(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 53

கவியோகி வேதம்

பாரதி கலைக்கழகம் சார்பாக நடைபெறும் கவியரங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளும் கவிஞர்களில் கவியோகி வேதமும் ஒருவர். அவரது கவிதைகளில் கார, சாரம் இரண்டுமே இருக்கும். நல்ல நகைச்சுவையும் இருக்கும். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அத்தாழநல்லூர்தான் அவரது பூர்வீகம். தாமிரபரணிக் கரையில் இருக்கும் அந்த ஊரில்தான் “கஜேந்திர மோக்ஷம்” நிகழ்ந்தது என்று புராணம் சொல்கிறது.

கவிஞர் வேதம், கவிஞர் வ.வே.சு.
கவிஞர் வேதம் நல்ல மரபு அறிந்தவர். 1978ம் வருடம் சென்னையில் இருக்கும் ஸ்ரீகாளிகாம்பாள் கோவிலில் “சக்தி” என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. அதில் அவன் ஸ்ரீ கோமதி அம்மனைப் பற்றிய கவிதையைப் படித்தான். அறுசீர் விருத்தத்தில் எழுதப் பட்டிருந்த அந்தக் கவிதையை “வேதம்” அவர்கள் அவனிடம் இருந்து வாங்கிப் படித்து விட்டு, அவனைப் பாராட்டியதோடு, கவிஞர் சுரதா எழுதிய “தேன்மழை” என்ற கவிதைத் தொகுப்பை, “என் அன்பு விசுவுக்கு” என்று எழுதி அவனுக்குப் பரிசாக அளித்தார். அத்துடன் கி.வா.ஜ. எழுதிய “கவி பாடலாம்” என்ற நூலும் படிக்கக் கொடுத்தார். அவனது ஒவ்வொரு கவிதையையும் படித்துப் பாராட்டியும், திருத்தங்கள் தேவைப்படும் இடத்தில் அதைச் சொல்லியும் ஊக்கம் தரும் ஒரு நல்ல உள்ளம் அவருக்கு உண்டு.

அவர் சென்னையில் பெசன்ட் நகரில் “ரிசர்வங்கி” அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்த அவரது இல்லத்தில் நடைபெற்ற கவியரங்குகளிலும் அவன் பங்கு பெற்றிருக்கிறான். அரங்கு முடிந்தவுடன் நடைபெறும் விருந்தில் அவரும், அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகளும் அன்போடு உணவு பரிமாறி உபசரிப்பார்கள். அப்படி ஒரு முறை நடைபெற்ற கவியரங்கில்தான் அவனுக்கு எழுத்தாளர் “ஜெயரதனை” அவர் அறிமுகம் செய்து வைத்தார். அந்த அறிமுகத்தால் “ஜெயரதன்” இல்லத்தில் (பெசன்ட் நகரில்தான்) அப்போதய “அமுதசுரபி” இதழின் ஆரிசிரியர் விக்கிரமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இலக்கியக் கூட்டத்தில் அவன் “மனிதப் பாடம்” என்ற கவிதையை வாசித்தான். “விஸ்வநாதன்…உங்கள் கவிதையில் ஒரு நல்ல கதையும் இருக்கிறது..நீங்கள் சிறுகதைகளும் எழுதுங்கள்” என்று அவனைப் பாராட்டினர் எழுத்தாளர் விக்கிரமனும், ஜெயரதனும். ஜெயரதன் ஜோதிடத்திலும் தேர்ந்தவர்.

கவிஞர் வேதத்திற்கு “மகான் லஹரி பாபாஜி” மீது உண்டான தீவிர பக்தியால் யோகக்கலையும் கற்று, கவியோகியாகி அன்பர்களுக்கும் தான் கற்ற வித்தையைக் கற்றுக் கொடுத்து வருகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,” விசு…நீ உடனேயே ‘சந்தவசந்தம்’ குழுமத்தில் சேர்ந்து உனது கவிதைகளை அதில் பகிர்ந்துகொள். கவிமாமணி இலந்தை ராமசாமிதான் அதன் நெறியாளர். பேராசிரியர் கவிஞர் பசுபதி, கவிஞர் அனந்த் போன்ற அறிஞர்கள் அதில் இருக்கிறார்கள். உனக்கு மிகவும் பயனாகும்” என்று அந்தக் குழுமத்தில் இணைந்து கொள்ள வழிசெய்தார் கவியோகி வேதம். அவனுக்கு அந்த நல்லோர்களின் அறிமுகமும், தொடர்பும் அவனைச் செம்மைப் படுத்தி வருகிறது என்பது உண்மைதான். அதுபோலவே “இலக்கியவேல்” ஆசிரியர் கவிஞர் சந்தர்சுப்ரமணியனுக்கு அவனை அறிமுகப்படுத்தி அந்த இதழிலும் எழுத வைத்து மகிழ்ந்து வருபவர்.

கவியோகி வேதம் “இலக்கியவேல்” பத்திரிகையில் “ஒரு குக்கிராமத்திலிருந்து குகை பாபாஜிவரைஎன்ற தலைப்பில் சுயசரிதையை அருமையான கட்டுரைவடிவில் எழுதி வந்தார். அதையே “ஒரு குக்கிராமத்திலிருந்து மகான் லஹரி பாபாஜி குகைவரை” என்ற நூலாக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் தனக்குக் குருவின் ஆசி எப்படியெல்லாம் வழிநடத்துகிறது என்பதை மெய்சிலிர்க்கும் படியாக எழுதியிருக்கிறார். அவர் ஒரு நல்ல சிறுகதைப் படைப்பாளியும் கூட. எல்லாவற்றையும் விட, அவர் சகமனிதர்களிடம் காட்டும் அன்பு மகத்தானது.

கவிமாமணி வ.வே.சுப்பிரமணியன்

“தோப்புக் கரணமிடின் தொல்லைவினை நீக்கியருள்
காப்புத் தருவாய் கணபதியே – யாப்புள்ளே
உன்னைப் பிடித்தே உருவம் சமைத்துள்ளேன்
என்கவிதைத் தேரினிலே ஏறு.”

இது கவிமாமணி வ.வே.சுப்ரமணியன் என்ற வ.வே.சுவின் ஒருதுளிக் கவிதை . அவர் ஒரு அற்புதக் கவிஞர். சென்னையில் உள்ள “விவேகானந்தாக் கல்லூரியில்” பேராசிரியராக இருந்து, முதல்வராக உயர்ந்த அறிஞர். சிரித்த முகமும் , நகைச்சுவைப் பேச்சும் இவரது முத்திரை. நல்ல சங்கீத ஞானம் உள்ளவர். பாரதிக் கலைகழகம் கண்ட கவிஞர்களில் “ரத்தினம்” இவர். அவனுக்குக் கவிஞர் வ.வே.சு.வுடன் 1978ல் இருந்தே மிக நல்ல பழக்கம் இருந்து வருகிறது.

அவனுக்குத் திருமண வரவேற்பு (23.06.1985) நிகழ்ச்சி அன்று நடைபெற்ற கவியரங்கிற்கு வ.வே.சு.தான் தலைமை தாங்கினார். மிக அருமையாகப் பாடியும், கவிஞர்களை கவிதையிலேயே அழைத்துக் கருத்துச் சொன்ன பாங்கும் இன்றும் அவனுக்கு நினைவிருக்கிறது. அவரது கவிதையில் ஒரு “அமங்கலச்சொல்” இருக்காது. ஒரு தேர்ந்த நல்லாசிரியரின் குரலை அவரது கவிதைகளில் கேட்கலாம்.

அவனுக்கு அப்பா, மனைவி, குழந்தைகள் என்று அனைவரிடமும் அவர் அன்போடும், நட்போடும் இன்றும் பழகி வருகிறார். அவனது குடும்பத்தின் அன்புக் கவியென்று அவரைச் சொல்லுவான்.

பாரதி கலைக்கழகம் அவனுக்கு “கலைமாமணி” விருது கொடுத்த அன்று, அவன் எழுதிய கவிதைகளைத் தொகுத்து “மனித நேயம்” என்ற பெயரில் ஒரு நூல் வெளியிடப் பட்டது. அதில் இருக்கும் அத்தனை கவிதைகளையும் தேர்வு செய்து கொடுத்து, அதற்கு அருமையான வாழ்த்துரையும் அளித்தவர் கவிமாமணி வ.வே.சு. அவர்கள்தான்.

ஒவ்வொரு மாதமும் “தமிழ் வளர்த்த சான்றோர்கள்” என்ற தலைப்பில் தமிழுக்காகத் தொண்டு செய்த பெரியோர்களைபற்றி கவிமாமணி வ.வே.சு.வும், அது தொடர்புடைய ஒரு அறிஞரும் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்குச் சென்று வந்தால் ஒரு நூறு நூல்களைப் படித்த பக்குவம் அவனுக்குக் கிடைப்பதாக அவன் உணருகிறான்.

“அம்மன் தரிசனம்” மாத இதழில் ஆசிரியரும் மாணவரும் உரையாடுவதுபோல முனைவர் வ.வே.சு. எழுதிவரும் இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைத் தொடர் மிகப் பிரபலம். அதுபோலவே தினமணி நாளிதழில் எழுதி வந்த சுயமுன்னேற்றக் கட்டுரைகளும் மிக மிகப் பயனுள்ளவை.

“அத்தனை பயணங்களுக்கும் ஆரம்பப் புள்ளி
அன்று நாம் படித்த ஆரம்பப் பள்ளி.”

என்று தான் படித்த பள்ளியின் நினைவுகளைப் பற்றி வ.வே.சு.எழுதிய கவிதையில் அவனுக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

“நான் படித்த பள்ளி – இது
ரொம்ப நல்ல பள்ளி
மானைப் போலத் துள்ளி – தினம்
மகிழ்ந்திருந்த பள்ளி.

ஆட்டம் பாட்டம் ஓட்டம் – விளை
யாட்டில் என்றும் நாட்டம்.
வீட்டில் நேரம் கொஞ்சம் – வெளி
வீதியில்தான் நெஞ்சம்

அவ்வப்போது சண்டை – சில
அடிகள் உடையும் மண்டை.
பத்துக் கோடிக்கில்லை – வெறும்
பல்பத்துக்காய் சண்டை.

அதிகம் அன்று ஒன்று – எனை
அச்சம் செய்ததுண்டு; – அது
பதிமூன்றாம் வாய்ப்பாடு – அய்யோ
படுத்தி வைத்த பாடு.

சீருடைகள் இல்லை – அன்று
ஸ்மார்ட் க்ளாஸ்கள் இல்லை-எனில்
சீர் நடைகள் கற்றோம் – இன்று
சிறந்து வாழுகின்றோம்.”

அன்பர் வ.வே.சு.வின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்களும் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகனும், மருமகளும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். வ.வே.சு.வின் மகன் பள்ளிச் சிறுவனாக இருந்த பொழுது ஒருநாள் அவர்கள் தி.நகரில் வசித்து வந்த வீட்டிற்கு அவன் சென்றிருந்தான். “டேய்.. விசு இன்னிக்கு மொட்டமாடிச் சுவர்ல ஒக்கார்ந்திருந்த ஒரு காக்கையைக் காட்டி, சுந்தர் அதோ பார் காக்கை என்றேன். உடனே “அப்பா அதோபார் அதன் மூக்கை” என்று தன்னைக் கவிஞனின் பிள்ளையாக நிரூபித்து விட்டான்” என்று ஒரு குழந்தையைப் போல அவர் சிரித்துக் களித்தது பசுமையாக இருக்கிறது.

27.10.2017

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *