வெண் நிலவுகள் – 1
பசுந்திரா சசி
“பிச்சை எடுக்கிறதுக்காகவே பிள்ளையை பெறுவது , பிறகு – பேத்தி ,பேத்தி – எண்டு சொல்லித்திரியிறது ‘பேத்தியின்ர அப்பாவும் நான் தான் ! ‘எண்டு சொல் வேண்டியது தானே….” என எரிந்து கொண்டு பெருமாள் கோயில் படி ஏறினார் ஒரு நடுத்தர வயது பெண் – அந்த பிச்சைக்காற முதியவருக்கு இது ஒன்றும் புதிதில்லை . சேற்றில் தோய்த்தெடுத்த கோலத்தில் இருந்தாலும் பார்ப்பதற்கு அழகான சிலை போல் ஒரு கையில் பிள்ளையும் மறு கையில் பிச்சைத்தட்டும் ஏந்திய படி இருக்கும் மகளையும் , மனம் கல்லாகி மரத்துப் போய் எதற்கும் பதிலோ இல்லை கேள்வியோ கேட்காத அவரையும் இப்படி ஊரார் எள்ளி நகை யாடுவது இன்று நேற்று அல்ல இரண்டு வருடத்திற்கு மேலாக நடக்கிறது . ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம் ‘ என்ற பாரதியின் கூற்றுக்கு ‘மாதர் தம்மை (தாமே ) இழிவு செய்யும் மடமையைகொழுத்துவோம் ‘ . என்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் விபரிப்பை எண்ணி மனதில் நகைத்தபடி . தாடியை தடவிக் கொண்டு அனேகமாக காதலிக்காக காத்திருந்த அந்த இளைஞனை நோக்கி நடந்தார் பேச்சு வேண்டிய பிச்சைக்காற முதியவர் .
யாழ் மாநகரிலே பிரசித்திவாய்ந்த கோயில்களில் பெருமாள் கோயிலும் ஒன்று . அழகான சுற்றுசூழலில் இருக்கும் இந்த கோயிலில் தினமும் பூசைகள் தவறாது நடைபெறும் . இவ் ஆலயம் அதிக பக்தர்கள் சூழும் இடம் என்பதால் காதலர்கள் முதல் வியாபார நிலையங்கள் வரை ஏன் பிச்சைக்காறர்களுக்கு கூட பஞ்சமில்லை .
எதையுமே கண்டு கொள்ளாமல் அவனது காணாக் காதலி மோகனா ‘ எப்ப வருவாள் ? , நேரில் எப்படி இருப்பாள் ? , என்னை இனம் காணுவாளா..? , கண்டால் நாணுவாளா , இல்லை பிரமிப்பாளா …? பெரியோரால் திருமணமே நிச்சயிக்கப்பட்டு . இரண்டு வருடம் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசிய பின்னும் ஏன் நாண வேண்டும் ! . ஒடி வந்து கட்டிக் கொண்டாலும் தப்பில்லை . – இந்த கோயில் முன்றலிலா ? , முதல் சந்திப்பை வேறு எங்காவது வைத்திருக்கலாமோ… , பெருமாள் கோயிலில் வைத்தது தப்பாகி விட்டது . ஒரு வேளை அவள் அப்படி நினைத்தாலும் இந்த கூட்டத்தின்முன் எப்படி கட்டிக் கொள்வாள்…? – சீ… என் கற்பனைக்கு இங்கிதமே இல்லை. ‘ தலையை குனிந்த படி தன்னை தானே கடிந்து கொண்டான் ஜோன் . ஏறக்குறைய அவன் இவ் உலகில் இல்லை. வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்காக வந்திருக்கிறான் . மனைவி பற்றிய கற்பனைகள் இருக்காதா என்ன ?.
அவன் முன்னால் ஒரு அழகிய பூங் கொத்து நீண்டது ‘மோகனா’என உச்சாடனம் செய்துகொண்டு பிரமிப்போடு நிமிர்ந்தான். முன்னால் ஒரு வயோதிபர் பூச் செண்டுடை நீட்டிய படி நின்றார் . அவர் கையில் பிச்சைப்பாத்திரமும் இருந்தது ஜோன் புரியாமல் விழித்தான் .
” மன்னிக்க வேண்டும் தம்பி ! என்ர பேத்தி உங்கட மோட்டார் வண்டியில் இருந்த பூச் செண்டை இழுத்து விழுத்தி விட்டாள். ” என்று பூங்கொத்தை அவனிடம் நீட்டினார் . திரும்பி பார்த்தான் பூவை தவிர மோகனாவுக்காக வாங்கி வந்த மீதிப் பொருட்கள் எல்லாம் இருந்தது.
பின்னால் குழந்தை ஒன்று பலமாக வீரிட்டு அழுது கேட்டது அத்திசையில் திரும்பினான் .
“சைலஞ்சர் நல்லா சுட்டுப்போட்டுது ” என்றபடி பிள்ளையை மடியில் வைத்து நெற்றியை உரஞ்சிக்கொண்டு இருந்தார் தாய்.
“அதுதான் என்ர பேத்தி , அது மகள். இந்த பூங்கொத்தை எடுக்க வந்து பூவையும் விழுத்தி , தானும் தடக்கி விழுந்து விட்டது. வண்டியின் சைலென்னர் நெற்றில நல்லா சுட்டு போட்டுது . நானும் மகளும் பிச்சை தட்டை குலுக்கிக் கொண்டு இருந்ததால பிள்ளையை கவனிக்க இல்லை” . என்றார் அந்த பிச்சைக்காற முதியவர் .
“பறவாய் இல்லை ஐயா .. ” என்று விட்டு மலரை வேண்டினான். தான் காதலிக்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த ‘கற்பறி கன்டோஸை ‘அவரிடம் கொடுத்து பிள்ளையிடம் கொடுக்கச் சொன்னான்.
அவ் வீதியால் கோயிலுக்கு சென்ற இளைஞர்களில் ஒருவன். பிள்ளையோடு இருந்த அவ் இளம் பிச்சைக்காறியை காட்டி
“ டேய்.. தொங்கல்ல இருக்கிறத பாத்தியா….? மணித்துண்டு ” என்றான் . இன்னொருவன் இந்த முதியவரைப் பார்த்து ” தாத்தா கொடுத்து வைச்ச கட்டை !” என்றான்.
ஜோன் முதியவரை பற்றுதல் இன்றி பார்த்தான் . சற்று முன் அவன் காதுகளில் விழுந்து அவன் கிரகிக்காமல் போன அந்த பெண்ணின் தூற்றல் மீண்டும் எதிரொலித்தது .
“ இந்த வயதிலும் கிழடுக்கு …. சீ…. கறுமம் , கறுமம் . போயும் போயும் இதுகளை கோயில் வாசல்ல விட்டுக்கிடக்கு …..” .
ஜோன் முகத்தை சுளித்துக்கொண்டு மறு பக்கம் திரும்பி நெற்றியை தடவினான்.
பிச்சைக்காற முதியவர் புளுப் போல நெளிந்தார் . அவன் கொடுத்த சொக்லேட் கையில் இருந்து நழுவியது. பேத்தியை கூப்பிட்டு அதை கொடுத்து விட்டு .
“தம்பி உம்மை பார்த்தால் நல்ல பிள்ளை மாதிரி தெரியுது . யாருக்கும் சொல்லத்தேவை இல்லை என்று விட்டதை ஏனோ என் மனம் உமக்கு சொல்ல வேண்ணும் எண்டு நினைக்குது . நான் உண்மையை சொல்லிப் போடுறன் தம்பி ! இவையள் சொல்லுறது உண்மை தான் ; அது என்ர மகளும் இல்லை , இது என்ர பேத்தியும் இல்லை . இரண்டும் என்னை காப்பாற்றும் கடவுள் ! ” என்று கண்ணீர் உருகினார்.
‘ பின்பு ஏன் பேத்தி என்று பொய் சொல்ல வேண்டும் ? ‘ என எண்ணிக்கொண்டு முதியவரை மேலும் கீழும் பார்த்தான் ஜோன் . முதியவர் தொடர்ந்தார்.
“அவளை நான் முதன் முதலாக பார்த்தது ஒரு வெள்ளிக்கிழமை .”
“ பாரு…, பாருகுட்டி …, அடி பார்கவி ! நான் மினக்கட்டு கதை சொல்லுன் நீ என்னடா எண்டால் நித்திரை கொள்ளுறியா…? ” என்ற படி கதையை நிறுத்தி விட்டு மடியில் நித்திரை கொண்ட மகளை உலுப்பினான் இந்திரன் . அவளோ மடியில் கிடந்த படி யன்னல் ஊடாக நட்சத்திரங்கள் ஊடே கதையின் பாத்திரங்களை மனக்கண்ணில் உலாவ விட்டிருந்தாள் . தந்தை கதையை நிறுத்தியும் அவள்
சிரிஷ்டித்த பாத்திரங்கள் திரையில் நின்றும் மறையாமல் நீண்டு கொண்டு போயின . அந்த இளம் பிச்சைக்காறியின் தட்டில் கிடந்த வெள்ளிக்காசுகளாய் வான் வெள்ளிகள் மின்னின – திடீரென திடுக்கிட்டவளாய் .
“அப்பா ஏன் கதையை நிப்பாட்டிப்போட்டீங்கள்.” என்றாள். “உனக்கு நாளைக்கு பள்ளிக்கூடம் நேரத்திற்கு சாப்பிட்டு விட்டு படுக்க வேண்டும்” என்றான் இந்திரன் . “ சனிக் கிழமையில யாரப்பா பள்ளிக்கூடம் வைக்கிறது” என்று விட்டு சிரித்தாள். ஆறே வயதான மகள் பார்கவி.
“சரி சரி சாப்பிட்டாப்பிறகு மிச்சத்தை செல்லுறன்” என்றான் .
“அப்பா… அந்த இளம் பெண் எப்படி இளம் பிச்சைக்காறி ஆனாள் ? அதை இன்னும் நீங்கள் சொல்லவே இல்லை ! ” என்றபடி தந்தையின் நாடியை பிடித்து அங்கும் இங்கும் ஆட்டினாள். இருவரும் மாடியால் இறங்கி கீழே வந்தார்கள்.
“ இண்டைக்கு இங்க லண்டன் – M 25 – ரோட்டில விபத்தாம் தம்பி கேள்விப்பட்டனியளோ.. ? ” என்றபடி தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு எழும்பி சமையல் கட்டை நோக்கி வந்தார் இந்திரனின் மனைவி நிலானியின் தந்தை யோசப்பர் . “ஓம் மாமா அதுதான் நானும் வேலையால வர சுணங்கியது அண்டகிறவுண்ட ரெயின் எண்டால் கெதியா வந்திருக்கலாம் கார் எண்டதால பெரிய கஸ்டமாப் போச்சு”என்றான். கத்தரிக்காய் கறி வாசனை மூக்கோடு சேர்த்து அவனையும் இழுத்தது .
சமையல்கட்டுக்குள் நுழைந்தான்- நிலானி பொரித்து காச்சிய கத்தரிக்காய் குளம்பை அடுப்பை விட்டு இறக்கிக் கொண்டு இருந்தாள்.
” தம்பி எழும்பீற்றானா என்று ஒருக்கா பாரம்மா.. ” என்றாள் நிலனி மகள் பார்கவியிடம் .
கத்தரிக்காய் கறியை பார்த்துக்கொண்டு “ தக்காளிக் கறி எப்படி சமைத்தாள் …? இப்படி ஆளை மயக்குது.. ” . என்றபடி நிலானியை நெருங்கினான் இந்திரன். ” தக்காள் – இக்கறி – சமைத்த முறை எல்லாம் இருக்கட்டும். தக்காள் – தகாதவள் ஆகமுதல் உடுப்பை மாத்துங்கோ… நாளைக்கும் இதைத்தான் வேலைக்கு போட வேணும் ; கறி மணக்கப்போகுது . தமிழ் பள்ளிக்கூடத்தில கொஞ்சம் வேலை இருந்ததால வீட்ட வர நேரமாகிப்போட்டுது நாளைக்குதான் உடுப்பு தோய்க்க வேண்டும் . ” என்றபடி அகப்பைக் காம்போடு திரும்பினாள் நிலானி.
(தொடரும்)
