பொலிகையூர் ரேகா

                                          சாப்பிட்டு முடித்தபின் மாடிப் பகுதியில் காய வைத்திருந்த  பழ விதைகளைப் பையில் சேகரித்துக் கொண்டிருந்தேன். பத்து வயது நிரம்பிய எனது மகன் வேகமாக மாடிப் படிகள் வழியாக வந்து கொண்டிருந்தான். பாடசாலையிலிருந்து வந்ததுமே நேரே என்னிடம் வருவது தெரிந்தது.

                                        “அப்பா இன்னும் ஒரு மாதத்தில் விடுமுறை வந்துவிடும்.பரீட்சைக்கான திகதிகள் எல்லாம் தந்துவிட்டார்கள் இந்த விடுமுறைக்கு எங்கே  போவதென்று  எல்லா நண்பர்களும் கதைத்துக்கொண்டு  உள்ளார்கள் . நாங்கள் எங்கே  போகப் போகின்றோம் ” என வேகமாக கேட்டான். சிரித்தவாறு “எங்கே  போக வேண்டுமென  உனக்கு விருப்பம்” என்று கேட்டேன்.

                                         “அப்பா நல்ல இடமாப் போக வேண்டும்;  பெரிய விடுதியில்  தங்க வேண்டும்.  இடம் நன்றாக இருக்க வேண்டும் அப்பா” என்றான். “சரி இப்பொழுது  சென்று  உடுப்பை மாற்றிவிட்டுச் சாப்பிடு, எங்கே  செல்வதென்று  யோசிக்கலாம்” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு சேகரித்த விதைகள் அடங்கிய பையோடு கீழே சென்றேன்.

                                        “என்ன தம்பி எப்படி இருக்கின்றாய்” என்றபடி அண்ணன் வந்து கொண்டிருந்தார். தூரத்துச் சொந்தம் என்றாலும் ஊரில் ஒன்றாக வளர்ந்ததால் பாசம் அதிகம். நகர்ப்புறம் வரும்போதெல்லாம் வீட்டுக்கு வர மறந்ததில்லை. ‘’வாருங்கள்  அண்ணா’’ என்று வரவேற்றபடி உள்ளே அழைத்துச் சென்றேன். “பெரியப்பா” என்றபடி மகன் வந்து அருகில் அமர்ந்தான். “சொந்தத்தை அரவணைக்கின்ற இந்தக் குணம் உன் மகனுக்கும் அப்பிடியே இருக்கிறதடா  தம்பி” என்று கூறி அவனை தழுவிக் கொண்டார்.

                                             “எப்படிப் படிக்கின்றாய்” என்று மகனைக் கேட்டார். “நன்றாகப் படிக்கின்றேன் பெரியப்பா , தேர்வு வருகின்றது  முடிந்ததும்  விடுமுறைக்கு சுற்றுலா செல்லப்போகின்றோம்.” எனக்  கூடுதல் தகவலையும் அவரிடம் வழங்கினான். “அது சரி எங்கே  போகப் போகின்றாய்  ” என்று சிரித்தபடி கேட்டார். “இன்னும் முடிவு எடுக்கவில்லை பெரியப்பா இனிமேல்தான் தேர்வு செய்யவேண்டும் ” என்றான்.

                                           “தற்போது  உள்ள பிள்ளைகள் விடுமுறை விட்டால் எந்த நாட்டுக்கு, எந்தச்  சுற்றுலாத்  தலத்துக்குச்  செல்வதென்றுதான்  திட்டமிடுகின்றீர்கள்  ஆனால் நாங்கள் எல்லாம் விடுமுறை என்றால்   எந்தக்  குளம், கடல், ஆறு  கோயிலுக்குப் போவதென்றுதான் திட்டமிடுவோம். காலம் மாறிப்போய்விட்டது தம்பி” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

                                          அவர் கூறியதன் உள்ளர்த்தம் புரிந்தது. சிறுவயதில் ஒன்றாக விளையாடியதும் , திருவிழா சென்றதும் காலப் போக்கில் வளர்ந்து நகர்ப்புறம் வந்து வேலை, குடும்பம் என்றானபின் குறைந்து போயிருந்தது. விடுமுறைப் பிரச்சனைகளால் கடந்த சில வருடங்கள் திருவிழாவிற்கு கூடச்  செல்வதில்லை.

                                           சிறிது நேரம் பேசிவிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு அவர் விடைபெற்றுக் கொண்டார். மனையாள் சமையலறையில் பாத்திரங்களோடு போராடிக் கொண்டிருந்தாள். மகன் பரீட்சையை விட விடுமுறைக்கு எங்கே செல்வதென்பதில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தான். எனக்கோ எனது விடுமுறைக் காலங்கள் நினைவில் வந்து கொண்டிருந்தது. அண்ணா வந்து சென்றதன் வெளிப்பாடா அல்லது சிறுவயதிலேயே மகன் இவ்வளவு தூரம் விடுமுறையைத் திட்டமிடுகிறான் என்பதாலோ தெரியவில்லை.

                                         எங்கள் விடுமுறையில் வீடே அல்லோகல்லோலப்படும். எண்ணெய்க் குளியலில் இருந்து நாட்டுக் கோழி குழம்பு வரை வீடே கமகமக்கும். எங்களைச் சமாளிப்பது பெரியவர்களுக்குக் கொஞ்சம் சிரமம்தான். விடுமுறைக்கான திட்டமிடல்கள் அங்கே  வேறுவிதமாக இருக்கும். குல தெய்வம் கோயிலுக்குப் போக வேண்டும் என்று ஆரம்பிக்கும். கோயிலுக்குப் போவதென்றால்  எல்லோருக்கும் விருப்பம்.

                                            முதல் நாளே பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும்  அம்மா, பெரியம்மா, சித்தி ஆகியோர் எடுத்து வைத்துவிடுவார்கள் . அதில்  குறிப்பிடக் கூடிய முக்கியமான பற்றியம்  என்னவென்றால் பெரும்பாலும் எல்லாமே எங்கள் வயலில் விளைந்த அரிசி, கரும்பு, தேங்காய், பழம்,பாக்கு,வெற்றிலையாக இருக்கும்.

                                              வாகன வசதிகள் குறைவான காலம் என்பதால் மாட்டு வண்டியில்தான் பயணம். அதை இப்போது நினைத்தாலும் மனது குதூகலிக்கும். அப்பப்பாதான் மாட்டு வண்டி ஓட்டுவார். மாடுகளின் மேல் படாதவாறு சிறிய சாட்டையை சுழற்றி சத்தமெழுப்பி அவற்றை மெதுவாக விரட்டிச் செல்லும் அழகைக் காணவே அவருக்கு அருகில் முன்பக்கமாக அமர்ந்து கொள்வேன். ஒற்றையடிப் பாதைகளில் சத்தமிட்டபடி மாட்டு வண்டி செல்வது கூட இசை போல இருக்கும் எனக்கு.

                                         கோயிலுக்குப் போனதும் பெரியவர்கள் எல்லோரும் பொங்கல் பொங்குவதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்குவார்கள்.  நாங்கள் சிறியவர்கள்  கோயில் மண்ணில் விளையாடிக் கொண்டிருப்போம். அப்படியே அப்பாவைக் கேட்டு பலூன்,பந்து என வாங்கி விளையாடுவோம். விசேட நாளாக இருந்தால் மணிக் கடைகள், பனிக்கூழ் கடைகள்,சாப்பாட்டுக் கடைகள் எல்லாமே இருக்கும். சாப்பாட்டுக் கடை என்றால் இப்போது உள்ளவாறு இருக்காது. தோசைக்கடை, இட்டிலிக்கடை மட்டும்தான்.

                                      அம்மாக்கள் புற்கை பொங்கும்  நேரத்திற்குள் ஒரு தடவை  நாங்கள் சித்தப்பாவுடன்  சென்று  ஒரு தோசைக் கடையில்  ஆளுக்கு இரண்டு தோசை எனச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவோம். அப்படியே கோயிலை ஒரு சுத்து சுத்தி கண்ணைக் கவருகின்ற  வண்ணத்தில்  விதம் விதமாக தயாரித்து  அடுக்கி வைக்கப்பட்ட மிட்டாய்களையும் ஒரு கை பார்த்துவிட்டு வருவதற்குள் இங்கு எல்லாம் தயாராக இருக்கும்.

                                     பொங்கல் முடிந்த பின்னர் சாமிக்குப் படைத்துவிட்டு அங்கே நிற்பவர்களுக்கும் கொடுத்துவிட்டு நாங்களும் அங்கேயே சாப்பிட்டுவிட்டு வெளிக்கிட்டோம்  என்றால்  இரண்டு  மாட்டு வண்டியும் நேராக  வீட்டில்தான்  போய் நிற்கும் . கோயிலுக்குப்  போனால் நேராக  வீட்டிட்குத்தான் போக வேண்டுமென  அம்மாச்சி சொல்லிவிடுவார் .

                                     பிறகு ஊரில்  உள்ள வீடுகளுக்கெல்லாம்  நாங்கள்தான் ஆளுக்கொரு பாத்திரத்தில பொங்கல் கொண்டு செல்வோம். அது எங்களுக்கு விளையாட்டுப் போன்றது. யார் விரைவாகக் கொண்டு சென்று  கொடுத்துவிட்டு வருவதென  போட்டி போட்டுக் கொண்டு செல்வோம். அது ஒரு அழகான பண்பாடு. பகிர்ந்துண்ணல் என்பதைச் சற்றே மறந்த பகுதியில் வாழும் எனக்கு இப்போது நினைத்துப் பார்த்தாலும் அவையெல்லாம் எனக்கு கிடைத்த வரம் போலத்  தோன்றும்.

                                     இன்னொரு நாள் எல்லோரும் சேர்ந்து வயலுக்குச்  செல்வோம். அங்கே  தண்ணீர்  இறைக்கின்ற இடத்தில் தொட்டியில குளிப்பது , வயலுக்குத் தண்ணீர்  போகின்ற  கால்வாயில் ஓடும் சின்னச் சின்ன மீன்களைப்  பிடித்து மீண்டும் கிணற்றுக்குள் விடுவது, அப்படியே தென்னந் தோப்புக்குச் சென்று இளநீர் குடிப்பது, கரும்புத் தோட்டம் செல்வது  என நாள் போவது கூடத் தெரியாது.

                              ஆறு , குளம் சென்று போட்டிக்கு நீச்சலடிப்பது, மத்தியான வெயிலில் கிளித்தட்டு, கிட்டிப்புள் விளையாடுவது என எங்கள் விடுமுறைகள் குதூகலமாகவே செல்லும். விடுமுறைக்காக நாங்கள் காத்திருந்ததில்லை. பாடசாலை முடித்து வந்தாலும் வார இறுதி நாட்களிலும் எங்கள் பொழுது போக்குகள் இவைதான்.

                              இவற்றை எல்லாம் விடவும் அப்பப்பா, அப்பாச்சி சொல்லும் சுவாரசியமான கதைகள் கூட எங்களைப் புது உலகிற்கு அழைத்துச் செல்லும். இரவு உணவை உருண்டைகளாக உருட்டி கைகளில் கொடுத்தவாறே அப்பாச்சி சொல்கிற கதைகள் அவர் கொடுக்கும் உணவைப் போலவே அருமையானவை. பெரியவர்களாகப்  பத்துப்பேரும் சிறுவர்களாக ஐந்து பேரும் இருந்த அந்த வீட்டில் நான் தனிமையை உணர்ந்ததேயில்லை.

                                தினமும் எங்கள் நாட்கள் குதூகலமாகவே இருக்கும். உணவுகள் ஆரோக்கியமாக இருந்தன. வரகு,திணை,சாமை,குரக்கன் என அனைத்து தானியங்களும் உணவில் இடம்பெற்றது. வீட்டின் பின்புறம் அம்மா வைத்திருந்த கீரை வகைகள் தினமும் உணவாகின. கைமுறுக்கு,சீடை,எள்ளுருண்டை,பொரி உருண்டை எனத் தின்பண்டங்கள் வீட்டிலேயே தயாராக இருக்கும்.

                              எந்த உறவினர் வீட்டிற்குச் செல்வதாக இருந்தாலும் வீட்டில் தயாரித்த உணவுகளும், வயலில் விளைந்த தானியம், கிழங்கு, பழங்களுமே கையுறையாகக் கொண்டு செல்லப்பட்டது. விளையாடச் சென்று கை, காலை உடைத்துக் கொண்டதல்லாமல் நோய் வந்து நாங்கள் படுத்தது மிகவும் குறைவு. சந்தேகங்கள் தீர்த்து வைக்கும் அறிவாளியாக அப்பப்பா இருந்தார். என் அப்பப்பா இருந்தவரை எனக்கு எல்லாம் அவர்தான். அவர் சொல்கின்ற ,செய்கின்ற  செயல்கள்  எல்லாம் வித்தியாசமாக இருக்கும்.

                             வீட்டில் இருக்கும் வேப்பம்பழ விதை, சாப்பிட்ட பின்பு  உள்ள மாதுளை,மா, திராட்சை, தோடம்பழ விதைகள் எல்லாவற்றையும் காய வைத்து ஒரு பையில்  சேர்த்து வைத்துவிட்டு தூரமாக  உள்ள இடங்களுக்குச் செல்லும்போது   வீசிவிட்டு வருவார். இல்லையென்றால் குளிப்பதற்கு ஆற்றிற்குச் செல்லும்போது ஆற்றங்கரை ஓரமாக வீசிவிட்டு வருவார் . அது தானாக  முளைத்துப்   பலன் கொடுக்கும் எனச்  சொல்லுவார். இந்த நல்ல பழக்கம் எல்லாம் அவரிடம்  இருந்து வந்ததுதான். நகரத்துக்கு வந்த பிறகும்  கூட நான் நகர்ப்புறத்தைத் தாண்டிப்  போக நேரும் சமயங்களில் வண்டியில் சேகரித்து வைத்திருக்கும் விதைகளைத்   தூவிச் செல்வது வழக்கம்.

                                        அப்பப்பாவுடன் இருந்தபோது எனக்கு அவர் செய்வதெல்லாம் பெரிதாகத்  தோன்றியதில்லை. கிராமத்தில் பெரும்பாலும் எல்லாரிடத்திலும் இத்தகைய நற்குணங்கள் இருந்ததுண்டு. நகர்ப்புறம் வந்து வீட்டைக் கூண்டாக மாற்றிக் கொண்டு வசிப்பவர்களைப் பார்த்த பின்னரே எனக்கு அவரின் செயல்கள் பெரிதாகத் தெரிந்தது. அவர் இறந்த பின்னர் அந்த இழப்பு எனக்கு பெரிதாகத்  தெரியாமல் இருக்கவே மேற்படிப்புக்காக நகர்ப்புறம் அனுப்பி வைத்தார் அப்பா. ஆனால் இங்கு வந்த பின்னர்தான் ஊர் நினைவும் உறவுகளும் பெரிதாகத் தெரிந்தது.

                                   அடுத்தடுத்து பெரியவர்கள் காலமான பின்னர் ஊருக்குப் போகவே கவலையாக இருந்தது. வேலை, குடும்பம் என்றானபின் ஊருக்குச்  செல்வதும் குறைந்து போனது. ஆற்றில் போட்டி போட்டு நீச்சலடிக்க அண்ணன்கள் ஊரில் இல்லை, இரவு உணவை உருண்டை பிடித்துக் கையில் வைக்க அப்பாச்சி இல்லை, ஊர்க் கோயில் வரலாறு சொல்லும் அப்பப்பா இல்லை, அப்பாவைத் தொடர்ந்து அம்மாவும் இல்லை என்றான பின் ஊர் செல்லும் நாட்டம் குறைந்து போனது.

                                     அக்கா தொலைபேசியில் பேசும் போதெல்லாம் எங்களை எல்லாம் மறந்துவிட்டாயேடா  என்று மூக்கைச் சிந்துவாள். கோயிலுக்குப் பொங்கல் வைக்கச் செல்லும் போதெல்லாம் அழைத்துக் கொண்டே இருக்கிறாள். விடுமுறைப் பிரச்சனைகள் ஒரு பக்கம் தடுக்க பெரியவர்கள் இல்லாத வெறுமை வீட்டைப் பார்க்க மனது வரவில்லை எனக்கு. அம்மா இருந்தவரை மாதமிருமுறை சென்றதும் அங்கே எல்லாரும் ஒன்றாகக் கோயிலுக்குச் சென்றதும்தான். அதன்பின் போவது குறைந்து போனது. சென்ற ஆண்டு குடும்பத்தோடு அம்மாவின் நினைவு நாளுக்குச்  சென்றதோடு சரி. அதுகூட இரு நாள் விடுப்பில் சென்றது.

                                         காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகின்றது. பழைய நாட்கள் திரும்பிடாதா என்று மனது இன்னும் அடித்துக் கொள்கிறது. குளத்தில் நீச்சலடிக்க, வயல் வரப்புகளில் நடக்க, போட்டி போட்டு கரும்பு உண்ண, அண்ணண்களோடு விளையாட, அப்பாச்சியின்  இடத்தில் அக்கா தரும்  உணவைச்  சாப்பிட என ஓரமாக ஆசை இருக்கத்தான் செய்கிறது. “அப்பா”என்ற குரல் கேட்டுப்  பெருமூச்சோடு நிமிர்ந்தேன்.

                                          “அப்பா விடுமுறைக்கு எங்கே செல்வதென ஒரு இடத்தை யோசித்து வைத்திருக்கின்றேன் ” என்று புதிர் போட்டபடி என் முகத்தைப் பார்த்தான். உணர்வற்றபடி “ம் சொல்லு ” என்றேன்.” அப்பா “போன வருசம் சென்றோமே அங்கேயே செல்வோம், உங்கள் ஊருக்குப் போவோம்” என்றான் ஆர்வமாக.

                                     வியப்போடு பார்த்தேன் “ஆம் அப்பா அங்கேயே போவோம். சிறிது நேரத்திற்கு முன்னர் பெரியப்பா கூறியிருந்தார்  அங்கே  நீங்கள் எல்லாம் எப்படி மகிழ்ச்சியாக விடுமுறையைக் கொண்டாடினீர்கள்  என்று. போன ஆண்டு சென்றபோது  நாங்கள் வீட்டில்  மட்டும் நின்றுவிட்டு வந்துவிட்டோம் . இந்த முறை அங்கே சென்று அதிக நாட்கள் நிற்கவேண்டும். ஆறு,குளம்,கோயில்,தோப்பு என அனைத்து இடங்களுக்கும் செல்வோம். சென்ற தடவை அங்கு போனபோது எல்லோரும் எவ்வளவு பாசமாக பார்த்துக்கொண்டார்கள். நான் எல்லாரையும் பார்க்க வேண்டும். பெரியம்மா கதைக்கும்போது அவவையும் வரச் சொல்லுவோம். எல்லோரும் சேர்ந்து போவோம்.” என்றபடி அவன் பெரிய மனிதத் தோரணையில் ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கையில் எனக்குள்ளே ஒரு பரவசம் என்னை ஆட்கொண்டது. என் மகன் மண் வாசம் உணர்ந்தவனாய் இருக்கிறான். விடுமுறையை எங்கோ களிக்க விரும்பியவன் தன் ஊரிற்கு செல்வதற்கு ஆர்வம் காட்டுகிறான். எனக்கு மகிழ்வாக இருந்தது.

                                        மனைவியும் எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு மலர்ந்த முகத்தோடு தன் சம்மதத்தை உணர்த்தினாள். மகனின் விடுமுறைக்காக அவனை விடவும் ஆர்வமாக நான் தவிப்போடு காத்திருக்கத் தொடங்கினேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.