்தது முதல் அதிசயத்தக்க அளவில் தன் சுயத்தை இழந்து புதியதொரு விழிப்புநிலையை அடைகிறது. காளியின் கண் அசைவுக்குக் கட்டுப்பட்டிருந்த அவள் வாழ்க்கை, வேறு கதியில் திரும்ப, சட்டென்று அவள் விசித்திரமான அனுபவங்களுக்கு உட்படுகிறாள்.

    அவளைப் பற்றியதான இறுதி அத்தியாயங்கள் வாசக அனுபவத்திற்கான  உச்சபட்சப் படைப்புச் சாத்தியம். எவரொருவர் தன் மனதை ஒருமுகப்படுத்தி முதல் அத்தியாயத்திலிருந்து துவங்கி ஒரே அமர்வில் கடைசிவரை சீராகப் படித்து வருகிறார்களோ அவர்களை ஒருவித மாயஉணர்வுக்கு இட்டுச் சென்றுவிடும் வல்லமை கொண்டது பொன்னாள் திருவிழாகூட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் இறுதிப் பகுதி.

    அவள் தனிமையில் தள்ளப்படுகிறாள். ஒரு கணத்தில் அவளை நெருங்கியிருந்த எல்லாமும் விடுபடுகிறது. மக்கள் வெள்ளத்தால் சூழப்படுகிறாள். எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் யாரும் இல்லை என்று உணர்கிறாள். மனதில் நிம்மதி படர்கிறது. எல்லாவற்றையும் புதிதாகப் பார்க்கத் தொடங்குகிறாள்.

    அங்கு ஒரு தடிவரிசை (சிலம்பாட்டம்) நடந்து கொண்டிருக்கிறது. கண்மூடி அதன் சீரான ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையை உள்வாங்குகிறாள்.

    மனசுக்குள் பீடித்துக் கிடக்கும் இறுக்கங்களை எல்லாம் பட்பட்டென்று தட்டி உடைப்பதை உணர்ந்தாள். தடிகள் மோதிக் கொள்ளும் வெறும் சண்டையல்ல இது. மூடிக் கிடக்கும் ரகசியங்களை வெளிக் கொண்டுவர மேற்பூச்சுகளைத் தட்டிச் சிதறடிக்கும் மந்திரக்கோல் விளையாட்டு என்று இதைக் குறிப்பிட்டு எழுதுகிறார் பெருமாள்முருகன்.

    அங்கு விளையாடும் ஆண் உடல்கள் அவள் மனதுக்குள் சில மாற்றங்களை நிகழ்த்துகின்றன. அங்கிருந்து விலகிவிட எண்ணும்போது தன் வலக்கையைப் பற்றும் வித்தியாசமான ஒரு தொடுதலை உணர்கிறாள். சட்டென்று காளியின் ஞாபகம். பழையனவற்றை உதறி எறிந்து விட்டோமே என்று அவள் மனம் கூறுகிறது. காளியின் நினைவை அவள் விரும்பவில்லை. ஆனால்,

    மேலோட்டமாக வாரிக் கொட்டிவிடலாம் என்று தோன்றுபவற்றைப் பற்றிப் பிரச்சினையில்லை. அழுந்திக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போய் மக்கிக் கிடப்பவற்றை வெட்டி எடுத்து வீசுவது அத்தனை எளிதா?  

    என்ற அற்புதமான வரிகளை அங்கு எழுதுகிறார்.

    கையைப் பற்றிய முகம் பார்த்தவுடன் அது அவளுக்கானதில்லை என்ற தீர்மானத்தை அவள் மனம் எடுக்கிறது. உடனே தடிவரிசையின் லயம் தப்புகிறது. அந்த இடம் மனதுக்குப் பொருத்தமற்ற சூழலுக்கு உள்ளாகியது. இங்கு தன் படைப்புத் திறனை உச்சத்துக்குக் கொண்டு செல்கிறார் பெருமாள்முருகன்.

    அவள் பார்க்கும் தடிவரிசை உருவங்களை அக்கூட்டத்திலிருந்து உருவித் தனியாக எடுத்தாள். ஒவ்வொரு உருவத்தையும் கட்டியணைத்து முத்தம் கொடுத்தாள். இந்தச் சாமிகளுக்கு இவ்வளவுதான் என்று தோன்றவும் மெல்ல அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

    ஒரு பெண்ணுக்குள் அவள் கணவனை மீறி வேறு ஆணுடன் கிளர்ந்தெழும் காம உணர்வுகளைத் துளிகூட ஆபாசமில்லாமல் கலையாக்கிய விதம் இந்த நாவலை அபாரமான படைப்பாக மாற்றுகின்றது.

    பெருமாள்முருகன் தன் மற்ற கதாபாத்திரங்களையும் இந்தப் படைப்புக்குத் துணை செய்யும் வண்ணம் வடிவமைத்திருக்கிறார். வாழவேண்டிய வயதில் கணவனை இழந்தாலும்கூடத் தன் தளராத உழைப்பாலும் தியாகத்தாலும் எதிர்காலத் தலைமுறைகளின் வளத்தை உறுதிசெய்துவிடும் தகுதி படைத்த மாராயி, திருமண பந்தத்தைத் தாண்டியும் வாழ்க்கை பல திறப்புகளைக் கொண்டது என்பதை உணர்ந்துகொண்ட நல்லுப்பையன் சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களின் துணையுடன் நாவல் நெடுகிலும், சாத்தியப்படும் எல்லா அலகிலும் பொன்னாயிக்கு இறுதியாக வாய்க்கவிருக்கும் வாய்ப்பை நேர்மறையாக எதிர்கொள்ளும் உதாரணங்களைப் படைத்துவிடுகிறார்.

    வாழ்க்கை எக்காலத்திலும் அது எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான  தீர்வுகளை  வழிநெடுகிலும் உருவாக்கியே வந்துள்ளது. சமூக மாற்றங்களாலும் அறிவுநிலை மேம்பாடுகளாலும் அந்தத் தீர்வுகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. ஆனால் அது உருவாக்கிவிட்டுச் செல்லக்கூடிய தடயங்கள் தங்களை ஆவணப்படுத்துவதற்கு ஒரு கலைஞனையே வேண்டி நிற்கின்றன. அந்த வகையில் பெருமாள்முருகன் செய்து முடித்த மாபெரும் கடமையே “மாதொருபாகன்.”

                                                                                    ————-

    நூலின் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு :

    பெருமாள்முருகன்.

    கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய படைப்புத் துறைகளுள் இயங்கிவருபவர். அகராதி, பதிப்புப் பணிகளில் ஈடுபாடு. தமிழ்ப் பேராசிரியர் பணி. இவரது மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவை ‘Current Show’ (நிழல் முற்றம்), ‘Seasons of the Palm’ (கூளமாதாரி), ‘One Part Woman’ (மாதொருபாகன்). கதாவிருது, விளக்கு விருது முதலியவற்றைப் பெற்றுள்ளார்.

    அலைபேசி : 94426 98106

    மின்னஞ்சல் : murugutcd@gmail.com

    நூல் வெளியான ஆண்டு  :            டிசம்பர் 2010

     பக்க எண்ணிக்கை           :              190 பக்கங்கள்.

     விலை               :               ரூ.140/-

     பதிப்பக முகவரி                    :               காலச்சுவடு பதிப்பகம்.

                               669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001

    Share
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் – புத்தக மதிப்புரை

    த.க.தமிழ் பாரதன்

    கவிஞர் வைரமுத்து : கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். இவர் வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

    k

    விலை : 70
    பக்கங்கள் : 103
    முதல் பதிப்பு : 1985
    தற்போதைய பதிப்பு : 2011
    பதிப்பு : 20

    வெளியீடு: சூர்யா இலக்கியம், சென்னை
    பேசி : 91-44-24914747

    இன்று இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் அமைந்திருக்கும் நூல் சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்.

    இந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கையைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதாக உள்ளது.

    இது இளைஞர்களுக்கு உரமான மொழியில் அவர்களோடு உரையாடுகிறது.

    “இல்லாத ஓர் ஊருக்கு யாரும் செல்லாத ஒரு வழியில் நீ தூக்கதில் நடப்பவனாய்த் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறாய். மயில் தோகைகளைப் பரப்பி மல்லிகைப்பூத் தெளித்த சாலை உனது கனவாக இருக்கிறது. ஆனால் காலில் ஆணியடித்துக் கொண்டு முட்களின் மீது நடப்பது தான் உனது எதார்த்தமாக இருக்கிறது”.

    என எளிய நடையில் தரணியில் தடம் மாறி நடக்கும் இளைஞர்களுக்கு எதார்த்தத்தை எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

    மேலும், தன் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகளை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தியுள்ளார் வைரமுத்து.

    “நாளையின் நம்பிக்கைச் சுடர் நீதான் என்று உன்னைப் போலி வார்த்தைகளால் புகழ மாட்டேன்.
    ஏனென்றால் – எரிந்து கொண்டிருப்பவனே நீ தானே!”
    என்னும் வரிகளில் உண்மைக்கு உருவம் தருகிறார்.

    ஆறுதல் தர வேண்டிய இடங்களில் ஆதரவு வார்த்தைகளையும், அறிவுரை தர வேண்டிய இடங்களில் படிப்பவர்க்கு புரியும் வண்ணம், அருமையான எளிமையான உவமை மொழிகளை உறுதி படவும் தெரிவித்துள்ளார் வைரமுத்து அவர்கள்.

    “உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம் , முகத்துக்கு முன்னால் இருட்டு. கண்பார்வை உனக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதித்துப் பார்க்கக் கூட அந்த இருட்டு உனக்கு சந்தர்ப்பம் தரவில்லை. ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய் , சாவிகொடுத்தால் சுற்றும் சக்கரங்களாய் நம் இளைஞர்கள் மாறியுள்ளனர்”.

    தற்கால கல்வி முறையால் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குரியாகிறது என்பதை அருமையாக விளக்குகிறார்.

    பிறிதொரு பக்கத்தில் “பொழுது என்பது போக்குவதற்கு அல்ல ஆக்குவதற்கு” எனவும், பொழுது போக்கு என்பதே தேவையில்லை என தெளிவுற கூறுகிறார்.

    இலட்சியம், கல்வி, கலை, உறவு, வீரம், எதிர்ப்பு, காதல், அடக்கம், புகழ், தாய்மண், என இன்றைய இளைஞர்களின் தேவைகளைப் புரிந்து 24 தலைப்புகளில் மாபெரும் கருத்துகளைச் சுமந்து நிற்கும் உளியாக நிற்கிறது ‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’ புத்தகம்.

    Share
  • வாழ்ந்து படிக்கும் பாடங்கள் – புத்தக மதிப்புரை!

    பா. சரவணக் குமார்

    ganesan

    நூலின் பெயர் – வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
    நூலின் ஆசிரியர் – என்.கணேசன்
    நூல் வெளியான ஆண்டு – 2013
    பக்க எண்ணிக்கை – 141
    விலை – ரூ-110/-
    பதிப்பக முகவரி – BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
    No7/1 3rd Avenue, Ashok Nagar,
    Chennai-600 083
    Tel : 044 43054779

    நூலின் ஆசிரியர் பற்றி:

    நூலின் ஆசிரியர் என்.கணேசன் அவர்கள் கோவையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிகிறார். வேலை மற்றும் குடும்ப கடமைகளின் மத்தியிலும் படிப்பவர்களை மேம்படுத்தும் விதமாக சிறு கதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை தொடர்ந்து எழுதிவருகிறார். இவருடைய எழுத்துக்கள் தன்னம்பிக்கை, மன அமைதி, நற்பண்புகள், அறிவார்ந்த ஆன்மீகம் போன்ற நல்ல விஷயங்களை உணரச்செய்வதுடன் அவற்றை ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பின்பற்ற தூண்டுகிறது.

    இந்த நூல் யாருக்காக?

    சிலர் தங்கள் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் சில மனிதர்களாலும், இக்கட்டான சூழ்நிலைககளாலும் எதிர்பாரா சம்பவங்களாலும் மிக முக்கியமான தன்னம்பிக்கை, மன அமைதி,காலம் ஆகியவற்றை இழந்து விரக்தி அடைகிறார்கள். அதன் பின் என்ன வாழ்க்கை இது? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? இதற்கு சுற்றி இருப்பவர்கள் காரணமா இல்லை என்னுடைய வாழ்க்கை முறை தான் காரணமா ? நான் காரணமென்றால் வாழ்கையைச் சரியாக வாழ்வது எப்படி ? போன்ற கேள்விகள் எழுகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தேடுபவர்களுக்கு இந்நூல் ஒரு விலைமதிப்பில்லா பொக்கிஷமாகும்.

    சிலர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்தையும் சமாளித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த அனுபவங்கள் உணர்த்தும் உண்மைகளை தவற விட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    வாழ்கையை வாழத் தொடங்குபவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாகும்.

    இயல்பாகவே கற்றுக்கொள்ளும் திறனாலும்,வளர்ப்பு முறையாலும், சூழ்நிலையாலும் வாழ்க்கையை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்நூல் மற்றவர்களுக்கு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசாகும்.

    “வாழ்ந்து படிக்கும் பாடங்கள்” நூலைப் பற்றி:

    இந்நூலில் ஆசிரியர் வாழ்க்கையையும் பள்ளியையும் ஒப்பிட்டு விளக்குவது புரிந்து கொள்ள எளிதாக உள்ளது. எப்படி பள்ளியில் கற்றுக்கொள்ளும் பாடங்கள் நம்மை வெளிநிலையில்,உலகத்தில் மேம்படுத்துகிறதோ அதுபோலவே வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் அனுபவங்கள் நம்மை உள்நிலையில், வாழ்க்கையில் மேம்படுத்துகிறது என்று உணர்த்துகிறார். இந்த புரிதலால் வாழ்க்கையில் சந்தித்த, சந்திக்கப் போகின்ற அனைத்துமே நம்மை மேம்படுத்தும் பாடங்களே என்ற தெளிவு வாழ்க்கையை நம்பிக்கையுடனும், உற்சாகத்துடன் எதிர்கொள்ளும் மனநிலையைத் தருகிறது.

    நூல் முழுவதும் சிறு கதைகளின் மூலமாக உயர்ந்த உண்மைகளை உணர்த்துகிறார். எடுத்துக்காட்டாக ஒரு அறிவாளி பல நூல்களை படித்த, விஞ்ஞானம் தெரிந்த, பல மொழிகளைக் கற்ற, கர்வம் கொண்ட ஒருவர் ஒரு இடத்திற்குச் செல்ல ஆற்றைக் கடந்து பயணிக்க வேண்டி இருந்தது. படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து பயணித்தார் அப்பொழுது படிக்காத படகோட்டியிடம் இது தெரியுமா அது தெரியுமா என்று பெரிய பெரிய விஷயங்களைப் பற்றி கேட்டு அவன் அவற்றைப் பற்றி தெரியாது என்று கூறிய பின் அவன் வாழ்க்கையே வீண் என்று பலவிதங்களில் உணர்த்திக்கொண்டு வந்தார். திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால் படகில் ஓட்டை விழுந்தது படகோட்டி அவரைப் பார்த்துக் கேட்டான், ”ஐயா இத்தனை தெரிந்த உங்களுக்கு நீச்சல் தெரியுமா” என்று, அந்த மெத்த படித்தவருக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை முடிவில் படகோட்டி பிழைத்தார் அந்த அறிவு ஜீவி இறந்தார். இக்கதையின் மூலம் கல்வி,செல்வம் பட்டம் பதவி இவைகளைவிட வாழ்க்கைப் பாடம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நாம் நம் வாழ்க்கையில் எந்த விதமான விஷயங்களுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உணரச் செய்கிறார்.

    நம் வாழ்க்கையில் அனைத்துப் பாடங்களையும் அனுபவங்கள் மூலமே கற்றுக்கொள்வது என்றால் நம் வாழ்நாள் போதாது. ஆகையால் மற்றவர்களின் அனுபவங்கள் மூலம் சரியான படிப்பினையை பெற வழிசொல்கிறார். நம் பலவீனத்தைப் பற்றி அறிந்து கொண்டு அது நம் வாழ்கையே மூழ்கும் அளவிற்கு வளரவிடாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு புராண கதைகளின் உதாரணங்கள் மூலம் அறிவுறுத்துகிறார். சோதனைகளைக் கடக்காமல் சாதனைகள் இல்லை என்பதையும் சோதனைகளின் அளவை வைத்தே வெற்றியின் அளவு தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் வால்ட் டிஸ்னி போன்ற சாதனையாளர்களின் வாழ்கையை உதாரணப்படுத்தி புரிய வைத்துள்ளார். சரியான உழைப்பும் சலிப்பில்லாத மனமுமே உயர்ந்த வெற்றியை பெற்றுத்தருகிறது என்பதை நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி அம்மையார் வாழ்க்கையின் மூலம் அறியச்செய்கிறார்.

    கல்வியறிவுடன் சுயமாய் சிந்திக்கும் திறனும் இணையாவிட்டால் முழுமையான பயனில்லை என்பதை நினைவில் நிறுத்துகிறார். சில நேரங்களில் நம்மை அடுத்தவர்கள் குறைத்து மதிப்பிடுவதாக நாம் நினைக்கிறோம் ஆனால் உண்மை என்னவென்றால் நம்மை நாமே குறைவாக மதிப்பிடுவதுதான் என்பதை தெளிவுபடுத்துகிறார். அத்துடன் உடலில் குறைபாடுகளுடன் பிறந்த ஹெலன் கெல்லர் மற்றும் நிக் வூயிசிச் (Nick Vujicic) போன்றோரின் வாழ்க்கையில் புரிந்த சாதனைகளை பட்டியலிட்டு நமக்கு எந்த குறையும் இல்லை என்பதை உணரவைக்கிறார். (குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற மனதின் ஹம்மிங்!!! கேட்கிறது).

    மேலும் ஒவ்வொருவரும் தனித்தன்மையை உணர்தல், வாழ்க்கையை ரசித்து வாழ்தல் , தன்னம்பிக்கைக்கும் கர்வத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்தல், நிகழ்காலத்ததை அனுபவித்து வாழ்தல், காது கொடுத்து கேட்டல், மனம் விட்டுப் பேசுதல், மற்றவர்களுக்கு மதிப்பளித்தல், நிறைவான வாழ்க்கைக்கு வழிகாட்டுதல், அதிர்ஷ்டத்தின் ரகசியம், திட்டமிட்டு வாழ்தல், மகிழ்ச்சிக்கும், கிளர்ச்சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியச்செய்தல், திறமை உழைப்பு காலம் மூன்றையும் சரியாக பயன்படுத்துதல், கோபத்தை பயன்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் உதவி செய்தல் போன்ற நற்பண்புகளை எளிதான உதாரணங்கள் மூலம் கற்றுக்கொடுக்கிறார்.

    அதிருப்தி குறித்து அதிருப்தி அடையாமல் அந்த அதிருப்தியை திருப்திப் படுத்திய காரணத்தினாலே சித்தார்த்தன் கௌதமபுத்தராக ஆனதும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மகாத்மா ஆனதுதையும் கூறி அதிருப்தியில் “அர்த்தமுள்ள அதிருப்தி” எது என்பதை தெளிவுபடுத்துகிறார். ஆதலால் நம்மிடமுள்ள அர்த்தமுள்ள அதிருப்தியை அறிந்து பூர்த்தி செய்ய முயற்சி எடுக்க தூண்டுகோலாக உள்ளது.

    இந்த நூலில் உள்ள 32 பாடங்களில் ஒவ்வொன்றாக உணர்ந்து படிக்க படிக்க மனம் அமைதியும், தெளிவும் அடைவதையும், தன்னம்பிக்கை அதிகரிப்பதையும் உணர முடிகிறது. இறுதியாக வரும் “எல்லாம் ஒருநாள் முடியும்” என்ற தலைப்பில் உள்ள பாடத்தில் “புனித நூல்கள், புராணங்கள், வேதங்கள், ஞானிகளின் நூல்கள் ஆகியவற்றை படிப்பதன் மூலம் அறிந்துகொள்ளும் கருத்துக்களின் சாரத்தை” எளிதாக புரிந்துகொள்ளும் படியும், மனதின் ஆழத்திலும் பதியவைத்து விடுகிறார்.

    நம் வாழ்க்கையில் மாற்ற முடிந்ததை மாற்றும் சக்தியையும், மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும், இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டையும் இந்நூல் உணரச் செய்கிறது.

    நூலைப் படிக்கும் முன்னர்வரை
    வாழ்வைப் பார்த்தோம் பயமுடனே
    படித்தோம் இறையின் அருளுடனே
    வாழக் கற்றோம் மனநிறைவுடனே
    என்றும் தளரா மனமுடனே
    நித்தமும் நன்றி உணர்வுடனே
    வாழ்க்கையை வாழ்வோம் விழிப்புடனே.

    வாழக் கிடைத்த வாய்ப்பினிலே
    வாழ்ந்து படித்த பாடத்தினை
    வாழப் படைத்த ஆசிரியர்க்கும்
    தொடராய் வெளியிட்ட வல்லமைக்கும்
    நூலாய்க் கொடுத்த பிளாக் ஹோல்க்கும்
    வாழ்நாள் நன்றியை தெரிவிக்கிறோம்.

    வாழ்ந்து படிக்கும் பாடங்களை
    ஆழ்ந்து படித்து அறிந்திட்டு
    வாழப்போகும் வாழ்க்கைதனை
    மகிழ்ந்து வாழ வாழ்த்துகிறேன்.
    இறையிடம் அதையே பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன்,
    பா.சரவணக்குமார்

    Share
  • மழைவில் மனிதர்கள் – புத்தக மதிப்புரை

    மதிப்புரை – விஜயஸ்ரீ சிந்தாமணி

    முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் திரட்டிய நினைவுகளின் தொகுப்புக் கட்டுரைகளே “மழைவில் மனிதர்கள்”. ஆங்கிலத்துறைப் பேராசிரியரான இவர், தமிழ் இலக்கியங்களிலும் புலமை பெற்றவர். யாரும் எழுதலாம், எதைப் பற்றியும் எழுதலாம் என்றாலும் சுவைபட எழுதுவது சிலருக்கே கைவந்த கலை. அப்படி ரசனையாக எழுதும் திறன் பெற்றவர் ஜெயந்தஸ்ரீ. இவரது நினைவுக்குறிப்புகள் நம்மைக் கட்டிப்போடுகின்றன. மனிதர்களின் இயல்பைக் கண்ணாடிபோல் காட்டுகின்றன.மொழிகளில் இவர் பெற்றுள்ள புலமையும், கதாசிரியராகவும், இதழாசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் பெற்ற அனுபவமும் இவரது எழுத்துக்கு மெருகூட்டுகின்றன.

    Mazhaivil ManithargaL - Cover

    பெண் எழுத்தாளர்களில் நகைச்சுவையாக எழுதக் கூடியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தச் சிலரில் இன்றைய தினம் முதன்மையாக நிற்பவர் ஜெயந்தஸ்ரீ. இவரது பல திறமைகளில் மேலோங்கி நிற்பது நகைச்சுவையாக எழுதும் திறன். ‘உப்புமாஞ்சலி’, ‘ஆதலால், தூங்கச்செல்வீர்’, ‘யாண்டுபலவாக’, ‘மறக்கத்தெரிந்தமனமே’, ‘ஆஈன, மழைபொழிய’ என்று எதைப் பற்றி இவர் எழுதினாலும் அதைப் படிக்கையில் வயிறு புண்ணாகிறது, சிரித்துச் சிரித்து. நகைச்சுவை என்றால் பிறரை எள்ளி நகையாடுவதுதான் என்பது பலரது கொள்கை. ஆனால்ஜெயந்தஸ்ரீ தன்னுடைய ஓயாத தும்மல், ஞாபகமறதி, நகரை விட்டு நகர்ந்து வீடு கட்டி வாழ்வது, தலைச்சாயம் பூசுவது போன்ற தன் அனுபவங்களை சோகமும், ஹாஸ்யமும் ஒருங்கே இணைத்துச் சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறார். இவரது கைவண்ணத்தில் அவை வெகுளித்தனமும், ஹாஸ்யமும் நிரம்பி ரசனையாக மாறிவிடுகின்றன. முழங்கால் வலியில் கூட வசீகரம் காணும் ரசிகத்தன்மை இவரிடம் நிறைய உள்ளது. பிறர் மனத்தை நோகச் செய்யாமல் சுயஎள்ளல் செய்துகொள்ளும் ஒருவரை யாருக்குத் தான் பிடிக்காது?

    எழுத்தாளர்களுக்கு கூர்ந்து நோக்கும் திறன் தேவை. இந்த எழுத்தாளர் மனித இயல்புகளைக் கூர்ந்து நோக்கி படம்பிடித்துக் காட்டுகிறார். ‘வட்டத்தின் மூலையில்’ பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பயணி, ‘நிஜப்போலி’யில் பூனையை வரவேற்றுத் தன் வீட்டைக் காட்டும் பெண்மணி, திறமை இருந்தும் வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாத ‘மற்றும்பலர்’ என இவர்களை உதாரணம் காட்டலாம். நாய், பூனை, பூச்சி போன்ற ஐந்தறிவு பெற்ற ஜீவராசிகளின் தன்மைகளையும் ஆராய்ந்திருக்கிரார். முற்றம், பரண், கதவு, பேனா என்றுஅஃறிணை பொருள்களின் குணாதிசயங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை.

    Mazhaivil ManithargaL - Back Cover

    இவரது இருமொழிப் புலமையும் கவிதை நடையும் நம்மை வசீகரிக்கின்றன. மாக்பெத்வரிகளை மின்னல் கீற்றாக மொழிபெயர்க்கும் மாணவன், ‘பௌர்ணமி போலப் பால் ஊத்தறேன்’ என்னும் பால்காரன், ‘பூவு ரெண்டு பூக்கும்; நாவு ரெண்டு பேசுமா?’ என்று கேட்கும் பாட்டி என்று எளிய மனிதர்களின் வார்த்தைகளின் கவிதை ஜாலத்தில் மயங்கி, நம்மையும் மயங்க வைக்கிறார். ஆலிஸின் அதிசய உலகப் பூனையின் புன்சிரிப்பைப் போல ‘நிஜப்போலி’யில் வரும் பூனையின் புன்சிரிப்பும், பூனை சென்ற பின்னும் அந்தரத்தில் நிற்கிறது! ‘திறந்திடு செசெமே’யில் தீக்குளித்து, பூட்டிய உள்ளில் இறந்த அத்தை மட்டுமில்லாமல், டேவிட் காப்பர்பீல்ட், ஜேன் அயர், ஆலிவர் ட்விஸ்ட் போன்ற ஆங்கில இலக்கிய மாந்தர்கள், அலிபாபாவின் அண்ணன் காசிம் எல்லோரும் பூட்டிய கதவின் பின் என்ன மனநிலையை அடைந்திருப்பார்கள் என்ற பறந்துபட்ட சிந்தனை இலக்கிய சிந்தனையாளர் ஜெயந்தஸ்ரீக்கு உண்டாகிறது.

    ‘குறுந்தொகையில் பெண்குரல்’ என்பது அன்றைய பெண்ணின் குரல், இன்றைய பெண்ணின் ஆவேசப் பேச்சுக்கு முற்றிலும் மாறானது என்று இவர் கண்ட ஆராய்ச்சியின் முடிவாக உள்ளது. ‘பாரதியை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்; நிராகரிப்பதென்றால் முழுமையாக நிராகரியுங்கள்’ என்று சொல்லும் துணிச்சல் படைத்த அறிவாளி.

    இவரது எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் இவரது உரைநடையே ஓர் உல்லாச ஓடை போல், சின்னஞ்சிறுமி போல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒடுங்கிய வெண்கல உருளி நிலா, வீட்டிற்கு ஓட்டுக் குல்லாய் போன்ற உருவகங்களை வேறு யாரால் எழுத முடியும்? ‘இரண்டுகால் பூச்சியும், ஆறுகால்அவளும்’ தலைப்பே கவிதைத்தன்மை கொண்டிருக்கிறது அல்லவா?முற்றுப்புள்ளி அளவில் வளர்ந்த பூச்சிக்கும், அவளுக்கும் நடக்கும் போராட்டத்தில் அவள் பூச்சியாகவும், பூச்சி அவளாகவும் மாறிவிடுகின்றனர்.

    குருவிகள், முதியோர் இல்லங்களில் தொலைக்கப்பட்ட பெற்றோர்கள், குழந்தைத்தன்மையைத் தொலைத்த குழந்தைகள் அனைவரும் காணாமல் போய்விட்டனர் என்று துடிக்கிறார் நெஞ்சில் நேசத்தைச் சுமந்த ஜெயந்தஸ்ரீ. வேப்பமரம் வெட்டப்படுமுன், காக்கை மின் கம்பியில் அடிபட்டு இறந்து போகும் முன் அவைகளிடம் தனக்கு இருந்த பாசத்தை வெளியிடாமல் இருந்ததற்காக வருந்துகிறார் இந்தக் கருணையுள்ளம் கொண்ட தாய்.

    ஜெயந்தஸ்ரீயின் மொழிப்புலமை, நகைச்சுவை உணர்வு, உல்லாச உரைநடை, கவிதைநோக்கு, மனிதநேயம் யாவும் கலந்து, அறிவுக்கு விருந்தாக, வண்ணச்சித்திரமாக வானவில் போல் ஆனந்தத்தைத் தருகிறது ‘மழைவில் மனிதர்கள்’.

    நூல்:                                          மழைவில் மனிதர்கள்

    ஆசிரியர்:                              முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

    பதிப்பு:                                     திரிசக்திபப்ளிகேஷன்ஸ்

    முதல் பதிப்பு:                     ஏப்ரல் 2010

    மொத்தப் பக்கங்கள்:     240

    Share
  • மெளனத்தின் பாடல்

    இப்னு ஹம்துன்
    silenceimages

    சொற்கூச்சல் பொழுதுகளில்
    உன் மகத்தான பேரழகு வெளிப்படுகிறது.
    நேசத் தென்றல் வீசும் இதயங்களை
    வார்த்தைகளற்று வசீகரிக்கிறாய்.
    காலக் காற்று
    தலைமுடி கலைக்கையில்
    சற்றே சங்கடமாகவும் உணர்கிறாய்
    வார்த்தைகள் புதைந்த
    வெட்கத்தில் சம்மதம் கொள்கிறாய்
    முகிழ்க்கும் மோனப் பொழுதுகளில்
    ஒரு தவம் போல் நீள்கிறாய்
    வெளிப்படாத உன் குரலில் எப்போதும்
    ஒளி(ர்)ந்தபடியிருக்கிறது ஒரு கவிதை.

     

    அறியாமையின் நர்த்தனத்தை
    ஏளனப் பார்வையால் வீழ்த்தி
    மடிகறக்க எண்ணும் கரங்களுக்கு
    புறக்கணிப்பைப் பரிசளிக்கிறாய்.
    குறுமனப் பேய்கள் குதித்தாடுகையில்
    நீயே ஆயுதமாகி விரட்டி அடிக்கிறாய்.
    அவ்வப்போது நாற்றமெடுக்கும்
    ஆணவ நோய்க்கு மருந்துமாகி..
    பேசாப் பொருளின் ப்ரிய பொழுதுகளில்
    வாழ்வாங்கு வாழ்கிறாய்.

     

    பின்
    பேச்சுகள் வெடித்தெழும் ஒரு தருணம்
    ‘அமைதி’யாய் வாய்க்கும் ஒரு மரணம்.

    படத்துக்கு நன்றி

    http://forevernocturne.wordpress.com/volume-ii-issue-i-october-2011/silence/

    Share
  • விளம்பரங்களுக்கு விலை போகிறோம்

    நீச்சல்காரன்

    நாகரீகம் அடைந்து அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தியான பிறகே சுகாதாரம் என்கிற அறிவியல் அணுகுமுறை நமது வாழ்க்கை முறையுடன் வேரூன்ற தொடங்கியிருக்கும். அதைப்போல பணம் அதிகரிக்க அதிகரிக்க ஆடம்பரம் என்கிற மாயத் தேவையும் நம்முடன் சேர்ந்துவிட்டது. இதனால் அறிவியல் அணுகுமுறைகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு ஆடம்பர அணுகுமுறையே பிரதானமாக மாறிவருகிறது. எங்கு யார் சொன்னாலும் உடனே மாறிவிடுவோம், நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் வேண்டிய ஊட்டச்சத்து இல்லை அதனால் இந்தச் சத்து மாவைப் பாலில் கலக்கிக் குடியுங்கள் என்றதும், குடும்பமே விழுந்து விழுந்து குடிப்போம். அந்த மாவைக் குடிக்காவிட்டால் குடல்வெந்து குன்றிவிடுவோம் என நினைத்துக் கொள்கிறோம்.

    ஆல், வேம்பு, வேல் போன்ற மரக்குச்சி கொண்டும், நெற்சாம்பல், செம்மண் போன்ற தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் கொண்டும், பற்பொடிகள், மூலிகைத் தூள்கள் என்று பிற தயாரிப்பைக் கொண்டும் பல் விளக்கி வந்த நம்மிடம், சுகாதாரம் என்கிற போர்வையில் எத்தனைப் பொருட்கள் வந்துள்ளன என்று பார்ப்போம். தூத்பிரஸ் என்கிற புதுவகை பல்குச்சி வஸ்துவை இறக்குமதி செய்தோம். பின்னர் பாரம்பரிய முறைகளை முடக்கிவிட்டு, பற்பசையுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தோம். அதோடு நிற்கவில்லை, பற்பசைகளில் பல வகை வெளிவரத்தொடங்கின, வெண்மை நிறம் தருபவை, சுவாசப் புத்துணர்ச்சி தருபவை, கிருமிகளை நீக்குபவை, ஈறுகளைப் பலப்படுத்துபவை, உப்புவுள்ளவை என வே​ளைக்கு ஒன்றாக வந்து கொண்டே உள்ளன. பற்பசை இப்படியிருக்க பல்குச்சியும் தன் பங்கிற்கு, ஃபிலக்சிபில், ஜிக்ஜாக், 360டிகிடி, மருத்துவர்கள் பரிந்துரை எனப் பலவகைகளில் பரிணாமம் அடைந்துவிட்டது. இதற்கிடையில் நாக்குத் துடைப்பான், வாய் கழுவுநீர் என்று புதிய பரம்பரைகளும் வந்துவிட்டன. இன்னும் கொஞ்ச நாளில் ஒவ்வொரு பல்லிற்கும் ஒவ்வொரு பற்குச்சியும், பற்பசையும் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒவ்வொரு விளம்பரமும் சில ஆயிரம் மக்களின் மனதில் அறிவீனத்தை அறிமுகப்படுத்துகிறது. தங்களுக்குள்ளேயே தான் பயன்படுத்தும் பொருள் சரியில்லையோ என எண்ண வைக்கிறது. எத்தனை நவீனம் வந்தாலும் வேப்பங்குச்சிக்கு இணையாக பல்லைப் பலப்படுத்துமா? விரல்கொண்டு தேய்ப்பதைவிட எதுவும் ஈறுகளுக்கு வலுசேர்க்குமா?

    இங்கே சுட்டிக் காட்ட விரும்புவது அறிவியல் வளர்ச்சியைப் பகடிசெய்வதல்ல; மாறாக நாம் விலை போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே. நமக்குத் தேவையிருக்காத போதும் விற்கப்படுகிறதே என்று வாங்குவோர் அதிகரித்துவிட்டனர். தற்போது பயன்படுத்திவரும் பொருள் திருப்திகரமாகயிருந்தாலும், தனக்குப் பிடித்த ஒரு நடிகர் ஒரு பற்பசை விளம்பரத்தில் சிரித்தார் என்பதற்காகவே அந்தப் புதுப் பொருளை வாங்குவோர் எத்தனைப் பேர்? ஷாம்பூ எனப்படும் சிகைகழுவியை எடுத்துக் கொள்ளுங்களேன், பொடுகு போக்குபவை, கறுப்பு நிரம்தருபவை, நீளமான முடிவளர்ப்பவை, சிக்கு நீக்குபவை, பட்டுபோன்ற மென்மைதருபவை என வகை வகையாக வந்துவிட்டன. அதுவரை சிகைக்காய் போட்டு வளர்ந்த தலைகள் கூட சிகைகழுவியின் மீது ஆர்வம் கொள்ளப்பட்டன. ஆனால் அப்படியென்ன சிகைக்காய் செய்யாததை இந்தத் திரவங்கள் செய்துவிட்டன என்றால் ஒன்றுமில்லை. ஆனால் இத்தகைய இரசாயனச் சிகைகழுவிகளால் முடியும், தோலும் கெட்டதுதான் மிச்சம். எவை வேண்டுமோ பயன்படுத்துங்கள் ஆனால் அவற்றின் தேவை இருக்கிறதா என யோசித்துப் பார்த்துப் பயன்படுத்துங்கள்.

    மற்றும் ஒரு எளிமையான நுகர்பொருள் கைப்பேசி. ஒரு குழந்தை பிறந்து விவரம் தெரிகிறதோ இல்லையோ, கைப்பேசியை இயக்கத் தெரிந்திருக்கிறது, தனக்கு என்று ஒரு கைப்பேசியை வாங்கிக் கொள்ளவும் முனைகிறது. அப்படி வாங்கிய கைப்பேசியை எத்தனை நாள் பயன்படும் என்றால் அடுத்த பிறந்த நாள் வரும்வரை மட்டுமே. இது குழந்தையின் பிறந்த நாள் அல்ல புதியதாகச் சந்தைக்கு வரும் கைப்பேசியின் பிறந்த நாள் ஆகும். இதைக் குழந்தைகள் மட்டும் செய்யவில்லை ஏறக்குறைய பலரும் புது ரகம் வந்தவுடன் தனது பழைய பொருட்களை வீசிவிடுகிறார்கள். தனக்குத் தேவையே இல்லாவிட்டாலும் அந்தப் புதிய பொருளைப் பயன்படுத்திவிடவே ஆசைப்படுகிறார்கள். அந்தப் புது ரகம் எடை குறைவாக இருக்கிறது அல்லது சத்தம் துல்லியமாக இருக்கிறது என்று வலுவற்ற காரணங்களுக்காக விலை கொடுத்து வாங்குகிறார்கள். உண்மையில் அவர்களை விளம்பரங்கள் வாங்கிவிட்டன.

    சிகப்பழகு பெற்று உலகை உங்கள் பக்கம் திருப்புங்கள் என்று கூவி முகக்களிம்புகள் விளம்பரம் செய்யப்பட்டால், ஏதோ அந்தக் களிம்புதான் சொத்து என்கிற ரீதியில் காட்டுவதை எல்லாம் முகத்தில் பூசிக் கொள்கிறோம், பின்னர் இளவயதிலேயே தோல் சுருக்கங்களைப் பெற்று வருத்தங்கள் கொள்கிறோம். சற்று யோசித்துப் பார்த்தால் இதைப் போன்றவொரு பொருள் விளம்பரமே இல்லாமல் அண்ணாச்சிக் கடைகளில் இருக்கலாம், அல்லது அம்மா கைப்பக்குவத்தில் கடலை மாவும் பாசிபருப்பு மாவும் போதுமானதாக இருக்கலாம். இதெல்லாம் பத்தாது அதுதான் வேண்டும் என்றால் குறைந்தது ஒரு பொருளை மட்டுமாவது பயன்படுத்துங்கள். அடிக்கடி தோல் சார்ந்த அழகு சாதனப் பொருட்களை மாற்றிவதும் ஆபத்து என்பதை மனதில் கொள்க.

    போன தலைமுறையில் நமக்கெல்லாம் கம்பங்கஞ்சியும், கேப்பக்கூழும், கைக்குத்தல் அரிசியும் தான் பிரதான உணவாகயிருந்திருக்கும். ஆனால் ஆடம்பரம், கெளரவம்,என்கிற பல காரணங்களுக்காகப் படிப்படியாக பாலிஷ் போட்ட அரிசி, இன்ஸ்டன்ட் மாவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என கிடைப்பதையெல்லாம் உண்டு பல நோய்கள் கிடைக்கப்பெற்றுள்ளோம். கடைசியில் பழங்கஞ்சி உண்டு வாழ மருத்துவரொருவர் பரிந்துரைப்பதுடன் முடிகிறது ஒரு தலைமுறை. இந்த அறிவுரையை முன்னரே கடைபிடித்திருந்தால் எவ்வளவு ஆரோக்கியம்?

    ஒரு சாராரின் வாதம் என்னவென்றால் தொழிற்நுட்பம் வளர்கிறது அதனால் நவீனப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதாகும். அதைத்தான் கட்டுரையும் சொல்கிறது அந்தத் தொழிற்நுட்பம் என்ன? அது நமக்குத் தேவையா? பின்விளைவுகள் வருமா? என ஆராய்ந்து பிறகு வாங்குங்கள் என்கிறது. விளம்பரங்களைக் கண்டு விலை போகாதீர்கள் என்கிறது.

    மற்றொரு சாராரின் வாதம் என்னவென்றால் இப்படி நுகர்வோர்கள் பொருட்களை அதிகம் வாங்கினால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதாகும். ஆனால் இப்படி தேவையில்லாதவற்றை வாங்குவதற்கு ஏன் பணப்புழக்கம் அதிகரித்து பணவீக்கத்தைக் குறைக்கவேண்டும்? பணவீக்கமாக இருந்துவிட்டுப் போகட்டுமே, குறைந்தது அந்தப் பணம் வேறு எங்காவது முதலீடாகவாவது மாறுமே. நமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மக்களின் சேமிப்பே. நமது சேமிப்பின் மூலமே பல முக்கியப் பணிகளுக்கு முதலீடு கிடைக்கிறது. இத்தகைய நுகர்வோர் கலாச்சாரத்தால் பணச் சேமிப்பும் பாதிக்கும்.

    எது தேவை எது தேவையில்லை என நாம் செய்யும் தொழிலில் தீர்க்கமாக முடிவெடுக்கும் நாம் செலவளிக்கும் பணத்தில் தீர்க்கமாக ஆராய்வதில்லை. சேமிப்பு என்பது உற்பத்திக்குச் சமம் என்பதையும் மனதில் கொண்டு விளம்பரங்களுக்கு மயங்கி தேவையில்லாதவொன்றை தேடிப்போகாமல் இருக்கலாமே.

    Share
  • பட்டியும் விக்ரமாதித்தனும் ஜெயமோகனும்!

    வில்லவன் கோதை

    ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?

    (நவம்பர் 4 – 2013 தி இந்து நாளிதழில்ஜெயமோகன் எழுப்பிய வினாவின் எதிரொலி)

    இந்த ஜெயமோகனின் அபத்தமான ஆலோசனைகளை தமிழ் இந்து பத்திரிக்கை  பிரசுரித்து  தன்னிடம் திறன் மிக்க ஆசிரியர் குழுவொன்று   தற்போதைக்கு இல்லை என்ற தகவலை பறையடித்து சொல்லியிருக்கவேண்டாம்.

    அவர் எழுப்பிய ஆலோசனை விவாதத்துக்குறிய விஷயமே  அல்ல.  அடிப்படையிலேயே  உதறத்தகுந்தவை.

    எப்போதுமே படைப்பாளிகளைக் காட்டிலும் பதிப்பாளர்கள் அடிப்படையில் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களைத்தாண்டி எந்த அபத்தங்களும் இப்படி அச்சுக்கு வந்ததில்லை.

    முன்பெல்லாம் பத்திரிக்கை ஆசிரியர்களும் பதிப்பாளர்களும் பிரசுரிக்கப்பெறும் விஷயங்களில் எப்போதும் தரத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை. ஒன்றிரெண்டு களவாடப்பட்ட படைப்புகள் கூட அன்றைக்கெல்லாம் அத்தனை எளிதாக அச்சுக்கு வந்துவிட முடியாது.

    இன்று நி​லைமை அப்படியில்லை.

    பத்துப் பதினைந்து நூல்கள் எழுதி பதிப்பித்தவர்கள் அனுப்புகிற சரக்குகளை பிரித்துப் பார்க்க   அலுப்புற்று நேராக அச்சுக்கு அனுப்புகிற பத்திரிக்கைகளும்  இருக்கிறது. ஒரு சில நூல்கள் எழுதியதாலேயே அவர்கள் அந்த தகுதியை பெற்றுவிடுகிறார்கள்.

    பிரபலமான எழுத்தாளரின் லாண்டரி கடை கணக்குகள்கூட  அச்சுக்குப்போன கதையை சுஜாதா சொல்லி கேட்டிருக்கலாம்.

    இந்த யோசனைகளை உதிர்த்த ஜெயமோகன்  –

    நிரம்ப உழைப்பவராகவும்  எதையாவது மிகுதியாக வாசிப்பவராகவும் எத்தகைய கருத்துக்களுக்கும் உடனடியாக பதிலளிப்பவராகவும் நட்புக்கினியவராகவும்  நான்  அறிந்திருக்கிறேன்.

    வளைந்து நெளிந்து செல்லும் அருவியைப்போன்ற வேறுபட்ட நடையில் எம் தமிழை கையாளுவதை கண்டிருக்கிறேன்.

    இன்றைக்கு  எழுதுகிற அத்தனை நவீன எழுத்தாளர்களின் ஆரம்பப் பாடசாலையாயிருந்த திராவிட இயக்கங்களை அவர்களைப்போலவே சபிப்பவராகவும்

    சவமேடைகளில்கூட சம்மந்தப்பட்டவரிடம் காணநேர்ந்த குற்றங்குறைகளை கருத்துத் தளங்களில் நின்று துணிவோடு பேசுபவராகவும்  பார்த்திருக்கிறேன்.

    அண்டைமாநிலத்தின் ஓரத்தில் அவர் வாழுகின்ற வாழ்க்கை அவருக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த இரட்டை குடியுரிமை அவர் பேச்சிலும் எழுத்திலும் ஊடுருவிக் கிடப்பது எனக்குத் தெரிகிறது..

    இவருடைய  எழுத்தின் வீச்சுக்கு  நான் நேசிக்கிற தந்தை பெரியாரோ பேரறிஞர் அண்ணாவோ  இன்னும் தேசபிதா காந்தியோ விலக்கில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.

    ஆனால் –

    மேற்கிளையில் அமர்ந்து அடிக்கிளையைக்கூட அவரால் வெட்ட முடியும் என்பதை  இப்போதுதான் பார்க்கிறேன்.

    இப்படியொரு அபத்தமான ஆலோசனைகள் பாரம்பரியமிக்க இந்துவின் பார்வையில் எப்படி நழுவிற்று.

    நினைத்தாலே நன்றாக சிரிக்கலாம் என்று கூடத் தோன்றுகிறது.

    ஒருவர் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ் புத்தகங்களின் படைப்பாளி.

    இன்னொன்று இன்றைய தமிழ் வாசகர்களின் பரவலான எதிர்பார்ப்பைப் பெற்ற பாரம்பரியம்மிக்க தி இந்து  நிறுவனம்.

    இருவருக்குமே ஒருவகையில் செலவுக்கு கைகொடுக்கும் சமாச்சாரம். சோறுபோடும் மொழி என்று சொல்லமாட்டேன்.

    இப்படியொரு கூற்றைக்கூட  விவாதிக்கவேண்டிய கருத்தென்பது எத்தனை அபத்தம்.

    மொழி உயிரென்றால் எழுத்துரு உடலல்லவா. எழுத்துரு இருந்தால்தானே இலக்கியமும் இலக்கணமும்  வரும். இலக்கணமும் இலக்கியமும் இருந்தால்தானே மொழி தொடர்ந்து  வாழும்.

    துருக்கி மொழியும் மலயா மொழியும்  முறையான எழுத்துக்கள் அற்றபோது  கூடுவிட்டு கூடு பாய வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயிற்று.   துருக்கி மொழியும் மலாய் மொழியும்  எடுத்த நிலைப்பாடு தமிழுக்கு தேவையற்து. உறுப்புக்கள் இல்லாதவனுக்கும்  உறுப்புக்களை இழந்தவனுக்கும் தாமே மாற்று உறுப்புக்கள் பொருத்தப்படுகிறது.

    ஆங்கிலத்தில் இப்போது இருக்கிற எழுத்துருக்கள் ஆங்கிலத்துக்கே சொந்தமற்றபோது அதற்கு மாறச்சொல்வது எத்தனை பேதமைதானே.

    எம்மொழியும் தோன்றாத காலத்தே இலக்கிய இலக்கணங்களோடு வாழ்ந்து ஒவ்வொரு கால கட்டங்களிலும்  தன்னைத் தானே செதுக்கிக்கொண்டு இன்றும் சீரிளமையோடு நிற்கின்ற செம்மொழியல்லவா எம் தமிழ்.

    எம் தமிழோடு கலக்கும் தைரியம் இன்றுவரை வேறெந்த மொழிக்கும் ஏற்பட்டதில்லை.`

    2000 ஆண்டுகளுக்கு மேலாக ஏறக்குறைய சீரான எழுத்துருக்களுடன் எம்மொழியின் கலப்பின்றி  தனித்து நிற்கும் எம்மொழியா கூடுவிட்டு கூடு பாயவேண்டும்?

    ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து வெளியில் காணப்பட்ட கல்வெட்டுக்கள் சொன்னதென்ன.,

    அசோகர் காலத்தில் கண்டெடுக்கப்பெற்ற  பிராமி கல்வெட்டுகள்

    அதைத்  தொடர்ந்த பௌத்தர்களின்   தாக்கம்  அத்தனையும் கடந்துதானே எம்தமிழ் வந்திருக்கிறது.

    பிராமி முறையில் காணப்பட்ட எழுத்துருக்கள் தமிழ் ஒலிகளை ஏற்க இயலாமற் போனபோது பிறந்ததுதானே தமிழ் பிராமி.

    அடுத்து

    கல்வெட்டுப்பதிவுகளைத்தாண்டி ஓலைகளில் எழுதப் பட்டபோது தமிழ் வட்டெழுத்து முறைக்கு மாறுகிறது.

    ஏறக்குறைய பதினோராம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து முறை முற்றிலுமாக ஒதுக்கப்பெற்று பல்லவர்களால் மேலும் சீரமைக்கப் பெறுகிறது. பல்லவர் காலத்திலேயே இன்றைய தமிழின் நெருங்கிய தோற்றத்தை எம்மொழி பெற்றுவிட்டது எம்மொழிக்கும் கிட்டாத பேரங்கீகாரம் அல்லவா?

    பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கிறித்துவமத பிரச்சாரத்துக்கு வந்த பெஸ்கி என்ற வீரமாமுனிவர்  அன்னை தமிழுக்கு பொட்டிட்டு (எழுத்துருவுக்கு புள்ளி சேர்த்து  இலக்கணங்கள் தந்து) அணிகலன் படைத்து அணி சேர்க்கிறார்.

    உலகிலேயே எம்மொழிக்குமில்லாத வரலாறு கொண்ட, எம்மொழியிலும் காணக்கிடைக்காத இலக்கணங்களும் இலக்கியங்களும் நிறைந்த தாய்த் தமிழை கற்பதற்கா எம்மக்கள் அல்லலுறுகிறார்கள்?

    இன்றைய குழந்தைகளுக்கு இவை ஒரு பொருட்டே அல்ல. அவர்களின்  விரிந்த  பார்வைக்கு விருந்தளிக்க நவீன யுகத்தின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன. அதனால் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அறிந்து கொள்கிற திறனும் கையாளுகிற நேர்த்தியும் மிகுதியாக நம் குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள்.

    அவர் சொல்லுவது போல இரண்டு எழுத்துருக்களைக் கற்க அவர்களுக்கு தேவையான இரண்டு மூன்று வருடங்கள்  அவர்கள் கல்வி வாழ்க்கையில் மிக மிகக் குறைவானவையே. நெடுங்காலம் மும்மொழியை கற்ற அனுபவமும் எம் குழந்தைகளுக்குண்டு. இன்றும் வேற்றுமாநிலங்கள் பலவற்றில் மூன்று மொழிக்கு குறைவின்றிதானே கல்வி கற்பிக்கப்படுகிறது.

    மிருகங்களையும் பறவைகளையும் வித்தை என்ற இலக்குக்காக பழக்கியபின்  அவைகள் நிகழ்த்தும் சாகசங்கள் வியக்கத்தக்கவை. பிள்ளைப்பிராயத்தில் பயிற்றுவைத்தால்  குழந்தைகளும்  அப்படித்தான்.

    கற்பதில் சிரமமும் கையாளுவதில் சங்கடங்களும் ஏற்படும்போது மொழியை மேலும் மேலும் சீரமைப்பது காலத்தின் கட்டாயம். அதைத்தான் இதுவரை கண்டிருக்கிறோம். காலப்போக்கில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் அது தவிர்க்க முடியாதவைதான். ஆனால் இலக்கு ஒன்றாகத்தான் இருக்கும்.

    அப்படி வளர்ந்து வளர்ந்துதான் தமிழ்மொழி இப்போது கணினிக்குள்ளே நுழைந்திருக்கிறது.

    பதிமூன்றாண்டுகாலம் ஆங்கிலத்திலேயே தமிழை தான் தட்டச்சு செய்த சாகசத்தை சொல்லும் ஜெயமோகன் ஒன்றை கவனிக்க வேண்டும். அது கணினிக்குள் தமிழ் கால் வைத்த காலம்.

    தட்டச்சே அறியாத நான் இன்று அவர் பேசும் வேகத்தில் தமிழிலேயே தட்டச்சு செய்கிறேன். இதைக்கற்க எனக்கு ஒருநாள்கூட தேவைப்பட்டிருக்கவில்லை.

    ஒருவேளை ஜெயமோகன் கூற்று நிகழ்ந்து விட்டால் குழந்தைகள் அவர் சொல்வதுபோல் வேகமாக வாசிக்கக்கூடும். ஆனால் அவருடைய படைப்புகளையோ  எம் கவிஞர்கள்  உணர்வுகளையோ அவை பிரதிபலிக்கக்கூடும் என்று தோன்றவில்லை. இப்போதே இயல்பாக மொழிமாற்றம் செய்யப்பெற்ற எத்தனையோ இனிய தமிழ் நூல்கள் உயிரின்றி உடலோடு உலாவுவது வெளிப்படை.

    என்னதான் z h போட்டு எழுதினாலும் ழகரத்தை உச்சரித்தறியாதோர் பட்டியலில் நம் இனமும் சேரும்.

    பெரியாரை வெறுப்பவர்கள்கூட மொழிக்கெதிராக முணுமுணுக்கும்போது அவரை சேர்க்கத் தவறுவதில்லை.

    அவர் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்வில் முன்னுரிமை கொடுத்தது உயர்வு தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் படைப்பதற்கே. அவருக்கு மொழி அடுத்தபட்சமாகவே இருந்திருக்கிறது.

    தமிழில் காணப்படுகிற எழுத்துகளின் எண்ணிக்கைய குறைத்து  எம்குழந்தைகளின் சிரமத்தை குறைக்க வேண்டுமென பெரியார் பேசியது உண்மைதான்.

    அதை வலியுறுத்தவே  மொழியின் உடலையே மாற்றிய துருக்கி கமால் பாட்சாவை அவர்தான் நினைவூட்டினார்.

    எழுத்துருவை இழக்கும்போது தமிழின் கதி  –

    எண்ணிப் பார்க்கவே  ஏதோ விபரீதம் புலப்படுகிறது.

    கூடுவிட்டு கூடு பாய்ந்த பட்டி விக்ரமாதித்தன்  கதைகளை படித்தவர்கள் ஜெயமோகனின்  கூடுவிட்டு கூடு பாயும் யோசனைகளில் இருக்கும் விபரீதத்தை  உணரக்கூடும்.

    இந்த ஆலோசனைகள்  அவர்  குறிப்பிட்டதைப்போல அபத்தமாகவும் அதீதமாகவும்தான்  இருக்கிறது. மேலும் யோசிக்க யோசிக்க  அது  நிரூபணமும் ஆகக்கூடும்.

    எல்லா மாற்றங்களும் முதலில் அபத்தமாகத்தான் தோன்றும் என்பதில் நம்பிக்கை கொண்ட ஜெயமோகன் தமிழும் ஆங்கிலத்தை மீறி சகல துறைகளிலும் ஒளிரும் என்பதை  ஏன் ஏற்கக்கூடாது.

    கிளியின் உடலில் கூடு பாய்ந்த விக்ரமாதித்தன்  கிளியாக வாழலாமே தவிர விக்ரமாதித்தனாக முடியாது!

    Share
  • வல்லமைக்குத் தொழில்நுட்ப உதவியாளர் தேவை

    அன்பு நண்பர்களே,

    வல்லமையின் தள நிர்வாகி ஆமாச்சுவின் வழிகாட்டுதலில் வல்லமை மின்னிதழின் வடிவமைப்பு & தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ள, உதவியாளர் தேவை. கல்லூரியில் இளங்கலை அறிவியல், இளங்கலை தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயிலும் மாணவர்கள், இதற்குப் பொருந்தக்கூடும். ஆர்வமும் திறனும் உள்ள இதர அன்பர்களும் முன்வரலாம். வாரத்துக்குச் சில மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும்.

    இதற்கு ஊதியம் கிடையாது. தன்னார்வப் பணியே. ஆயினும், கல்லூரி மாணவர்கள், தங்கள் மேற்கொள்ளும் (புராஜக்ட்) திட்டமாக, வல்லமைப் பணியை ஏற்கலாம். அவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளோர், தங்களைப் பற்றிய விவரங்களை amachu@amachu.me என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    சிந்தனை, செயல், முன்னேற்றம்!

    நன்றி

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • திருக்குறள், தொல்காப்பியம், சங்கத் தமிழ் – தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்

    தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

    செய்தி வெளியீடு எண்:538  | நாள் : 07.10.2013

    செய்தி வெளியீடு

    திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம்

    இயல், இசை, நாடகம் என்ற மூன்று கலைகளையும் உள்ளடக்கிய இலக்கிய வளம் வாய்ந்த மொழி தமிழ் மொழியாகும். இத்தகைய தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் கொண்டு சென்ற நூல், உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளாகும். தனி மனித ஒழுக்கம், குடும்ப அமைதி, அரசாட்சியின் மேன்மை, சமூக வாழ்வியல் போன்றவை குறித்த நல்ல அறிவுரைகள் இன்றைய உலக சமுதாயத்தின் உயர்வுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.

    இத்தகைய சிறப்பு மிக்க நூலாகிய திருக்குறளில் உள்ள அரிய வாழ்வியல் கருத்துக்களை எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் காட்சிப்படுத்துவது மிகவும் அவசியமாகும். எனவே சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறந்த உட்கட்டமைப்புடன் கூடிய திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தினை அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

    திருக்குறள் ஓவியக் கூடத்தில், திருக்குறளை விளக்கும் ஓவியங்களைக் காட்சிப்படுத்தல், ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ள திருக்குறள் நூல்களை சேகரித்துக் காட்சிப்படுத்துதல் மற்றும் உரைநடை வடிவில் உள்ள திருக்குறள் நூல்களை சேகரித்துக் காட்சிப்படுத்துதல், திருக்குறள் தொடர்பான படக்காட்சிகள், குறும்படங்கள் மற்றும் உயிரூட்டுப் படங்கள் சேகரித்துக் காண்பித்தல், அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்டு திருக்குறள் கூறும் அறநெறிக் கருத்துகளை நிகழ்கால ஓவியங்களாக தீட்டப்படுதல், பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் நூல்களை சேகரித்துக் காட்சிப்படுத்துதல் மற்றும் வட்டெழுத்து மற்றும் கல்லெழுத்தில் உள்ள திருக்குறளைச் சேகரித்துக் காட்சிப்படுத்துதல் ஆகியன செயல்படுத்தப்படும்.

    உலகத் தமிழ் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம்

    உலகமெல்லாம் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பண்பாட்டு வேர்களை ஒருங்கிணைக்கவும், அவர்கள் நேரில் கண்டு கேட்டு இன்புறுவதற்கும், இலக்கியம் சார்ந்த பண்பாட்டு பயணம் மேற்கொள்கையில் அனைத்துத் தகவல்களும் ஒருங்கே கிடைக்கவும், ஒரு மையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பான கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய உலகத் தமிழ் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் ஒன்றினை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

    தொல்காப்பியர் ஆய்வு இருக்கை

    தமிழ் மொழியின் சிறப்பையும், இலக்கண வளத்தையும் வெளி உலகிற்கு உணர்த்திய ஒரு அரிய நூல் தொல்காப்பியமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியத்திற்கு பல அறிஞர்கள் விளக்க உரைகள் எழுதியுள்ளனர். ஆனால் இவ்வுரைகள் அனைத்தும் ஒருங்கே கிடைக்காமல் அங்காங்கே சிதறி உள்ளது. தொல்காப்பியத்திற்காக வெளிவந்துள்ள அனைத்து உரைகளையும் கண்டெடுத்து, அவற்றை முறைப்படுத்துதல், தொல்காப்பியத்தில் இதுவரை வந்துள்ள மொழிபெயர்ப்புகளை ஒருங்கிணைத்து முறைப்படுத்துதல், இந்நூலை பிற மொழி இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தல், தொல்காப்பியம் விளம்பும் வாழ்வியல் இலக்கணங்களை இன்றைய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தல், மாணவர்கள் தொல்காப்பியம் நூலைக் கற்க ஊக்கப்படுத்தல் போன்ற எண்ணற்ற பணிகளை ஆற்றுவதற்காகத் தொல்காப்பியர் பெயரால் ஒரு தனி இருக்கை ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    எனவே தமிழர் தம் வாழ்க்கை வளத்தை எடுத்துக் கூறும் தொல்காப்பியத்தினை நினைவு கூறும் வகையில், தொல்காப்பியர் ஆய்விருக்கை ஒன்றினை உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கென 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

    தொல்காப்பியர் ஆய்வு இருக்கையின் வாயிலாக 6 திங்களுக்கு ஒரு முறை இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம், ஓராண்டுக்கு ஒரு முறை பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்படும். மேலும் ஆண்டுக்கொரு முறை தொல்காப்பிய இலக்கணம் குறித்து மாணவர்களுக்கு 10 நாட்கள் புத்தொளிப் பயிற்சி அளிக்கப்படும்.

    சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்

    பண்டைத் தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் இன்றைய தலைமுறையினர் கண்டு பெருமைக் கொள்ளும் வகையில், சங்கத் தமிழ்ப் பாடல்களை ஓவியங்களாகவும், காணொலிக் காட்சிகளாகவும் அசைவுப் படங்களாகவும், எழிலார்ந்த சிற்பங்களாகவும் காட்சிப்படுத்தும் வகையில் நிரந்தர சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் ஒன்று 75 லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் அரசு அருங்காட்சியகத்திற்கு எதிரில் 58 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் அமைக்கப்படும். இக்கூடத்தில் முதற்கட்டமாக பண்டைத் தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் காட்சிப்படுத்தும் விதமாக, அருங்காட்சியக முகப்புச் சுவர்களில் ஓவியங்கள், காட்சிக் கூடத்திற்குள் ஓவியங்கள், புடைப்புச் சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகியவை அமைக்கப்படும்.

    சங்கத் தமிழ்க் காட்சிக் கூடத்தில் எந்தெந்த இலக்கியக் காட்சிகளை ஓவியங்களாகவும், புடைப்பு சிற்பங்களாகவும், சிற்பக் காட்சிகளாகவும், புகைப்படங்களாகவும் அமைக்கலாம் என்பதை தெரிவு செய்திடவும், உருவாக்கியதை ஏற்பளிக்கவும் அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அரசின் இந்த நடவடிக்கைள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழர் பண்பாட்டினை உலகறியச் செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share
  • தர்மாம்பாள் குறம்

    ஆசிரியர்: முனைவர் ராம. கெளசல்யா

    சமுதாயத்தின் சிந்தனைகளும் கொள்கைகளும் காலத்திற்கேற்ப மாறுகின்றன. இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி என்பர். ஆ க, சமுதாயச் சிந்தனை மாற்றங்களுக்கு ஏற்ப மொழியும் காலந்தோறும் புதிய வடிவங்களை அளிக்கின்றது. அவ்வகையில், அரசர்களை யும் வள்ளல்களையும் மையப்படுத்தி நின்ற தமிழ் இலக்கியம் சாதாரண மக்களையும் மையப்படுத்தி எழத்தொடங்கியது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் குறம், குளுவ நாடகம், குறவஞ்சி, நொண்டி நாடகம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்கள் தமிழிலக்கிய உலகில் தோன்றிப் பிரபலமாயின.

    தமிழ் மரபில் குறி பார்த்தல் சிறப்பிடம் பெறுகிறது. தலைவியிடம் வேறுபாடு காணப்பட, நற்றாயும், செவிலித்தாயும் கட்டு வைத்தும், கழங்கு வைத்தும் வெறியாட்டின் வாயிலாகக் குறி பார்த்து வேறுபாட்டிற்கான காரணத்தை அறிய முற்படுகின்றனர்.

    “கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
    ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்” தொல்.கள.நூ.25: 3-4

    குறுந்தொகை கட்டுவிச்சியை அகவன் மகள் என்கிறது. குறி பார்ப்பவள் கட்டுவிச்சி எனப்பட்டாள்.

    “அகவன் மகளே அகவன் மகளே
    மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
    அகவன் மகளே பாடுக பாட்டே” குறுந். பா. 23

    மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சிநில மகளிர் குற மகளிர் எனப்பட்டனர். பன்னிரு பாட்டியல், குறத்திப் பாட்டு என்றதொரு இலக்கிய வகைக்கு இலக்கணம் தருகிறது.

    “இறப்பு நிகழ்வு எதிர் என்னும் முக்காலமும்
    திறப்பட உரைப்பது குறத்திப் பாட்டே”

    “குறத்திப் பாட்டும் அதனோடற்றே”

    பத்துப் பாக்களால் அமையும் இக்குறத்திப் பாட்டிற்கு ஒரு சான்றுகூட இன்று கிடைக்கவில்லை.

    கலம்பகத்து உறுப்பாகக் குறம் என்ற ஒன்று காணப்படுகிறது. குறத்தி குறி கூறுதல் தொடர்பான குறம், குறவஞ்சிகளில் இடம்பெறும் நிகழ்வுகளும் செயல்களும் இதில் உள்ளன.

    குறவனை மையப்படுத்திக் குளுவ நாடகம் என்ற ஒன்றும் எழுந்தது. குறத்திப் பாட்டும் கலம்பகத்து உறுப்பாகிய குறமும் சேர்ந்து குறம் என்ற வடிவத்தையும், குறவன் குறித்த செய்திகளைத் தரும் குளுவ நாடகமும் குறமும் சேர்ந்து குறவஞ்சி என்ற வடிவத்தையும் அடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். குளுவ நாடகம் காலத்தில் பிற்பட்டது என்று கருதுவாரும் உண்டு. இவ்வகையில் மீனாட்சியம்மை குறம் முதல் குறமாகவும், கும்பேசர் குறவஞ்சி முதல் குறவஞ்சியாகவும் கருதப்படுகிறது.

    ஏறத்தாழ பதினெட்டு குறங்களின் பெயர்கள் கிடைக்கின்றன. வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி, குறவஞ்சி என்று குறிக்கப்பட்டாலும் குறமே ஆகும். கிடைக்கும் குறங்களுள் தர்மாம்பாள் குறம் பல்வகைச் சிறப்புகளையும், தனித்த கூறுகளையும் கொண்டதாக உள்ளது.

    தர்மாம்பாள் குறம் வி.எஸ்.வாலாம்பாள் என்பவரால் இயற்றப்பட்டிருக்கிறது. இக்குறம் 1915இல் முதல் பதிப்பும், 1938இல் இரண்டாம் பதிப்பும், 1947இல் மூன்றாம் பதிப்புமாக மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இதிலிருந்தே இக்குறம் பரவலாகப் பாடப்பட்டு வழக்கிலிருந்ததை உணர முடிகிறது.

    தர்மாம்பிகையே குறத்தியாக வந்து காவேரி அம்மனுக்குக் கடலரசனை அடைய அருளியதாக இக்குறம் அமைந்துள்ளது. கிளைக் கதையாக பஞ்சநதீசர் – தர்மாம்பிகை இணையும் கதையும் காணப்படுகிறது.

    இக்குறம் கண்ணிகளாக அமைந்துள்ளது. நிகழ்வுகள் உட்தலைப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. திருவையாற்றுப் பகுதியில் இக்குறம் பெண்களால் தங்கள் நாள் வழிபாட்டில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களோடு பாடப்படுவதை இக்கட்டுரையாளர் கேட்டிருக்கிறார்.

    அக்காலத்தில் இத்தகைய பாடல்கள் மெட்டுக்கள் என்று அழைக்கப்பட்ட இசையமைப்பு முறையாலேயே குறிக்கப்பட்டன. சான்று: ஆண்டிப்பண்டாரம் மெட்டு, பாம்பாட்டி மெட்டு, ஆறுமுக வடிவேலவனே மெட்டு. இவை ஆழ்ந்த இசை ஞானம் இல்லாதவர்களையும் எளிமையாகப் பாடவைத்தன.

    இக்குறத்தில், மூன்று மெட்டுக்கள் குறிக்கப்பட்டாலும், அவை எந்த மெட்டு என்று குறிக்கப்படாததால் பாடுபவர்களே மெட்டுக்களைப் பாடல்கலின் அமைப்பிற்கேற்ப உணர்ந்து பாடிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒருவகையான ஓதும் (RECITATION) முறையிலும் இவை பாடப்பெற்றன. அந்த ஊர் குடும்பத்துப் பேச்சு நடை இக்குறம் முழுவதும் விரவி வருவதைக் காணமுடிகிறது.

    கடவுள் வணக்கத்துடன் தர்மாம்பாள் குறம் தொடங்குகிறது. கணபதி, சரசுவதி, ஆறுமுகவேலவன் ஆகியோர் வேண்டப் படுகிறார்கள். லோபாமுத்திரை காவேரி நதியாகி, அகத்தியரைப் பிரிந்து சஹ்யமலையில் பிறந்து சமுத்திரருக்கு மாலையிட வருகிறாள். குடகு மலையிலிருந்து ஐயாறு வரை அவள் வரும் அழகு ஒரு சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அமராவதி, பவானி, லட்சுமணா, ஹேமவதி, காஞ்சனா என்னும் தோழிகளைத் துணையாகச் சேர்த்துக் கொண்டு வருகிறாள்.

    “…………………………………………………………………..
    உயர்ந்துவரும் நுரையழகும் உத்ஸாகக் கொந்தளிப்பும்
    பெருகியந்தக் காவேரிநதி அலைமோத வந்துவிட்டாள்
    குயில்கூவி குதூகலிக்க குளிர்ந்தகாற்று வீசிவர
    சோனைதூரத் தென்றல்வீச சிறந்தநதி யாகவந்தாள்
    கனத்தசெடி குடிசைகளும் காட்டுமிருகம் பலவகையும்
    வாழையுடன் கமுகுதென்னை வாரிக்கொண்டு வந்துவிட்டாள்
    ………………………………………………………………….
    வயல்களெல்லாம் நிரப்பிக் கொண்டு வேகமாக வந்துவிட்டாள்
    அறம்வளர்த்தாள் படித்துறைக்கு ஐந்துமுகத்தோடு வந்தாள்.”

    காவேரி திருவையாற்றுக்கு வந்த செய்தியை ஆட்கொண்டார் அம்பிகைக்கு அற்விக்கிறார். அம்பிகை, வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்களைத் தட்டினில் வைத்துக் காணிக்கையாக அளித்து, காவேரியை வரவேற்கிறாள். காணிக்கையைப் பெற்றுக் கொண்ட காவேரி, அம்பிகையை வணங்கி, தான் சமுத்திரரை அடைய மகிழ்ச்சியுடன் வழியனுப்பும்படி வேண்டுகிறாள்.

    கல்யாணி தேவியோ, “சமுத்திரரை இங்கேயே வரவழைக்கிறேன்; மகிழ்ச்சியுடன் இருப்பாய்” என்று கூறுகிறாள். அதைக் கேட்டுக் கலங்கும் காவேரி, உடலை அங்கு வைத்துவிட்டு, சாட்சியாக ஓர் உருவம் எடுத்துக் கொண்டு கடலை நோக்கிச் செல்கிறாள். சமுத்திரரோ அம்மனின் கட்டளைப்படி, பாதாளத்தில் மறைந்து கொண்டு ஊரின் நடுவே வருகிறார். மகிழ்ச்சியுடன் வந்தால் உலகமெல்லாம் மூழ்கிவிடுமாம். சப்தஸ்தான சுவாமிகளும் வரவேற்று அளித்த மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு சமுத்திரரும் போய் மறைந்து விடுகிறார்.

    சாட்சி என்னும் காவேரி கடலில் போய்த் தேட, அங்கு சமுத்திரர் இல்லை. திரும்பி வந்த காவேரி மனம் தளர்ந்து சமுத்திரரை அடைய வேண்டி, தர்மாம்பிகையை நினைத்து திருவையாற்றில் கன்னிகையாகத் தவம் இருக்கிறாள். அறம்வளர்த்தாள் அவளைப் பரிகசிக்கக் குறத்தி வடிவம் எடுக்கிறாள்.

    குறத்தியாகிய தர்மாம்பிகை அணிந்துள்ள நகைகள் பாதாதி கேசம் வரை வருணிக்கப்படுகின்றன. அவள் அழகும் உருவ வருணனையும் சரளமாக வருகின்றன. ஐயாற்று வீதியில் வரும் குறத்தியிடம் ஊர்ப்பெண்கள் குறி கேட்கிறார்கள். மருந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு இங்கிதமாகக் குறிகள் சொல்லிவிட்டு ஆலயம் சென்று கைலாசநாதரைத் தரிசித்து வந்து பின் குறிகள் சொல்வதாகக் கூறி, ஆலயத்திற்குச் செல்கிறாள். சுவாமி சந்நதித் தூணில் சாய்ந்து அமர்ந்திருக்கும் குறத்தியின் அழகைக் கண்டு பிரமித்த காமனை நீராய் எரித்த சிவன் அவள் மீது மோகம் கொள்கிறார்.

    தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டு (இந்த வர்ணனையும் சிறப்பாகத் தரப்பட்டுள்ளது) குறத்தியிடம் வருகிறார்; அவள் யார் என்று வினவுகிறார். அவள் விவரிக்கிறாள்.

    “……………………………………………………………………
    ஜாடியும் நான் குறச்சாதி தனிவழியும் வருவோம் நாங்கள்
    சாம்ப பரமேசருக்கும் சம்பந்தங்களுண்டு
    அப்பன் ஆயிஎன்னை அம்பிகையென் றழைப்பார்
    என் அண்ணன் பெயர் சக்ரபாணி ஆறுமுகனென் பிள்ளை
    குச்சுக்குக் காவலாயென் கிழவனாரும் இருப்பார்
    கூடைமுறம் கட்டிநாங்கள் குறிபார்த்துச் சொல்வோம்
    ………………………………………………..”

    “உன் கணவன் கிழவனென்று சொன்னாயே, கந்தருவன் போன்ற நானே உன் அழகுக்கு ஏற்றவன்” என்று கம்பீரமாகச் சொல்கிறார். அவள் சினந்து இதனை மறுக்கிறாள். தன்னுடைய வளமான வாழ்க்கையை விவரித்து,

    “இதைக் கேட்டல் என் கணவன் ஈட்டியினாலே குத்தி என்னை இழுத்தெரிவார்,
    ஆசைபெரி தென்று சொல்லி உம்மை நானுமடைந்தால்
    அறம் வளர்த்த நாயகியும் அக்கினியால் தகிப்பாள்”

    என்று கூறுகிறாள். பிறகு குறத்தி தன் பெருமைகளையும், மலை வளத்தையும், நாட்டு வளத்தையும் ஈசருக்கு உரைக்கிறாள். இவற்றைக் கேட்கும் சரசுவதியும் லெட்சுமியும் காவேரியிடம் கூற, அவள் சகியை அனுப்பி, குறத்தியை அழைத்து வரச் செய்கிறாள். அதன்படியே குறத்தி திருக்காவேரிக் கரைக்கு வருகிறாள். காவேரியும் குறத்தியின் அழகைக் கண்டு திகைத்துப் போகிறாள். அவளுக்குக் குறி சொல்கிறாள் குறத்தி. அவள் யார் என்பதைக் கூறிவிட்டு, அவள் சமுத்திரரை அடைவாள் என்றும் கூறுகிறாள். மாதந்தோறும் காவேரியின் நிலை எப்படி மாறுகிறது? இதோ:

    “மார்கழி மாதத்தினில் மணல் மேடு இடுவாய்
    மடுக்களிலும் ஜலம் வற்றி வெகு நாற்றம் நாறும்
    ஆற்றின் ஜலம் வற்றிவிட அனைவர்களுந்தவித்து
    ஊற்றின் ஜலந்தனையெடுத்து உலகிலுள்ளோர் உழல்வார்
    வைகாசி வஸந்தகாலம் வருவாய் வெள்ளம் பெருகி
    வையகத்து மனிதரெல்லாம் முழுகிக் கதிபெறுவார்
    ஆடிமாதம் பெருக்கெடுத்து அணைகரையில் போட்டால்
    அப்போது நீயும் சமுத்திரரை அடைந்து மனமகிழ்வாய்!”

    அவள் குறி சொல்லும் நேர்த்தியையும் அவள் முகத்தையும் கண்ட சங்கரர் தன்னை அடையும்படி கேட்கிறார். குறத்திச் சீறிச் சினக்கிறாள். அவள் துடுக்கான வார்த்தைகளைக் கேட்ட சிவசங்கரர் பார்வதிதான் வந்தாளோ என்று சுற்றுமுற்றும் பார்க்கிறார். அம்பிகையைத் தேடுகிறார்கள். அவளை எங்கும் காணாமல் சங்கரர் புலம்பி அழுகிறார். எல்லோரும் சுந்தரி சுந்தரி என்று அனற்றுகிறார்கள்.

    சரசுவதியும் லெட்சுமியும் குறத்தியிடம் ஓடிச் சென்று சங்கரியாளை அழைத்துத் தரும்படி கேட்கிறார்கள். அவையிலுள்ளோர் ஏக்கமும் சங்கரர் வாட்டமும் கண்டு இரங்கி குறத்தி, சங்கரர் கரத்தைப் பிடித்து அவர்தம் அரிய செயல்களைக் கேலியாகக் குறி சொல்கிறாள்.

    அவள் பரிகசித்துக் கூறக் கேட்ட மகாதேவர் குறத்தியைக் கண்டு இச்சைப் பட்டது தவறு என்று உணர்ந்து கொள்கிறார். சங்கரரின் வாட்டம் கண்ட சங்கரி தன்னை வெளிப்படுத்தி இறைவன் அடி பணிகிறாள். பலி ஸ்ருதி, மங்களத்துடன் தர்மாம்பிகை குறம் நிறைவு பெறுகிறது.

    (ஓம் சக்தி இதழ் 2005ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)

    Share