மகாகவி பாரதி – பாவலர் துரையப்பா பிள்ளை: நவீன தமிழ்ப் புத்திலக்கிய முன்னோடிகள்
-ர. சுரேஷ்
தமிழகத்தில் மகாகவி பாரதியும் இலங்கையில் பாவலா் துரையப்பா பிள்ளையும் சமகாலத்தில் வாழ்ந்த கவிஞா்கள் ஆவா். தமிழகத்தில் நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடி பாரதி என்றால் இலங்கையில் நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடி என்று பாவலா் துரையப்பா பிள்ளையை ஆய்வாளா்கள் குறிப்பிடுவா். மகாகவியைப் போலவே சமூக, அரசியல், பொருளாதார, சமயச் சிந்தனைகள் பாவலா்க்கும் உண்டு. இதனை அவா்தம் கவிதைகளை வாசிக்கும் யாவரும் அறியலாம். சிறப்பாக தேசப்பற்று, சமூகச் சீா்த்திருத்தக் கருத்துகள் இருவருக்கும் பொதுவான அம்சங்களாக விளங்குகின்றன. ஓப்பிட்டளவில் கருத்தொற்றுமை, பொருளொற்றுமை, நடையொற்றுமை போன்றவையும் இருவா் கவிதைகளிலும் ஒருமித்துக் காணப்படுகின்றன. எனவே பாவலா் அவா்களின் கவிதை மதிப்பீடுகள் சிலவற்றோடு மகாகவியின் கவிதை மதிப்பீடுகள் சிலவற்றை ஒப்புநோக்கி காண்பது இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது.
பாவலா் துரையப்பா பிள்ளை:
1872-ஆம் ஆண்டு ஈழ நாட்டுத் தௌ்ளப்பழை கிராமத்தில் பிறந்தார். வட்டுக்கோட்டை செமினாரியில் கல்வி கற்றார். பின்னா், பாணந்துறை, தூய யோவான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பாணந்துறை ஆசிரியப் பணியைத் துறந்து மும்பையில் உள்ள கோலாப்புர் மிஷனரியில் பள்ளி ஆசிரியரானார்;. பாரதியின் வாழ்க்கையில் காசி நகரம் ஏற்படுத்திய தாக்கத்தினைப் போலவே பாவலருக்கு கோலாப்புர் வாழ்க்கை தாக்கத்தினை ஏற்படுத்தியது. பல்வேறு முற்போக்குச் சிந்தனைகளுக்குக் கோலாப்புர் வாழ்க்கை வித்திட்டத்தைப் பேராசிரியர் க. கைலாசபதி கீழ்வருமாறு குறிப்பிடுவார்.
“பம்பாய் வாசம் அவருக்குப் பல வழிகளில் நன்மையாகவே அமைந்தது. இரு வருடங்கள் கோலாப்புரில் பணியாற்றியபின் பெல்காம் இங்கிலாந்து உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சோ்ந்தார். அங்கு ஒரு வருடம் வசித்தார். தனது கல்வியை மேலும் விருத்தி செய்துகொண்ட அதே வேளையில் பொதுவாக இந்தியாவிலும் சிறப்பாக பம்பாயில் அரசியல்-சமூக இயக்கங்களில் உழைத்த பாலகங்காதர திலகா், கோபாலகிருஷ்ண கோகலே, தாதாபாய் நவுரோஜி முதலியோரின் நடவடிக்கைகளைக் கவனித்து அவற்றால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக கோகலேயின் செல்வாக்கு அவா் மீது அதிகம் எனலாம்.” (க. கைலாசபதி, ஈழத்து இலக்கிய முன்னோடிகள், ப.109.)
இவ்வாறு கோலாப்புரிலான இந்திய வாழ்வால் பாவலரின் சமூகச் சிந்தனைகள் விரிவுபெற்றன. பின்னா் 1898-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பிய பாவலா் 1901-லேயே தனது முதல் கவிதைத் தொகுப்பான கீதோபதேச கீதரச மஞ்சரி-யை வெளியிட்டார். பின்னா் 1910-இல் மகாஜன கல்லூரியை நிறுவினார். 1929-இல் இயற்கை எய்தினார். பாவலா் பற்றிய சுருக்கமான அறிமுகமாக மேலே சில கூறப்பட்டன.
மகாகவி பாரதி – பாவலா் துரையப்பா பிள்ளை சமகாலத்தில் உருவான இரு புத்திலக்கிய முன்னோடிகள்:
பொதுவாக தமிழகத்தில் நவீன தமிழ்க்கவிதை வரலாற்றின் ஆரம்பமாக பாரதியை குறிப்பிடுவதைப் போலவே இலங்கையில் நவீன தமிழ்க் கவிதை வரலாற்றின் ஆரம்பமாக பாவலா் துரையப்பப் பிள்ளையைக் குறிப்பிடலாம். பாரதியை விட பத்து ஆண்டுகள் மூத்தவரான பாவலா் பாரதியின் கவிதை 1904-இல் தமிழுக்கு அறிமுகமாவதற்கு முன்னரே கவிதை எழுதத் துவங்கியவா் என்ற கருத்து ஈழ ஆய்வாளா்களால் பெரிதும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இந்நிலையில் பாரதிதான் முதன்முதலில் சாதாரண மக்களின் சமூக வாழ்வைக் கவிதையில் கொண்டு வந்தார் என்பதை மீளாய்வு செய்வதுடன் பாரதி தொடங்கி வைத்த கவிதை மரபு எது என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது. பழகுதமிழில் எளிய நடையில் பாமர மெட்டுகளில் பாரதியைப் போலவே பாவலரும் கவிதை எழுதியிருக்கிறார். சமூகச் சிந்தனைகளை மையமிட்டு இருவரையுமே நவீன கவிதை முன்னோடி கவிஞா்கள் என்று குறிப்பிடலாம். எனினும் இருவரின் கவிதைகளிலும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்வது இன்றியமையாத ஒன்றாகும்.
பாரதி – பாவலா் இலக்கியக் கொள்கைகள்:
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் புதுக்கவிதை முன்னோடியாக பாரதியைக் குறிப்பிடுகிறோம். பாவலரைவிட பத்து ஆண்டுகள் இளையவரான பாரதியார் தன் கவிதையைப் பற்றி குறிப்பிடுகையில்,
“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை யெந்நாளும் அழியாத
மாகவிதை”
என்று குறிப்பிடுகின்றார். மேலும் தான் இயற்றிய பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில், “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது சனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது மொழிக்கு உயிர் தருவோனாகிறான்” என்று தமது கவிதை குறித்த இலக்கிய கொள்கையைப் பிரகடனப்படுத்துகிறார்.
பாரதி சொல்லியபடியே பழகுதமிழில் இனிய நடையில் சமூக சிந்தனைகளை மையமிட்டு அவருக்கு முன்னதாகவே பாவலர் அவர்கள் சிந்தித்து எழுதியுள்ளார். பாரதி இலக்கியம் பற்றிக் கொண்டிருந்த கருத்து நிலையே பாவலருக்கும் இருந்தது என்பதை அவர் இயற்றிய யாழ்ப்பாண சுவதேச கும்பியின் அவையடக்கப் பகுதியில் கண்டுகொள்ளலாம். அது,
“தேசோப காரங் கருதி இக்கும்மியை
செப்புகின் றேனாதலால் எவரும்
லேசாய் விளங்க இலகு தமிழில்
இயம்புவதே நலம் சங்கமின்னே”
இவ்வாறு கவிதையின் நோக்கம் சமூகத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமென இவர் பிரஞ்கை பூர்வமாக உணா்ந்திருந்தார். பாரதி பாடிய பெண் விடுதலை கும்மியைப் போலவே பொதுமக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட கும்மி வடிவத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாண சுவதேச கும்மியைப் பாடியுள்ளார். இலக்கியம் என்பது பரவலாகச் சமூகத்தைச் சென்றடைய வேண்டும் என்பதில் இருவருக்கும் கருத்தொற்றுமை இருந்திருக்கிறது. இதுவே இருவரின் இலக்கியக் கொள்கையாகவும் இருந்திருக்கின்றது. இனி இருவரும் தம் பாரம்பரியப் பிற்போக்குத் தனங்களை தங்களுடைய கவிதைகளில் எவ்வாறு தரிசித்திருக்கிறார்கள். அவற்றை மீறித் தம் கவிதைகளில் புதிய உள்ளடக்கத்தை,வீச்சை, புதிய பரிமாணங்களை எந்தளவிற்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று காண்போம்.
மகாகவி – பாவலா் : பெண் விடுதலைச் சிந்தனைகள்:
நவீன சித்தாந்தங்களின் ஓர் அம்சமாக பெண் குறித்த சிந்தனைகளைக் குறிப்பிட வேண்டும். தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தமிழறிஞா்கள் பலா் பெண்களை மையமிட்டுப் பேசுவதும், எழுதுவதுமாக தங்களுடைய சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளனா். அவ்வகையில் பாரதியும் பாவலரும் பெண்பற்றி கொண்டிருந்த கருத்துகளை ஒப்பிட்டு விளங்கிக்கொள்ள வேண்டும். துரையப்பா பிள்ளை அவா்கள் பெண்கல்வி பரவுதல் சந்தோசம் என அக்கால நிலையை ஏற்றுக் கொண்டாலும் பெண் கல்வியின் எல்லை எது என்பதை மிகத் திட்டவட்டமாக கூறுகின்றார். தமது யாழ்ப்பாண சுவதேச கும்மியில்,
“வீட்டினில் சீவியம்
இன்பம் நிறைந்ததது
விளங்குதற்கேற்ற
சுகிர்தகலை
ஊட்டுதல் போதும்
பி.ஏ. எம்.ஏ. பட்டம்
உதாவது பெண்கட்குச் சங்கமின்னே”
எனப் பெண்கள் வீட்டு வேலைகளைத் திறமையாக செய்வதற்கு ஏற்ற கல்வியன்றி உயா்கல்வி அவாவுதல் வீண் என ஆணித்தரமாகக் கூறுகின்றார். ஆனால் பாரதியோ,
“பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள்
நடத்த வந்தோம்”
என உணா்ச்சி மேலிடப் புரட்சி கீதம் பாடுகின்றார். மேலும் தம்முடைய கடிதங்கள் மூலமும் கட்டுரைகள் மூலமும் பெண்கள் குறித்த முற்போக்குச் சிந்தனைகளை பதிவு செய்கிறார். பழம் மரபுகளோடு சமரசம் செய்து கொள்ளும் போக்கு கிஞ்சித்தும் பாரதியிடத்தில் இல்லை. ஆனால் பாவலர் பழமைவாதியாக, பாரம்பரிய ஒழுக்கவியலாளராகவே பெண்களை அணுகுகின்றார்.
“பெண்க ளியல்பிற் பெலவீன ரென்ற
பெருமுண்மை தன்னை யலட்சை செய்து
ஒண்கலை மிக்க அருந்திட லாற்றுயா்
ஓதற் கரிதடி சங்கமின்னே”
“நற்கலை சேரு முனைவு அமைத்திடல்
நாயகா் தங்கட் கிதம் புரிதல்
சொற்சுவை சேருநற் பாக்கள் புனைதல்
சுகிர்தம்பெண் கட்கடி சங்கமின்னே”
எனப் பெண்கள் இயல்பிலேயே பலவீனமானவா்கள், என்றும் அதன் காரணமாக அரிய பல கலைகளைக் கற்கும் ஆற்றலற்றவா்கள் என்றும் ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்துகிறார். மேலும் பாவலா், பெண்களுக்குக் கல்வியானது குடும்பத்தைச் சிறப்பாக நிர்வகிக்கவும், தங்கள் கணவன்மார்களை மகிழ்விக்கவுமானதாக அமைந்தாலே போதும் என்கிறார். ஆனால் பாரதி,
“எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”
எனக் கல்வியில் பெண்களுக்கு ஆணுக்குச் சமமான தகுதியை வலியுறுத்துகிறார். பெண்ணுக்கு இருக்கவேண்டிய அருட்குணங்களாக நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு போன்றவற்றை வலியுறுத்தி நவினகாலத்தில் பெண்கள் அவற்றை இழந்து காணப்படுவதை எண்ணிப் பாவலா்,
“நாண்மட மச்சம் பயிற்ப்பென வான்றோர்
நவிலு மரும்லட்ச ணங்கள் சற்றும்
பூண்டில ராய்ச்சில நவீனஸ் திரிகள்
புரிசெயல் கேளடி சங்கமின்னே”
என்று வருந்துகிறார்.ஆனால் பாரதி,
“நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்” எனப் புரட்சி முழக்கமிடுகிறார்.
மகாகவி – பாவலா்: சாதியச் சிந்தனைகள்:
சமூக அநீதிகளுக்கும் சீர்கேடுகளுக்கும் காரணமான சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பெண்ணிய ஒடுக்குமுறையையும் பாரதி மிகக் கடுமையாகச் சாடுகின்றார். சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாடுகிறார். சாதிகளைத் திடீரென்று அறுதியாகத் துடைத்தெறிந்துவிட முடியாது என்பதை உணர்ந்தே இன்றைய வருங்காலத் தலைமுறைக்கு சாதியற்ற எதிர்காலச் சமூகத்தைப் பற்றிய கனவை விதைத்திருக்கிறார். அத்துடன் தாழ்த்தப்பட்டவா்களுக்குப் பூணூல் அணிவித்து மகிழ்ந்திருக்கிறார்.
“ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்
அந்நியர் வந்துபுகலென்ன நீதி?”
என்ற பாடல், சாதிகளால் பிளவுண்டு கிடக்கும் உங்களுக்கு சுயராஜ்ஜியம் செய்யும் தகுதியில்லை என்று வினவும் ஆங்கிலேயனுக்கு விடை பகா்வதாய் அமைகிறது. சாதிகளற்ற சமூகத்தைப் பாரதி எண்ணினாரோ இல்லையோ, சாதி ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகம் பற்றிய எண்ணம் அவரிடம் மேலோங்கியிருந்தது. ஆனால் பாவலா் சாதி பற்றிய கருத்துகளில் சற்று பிற்போக்குக் கொள்கையுடையவராகப்படுகிறார். கிறித்துவ சமயத்தைத் தழுவியதாலும் ஆங்கிலேய ஆட்சியினாலும் தம் மண்ணில் சாதி மற்றும் ஆசார அனுட்டானங்கள் நலிந்துவருவதை எண்ணி வருந்துகிறார்.
“சீரார் கிருஸ்தவ மதத்தைத் தழுவுவோர்
செப்பிடுஞ் சாதிய சாரங்களை
நேராக தள்ளிப் பறங்கிகளாதல்
நீதியோ சொல்லடி சங்கமின்னே”
என்கிறார்.
நாவலரின் தாக்கம் இவரிடம் மிகுதியும் காணப்படுகின்றது. கிருத்துவ சமயத்துக்கெதிரான நாவலரின் சைவ மரபு மீட்டுருவாக்கச் சிந்தனைகளின் தாக்கம் பாவலருக்கு சில பிற்போக்குத்தனங்களைக் கடந்து செல்ல தடைகளாக இருந்திருக்கின்றன என்பதே உண்மை.
பெரியோர் சிறியோரென்ற பேதமில்லை – உயா்
பெருங்குணம் பொறையன்பு நீதியில்லை
அரியவ ருணாச்சரம தம்மமில்லை – எங்கும்
அனைவரும் சமமென்பா ராலே தொல்லை” என்று பாடுகிறார்.
முடிவாக,
சமகாலப் புத்திலக்கிய முன்னோடிகளாகக் கருதப்படும் மகாகவியும் பாரதியும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளிலும், இலக்கிய கொள்கைகளிலும் ஒருமித்த கருத்துடையவா்களாகக் காணப்பட்டாலும், பழம் மரபுகளை உடைத்தெறிவது, குறிப்பாகப் பெண்விடுதலை, பெண்கல்வி, சாதி போன்ற ஒருசில அம்சங்களில் மகாகவி முற்போக்குவாதியாகவும் பாவலர் பழம்மரபுவாதியாகவுமே தென்படுகின்றார். நவீன கவிகள் என்ற நிலையில் இருவரும் முன்னோடிகளாக இருந்தபோதிலும் புரட்சிக்கவி, புதுமைக்கவி என்ற அளவில் பாரதியின் இடத்தை பாவலர் தவறவிட்டிருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
துணைநூல்கள்:
1.துரையப்பா பிள்ளை தெ.அ. பாவலா் சிந்தனைச்சோலை, மகாஜனக் கல்லுரிவெளியீடு, 1960.
2.மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கவிதைகள்.
3.கைலாசபதி க. ஈழத்து இலக்கிய முன்னோடிகள், மக்கள் வெளியீடு,1986
*****
கட்டுரையாளர்
உதவிப்பேராசியா்
தமிழ்த்துறை
கற்பகம் பல்கலைக்கழகம்
கோவை