Author: admin

  • தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்

    -இல.மேனகா

    menakaபெண்ணியம் என்பது பெண்ணின் சமூக நிலையை மறுமலர்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. இது பாலினப் பாகுபாடு தொடர்பான சமூகப்பண்பாட்டு வேர்களை இனம் கண்டு கொள்ளவும், குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் முறையை உணர்ந்து கொள்ளவும் பெண்ணியம் தெளிவான வரையரை அளிக்கிறது. இது ஆணிய பண்பாட்டுக் கட்டமைப்பில், பாலிய உருவாக்கம் ஊடுருவியிருப்பதையும்,  அதனால் பழைய மதிப்பீடுகள், புதிய பண்பாட்டு மதிப்பீடுகளால் எத்தகைய மாற்றத்தைப் பெறுகின்றன என்பதையும் நன்கு அறிய உதவுகின்றது. இவற்றைத் தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காவியங்கள், புராணங்கள், நவீனஇலக்கியங்கள் வழி பெண்ணியச் சிந்தனைகளை முன்வைத்து இக்கட்டுரைப் படைக்கப்படுகிறது.

    சங்க இலக்கியத்தில் பெண்ணியக்கூறுகள் 

    தமிழ் இலக்கியத்தின் தொன்மையான நூல்களில் ஒன்றான தொல்காப்பியம் ஆண்களின் நிலை குறித்து,

    “பெருமையும் உரனும் ஆடூஉமேன”          (தொல்-களவு-நூற்7) என்று பெருமையும், வலிமையும் ஆணுக்குரிய பண்புகளாகவும்,

    “அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
    நிச்சமும்   பெண்பாற் குரிய”                     (தொல்-களவு-நூற்8) இவை பெண்ணுக்குரிய பண்புகளாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது அச்சம், மடம், நாணம் இவையெல்லாம் பெண்ணுக்குரிய குணங்களாக தொல்காப்பியம் கூறுகின்றது. மேலும் “கற்பு” என்பது பெண்ணிற்கு கட்டாயமாக்கப்படுகிறது.

    பெண்களின் உரிமை  சங்ககாலத்தில் தடை செய்யப்படவில்லை. பெண்கள் கல்வி கற்று, நன்கு புலமை பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். மேலும் சங்க இலக்கியமானது பெண்களின் நிலையினை பலவாறாக கூறுகின்ளது. அஃதாவது,

    “பெண் பிறவி இழிவுக்குரியது” என்று யாரும் கருதவில்லை    (ஐங்;:257)

    “மணக்கொடை(வரதட்சணை) கொடுமை இல்லை”         (அகம்:280)

    “நல்லிற்பாவையன்ன நல் லோற் கணவன்”                   (பதிற்றுப்பத்து61)

    “மறுவில் கற்பின் வாணுதல் கணவன்”      (திருமுருகாற்றுப்படை:அடி 6)

    என்றவாறு பெண்ணுக்குப் பெருமை தேடித்தரும் வகையில் சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். சங்ககாலத்திலும் பெண்ணிற்கு கற்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆணைத் தலைமையாகக் கொண்ட குடும்பம் வரவேற்கப்பட்டது.

    திருக்குறள் வழி அறியலாகும் பெண்ணியம் 

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள் பெண்ணியம் பேசுகிறது. அஃதாவது,

    “மனைத் தக்க மாண்புடையாளாகித் தற்கொண்டாள்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”             (குறள்:7)

    என்கிறது. அதாவது குடித்தனத்துக்கு ஒத்த பெருமையுடையவளும், தன் கணவனுடைய வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்கிறவளுமான மனைவியே சரியான வாழ்க்கைத் துணைவி என்கின்றார் வள்ளுவர். மேலும், 

    “பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மை  உண்டாகப் பெறின்”                   (குறள்:54)

    அதாவது கற்பு என்ற மன உறுதியுள்ள பெண்ணைக் காட்டிலும் பெருமை தரக்கூடிய பொருள் இவ்வுலகத்தில் வேறு என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை என்கிறார். மேலும் இவர் குடும்பம், கற்பு இரண்டும் பெண்ணிற்குத் தேவை என்றும் வலியுறுத்துகின்றார்.

    இடைக்காலத்தில் பெண்களின் நிலை

    நீதி நூல்களிலிருந்து காப்பியத்திலும் அறவழி வாழ்க்கை நடத்தல், இல்லறத்தைப் பேணிக்காத்தல், கலைகளைத் தெய்வமாக வழிபடல் ஆகியன பெண்ணின் கடமைகளாக வரையறுக்கப்பட்டிருந்தன. ஆண்கள் குடும்ப வளத்தைக் காக்கக் கூடிய நிலையில் கற்புடன் திகழும் பெண்களைத் தெய்வமாகக் கருதினர். ஆனால் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் புராணகாலத்தில் பெண்களின் நிலை மேலும் தாழ்வடைந்தது.

    பக்தி காலத்தில் சமயங்களின் எழுச்சியால் சாதிக்கட்டுப்பாடுகளை மீறிப் பெண்கள் கோவில் வழிபாடு, விருந்தோம்பல், சமூகப் பணிகளில் கலந்து கொள்ளுதல் ஆகியவற்றை மேற்கொண்டனர். அரச, பிராமண, வேளாளர் குலப் பெண்கள் சமய வாழ்வில் பங்கேற்றனர். அதற்குப் பின்னர் சிற்றிலக்கியங்களில் ‘பதிவிரதை’ என்ற கொள்கையை வரையறுத்தலோடு பெண்ணைப் பாலியல் பொருளாகக் கருதினர்.

    நவீன இலக்கியத்தில் பெண்கள் 

    மேலை நாடுகளில் தோன்றிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஆகியன இந்தியாவில் ஆங்கிலக்கல்வியின் வரவால் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றை இலக்கியங்கள் எடுத்துக்காட்ட முனைந்த போது தான் பெண்முன்னேற்றமும் முளைவிடத் தொடங்கியது.

    தமிழில் முதன்முதலில் எழுந்த புதினம் வேத நாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’(1879). அந்நாவலைத் தொடர்ந்து வந்த மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திரம்’(1898) என்ற இவ்விரண்டு நாவல்களும் பெண்கல்வி,  விதவை மறுமணம், முதலியவற்றைப் பற்றி பேசுகின்றது.

    “தமிழின் முதல் நாவலாசிரியராகத் திகழ்வதற்கு முனிசீப் வேதநாயகம் பிள்ளையிடத்திருந்த தகைமைகள் பெண் விடுதலை இயக்கம், சன்மார்க்க நெறிப்பிரச்சாரம், சமூக சீர்திருத்தம் போன்ற துறைகளில் அவருக்கிருந்த ஈடுபாடு ஆகியவை வேத நாயகம் பிள்ளையின் பெண் விடுதலை உணர்வைத் தோற்றுவிக்கக் காரணிகளாக இருந்தன”1 என்று கா.சிவத்தம்பி கூறுகின்றார்.

    தமிழகப் பெண்ணிய முன்னோடிகள் 

    தமிழ் இலக்கியத்தில் பெண்களின் நிலையை மாறுபட்ட கண்ணோட்டத்தில் எடுத்துக் கூறியவைகளுள் தேசியப் போரட்டக் காலத்தைச் சேர்ந்த பாரதியாரும், பெரியாரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

    பாரதியார் 

    தேசியப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற பாரதியார் பெண் கல்வி, பெண் விடுதலை குறித்து எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கியத்தில் பெண்ணியக் கூறுகளை அறிவதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.

    “நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்”  (புரட்சிப்பெண் – பா.எ.4) என்று சாடுவதோடு நில்லாமல்,

    “மாதர் தம்மை இழிவு செய்யும்
    மடைமையைக் கொளுத்துவோம்”    (புரட்சிப்பெண்- பா.எ.7) என்றதோடு,

    “ஆணும் பெண்ணும் சரிநிகர்  சமானம்”   (புரட்சிப்பெண் – பா.எ.4) என்றும் கூறுகின்றார். இவ்வாறாக பாரதியாரின் கவி வரிகளின் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்தார் என்று கூறினால் அது மிகையாகாது. இதனால் தான் பாரதியின் கவிதைகள் வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெறுகின்றன.

    பெரியார்

    பெண் விடுதலை குறித்து எழுந்த சீர்திருத்த இயக்கங்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கமானது பெண் என்பவள் ஆணின் போகப் பொருள் என்பதை மறுத்து, ஆணின் பாதி என்பதை மாற்றி பெண்ணினம் தன்னை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவி செய்தது. பெரியாரை “தமிழ் இலக்கியப் பெண்ணிய முன்னோடி” எனக் கூறலாம்.

    அவர், “பெண்களைக் கணவனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும், புகழ் பெறும் பெண்மணியாகவும் வேண்டும். பெண்ணும் தன்னை  பெண்ணினம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது. நமக்கும், ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? ஏன் உயர்வு தாழ்வு? என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் எழவேண்டும். ஏனெனில் பெண் என்பவள் வெறும் போகப் பொருளாக ஆக்கப்படுதல் கூடாது. அவர்கள் புது உலகைச் சித்தரிக்க வேண்டும்”2 என்றெல்லாம் பெரியார் தம்முடைய பொதுவுடைமைச் சிந்தனைகளாக வலியுறுத்துகின்றார்.

    இவ்வாறாகப் பாரதி, பெரியார் மட்டுமல்லாது இன்னும் பல அறிஞர்களும் கவிஞர்களும் பெண் முன்னேற்றத்திற்காகவும் பெண் கல்விக்காகவும் பாடுபட்டனர். சங்ககாலத்தில் பெண்களின் நிலை குறித்தும் அவளின் கல்வி, வாழ்க்கைமுறை, ஆண்கள் பெண்களை எவ்வாறெல்லாம் நடத்தினர் என்பது பற்றியும் இக்காலத்தில் பெண்களின் முன்னேற்றம் கல்வி மற்றும் கல்வியினால் அவர்கள் அடைந்த பயனையும் பெண்களை இலக்கியங்கள் எவ்வாறெல்லாம் சித்தரிக்கின்றன என்பது பற்றியும் பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்கள் பற்றியும் இக்கட்டுரையானது விவரிக்கின்றது.

    தாய் வழி சமூகத்தில் பெண்ணுக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டதால்  விவசாயம் முதல் கல்வி ஈறாக அனைத்து துறைகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தினாள். தொழில் நுட்பப்புரட்சி ஏற்பட்டுள்ள இக்காலத்தில் பெண்கள் விண்வெளி வரை சாதனை புரிந்து பாரதியின் கனவை நனவாக்கி வருகின்றனர்.

    அடிக்குறிப்புகள்:

    1. கா. சிவத்தம்பி – நாவலும் வாழ்க்கையும், பக்:52
    2. ஈ.வெ.ரா. பெரியார் – சுயமரியாதைத் திருமணம் ஏன்?, பக்:12

    மேற்கோள் நூல்கள்:

    1. முனைவர் அரங்க.மல்லிகா – தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம்
    2. நாஞ்சில் ஆனந்தன் – சங்க இலக்கியத்தில் மனித உரிமைகள்
    3. பாரதியார் கவிதைகள் – கழக வெளியீடு

    *****

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    தஞ்சாவூர்.

     

     

     

     

     

    Share
  • பெண் முன்னேற்றத்தில் பாரதி

    திருமதி பா. அனுராதா

    உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை

    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.

     

     

    பெண்மையின் வழிகாட்டியே!

    நீ சென்ற ஒற்றையடி

    பாதையால்  உயர்ந்தனர் மாதர்;!

    அடுப்படியில் பூட்டி வைத்த நயவஞ்சகரே

    நாங்கள் அகிலத்தை அடுப்படிக்கு

    கொண்டு வந்தோம்!

    பெண்ணே!

    நீ இன்றி இவ்வுலகில்

    யாருமில்லை! அறிவாய் நீ!

    துணிந்து எழு பெண்ணே!

    வஞ்சகர் நாட்டில் பாரதியின்

    சொற்சுவையும் பொருள்சுவையும்

    மாதரின் மலர்ச்சியை மறுசுழற்சி செய்தனவே!

    நம்பிக்கையோடு பிறந்துவிட்டாய் பெண்ணே

    நாணம் கொள்ளாதே!

    உன் பெருமைதனை பேச

    இன்னொரு பாரதி பிறக்கவில்லையே!

    துகிலுரிக்கையில் மானம் காக்க

    நவீன கண்ணன் யாருமில்லை! பெண்ணே!

    உன் சபதத்தை ஏற்று

    போர் புரிய பாண்டவருமில்லை!

    பெண்ணிற்காக இதிகாசம் எழுத

    தாய்மண்ணில் யாருமில்லை!

    மதுரத் தேமொழி மங்கையரே!

    அவலம் எய்திக் கவலையின்றி

    வாழும் பாவையரே – உன்

    கவலையை உமிழ்ந்து தள்ளி

    பெண்ணறமாய் நிமிர்ந்து நில்!

    வானம் உன் வசமாகட்டும்!

    தாய்திரு நாட்டில் பெண்மைவெல்ல

    வீரமங்கையாய் விடியலைத் தேடி

    ஓடு மகளே! ஓடு

    தனியாக சஞ்சாரம் செய்து

    அண்டத்தை தழைத்தோங்கச் செய்வோம்!

    நயவஞ்சகரே!

    நாங்கள் என்றேனும் தோற்றதுண்டா?

    நீங்களல்லவா எம்மை

    வைத்து இழந்தீர்!

    குடும்ப வறுமையிலும்

    இல்லாதோரை மகிழச்செய்தாயே!

    மனையாளை அடிமைப்படுத்த எண்ணி

    தாய்குலத்தை அடிமைப்படுத்தலாமோ!

    அம்புபட்ட மான்போல்

    அழுது துடித்தேன் — ஓ பாரதியே!

    இன்னும் பிறப்பெடுக்கவில்லையா?

    உம்மை மறக்க முடியாமல்

    எம் மழலைச் செல்வத்திற்கு

    பாரதியென பெயர்ச் சூட்டிடுவேன்

    உம் பெயர்தனை உச்சரிக்க

    என் உள்ளந்தனில் உற்சாகம்

    பெருக்கெடுக்க

    வாழ்வுதனில் முன்னேற உன்

    வார்த்தை ஜாலம்

    என் வசம்.

    Share
  • இரவின் தனிமை

     

       சந்திரா  மனோகரன்

     

     

    எனக்கும்  அவனுக்குமிடையே

    முறுவலின்  அலைகள் !

    படகின்  மிதப்பில் —

    குளிர்மாலை  ஒளியில் —

    ஏரியின்  சிலிர்ப்பில்–

    அடைபட்ட  எண்ணங்கள்

    அவன் எதிர்பார்ப்பின்றி

    *பட பட * வென்று …

    அவன்  மௌனம்  இனியது

    சிற்றலைகளின்  அமைதியில்

    சிதறி  உடையும்  சொற்கள்

    மழைச் சாரல்  ஏரியை

    துளைத்தெடுக்கின்றன

    நீண்ட  நதிபோல்

    நெளிந்து கிடக்கும்  நீர்க்குளம்

    அவன்  மோனமும்  துணிவும்

    முடிவற்ற  பரிச்சயம்  எனக்கு

    இடையிலென்ன  இரும்புத்திரை ….

    தடுப்புச்சுவர்  அழியட்டும்

    நீரலைக்குள்  நீர்த்துப்போகட்டும்

    கரிய இரவுப்பயணம்  முடிந்துவிடும்

    கரைந்த  மோனத்தின் சில்லுகள்

    நிழல்களாய்ப்  படிகிறது , நீரில்

    மங்கலாய்த்  தெரியும்  கரையில்

    பளீரிடும்  நம்பிக்கை !

    சிற்றொளியில்  உதிரும்  சோகம்

    அவன்  மட்டும் கால்பதிக்க …

    பாவம்  பேதை

    வாழ்வின்  இரகசியம் புரியாதவள் !

    ஏரியும்  தோணியும் துணையற்ற  இருளும்

    என்னை ஏந்திய வண்ணம்  !

     

     

     

     

     

     

    Share
  • தமிழ் – மலையாள மொழிகளில் செயல் வினைமுற்றுக்கள் (Indicative Verbs in Tamil and Malayalam)

    -முனை. விஜயராஜேஸ்வரி 

    தமிழ் மொழியின் சொல் வகைகளை இலக்கணவியலாளர்கள் பலவாகப் பிரிப்பர். பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழ் மொழியின் சொல் வகைகளைப் பெயர் வினை இடை உரி என்று நான்கு வகைகளாகப் பிரிக்கின்றது. அவற்றுள் வினைச்சொற்கள் மிக முக்கியமானதொரு சொல் வகையாகும். தொல்காப்பியம் இதனை,

    ”வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
    நினையுங் காலை காலமொடு தோன்றும்”   (தொல்.சொல். 683) என்பார்.

    தமிழ் வினைச்சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்காமல்; காலங்காட்டும் இடைநிலைகளை ஏற்று வரும் என்பது தொல்காப்பியனாரின் கருத்து. கால இடைநிலைகளை ஏற்கவல்லதாயும்; பாலிட விகுதிகளை ஏற்க வல்லதாயும் அமையும் கிளவிகள் வினைச்சொற்கள் என்று கொள்ளப்படும் என்பார் பேரா. பொன். கோதண்டராமன். ( இக்காலத் தமிழ் இலக்கணம், 2002, பக் – 44).

    வினைச்சொல் வகைப்பாடுகள்

    தமிழ் வினைசொற்களைப் பல்வேறு அடிப்படைகளில் பல வகைப்பாடுகளுக்கு  இலக்கணவியலார் உட்படுத்தியுள்ளனர். இதன் பயனாக பல்வேறுபட்ட வினைவகைப்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றுள் மெல்வினை, வல்வினை என்பது ஒரு வகை. வினைச்சொற்கள் ஏற்கும் காலம்காட்டும் உருபுகளை அடிப்படையாக வைத்து; கிரால் என்பவர் பன்னிரண்டு வகைகளாகப் பிரிப்பார். ஆர்டன் என்பவர் ஏழு வகைகளாகப் பிரிப்பார். பேரா.பொன் கோதண்டராமன் அவர்கள் வினைச்சொற்கள் ஏற்கும் காலங்காட்டும் உருபுகளை அடிப்படையாகக் கொண்டு ஆறு வகைகளாகவும்; ஒழுங்கில்லா வினைகளையும் சேர்த்து மொத்தம் ஏழாகவும் வகைப்படுத்தியுள்ளார். வினையடிகளை அடிப்படையாக வைத்து தனிவினை, கூட்டுவினை எனப்பிரிப்பர். வினைச்சொற்களின் பொருட்பண்புகளை அடிப்படையாக வைத்து; செயல்வினை, நிலைவினை, இயங்குவினை என்றும் பிரிப்பர். தன்வினை பிறவினை என்பது மற்றுமொரு வகைப்பாடு. தெரிநிலைவினை குறிப்புவினை என்பது மரபிலக்கணங்கள் கூறும் வகைப்பாட்டு முறை. செய்வினை, செயப்பாட்டு வினை என்பதொருமுறை. முற்று, எச்சம் என்பது மற்றுமொரு வகை. வினைச்சொல்லுடன் பிற வினைகள் இணைவதனை வைத்து முதல்வினை, துணைவினை என்ற பகுப்பையும் காணலாம். இவ்வாறு தமிழ்வினைச்சொற்கள் பலவகைகளான பகுப்புகளைக் கொண்டுள்ளன.

    மலையாளத்தில்  வினைச்சொல் பாகுபாடு

    கேரளபாணினியம் என்ற மலையாள இலக்கண நூலின் ஆசிரியரான ஏ.ஆர். இராஜ இராஜ வர்மா அவர்கள் மலையாள மொழியின் வினைச்சொற்களை வினைமுற்று, வினையெச்சம் என்று இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்.

    தற்கால மலையாள மொழிக்கு இலக்கணம் வகுத்த ஆர்.இ.ஆசர் அவர்கள் வினைச்சொற்களை வினைமுற்று, வினையெச்சம் என்ற இரு பிரிவுகளாகவே பிரித்துள்ளார்.

    தற்கால மலையாள வினைச்சொற்களைக் குறித்து ஆய்ந்த ஏலியாஸ் என்பவர் வினைகளை வினைமுற்று, வினையெச்சம் என்றே பிரித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    மலையாள மொழியின் வினைச்சொற்களை பேரா. சூரநாடுகுஞ்ஞன் பிள்ளை அவர்கள் பதினாறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இறந்தகால இடைநிலைகளின் அடிப்படையில் இந்த வினைப்பகுப்பு அமைந்துள்ளது. மலையாளப் பேரகராதியிலும் இராமசரிதம் , கன்னச இராமாயணம், இராம கதாப்பாட்டு, பாரதமாலை போன்ற மலையாள நூல்களின் விளக்கவியல் இலக்கணங்களிலும் இம்முறையே பின்பற்றப்பட்டுள்ளது.

    திராவிட மொழிகளைக்குறித்து ஆராய்ந்த பேரா. ஜான் சாமுவேல் அவர்கள் அவற்றின் வகைப்பாடுகளைக் குறித்து கீழ்க்கண்டவாறு விளக்குவார்.

    ”திராவிட மொழிகளின் வினைச்சொற்களில் தன்வினை, பிறவினை, இயக்குவினை என்ற மூவகையான வினை வகைகளையும், ஏவல் வினை, நிபந்தனை வினை, வியங்கோள் வினை என்னும் பல்வேறு வினைப்பொருள்களையும் (Moods) காணலாம். வினைச்சொற்களின் பொருளைச் சிறப்பிக்க ஐரோப்பிய மொழிகளில் முன்னொட்டுக்கள் (Prepositions) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் திராவிட மொழிகளில் துணை வினைகளும் எச்சமாக அடுக்கும் வினைகளும் (Particles and Infinitives) பயன்படுத்தப்படுகின்றன. இம்மொழிகளின் வினைச்சொற்களைக் காலங்காட்டும் முறை, வினையின் தன்மை, பால்காட்டும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கூறுபடுத்தலாம்.

    (பேரா.ஜான் சாமுவேல், திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஓர் அறிமுகம், 2008, பக், 176).

    எனவே தமிழிலும் மலையாளத்திலும் பல அடிப்படையிலான வினைச்சொற்களின் வகைப்பாடுகள் காணப்படினும் இவற்றுள் எந்த அடிப்படையிலான பகுப்பு தமிழ் மலையாள வினைச்சொற்களை  தெளிவாக விளக்க பயன்படுமோ அப்பகுப்பே சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தமிழ் – மலையாள கணினி வழி மொழிபெயர்ப்பிற்கு வினைச்சொற்கள் குறித்த தெளிவினை அளிக்க இப்பகுப்பு முறைகள் இன்றியமையாததாகும். இங்ஙனம் அமைந்துள்ள பல பகுப்பு முறைகளில்     வினைமுற்று, வினையெச்சம் என்ற பகுப்புமுறை தமிழ் – மலையாள மொழிகளில் நவீன இலக்கண ஆசிரியர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழில் வினைமுற்று

    தமிழ் மொழியில் பொருள் நிறைவுற்று / முற்று பெற்று வரும் வினைகள் வினைமுற்று என்ற வகையில் அடங்கும். இவ்வினைகள் வினையடி, கால இடைநிலை, பால், இட விகுதி என்ற அமைப்பில் அமையும்.

    மலையாள மொழியில் வினைமுற்று பிற திராவிட மொழிகளிலிருந்தும் வேறுபட்ட அமைப்பினைக் கொண்டுள்ளது. இவ்வினைமுற்றுக்களில் எழுவாய்க்கும் வினைமுற்றுக்கும் எவ்வித இயைபும் கிடையாது. அதாவது பால், எண், இடவிகுதிகள் மலையாள வினைமுற்றுக்களில் காணப்படுவது இல்லை.

    வினைமுற்று வகைகள் 

    வினைப்பொருண்மையின் அடிப்படையில் மூன்று வகையான வினைமுற்று வகைகள் தமிழிலும் மலையாளத்திலும் அமைந்துள்ளன. அவையாவன,

    • ஏவல் வினைமுற்று ( Imperative Mood)
    • கூற்று அல்லது செயல் வினைமுற்று (Indicative Mood)
    • வியங்கோள் வினை முற்று ( Optative Mood)

    இவ்வகைகளுள் தமிழ் – மலையாள மொழிகளில் வழங்கப்படும் செயல் வினைமுற்றுக்கள் மூன்று காலங்களுக்கும் ஏற்ப அமையும் முறைகள் இங்கே ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்யப்படுகின்றன.

    செயல்வினை முற்றுக்கள் (Indicative Verb Forms)

    செயல்வினை முற்றுகள் ஒரு செயல் நிகழ்ச்சியை நடுவு நிலையில் வெளிப்படுத்த உதவுகிறது. ( இசுராயேல் பக்-16). இவை திணை, பால், எண், இட உருபுகளை ஏற்று வரும். செயல் வினைகளில் உடன்பாடும் எதிர்மறையும் உண்டு.

    மலையாளத்தில் செயல்வினை வடிவங்கள் காலங்காட்டும் உருபுகளை மட்டும் எடுத்து வரும். அவை திணை, பால், எண், இட உருபுகளை ஏற்பதில்லை. மலையாளத்திலும் உடன்பாட்டு செயல்வினை முற்றுக்களும் எதிர்மறை செயல்வினை முற்றுக்களும் உண்டு.

    உடன்பாட்டு செயல்வினை முற்று

    தமிழில் உடன்பாட்டு செயல்வினை வடிவங்கள் பால், எண், இட உருபுகளை ஏற்றே வருகின்றன. அப்போது அதன் அமைப்பு கீழ்க்கண்டவாறு அமையும்.

    [ வினையடி + காலங்காட்டும் உருபு + எண் உருபு + இடவிகுதி ]

    தமிழில் பால், எண், இட உருபுகள் மூன்றும் ஒன்றாக இணைந்து ஒரே உருபனாக, இம்மூன்று செய்திகளையும் உள்ளடக்கிய பாலறிகிளவியாக அமைகின்றது.

    எ.கா:

    வந்தான், வருவான், வருகிறான்

    மலையாளத்தில் உடன்பாட்டு வினை வடிவம் வினையடியையும், காலங்காட்டும் இட உருபனை மட்டுமே கொண்டு அமைகின்றது. அது, பாலறிகிளவிகளைக் கொண்டிருப்பதில்லை.

    இதன் அமைப்பு:

    [ வினையடி + காலங்காட்டும் உருபு]

    எ.கா: (அவன்) வன்னு, (அவன்) வருன்னு, (அவன்) வரும்

    தமிழில் வினை முற்றிலிருந்தே எழுவாயின் திணை, பால், எண் மற்றும் இடத்தினை அறிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் மலையாளத்தில் இவ்வாறு அறிய முடிவதில்லை. இதற்குப்பதிலாக, எழுவாயின் பதிலிடுபெயர் வினைமுற்றின் முன்பு இணைக்கப்படுகின்றது. அப்பதிலிடுபெயரிலிருந்தே எழுவாயின் திணை, பால், எண் மற்றும் இடத்தினை அறிந்துகொள்ள இயல்கின்றது. இம்மாறுபாடு அமைப்பு அளவிலும் வெளிப்பட்டு, இரு மொழிகளுக்கும் இடையே சிறப்பான வேறுபாடாக அமைகின்றது.

    [ அவன் வருன்னு = வருகிறான் ]

    தமிழிலும் மலையாளத்திலும் மூன்று காலங்களுக்கும் உடன்பாட்டு வினைமுற்றுக்கள் அமைவதைக் கீழே காணலாம். 

    இறந்தகால உடன்பாட்டு செயல்வினை முற்றுக்கள்

    தமிழ்மலையாளம்

    ”வருதல்” எனும் வினைக்கு இறந்த காலத்தில் தமிழிலும் மலையாளத்திலும் அமையும் செயல் வினைமுற்று வடிவங்களைக் கீழே காணலாம். 

    எண் .பெயர் /

    மூ.பெ.

    வி.மு. ..பெயர்/

    மூ.பெ.

    வி.மு.
    1 நான் வந்தேன் ஞான் வன்னு
    2 நாம்- உ.த.பன் வந்தோம் நாம் வன்னு
    3 நாங்கள்-உ.தா.த.பன் வந்தோம் ஞங்ஙள் வன்னு
    4 நீ வந்தாய் நீ வன்னு
    5 நீங்கள்-மரி.ஒ வந்தீர்கள் நிங்ஙள் வன்னு
    6 நீங்கள்-பன் வந்தீர்கள் நிங்ஙள் வன்னு
    7 அவன் வந்தான் அவன் வன்னு
    8 அவள் வந்தாள் அவள் வன்னு
    9 அவர் வந்தார் அத்தேகம் வன்னு
    10 அவர்கள் வந்தார்கள் அவர் வன்னு
    11 அது வந்தது அது வன்னு
    12 அவை வந்தன அவ வன்னு

    தமிழில் இறந்தகால உடன்பாட்டு செயல் வினைமுற்றுக்கள் பெயர் மற்றும் மூவிடப்பெயர்களுக்கு பத்து வெவ்வேறு விதமான பாலறிகிளவிகளை ஏற்று அமைகின்றன. அவையாவன,

    1.ஏன் 2.ஓம் 3.ஆய் 4.ஈர்கள் 5.ஆன் 6.ஆள் 7.ஆர் 8.ஆர்கள் 9.து 10.ன.

    ஆனால் மலையாள இறந்தகால வினைமுற்றுக்கள் இவற்றை ஏற்று வருவதில்லை. எனவே அமைப்படிப்படையில் தமிழிலும்  மலையாளத்திலும் இறந்தகால உடன்பாட்டு வினைமுற்றுக்களில் அமையும் சிறப்பான வேறுபாடாக இது கருதப்படுகின்றது.

    [ வந்தான் = வன்னு ]

    ”வருதல்” எனும் வினைக்கு இறந்த காலத்தில் தமிழிலும் மலையாளத்திலும் அமையும் வினைமுற்று வடிவங்களை மேலே கண்டோம். மலையாள வினைகள் இறந்த காலத்தில் எவ்வித பாலறிகிளவியையும் எந்த ஒரு பதிலிடு பெயருக்கும் ஏற்பதில்லை என்பது அதன் மூலம் தெளிவாகின்றது. இனி நிகழ்காலத்திற்கு ”வருதல்” எனும் வினைக்கு இருமொழிகளிலும் அமையும் வினைமுற்று வடிவங்களையும் அவற்றின் பாலறிகிளவிகளையும் காண்போம். 

    நிகழ்கால உடன்பாட்டு செயல்வினை முற்றுக்கள்

    தமிழ்மலையாளம்

    எண் .பெயர்

    மூ.பெ.

    வி.மு. ..பெயர்

    .மூ.பெ.

    வி.மு.
    1 நான் வருகிறேன்/

    வருகின்றேன்

    ஞான் வருன்னு
    2 நாம்- உ.த.பன் வருகிறோம்/

    வருகின்றோம்

    நாம் வருன்னு
    3 நாங்கள்-உ.தா.த.பன் வருகிறோம்/

    வருகின்றோம்

    ஞங்ஙள் வருன்னு
    4 நீ வருகிறாய்/

    வருகின்றாய்

    நீ வருன்னு
    5 நீங்கள்-மரி.ஒ வருகிறீர்கள்/

    வருகின்றீர்கள்

    நிங்ஙள் வருன்னு
    6 நீங்கள்-பன் வருகிறீர்கள்/

    வருகின்றீர்கள்

    நிங்ஙள் வருன்னு
    7 அவன் வருகிறான்/

    வருகின்றான்

    அவன் வருன்னு
    8 அவள் வருகிறாள்/

    வருகின்றாள்

    அவள் வருன்னு
    9 அவர் வருகிறார்/

    வருகின்றார்

    அத்தேகம் வருன்னு
    10 அவர்கள் வருகிறார்கள்/

    வருகின்றார்கள்

    அவர் வருன்னு
    11 அது வருகிறது/

    வருகின்றது

    அது வருன்னு
    12 அவை வருகின்ற அவ வருன்னு

    தமிழில் நிகழ்காலத்திற்கும் 1.ஏன் 2.ஓம் 3.ஆய் 4.ஈர்கள் 5.ஆன் 6.ஆள் 7.ஆர் 8.ஆர்கள் 9.து 10.ன. என்ற பத்து வித பாலறிகிளவிகளும் வினைமுற்றில் வருகின்றன. ஆனால் மலையாள வினைமுற்றுக்கள் அதன் ஈற்றில் எவ்வித பாலறிகிளவியையும் ஏற்பதில்லை. நிகழ்காலங்காட்டும் “உன்னு” எனும் உருபு மட்டுமே ஈற்றில் வந்து வினை முடிகின்றது. இவ்வேறுபாடு இங்கே குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

    [வருகிறான் = வருன்னு] 

    எதிர்கால உடன்பாட்டு செயல் வினை முற்றுக்கள்

    தமிழ்மலையாளம்

    ”வருதல்” எனும் வினைக்கு எதிர் காலத்தில் தமிழிலும் மலையாளத்திலும் அமையும் வினைமுற்று வடிவங்களைக் கீழே காணலாம். தமிழில் எட்டு வகையான பாலறிகிளவிகள் முக்காலத்திற்கும் ஒரே போன்று அமைகின்றன. தமிழில் அஃறிணைப்பதிலிடு பெயரான ”அது” மற்றும் ”அவைக்கு” எதிர்கால உடன்பாட்டு வினைமுற்றுக்கள் ”உம்” என்று மட்டுமே அமைகின்றன. இவ்வாறு நோக்குகையில் தமிழின் அஃறிணைப்பதிலிடுபெயர்களின் பாலறிகிளவிகளான ”உம்” மட்டுமே மலையாளத்தின் மூன்று காலங்களுக்கும் பாலறிகிளவிகளாக அமைந்து வருகின்றது என்று  கருத ஏதுவாகின்றது. 

    எதிர்கால உடன்பாட்டு செயல் வினை முற்றுக்கள்

    தமிழ்மலையாளம்

    எண் .பெயர்/

    மூ.பெ.

    வி.மு. ..பெயர்/

    .மூ.பெ.

    வி.மு.
    1 நான் வருவேன் ஞான் வரும்
    2 நாம்- உ.த.பன் வருவோம் நாம் வரும்
    3 நாங்கள்-உ.தா.த.பன் வருவோம் ஞங்ஙள் வரும்
    4 நீ வருவாய் நீ வரும்
    5 நீங்கள்-மரி.ஒ வருவீர்கள் நிங்ஙள் வரும்
    6 நீங்கள்-பன் வருவீர்கள் நிங்ஙள் வரும்
    7 அவன் வருவான் அவன் வரும்
    8 அவள் வருவாள் அவள் வரும்
    9 அவர் வருவார் அத்தேகம் வரும்
    10 அவர்கள் வருவார்கள் அவர் வரும்
    11 அது வரும் அது வரும்
    12 அவை வரும் அவ வரும்

    [ வருவேன், வரும் = வரும்    ]

    வேறுபாடுகள்

    1. தமிழில் வினை முற்றிலிருந்தே எழுவாயின் திணை, பால், எண் மற்றும் இடத்தினை அறிந்துகொள்ள முடிகின்றது. மலையாளத்தில் அவ்விடம் இடம்பெறுகின்ற எழுவாயின்   பதிலிடுபெயர் வினைமுற்றின் முன்பு சேர்க்கப்படுகின்றது.      எனவே மலையாளத்தைப் பொறுத்தவரையிலும் அப்பதிலிடுபெயரிலிருந்தே எழுவாயின் திணை, பால், எண்    மற்றும் இடத்தினை அறிந்துகொள்ள இயல்கின்றது. இரு    மொழிகளுக்கும் இடையே அமையும் சிறப்பான வேறுபாடாக    இது அமைகின்றது.

    [ அவன் வருன்னு = வருகிறான் ]

    1. தமிழில் இறந்தகால வினைமுற்றுகள் பத்து வெவ்வேறு வித பாலறிகிளவிகளைப் பெற்றே அமைகின்றன. ஆனால் மலையாளத்தில் இறந்தகால    வினைமுற்றுக்களுடன் எவ்வித      பாலறிகிளவிகளும் வருவதில்லை. இது தமிழ்-மலையாள   இறந்தகால உடன்பாட்டு வினைமுற்றுக்களில் அமையும் சிறப்பான வேறுபாடாகக்   கருதப்படுகின்றது.

    [ வந்தான் = வன்னு ]

    1. தமிழில் 8 வித பாலறிகிளவிகள் எதிர்கால உடன்பாட்டு வினைமுற்றினைக் குறிக்க பயன்படுகின்றன. மேலும் இரண்டு அஃறிணைப் பெயர்களுக்கும் ”வரும்” என்ற ஒரேயொரு   முறையே உள்ளது. (எ.கா: அது வரும்). மலையாளத்தில்    உயர்திணைக்கும் அஃறிணைக்கும் “வரும்” என்ற ஒரேயொரு    முறையே அமைகின்றது. இருமொழிகளுக்கும் இடையே    அமையும் குறிப்பிடத்தக்க வேறுபாடாக இது அமைகின்றது.

    [ வருவேன், வரும் = வரும்]

    ***** 

    துணைநூற்பட்டியல்

    1. Thomas Lehmann – A Grammar of Modern Tamil
    2. E.Asher –           Malayalam
    3. Eugene A. Nida – Morphology
    4. S.Subramoniam – Dravidian Comparative Grammar
    5. Ravishankar . S. Nair – A Grammar of Malayalam
    6. R. Gopalapillai – Linguistic Interpretation of Lilathilakom
    7. Collected Papers on Malayalam Language and Linguistics – ISDL Publication
    8. M.Israel – The Treatment of Morphology in Tolkappiam
    9. Naduvattom Gopalakrishnan -Early Middle Malayalam
    10. N.Rajasekharan Nair – Auxiliary Verbs in Malayalam
    11. N.Ezhuthaccan -The History of the Grammatical Theories in Malayalam
    12. Arden – Grammar of Modern Tamil
    13. K.M.George – Malayalam Grammar and Reader
    14. பேரா.பொன் கோதண்டராமன் – இக்காலத்தமிழ் இலக்கணம்
    15. ஏ.ஆர்.இராஜ இராஜ வர்மா – கேரள பாணிணியம்
    16. தேவநேயப்பாவாணர் – மொழி மரபு
    17. பரமசிவம்.கு. – இக்காலத்தமிழ் மரபு
    18. அகத்தியலிங்கம்.ச – தமிழ் மொழி அமைப்பியல்
    19. பேரா.ஜான் சாமுவேல் – திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஓர் அறிமுகம்.
    20. கால்டுவெல் – திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
    21. நன்றி: பேரா. நடுவட்டம் கோபாலகிருட்டினன் – திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம்.
    22. நன்றி: பேரா. இரவிசங்கர் எஸ்.நாயர் – மொழியியல் துறை, காசர்கோடு மத்தியப்பல்கலைக்கழகம்.
    23. முனை.செ.வை சண்முகம் – கேரளபாணினியம் – முகவுரை – மொழியியல் ஆய்வு.
    24. முனை.செ.வை சண்முகம் – தொல்காப்பியரின் சொல்லியல் கோட்பாடு
    25. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – சிவலிங்கனார்
    26. பேரா.சிவா.எம்.ஏ. – தமிழ்மொழி

    *****

    கட்டுரையாசிரியர்
    விரிவுரையாளர், தமிழ்த்துறை,
    கேரளப்பல்கலைக்கழகம்,
    காரியவட்டம், திருவனந்தபுரம்.

     

     

     

     

    Share
  • துயர் போக்கடா!

     கவிஞர் இடக்கரத்தான்

     

     

    மனிதமுமே சிறிதேனும் இல்லார் – புனித

    மண்தனையும் ஏய்த்துவக்கும் பொல்லார் – வாழ்வின்

    புனிதமதை மிகமறந்து

    புவிதனையும் மிகப்படுத்தி

    வாழ்வார் – வீழ்ந்து – தாழ்வார்!

     

    பிறர்துயரில் மகிழ்ச்சிமிகக் கொள்வார் – பெரும்

    பொருள்பறிக்க வெறிபிடித்துத் துள்வார் – உயர்

    அறவழியை மிகமறந்து

    ஆதாயம் காணவழி

    தேடுவார் – ஓடி – ஆடுவார்!

     

    பேராசை பிடித்துமிக அலைவார் – பெரும்

    பேய்த்தனங்கள் செய்ததனில் குலைவார் – என்றும்

    நேராக்க முடியாத

    நெளிவுவழி தனில்நடந்து

    கெடுவார் – துயர் – படுவார்!

     

    அன்புவீசை என்னவிலை? என்பார் – பிறரை

    அடித்தவரும் அதன்துயரை உண்பார் – என்றும்

    என்புதோல் போர்த்தவரும்

    எளிதாக மண்ணுலகை

    ஏய்ப்பார் – நலம் – தீய்ப்பார்!

     

    தனையசைப்பார் யாருமிலை சொல்வார் – பெரும்

    தலைக்கனத்தில் பிறர்கனவைக் கொல்வார் – என்றும்

    தனைஆழம் புதைத்தழிக்கும்

    தகுதியற்ற வழிதன்னை

    நாடுவார் – தேடி – ஓடுவார்!

     

    புனையாரின் குருட்டுத்தனம் புரிவார் – கண்ணைப்

    பொத்திடவும் உலகொளிரின் எரிவார் – பெரும்

    ஆனைவெளிறி ஓடுதல்போல்

    அதட்டிவரும் மெய்க்கெனவே

    அஞ்சுவார் – அழுது – கெஞ்சுவார்!

     

    மேலொருவன் பார்ப்பதனை மறப்பார் – தனை

    மடக்கயாரும் இல்லையென்று பறப்பார் – எந்தக்

    காலமுமே ஏதும்செய்யா

    கடவுள்கற் சிலைஅஞ்சேன்

    என்பார் – தீ – பண்பார்!

     

    தெய்வம்நின்று கொல்லுமெனல் பொய்யடா – உடன்

    தேடிவந்து பாய்ந்தடித்தல் மெய்யடா – இனிச்

    செய்வதையும் நலம்காக்கச்

    செய்வதற்கு நினைவலைகள்

    தேக்கடா – துயர் – போக்கடா!

     

     

    Share
  • இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 2

    -முனைவர்.வே.மணிகண்டன்

    வார்ப்பு இதழ் அறிமுகம்

    வார்ப்பு 1998-ஆம் ஆண்டின் முற்பகுதியில் ‘நிக்குமோ நிக்காதோ’ என்ற பெயரில் மூன்று கவிஞர்களின் கவிதைகளுடன் தொடங்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு ‘நிக்குமோ நிக்காதோ’ என்ற பெயரில் இருந்து டப்ளின்.காம்  என்ற இணையத் தளப்பெயருக்கு வார்ப்பு மாறியது. அம்மாற்றம் பெரிய மாற்றத்தைக் கவிஞர்கள், இணையப்பயனர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. பிறகு கவிஞர் இசாக் அவர்களின் ஆலோசனைப்படி கவிஞர் மாலியன் அவர்களால் ‘வார்ப்பு’ என்ற பெயர் சூட்டப்பட்டது. தொடக்கத்தில் இலவச இணைய வழங்கியில்; தொடங்கப்பட்ட வார்ப்பு படிப்படியாக வளர்ச்சி நிலையை அடைந்தது.வார்ப்பு இதழின் பதிப்பாசிரியரான பா.மகாதேவன், உதவி ஆசிரியர்களான பிரியானா ராஜேந்திரா, ரமணன், ஆலோசனை வழங்குபவர்களான இசாக், ரவி சுவிஸ் , நந்தா கந்தசாமி, அருள்அரசி, ரஞ்சினி ஆகியோரின் பெரும் முயற்சியினால் காலத்தோடு மாறும் இணையத்தில் வார்ப்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

    வார்ப்பு இதழின் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள்

    ‘கவிதை இதயங்களின் துடிப்பு’ என்னும் இலைச்சினையுடனும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உயரிய கொள்கையுடனும் வெளிவரும் வார்ப்பு இதழானது கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரை நிகழ்வுகள், படமும் வரிகளும், சரம், நூலகம், எம்மைப்பற்றி, கருத்துக்கள், மொழிபெயர்ப்பு கவிதைகள் ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே  பெற்று வெளிவருகிறது. கவிஞர்கள், இணையப்பயனர்கள், விமர்சகர்கள் ஆகியோரின் முழுமையான பங்களிப்பால் முழுக்க முழுக்கக் கவிதை தொடர்பான படைப்பாக்கங்களை வெளியிடும் நோக்கில் வார்ப்பு இதழ் தொடங்கப்பட்டது.

    ‘எளிமையே பேரழகு’ என்னும் பதத்துக்கு உதாரணம் வார்ப்பு தளம்தான். சிரமம் இல்லாத இணைப்புகளாலும் புத்துணர்ச்சியூட்டும் வண்ணங்களாலும் வலைப்பக்கம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கவிதைகளுக்கும் படைப்புகளுக்கும் பொறுத்தமான புகைப்படங்களைத் தேடிப் பிடித்து இணைத்து படைப்புகளை அழகுபடுத்தும் பணி பெரிதும் பாராட்டத்தக்கது’எனக் கவிதைக்கான சிற்றிதழ் அணி வார்ப்பு பற்றிய தமது கருத்தைத் தெரிவித்துள்ளது.

    வார்ப்பு இதழானது கவிதைகளை மட்டுமல்லாது கவிஞர்கள், கவிதை விமர்சகர்கள், இணையப்பயனர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழ்கிறது. கருத்துக்களை தெரிவிக்கும் தெரிந்து கொள்ளும் களமாகவும் இவ்விதழ் உருபெற்றுள்ளது. 25.09.2008 வரை 359 கவிஞர்களையும் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளையும் வார்ப்பு இதழ்  தன்னகத்தே ஒருங்கiணைத்துள்ளது.

    ‘உங்கள் படைப்புகள் யாவும் யுனிகோடு எழுத்துரு அமைப்பில் எழுதப்பட வேண்டும் என்பதை தெரிவிக்கிறோம். எமக்கு வரும் படைப்புகளை நாம் யுனிகோடு எழுத்துருவுக்கு மாற்றும்போது அப்படைப்புகள் பல விதங்களில் சிதைவுறுகின்றன. உதாரணமாக கோவலன் என்ற பெயர் காவலன் என மாற்றப்பட்டால் அப்பிழையை நாம் அறிந்துகொள்ள வாய்ப்பு மிகக்குறைவு. ஆகவே, படைப்பாளிகளே படைப்புகளை யுனிகோடு எழுத்துருவில் எழுதி அனுப்பினால் அவ்வாறான பிழைகளையும் , எழுத்துப் பிழைகளையும் சீர்செய்து கொள்ள முடியும் என நம்புகிறோம்.

    உங்களுடைய கவிதைகள் ஏற்கனவே வார்ப்பில் இடம்பெற்றிருந்தால் தயவுசெய்து உங்களுடைய வார்ப்பு அடையாள இலக்கத்துடன (கவிஞர்கள் வரிசையில் உங்களுடைய பெயரோடு இருக்கும் எண்) சேர்த்துப் படைப்புகளை அனுப்பிவையுங்கள். படைப்பாளிகளும், படைப்புகளும் அதிகரிக்கப் படைப்புகளை பிரசுரிப்பது தொடர்பான சிக்கல்களும் அதிகரிக்கின்றன. சில சமயங்களில் ஒரு படைப்பாளியை இரு வேறு பெயர்களில் அறிமுகப்படுத்தும் தவற்றினைத் தவிர்த்துக் கொள்ள எமக்கு இந்த அடையாள இலக்கப்பிரயோகம் பெரிதும் உதவும்.

    கவிதைகளோடு அவற்றுக்குப் பொருத்தமான படங்களை இணைத்து அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பும் படங்களால் எழும் சட்டச்சிக்கல்களை எம்மால் எதிர்கொள்ள முடியாது. உங்களுடைய கவிதைத் தொகுப்புகளின் அட்டைப்படங்களை வேண்டுமானால் இணைத்து அனுப்பலாம்.

    கவிதைத் தொகுப்பை நூலகம் பகுதியில் அறிமுகம் செய்ய விரும்பினால் தொகுப்பின் பெயர், அட்டைப்படம், கவிஞரின் பெயர், தொகுப்பு கிடைக்குமிடம் போன்ற விடயங்களை இணைத்து அனுப்பிவையுங்கள்’6.

    வார்ப்பு ஆசிரியர் குழுவினால் இடப்பட்டுள்ள இக்கடிதத்தின் வாயிலாக வார்ப்பு இதழ் அனைத்துக் கணினிகளிலும் தெரியும் விதமாக யுனிகோடு; எழுத்துருவில் மாறியுள்ளமையும், ஆகையால் படைப்புக்களைப் படைப்பாளர்கள் பிற எழுத்துருக்களில் இதழுக்கு அனுப்பாமல் யுனிகோடில் மட்டும் அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், படைப்புகளை வார்ப்பு இதழுக்கு முன்பிருந்தே அனுப்பும் கவிஞர்கள் இதழில் அக்கவிஞருக்கு தரப்பட்டுள்ள இலக்கத்தையும் சேர்த்து அனுப்பினால் எவ்வித கவிதை, பெயர் சிக்கல்கள் இன்றி கவிதைகள் இதழில் இடப்படலாம்.  எழுத்துப்பிழை, எழுத்துருச்சிக்கல் ஆகியவை தவிர்க்கப்பட்டு உலகத் தமிழர்கள் அனைவரும் படித்து பயனுறும் வகையில் கவிதைகள் இவ்விதழில் தொகுக்கப்படுகின்றன.

    கவிஞர்கள்

    கவிஞர்கள் பகுதியில் கவிஞர்களின் பெயர்கள் வரிசைப்படுத்த ஒவ்வொரு கவிஞருக்கும் ஓர் அடையாள இலக்கம் தரப்பட்டுள்ளது. அடையாள இலக்கத்தை வார்ப்பில் உள்ள தேடுபொறியில் இட்டுத் தேடினால் கவிஞரின் பெயர், கவிதையின் பெயர் மற்றும் வார்ப்பில் வெளியான கவிஞரின் படைப்புகள் முழுவதையும் வாசிக்கும் வசதியைப் பெறலாம்.

    கவிதைகள்

    கவிதைகள் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளின் தலைப்புகள் எண் கொடுக்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கவிதைகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து படிக்க அக்கவிதையின் தலைப்பைச் சொடுக்கினால் கவிதை முழுமையாகக் காட்சிபடுத்தப்படும். மேலும் கவிஞரின் மற்ற படைப்புகளை ‘இவரின் பிற கவிதைகள்’ எனும் பகுதியில் தெரிவு செய்து படிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவிதைக்கும் வரும் கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவை பெறப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுகின்றன. கவிதைகளை நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் வசதியும், பிரதியெடுக்கும் வசதியும் கவிதைகள் பகுதியில் தரப்பட்டுள்ளன.

    மொழிபெயர்ப்புக் கவிதைகள்

    மொழிபெயர்ப்புக் கவிதைகள் பகுதியில் பதினேழு மொழிபெயர்ப்புக் கவிதைகள் தரவேற்றப்பட்டுள்ளன. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களான கலீல் கிப்ரான், எரிக் பிரைட், ஜாவேத் அக்தர், தஸ்லீமா நஸ்ரின், கிறிஸ்ரா விஸ்ரரி, பிராபுல் சங்கர்  ஆகியோரின் படைப்புகளை மதியழகன் சுப்பையா, புதியமாதவி, ரஞ்சினி ஆகிய படைப்பாளர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள் பகுதியில் ஐம்பதிற்கு மேற்பட்ட கவிதை நூல்களுக்கு மதிப்புரைகளும் விமர்சனங்களும் விமர்சகர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒரு கவிதை நூலுக்கு ஒரு விமர்சனம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. சில கவிதை நூல்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பல விமர்சனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, ஒரு கவிதை நூலுக்குப் பல விமர்சனங்கள் அளிக்கப்படுவதால் பல கோணங்களில் அக்கவிதை நூலுக்கான விமர்சனங்கள் இணையப் பயனர்களுக்கு புதுவித அனுபவத்தையும் ,நூலின் மேல் பெரும் தாக்கத்தையும் அளிப்பதாகத் திகழ்கின்றன. புத்தகங்களின் அட்டைகள் வருடப்பட்டுப் பிரதியெடுத்து விமர்சனங்களொடு இணைக்கப்பட்டிருப்பது இப்பகுதிக்கு மேலும் பொலிவூட்டுகிறது. பெரும்பாலும் விமர்சனங்கள் பகுதியில் புலம்பெயர்வு, பெண்ணியம் தொடர்பான கவிதை நூல்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளன.

    நேர்காணல்கள்

    நேர்காணல் பகுதி இவ்விதழில் மற்றைய பகுதிகளை விட குறைவான ஆக்கங்களை பெற்றுள்ள பகுதியாகத் திகழ்கிறது. இப்பகுதியில் மீரா, அப்துல் இரகுமான், புதியமாதவி, நிரஞ்சினி, தீபச்செல்வன், அனார், ரஞ்சினி ஆகியோரின் நேர்காணல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

    கட்டுரைகள்

    கட்டுரைகள் பகுதியில் பதினைந்து கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் கவிதைப் பற்றிய கட்டுரைகளாகப் படைக்கப்பட்டுள்ளன. புதுக் கவிதை, ஹைக்கூ, சில கவிஞர்களின் வரலாறு, நூல் கண்காட்சி, பெண்கள் சந்திப்பு, கவி அரங்கம் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

    நிகழ்வுகள்

    நிகழ்வுகள் பகுதியில் ஐம்பத்திற்கும் மேற்பட்ட நிகழ்வுகள் தரவேற்றப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஒருங்குகுறி எழுத்துருவில் மட்டுமே தகவல்கள் அளிக்கப்பட வேண்டும். இதற்காக நிகழ்வுகள் பகுதியிலேயே தமிழா, புதுவை ஆகிய ஒருங்கு குறி எழுத்துரு எழுதிகளும், பொங்குதமிழ் எழுத்துருமாற்றியும் இடம் பெற்றுள்ளன. புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீடு, பெண்கள் சந்திப்பு,கவிதை, கட்டுரை, சிறுகதைப் போட்டிகளுக்கான அறிவிப்பு, பட்டிமன்றம், கவிஅரங்கம் பற்றிய அறிவிப்புகள் ஆகியவை நிகழ்வுகள் பகுதியில் தரவேற்றப்படுகின்றன.

    படமும் வரிகளும்

    ‘படமும்…வரிகளும்’ பகுதியானது கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்பக் கவிதை எழுதும் பகுதியாகும். இப்பகுதியானது இணையப் பயனர்களின் மனத்தைத் தூண்டி கவிஞர்களாக மாற்றும் வகையில் படங்களும் அவற்றிற்கேற்ப தலைப்புகளும் தரப்பட்டிக்கும். படங்களுக்கேற்ப இப்பகுதியில் கவிதையைப் படைக்க தமிழ் ஒழுங்குகுறி எழுத்துருக்களும் இப்பகுதியில் தரப்பட்டுள்ளன. பெயர், மின்னஞ்சல், நாடு ஆகியவற்றைக் குறிப்பிடவும் கவிதை எழுதவும் இப்பகுதியிலேயே வசதிகள் வழங்கப்படுகின்றன. ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகள் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. இப்பகுதி அறிமுக கவிஞர்களைப் பெருவாரியாக உருவாக்கும் பகுதியாகவும், பிற தமிழ் இணைய இதழ்களில் இல்லாத புதுமையான பகுதியாகவும் கருதப்படுகிறது.

    சரம்

    கவிதை தொடர்பான இணைய இதழ்கள், வலைப் பதிவுகள் ஆகியவற்றைத் தொகுக்கும் பகுதி சரம். இப்பகுதியில் முழுக்க முழுக்க கவிதைத் தொடர்பான இணையத்தமிழ் தளங்களும் வலைப்பதிவுகளும் மட்டுமின்றி கவிதையை ஒரு பகுதியாகக் கொண்ட இணையதளங்களும், வலைப்பதிவுகளும் தொகுக்கப்படுகின்றன. இம்முயற்சியில் இதுவரை நூற்றுஐம்பத்திற்கும் மேற்பட்ட கவிதை தொடர்பான தளங்களும் வலைப்பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

    நூலகம்

    கவிஞர்களின் கவிதை நூல்களைக் காட்சிப்படுத்தும் பகுதியாக நூலகம் பகுதி திகழ்கிறது. கவிஞர்களின் கவிதைப் புத்தகங்கள் இப்பகுதியில் இடம் பெற விரும்பினால் கவிதை நூலின் அட்டைப்படம், கவிஞரின் பெயர், வெளியீடு, விலை மற்றும் நூல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வார்ப்பு இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால் அவை நூலகம் பகுதியில் காட்சிப்படுத்தப்படும். நூலகம் பகுதியில் இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் புலம்பெயர்வு, பெண்ணியம் சார்ந்த கவிதை நூல்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

    நிலாச்சாரல் இதழ் அறிமுகம்

    நிலாச்சாரல் தமிழ் இணைய இதழ் மே 18, 2001-இல் தொடங்கப்பட்டது. ‘மண்ணில் தெரியுது வானம்’ என்ற அடைமொழியுடன், இரு மொழி வார இதழாக இலண்டனிலிருந்து வெளிவருகிறது. பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் படைப்புகளையும் இவ்விதழ் சரிசமமாக தரவேற்றம் செய்கிறது. நிலாச்சாரலில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்துப் படைப்புகளையும் வாசகர்கள் இலவசமாகப் படிக்கலாம்.

    நிலாச்சாரலின் ஆசிரியர் நிலா என்னும் புனைபெயரில் எழுதும் நிர்மலா ராஜு. இவர் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியலில் இளநிலைப் பட்டமும் , திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். தற்போது மென்பொருள் தரக் கட்டுப்பாட்டு ஆலோசகராக இலண்டனில் பணிபுரிந்து வருகிறார். நாவல், சிறுகதை படைப்பதில் மிகுந்த ஈடுபாடுடைய நிலா இதுவரை சுமார் 60 சிறுகதைகளும், குழந்தைகளுக்கான சில கதைகளும், பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். நிலாச்சாரல், திசைகள், விகடன், கல்கி, பாக்யா, குங்குமம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. நிலாச்சாரலின் படைப்புகளைத் தொகுத்து நிலா புக்ஸ்  மூலம் வெளியாகும் மின்நூல்களுக்குப் பதிப்பாசிரியராகவும் பணியாற்றுகிறார்.

    நிலாச்சாரல் இதழில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள்

    நிலாச்சாரலில் கதை, கவிதை, கட்டுரை, ஆன்மீகம், சுவடுகள், நகைச்சுவை, சுயமுன்னேற்றம், அரசியல், பூஞ்சிட்டு, இலக்கியம், திரைச்சாரல், ஜோதிடம், தொடர்கள், கைமணம், கைமருந்து, நேர்காணல், தமிழாய்வு, மாணவர் சோலை எனப் பற்பல பிரிவுகளில் படைப்புகள் தொகுக்கப்படுகின்றன. தமிழ் தவிர, ஆங்கில மொழியிலும் படைப்புகள் வெளியிடப்படுகின்றன. தமிழில் மென்வாழ்த்துக்கள் அனுப்பும் வசதியும் இடம் பெற்றிருக்கின்றன.

    நிலாச்சாரலில் வெளியாகும் பல்வேறு படைப்புகள் தொகுக்கப்பெற்று மின் புத்தகமாகவும் நிலாபுக்ஸ் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. நிலாச்சாரலில் தன்னார்வத் தொண்டராக அல்லது பகுதி நேரப் பணியாளராக இணைந்து கொள்ளும் வாய்ப்பு வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது. இதழ் தயாரிப்பு உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குழுவினரால் மேற்கொள்ளப் படுகிறது,

    ‘படைப்புகளைக் கவனமாய்ப் பரிசீலித்துத் தகுதியானவையாகக் கருதப்படுபவை மட்டுமே நிலாச்சாரலில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் பல படைப்புகள் மெருகேற்றப்பட்டே பிரசுரிக்கப் படுகின்றன’7 எனத் தமது இதழில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும் திறம் குறித்து ஆசிரியர் நிலா கூறுகின்றனர்.

    ‘அச்சு இதழ்களைப் புதிய படைப்பாளிகள் நெருங்கவே முடியாத சூழலில் அவர்களுக்கு மேடை கொடுத்து அவர்களை வளர்த்;;தெடுக்கும் பணியை இணைய இதழ்கள் செய்து வருகின்றன’8 என்று நிலாச்சாரல் ஆசிரியர் புதிய படைப்பாளிகளின் திறமையை வெளிக்கொணரும் விதத்தினை விவரிக்கின்றார்.

     முன்னூறு வாரங்களாய் தவறாமல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலாச்சாரல் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் படைப்புகளை உள்ளடக்கி இருக்கிறது.  தரமான படைப்புகளை மெருகேற்றி வெளியிட்டு வருகிறது. குழந்தைகளுக்காகவும், மாணவர்களுக்காகவும் பிரத்யேகப் பகுதிகள் கொண்டு இளைய தலைமுறையின் மேல் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

    புதிய படைப்பாளர்களை ஊக்கப்படு;த்தவும் படைப்பிலக்கியங்களை வளர்த்தெடுக்கவும் நிலாச்சாரல் இதழும், நிலா புத்தக அங்காடியும் 2006-ஆம் ஆண்டிலிருந்து சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கி வருகிறது. நிலாச்சாரல் இதழில் பரிசுப்பெற்ற படைப்பாளரைப் பற்றிய அறிமுகச் செய்தி;களை  இதழில் தரவேற்றம் செய்து பெருமைப்படுததுகிறது.

    கதைகள்

    சிறுகதை இலக்கியத்திற்கு நிலாச்சாரல் இதழ் பெரும் பங்காற்றியுள்ளது. சிறுகதைப் பகுதியில் ரிசபன், எஸ்.ஷங்கரநாராயணன், ம.ந.ராமசாமி, நிலா, பெரிய நாயகி, மீனாகுமாரி, வாலம்பாள், கோபாலகிருஷ்ணன், சக்தி சக்திதாசன், நடராஜன், ஜெயந்தி சங்கர், ரிசிகுமார், சுகந்தி, சரவணன், சேவியர், என்.கணேசன், ஆல்பர்ட் மேலும் பல படைப்பாளர்களின் பங்களிப்பால் ஐந்நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைப் படைப்புகள் இவ்விதழில் தரவேற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான சிறுகதைகள் காதல்,தனிமனித நடத்தைகள், சமூகம் ஆகிய பொருண்மைகளில் படைக்கப்பட்டுள்ளன. ஆரம்பகாலச் சிறுகதைகள் புலம்பெயர்வு சார்ந்த கதைக் கருவைக் கொண்டவைகளாகப் படைக்கப்பட்டுள்ளன.

    கவிதைகள்

    கவிதைகள் பகுதியில் இளைய அப்துல்லாவின் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவரது பெரும்பான்மையான கவிதைகள் புலம்பெயர்வு சார்ந்த கவிதைகளாகப் படைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சேவியர், புஹாரி, சங்கர், புஷ்பா கிருஷ்ரி, ஈழநிலா, ரகசிவ் ஞானியார், நட்சத்திரன், மதுமிதா, சக்தி சக்திதாசன், புதியவன், கீதா மதிவாணன் ஆகிய கவிஞர்களின் பெரும் பங்களிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகளை ஆசிரியர் குழுவே கவிஞர்களின் அனுமதியுடன் இதழில் பதிப்பு செய்துள்ளது.

    நாவல்கள்

    நிலாச்சாரல் இதழில் நாவல்கள் ‘தொடர்கள்’ எனும் பெயரில் தரவேற்றப்படுகின்றன. இவ்விதழில் என்.கணேசனின் நீ நான் தாமிரபரணி, மனிதரில் எத்தனை நிறங்கள் , சுகந்தியின் நானென்றும் நீயென்றும், உனக்காக, கண்ணை மூடி காட்சி தேடி, வெண்ணிலவே வெண்ணிலவே, நரேனின் நாயகன் ஒரு நங்கை, ஜெய்யின் ஜய், ரிசபனின் நிலாவட்டம், நிலாவின் அழகிய மிருகம் ஆகிய நாவல்கள் நிலாச்சாரல் ஆசிரியர் குழுவால் தரவேற்றப்பட்டுள்ளன. நிலாச்சாரலில் பெரும்பாலான நாவல்களின் கதைக்கரு காதலை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.

    நிலாச்சாரல் இதழில் நாடகத்திற்கான பகுதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. படைப்பிலக்கிய வகைமைகளில் ஒன்றான நாடக இலக்கியப் படைப்புகள் படைப்பாளர்களாலும், ஆசிரியர்குழு உறுப்பினர்களாலும் தரவேற்றப்படவில்லை. கவிதை, சிறுகதை, நாவல் பகுதிகள் இதழ் தொடங்கப்பட்ட காலம் முதல் தொடர்ந்து வாரம் தவறாமல் தரவேற்றப்படுகின்றன.

    *************

    அடிக்குறிப்புகள்

    1. www.thinnai.com/?module=displaystory&story_id…format
    2. www.thinnai.com/?module=displaystory&story_id=60708024&format
    3. www.thinnai.com/?module=displaystory&story_id…format
    4. www.geotamil.com/pathivukal/VNG_ON_Pathivukal.htm
    5. www.madhiyalagan.blogspot.com/2006/11/3.html
    6. www.vaarppu.com/php/sendinfo_uni.php
    7. www.nilaraj.blogspot.com/2005/05/blog-post_14.html
    8. www.nilaraj.blogspot.com/2005/05/blog-post_14.html

    *******

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
    விழுப்புரம்.

    Share
  • இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1

     -முனைவர்.வே.மணிகண்டன்

    தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு இணையத்தமிழ். தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சியினையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஓலைச் சுவடிகள், பக்கங்களாக மாறி இன்று இணையத்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழும் இணையப் பயனாளர்களிடம் இணையத்தமிழ் இதழ்களை மிக எளிதாக எடுத்துச் செல்லும் சக்தி படைத்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் வலையேற்றப்படும் இணையத்தமிழ் இதழ்களில் உடனுக்குடன் படைப்புகள் வெளியிடவும், இலக்கிய விவாதங்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த முடிகிறது. படைப்பிலங்கியங்களுக்கு பெரும்பான்மையான இணைய இதழ்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் இணையத்தமிழ் இதழ்களில் எந்தெந்த நிலைகளில் தொகுக்கப்படுகின்றன என்பதைத் திண்ணை, பதிவுகள், நிலாச்சாரல், வார்ப்பு ஆகிய இணைய இதழ்களின் வாயிலாக இவ்வியல் ஆராய்கிறது.

    திண்ணை இதழ் அறிமுகம்

    ஜனநாயக ரீதியாக அனைத்துத் தரப்பினரும் தம்முடைய கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பொது மேடையாகத் திண்ணை இதழ் திகழ்கின்றது. மாறுபட்ட, முரண்பட்ட பல கருத்துகளுக்கும் களம் அமைத்துத்தரும் பணியை செவ்வனே திண்ணை இதழானது செய்கின்றது.

    திண்ணை ஓர் இலாப நோக்கற்ற இணைய இதழாகும். இவ்விதழ் வார இதழாக 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து இணையத்தில் தரவேற்றம் செய்யப்படுகின்றது. திண்ணை இதழின் ஆசிரியர் கோ.இராஜாராம். திண்ணையின் தொடக்க கால இதழ்கள் பெரும்பாலும் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டு காலம் முழுமை பெறாது வந்துள்ளன. திண்ணையின் முதல் இதழில் இலக்கியக் கட்டுரைகள் எனும் பிரிவில் மட்டும் பாவண்ணனின் ஒளிர்ந்த மறைந்த நிலா என்னும் கட்டுரை தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றைய பிரிவுகள் எந்தப் படைப்புகளும் இன்றிக் காணப்படுகின்றன.

    அரசியலும் சமூகமும், கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில்நுட்பமும், கலைகள், சமையல், இலக்கியக் கட்டுரைகள், நகைச்சுவையும் வித்தியாசமானவையும், கடிதங்கள், அறிவிப்புகள் ஆகிய பகுதிகளில் ஆக்கங்கள் தரவேற்றம் செய்யப்படுகின்றன.

    இணையப் புத்தக அங்காடியின் இணைப்பும், ஜெயபாரதன் இணையப்பக்கம் எனும் வலைப்பதிவின் இணைப்பும், தோழி.காம், வார்ப்பு, தமிழோவியம், மரத்தடி, பதிவுகள் ஆகிய இணையத்தமிழ் இதழ்களின் இணைப்புகளும், அகத்தியர் யாஹு குழுமம், ராயர் காப்பி கிளப்,  யாஹு குழுமம், தமிழ் உலகம் யாஹு குழுமம் ஆகிய தமிழ் இணையக் குழுமங்களின் இணைப்புகளும் திண்ணை இதழில் தரப்பட்டுள்ளன. திண்ணைத் தளத்திலேயே படைப்புகளையும், தகவல்களையும் மின்னஞ்சல் அனுப்பும் வசதியும் , பிரதி எடுக்கும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளன.

    திண்ணை இதழின் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள்

    திண்ணையில் பல வகையான இலக்கியப் படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளை வழங்குகின்றனர். கதை, கவிதை, நாடகம், நாவல் போன்ற தரமான படைப்புகள் திண்ணையில் வெளியிடப்பட்டுள்ளமையை அதன் முந்தைய இதழ்களைக் காணும் பகுதிக்கு சென்று பார்வையிடும்படி பழைய இதழ்கள் தொகுத்துத் திண்ணையில் வைக்கப்பட்டுள்ளன.

    ’திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளில் வரும் சம்பவங்களுக்கும், வெளிப்படும் கருத்துக்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், தொனிகளுக்கும் அந்தந்தப் படைப்பாளிகளே பொறுப்பு. திண்ணையில் வெளியிடப்படும் கதைகள், கட்டுரைகள் மூன்று வகையானவை. முதலாவது படைப்பாளிகளே திண்ணைக்கு அனுப்பிப் பிரசுரிக்கக் கோருபவை. இப்படிப்பட்ட படைப்புகள் வேறு பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்ய விரும்புபவர்கள் நேரடியாக அந்தப் படைப்பாளிகளையே தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களது மின்னஞ்சல் முகவரிகள் திண்ணையில் வெளியிடப்படுகின்றன. இரண்டாவது, திண்ணைக் குழு மொழிபெயர்க்கும் படைப்பாளிகள். இந்தக் கட்டுரைகளை திண்ணையில் மொழிபெயர்த்துப் பிரசுரம் செய்யத் தேவையான அனுமதி பெரும்பாலும் திண்ணை பெற்றிருக்கிறது. கேட்ட அனுமதி திண்ணையில் மொழிபெயர்த்துப் பிரசுரம் செய்ய மட்டுமே. இவைகளை மறு மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டுமெனில் அந்தந்த ஆசிரியர்களுக்கே நீங்கள் எழுத வேண்டும். இந்த மொழிபெயர்ப்பையே நீங்கள் உபயோகப்படுத்தும் பட்சத்தில் ‘மொழிபெயர்ப்பு திண்ணை’ எனக் குறிப்பிடுதல் நலம்.  மூன்றாவது படைப்பாளிகளின் அனுமதி இன்றியே திண்ணை எனக் குறிப்பிடுதல் நலம். படைப்பாளிகளின் அனுமதி இன்றியே திண்ணை ஒரு சில கட்டுரைகளையும் கதைகளையும் பிரசுரித்திருக்கிறது. அந்தப் படைப்பாளிகளின் முகவரி தெரியாதது ஒரு காரணம். சிலவற்றிற்கு நேர்ப்பேச்சில் அனுமதி பெற்றதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட முக்கியமான படைப்புத் தமிழ் வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது இன்னொரு  காரணம் ‘1  எனத் திண்ணையில் வெளிவரும் படைப்புகளின் தரவேற்ற நிலைபற்றித் திண்ணை ஆசிரியர் விவரிக்கின்றார்.

    திண்ணையில் காணும் படைப்பாளிகளைப் பார்க்கையில் கொஞ்சம் மிரட்சியாகவும் உள்ளது. மிகத் தீவிரமாக இலக்கிய உலகில் இயங்கி வரும் அனைவரது படைப்புகளையும் இங்குக் காணமுடிகிறது. திண்ணை இணைய தளத்தின் வெற்றிக்குக் காரணம் படைப்பாளிகளின் தரமான பங்களிப்புகள் என்று சொல்லலாம் ‘2 என மதியழகன் சுப்பையா திண்ணைப் படைப்பாளிகளைப் பற்றித் தமது திண்ணை. காம் எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

    ‘திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளுக்கான பிரசுர உரிமை அவற்றை ஆக்கியவர்களுக்கே. அவர்கள் வேறு எந்தப் பத்திரிகையில் அவற்றை மறுபிரசுரம் செய்தாலும், அந்த விசயத்தைத் திண்ணைக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.  திண்ணையில் இந்தத் தேதியில் ஏற்கெனவே பிரசுரமானது என்ற விசயத்தை குறிப்பிடவும் தேவையில்லை (அப்படி குறிப்பிட்டால் திண்ணை ஆசிரியர் குழு நன்றி பாராட்டும்). திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளில் வரும் சம்பவங்களுக்கும், வெளிப்படும் கருத்துக்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், தொனிகளுக்கும் அந்தந்தப் படைப்பாளிகளே பொறுப்பு. திண்ணையில் எழுதுபவர்கள் பொறுப்புடன் எழுதுங்கள். கருத்துகளைப் பற்றிப் பேசும்போது, வெறும் தனிப்பட்ட கோபதாபங்களுக்கான வடிகாலாய் எதையும் எழுதாதீர்கள்’3.  திண்ணை ஆசிரியர் குழு எழுதியுள்ள இக்கடிதத்தில் தரவேற்றம் செய்யப்படும் படைப்புகளின் படைப்புரிமை, படைப்புகளையும் கருத்துக்களையும் எழுதும் விதம் ஆகியவை குறித்து விளக்கப்படுகிறது.

    திண்ணை மூலமாகப் பல புதிய எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர். பல புதிய வாசகர்கள் தமிழுக்குப் கிடைத்துள்ளனர். முன்பே எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்களுக்கு வாசகத் தளம் விரிவு பெற்றுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக விஞ்ஞானக் கட்டுரைகள், பொருளாதாரம், சமூகவியல், மானிடவியல் கட்டுரைகள் மட்டுமின்றிச் சமகால அரசியல், சமூகம், தமிழ்நாட்டின் வாழ்நிலை குறித்த கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.

    கவிதைகள்

    திண்ணையில் கவிதைகள் பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள் படைப்பாளர்களால் அனுப்பப்பட்டுத் திண்ணை ஆசிரியர் குழுவால் திண்ணையில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கவிதைகளின் பாடுபொருள்கள் தனிமனிதச் செயல்பாடுகள், காதல், மொழிபெயர்ப்பு, புலம்பெயர்வு, பெண்ணியம் ஆகியவற்றைச் சார்ந்தே அமைகின்றன. தஸ்லீமா, அல் ஹண்டர் (யுட ர்ரவெநச), இ ரவீந்திரநாத் தாகூர், அல் பேர்டி, கைஃபி ஆஸ்மி, சுவாமி விவேகானந்தர், கவிஞர் அருண் கொலட்கர், பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் ஆகிய கவிஞர்களின் படைப்புகள் மொழிபெயர்த்துப் படைப்பாளர்களால் திண்ணையில் இடப்பட்டுள்ளன.

    ருத்ராவின் வைரமுத்துவின் வானம், கனடாவைச் சேர்ந்த சி.ஜெயபாரதனின் தமிழாக்கத்தில் காதல் நாற்பது, காற்றினிலே வரும் கீதங்கள் , தாகூரின் கீதங்கள்  பா.சத்தியமோகனின் பெரியபுராணம், கோபாலின் மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும் போது ஆகிய தலைப்புக்களில் திண்ணை இதழில் தொடர் கவிதைகள் வெளிவந்தன.

    திண்ணை ஆசிரியர் குழுவின் முயற்சியினால் சிறப்பான கவிதைகள் புத்தகங்களில் கண்டறிந்து மொழிபெயர்த்தும் வெளியிடப்பட்டுள்ளது. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, கஜல், ஹைபுன், சென்ரியு ஆகிய வகைமைகளில் திண்ணையில் கவிதைகள் படைப்பாளர்களால் படைக்கப்பட்டுத் திண்ணை ஆசிரியர் குழுவினரால் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    கதைகள்

    திண்ணை இதழில் பிரபல படைப்பாளர்கள், அயல் நாட்டுப் படைப்பாளர்கள், புதுமுகப் படைப்பாளர்கள் என அனைத்துப் படைப்பாளர்களின் சிறுகதைகளும் ஐந்நூற்றுக்கும் மேல் இடப்பட்டுள்ளன. பிரபல படைப்பாளர்களின் சிறுகதைகள் பெரும்பாலும் படைப்பாளர்களின் அனுமதி பெற்றுத் திண்ணை ஆசிரியர் குழுவால் தரவேற்றம் செய்யப்படுகின்றன. தமிழில் சிறுகதை வடிவத்தையும், அறிவியல் புனைகதை வடிவத்தையும் வளர்த்தெடுக்கும் பொருட்டுத் திண்ணை மற்றும் மரத்தடி இணைந்து சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டியை 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தி பரிசுகளை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்தியது.

    திண்ணையில் மதுமிதா எனும் படைப்பாளரால் மொழிபெயர்க்கப் பட்ட ’தைவான் நாடோடிக் கதைகள்’ சிறுகதைத் தொடராக வெளிவந்தது. மேலும் , காப்ரியல் கார்ஸியா, மார்க்வெஸ், லாரி ஃப்ரெஞ்ச், டேவிட் பெஸ்மொஸ்கிஸ், பெர்னாட்சா  ஆகியோரின் சிறுகதைப்  படைப்புகள் திண்ணையில் பல படைப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டுக் கதைகள் பகுதியில் இடப்பட்டுள்ளது. தமிழில் பிரபல எழுத்தாளர்களான  நீல பத்மநாபன், வல்லிக்கண்ணன், அசோகமித்ரன், ஜெயகாந்தன், வண்ணநிலவன், அம்பை, வண்ணதாசன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, அஸ்வகோஸ், அழகியசிங்கர், அ.முத்துலிங்கம், விந்தன், பூமணி, புதுமைப்பித்தன், ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளும் திண்ணையில் தரவேற்றப்பட்டுள்ளன. திண்ணை சிறுகதைகள் பெண்ணியம், புலம்பெயர்வு இலக்கியம், சமுதாயம், காதல், பெரியாரியம், மார்க்சியம் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

    நாவல்கள்

    நாவல் இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் தளமாகத் திண்ணை இதழ் திகழ்கின்றது. திண்ணை இதழில் வெளிவரும் நாவல்கள் பெரும்பாலும் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் நாவல்களாகவே அமைகின்றன. திண்ணையில் கு.அழகிரிசாமியின் முகக்களை, எம்.வி.வெங்கட்ராமின் மாளிகை வாசம், ஆதவனின் சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல், வ.ஐ.ச.ஜெயபாலனின் செக்குமாடு, சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்), ஜெயமோகனின் நான்காவது கொலை, இரா.முருகனின் வாயு (குறுநாவல்) , அரசூர் வம்சம், ஷங்கரநாராயணனின் பறவைப்பாதம், திசை ஒன்பது திசை பத்து, ராகு கேது ரங்கசாமி, க.அருள் சுப்பிரமணியத்தின் விடியும்,  கோச்சாவின் கனவின் கால்கள் (நாவல் தொடர்) , ரெ.கார்த்திகேசுவின் புழுத் துளைகள் (குறுநாவல்), முகம்மது இஸ்மாயிலின் பிறந்த மண்ணுக்கு, அ.ம.ந.ராமசாமியின் துணை, ஜாவா குமாரின் திருவண்டம், சி.ஜெயபாரதனின் கானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல்), ஜோதிர்லதா கிரிஜாவின் மறுபடியும் , அதிர்ச்சி (குறுநாவல்) , ஒரு மகா பாரதம், நாகரத்தினம் கிருஸ்ணாவின் மாத்தா – ஹரி, நீலக்கடல்; கௌரிகிருபானந்தனின் மொழிபெயர்ப்பில் தொடுவானம் தொட்டுவிடும் தூரம் ஆகிய நாவல்கள் திண்ணையில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    நாடகங்கள்

    இணையத்தமிழ் இதழ்களிலேயே அதிகமான நாடகங்கள் தரவேற்றப்பட்ட இதழாகத் திண்ணை திகழ்கின்றது. திண்ணை இதழில் மொழிப்பெயர்ப்பு நாடகங்கள் அதிக அளவில் இடப்பட்டுள்ளன. திண்ணையில் அகஸ்ட் ஸ்ட்ரிண்ட் பெர்கினுடைய ஒரு நாடகம், இன்குலாப்பினுடைய அத்தனை ஒளவையும் பாட்டிதான் (ஒளவையிலிருந்து), சின்னக் கண்ணனுடைய நிழல், ஜெயமோகனுடைய வடக்குமுகம், புதுமைப் பெண்மணி வேலுப்பிள்ளையினுடைய கனடாவின் நாகம்மா, கணேசனுடைய இருள், ஒரு மரக்கிளையில் சில நூறு குருவிகள், சி.ஜெயபாரதனுடைய மொழிப்பெயர்ப்பில்  நரபலி நர்த்தகி ஸலாமி (ஓரங்க நாடகம்), உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்), புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்சா நாடகத்தின் தழுவல்), ஆப்ரஹாம்லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்), கரு.திவரசினுடைய ஐயம், சந்தேகம், அயிர்ப்பு, வெறிச்சென்று ஒரு வீதி, தௌஃபீக் அல்-ஹகீம்னுடைய ஓர் அரேபிய நாடகம் ஆகிய நாடகங்கள் தரவேற்றப்பட்டுள்ளன. இந்த நாடகங்களில் பல நாடகங்கள் தொடர் நாடகங்களாக வார வாரம் வெளிவந்துள்ளன.

    திண்ணை இதழில் கவிதைகள், கதைகள் ஆகியவை தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்திருப்பதைப் போன்று நாவல்கள், நாடகங்கள் ஆகிய படைப்பிலக்கியப் பிரிவுகள் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்படவில்லை. எளிதில் இணையப் பயனர்கள் கண்டறிந்து படிக்கும் விதத்தில் இப்பிரிவுகள் பிரித்து வைக்கப்பட வேண்டும். நாவல்களும், நாடகங்களும் கதைப்பகுதியிலேயே தரவேற்றம் செய்யப்படுகின்றன.

    பதிவுகள் இதழ் அறிமுகம்

    பதிவுகள் இணைய இதழானது மாசி 2000-இல் கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் வ.ந.கிரிதரனால் மாத இதழாகத் தொடங்கப்பட்டது. இணையத்தமிழைப் படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தும் படி செய்தல் , அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளல், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் இடையிலொரு பாலமாக விளங்குதல் ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு பதிவுகள் இதழ் செயல்படுகிறது.

    பதிவுகளின் ஆசிரியர் வ.ந.கிரிதரன்  ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது (தொராண்டோ) கனடாவில் வாழ்ந்து வருபவர். இலங்கையில் இருந்த காலத்தில் ஈழத்துப் பத்திரிகைகள் பலவற்றில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. இவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். மொறட்டுவைப் பல்கலைக் கழகக் கட்டடக்கலைப் பட்டதாரியான இவர் மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ மலரின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். கனடாவுக்குப் புலம்பெயர்ந்தபின் இவரது ஆக்கங்கள் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியன ‘தாயகம்’, ‘தேடல்’, ‘கணையாழி’, ‘துளிர்’, ‘சுவடுகள்’, ‘உயர் நிழல்’, ‘ஆனந்த விகடன்’, ‘சுபமங்களா’ மற்றும் இணைய இதழ்களான ‘திண்ணை’, ‘அம்பலம்’, ‘ஆறாந்திணை’, ‘மானசரோவர்.காம்’ ஆகியவற்றில் வெளிவந்திருக்கின்றன. 2000-ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ இணையத் தளத்தை வடிவமைத்து அதன் ஆசிரியராக இருந்து வருகின்றார்.

    பதிவுகள் இதழின் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள்

    ’தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் தம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுமிடமாகப் பதிவுகள் விளங்குகின்றது. இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று மிக இலகுவாகப் பலரை எல்லைகளைக் கடந்து தொடர்பு கொள்ள வைத்தலென்பது. இணைய இதழொன்றினால் மிக இலகுவாக விரைவாகப் பல படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு அனைவரையும் இணையத்தமிழின் நன்மைகளை உணர வைக்க வேண்டும். இத்தகைய இணைய இதழ்களால் அவற்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவதன் மூலம் அவற்றில் பங்களிக்க வைப்பதன் மூலம் உணர வைக்க முடியும். இதற்கு முதல்படியாகப் பதிவுகள் ஆரம்பத்தில் பாவிக்கும் எழுத்துருக்களில் ஆக்கங்களை, எண்ணங்களை அனுப்பி வைக்கும்படிக் கோரினோம். அவ்விதம் வரும் படைப்புகளையே பிரசுரிக்கத் தொடங்கினோம். பல பெரிய எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் தமிழில் எழுதச் சிரமப்பட்ட போது அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். அதன்பின் அவர்கள் பதிவுகளுக்குத் தாங்களாகவே உரிய எழுத்தில் ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினார்கள். இதன் மூலம் படைப்பாளிகளைக் கணித்தமிழின் பயனை நேரடியாகவே உணரவைக்கக் கூடியதாகவிருந்தது. மேலும், பதிவுகள் இதழினை ஆரம்ப காலத்திலிருந்தே படைப்பாளிகளின், வாசகர்களின் பங்களிப்புடன் வெளிக்கொணர்ந்திட முடிந்தது. பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்பும் படைப்பாளிகள் தங்களது ஆக்கங்களைத் தாங்களே தட்டச்சு செய்து அனுப்புவதென்பது பதிவுகள் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கியமானதொரு தேவையாகவிருந்தது. ஆரம்பகாலப் பதிவுகள் இதழ் மிகவும் மோசமான வடிவமைப்புடன் ஆர்வத்தின் காரணமாக வெளிவந்ததை ஆரம்ப ஆக்கங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். இருந்தும் , பதிவுகள் ஆரம்பத்திலேயே பலரையும் ஈர்க்கத் தொடங்கி விட்டது என ஆசிரியர் வ.ந.கிரிதரன் பதிவுகள் இதழின் ஆரம்பகால படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகளைக் குறிப்பிடுகின்றார்‘4.

    பதிவுகள் முதல் இதழில் இந்திரனின் அகமும் புறமும் நூலிருந்து ஓவியம் பற்றி வெளிவந்த கருத்துகள் சிலவும் மகாகவி, சோலைக்கிளி போன்றவர்களின் கவிதைகளும் வெளியிடப்பட்டன. மேலும் , இலங்கை, தமிழக அரசியல் பற்றிய கட்டுரைகள், தமிழ் விமர்சனம் பற்றிய சு.ரா., கா.சிவத்தம்பி மற்றும் கனேடியத்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் முதல் இதழில் இடப்பட்டுள்ளன.

    தொடக்க காலத்தில் முரசு அஞ்சலின் இணைமதி எழுத்துரு பாவிக்கப்பட்டு பின்னர் அது முரசு அஞ்சலில் மாற்றப்பட்டது. தற்போது பதிவுகள் யுனிகோர்டில் (லதா எழுத்துருவில்) பாவிக்கப்பட்டு வெளிவருகின்றன.

    ‘அரசியல் கவிதை, சிறுகதை, கட்டுரை நூல் விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல், சினிமா, நாவல், வாதம் ஆகியவைகளோடு உங்கள் நலம், தமிழ் வர்த்தகக் கையேடு, இலவச வரி விளம்பரம், நூல் அங்காடி மற்றும் வாசகர் எதிரொலி எனப் பல அடுக்குகளைக் கொண்டு கனத்துக் கிடக்கிறது. இந்தத் தளம், உலகத்தின் அனைத்து மூலையிலும் உள்ள எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைப் பதியும் ஒரு தளம் என்றால் மிகையாகாது. அரசியல் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்க வேண்டிய சிறப்புப் பகுதி. சிறப்பான ஆங்கிலக் கட்டுரைகளையும் ஏற்கிறார்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் படைப்புகளைத் தக்க ஓவியங்கள், புகைப்படங்கள் இணைப்புடன் வெளியிடுவது இவர்களின் ஈடுபாட்டுக்கு ஒரு சான்று. விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் இங்குப் புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. இன்று தமிழ் அச்சேடுகளில் எங்கும் காணக் கிடைக்காத அறிவியல் கட்டுரைகளைப் பதிவுகள் தளத்தில் காணலாம். பதிவுகள் தளத்தின் படைப்புகளை யாரும் எடுத்தாளலாம் என்று பெருந்தன்மையோடு அனுமதித்திருக்கும் நிலையில் அச்சு இதழ்களும் பிற இதழ்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்கள் வர்த்தகம் குறித்து இலவசமாக விளம்பரம் செய்து பயன் அடையுங்கள் என்று வாசல் திறந்து வாய்ப்பளித்து உள்ளது இந்த இதழ். தமிழர் விழாக்களை முன்னிட்டு சிறப்பிதழ்களும் புதுப்பிக்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், இலக்கியம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்படுகிறது. நல்ல திரைப்படங்கள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்படுகிறது. நல்ல திரைப்படங்கள் குறித்து சிறப்பான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் பாராட்டத்தக்கவைகள். வீண் அரட்டைகளும் விவாதங்களும் இந்தத் தளத்தில் இல்லை. ஆக்கப் பூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கும் எவரும் இந்தத் தளத்தை திறக்கலாம். தங்கள் படைப்புகள் காலத்தால் அழியாமலும் வெகுமக்களால் படிக்கவும் பாராட்டவும் பட வேண்டும் என்று விரும்புவார்கள். உடனடியாக இந்த இணைய இதழைக் காணுங்கள். பதிவுகள் தளம் காலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் மிகச் சரியாக பதிவு செய்து வருகிறது’5 எனப் பதிவுகள் இதழின் படைப்பிலக்கியம் பற்றி மதியழகன் சுப்பையா தமது வலைப்பதிவில் பதிவுகளில் விவரிக்கின்றார்.

    மாத இதழாக வெளிவரும் பதிவுகள் இதழில் அரசியல், கவிதை, சிறுகதை, கட்டுரை அறிவியல், சினிமா, நூல்விமர்சனம், நாவல், உங்கள் நலம், விவாதம், உளவியல், சமூகம், உலக இலக்கியம் என அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கங்கள் இடப்படுகின்றன. மேலும் , நிகழ்வுகள், வாசகர் எதிரொலி, இலவச வரி விளம்பரம், தமிழ் வர்த்தகக் கையேடு போன்ற பிரிவுகளும் பதிவுகள் இதழில் இணைய உலாவிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தியா, இலங்கை, கலிபோர்னியா, மலேசியா, கனடா, சுவிஸ், பிரித்தானியா, சிங்கப்பூர், பாரீஸ், நியூயார்க், பிரான்ஸ், செர்மனி, டென்மார்க் உட்பட உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் வாழும் தமிழர்கள் பதிவுகள் இதழில் தங்கள் படைப்புகளை வெளியிடுகிறார்கள். இவ்விதழ் தமிழில் வெளிவந்தாலும் ஆங்கிலத்தில் வெளிவரும் படைப்புக்களையும் ஏற்கிறது. பதிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாக இணையப் பயனர்கள் அறியம்படி வெளியிடுகிறது.

    பதிவுகளில் ஜெயமோகன், வெங்கட்சாமிநாதன், ஜெயபாரதன், யமுனா ராஜேந்திரன், சுப்ரபாரதிமணியன், திலகபாமா, கே.எஸ்.சிவகுமாரன், லதா ராமகிருஷ்ணன், நளாயினி தாமரைச் செல்வம், ரஞ்சி(சுவிஸ்), பாராகவன், நேசகுமார், புதியமாதவி, பிச்சினிக்காடு இளங்கோ, சந்திரவதனா, செல்வகுமாரன், இராஜேஸ்வரி, பாலசுப்ரமணியம், அ.முத்துலிங்கம், செழியன், டாக்டர் சுமதி ரூபன், கவிஞர் ஜெயபாலன், மைக்கல், ரமணீதரன், டி.செ.தமிழன், ஆபிதீன், தாஜ், ராஜநாயகம், ரோசாவசந்த்;, சூரியா, இரா.முருகன், சங்கர், வேதசகாயகுமார், நாகரத்தினம் கிருஸ்ணா, தேவகாந்தன், த.சிவபாலு, கே.எஸ்.சிவகுமாரன், மு.திருநாவுக்கரசு, அருணன்;, என்.கே.மகாலிங்கம், சுசீந்திரன், ஸ்ரீரங்கன், வைகைச்செல்வி, நவஜோதி;, வேதா இலங்காதிலகம், சக்தி சக்திதாசன், நடேசன், டானியல் ஜீவா, அன்புதாசன் எனப் பல பிரபல படைப்பாளிகளிலிருந்து புதிய படைப்பாளிகள் வரை எழுதியுள்ளார்கள்.

    ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகளும், பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரனின் படைப்புகளும் பெரும்பகுதி முழுமையாகத் தொகுக்கப்பட்டுப் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனேடிய, சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள், விமர்சனங்கள், தகவல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் இதழாகவும் பதிவுகள் திகழ்கின்றது. குழந்தைகள் இலக்கியத்திற்கான சிறப்புப் பக்கங்களையும் இவ்விதழ் தன்னகத்தே பெற்றுள்ளது. உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் உலகத்தமிழ் மக்களின் கலை, அரசியல், இலக்கிய முயற்சிகள் மற்றும் புகலிடவாழ்வு பற்றிய கட்டுரைகள், ஆய்வுகள், தகவல்கள் ஆகியவை அக்கறையில் எனும் பகுதியில் தரவேற்றம் செய்யப்படுகின்றன.

    கவிதை

    பதிவுகள் இணைய இதழில் கவிதை பிரிவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பங்களிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் இடப்பட்டுள்ளன. இப்பிரிவு அதிகமான படைப்பாளிகளின் படைப்புகள் இடம் பெற்றுள்ள பிரிவாகவும் இணைய உலாவிகள் அதிகம் உலாவும் பிரிவாகவும் திகழ்கிறது. புதுக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியு, ஹைபுன் ஆகிய வடிவங்களில் கவிதைகள் இடப்பட்டுள்ளன. காதல் கவிதைகள் குறிப்பிட்ட அளவு இத்தளத்தில் காணக் கிடைக்கின்றன.

    பெண்ணியம், மார்க்சியம், புலப்பெயர்வு இலக்கியம், பின் நவீனத்துவம் ஆகிய இலக்கிய வகைமைகளில் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கவிதைகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் புலப்பெயர்வு சார்ந்த கவிதைகளாகவும், காதல், தனிமனித நடத்தை ஆகியவை சார்ந்த கவிதைகளாகவும் இடம்பெற்றுள்ளன. மொழிபெயர்ப்பு கவிதைகளும் இத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எவ்விதத் திருத்தமும் இன்றி படைப்பாளிகளின் கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. அறிமுக, பிரபல எழுத்தாளர்களின் கவிதைகளும் எவ்விதப் பாகுபாடுமின்றி வெளியிடப்படுகின்றன.

    சிறுகதை

    பதிவுகள் இதழில் கதைகள் பகுதியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் தரவேற்றப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கதைகள் தனி மனித நடத்தைகள், புலம் பெயர்வு, சமூகம், அறிவியல் சார்ந்த கதைகளாகப் படைக்கப்பட்டுள்ளன. உலகின் பலப் பகுதிகளில் வாழும் படைப்பாளர்களின் சிறுகதைப் படைப்புகள் இவ்விதழில் இடப்பட்டுள்ளன.

    மொழிபெயர்ப்புச் சிறுகதைகளான நாகரத்தினம் கிருஷ்ணா மொழிபெயர்த்த ழான்-ரொபெர் எல்ஸாவின் தோட்டம், தொனினோ பெனகிஸ்ட்டாவின் கறுப்புப் பேழை, டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர் மொழிபெயர்த்த ஜோ பாசின் அன்னைக்கு, மார்கரெட் லாரன்சுவின் உண்மையான ஆரியன் ஆகிய உலகச் சிறுகதைகள் இவ்விதழில் தரவேற்றப்பட்டுள்ளன.

    சிறுகதை இலக்கியத்தை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லவும், புதியப் படைப்பாளர்களை உருவாக்கவும் பதிவுகளும் நந்தா பதிப்பகமும் இணைந்து 2004-ஆம் ஆண்டு தமிழர் மத்தியில் எனும் சிறுகதைப் போட்டியை நடத்தியது. உலகின் பலப்பகுதிகளில் இருந்தும் அறிமுக மற்றும் பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை அளித்தார்கள். படைப்புகள் நடுவர்களால் நடுநிலையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பான படைப்புகள் பதிவுகள் இதழில் தரவேற்றம் செய்யப்பட்டன.

    நாவல்

    நாவல் பகுதியில் அ.ந.கந்தசாமியின் மனக்கண், மைக்கலின் ஏழாவது சொர்க்கம் ஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே தரவேற்றப்பட்டுள்ளன. மற்ற பிற நாவல்கள்  கதைகள் மற்றும் சிறப்புப் பக்கங்களில் தரவேற்றப்பட்டுள்ளன. இப்பகுதிக்குப் பெரும் பங்களிப்பை இவ்விதழ் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அளித்துள்ளார். பதிவுகளில்  புலம்பெயர்வு, மொழிபெயர்ப்பு ஆகிய இலக்கிய வகைமைகளைச் சார்ந்த நாவல்கள் பெருமளவில் படைப்பாளர்களால் படைக்கப்பட்டுள்ளன.

    நாகரத்தினம் கிருஷ்ணாவின் குறுநாவலான திருப்பாதங்களுக்குச் சமர்ப்பணம், ஆபிதீனின் ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும், பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரனின் அமெரிக்கா, அமெரிக்கா  மண்ணின் குரல் (வன்னி மண், அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும், கணங்களும் குணங்களும் மற்றும் மண்ணின் குரல் ஆகிய நாவல்களின் தொகுப்பு), கனிஸ்காவின் சிறுவர் நாவலான ரினோ, மொழிபெயர்ப்பு நாவல்களான அ.ந.கந்தசாமியால் மொழிபெயர்க்கப்பட்ட எமிலி ஸோலாவின் நானா, நாகரத்தினம் கிருஷ்ணாவினால் மொழிபெயர்க்கப்பட்ட மார்கெரித் த்யூராவின் காதலன் ஆகிய நாவல்கள் பதிவுகள் இதழில் தரவேற்றப்பட்டுள்ளன.

    நாடகம்

    பதிவுகள் இதழ் நாடக இலக்கியத்திற்குக் குறிப்பிட்ட அளவே பங்களித்தள்ளது. பதிவுகள் இதழில் கவிதை, கதை, நாவல் ஆகிய படைப்பிலக்கியங்கள் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்திருப்பதைப் போன்று நாடக இலக்கியம் தனிப்பிரிவாகப் பிரித்து வைக்கப்படவில்லை. அ.ந.கந்தசாமியால் எழுதப்பட்ட தாஜ்மகால் உதயம் பற்றிய நாடகமான கடைசி ஆசை, வ.ந.கிரிதரனால் எழுதப்பட்ட ஓரங்க நாடகமான யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க ஆகிய நாடகங்கள் பதிவுகள் இதழில் தரவேற்றப்பட்டுள்ளன. பதிவுகளில் பெரும்பாலும் நாடகங்கள் கதைப் பிரிவுகளிலும் தனி நபர் சார்ந்த சிறப்புப் பிரிவுகளிலும் தரவேற்றப்பட்டுள்ளன.

    நாவல் இலக்கியத்திற்குத் தனிப்பிரிவு இருந்தும் கூட அதில் சில நாவல்கள் மட்டுமே தரவேற்றப்பட்டள்ளன. நாவல்களும், நாடகங்களும் கதைப்பகுதியிலேயே தரவேற்றம் செய்யப்படுகின்றன.இணையப் பயனாளர்கள் கண்டறிந்து படிக்கும் விதத்தில் படைக்கிலக்கியப் பிரிவுகள் பிரித்து வைக்கப்பட வேண்டும்.

    [தொடரும்]

    *****

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
    விழுப்புரம்.

    Share
  • சொற்களின் வரலாறு

      சந்திரா  மனோகரன் 

     

     

    மெல்ல  சுரக்கும்  சொற்கள்

    ஊமையாகிப்  போயிருந்தன …

    அவள்  மென்விரல்களைப் போலவே  !

    அதன்  பின்னணியில்  ஒரு

    மௌன யுத்தம் முடிந்திருந்தது

    மொழி  பாவம்  என்ன செய்யும் …

    நொண்டி  நொண்டி சறுக்குகிறது

    வற்றாத  சொற்பெருக்கு !

    புகைந்து  நெளியும்  உக்கிர நெருப்பில்

    நழுவி  விழுந்து சாம்பலாகிப்போகும்  அவலம்

    வழிப்போக்கனைப்போல்  ஏகாந்தமாகிப்போன

    எனக்கு  ஆறுதலே  அந்த

    வசீகரிக்கும்  சொல்லலங்காரம்தான்  !

    என் சொற்களின்  பிறப்பிடம்

    எனக்கு அந்தரங்கமானது.

    எனக்குள் ஊற்றெடுக்கும்

    எல்லா சொற்பட்சிகளுக்கும்

    இப்பொழுது  சிறகுகள் !

    என்னைவிட்டு  விடுதலையாகி

    அவள்  விதியை  சீண்டிப்பார்க்கும்  ஆசான் அவை  !

    அவளை உடைத்தெறிய  அவை போதும்

    வண்ண வண்ண சொல்வலையில் விழுந்து

    காயம் பட்டு … சீர் கெட்டு …

    ஒரே  ஒரு தடவையேனும்

    அவள்  பொழிகிற  சொல்மழையில்

    தொப்பலாய் நனைய  ஆசை

    அலைப்பில்  தவிக்கும்  மனசுள்

    அவை  பீடு நடை  போடட்டும் …

    சிலசமயம்  ஆர்ப்பரிக்கும்  சொற்போரில்

    அவள்  எழில்  கூடுகிறதே  !

    அந்தப்  பரவசத்தில்  பிய்த்துக்கொண்டு வரும்

    ஒளியில் … மௌனமாய் சுருண்டுகொள்ளும்

    என்  முடிவற்ற  சொற்கள்  !

    Share
  • மகாகவி பாரதி – பாவலர் துரையப்பா பிள்ளை: நவீன தமிழ்ப் புத்திலக்கிய முன்னோடிகள்

    -ர. சுரேஷ்

     

         தமிழகத்தில் மகாகவி பாரதியும் இலங்கையில் பாவலா் துரையப்பா பிள்ளையும் சமகாலத்தில் வாழ்ந்த கவிஞா்கள் ஆவா். தமிழகத்தில் நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடி பாரதி என்றால் இலங்கையில் நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடி என்று பாவலா் துரையப்பா பிள்ளையை ஆய்வாளா்கள் குறிப்பிடுவா். மகாகவியைப் போலவே சமூக, அரசியல், பொருளாதார, சமயச் சிந்தனைகள் பாவலா்க்கும் உண்டு. இதனை அவா்தம் கவிதைகளை வாசிக்கும் யாவரும் அறியலாம். சிறப்பாக தேசப்பற்று, சமூகச் சீா்த்திருத்தக் கருத்துகள் இருவருக்கும் பொதுவான அம்சங்களாக விளங்குகின்றன. ஓப்பிட்டளவில் கருத்தொற்றுமை, பொருளொற்றுமை, நடையொற்றுமை போன்றவையும் இருவா் கவிதைகளிலும் ஒருமித்துக் காணப்படுகின்றன. எனவே பாவலா் அவா்களின் கவிதை மதிப்பீடுகள் சிலவற்றோடு மகாகவியின் கவிதை மதிப்பீடுகள் சிலவற்றை ஒப்புநோக்கி காண்பது இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது.

    பாவலா் துரையப்பா பிள்ளை:

     1872-ஆம் ஆண்டு ஈழ நாட்டுத் தௌ்ளப்பழை கிராமத்தில் பிறந்தார். வட்டுக்கோட்டை செமினாரியில் கல்வி கற்றார். பின்னா், பாணந்துறை, தூய யோவான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பாணந்துறை ஆசிரியப் பணியைத் துறந்து மும்பையில் உள்ள கோலாப்புர் மிஷனரியில் பள்ளி ஆசிரியரானார்;. பாரதியின் வாழ்க்கையில் காசி நகரம் ஏற்படுத்திய தாக்கத்தினைப் போலவே பாவலருக்கு கோலாப்புர் வாழ்க்கை தாக்கத்தினை ஏற்படுத்தியது. பல்வேறு முற்போக்குச் சிந்தனைகளுக்குக் கோலாப்புர் வாழ்க்கை வித்திட்டத்தைப் பேராசிரியர் க. கைலாசபதி கீழ்வருமாறு குறிப்பிடுவார்.

         “பம்பாய் வாசம் அவருக்குப் பல வழிகளில் நன்மையாகவே அமைந்தது. இரு வருடங்கள் கோலாப்புரில் பணியாற்றியபின் பெல்காம் இங்கிலாந்து உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சோ்ந்தார். அங்கு ஒரு வருடம் வசித்தார். தனது கல்வியை மேலும் விருத்தி செய்துகொண்ட அதே வேளையில் பொதுவாக இந்தியாவிலும் சிறப்பாக பம்பாயில் அரசியல்-சமூக இயக்கங்களில் உழைத்த பாலகங்காதர திலகா், கோபாலகிருஷ்ண கோகலே, தாதாபாய் நவுரோஜி முதலியோரின் நடவடிக்கைகளைக் கவனித்து அவற்றால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக கோகலேயின் செல்வாக்கு அவா் மீது அதிகம் எனலாம்.” (க. கைலாசபதி, ஈழத்து இலக்கிய முன்னோடிகள், ப.109.)

         இவ்வாறு கோலாப்புரிலான இந்திய வாழ்வால் பாவலரின் சமூகச் சிந்தனைகள் விரிவுபெற்றன. பின்னா் 1898-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பிய பாவலா் 1901-லேயே தனது முதல் கவிதைத் தொகுப்பான கீதோபதேச கீதரச மஞ்சரி-யை வெளியிட்டார். பின்னா் 1910-இல் மகாஜன கல்லூரியை நிறுவினார். 1929-இல் இயற்கை எய்தினார். பாவலா் பற்றிய சுருக்கமான அறிமுகமாக மேலே சில கூறப்பட்டன.

    மகாகவி பாரதி – பாவலா் துரையப்பா பிள்ளை சமகாலத்தில் உருவான இரு புத்திலக்கிய முன்னோடிகள்:

         பொதுவாக தமிழகத்தில் நவீன தமிழ்க்கவிதை வரலாற்றின் ஆரம்பமாக பாரதியை குறிப்பிடுவதைப் போலவே இலங்கையில் நவீன தமிழ்க் கவிதை வரலாற்றின் ஆரம்பமாக பாவலா் துரையப்பப் பிள்ளையைக் குறிப்பிடலாம். பாரதியை விட பத்து ஆண்டுகள் மூத்தவரான பாவலா் பாரதியின் கவிதை 1904-இல் தமிழுக்கு அறிமுகமாவதற்கு முன்னரே கவிதை எழுதத் துவங்கியவா் என்ற கருத்து ஈழ ஆய்வாளா்களால் பெரிதும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இந்நிலையில் பாரதிதான் முதன்முதலில் சாதாரண மக்களின் சமூக வாழ்வைக் கவிதையில் கொண்டு வந்தார் என்பதை மீளாய்வு செய்வதுடன் பாரதி தொடங்கி வைத்த கவிதை மரபு எது என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது. பழகுதமிழில் எளிய நடையில் பாமர மெட்டுகளில் பாரதியைப் போலவே பாவலரும் கவிதை எழுதியிருக்கிறார். சமூகச் சிந்தனைகளை மையமிட்டு இருவரையுமே நவீன கவிதை முன்னோடி கவிஞா்கள் என்று குறிப்பிடலாம். எனினும் இருவரின் கவிதைகளிலும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்வது இன்றியமையாத ஒன்றாகும்.

    பாரதி – பாவலா் இலக்கியக் கொள்கைகள்:

         தமிழகத்தைப் பொறுத்தமட்டில் புதுக்கவிதை முன்னோடியாக பாரதியைக் குறிப்பிடுகிறோம். பாவலரைவிட பத்து ஆண்டுகள் இளையவரான பாரதியார் தன் கவிதையைப் பற்றி குறிப்பிடுகையில்,

         “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
              சொற்புதிது, சோதிமிக்க
         நவகவிதை யெந்நாளும் அழியாத
              மாகவிதை”

    என்று குறிப்பிடுகின்றார். மேலும் தான் இயற்றிய பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில், “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது சனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது மொழிக்கு உயிர் தருவோனாகிறான்” என்று தமது கவிதை குறித்த இலக்கிய கொள்கையைப் பிரகடனப்படுத்துகிறார்.

         பாரதி சொல்லியபடியே பழகுதமிழில் இனிய நடையில் சமூக சிந்தனைகளை மையமிட்டு அவருக்கு முன்னதாகவே பாவலர் அவர்கள் சிந்தித்து எழுதியுள்ளார். பாரதி இலக்கியம் பற்றிக் கொண்டிருந்த கருத்து நிலையே பாவலருக்கும் இருந்தது என்பதை அவர் இயற்றிய யாழ்ப்பாண சுவதேச கும்பியின் அவையடக்கப் பகுதியில் கண்டுகொள்ளலாம். அது,

         “தேசோப காரங் கருதி இக்கும்மியை
           செப்புகின் றேனாதலால் எவரும்
           லேசாய் விளங்க இலகு தமிழில்
           இயம்புவதே நலம் சங்கமின்னே”

         இவ்வாறு கவிதையின் நோக்கம் சமூகத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமென இவர் பிரஞ்கை பூர்வமாக உணா்ந்திருந்தார். பாரதி பாடிய பெண் விடுதலை கும்மியைப் போலவே பொதுமக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட கும்மி வடிவத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாண சுவதேச கும்மியைப் பாடியுள்ளார். இலக்கியம் என்பது பரவலாகச் சமூகத்தைச் சென்றடைய வேண்டும் என்பதில் இருவருக்கும் கருத்தொற்றுமை இருந்திருக்கிறது. இதுவே இருவரின் இலக்கியக் கொள்கையாகவும் இருந்திருக்கின்றது. இனி இருவரும் தம் பாரம்பரியப் பிற்போக்குத் தனங்களை தங்களுடைய கவிதைகளில் எவ்வாறு தரிசித்திருக்கிறார்கள். அவற்றை மீறித் தம் கவிதைகளில் புதிய உள்ளடக்கத்தை,வீச்சை, புதிய பரிமாணங்களை எந்தளவிற்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று காண்போம்.

    மகாகவி – பாவலா் : பெண் விடுதலைச் சிந்தனைகள்:

         நவீன சித்தாந்தங்களின் ஓர் அம்சமாக பெண் குறித்த சிந்தனைகளைக் குறிப்பிட வேண்டும். தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தமிழறிஞா்கள் பலா் பெண்களை மையமிட்டுப் பேசுவதும், எழுதுவதுமாக தங்களுடைய சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளனா். அவ்வகையில் பாரதியும் பாவலரும் பெண்பற்றி கொண்டிருந்த கருத்துகளை ஒப்பிட்டு விளங்கிக்கொள்ள வேண்டும். துரையப்பா பிள்ளை அவா்கள் பெண்கல்வி பரவுதல் சந்தோசம் என அக்கால நிலையை ஏற்றுக் கொண்டாலும் பெண் கல்வியின் எல்லை எது என்பதை மிகத் திட்டவட்டமாக கூறுகின்றார். தமது யாழ்ப்பாண சுவதேச கும்மியில்,

         “வீட்டினில் சீவியம்
    இன்பம் நிறைந்ததது
         விளங்குதற்கேற்ற
         சுகிர்தகலை
         ஊட்டுதல் போதும்
         பி.ஏ. எம்.ஏ. பட்டம்
         உதாவது பெண்கட்குச் சங்கமின்னே” 

    எனப் பெண்கள் வீட்டு வேலைகளைத் திறமையாக செய்வதற்கு ஏற்ற கல்வியன்றி உயா்கல்வி அவாவுதல் வீண் என ஆணித்தரமாகக் கூறுகின்றார். ஆனால் பாரதியோ,

         “பட்டங்கள் ஆள்வதும்
              சட்டங்கள் செய்வதும்
         பாரினிற் பெண்கள்
              நடத்த வந்தோம்”

    என உணா்ச்சி மேலிடப் புரட்சி கீதம் பாடுகின்றார். மேலும் தம்முடைய கடிதங்கள் மூலமும் கட்டுரைகள் மூலமும் பெண்கள் குறித்த முற்போக்குச் சிந்தனைகளை பதிவு செய்கிறார். பழம் மரபுகளோடு சமரசம் செய்து கொள்ளும் போக்கு கிஞ்சித்தும் பாரதியிடத்தில் இல்லை. ஆனால் பாவலர் பழமைவாதியாக, பாரம்பரிய ஒழுக்கவியலாளராகவே பெண்களை அணுகுகின்றார்.

         “பெண்க ளியல்பிற் பெலவீன ரென்ற
         பெருமுண்மை தன்னை யலட்சை செய்து
         ஒண்கலை மிக்க அருந்திட லாற்றுயா்
         ஓதற் கரிதடி சங்கமின்னே”
         “நற்கலை சேரு முனைவு அமைத்திடல்
         நாயகா் தங்கட் கிதம் புரிதல்
         சொற்சுவை சேருநற் பாக்கள் புனைதல்
    சுகிர்தம்பெண் கட்கடி சங்கமின்னே”
     

    எனப் பெண்கள் இயல்பிலேயே பலவீனமானவா்கள், என்றும் அதன் காரணமாக அரிய பல கலைகளைக் கற்கும் ஆற்றலற்றவா்கள் என்றும் ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்துகிறார். மேலும் பாவலா், பெண்களுக்குக் கல்வியானது குடும்பத்தைச் சிறப்பாக நிர்வகிக்கவும், தங்கள் கணவன்மார்களை மகிழ்விக்கவுமானதாக அமைந்தாலே போதும் என்கிறார். ஆனால் பாரதி,

    “எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண்
         இளைப்பில்லை காணென்று கும்மியடி” 

         எனக் கல்வியில் பெண்களுக்கு ஆணுக்குச் சமமான தகுதியை வலியுறுத்துகிறார். பெண்ணுக்கு இருக்கவேண்டிய அருட்குணங்களாக நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு போன்றவற்றை வலியுறுத்தி நவினகாலத்தில் பெண்கள் அவற்றை இழந்து காணப்படுவதை எண்ணிப் பாவலா்,

         “நாண்மட மச்சம் பயிற்ப்பென வான்றோர்
          நவிலு மரும்லட்ச ணங்கள் சற்றும்
          பூண்டில ராய்ச்சில நவீனஸ் திரிகள்
          புரிசெயல் கேளடி சங்கமின்னே

    என்று வருந்துகிறார்.ஆனால் பாரதி,

    “நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
         ஞான நல்லறம் வீர சுதந்திரம்
         பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்” எனப் புரட்சி முழக்கமிடுகிறார்.

    மகாகவி – பாவலா்: சாதியச் சிந்தனைகள்:

         சமூக அநீதிகளுக்கும் சீர்கேடுகளுக்கும் காரணமான சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பெண்ணிய ஒடுக்குமுறையையும் பாரதி மிகக் கடுமையாகச் சாடுகின்றார். சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாடுகிறார். சாதிகளைத் திடீரென்று அறுதியாகத் துடைத்தெறிந்துவிட முடியாது என்பதை உணர்ந்தே இன்றைய வருங்காலத் தலைமுறைக்கு சாதியற்ற எதிர்காலச் சமூகத்தைப் பற்றிய கனவை விதைத்திருக்கிறார். அத்துடன் தாழ்த்தப்பட்டவா்களுக்குப் பூணூல் அணிவித்து மகிழ்ந்திருக்கிறார்.

         “ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்
         அந்நியர் வந்துபுகலென்ன நீதி?” 

         என்ற பாடல், சாதிகளால் பிளவுண்டு கிடக்கும் உங்களுக்கு சுயராஜ்ஜியம் செய்யும் தகுதியில்லை என்று வினவும் ஆங்கிலேயனுக்கு விடை பகா்வதாய் அமைகிறது. சாதிகளற்ற சமூகத்தைப் பாரதி எண்ணினாரோ இல்லையோ, சாதி ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகம் பற்றிய எண்ணம் அவரிடம் மேலோங்கியிருந்தது. ஆனால் பாவலா் சாதி பற்றிய கருத்துகளில் சற்று பிற்போக்குக் கொள்கையுடையவராகப்படுகிறார். கிறித்துவ சமயத்தைத் தழுவியதாலும் ஆங்கிலேய ஆட்சியினாலும் தம் மண்ணில் சாதி மற்றும் ஆசார அனுட்டானங்கள் நலிந்துவருவதை எண்ணி வருந்துகிறார்.

         “சீரார் கிருஸ்தவ மதத்தைத் தழுவுவோர்
         செப்பிடுஞ் சாதிய சாரங்களை
         நேராக தள்ளிப் பறங்கிகளாதல்
         நீதியோ சொல்லடி சங்கமின்னே”

    என்கிறார்.

     நாவலரின் தாக்கம் இவரிடம் மிகுதியும் காணப்படுகின்றது. கிருத்துவ சமயத்துக்கெதிரான நாவலரின் சைவ மரபு மீட்டுருவாக்கச் சிந்தனைகளின் தாக்கம் பாவலருக்கு சில பிற்போக்குத்தனங்களைக் கடந்து செல்ல தடைகளாக இருந்திருக்கின்றன என்பதே உண்மை.

    பெரியோர் சிறியோரென்ற பேதமில்லை – உயா்
         பெருங்குணம் பொறையன்பு நீதியில்லை
    அரியவ ருணாச்சரம தம்மமில்லை – எங்கும்
         அனைவரும் சமமென்பா ராலே தொல்லை” என்று பாடுகிறார்.

    முடிவாக,

         சமகாலப் புத்திலக்கிய முன்னோடிகளாகக் கருதப்படும் மகாகவியும் பாரதியும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளிலும், இலக்கிய கொள்கைகளிலும் ஒருமித்த கருத்துடையவா்களாகக் காணப்பட்டாலும், பழம் மரபுகளை உடைத்தெறிவது, குறிப்பாகப் பெண்விடுதலை, பெண்கல்வி, சாதி போன்ற ஒருசில அம்சங்களில் மகாகவி முற்போக்குவாதியாகவும் பாவலர் பழம்மரபுவாதியாகவுமே தென்படுகின்றார். நவீன கவிகள் என்ற நிலையில் இருவரும் முன்னோடிகளாக இருந்தபோதிலும் புரட்சிக்கவி, புதுமைக்கவி என்ற அளவில் பாரதியின் இடத்தை பாவலர் தவறவிட்டிருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

    துணைநூல்கள்:

    1.துரையப்பா பிள்ளை தெ.அ. பாவலா் சிந்தனைச்சோலை, மகாஜனக் கல்லுரிவெளியீடு, 1960.

    2.மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கவிதைகள்.

    3.கைலாசபதி க. ஈழத்து இலக்கிய முன்னோடிகள், மக்கள் வெளியீடு,1986

    *****

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசியா்
    தமிழ்த்துறை
    கற்பகம் பல்கலைக்கழகம்
    கோவை

     

     

    Share
  • ஹைக்கூ கவிதைகள்

     

    தேனுகாமணி

     

    மினுமினுப்பாய்

    ஊர்ந்து செல்கிறது…

    பயம்

    ……

    செடியைப்பார்க்க

    மனம் வரவில்லை…

    பூக்கள் பறிக்கப்பட்ட பிறகு

    ……

    காற்றில் அசைந்து அசைந்து

    கவிதை எழுதும்…

    செடிகொடிகள்

    ……

    முட்புதரில்

    முதலில் சிக்கியது பட்டம்…

    கண்டபிறகு மனம்

    …..

    மரங்களை வெட்டி

    மனிதன் செய்துகொள்கிறான்…

    சவப்பெட்டி

    …..

    மெளனமொழி

    பேசக்கற்றுத்தரும்…

    கண்கள்

    ……..

    தின்று விட ஆசைதரும்

    அளவிற்கு அழகு….

    அரளி விதை

    ……

    தென்றல் என்ன பாடியிருக்கும்

    தலையாட்டி இரசிக்கிறது…

    தென்னை

    …..

    இடி விழுந்த பனையின்

    முனையில் ஒரு காகம்…

    எதை எண்ணி கரைகிறது

    ……

    துக்க வீடு

    தூங்க மனமில்லை…

    விழித்திருக்கிறது விளக்கு

    ….

    மழைமகள் வருகிறாள்

    பூமித்தாய்க்கு கிடைக்கும்….

    பச்சைப்புடவை

    …..

    வளைந்தது நாணல்

    காற்றடிக்கும் திசையில்…

    வாழக்கற்றுத்தருகிறது

    …..

    மழை இரவு

    நடைப்பாதை வாசிக்கு…

    எப்படி வரும் கனவு

     

    Share
  • கண்ணதாசன் கூறும் வாழ்வியல் நெறிகள்

    -த.அமுதஜோதி

    amuthajothiஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவராகக் கண்ணதாசன் விளங்குகின்றார். புராண இதிகாச, காப்பியங்களை எளிமையாக்கித் தமது பாடல்களில் சாரமாகத் தந்தவர். இவர் திரைப்பாடல்களில் வைத்துப் பாடாத துறைகளே இல்லை எனலாம். தமிழ் இலக்கியத்தைப் பாடல் வடிவில் மக்களிடம்  கொண்டு சென்றவர். தமிழர்கள் மத்தியில் அவர்கள் மனதில் மக்கள் நேசக்கவிஞனாக என்றென்றும் நம்மோடு  வாழும் கவியரசாக இடம் பெற்றவர். இவருடைய பாடல், கவிதை முதலாக அனைத்துப் படைப்புகளிலும் இலக்கியத்தாக்கமும், வாழ்வியல் சிந்தனையும் அதிகம் இடம் பெற்றுள்ளன. அவருடைய இறைநம்பிக்கை, காதல், கனவு, சமூக உணர்வு எனும் பொருண்மையை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    இறை நம்பிக்கை

    மனித வாழ்க்கையே நம்பிக்கையின் அடிப்படையில் தான் இயங்குகிறது. வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும், மணியும், நாளும் நம்மை வாழ வைப்பது நம்பிக்கையே ஆகும். மக்கள் அனைவரையும் பாதுகாத்து வருபவர் இறைவன் என்பதை கண்ணதாசன்,

     ”நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைதீர்ப்பு
    நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்புஎன்று இறைஅருளின் சிறப்பினை உணர்த்தியுள்ளார்.

       வேத வடிவிலுள்ள இறைவனையும், இறை வடிவிலுள்ள வேதத்தையும் நம்ப வேண்டும். யாரைப் பார்த்து உலக உயிர்கள் வணங்கும் என்பதற்குச் சான்றாக,

     ”உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
    உலகம் உன்னிடம் மயங்கும்
    நிலை உயரும்
    போது பணிவு கொண்டால்
     உயிர்கள் உன்னை வணங்கும்.” என்று பாடியுள்ளார்.

    மனிதனைத் தாண்டிய சக்தி ஒன்று உள்ளது. அந்தச் சக்தியிடம் விண்ணப்பித்துக் கொண்டால் பலன் தருகிறது. மனஅமைதியை  உண்டாக்குகிறது என்று கடவுள் நம்பிக்கை குறித்தும் கூறியுள்ளார்.

    திருமூலர் திருவள்ளுவரின் கருத்துகள் இவரின் பாடல்களில் காணப்படுகிறது.

    மனிதன் தவறு செய்வதற்கு ஆசைதான் மூலகாரணமாயிருக்கின்றது. ஆசைகள் இல்லாத இடத்தில் குற்றங்கள் குறைகின்றன. குற்றங்களும் பாவங்களும் இல்லாவிட்டால்  மனிதனுக்கு இறைஅனுபவம் ஏற்படுகிறது. இதனைத் திருமூலர்,

     ஆசை அறுமின் ஆசைஅறுமின்
    ஈசனோடாயினும் ஆசைஅறுமின்                  (திருமந்திரம் -2570 )

    என்று பாடியுள்ளார். உலகப் பொருட்கள் மீதுள்ள ஆசைகளை விடுவதற்கு இறைவனைத் துணையாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதனைப்

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு. எனும் குறட்பா மூலம் அறியலாம்.

    இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்து, ஆசையைத் துறந்து குற்றம் இல்லாத வாழ்வை வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளார்.

    காதல்

     இலக்கியம் என்ற சொல் முதலில் வாழ்க்கையைத் தான் குறிக்கும். வாழ்க்கையை பிரதிபலிப்பதே இலக்கியம் என்பதைக் கவியரசரின் ஒவ்வொரு படைப்பிலும் உணரலாம். சங்க இலக்கியத்தில் வாழ்வின் அனைத்துக் கூறுகளும் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் இதனை,

    உண்டற்குரிய வல்லாப் பொருளை
    உண்டன போலக் கூறலும் மரபே (தொல் -1156 )

    என்று கூறியுள்ளார். இதனடிப்படையில் கவியரசரின் பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகளைக் காணலாம். கண்ணதாசன் காதலைப்பற்றிப் பாடும்போது,

    தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி –அது
    தின்றதெல்லாம்
    போக இங்கே இருப்பது மீதி என்கிறார்.

    அந்தி நேரத்தில் காதலன் வராததை எண்ணி ஏங்குகிறாள். ஐயோ தென்றல் என் உடலைத் தின்று விட்டதே என வருந்திக் குறிப்பிடுகிறார். இப்பாடல் வரி,

    ”பயலையால் உணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால்” எனும் கலித்தொகைப் பாடல்வரியைச் சார்ந்து பாடப்பட்டதாகும்.

    இருவருடைய உணர்வுகளும் ஒன்றுபடும் பொழுது காதல் பிறக்கிறது என்பதை கண்ணதாசன்,

      நீ யாரோ நான் யாரோ தெரியாது – இன்று
    நே
    ர்ந்தது என்னவென்று புரியாது

    என்று குறிப்பிட்டுள்ளார். இப்பாடல் வரி குறுந்தொகைப் பாடலொன்றைச் சார்ந்து பாடியது என்பதை,

    யாயும் ஞாயும் யார் ஆகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே                         குறுந் -40) எனும் பாடல் மூலம் அறியலாம்.

    சங்க கால மக்கள் அந்தந்த நிலத்துக்குரிய ஒழுகலாறுகளின் அடிப்படையில் வாழ்வை மேற்கொண்டிருந்தனர். காதலால்  ஒன்றுபட்ட அன்பு வாழ்வை மேற்கொள்ளுவதே இல்வாழ்கை எனப்படும். அந்த அன்பு வாழ்க்கையைத் தங்களுடைய முதுமைக்காலத்திலும் தொடர்ந்து வைத்திருந்ததைச் சங்க இலக்கியம் விவரிப்பதைக் கண்ணதாசன் கவிதைகளில் பார்க்க முடிகிறது.

    கனவு
    மனம் என்பது உள்மனம், வெளிமனம் என இரண்டு வகைப்படும் என்பர். வெளிமனத்தில் உதயமாகின்ற அழுத்தமான நினைவுகள் பதிவாகின்றன. அவ்வாறு பதிவு பெற்ற நினைவுகளில் சில முன்பின் தொடர்பில்லாத சிறுசிறு பகுதிகளாக வெளிப்படும். இதனைத்தான் கனவு என்று குறிப்பிடுவர். இதனைக் குறுந்தொகைப் பாடலைச் சான்றாகக் கொண்டு ஆராயலாம்.

    கேட்டிசின் வாழி தோழி அல்கல்
    பொய்வ லாளன் மெய்உற மரீஇய
    வாய்தகைப் பொய்கனா மருட்ட ஏற்றெழுந்து
    அமளி தைவந் தனனே.                                 (குறுந் -30)

    என்ற பாடல் பிரிந்து சென்ற தலைவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்ற தலைவி, கனவு காண்பதாகக் குறிப்பிடுகிறது. எனவே இதன் மூலம் அழுத்தமாகத் தன் நெஞ்சில் படுகின்ற எண்ணங்களே கனவுகளாக வெளிப்படும் என்ற உண்மை புலப்படுகின்றது.

       கவிஞர் கண்ணதாசனிடத்தும் இத்தொடருக்குப் பொருத்தமான ஒரு பாடலைக் காணமுடிகிறது.

    கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
    கணவர் என்றார் தோழி
    கணவரென்றால் அவர் கனவு முடிந்ததும்
    பிரிந்தது ஏன் தோழி?

    என்று அவர் பாடியுள்ளமை தெளிவாகும். இரு பாடல்களிலும் கனவை உண்மை என்று நம்பி ஏமாற்றம் அடைந்தது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சமூக உணர்வு

      மேடு பள்ளங்களைச் சீராக்கிச் சமமாகப் பண்படுத்தப்பட்ட நிலத்தில்தான், எங்கும் ஒரே சீராக நீர் பாய்ச்ச முடியும். அப்பொழுதுதான் பயிர் செழித்து வளர்ந்து நல்ல பலனைக் கொடுக்கும். அதுபோல மனித சமுதாயத்தில் சாதியின வேறுபாடு, பாகுபாடு இருக்ககூடாது; அனைவரும் ஒருதாய் மக்கள் என்று எண்ண வேண்டும். இந்தக் கருத்தின் அடிப்படையை உணர்ந்த பாரதியார்,

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு –இங்கு
    ஒற்றுமை நீங்கிடில்  அனைவருக்கும் தாழ்வு
    நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் –இந்த
    ஞானம் வந்தால்பின் நமக்கது வேண்டும்

    என்று பாடுகிறார். இதனையே கண்ணதாசன் ,

    வெள்ளை மனிதன் வியர்வையும்
    கறுப்பு மனிதன் கண்ணீரும்
    உப்பு நீரின் வடிவிலே
    ஒன்று சேரும் கடலிலே

    என்று பாடுகிறார். பல்வேறு இடங்களில் தோன்றக் கூடிய நதிகள் அனைத்தும் கடல் தாயிடமே சங்கமமாகின்றன. இந்நிலை மனிதனிடமும் வரவேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் மனித சமுதாயம் ஒற்றுமையுடன் வாழ வழிகாட்டியுள்ளார்.

    மனிதனுக்கு மாற்றம் தேவை தான். மானுடத்தையே அழிக்கும் மாற்றம் கூடாது. சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற இயல்போடு குற்றங்களைச் சுட்டிக் காட்டும் அங்கதக் குறிப்புப் பொருள் நிரம்பிய பாடல்கள் சங்க இலக்கியத்திலும் கண்ணதாசன் கவிதைகளிலும் நிரம்பி இருப்பதை மேற்கண்ட பாடல்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

    ***** 

    துணைநூல்கள்:

    1. தொல்காப்பியம்
    2. திருமந்திரம்
    3.  குறுந்தொகை

    *****

    கட்டுரையாளர்
    தமிழ்த்துறைப் பேராசிரியர்,
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    தஞ்சாவூர்.

     

     

     

    Share
  • பெருமிதமெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியா்களின் அகநானூற்றுத் திறன்

     -பீ.பெரியசாமி

       1.முன்னுரை

    FB_IMG_15018996565301641நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியா். (தொல்.மெய்.நூ3) அவற்றுள் பெருமிதமெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக, கல்வி, தறுகண், புகழ்மை, கொடை என்பனவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியா் விரித்துரைக்கும் பெருமிதத்திற்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரைவகுத்த உரையாசிரியா்களின் உரைகளில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டள்ளன என்பதனை ஆராய்கிறது.

           1.1  பெருமிதம் தோன்றும் களன்கள்

    பெருமிதமெனும் மெய்ப்பாடு தோன்றும் களன்களைத் தொல்காப்பியா்,

    கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
    சொல்லப்
    பட்ட பெருமிதம் நான்கே” (‘தொல்.மெய்.9)
    எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.

    1.2  உரையாசிரியா்கள் பார்வையில் பெருமிதமெனும் மெய்ப்பாடு

    பெருமிதம் வீரத்திற் பிறப்பது என இளம்பூரணரும், பெருமிதமென்பது வீரம் எனப் பேராசிரியரும், பெருமிதம் – வீரம் எனப் புலவா் குழந்தையும் உரை கொள்வா். இவற்றின்வழி பெருமிதமென்பது வீரம் என அறியப்படுகிறது.

      1.2.1  கல்வி

    கல்வியென்பது தவ முதலாகிய விச்சை (பேரா.மெய்.நூ.9) எனப் பேராசிரியா் உரை கொள்வார். இதன்வழி கல்வி என்பது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழறிவும், படைக்கல்வியும்,  நுண்கலையும் அடங்குமென்பது அறியப்படுகிறது. இதனை விளக்க பேராசிரியரும் புலவா் குழந்தையும் கலி.141ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனா்.

      1.2.2  தறுகண்

    தறுகணென்பது அஞ்சத்தக்கன கண்ட இடத்து அஞ்சாமை எனப் பேராசிரியரும்; தறுகண்-தறுகண்மை-அஞ்சாமை எனப் புலவா் குழந்தையும் உரை கொள்வா். இவற்றின் வழி தறுகண் என்பது அஞ்சத்தகுந்தன நடத்தவிடத்து அஞ்சாது செயல்படுதல் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்க இளம்பூரணர் புறப். வெண்பா.78.ஐயும் பேராசிரியரும் புலவா் குழந்தையும் கலி.141 ஐயும் எடுத்துக்காட்டியுள்ளனா்.

       1.2.3  புகழ்மை

    புகழ்மை என்பதனை இசைமையெனப் பொருள் கொள்வர் பேராசிரியரும் புலவர் குழந்தையும்.  “இசைமை “ -புகழ்; ஒலி; சீர்த்தி – எனப் பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி (க.த.அ.ப.98).  “புகழ்மை“ – புகழ்; புகழுடைமை- (க.த.அ.ப.664) எனப் பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி. இதன்வழி, புகழ்மை எனினும் இசைமையெனும் புகழ் என்பதனை உணா்த்துகிறது என்பது அறிப்படுகிறது.

    இசைமையென்பது இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமையென பேராசிரியரும், இசைமை-புகழ்; அதாவது, இன்பமும் பொருளும் மிகுதியாக உண்டாயினும் பழிக்கத் தகுவன செய்யாமை எனப் புலவா் குழந்தையும் பொருள் கொள்வா். இவற்றின் வழிப் புகழ்மையென்பது நம்வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியும் செல்வமும் கிடைப்பதாக இருப்பினும் மற்றோர் பழிக்க நேரும் செயலை செய்யாது விடுத்தல் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்கப் பேராசிரியரும் புலவர் குழந்தையும்,

    கழியாக்  காதல  ராயினுஞ்  சான்றோர்
    பழியொடு  
    வரூஉம்  இன்பம்  வெஃகார்”    (அகம்-112)

    எனும் அகநானூற்றுப் பாடலை எடுத்தாண்டுள்ளனா். இப்பாடலானது நீங்காத காதலையுடையவராயினும் சான்றோர் பழியோடு வரும் இன்பத்தை விரும்ப மாட்டார்கள் என்கிறது. எனவே புகழோடு வருமின்பத்தை விரும்புவா் என்றமையால் புகழ்பற்றி வந்த பெருமிதத்தை உணா்த்தியது.

      1.2.4  கொடை

    கொடையென்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளும் கொடுத்தல் எனப் பேராசிரியா் உரை கொள்வார். இதன்வழி கொடையென்பது தன்னிடம் உள்ள அனைத்தையும் வேண்டுவோருக்கு வேண்டியவாறு அளித்தல் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்கப் பேராசிரியா், கலி-141, புறம்-43 ஆகிய பாடல்களையும் புலவா் குழந்தை கலி-141 ஆம் பாடலையும் எடுத்தாண்டு ள்ளனா்.

      1.2.5  சொல்லப்பட்ட பெருமிதம்

    சொல்லப்பட்ட பெருமிதம் என்றமையால் உரையாசிரியா்கள் (பேராசிரியா், புலவா் குழந்தை) காமம் பற்றியும் பெருமிதம் பிறக்கும் என்கின்றனா். இதனை விளக்கப் பேராசிரியரும் புலவா் குழந்தையும் புறம் -73 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனா்.

        1.3   முடிவுரை

    பெருமிதமெனும் இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர் புறப்- வெண்பா ஒரு பாடலையும், பேராசிரியா் கலித்தொகை -1, அகநானூறு -1, புறநானூறு-2 என நான்கு பாடல்களையும், புலவா் குழந்தை கலித்தொகை, அகநானூறு புறநானூறு ஆகியவற்றில் தலா ஒரு பாடல் என மூன்று பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனா். கலி-141, ஆம் பாடலை மட்டும் பேராசிரியரும், புலவா் குழந்தையும் கல்வி, தறுகண், கொடை எனும் மூன்று மெய்ப்பாடுகளையும் விளக்க எடுத்தாண்டுள்ளனா்.

    உரையாசிரியா்கள் (இளம்பூரணர், பேராசிரியா், புலவா் குழந்தை) அகநானூற்றில் (112) ஒரு பாடலையும், கலித்தொகையில் (141) ஒரு பாடலையும் புறநானூற்றில் (43, 73) என இரண்டு பாடல்களையும் புறப் வெண்பா-78 ஆம் நூற்பாவையும் என ஐந்து உதாரணப்பாடல்களை எடுத்தாண்டுள்ளனா். இவற்றின் வழி புறநானூறு தவிர்த்த ஏனைய வற்றிலிருந்து தலா ஒரு பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது என்பது குறிப்பாக அகநானூற்றில் ஒரு பாடல் மட்டுமே எடுத்தாளப்பட்டுள்ளது என்பது முடிவு.

    *** 

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத் தலைவர்
    டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்

     

     

     

    Share
  • மண் மணம்

      பொலிகையூர் ரேகா

                                              சாப்பிட்டு முடித்தபின் மாடிப் பகுதியில் காய வைத்திருந்த  பழ விதைகளைப் பையில் சேகரித்துக் கொண்டிருந்தேன். பத்து வயது நிரம்பிய எனது மகன் வேகமாக மாடிப் படிகள் வழியாக வந்து கொண்டிருந்தான். பாடசாலையிலிருந்து வந்ததுமே நேரே என்னிடம் வருவது தெரிந்தது.

                                            “அப்பா இன்னும் ஒரு மாதத்தில் விடுமுறை வந்துவிடும்.பரீட்சைக்கான திகதிகள் எல்லாம் தந்துவிட்டார்கள் இந்த விடுமுறைக்கு எங்கே  போவதென்று  எல்லா நண்பர்களும் கதைத்துக்கொண்டு  உள்ளார்கள் . நாங்கள் எங்கே  போகப் போகின்றோம் ” என வேகமாக கேட்டான். சிரித்தவாறு “எங்கே  போக வேண்டுமென  உனக்கு விருப்பம்” என்று கேட்டேன்.

                                             “அப்பா நல்ல இடமாப் போக வேண்டும்;  பெரிய விடுதியில்  தங்க வேண்டும்.  இடம் நன்றாக இருக்க வேண்டும் அப்பா” என்றான். “சரி இப்பொழுது  சென்று  உடுப்பை மாற்றிவிட்டுச் சாப்பிடு, எங்கே  செல்வதென்று  யோசிக்கலாம்” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு சேகரித்த விதைகள் அடங்கிய பையோடு கீழே சென்றேன்.

                                            “என்ன தம்பி எப்படி இருக்கின்றாய்” என்றபடி அண்ணன் வந்து கொண்டிருந்தார். தூரத்துச் சொந்தம் என்றாலும் ஊரில் ஒன்றாக வளர்ந்ததால் பாசம் அதிகம். நகர்ப்புறம் வரும்போதெல்லாம் வீட்டுக்கு வர மறந்ததில்லை. ‘’வாருங்கள்  அண்ணா’’ என்று வரவேற்றபடி உள்ளே அழைத்துச் சென்றேன். “பெரியப்பா” என்றபடி மகன் வந்து அருகில் அமர்ந்தான். “சொந்தத்தை அரவணைக்கின்ற இந்தக் குணம் உன் மகனுக்கும் அப்பிடியே இருக்கிறதடா  தம்பி” என்று கூறி அவனை தழுவிக் கொண்டார்.

                                                 “எப்படிப் படிக்கின்றாய்” என்று மகனைக் கேட்டார். “நன்றாகப் படிக்கின்றேன் பெரியப்பா , தேர்வு வருகின்றது  முடிந்ததும்  விடுமுறைக்கு சுற்றுலா செல்லப்போகின்றோம்.” எனக்  கூடுதல் தகவலையும் அவரிடம் வழங்கினான். “அது சரி எங்கே  போகப் போகின்றாய்  ” என்று சிரித்தபடி கேட்டார். “இன்னும் முடிவு எடுக்கவில்லை பெரியப்பா இனிமேல்தான் தேர்வு செய்யவேண்டும் ” என்றான்.

                                               “தற்போது  உள்ள பிள்ளைகள் விடுமுறை விட்டால் எந்த நாட்டுக்கு, எந்தச்  சுற்றுலாத்  தலத்துக்குச்  செல்வதென்றுதான்  திட்டமிடுகின்றீர்கள்  ஆனால் நாங்கள் எல்லாம் விடுமுறை என்றால்   எந்தக்  குளம், கடல், ஆறு  கோயிலுக்குப் போவதென்றுதான் திட்டமிடுவோம். காலம் மாறிப்போய்விட்டது தம்பி” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

                                              அவர் கூறியதன் உள்ளர்த்தம் புரிந்தது. சிறுவயதில் ஒன்றாக விளையாடியதும் , திருவிழா சென்றதும் காலப் போக்கில் வளர்ந்து நகர்ப்புறம் வந்து வேலை, குடும்பம் என்றானபின் குறைந்து போயிருந்தது. விடுமுறைப் பிரச்சனைகளால் கடந்த சில வருடங்கள் திருவிழாவிற்கு கூடச்  செல்வதில்லை.

                                               சிறிது நேரம் பேசிவிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு அவர் விடைபெற்றுக் கொண்டார். மனையாள் சமையலறையில் பாத்திரங்களோடு போராடிக் கொண்டிருந்தாள். மகன் பரீட்சையை விட விடுமுறைக்கு எங்கே செல்வதென்பதில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தான். எனக்கோ எனது விடுமுறைக் காலங்கள் நினைவில் வந்து கொண்டிருந்தது. அண்ணா வந்து சென்றதன் வெளிப்பாடா அல்லது சிறுவயதிலேயே மகன் இவ்வளவு தூரம் விடுமுறையைத் திட்டமிடுகிறான் என்பதாலோ தெரியவில்லை.

                                             எங்கள் விடுமுறையில் வீடே அல்லோகல்லோலப்படும். எண்ணெய்க் குளியலில் இருந்து நாட்டுக் கோழி குழம்பு வரை வீடே கமகமக்கும். எங்களைச் சமாளிப்பது பெரியவர்களுக்குக் கொஞ்சம் சிரமம்தான். விடுமுறைக்கான திட்டமிடல்கள் அங்கே  வேறுவிதமாக இருக்கும். குல தெய்வம் கோயிலுக்குப் போக வேண்டும் என்று ஆரம்பிக்கும். கோயிலுக்குப் போவதென்றால்  எல்லோருக்கும் விருப்பம்.

                                                முதல் நாளே பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும்  அம்மா, பெரியம்மா, சித்தி ஆகியோர் எடுத்து வைத்துவிடுவார்கள் . அதில்  குறிப்பிடக் கூடிய முக்கியமான பற்றியம்  என்னவென்றால் பெரும்பாலும் எல்லாமே எங்கள் வயலில் விளைந்த அரிசி, கரும்பு, தேங்காய், பழம்,பாக்கு,வெற்றிலையாக இருக்கும்.

                                                  வாகன வசதிகள் குறைவான காலம் என்பதால் மாட்டு வண்டியில்தான் பயணம். அதை இப்போது நினைத்தாலும் மனது குதூகலிக்கும். அப்பப்பாதான் மாட்டு வண்டி ஓட்டுவார். மாடுகளின் மேல் படாதவாறு சிறிய சாட்டையை சுழற்றி சத்தமெழுப்பி அவற்றை மெதுவாக விரட்டிச் செல்லும் அழகைக் காணவே அவருக்கு அருகில் முன்பக்கமாக அமர்ந்து கொள்வேன். ஒற்றையடிப் பாதைகளில் சத்தமிட்டபடி மாட்டு வண்டி செல்வது கூட இசை போல இருக்கும் எனக்கு.

                                             கோயிலுக்குப் போனதும் பெரியவர்கள் எல்லோரும் பொங்கல் பொங்குவதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்குவார்கள்.  நாங்கள் சிறியவர்கள்  கோயில் மண்ணில் விளையாடிக் கொண்டிருப்போம். அப்படியே அப்பாவைக் கேட்டு பலூன்,பந்து என வாங்கி விளையாடுவோம். விசேட நாளாக இருந்தால் மணிக் கடைகள், பனிக்கூழ் கடைகள்,சாப்பாட்டுக் கடைகள் எல்லாமே இருக்கும். சாப்பாட்டுக் கடை என்றால் இப்போது உள்ளவாறு இருக்காது. தோசைக்கடை, இட்டிலிக்கடை மட்டும்தான்.

                                          அம்மாக்கள் புற்கை பொங்கும்  நேரத்திற்குள் ஒரு தடவை  நாங்கள் சித்தப்பாவுடன்  சென்று  ஒரு தோசைக் கடையில்  ஆளுக்கு இரண்டு தோசை எனச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவோம். அப்படியே கோயிலை ஒரு சுத்து சுத்தி கண்ணைக் கவருகின்ற  வண்ணத்தில்  விதம் விதமாக தயாரித்து  அடுக்கி வைக்கப்பட்ட மிட்டாய்களையும் ஒரு கை பார்த்துவிட்டு வருவதற்குள் இங்கு எல்லாம் தயாராக இருக்கும்.

                                         பொங்கல் முடிந்த பின்னர் சாமிக்குப் படைத்துவிட்டு அங்கே நிற்பவர்களுக்கும் கொடுத்துவிட்டு நாங்களும் அங்கேயே சாப்பிட்டுவிட்டு வெளிக்கிட்டோம்  என்றால்  இரண்டு  மாட்டு வண்டியும் நேராக  வீட்டில்தான்  போய் நிற்கும் . கோயிலுக்குப்  போனால் நேராக  வீட்டிட்குத்தான் போக வேண்டுமென  அம்மாச்சி சொல்லிவிடுவார் .

                                         பிறகு ஊரில்  உள்ள வீடுகளுக்கெல்லாம்  நாங்கள்தான் ஆளுக்கொரு பாத்திரத்தில பொங்கல் கொண்டு செல்வோம். அது எங்களுக்கு விளையாட்டுப் போன்றது. யார் விரைவாகக் கொண்டு சென்று  கொடுத்துவிட்டு வருவதென  போட்டி போட்டுக் கொண்டு செல்வோம். அது ஒரு அழகான பண்பாடு. பகிர்ந்துண்ணல் என்பதைச் சற்றே மறந்த பகுதியில் வாழும் எனக்கு இப்போது நினைத்துப் பார்த்தாலும் அவையெல்லாம் எனக்கு கிடைத்த வரம் போலத்  தோன்றும்.

                                         இன்னொரு நாள் எல்லோரும் சேர்ந்து வயலுக்குச்  செல்வோம். அங்கே  தண்ணீர்  இறைக்கின்ற இடத்தில் தொட்டியில குளிப்பது , வயலுக்குத் தண்ணீர்  போகின்ற  கால்வாயில் ஓடும் சின்னச் சின்ன மீன்களைப்  பிடித்து மீண்டும் கிணற்றுக்குள் விடுவது, அப்படியே தென்னந் தோப்புக்குச் சென்று இளநீர் குடிப்பது, கரும்புத் தோட்டம் செல்வது  என நாள் போவது கூடத் தெரியாது.

                                  ஆறு , குளம் சென்று போட்டிக்கு நீச்சலடிப்பது, மத்தியான வெயிலில் கிளித்தட்டு, கிட்டிப்புள் விளையாடுவது என எங்கள் விடுமுறைகள் குதூகலமாகவே செல்லும். விடுமுறைக்காக நாங்கள் காத்திருந்ததில்லை. பாடசாலை முடித்து வந்தாலும் வார இறுதி நாட்களிலும் எங்கள் பொழுது போக்குகள் இவைதான்.

                                  இவற்றை எல்லாம் விடவும் அப்பப்பா, அப்பாச்சி சொல்லும் சுவாரசியமான கதைகள் கூட எங்களைப் புது உலகிற்கு அழைத்துச் செல்லும். இரவு உணவை உருண்டைகளாக உருட்டி கைகளில் கொடுத்தவாறே அப்பாச்சி சொல்கிற கதைகள் அவர் கொடுக்கும் உணவைப் போலவே அருமையானவை. பெரியவர்களாகப்  பத்துப்பேரும் சிறுவர்களாக ஐந்து பேரும் இருந்த அந்த வீட்டில் நான் தனிமையை உணர்ந்ததேயில்லை.

                                    தினமும் எங்கள் நாட்கள் குதூகலமாகவே இருக்கும். உணவுகள் ஆரோக்கியமாக இருந்தன. வரகு,திணை,சாமை,குரக்கன் என அனைத்து தானியங்களும் உணவில் இடம்பெற்றது. வீட்டின் பின்புறம் அம்மா வைத்திருந்த கீரை வகைகள் தினமும் உணவாகின. கைமுறுக்கு,சீடை,எள்ளுருண்டை,பொரி உருண்டை எனத் தின்பண்டங்கள் வீட்டிலேயே தயாராக இருக்கும்.

                                  எந்த உறவினர் வீட்டிற்குச் செல்வதாக இருந்தாலும் வீட்டில் தயாரித்த உணவுகளும், வயலில் விளைந்த தானியம், கிழங்கு, பழங்களுமே கையுறையாகக் கொண்டு செல்லப்பட்டது. விளையாடச் சென்று கை, காலை உடைத்துக் கொண்டதல்லாமல் நோய் வந்து நாங்கள் படுத்தது மிகவும் குறைவு. சந்தேகங்கள் தீர்த்து வைக்கும் அறிவாளியாக அப்பப்பா இருந்தார். என் அப்பப்பா இருந்தவரை எனக்கு எல்லாம் அவர்தான். அவர் சொல்கின்ற ,செய்கின்ற  செயல்கள்  எல்லாம் வித்தியாசமாக இருக்கும்.

                                 வீட்டில் இருக்கும் வேப்பம்பழ விதை, சாப்பிட்ட பின்பு  உள்ள மாதுளை,மா, திராட்சை, தோடம்பழ விதைகள் எல்லாவற்றையும் காய வைத்து ஒரு பையில்  சேர்த்து வைத்துவிட்டு தூரமாக  உள்ள இடங்களுக்குச் செல்லும்போது   வீசிவிட்டு வருவார். இல்லையென்றால் குளிப்பதற்கு ஆற்றிற்குச் செல்லும்போது ஆற்றங்கரை ஓரமாக வீசிவிட்டு வருவார் . அது தானாக  முளைத்துப்   பலன் கொடுக்கும் எனச்  சொல்லுவார். இந்த நல்ல பழக்கம் எல்லாம் அவரிடம்  இருந்து வந்ததுதான். நகரத்துக்கு வந்த பிறகும்  கூட நான் நகர்ப்புறத்தைத் தாண்டிப்  போக நேரும் சமயங்களில் வண்டியில் சேகரித்து வைத்திருக்கும் விதைகளைத்   தூவிச் செல்வது வழக்கம்.

                                            அப்பப்பாவுடன் இருந்தபோது எனக்கு அவர் செய்வதெல்லாம் பெரிதாகத்  தோன்றியதில்லை. கிராமத்தில் பெரும்பாலும் எல்லாரிடத்திலும் இத்தகைய நற்குணங்கள் இருந்ததுண்டு. நகர்ப்புறம் வந்து வீட்டைக் கூண்டாக மாற்றிக் கொண்டு வசிப்பவர்களைப் பார்த்த பின்னரே எனக்கு அவரின் செயல்கள் பெரிதாகத் தெரிந்தது. அவர் இறந்த பின்னர் அந்த இழப்பு எனக்கு பெரிதாகத்  தெரியாமல் இருக்கவே மேற்படிப்புக்காக நகர்ப்புறம் அனுப்பி வைத்தார் அப்பா. ஆனால் இங்கு வந்த பின்னர்தான் ஊர் நினைவும் உறவுகளும் பெரிதாகத் தெரிந்தது.

                                       அடுத்தடுத்து பெரியவர்கள் காலமான பின்னர் ஊருக்குப் போகவே கவலையாக இருந்தது. வேலை, குடும்பம் என்றானபின் ஊருக்குச்  செல்வதும் குறைந்து போனது. ஆற்றில் போட்டி போட்டு நீச்சலடிக்க அண்ணன்கள் ஊரில் இல்லை, இரவு உணவை உருண்டை பிடித்துக் கையில் வைக்க அப்பாச்சி இல்லை, ஊர்க் கோயில் வரலாறு சொல்லும் அப்பப்பா இல்லை, அப்பாவைத் தொடர்ந்து அம்மாவும் இல்லை என்றான பின் ஊர் செல்லும் நாட்டம் குறைந்து போனது.

                                         அக்கா தொலைபேசியில் பேசும் போதெல்லாம் எங்களை எல்லாம் மறந்துவிட்டாயேடா  என்று மூக்கைச் சிந்துவாள். கோயிலுக்குப் பொங்கல் வைக்கச் செல்லும் போதெல்லாம் அழைத்துக் கொண்டே இருக்கிறாள். விடுமுறைப் பிரச்சனைகள் ஒரு பக்கம் தடுக்க பெரியவர்கள் இல்லாத வெறுமை வீட்டைப் பார்க்க மனது வரவில்லை எனக்கு. அம்மா இருந்தவரை மாதமிருமுறை சென்றதும் அங்கே எல்லாரும் ஒன்றாகக் கோயிலுக்குச் சென்றதும்தான். அதன்பின் போவது குறைந்து போனது. சென்ற ஆண்டு குடும்பத்தோடு அம்மாவின் நினைவு நாளுக்குச்  சென்றதோடு சரி. அதுகூட இரு நாள் விடுப்பில் சென்றது.

                                             காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகின்றது. பழைய நாட்கள் திரும்பிடாதா என்று மனது இன்னும் அடித்துக் கொள்கிறது. குளத்தில் நீச்சலடிக்க, வயல் வரப்புகளில் நடக்க, போட்டி போட்டு கரும்பு உண்ண, அண்ணண்களோடு விளையாட, அப்பாச்சியின்  இடத்தில் அக்கா தரும்  உணவைச்  சாப்பிட என ஓரமாக ஆசை இருக்கத்தான் செய்கிறது. “அப்பா”என்ற குரல் கேட்டுப்  பெருமூச்சோடு நிமிர்ந்தேன்.

                                              “அப்பா விடுமுறைக்கு எங்கே செல்வதென ஒரு இடத்தை யோசித்து வைத்திருக்கின்றேன் ” என்று புதிர் போட்டபடி என் முகத்தைப் பார்த்தான். உணர்வற்றபடி “ம் சொல்லு ” என்றேன்.” அப்பா “போன வருசம் சென்றோமே அங்கேயே செல்வோம், உங்கள் ஊருக்குப் போவோம்” என்றான் ஆர்வமாக.

                                         வியப்போடு பார்த்தேன் “ஆம் அப்பா அங்கேயே போவோம். சிறிது நேரத்திற்கு முன்னர் பெரியப்பா கூறியிருந்தார்  அங்கே  நீங்கள் எல்லாம் எப்படி மகிழ்ச்சியாக விடுமுறையைக் கொண்டாடினீர்கள்  என்று. போன ஆண்டு சென்றபோது  நாங்கள் வீட்டில்  மட்டும் நின்றுவிட்டு வந்துவிட்டோம் . இந்த முறை அங்கே சென்று அதிக நாட்கள் நிற்கவேண்டும். ஆறு,குளம்,கோயில்,தோப்பு என அனைத்து இடங்களுக்கும் செல்வோம். சென்ற தடவை அங்கு போனபோது எல்லோரும் எவ்வளவு பாசமாக பார்த்துக்கொண்டார்கள். நான் எல்லாரையும் பார்க்க வேண்டும். பெரியம்மா கதைக்கும்போது அவவையும் வரச் சொல்லுவோம். எல்லோரும் சேர்ந்து போவோம்.” என்றபடி அவன் பெரிய மனிதத் தோரணையில் ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கையில் எனக்குள்ளே ஒரு பரவசம் என்னை ஆட்கொண்டது. என் மகன் மண் வாசம் உணர்ந்தவனாய் இருக்கிறான். விடுமுறையை எங்கோ களிக்க விரும்பியவன் தன் ஊரிற்கு செல்வதற்கு ஆர்வம் காட்டுகிறான். எனக்கு மகிழ்வாக இருந்தது.

                                            மனைவியும் எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு மலர்ந்த முகத்தோடு தன் சம்மதத்தை உணர்த்தினாள். மகனின் விடுமுறைக்காக அவனை விடவும் ஆர்வமாக நான் தவிப்போடு காத்திருக்கத் தொடங்கினேன்.

    Share
  • மன(ண)நிலை நிலவரம்

     சொல்லின் செல்வி

     

    மஞ்சள் தாலி எடுத்து
    என் கைகளால்
    என்னவளை வலதுபுறம் வளைத்து
    மூன்று முடிச்சு ஒத்திகையை
    நித்தம் நித்தம் எண்ணி
    ஏக்கம் கொண்டுதான் இருக்கிறேன் !

     

    வாழ்கையும் போய் கொண்டுதான் இருக்கிறது
    வாலிப வயதை தாண்டியது..!
    வில்லதனை கொடுத்து உடைக்கச் சொன்னால்
    நொடிப் பொழுதில் உடைத்து விடுவேன்;
    சொல்லதனை கொண்டு சொல்லிச் சொல்லிக் காட்டுகிறார்கள்
    ஜாதகம் சரி இல்லை என்று;

     
    என் கட்டில் கேலி செய்கிறது
    ”கடைசிவரை தலையனையைத் தான் நீ தழுவவேண்டுமென்று.!!”

    என் கைபேசி சிரிக்கிறது..
    ”உன் இச்சையை நான்தான் தீர்க்க வேண்டுமென்று..!”

    .எனது இருச்சக்கரம் வாகனம் சலித்துக் கொள்கிறது
    ”எவ்வளவு நாள் உன்னை மட்டுமே சுமக்கவேண்டுமென்று !”

    மனதிற்குள் உள்ள போராட்டத்தை
    மறைத்துக்கொண்டு
    ஆண் மகனென்ற மிடுக்கில்
    மீசையை முறுக்கிக்கொண்டு
    வெளிப்புறமாய் கர்வத்தை
    மாயை மீனாய் காட்டிக்கொண்டு
    தீர்ந்துவிடும் வாலிப வயதுகளில்
    தீராத ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்.

    என் மனநிலை புரிந்துக்கொண்டு
    என்னைப் போலவே
    மணமேடைக்கு காத்திருக்கும்
    முதிர்கன்னி எங்கேனும் உண்டென்றால்
    தனியறை ஜன்னலுக்குள்
    அனுப்பிவிடு
    தென்றலே..
    என் வசந்தக்கால தென்றலே.!!

     

     

    Share
  • புத்தக வாசிப்பு – சில புரிதல்கள்

    -முனைவர். வே.மணிகண்டன்

    “உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு” – சிக்மண்ட் பிராய்டு.

    புத்தகம் = புதுமை + அகம், மனிதனுக்குப் புதிய சிந்தனைகளைத் தரும் வல்லமை படைத்தவை புத்தகங்களாகும். இவை, மனிதனின் அறிவுத்திறன் மற்றும் அனுபவத்தினை மேம்படுத்தக் கூடியவை. ஒவ்வொரு புத்தகமும் மனிதனுக்கு ஏதேனும் ஒரு கருத்தினையாவது அவன் மனத்தில் விதைப்பவை. புத்தக வாசிப்பு  என்பது  நுட்பமான கலை. வாசிப்பிற்கு ஏற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் முறையானது வாசகனின் மனம் சார்ந்ததாகும். பெரும்பாலும் வாசகனுக்கு ஆர்வம் மிகுந்துள்ள துறைசார்ந்த புத்தகங்களையே தேர்ந்தெடுத்துப் படிப்பான். வாசிப்புத் திறனானது வாசகனுக்கு வாசகன் மாறுபடும். ஒரு புத்தகத்தினைப் பற்றி பலவிதமான வேற்றுமை உடைய புரிதல்களை வாசகர்கள் கொண்டுள்ளனர். சில புத்தகங்கள் மனிதர்களால் போற்றப்படுகின்றன. சில புத்தகங்கள் மனிதர்களின் மனத்தில் தங்குவதில்லை. சில புத்தகங்கள் காலத்தை வென்று அனைவரின் நன்மதிப்பையும் பெற்று இவ்வுலகில் நிரந்தரமாக நிலைத்துள்ளன. சில புத்தகங்கள் படித்தவுடன் பொருள் தருவதில்லை. சில புத்தகங்கள் பொருள்தரினும் மனத்தில் நிற்பதில்லை.

    புத்தகத்தினை வாசித்தல் என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. வாசிப்பதற்கு இப்படித்தான் வாசிக்க வேண்டும். இவ்வாறு வாசித்தல் எளிது. இப்படி வாசிப்பது மட்டுமே புரியும் என விவரிப்பதால் அல்லது அறிவுரைகள் கூறுவதால் நல்ல வாசகனை ஒருநாளும் நம்மால் உருவாக்கிவிட இயலாது.

    புத்தகம் சொற்பொருள் விளக்கம்

    புத்தகம் என்னும் சொல்லிற்கு “புத்தகம் (book) என்பது எண்ணப் பதிவாகிய கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. இக்காலத்தில் அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நூல் பனையோலையில் எழுதப்பட்ட பதிவாக இருந்தது. எழுதப்பட்ட பனையோலைகளைப் துளையிட்டு நூல்கயிற்றில் கோத்து வைத்தனர். பொத்துக் கோத்து வைத்த சுவடிகளைப் பொத்தகம் என்றனர். நாளடைவில் பொத்தகம் என்னும் சொல் புத்தகம் என மருவி வழங்கப்படுகிறது”1 கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா பொருள் தருகின்றது. பொத்தகம் என்னும் சொல்தான் புத்தகமாக மாற்றம் அடைந்துள்ளது. பொத்தகம் என்னும் சொல்லிற்கு பொதுவான செய்திகளை  அகத்தில் கொண்டிருப்பது அல்லது அகத்துள் சேர்க்க  உதவுவது என்று பொருள் கொள்ளலாம்.

    வாசிப்பதற்கான புத்தகத்தினைத் தேர்ந்தெடுக்கும் முறைகள்:

    1. மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்க கூடியவை
    2. ஆர்வத்தினை வளர்ப்பவை
    3. துறைசார்ந்த அறிவினை விரிவுபடுத்துபவை
    4. புதுமையான செய்திகளைத் தருபவை
    5. வாசகன் சார்ந்த படைப்பாளுமை வளர்க்க உதவுபவை
    6. திறனாய்வு அறிவினை மேம்படுத்துபவை
    7. பிறதுறை சார்ந்த வியப்பினை அளிப்பவை
    8. பொதுவானவை

    புத்தகம் வாசிக்கும் திறம்:

    புத்தகவாசிப்பு என்பது நடுநிலைத்தன்மையுடையதாக இருத்தல் வேண்டும். ஒரு புத்தகத்தினைப் பற்றிய எதிர்மறை கருத்துக்களை நண்பர்கள் அல்லது சமூக ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொண்டு பிறகு அப்புத்தகத்தினை வாசிப்பதில் எவ்வித பயனும் இல்லை. ஆகையால், புத்தகத்தினை பற்றிய எதிர்மறை கருத்துக்களை எல்லாம் மனத்திலிருந்து தூக்கி எறிந்துவிட வேண்டும்.

    ஓர் எழுத்தாளரின் செல்வாக்கினை மனத்தில் நிறுத்திக்கொண்டு புத்தகத்தினைப் படித்தல் கூடாது. புத்தகத்தில் வரையறுக்கப்பட்ட காலத்தினை மனத்தில் நிறுத்திக்கொண்டு புத்தகத்தினைப் படித்தல் வேண்டும். புத்தகத்தின் ஆசிரியரின் மீதுள்ள வெறுப்பு மற்றும் நம்பகத்தன்மையற்ற நிலையினை மனத்தில் கொண்டு புத்தகத்தினை வாசிக்க கூடாது. மொழிபெயர்ப்பு நூல்களைப் படிக்கும்பொழுது மூலநூல் படைக்கப்பட்ட நாட்டின் காலசாரம், பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள், காலநிலை, சூழல்கள் ஆகியவற்றை அறிந்துகொண்டு படிப்பது சிறப்பான புரிதலைத் தரும். புத்தக வாசிப்பிற்குத் தகுந்த சூழலை, நேரத்தை வாசகன் ஏற்படுத்திக்கொள்ளுதல் அவசியமானதாகும்

    புத்தக வாசிப்பில் புரிதல்அற்ற நிலைக்குக் காரணங்கள்:

    புத்தகவாசிப்பு நிலையில் முதன்மையானதாகக் கருதப்படுவது உணர்ந்து வாசிப்பதாகும். புத்தகத்தினை உணர்ந்து வாசிக்கும் நிலையில் வாசகனின் மனம் இல்லாத நிலையினால் புரிதல்அற்ற தன்மை பிறக்கின்றது.

    “புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே புத்தக வாசிப்பின் பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளப்படாமல் போவதற்குப் புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு. எதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு. ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்க கூடும். எந்தப் பொருள் பற்றி பேசுகிறதோ அது நமக்குப் பரிச்சயமற்றிருக்ககூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயற்சி தேவைப்பட்டதாக இருக்ககூடும்”2.

    புத்தக வாசிப்பில் புரிதல்அற்ற நிலையினை வாசகன் அடைவதற்கு அப்புத்தகத்தினைப் படிப்பதற்கு ஏற்ற அனுபவத்தினை பெறாது இருத்தல். புத்தகம் படைக்கப்பட்ட காலம், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள காலசாரம், பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள், காலநிலை, சூழல்கள் ஆகியவற்றை வாசகன் அறியாதிருத்தல். புத்தக வாசிப்பிற்கு ஏற்ற சூழல் இல்லாத நிலையில் வாசகன் இருத்தல்.

    புத்தக வாசிப்பின் பயன்கள்

    1. மனம் தெளிவு பெறும்
    2. எழுத்துப் பிழைகள் நீங்கும்
    3. புதிய செய்திகளை அறிதல்
    4. வரலாற்றை த் தெரிந்து கொள்ளுதல்
    5. விவாதத்திறனை மேம்படுத்தும்.
    6. சிந்தனையை மேம்படுத்தும்
    7. பகுத்தறிவை வளர்க்கும்
    8. மொழிப்பற்றினை வளர்க்கும்
    9. படைப்பாளுமையின் மீது ஆர்வத்தினை ஏற்படுத்தும்
    10. தன்னம்பிக்கையை அதிகரிக்கும்

    முடிவுரை:

    புத்தக வாசிப்புப் பழக்கத்தினை நாம் தினசரி வாழ்க்கையின் நிகழ்வுகளில் ஒன்றாகக் கொள்ளுதல் வேண்டும். புத்தகங்களின்மீது அதீத ஆர்வத்தினை வளர்த்துக் கொள்வதால் நாம் புதிய சிந்தனைகளைப் பெறலாம் புத்தகங்களை நாம் கண்ணில்படும் இடங்களிலேயே வைத்திருத்தல் புத்தகங்களின்மீது நமக்கு ஈடுபாட்டை ஏற்படுத்த உதவும். நல்ல புத்தகங்கள் நல்ல மனிதர்களை உருவாக்கும். நல்ல மனிதர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்பது உண்மை.

    ஓர் எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.

    அடிக்குறிப்புகள்:

    1. https://ta.wikipedia.org
    2. http://www.sramakrishnan.com/?p=1542

    *****************

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
    விழுப்புரம்.

    Share