தேமொழி
மணமகள்
வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13 >>
தேமொழி
“உயிர்ப்புவியியல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயிரினத்தின் பரவல் நிலையை பற்றி ஆய்வதாகும். இத்துறையின் முதன்மைக் குறிக்கோள் யாதெனில், ஓர் உயிரினம் எங்கெங்கெல்லாம் வாழ்கின்றது மற்றும் எத்தனை எண்ணிக்கை உள்ளது என்று அறிவது” (விளக்கம் உதவி: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா).
புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்?
உயிர்ப்புவியியலின் முன்னோடிகளில் (one of the founders of Biogeography) ஒருவர் என்று கருதப்படுபவர் ‘அலெக்ஸாண்டர் வோன் ஹம்போல்ட்’ (Alexander von Humboldt / Friedrich Wilhelm Heinrich Alexander von Humboldt – 1769-1859). இன்றைய அறிவியல் உலகம் இவரையும் இவரது பங்களிப்பையும் மறந்துவிட்டது, காலத்தால் வரலாற்றில் இருந்து மறைந்துபோன ஒரு அறிவியல் அறிஞராக இவர் பெயர் பெரும்பாலும் மறக்கப்பட்டும்விட்டது. ஆனால் இவர் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாவில் இவர் சிறந்த அறிவாளி எனப் பெயர் பெற்று புகழின் முன்னணியில் இருந்தார். உலகில் பற்பல இடங்களுக்கு, மற்ற புகழ் வாய்ந்தவர்களையும் விட இவர் பெயர்தான் அதிகம் சூட்டப்பட்டுள்ளது. பல தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னால் அதிபதி, ‘தாமஸ் ஜெஃபர்சன்’ (Thomas Jefferson, the third President of the United States) “நான் சந்தித்த அறிவியல் அறிஞர்களில் மிக முக்கியமானவர் ஹம்போல்ட்” என்று குறிப்பிட்டுள்ளார். வெனிசுலாவின் இராணுவ அதிகாரியான ‘சைமன் போலிவர்’ (Simón Bolívar, Venezuelan military leader) “தென்னமெரிக்கக் கண்டத்தை முதலில் கண்டறிந்தவர் ஹம்போல்ட்”தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது புகழைக் கண்டு நெப்போலியன் இவர் மீது பொறாமை கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஹம்போல்ட்டின் நூறாவது பிறந்த நாளன்று அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் முதல் பக்க செய்திகள் அனைத்தும் இவரைப் பற்றிக் குறிப்பிட்டு இவர் புகழ் பாடின. அறிவுமேதைகள் பலர் குழுமிய பாரிஸ் (center of intellectual life in Paris) நகரிலும் இவர் புகழ் பெற்றிருந்தார். நான்கைந்து மொழிகளில் நன்கு உரையாடவும், அருமையாக ஓவியங்கள் வரையவும், அத்துடன் அனைவருடன் இசைந்து நன்கு பழகவும் அறிந்து வைத்திருந்தார்.
தனது அறிவியல் பயணத்தைப் பற்றி ‘காஸ்மோஸ்’ (Cosmos) என்ற நூலாக ஹம்போல்ட் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக எழுதிய முப்பது நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை. ஆங்கிலத்தில் மூன்று முறை இவையாவும் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது நூல்கள் பல இளம் அறிவியல் அறிஞர்களைத் தோற்றுவிக்க உதவியது, குறிப்பாக, பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறிமுகப் படுத்திய ‘சார்லஸ் டார்வின்’ (Charles Darwin) என்ற உயிரியல் மேதையை இவரது எழுத்துக்கள் ஊக்குவித்தது.
“I am at present fit only to read Humboldt; he like another sun illuminates everything I behold” ― Charles Darwin
என்று தம் இளவயதில் தான் வழிகாட்டியாகக் கொண்ட ஹம்போல்ட்டைப் பற்றி அவரது பேனா/அஞ்சல் நண்பரான டார்வின் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். டார்வின் தனது அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த ‘உயிரினங்களின் தோற்றம்’ (Origin of Species) என்ற நூலை வெளியிட்ட காலத்தில் ஹம்போல்ட் புகழின் உச்சியில் இருந்தவர். உலக வரலாற்றிலேயே சிறந்த அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சிறந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டவர். ஆனாலும் காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சிக்கு இவர் அளித்த பங்களிப்பு மறக்கப்பட்டது. மிகுந்த புகழ் வாய்ந்த ஒருவர் வரலாற்றில் மறக்கப்பட்டது மிகவும் விந்தையானதுதான்.
வாழ்க்கைக் குறிப்பு:
ஜெர்மனி நாட்டின் அறிவியல் அறிஞரான இவர் 1769 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள், பெர்லின் நகரில் அலெக்ஸாண்டர் ஜார்ஜ் வோன் ஹம்போல்ட் என்ற அரசு அதிகாரிக்கும், மேரி எலிசபெத் என்ற அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக, ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அறிவியியலில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தனது உடலில் ஏற்பட்ட புண்ணில் மின்முனைகளைப் (electrode) பொருத்தி மின்சாரத்தைச் செலுத்தி உடலில் ஏற்படும் மாறுதலை ஆராயும் அளவிற்கு அறிவியலில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.

அக்கால ஐரோப்பிய அறிவியல் அறிஞர்கள் கொண்ட ‘அறிவியல் தத்துவங்கள்’ (Philosophy of Science) என்ற கருத்துக் கோட்பாட்டின்வழி, அறிவியல் அறிஞராக வேண்டுமானால் புத்தகங்களில் இருந்தும், நூலகங்களில் இருந்தும், ஆய்வுக்கூடங்களில் இருந்தும் விடுபட்டு, உலகைச் சுற்றி வந்து ஆய்வு நடத்தி, இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற முறையைப் பின்பற்ற விரும்பினார். நிலக்கரி சுரங்கம், சுரங்க ஆய்வு போன்றவற்றைத் தானாகவே தன்னார்வமுடன் பயின்று இக்காலத்தில் ‘நிலவியல்’ (Geology) என்று அழைக்கப்படும் துறையின் நிலவியலாளர் /ஜியாலஜிஸ்ட் (Geologist) ஆகப் பணிபுரிந்தார். ஆனால் அவர் காலத்தில், அறிவியல் பல துறைகளாக உயிரியல், நிலவியல், தாவரவியல் (Biology, Geology, Botany) என்றெல்லாம் தனித்தனியாகப் பலப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கவில்லை. இவரைப் போன்ற முன்னோடியான அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பே பின்னர் அறிவியலில் பல பிரிவுகள் ஏற்படக் காரணமாக இருந்தது. மாவீரன் நெப்போலியனுடன் எகிப்து நாட்டிற்கும், ஆப்ரிக்கக் கண்டத்திற்கும் சென்று ஆராய்ச்சிப் பயணம் செய்ய நினைத்த இவர் பயணம் தடைபட்டுப் போனது.
பெற்றோர்கள் மறைவிற்குப் பிறகு இவரது இளம் வயதிலேயே பரம்பரைச் சொத்து இவர் கைவசமானது. இதானால் பயணம் செய்ய பிறரின் நிதியுதவி இவருக்குத் தேவைப் படவில்லை. அறிவியல் ஆராய்ச்சியை தொடர தனது சொந்த செலவிலேயே ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டார். இவருடன் பிரெஞ்சு தாவரவியலார் ‘அய்மி பான்பிளான்ட்’ (Aimé Bonpland, French Botanist) என்பவரும் உடன் சென்றார். இவர்கள் சென்ற காலத்தில் உலக அரசியல் சூழ்நிலையும் இவர்களின் பயணத்திற்குச் சாதகமாக அமைந்தது. ஸ்பெயின் நாட்டின் மன்னர் தென்னமெரிக்கக் கண்டத்தை தங்கள் நாட்டின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர எண்ணினார். ஸ்பெயின் நாட்டின் ஆதிக்கத்தால் அக்காலத்தில் தென்னமெரிக்கா ‘இலத்தீன் அமெரிக்கா’ அல்லது ‘ஸ்பானிஷ் அமெரிக்கா’ என்றும் பரவலாக அழைக்கப் பட்டு வந்தது. தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் இருப்பதாகக் கருதப்பட்ட தங்கச் சுரங்கத்தை கைப்பற்றுவது, தென்னமெரிக்காவின் செல்வத்தைச் சுரண்டுவது அக்கால ஸ்பெயின் நாட்டின் குறிக்கோளாக இருந்தது. இக்கொள்கையை நிறைவேற்றும் பொருட்டு ஹம்போல்ட் பயணத்திற்கு ஸ்பெயின் மன்னர் தடையின்றி தாராளமாக அனுமதி அளித்தார். அக்காலத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடித்த(?) கொலம்பஸ் போன்று ஹம்போல்ட் ‘இரண்டாவது கொலம்பஸ்’ என்ற சிறப்புத் தகுதியை அடைந்திருந்தார்.
அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் (1799-1804):
ஸ்பெயின் நாட்டின் சார்பாக ஹம்போல்ட் மேற்கொண்ட அறிவியல் ஆராய்ச்சிப் பயணதிற்கான காலம் சரியாக ஐந்து ஆண்டுகளும் மூன்று மாதங்களும் ஆகும். இதைத் தொடர்ந்து உருவாகிய ஆராய்சி முப்பது நூல்களாக வெளியிடப்பட்டன. ஏறத்தாழ 24,000 மைல்கள் கொண்டது இப்பயணம், அதாவது உலகை ஒருமுறை சுற்றிவரும் தூரம் கொண்டது இப்பயணம். இவரும் இவரது நண்பர் தாவரவியலார் அய்மி பான்பிளான்ட்டும் தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள வெனிசுலா (Venezuela), கொலம்பியா (Colombia), இக்குவேடார் (Ecuador), பெரு (Peru) நாடுகளிலும், மற்றும் மெக்சிகோ (Mexico), கியூபா(Cuba) நாட்டுப் பகுதிகளிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். அவற்றில் மிக முக்கியமான ஆராய்ச்சிகள் பெரு நாடு மற்றும் இக்குவேடார் நாட்டின் பகுதிகளில் உள்ள ‘ஆண்டீஸ் மலை’த்தொடரின் (Andes mountains) பகுதிகளிலும், குறிப்பாக இக்குவேடார் நாட்டின் ‘சிம்பராசோ’ (Mount Chimborazo in Ecuador) என்ற உறங்கும் எரிமலை சிகரத்தின் பகுதியிலும், வெனிசுலா(Venezuela) நாட்டுக் காடுகளிலும், அங்குள்ள ‘ஆர்நிக்கோ’ ஆற்றிலும் (Orinoquia/Orinoco River) மேற்கொள்ளப்பட்டது. ஆர்நிக்கோ ஆற்றின் முழு நீளமும், அதன் 1,700 மைல்கள் தொலைவும் இவர்களால் ஆராயப்பட்டது. இப்பகுதியின் காடுகள் அபாயகரமான விலங்குகளாலும், கொடிய நோய்களாலும் மரணத்தைக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை.
அப்பொழுது அக்காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள் உபயோகப்படுத்திய ‘குரேர்’ தாவரம் (Curare plant) கொண்டு உருவாக்கப்படும் நஞ்சு தடவிய அம்பு தயாரிக்கும் முறையை அவர்களிடம் இருந்து அறிந்து கொண்டார். மலேரியா (Malaria) நோய்க்கு மருந்தான குயினின் (quinine) தயாரிக்கப் பயன்படும் சின்கோனா (Cinchona tree bark) மரப்பட்டையைப் பற்றிய தகவலையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் பெரு கடற்கரையை ஒட்டிய பசுஃபிக் கடலில் உள்ள நீரோட்டத்தையும் (Pacific water current), அதனால் பெருவிற்கு கிடைக்கும் மழைப்பொழிவைப் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர் இந்நீரோட்டம் ‘ஹம்போல்ட் நீரோட்டம்’ என்று இவரது பெயராலேயே அழைக்கப் படுகிறது. புதிய வகை மின்சார ஈல் (Electric Eel) மீன் இருப்பதும் இவரால் குறிப்பெடுக்கப்பட்டது. பல விலங்குகளின் தோல்கள், பற்பல பறவைகளின் சிறகுகள், ஏராளமான தாவரங்களின் இலை மற்றும் பூக்கள் என ஒரு பெரிய சேகரிப்பு இப்பகுதியில் ஹம்போல்ட்டிற்குக் கிடைத்தது. பெரு நாட்டின் பகுதியின் ஆண்ட்டீஸ் மலைத்தொடரின் பகுதி இவரால் விரிவாக வரையப்பட்டது.
இக்குவேடார் நாட்டின் பகுதியில் உள்ள ஆண்டீஸ் மலைத்தொடரில் உள்ள சிம்பராசோ மலையின் சிகரத்தின் பல உயரங்களிலும் காற்றழுத்தம் ஹம்போல்ட்டினால் அளக்கப்பட்டது. இவர் பயணக் காலத்தில் சிம்பராசோ சிகரம்தான் உலகின் மிக உயரமான சிகரம் எனக் கருதப்பட்டது. கடலில் தொலைவில் இருந்து காணமுடிந்த இச்சிகரத்தில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை காற்றழுத்தமும் மற்ற பிற அளவுகளும் இவரால் குறிக்கப் பட்டன. ஒவ்வொரு உயரத்திலும் காணப்படும் விலங்குகளும் தாவரங்களும் இவரால் ஆவணப்படுத்தப்பட்டன. உயிரினங்களின் வகையும், அவற்றின் இருப்பும் உயரத்திற்கு ஏற்ப வேறுபடுவதை அப்பொழுது அவர் கண்டுகொண்டார். ஆனால் இவரால் சிகரத்தை அடைய முடியாமல் முயற்சியைக் கைவிட்ட பிறகு எழுபது ஆண்டுகள் கழித்தே ‘எட்வர்ட் வைம்ப்பெர்’ (Edward Whymper, 1886) என்ற ஆங்கிலேயர் ஒருவரால் சிம்பராசோ சிகரத்தை அடைய முடிந்தது. ஆனால் ஹம்போல்ட் வரைந்த விரிவான வரைபடங்களும் அதில் குறிக்கப்பட்ட பற்பல அளவீடுகளும் ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the theory of unity of nature) என்ற அவரது கோட்பாட்டிற்கு உறுதுணையான ஆதாரங்களாக விளங்கின.
ஒத்தவெப்பநிலை வரைபடங்கள் (Isotherms):
ஹம்போல்ட்டின் மிக முக்கியப் பங்களிப்பு அவர் உருவாக்கிய ஒத்தவெப்பநிலை (Isotherm) வரைபடங்கள். தனது தென்னமெரிக்க ஆராய்ச்சிப் பயணத்தில் பல அறிவியல் சோதனைக் கருவிகளை ஹம்போல்ட் தன்னுடன் எடுத்துச் சென்றார். பதினான்கு கோவேறு கழுதைகள் பொதி சுமந்து செல்லும் அளவுக்கு பெட்டிப் பெட்டியாகக் கருவிகளை எடுத்துச் சென்றார். அக்கால பிரெஞ்சு நிறுவனகள் சுற்றுச்சூழலை துல்லியமாக அளக்கும் பல்வேறு அறிவியல் உபகரணங்களை வடிவமைத்திருந்தன. ஹம்போல்ட்டும் எதையம் முறையாக அளந்து துல்லியமாகக் குறிப்பெடுத்து ஆவணப்படுத்தும் பண்பைக் கொண்டவர். எனவே தான் சென்ற இடங்களின், ஆச்சிஜன், வானின் நீலநிறத்தின் அளவு, காற்றின் வேகம், காற்றழுத்தம் (air pressure), உயரம், வெப்ப நிலை (temperature), நிலத்தின் அமைப்பு (shape of the land), காந்தப்புலத்தின் வலிமை (strength of magnetic field), ஒவ்வொரு இடத்திலும் உள்ள விலங்குகள், தாவரங்கள் அவற்றின் எண்ணிக்கை எனப் பற்பல குறிப்புகளை ஒன்றுவிடாமல் கவனமாகக் குறிப்பெடுத்து தனது வரைபடத்தில் குறித்துக் கொண்டார்.

பிறகு ஒத்த வெப்பநிலை உள்ள இடங்களின் புள்ளிகளை ஒரே கோட்டில் இணைத்தார், இவ்வாறு உருவாக்கிய படங்களுக்கு ‘ஐஸோதெர்ம்’ (Isotherm) வரைபடங்கள் எனப்பெயரிட்டார். இவை வளைந்த கோடுகளை உடைய கோட்டோவிய (contour line maps) வரைபடங்கள். அவ்வாறு ஒத்த இயற்கை தட்ப வெட்ப சூழ்நிலையில் வசிக்கும் உயிரினங்கள் (விலங்குகளும், தாவரங்களும்) யாவும் ஒத்திருப்பதை இக்கோட்டோவிய வரைபடம் தெளிவு படுத்தியது. அதுவரை இந்த அடிப்படைத் தகவலை, வாழுமிடங்களுக்கு ஏற்ப உயிரனங்கள் மாறுபடும் என்ற தொடர்பை (connection with the ‘habitats’ and the species living at that place) அறிவியல் அறிஞர்கள் கவனிக்கத் தவறியிருந்தனர். முதன் முதலில் தரவுகளை அனைவருக்கும் விளங்கும் வண்ணம் வரைபடங்களாக வரைந்து விளக்கியவர் ஹம்போல்ட்தான். அதற்கு முந்தைய நூற்றாண்டுவரை உருவாக்கப்பட்ட ‘டோப்போக்ராஃபிக்’ (topographic maps) என்றழைக்கப்பட்ட நிலவியல் வரைபடங்கள் இதுபோன்ற தகவல்கள் இன்றியே வரையப்பட்டு வந்தன. மேலும் இவர்காலத்தில் அச்சுகூடங்களின் தொழில் நுட்பம் சிறந்த வளர்ச்சியடைந்து இருந்ததால், வரைபடங்களை அதிக அளவில் குறைந்த விலையில் பிரதிகள் எடுப்பதும் சாத்தியாமாயிற்று.
‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the unity of nature):
“Everything Is Interrelated”—Alexander von Humboldt
அறிவியல் தகவல்களை வரைபடக் காட்சி வழியாக (visual-presentation of scientific data as maps, charts and graphs) ஹம்போல்ட் விளக்கிய முறை அறிவியலில் ஒரு திருப்புமுனை. இதனால் இயற்கை சூழலுக்கேற்ப உயிரினங்கள் வாழ்வதும் இடத்திற்கு இடம் அவை வேறுபடுவதும் தெளிவாகியது. நிலப்புவியியலுக்கு இதுவே அடிப்படை என்பதால் இவர் இத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அத்துடன் இந்த பங்களிப்பே சுற்றுச்சூழலியலிலும் (ecology) இவரை முன்னோடியாகக் கருத வைக்கிறது. இயற்கையும், சுற்றுச்சூழலும், உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை (intersconnectedness of all nature, intersconnectedness of geography) அதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப் படவேண்டும் என்பதும், இயற்கையில் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதும் புலனாகிறது. இயற்கையில் பல்வேறு சக்திகள் உள்ளன (forces make up nature). அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன (interrelated forces in nature). அவ்வாறு ஏற்பட்டுள்ள தொடர்பு ஓர் ஒருமைப்பாட்டுடேன் இயங்குவதால் இயற்கை சம நிலையில் இருக்கிறது (balance of forces in nature) என்று ஹம்போல்ட் முடிவிற்கு வந்தார். இதனை ஹம்போல்ட் ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the unity of nature) என்று விளக்கினார்.
ஹம்போல்ட்டின் அறிவியல் பங்களிப்பு:
இவரது அறிவியல் கண்டுபிடிப்புகள், செய்முறைகள், பங்களிப்புகள் தற்கால அறிவியலில் பலதுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேதியியல், பொறியியல், இயற்பியல், மருத்துவம், உயிரியல், கணிதம் போன்ற துறைகள் யாவும் ஏதோ ஒரு விதத்தில் பயனடைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமாகக் கருதப்படுவது, அளவுகளை துல்லியமாகக் குறிப்பிடும் ஒத்தவெப்பநிலை வரைபடங்களும் (Isotherm), இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடும் (the unity of nature) ஹம்போல்ட்டினால் அறிவியல் உலகத்திற்கு காட்டப்பட்டதுதான். இதுவே டார்வினின் உயிரினங்களின் தோற்றம் என்ற கோட்பாட்டிற்கு தாக்கமாக அமைந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
(1) துல்லியமாக வரைபடத்தில் அளவீடுகளைக் குறிப்பது என்பது அறிவியலில் திருப்புமுனையைக் கொண்டுவரும் அளவிற்கு ஒருமிகப்பெரிய மாற்றம் இல்லை எனவும், (2) ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற டார்வினின் கோட்பாடு போல இவரது முப்பது நூல்களிலும் விரவிக் கிடந்த ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ என்ற அறிவியல் தகவல்கள் சுருங்க விளக்கப்படவில்லை எனவும், (3) டார்வினின் கோட்பாடு இவரது கோட்பாட்டின் தகவலை மங்கச் செய்து விட்டது எனவும், இதனாலேயே இவரைப் பற்றிய தகவல்கள் நாளடைவில் மறக்கப் பட்டது எனப் பல காரணங்கள் இவர் புகழ் மங்கியதற்குக் கற்பிக்கப்படுகின்றன.
சிந்தனைக்கு:
இயற்கை சூழலுக்கேற்ப, தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப உயிரினங்கள் வாழ்ந்திருப்பதும் இடத்திற்கு இடம் வேறுபடுவதும் (role of environment on diversity of life) அதனால் உயிர்ப்புவியியலுக்கு ஹம்போல்ட் முன்னோடியாகக் கருதப்படுகிறார் என்ற தகவலையும் நாம் அறிந்து கொள்ளும் வேளையில்; தவறாமல் சிந்தனையில் குறுக்கிடும் ஒரு கேள்வி இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடவில்லையா என்பதே.
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
(அகத்திணை 5)
என்றுரைக்கின்றார் தொல்காப்பியர்.
முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை,
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”
(காடுகாண் காதை, 64-66)
என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
அது போலவே சங்கல கால இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு திணைப்புலதிற்கும் சிறப்பான பறவைகளை, விலங்கினங்களை, மரங்களை, பூக்களை என விலங்கின, தாவரக் குறிப்புகள் யாவற்றையும் தருவது இங்கு தேவையற்றது என்ற காரணத்தினால் கீழ்கண்ட சுருக்கமானப் பட்டியல் கொடுக்கப் பட்டுள்ளது. காப்புரிமை பெறாத, பலரும் அறிந்த எளிய உண்மைகள் மீண்டும் மேலைநாட்டினர் வசமானதாகத் தோன்றுவதை ஏனோத் தவிர்க்க இயலவில்லை.
References:
உயிர்ப்புவியியல் – http://ta.wikipedia.org/s/2cz
Alexander von Humboldt-Stiftung/Foundation – http://www.avh.de/web/home.html
History: Alexander von Humboldt – http://humboldt.edu/avhconference/2014_history_avh.html
Alexander von Humboldt – http://en.wikipedia.org/wiki/Alexander_von_Humboldt
Everything is interrelated – The University of Texas at Arlington – http://blog.uta.edu/~omalley/files/2009/09/brochure-fall09-copyright.pdf
Baron Friedrich W.K.H. Alexander von Humboldt, History of Geology, James S. Aber – http://academic.emporia.edu/aberjame/histgeol/humboldt/humboldt.htm
Humboldt’s Cosmos By Gerard Helferich – http://books.google.com/books/about/Humboldt_s_Cosmos.html?id=ua8n5fLZx5MC
கட்டுரையின் தமிழ் இலக்கியப் பாடல்கள் – http://www.tamilvu.org/courses/degree/p104/p1043/html/p1043222.htm
Images:
Images from the fall 2009 exhibit in Special Collections at the University of Texas-Arlington Library. The exhibit runs from August 24, 2009 till January 9, 2010. – http://www.flickr.com/photos/spcouta/sets/72157622803883913/
Videos:
Who is Alexander von Humboldt? – George Mehler – http://ed.ted.com/lessons/who-is-alexander-von-humboldt-george-mehler
Humboldt – the last Renaissance man – A BBC Radio Interview – http://www.youtube.com/watch?v=VfK7jaUfTU0
Pictures courtesy:
AvHumboldt – http://en.wikipedia.org/wiki/File:AvHumboldt.jpg
Isotherm – http://commons.wikimedia.org/wiki/File:Isotherms_ugglan.jpg
தேமொழி
மனித இனம் தோன்றியது முதல் நிலவினைப் பார்த்து வியந்து வந்திருக்கிறது. நிலவைப் பற்றியத் தெளிவான உண்மைகள் அறிந்திராத பொழுதும் புனைக்கதைகள் பல புனைந்து வந்திருக்கிறது, அக்கதைகளைப் புராணங்களில் ஏற்றி கடவுளர்களின் வரிசையில் நிலவினை இடம்பெறவும் செய்துள்ளது. மேலும் மனித இனம் நிலவின் அழகில் மயங்கி சில நேரங்களில் நிலவைப் பெண்ணாகவும் பாவித்து கவிதைகள் பலப் பாடிப் போற்றியுள்ளது, நிலவையே காதலுக்குத் தூதகவும் அனுப்பியிருக்கிறது.
காலம் உருண்டோட, அறிவியல் வளர, நிலவைப் பற்றிய உண்மைகள் அறிவியல் மூலமாக நிரூபிக்கப்பட்ட பொழுது கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் அந்த உண்மைகளையும் எடுத்தாண்டனர்.
ஜூலை 21, 1969 அன்று அமெரிக்க விண்வெளி வீரர் ‘நீல் ஆர்ம்ஸ்ட்ராங்’ (Neil Armstrong) நிலவில் காலடி வைத்த பிறகு, அதுவும் கவிதைகளில் வெளிப்பட்டது.
“நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்”
என்று கவியரசர் புதிய உலகம் நோக்கி நம்பிக்கைத் தொனிக்கும் கருத்தைப் பாடினார்.
அத்துடன் நில்லாது, காதலன் தன் காதலியிடம் கேட்பதாக,
“உறவின் ஒருபக்கம் நீயறிவாய்,
இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்?”
என்றும் கவியரசர் கண்ணதாசன் மற்றுமொரு கவிதை வரிகளிலும் ஓர் அறிவியல் உண்மையைப் புகுத்திப் பாடல் வழங்கியிருப்பார்.
பூமியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் நிலவைக் காலம் காலமாக அண்ணாந்து நோக்கினாலும் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து வருகிறோம். நிலவின் மறு பக்கத்தைப் பார்க்க முடிந்ததில்லை. இதுவரை நிலவைச் சுற்றிய விண்வெளி வீரர்களுக்கு மட்டுமே நிலவின் மறுபக்கத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நாம் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது நம் கண்களுக்குப் புலப்படாவிட்டாலும் உண்மையில் நிலவு சுழல்கிறது. பூமியைப் போலவே நிலவுக்கும் தன் அச்சிலேயே (own axis) சுழற்சி உண்டு, ஆனால் நம் கண்களால் அறிந்து கொள்ளும் வண்ணம் அச்சுழற்சி அமையவில்லை.
நிலவு அவ்வாறு சுழலும் பொழுது நிலவின் மறுபக்கம் நமக்குத் தெரிந்துதானே ஆகவேண்டும், பின் ஏன் நிலவின் மறுபக்கத்தை நம்மால் காண இயலவில்லை?
இதற்கு புவியின் சுழற்சியும் நிலவின் சுழற்சியும் ‘ஒத்த சுழற்சிப்பிணைப்பு’ (Tidal locking or captured rotation) என்ற வகையில் அமைந்திருப்பதே காரணம். இந்த ஒத்த சுழற்சிப் பிணைப்பு என்ற பண்பினால் நிலவின் ஒருபக்கம் மட்டுமே எப்போதும் புவியை நோக்கி அமைகிறது. இதனைக் கீழ்வரும் படம் விளக்குகிறது. இடது பக்கம் உள்ள சுழற்சி ஓர் ஒத்த சுழற்சிப்பிணைப்பு. நிலவு புவியைச் சுற்றும் பொழுது கரும்புள்ளிகள் அமைந்த பகுதி புவியை எப்பொழுதும் நோக்கிய வண்ணமே உள்ளது. புவியும் நிலவும் சுழல்கின்றன. ஆனால் அவற்றின் சுழற்சி ஒத்திருக்கிறது. மாறாக வலது பக்கம் உள்ள படம், ஒத்த சுழற்சிப்பிணைப்பு அமைந்திராவிட்டால் எவ்வாறு நிலவின் கரும்புள்ளிகள் அற்ற மறுபக்கமும் புவியை நோக்கித் திரும்பும் என்று விளக்குகிறது.

இந்த ஒத்த சுழற்சிப் பிணைப்பிற்குக் காரணம், நிலவு தன்னைத் தானே முழுமையாக ஒருமுறை சுற்றிவரும் காலமும், புவியை அது முழுமையாக ஒருமுறை சுற்றிவரும் கால அளவும் ஒன்றாகவே இருப்பதால் அமைகிறது. நிலவு தன் அச்சில் ஒரு முழுமையான சுழற்சியை முடிக்கும் கால அளவு 27 நாட்கள். அதேபோல, நிலவு புவியை ஒருமுறை முழுமையாகச் சுற்றிவரும் கால அளவும் 27 நாட்களே. இவ்வாறான ஒத்த சுழற்சியினால் (synchronous rotation) நிலவின் ஒரே பக்கமே புவியை நோக்கி இருக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.
புவியின் நிலா அதனுடன் ஒத்தசுழற்சிப்பிணைப்பில் இருப்பது போலவே, சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களான செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களின் நிலவுகளும் அந்தந்தக் கோள்களுடன் ஒத்த சுழ்ற்சிப்பிணைப்பிலேயே சுழன்று வருகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளாக, ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் (The National Aeronautics and Space Administration / NASA) செலுத்திய ‘நிலவு ஆய்வு விண்கலம்’ (Lunar Reconnaissance Orbiter / LRO) நிலவைச்சுற்றி வந்து,அதனைப் படங்கள் பல எடுத்து, அத்துடன் இன்றியமையாதத் தகவல்கள் பலவற்றையும் நாசாவிற்கு அனுப்பி வருகிறது.

விண்வெளி ஆய்வு மையம் இத்தரவுகளையும் படங்களையும் ஆராய்ந்து, நிலவின் ஒவ்வொரு கோணத்தின் படத்தையும் பொருத்தி இணைத்து “நிலவின் சுழற்சி”யை ஒரு காணொளியாக சென்ற வாரம் (செப்டம்பர் 11, 2013 அன்று) வழங்கியுள்ளது. இருபத்தியைந்து நொடிகளே கொண்ட இக்காணொளி மூலம் நாம் இன்று நிலவின் மறுபக்கத்தையும் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையில் எப்பக்கம் பார்த்தாலும் நிலவின் அழகு மனத்தைக் கவரும் வண்ணமே அமைந்துள்ளது.
காணொளி: நாசா விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய நிலவின் சுழற்சிப் படம்
References:
[1]
Amazing NASA video shows the moon like you’ve never seen it before, September 16, 2013, Scott Sutherland, Geekquinox, YAHOO News, http://news.yahoo.com/blogs/geekquinox/amazing-nasa-video-shows-moon-ve-never-seen-164200739.html?vp=1
[2]
Lunar Reconnaissance Orbiter – http://www.nasa.gov/mission_pages/LRO/main/index.html#.UjtQVRD9UQp & http://lro.gsfc.nasa.gov/
[3]
A Unique View Of The Moon – http://lroc.sese.asu.edu/news/index.php?/archives/790-A-Unique-View-Of-The-Moon.html
[4]
Tidal locking – http://en.wikipedia.org/wiki/Tidal_locking
Videos:
Rotating Moon from LRO – http://youtu.be/sNUNB6CMnE8
Pictures:
Tidal locking of the Moon with the Earth – http://en.wikipedia.org/wiki/File:Tidal_locking_of_the_Moon_with_the_Earth.gif
Lunar Reconnaissance Orbiter – http://www.nasa.gov/sites/default/files/styles/466×248/public/screen_shot_2013-06-12_at_10.42.00_am.png?itok=nwO6p8x-
தேமொழி
அசுரனின் தலையை வெட்ட வெட்டப் புதிய தலை முளைப்பது, அல்லது கையை வெட்டினால் புதிய கை முளைப்பது போன்ற நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் உள்ள புராணக்கதைகளில் நாம் படித்திருக்கலாம். ஆனால் உண்மையில் இது சாத்தியமா? சில உயிரினங்களிடம் இந்தப் பண்பு காணப் படுகிறது. காட்டாக, கடலில் வாழும் நட்சத்திர மீன்கள் சேதமடைந்த பகுதியைப் புதுப்பித்துக் கொள்வதையும், வாலை இழந்த பல்லிக்கு புது வால் முளைப்பதையும் நாம் அறிவோம்.
எனினும் பரிணாம வளர்ச்சியில் மிகவும் மேம்பட்ட, சிக்கலான உடலமைப்பைப் பெற்றுள்ள மனித இனத்திற்கு இது சாத்தியமல்ல. சேதமடைந்து இழந்த உடலுறுப்பு இழந்ததுதான், மீண்டும் அதனை வளரவைக்க முடியாது. உறுப்பு தானமாக வழங்கப்பட்டால், பதிலுக்கு அது பொருத்தப்பட்டு குறையை நீக்கும் வகையில் தற்கால மருத்துவம் முன்னேறியுள்ளது. ஆனால், நம்மால் இழந்த உறுப்பை புராணக் கதைகள் குறிப்பிடப்படுவது போல வளர்த்துக் கொள்ள இயலாது. இருப்பினும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ‘மறுவளர்ச்சி மருத்துவம்’ (regenerative medicine) என்ற முறையை வெகு முனைப்புடன் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.
மனிதர்கள் இருவரின் உடலமைப்பும், அதற்கேற்ற மருத்துவ சிகிச்சைத் தேவைகளும் ஒரே போன்று ஒத்திருப்பதன் வாய்ப்பு மிக மிகக் குறைவு. இதற்குக் காரணம், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் நமக்குத் தேவையான உடல்நலம் மற்றும் சுகாதாரத் தேவைகள் ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறாகவே அமைந்திருப்பதே. அறிவியல் அறிஞர்களும் மருத்துவர்களும் மருத்துவச் சிகிச்சைகளை ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு வடிவமைக்க விரும்பித் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றனர்.
இந்த முயற்சிக்கு அடிப்படையாக விளங்குவது ‘மூலஉயிரணுக்கள்’ ஆராய்ச்சி (Stem Cells Research) . இந்த மூலஉயிரணுக்கள் கொண்ட பண்பின் சிறப்பு, உயிரினங்களின் உடல் செயல்பாட்டில் அவைகளின் பங்கு என்ன என்பது வரையறுக்கப்படாததே. இவ்வாறு வேறுபடுத்தப்படாத மூலஉயிரணுக்கள் குறிப்பிட்ட எந்த வேலையையும் அவற்றிற்கு என்று நிர்ணயிக்கபடாத நிலையில் இருக்கின்றன.
தோலின் உயிரணுக்கள் (skin cells), தசை உயிரணுக்கள் (muscle cells), நரம்பு உயிரணுக்கள் (nerve cells), என உடலின் ஒவ்வொரு வகை உயிரணுக்களுக்கும் முறையே பாதுகாப்பு, சுருங்கிவிரிதல், சமிக்கைகளைக் கடத்துதல் என்ற செயல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் மூலஉயிரணுக்களின் செயல்கள் இவையிவை என வரையறுக்கப்படாததால், மற்ற எந்த உயிரணுவாகவும் மாற்றம் கொண்டு அந்தப் பணிகளை அவைகளால் செய்ய இயலும். அதனால் உடலின் மற்ற உயிரணுக்கள் பழுதடைந்தோ அல்லது இறந்தோ போகும் பொழுது மூலஉயிரணுக்கள் அவற்றினை ஈடு செய்யும் வகையில் அந்த உயிரணுக்களாக மாற்றம் அடைந்து செய்ய வேண்டியப் பணியை தொடர்ந்து மேற்கொள்ளும்.
காட்டாக, நம் சிறுகுடலின்(intestine) சுவரின் உயிரணுக்கள் நான்கு நாட்களுக்கொருமுறை முற்றிலும் புதியதாக மாற்றியமைக்கப்படுகிறது. சிறுகுடலின் சுவரின் அடியில் அமைந்திருக்கும் மூலஉயிரணுக்கள், சிறுகுடலின் சுவரின் உயிரணுக்கள் பழுதடைய பழுதடைய அந்த உயிரணுக்களாக மாறி அச்சுவரினைப் புதுப்பிக்கிறது. இது போலவே தினமும் பல்லாயிரக் கணக்கான இரத்த உயிரணுக்களும் புதுப்பிக்கப் படுகின்றன.
மூலஉயிரணுக்களின் இத்தகைய பண்பினால் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அவற்றைக் கொண்டு ‘தனித்துவம் கொண்ட சிறப்பு மருத்துவச்சிகிச்சை’ (individualized treatment) முறையை மேற்கொள்ள ஆராய்ந்து வருகிறார்கள். தேவையேற்பட்டால் பழுதடைந்த நமது உடலுறுப்புக்களை நீக்கிவிட்டு, பதிலுக்கு நம் உடலுறுப்புக்களையே வைத்து செயற்படுத்தும் ‘மறுவளர்ச்சி மருத்துவம்’ என்ற முறையைப் பயன்படுத்த முயல்கிறார்கள்.
சுருங்கச் சொல்லின், பழுதடைந்த உடல் உறுப்புக்களின் பகுதிகளில் உள்ள சேதமடைந்த திசுக்களுக்குப் (tissues) பதில், மூலஉயிரணுக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய திசுக்களைக் கொண்டு மாற்றியமைக்கும் முயற்சியே மறுவளர்ச்சி மருத்துவம் ஆகும்.
இப்பொழுது இரத்தத்தின் வெள்ளையணுப் புற்றுநோய்க்கு (leukemia, blood cancer) மூலஉயிரணுக்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது. வெள்ளையணுப் புற்றுநோய் நம் உடலின் எலும்பு மஞ்ஞையைத் (bone marrow) தாக்குகிறது. எலும்பு மஞ்ஞையில் இருந்து இரத்ததிற்குத் தேவையான உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெள்ளையணுப் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி உற்பத்தியாகி வெள்ளையணுப் புற்றுநோய் கொண்டவரின் எலும்பு மஞ்ஞையில் உள்ள மூலஉயிரணுக்களைச் சூழ்ந்து கொண்டு அவற்றைத் தாக்கி அழிக்கின்றன. இந்நோய் கண்டவர்களுக்கு புதிய மூலஉயிரணுக்கள் உடலினுள் செலுத்தப்படுகிறது (stem cells transplant). இவை உடலுக்குத் தேவையான இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன.
மூன்று வகையான மூலஉயிரணுக்களை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளில் பயன் படுத்துகிறார்கள். அவை:
1. திசு நிர்ணயிக்கப்பட்ட மூலஉயிரணுக்கள் (Adult/Tissue specific stem cells)
2. பல்லாற்றல் கொண்ட மூலஉயிரணுக்கள் (Embryonic stem cells/ Pluripotent stem cells)
3. பல்லாற்றல் தூண்டப்பெற்ற மூலஉயிரணுக்கள் (Induced Pluripotent stem cells)
1. திசு நிர்ணயிக்கப்பட்ட மூலஉயிரணுக்கள்:
இந்த மூலஉயிரணுக்கள் இயற்கையிலேயே நம் உடலுறுப்புகளின் திசுக்களில் குறைந்த எண்ணிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன. இவை உடலுறுப்புகளின் திசுக்கள் தேய்ந்து அழியும் பொழுது அத்திசுவின் உயிரணுக்களாக மாற்றம் பெற்று உடலுறுப்புகளைப் புதுப்பித்து அவற்றின் பணியை மேற்கொள்ளும்.
2. பல்லாற்றல் கொண்ட மூலஉயிரணுக்கள்:
இவை கருவில் உள்ள மூலஉயிரணுக்கள் ஆகும். செயற்கைமுறைக் கருத்தரிப்பு நிலையங்களில் (fertility clinic) பயன்படுத்தப்படாத கருக்கள் அவற்றின் உரிமையாளர்களால் ஆராய்சிகளுக்கு மனமுவந்து நன்கொடையாக வழங்கப்படும். இது போன்ற கருவில் உள்ள மூலஉயிரணுக்களின் பண்பு, அவை எந்த உயிரணுவாக செயல் பட வேண்டும் என்பதோ அதன் பணி என்ன என்பதோ நிர்ணயிக்கப் படாததால் இவை எந்த ஒரு திசுவாகவும் வளர்சியடைந்து அந்தத் திசுவின் பணியை மேற்கொள்ளும் ஆற்றல் கொண்டதாகும். அதனால் பல்லாற்றல் கொண்ட மூலஉயிரணுக்கள் என அவை அழைக்கப்படுகின்றன (pluripotent stem cells /iPS cells).
3. பல்லாற்றல் தூண்டப்பெற்ற மூலஉயிரணுக்கள்:
இயற்கையாக தோல், நரம்பு, தசை போன்ற உடலுறுப்புகளின் திசுக்களில் உள்ள உயிரணுக்களே இவை. ஆராய்ச்சியாளர்கள் செயற்கையாக அறிவியல் முறைப்படி இவ்வுயிரணுக்களைத் தூண்டி, பல்வேறு திசுக்களின் உயிரணுக்களாகவும் மாறும் பண்புள்ள மூலஉயிரணுக்களாக இவற்றை மாற்றமுறச் செய்கிறார்கள். இவை கருவில் உள்ள மூலஉயிரணுக்கள் போன்றே எந்த ஒரு திசுவாகவும் உருவெடுத்து அதன் பணிகளை மேற்கொள்ளும் பண்பினைப் பெற்றுவிடுகின்றன.
மருத்துவ, உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் மறுவளர்ச்சி மருத்துவ முறைகளுக்கு மூலஉயிரணுக்களைப் பயன்படுத்துவதுடன், இவற்றின உதவியுடன் மேலும் ஆராய்ந்து உடலின் செயல்பாடுகளையும் நன்கு அறிந்து கொள்ளவும் முடியும். மேலும், மூலஉயிரணுக்கள் திசுவாக வளர்ந்து குறிப்பிட்ட ஒரு உடலுறுப்பாக மாறுவதையும், அவ்வாறு அவை மாறும் செயல்முறைகளையும் பற்றி கண்காணிப்பு நிறைந்த ஆய்வுக் கூட ஆராய்சிகளின் வழியாக அறிவியல் அறிஞர்கள் அறிந்து கொள்ள இந்த ஆராய்சிகள் வழி வகுக்கிறது.
இவ்வாறு ஆராய்ச்சி வழி பெரும் தகவல்கள்: 1. மறுவளர்ச்சி மருத்துவச் சிகிச்சை முறை, 2. தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை, 3. நோயுற்றிற்கும் பொழுதோ அல்லது உடல் நலத்துடன் இருக்கும்போழுதோ உடல் இயங்கும் விதம் பற்றி அறிந்து நோய் தடுக்கும் முறைகளை வடிவமைக்க உதவி செய்யும்.
இவ்வாரத்தில் வெளியான செய்திகளின் படி (செப்டம்பர் 11, 2013), ஆராய்ச்சியாளர்கள் உயிருள்ள எலிகளின் உடல்களிலேயே, அவற்றின் வளர்ச்சியடைந்த உயிரணுக்களை மூலஉயிரணுக்களாக மாற்றமடையச் செய்ய மேற்கொண்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. ஆராய்ச்சிக் கூடத்தில் கலன்களில் வளர்க்கப்படாது, உயிரினங்களின் உடலிலேயே மூலஉயிரணுக்களை தேவைகேற்ப வளரச் செய்வது மறுவளர்ச்சி மருத்துவத் துறையில் ஒரு முக்கியமானத் திருப்புமுனையாகும். எதிர்காலத்தில் சேதமடைந்த இதயத்தின் தசையையோ, தண்டுவடத்தையோ மாற்றியமைத்து மனிதர்களின் இதய, தண்டுவட நோய்களைக் குணப்படுத்தும் முறைக்கு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நம்பிக்கைத் தருவதாக அமைந்திருக்கிறது.
மனித குல உயர்வுக்காக வளர்ச்சியடைந்து வரும் இந்த மூலஉயிரணுக்கள் ஆராய்ச்சித் துறை, நன்னெறி வழிகளைச் சார்ந்ததா என்ற கேள்விகளையும், சர்ச்சைகளையும், போராட்டத்தையும் எதிர்கொண்டே வளர்ந்து வருகிறது.
References:
[1]
New possibilities in regenerative medicine: Researchers grow new stem cells in living mice, September 11, 2013, Kate Kelland, Reuters News.
http://medcitynews.com/2013/09/new-possibilities-in-regenerative-medicine-researchers-grow-new-stem-cells-in-living-mice/
[2]
Scientists Force Mature Cells to Revert to Stem Cells, September 11, 2013, Elizabeth Lopatto, Bloomberg.
http://www.bloomberg.com/news/2013-09-11/scientists-force-mature-cells-to-revert-to-stem-cells.html
[3]
A step closer to regenerative medicine, September 12, 2013, R. Prasad, The Hindu.
http://www.thehindu.com/sci-tech/science/a-step-closer-to-regenerative-medicine/article5117603.ece
[4]
Stem Cell Information, National Institutes of Health, U.S. Department of Health and Human Services – http://stemcells.nih.gov/info/basics/pages/basics1.aspx
[5]
What are stem cells? Craig A. Kohn. TED-Ed – http://ed.ted.com/lessons/what-are-stem-cells-craig-a-kohn
[6]
Regenerative medicine – http://en.wikipedia.org/wiki/Regenerative_medicine
படம் உதவி:
http://www.news-medical.net/health/What-are-Stem-Cells.aspx
அறிவியல் கலைச்சொற்கள் உதவி:
மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், மணவை முஸ்தபா.
(http://www.tamilvu.org/library/nationalized/pdf/MaanavaiMustappa/009-MARUTHUVAKKALAICHOLKALANCHIYAM.pdf)
தேமொழி
[குறிப்பு: இக்கட்டுரை சென்ற மாத, ‘சயின்டிஃபிக் அமெரிக்கன்’ (Scientific American, August 19, 2013 issue) இதழில் வெளியான, பேராசிரியர். முனைவர். காப்ஃமன் ஸ்காட் பேரி (Dr. Kaufman Scott Barry) அவர்களின் கட்டுரையின் மொழி பெயர்ப்பு. இதனை மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றும் திருவாளர்.காப்ஃமன் ஸ்காட் பேரி அவர்களிடம் அனுமதி பெற்ற பின்பு மொழிபெயர்த்து வெளியிடப் படுகிறது. அனுமதி கொடுத்த பேராசிரியர். முனைவர். காப்ஃமன் ஸ்காட் பேரி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.]
ஆராய்ச்சிக் கண்ணோட்டம் கொண்டு அலசி ஆராயும் தன்மை, செயல்களில் ஒழுங்குமுறையைக் கடைபிடிக்கும் தன்மை, காரண காரியத் தொடர்புடைய வகையில் தர்க்க ரீதியில் சிந்திக்கும் தன்மை, நிகழக்கூடியவற்றை யதார்த்தமானவற்றை சிந்திக்கும் தன்மை, இயல்பான நடைமுறைக்கேற்ப செயல்படும் தன்மை போன்ற பண்புகளை வெளிப்படுத்துவது மனிதர்களின் இடது பக்க மூளையின் செயல் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது.
அது போலவே படைப்பாற்றல், உணர்வுப்பூர்வமான வண்ணமயமான சிந்தனைகள், இன்பம் சுவை போன்றவற்றை அனுபவிக்கும் தன்மை, மனம் கவரும் செயல்பாடுகளை, கவிதைத்துவமான எண்ணங்களை வெளிப்படுத்துதல் போன்ற மென்மையான உணர்வுகளை சித்தரிப்பது மூளையின் வலது பக்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கருதப்பட்டு வந்தது.
தற்கால நரம்பியல் ஆராய்ச்சியில் முன்னோடிகளாகத் திகழும் நரம்பியல் துறை ஆராய்ச்சி வல்லுனர்கள் (Rex Jung, Darya Zabelina, John Kounios, Mark Beeman, Kalina Christoff, Oshin Vartanian, Jeremy Gray, Andreas Fink, Hikaru Takeuchi and others; கொடுக்கபட்டுள்ள சுட்டிகளைச் சொடுக்கி இந்த ஆராய்ச்சியாளர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்), மூளை தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பொழுது அது எவ்வாறு இயங்குகிறது என்று தற்கால தொழில் நுட்பங்களின் உதவியுடன் ஆராய்ந்து வருகிறார்கள். இவர்களின் கண்டுபிடிப்புகள் இதுவரை படைப்பாற்றல் திறனை மூளை கையாளும் விதத்தைப் பற்றி நாம் கொண்டிருந்த எண்ணங்களை மாற்றி அமைப்பதாக விளங்குகிறது.
நரம்பியல் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆராய்ச்சி முடிவுகள் இதுவரை நாம் எண்ணியது போல மூளை வலது பக்கம் மற்றும் இடது பக்கம் என்று தனித்தனியாக இயங்குவதாக நாம் நினைப்பது தவறு என்று அறிவுறுத்துகிறது. மொழி தொடர்பான செயல்களில் இடதுபக்க மூளை அதிக பங்கு வகித்தாலும், இடம் சார்ந்த ‘ஸ்பாட்டியல்’ செயல்களில் வலது மூளையின் பகுதி அதிகம் பங்கு வகித்தாலும்; மூளை படைப்பாற்றலில் ஈடுபட்டிருக்கும் பொழுது மூளையின் ஒரு பகுதியோ அல்லது மூளையின் ஒரு பக்கமோ மட்டும் அதில் பங்கேற்பதில்லை என்ற உண்மை இப்பொழுது தெரிய வந்திருக்கிறது.
உண்மையில், படைக்கும் எண்ணம் கருக்கொண்டு, வளர்ச்சியடைந்து, முழுமையாக முற்றுப் பெறும் வரை மூளையின் புலன் மற்றும் உணர்வு தொடர்புடைய பகுதிகள் பல இணைந்து செயலாற்றுகின்றன. நாம் எதனைப் படைக்கிறோமோ அதற்கு ஏற்றவாறு, படிப்படியாக உருவாகும் ஒவ்வொரு நிலைக்கும் தேவையான பணிகளைச் செய்ய மூளையின் வெவ்வேறு பகுதிகள் பங்கேற்கின்றன. மூளையின் வெவ்வேறு பகுதிகள் தேவைக்கேற்ப ஒருங்கிணைந்து செயலாற்றியே படைப்பாற்றல் வெளிப்படுத்தப்படுகிறது.
முக்கியமாக, ஒரு செயலை நிறைவு செய்ய மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள பல்வேறு பகுதிகள் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டியத் தேவை இருக்கிறது என்பதைத் தற்கால ஆராய்ச்சி முடிவுகள் வலியுறுத்துகின்றன. மூளையின் நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் ஒருங்கிணைத்து பெருமளவில் செயல்படுவதாலேயே நம் புலன்கள் சரிவர செயல்படுகின்றன.
இவ்வாறு மூளையின் பல்வேறு பகுதிகளும் இணைந்து செயல் படுவது நாம் செய்யும் செயலைப் பொருத்து அமைகிறது. காட்டாக, ஒரு சிற்றுந்தின் பின்புறம் உள்ள சாமான்கள் வைக்கும் பகுதியில் பொருட்களை அடுக்கும்பொழுது, அவற்றைத் தேவைக்கேற்றவாறு சுழற்றி சீராக அடுக்க விஷுவோ ஸ்பாட்டியல் என்னும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் (Visuospatial Network) செயல் தூண்டப்படுகிறது. இதுபோன்று இடஞ்சார்ந்த முடிவுகளை எடுக்கும் பொழுது மூளையின் பின்புற சுவர் புறணி மற்றும் முன்புற கண் துறைகள் (posterior parietal cortex and frontal eye fields) ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றன.
இது போன்றே, ஒரு உரையாடல் அல்லது சொற்பொழிவு ஆற்றும் பொழுது மொழி மற்றும் பேச்சுக்குத் தொடர்புடைய நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் செயல் தூண்டப்படுகிறது. அப்பொழுது மூளையின் ‘புரோக்கா’ மற்றும் ‘வெர்னிக்’ பகுதிகள் (Broca’s area and Wernicke’s area of the brain) இணைந்து செயலாற்றுகின்றன.
அதுபோலவே மூளை படைப்பாற்றலில் ஈடுபடும்பொழுது மூன்று வித நரம்புகளின் வலைக்கட்டமைப்புகளின் செயல்கள் தூண்டப்படுகின்றன. அவை:
1. கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Attentional Control Network)
2. கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Imagination Network)
3. கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Attentional Flexibility Network)
1. கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:
ஒரு செயலில் ஒருமித்த ஆழ்ந்த கவனம் செலுத்தத் தேவை இருக்கும் பொழுது இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு தூண்டப்படுகிறது. ஒரு விரிவுரையில் கவனம் செலுத்தும் பொழுதோ அல்லது ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும் பொழுதோ நம் நினைவுகளுக்கு அதிக வேலை கொடுக்கப்படுகிறது. அப்பொழுது மூளையின் புறப்பகுதி, முன்புறம் மற்றும் பின்புறப் பகுதிகள் (lateral regions of the prefrontal cortex and areas toward the posterior of the parietal lobe) யாவும் இணைந்து செயலாற்றத் தேவையாக இருக்கிறது. இப்பகுதிகளை இணைக்கும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு தூண்டப்பட்டு செயலாற்றுகிறது.
2. கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:
படைப்பாற்றலின் பொழுது, மூளையின் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு ஒருவருக்கு கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களினால் கிடைத்த அடிப்படையான நினைவுகள், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டு, தற்காலத் தேவைக்கேற்ப மாறுபட்ட கோணங்களையும் சிந்திக்கும் வகையில் நாம் செய்யும் செயலில் தொடர்ந்து மாற்றங்களை தூண்டிக்கொண்டிருக்கும். அத்துடன் இந்த கற்பனைத்திறன் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு சமூகத் தாக்கத்தையும் உள்ளடக்கியது. உதாரணமாக, நாம் அடுத்தவர் இப்பொழுது என்ன சிந்தித்துக் கொண்டிருப்பார் என்று யோசிக்கும்பொழுது இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கும். பெருமூளைப் புறணியின் (cerebral cortex) முன்பகுதியின் உட்புறம், நடுப்பகுதியின் உட்புறம், மற்றும் பக்கவாட்டுப் பகுதியின் உட்புற மற்றும் வெளிப்புறங்கள் யாவையையும் இணைக்கும் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு ஒருங்கிணைந்து செயல்படுவதால் கற்பனை செய்யும் திறன் செயல்பாட்டிற்கு வருகிறது.
3. கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:
இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் தன்மை கொண்டது. இது வெளிப்புறத்தில் இருந்து கிடைக்கும் சமிக்கைகளையும், உடலினுள் இருந்து கிடைக்கும் சமிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்தவண்ணம் இருக்கும். சமிக்கைகளின் தேவைக்கு ஏற்றவாறு கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்புக்கோ அல்லது கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்புக்கோ சமிக்கைகளை அனுப்பி தேவையான முடிவெடுத்து, தக்க வகையில் செயலை முடிக்க வழி செய்கிறது. இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு பெருமூளைப் புறணியின் மேல்முன்புறம் உள்ள சிங்குலேட் கார்ட்டெக்ஸ் பகுதிகளையும் (dorsal anterior cingulate cortices), முன்புறம் தனித்திருக்கும் கார்ட்டெக்ஸ் (anterior insular) பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்த அமைப்பு தேவைகேற்ப கவனத்திற்கோ அல்லது கற்பனைக்கோ என சமிக்கைகளை மாற்றிவிட உதவுகிறது.
படைப்பற்றலைப் பற்றிய தோராயமான புரிதல்:
நரம்பியல் அடிப்படையில் படைப்பாற்றலைப் பற்றி அறிந்து கொள்வதில், இந்த மூன்று வகை நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் எவ்வாறு இயங்குகிறது, எந்த வகைகளில் இவற்றின் செயல்கள் தூண்டிவிடப்படுகிறது அல்லது செயலிழக்கச் செய்யப்படுகிறது, எந்த நிலைகளில் எந்தெந்த மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்வது இன்றியமையாதது. சிலநேரங்களில் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் இணைந்தும், சில நேரங்களில் அவ்வாறு இணைந்து செயல்படுவது படைப்பாற்றலைக் குறைக்கும் என்பதால் தனித்தும் இயங்கத் தேவையாகிறது.
சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் ரெக்ஸ் யுங் (Rex Jung and Colleagues) மற்றும் அவருடன் ஆராய்ச்சியில் பங்குபெற்ற நரம்பியல் வல்லுனர்கள் மூளையின் படைப்பாற்றல் உருவாகும் விதத்தின் ஒரு தோராயமான முதல் நிலையை (first approximation) எடுத்துக் காட்டியுள்ளனர். இந்தத் தோராயமான முதல்நிலை வரையறையின்படி, படைக்கும் செயலில் எவ்வாறு நாம் சிந்திக்கும் திறனை கட்டவிழ்க்க வேண்டும், சிந்தனையை சுதந்திரமாக பரவ விட வேண்டும், புதிய வழிகளை கற்பனை செய்ய வேண்டும், உள்மன விமர்சனங்களை அமைதிப் படுத்த வேண்டும், கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பை சிறிதே செயலிழக்கச் செய்ய வேண்டும், மற்ற இரு கற்பனைத்திறனுக்கான மற்றும் கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்புகளின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றும் ஜாஸ் மற்றும் ராப் இசைக்கலைஞர்கள் தங்கள் இசையை மேம்படுத்த செய்யும் படைப்பாற்றல் முயற்சிகளில் அவர்களது மூளை கட்டற்று சுதந்திரமாக செயல்படும் பொழுது இந்த தோராயமான வரைமுறை குறிப்பிடும் வகையில் படைப்பாற்றல் வெளிப்படுவதைக் காட்டியது.
எனினும், கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் செயல் திறனை சில சமயங்களில் மறுபடியும் தூண்டிவிட்டு படைப்பாற்றலால் உருவாகிய படைப்பை கவனத்துடன் மதிப்பீடு செய்யவும், அந்த எண்ணங்களை செயல் படுத்தவும் தேவை ஏற்படுகிறது.
ரெக்ஸ் யுங் ஆராய்ச்சிக் குழுவினர் வரையறுக்கும் மூளையின் படைப்பாற்றல் திறனின் செயல்முறை பற்றிய இந்தத் தோராயமான கணிப்பு ஆராய்ச்சியின் முதல்படிதான். ஆனால் இது மூளையின் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ள வழி வகுக்கும் விதத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. படைப்பாற்றல் என்பது மூளையின் பல நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் இணைந்து செயலாற்றுவதாலேயே நிகழ்கிறது என்று அறிவியல் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் எண்ணியது போல மூளையின் ஒரு சில பகுதிகளோ அல்லது மூளையின் ஒரு பக்கம் மட்டுமோ படைப்பாற்றலுக்குக் காரணம் என்ற எண்ணம் தவறு என்று காண்பிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலுடன் பிற ஆராய்ச்சித் தகவல்களையும் இணைத்துப் பார்த்தால்; பகல்கனவு காணுதல், எதிர்காலக் கற்பனைகள், தன்னைச் சார்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்தல், ஆக்கப்பூர்வமான சுய பரிசோதனைகள், பொருள் புரிந்து கொள்ளல், சமூக அறிவு போன்றவற்றிக்குக் காரணமான மூளையின் மற்ற பகுதிகள் யாவும் படைப்பாற்றலுக்கு உதவி செய்வது தெரிய வருகிறது. மேலும் தொடரும் ஆராய்ச்சிகள் பல இன, கால வேறுபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் எவ்வாறு படைப்பாற்றல் உருவாகிறது என்பதை விளக்குவதாய் அமைவது படைப்பாற்றல் பற்றி மேலும் அறிய வழி வகுக்கும்.
மூளையின் படைப்பாற்றல் எவ்வளவு சிக்கல் நிறைந்த செயல்பாடு என்பதை ஆராய்ச்சியாளர்கள் பலரின் மூளைகளும் இணைந்து விளக்க முற்படும் இத்தருணம் நரம்பியல் ஆராய்ச்சியில் ஒரு ஆக்கப்பூர்வமான காலக்கட்டம், இந்நேரத்தில் படைப்பாற்றல் பற்றிய நமது பழைய தகவல்களை விட்டொழித்து படைப்பாற்றல் என்பது மூளையின் பலபகுதிகளையும் உபயோகித்து உருவாகும் செயல்திறன் என்பதை உணரவேண்டும்.
Reference:
Kaufman Scott Barry , The Real Neuroscience of Creativity, August 19, 2013 , Scientific American.
http://blogs.scientificamerican.com/beautiful-minds/2013/08/19/the-real-neuroscience-of-creativity/
Note: The author of this article (Dr. Kaufman Scott Barry) granted permission to publish the translation of his work.
தேமொழி
அபிக்கு மீண்டும் வகுப்புகள் ஆரம்பித்து அதில் மூழ்கிப் போனாள். ரிக்கியின் நினைவுகள் வரும்பொழுது புத்தகங்களையே வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருப்பாள், தலையில் எதுவும் ஏறாது. ரிக்கி ஆயுள் காப்பீடு எடுத்திருந்திருக்கிறான். அந்த இழப்பீட்டுத் தொகை அவளுக்குக் கிடைத்தது. அவனுக்கு இறுதி மரியாதை செலுத்தும் பொழுது வீர வணக்கத்துடன் முக்கோண வடிவில் மடித்துக் கொடுக்கப் பட்ட தேசியக் கொடிக்கு ஒரு கண்ணாடி போட்ட முக்கோண வடிவ மரப்பெட்டியை வாங்கி அதில் கொடியைப் பத்திரப் படுத்தி ரிக்கியின் புகைப் படத்திற்கு அருகில் வைத்துக் கொண்டாள்.
நவம்பரில் ‘வெட்டரன்ஸ்’ நாள் (veterans day) என்னும் வீரர்கள் தினத்தில் ரிக்கியின் நினைவு அவளை அதிகம் வாட்டியது. அவனது பெற்றோர்களுக்கும் அப்படித்தானே இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அவர்கள் மூன்று பிள்ளைகளையுமே நாட்டுக்காக இழந்தவர்கள், அவர்களுக்கு வலி அதிகமாகத்தான் இருக்கும். ஒருமுறை அவர்களைப் போய்ப் பார்த்து வந்தாலென்ன என்று தோன்றியது. வரும் தேங்க்ஸ் கிவிங் நாளுக்கு சென்று வர விமானப் பயணச் சீட்டு ஏற்பாடு செய்து கொண்டாள். ஆனால் ரிக்கியின் பெற்றோர்களுக்கு அவள் வருவதைத் தெரிவிக்க விரும்பவில்லை. வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டால் மீறி போவது நன்றாக இருக்காது. திடீரெனப் போய் எதிரில் நின்றால் அவர்களால் தவிர்க்க முடியாது என்று அபிக்குத் தோன்றியது.
*
மரங்களில் இருந்து இலைகள் உதிரத் தொடங்கியது, குளிர் சிறிது சிறிதாக அதிகரித்தது. ரிக்கியின் தந்தை வில்லியம்ஸ் தனது சக்கரநாற்காலியை உருட்டிக் கொண்டு போர்ட்டிகோவிற்கு வந்தார். வாசலில் இருந்த பெரிய மக்னோலியா மரங்கள் ஏதோ அலுத்து சலித்துப் போனது போல அசைவற்று நின்றது. பெரும்பாலான வீடுகளின் வாசலில் தேங்க்ஸ் கிவ்விங் நாள் அலங்காரம் இருந்தது. வைக்கோல் கட்டும், சில சோளத் தட்டைகளும், சோளக் கொள்ளை பொம்மைகளும், வாசல் கதவில் அலங்கார மலர் வளையங்களும் அல்லது குறைந்தது ஒரு ஆரஞ்சு வண்ணப் பூசணிக்காயாவது இருந்தது.
வில்லியம்ஸ் குளிருக்கு இதமாக இருக்க சிவப்பு கட்டம் போட்ட ஃப்ளேனெல் முழுக்கைச் சட்டை அணிந்து, பழுப்பு கார்டுராய் கால்சராயும் அணிந்திருந்தார். மடியில் புத்தகமும், கழுத்தில் கயிற்றில் தொங்கவிடப்பட்ட படிக்கும் கண்ணாடியும் இருந்தது. ஆனால் படிப்பில் ஆர்வம் இல்லாது வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
ரிக்கியின் அம்மா இரண்டு கோப்பைகளில் சூடான மால்ட் பானமும் அதில் மார்ஷ்மல்லோ கட்டிகளை மிதக்கவிட்டுக் கொண்டுவந்தார். வில்லியம்ஸின் அருகில் இருந்த முக்காலியில் அவரது கைக்கெட்டும் தூரத்தில் கோப்பைகளை வைத்தார். தனது தோளில் போட்டு எடுத்து வந்திருந்த சால்வையை வில்லியம்ஸின் தோளில் போர்த்திவிட்டு, போர்ட்டிகோவில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டார். மனைவி வந்ததோ, அதைத் தொடர்ந்து அவர் செய்த பணிவிடைகளோ வில்லியம்ஸிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. சிலைபோலவே இறுகிய முகத்துடன் இருந்தார். அவரும் அவர் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும் குறைந்து விட்டது. ஏதோ மிச்சமிருக்கும் நாட்களை கழிக்க வேண்டுமே என்ற வெறுப்பில் நாட்களை ஓட்டும் மனப்பான்மையில் இருந்தார்கள்.
வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது இருவர் கவனத்தையும் கவரவில்லை. விமான நிலையத்தில் இருந்த ஊர்திகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வண்டியை அபியே ஒட்டிக் கொண்டு வந்திருந்தாள். வண்டியின் கதவு திறந்து சாத்தப்படும் சப்தம் கேட்டு இருவரும் ஒரு சேர திரும்பிப் பார்த்தார்கள். அவர்களைப் பார்த்து கையை அசைத்து விட்டு வண்டியின் டிக்கியில் இருந்து ஒரு பெரிய தோல் பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள் அபி. அவளைப் பார்த்து எரிச்சலடைந்த வில்லியம்ஸின் தந்தை தனது மனைவியை நோக்கித் திரும்பி, “ஏன் இந்த கறுப்பி இங்கே வந்திருக்கிறாள்? நீ ஏதும் அழைத்தாயா? என் நிம்மதியைக் குலைக்கவே பிறந்தவள் இவள். ஏதேனும் பணம் அல்லது உதவி என்று கேட்டால் துரத்திவிடு, இனி இந்தப் பக்கமே வராதே என்று எச்சரித்து விடு,” என்றார்.
அவர் பேசியது எங்கே அபியின் காதில் விழுந்துவிடுமோ என்று கலவரம் அடைந்த ரிக்கியின் அம்மா, “நான் அழைக்கவில்லை, அவள் வரப்போவது எனக்குத் தெரியாது. சரி, சரி, நீங்கள் அமைதியாக இருங்கள். இப்படிப் பேசுவது அவள் காதில் விழுந்தால் அவள் வருந்த மாட்டாளா? என்ன இருந்தாலும் அவள் நம் ரிக்கியை மணந்தவள் இல்லையா? நீங்கள் எதுவும் பேசாதீர்கள். அவளிடம் நானே பேசிக் கொள்கிறேன்,” என்று மெதுவான குரலில் அவரைக் கண்டித்து விட்டு எழுந்தார்.
“ஆமாம், இவளுடன் பேச எனக்கு என்ன இருக்கிறது?” என்று முணுமுணுத்தார் வில்லியம்ஸ். அவரது செய்கையால் ஆயாசம் அடைந்த அவர் மனைவி அவரைக் கண்களால் அடக்கிவிட்டு வாசலுக்கு வந்தார்.
“வா, அபி. என்ன இந்தப் பக்கம் நான் உன்னை எதிர்பார்க்கவே இல்லை.”
“மாம், நீங்கள் மிகவும் மெலிந்து விட்டீர்கள்,” என்று கூறிய அபி ரிக்கியின் அம்மாவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். தோளில் தொங்கிய பையை போர்ட்டிகோவின் வாசல் கதவருகில் இருந்த ஆடும் நாற்காலியில் வைத்துவிட்டு, குளிருக்காக அணிந்திருந்த அங்கியின் தலைக் குல்லாவை நீக்கிவிட்டாள்.
“மாம், திடீரென முடிவெடுத்துப் புறப்பட்டுவிட்டேன், உங்களுக்குத் தெரிவிக்க அவகாசம் இல்லாமல் போனது,” என்றவள் சக்கரநாற்காலியில் அவளை வரவேற்காமல், வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டிருந்த வில்லியம்ஸிடம் சென்று அவரையும் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
“உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது டாட்?”
வில்லியம்ஸ் அவளைத் திரும்பியும் பார்கவில்லை. அதை பொருட்படுத்தாத அபி பையைத் திறந்து அதில் ரிக்கிக்கு இராணுவ மரியாதை செய்து முக்கோணமாக மடித்து அளிக்கப் பட்ட தேசியக் கொடியை அது வைக்கப் பட்டிருந்த முக்கோண மரப்பேழையுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள்ளே சென்றாள். ரிக்கியின் அம்மாவும் அவளைத் தொடர்ந்தார்.
“அபி, குளிருக்கு இதமாக சூடாகக் குடிக்க ஒரு சாக்லேட் பானம் செய்து தருகிறேன்,” என்றவாறு சமையலறைக்குச் செல்லத் திரும்பினார்.
“வேண்டாம் மாம், நன்றி. இப்பொழுதுதான் விமான நிலையத்தில் பருகினேன், சிரமப்பட வேண்டாம், இந்தாருங்கள் இராணுவத்தினர் தந்த தேசியக் கொடி, ரிக்கியின் படத்திற்கு முன் வையுங்கள்,” என்று கொடுத்தாள்.
“நீயே வைத்துவிடு அபி.”
சுவரில் வரிசையாக மாட்டப் பட்டிருந்த படங்களில் இராணுவ உடையுடன் இருந்த ரிக்கியின் கொள்ளுத் தாத்தா, தாத்தா, பெரிய தாத்தா, அண்ணன், அக்கா, ரிச்சர்ட் என அனைவரும் அவளைப் பார்த்துப் புன்னகைப்பது போல இருந்தது அபிக்கு. பொதுவாக அனைவருக்கும் ஒரு சல்யூட் வைத்தாள். அனைவரது படங்களுக்கும் கீழே அவரவர் தேசியக் கொடி இருந்தது. ரிக்கியின் படத்திற்கு முன் இருந்த இடத்தின் கீழே மட்டும் அந்த நீண்ட ஷெல்ஃப் பலகை காலியாக இருந்தது. அபி அவன் படதின் முன்பு கொடியை வைத்துவிட்டு மீண்டும் அவனுக்கு மட்டும் ஒரு சல்யூட் வைத்தாள்.
அவன் திடீரென படத்திலிருந்து எழுந்து வந்து, அபி அவன் மீது பானம் ஊற்றிவிடுவாள் என்பது போல அச்சப்படுவதாக பாசாங்குக் காட்டி ஓடி சிரிக்க மாட்டானா என்று தோன்றியது அபிக்கு. முதல் முறை அவனைப் பார்த்த பொழுது இருந்த அதே போன்ற அவனது தனித் தன்மையான முத்திரைச் சிரிப்புடன் படத்தில் அவன் இருந்தான். அவன் படத்துக்கு ஒரு பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பிவிட்டு அபி திரும்பினாள். அவள் கண்கள் கலங்கி இருந்தது. ரிக்கியின் அம்மாவும் கண்ணைத் துடைத்துக் கொண்டார். அபி அவர் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் வெளியே வாசலுக்கு வந்தாள்.
அவளைத் தொடர்ந்த ரிக்கியின் அம்மா, “உன் படிப்பு எப்படிப் போகிறது அபி, வரும் கோடையில் முடித்து விடுவாயல்லவா?” என்றார்.
“ஆமாம் மாம். நன்றாகப் படிக்கிறேன், வரும் கோடையில் முடித்துவிடுவேன்.”
அபி பையைக் குடைந்து அதிலிருந்து சிறியகைப்பை ஒன்றை எடுத்து அதிலிருந்த ஒரு உறையை ரிக்கியின் அம்மாவிடம் கொடுத்தாள்.
“என்ன அபி இது?” என்றவாறு பிரித்தவர் அதில் உள்ள காசோலையை எடுத்துப் பார்த்தார். அதில் பெறுனர் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் வில்லியம்ஸ் என்று குறிப்பிடப்பட்டு நாநூறு ஆயிரம் டாலர்களுக்கு தொகை நிரப்பப் பட்டிருந்தது.
அவரது கேள்விக்குறியானப் பார்வையைப் புரிந்து கொண்ட அபி, “மாம், இது ரிக்கியின் உயிர்க் காப்பீட்டுத் தொகை. எனக்குச் சேரவேண்டும் என்றுக் குறிப்பிட்டு காப்பீட்டு பத்திரம் எடுத்திருந்திருக்கிறான். அதனால் எனக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது.”
“நாநூறு ஆயிரம் டாலர்களுக்கு காப்பீடா!!! இராணுவம் வழங்கும் உச்ச காப்பீட்டு அளவுத் தொகை அல்லவா இது?”
“ஆமாம் மாம். காப்பீடு செய்தது தெரியும், ஆனால் இந்த அளவுக்கு ஒரு பெரிய தொகைக்கு ரிக்கி செய்திருப்பான் என்று எனக்குத் தெரியாது.”
“அதை ஏன் நீ எங்களுக்கு எழுதிக் கொடுக்கிறாய் அபி? அவன் உன் நலனுக்காகக் கொடுத்திருக்கிறான். அவனுக்கு ஏதாவது நேர்ந்தால் நீ சிரமப் படக் கூடாது என்பது அவன் நோக்கமாக இருந்திருக்கிறது. அதை நீ எங்களுக்குத் தர நினைப்பது தவறு. உன் படிப்பு முடிந்ததும் படிப்புக்காக நீ வாங்கிய கல்விக்கடனை அடைக்கலாம், ஒரு வேலை கிடைக்கும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தைத் தள்ள உதவியாயிருக்கும். ஒரு சிறிய ஊரில் நீ வாழ நினைத்தால் தொகையில் ஒரு பகுதியைப் போட்டு சிறிய வீடும், மற்றொரு பகுதியை மூலதனமாக வைத்து உனது திட்டப்படி ஒரு தொழிலும் தொடங்க முடியும், அதனால் உன் எதிர்கால வாழ்க்கையும் சீராக அமையும், இந்தா இதைப் பிடி. ரிக்கியின் விருப்பத்துக்கு மாறாகா நீ இதைச் செய்வதோ, அதற்கு உடன்பட்டு நாங்கள் ஏற்றுக் கொள்வதோ சரியல்ல,” காசோலையை உறையில் போட்டு மீண்டும் அவளது பையிலேயே போட்டார் ரிக்கியின் அம்மா.
“இல்லை மாம். போர் முனையில் மரணம் எதிர்பார்க்கக் கூடியது என்றாலும் ரிக்கியும் இவ்வளவு சீக்கிரம் அவன் வாழ்வு முடிவடையும் என நினைத்திருக்க மாட்டான். எங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் எப்படி திட்டமிடுவானோ அது போல முன்னெச்சரிக்கையாகத் திட்டமிட்டிருப்பான் போலும். அவ்வாறு ஏதும் பிள்ளை பிறந்திருந்தால் நானே உங்களிடம் இந்தப் பணத்தைத் தர எண்ணாமல் அவன் குழந்தையின் நல்வாழ்விற்குத்தான் பயன் படுத்துவேன். ஆனால் நாங்கள் சிறிது காலம் போகட்டும் என நினைத்ததால் குழந்தைகளைப் பற்றிய எங்கள் திட்டங்கள் நிறைவேறாமல் போய் விட்டது. இவ்வளவு பணம் எனக்கு எதற்கு? எனக்கு படிப்பு இருக்கிறது, உழைக்கும் காலம் இன்னமும் நிறைய இருக்கிறது, ஆர்வமும் இருகிறது. அந்த மூலதனமே எனக்குப் போதும். என் எதிர்காலத்தை நானே எதிர்கொள்வேன். டாடும் நீங்களும் சக்கரநாற்காலியை ஏற்றி இறக்கும் ஒரு வண்டியை இதில் வாங்கிக் கொண்டால் ரிக்கி நிச்சயம் மகிழ்வான், இல்லையா?”
அபி மீண்டும் பையிலிருந்து உறையை எடுத்து ரிச்சர்டின் அம்மாவின் கையில் திணிக்க முயன்றாள். அவர் தடுத்தார்.
அபி சக்கரநாற்காலிக்கு அருகில் சென்று வில்லியம்ஸின் முன் முழங்காலிட்டு அமர்ந்தாள். அவர் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல், பொருட்படுத்தாமல் இன்னமும் சிலை போலவே அமர்ந்திருந்தார். அபி அவரது சட்டைப் பையில் உரையை மடித்துச் செருகினால். அவரது மடி மீது முகத்தைப் புதைத்துக் கொண்டு “என்னை மன்னித்துவிடுங்கள் டாட்,” என்றாள்.
அவர் மெதுவாகத் திரும்பி அவளைப் பார்த்தார். அபி தலையை உயர்த்தி கலங்கிய கண்களுடன் மீண்டும், “என்னை மன்னித்துவிடுங்கள் டாட். உங்கள் பரம்பரையின் சிறப்பைத் தொடர, உங்கள் ஆசைப்படி, இராணுவத்தில் பணியாற்ற ரிக்கியின் வாரிசை உங்களுக்கு என்னால் கொடுக்க முடியாமல் போய் விட்டது. இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்,” என்றவள் எழுந்து வில்லியம்ஸை ஆறுதலாக அணைத்து மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் டாட்,” என்று சொன்னாள்.
ஆடும் நாற்காலியில் இருந்த தனது தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டு ரிக்கியின் அம்மாவை அணைத்து அவர் கன்னத்திலும் முத்தமிட்டாள். பிறகு வாசலைக் கடந்து திரும்பிப் பார்க்காமல் வெளியேறினாள். வண்டியில் ஏறும் முன்பு கையசைத்து, “குட் பை, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் வில்லியம்ஸ்,” என்று கூறி வண்டியைக் கிளப்பிச் சென்றுவிட்டாள்.
அதுவரை டாட், மாம் என்றவள் சட்டேன்று யாரோ முன்பின் தெரியாத மூன்றாம் மனிதர்களை அழைப்பது போல மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் என்றதிலிருந்து நீங்களும் நானும் இனி யார் யாரோ, நமக்குள் இனி எந்தத் தொடர்பும் இல்லை, இனி நீங்களே அழைத்தாலும் உங்கள் வீட்டில் நான் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று அபி குறிப்பால் உணர்த்தியது ரிக்கியின் அம்மாவிற்குப் புரிந்தது. தனது மகன் அன்பு செலுத்திய ஒரே உயிரும் அவர்களை விட்டு நீங்கியது புரிந்தது. அபியின் அந்த வேதனைக்குக் காரணம் அவள் வந்த பொழுது வில்லியம்ஸ் பேசியது அவள் காதில் விழுந்து விட்டதால் என்பதும் புரிந்தது.
ஒரு தேங்க்ஸ் கிவிங் பண்டிகையில் தொடங்கிய அவளது உறவு மற்றொரு பண்டிகை சமயத்தில் முறிந்து விட்டது. அவர்கள் அவளை சரிவர நடத்தாவிட்டாலும் அவள் அந்தக் குடும்பத்திற்கு தனது நன்றியைக் காண்பித்து விட்டாள். ஒரு பெருமூச்சுடன், வேதனை நிறைந்த முகத்துடன் ரிக்கியின் அம்மா வில்லியம்ஸைத் திரும்பிப் பார்த்தார். இதுவரை சிலை போலவே இருந்த வில்லியம்ஸ் இப்பொழுது குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார்.
(முற்றும்)
படம் உதவி:
http://www.front-porch-ideas-and-more.com/image-files/thanksgiving-106.jpg
http://i.ebayimg.com/t/Flag-Display-Case-Military-Shadow-box-with-Stand-Base-for-3-X-5-flag-FC35-OAK-/24/!B8nTciQ!Wk~$(KGrHqR,!hYEze!fILZiBM3kJcVGT!~~_35.JPG
தேமொழி
அபி பால்டிமோரில் வளர்ந்தவள். ரிக்கியைவிட நான்காண்டுகள் வயதில் சிறியவள். அவளும் ரிச்சர்டும் முதலில் சந்தித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. அப்பொழுது அவள் ‘மேரிலாண்ட் பல்கலை’யின் ‘ஸ்மித் ஸ்கூல் ஆஃப் பிசினெஸ்’ஸில் நிதியியல் மூன்றாமாண்டு முடித்திருந்தாள். கோடையில் இண்டர்ன் ஆகப் பயிற்சி பெற வில்லியாம்ஸ்பெர்கில் இருக்கும் பால் காரப்பரேஷனுக்கு மூன்று மாதங்களுக்கு வேலைக்கு வந்திருந்தாள். அப்பொழுது ரிச்சர்ட் தனது படிப்பை முடித்துவிட்டு ஹாம்ப்டனில் உள்ள லேஞ்ச்லி ஏர் ஃபோர்ஸ் பேஸில் பணிபுரிந்து கொண்டிருந்தான். அந்த ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் ஹாம்ப்டனில் உள்ள ஃபோர்ட் மன்றோவில் நடந்தது. வாணவேடிக்கை, கண்ட்ரி மியூசிக் பாடகர்கள் ‘எமிலி வெஸ்ட்’ மற்றும் ‘ஜிம்மி வெய்ன்’ ஆகியோரின் சிறப்பு இசைநிகழ்சிகள் நடந்தது. அபிக்கு எமிலி வெஸ்ட்டின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதனால் அவள் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றும் இரு பயிற்சி நிலையில் பணிபுரியும் மற்ற மாணவர்களுடன் வந்து கலந்து கொண்டாள்.
எமிலி வெஸ்ட்டின் நிகழ்ச்சி முடிந்து அடுத்து ஜிம்மி வெய்னின் நிகழ்ச்சி நடந்த பொழுதுதான் ரிக்கியை முதலில் பார்த்தாள். அவன் “கவ் பாய்ஸ் அண்ட் இன்ஜின்ஸ்” பாடல் ஆரம்பித்த பொழுது உற்சாகமாகக் கூச்சலிட்டான். பிறகு தனது நண்பர்களுடன் ஆட ஆரம்பித்தான். பாடல் முடிந்ததும் பக்கச் சுவரில் முதுகைச் சாய்த்துக்கொண்டு ஒரு காலை மடக்கி சுவரில் ஊன்றி ஓய்வு எடுத்தான். அபி அவனுக்கு மேல் வரிசையில் நின்று கொண்டு லெமனேட் குடித்துக் கொண்டிருந்தாள். ‘பரவாயில்லையே நன்றாகவே ஆடுகிறான் இவன்’, என்று மனத்தில் நினைத்துக் கொண்டாள். அப்பொழுது அவளுக்கு பின் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடி விளையாடிய சிறுவர்கள் இவள் மேல் இடித்துவிட, அபியின் கையில் இருந்த லெமனேட் இருந்த காகிதக் கோப்பை அவள் கை தவறி அவன் தலையில் விழுந்து அவனை முழுக்காட்டியது. அவள் அவசர அவசரமாக மன்னிப்பு கேட்பதற்குள், ரிக்கிக்கு இது எப்படி நடந்தது எனப் புரிந்து விட்டது. ஒரே சமயத்தில் அவள் “மன்னித்துவிடுங்கள்” என்றும், அவன் “பரவாயில்லை” என்றும் சொல்லிக் கொண்டார்கள். “என்னை பானத்தால் குளிப்பட்டும் இரண்டாவது பெண் நீங்கள்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சிரித்தவாறே போய்விட்டான்.
மறுபடியும் எதிர்பாராமல் அடுத்த வார இறுதியிலும் அவனை சந்தித்தாள். இம்முறை ‘வில்லியம்ஸ்பர்க் புஷ் கார்டன்’ உல்லாசப் பூங்காவில் நண்பர்களுடன் அவள் சுற்றிக் கொண்டிருந்த பொழுது எதிர்ப்பட்டான். அந்தச் சமயமும் அவள் சோடா குடித்துக் கொண்டிருந்தாள். கையில் பானத்துடன் அவளைப் பார்த்ததும், அவன் மேல் ஊற்றிவிடுவாள் என்று அச்சம் கொண்டவன் போல சட்டென்று திரும்பி ஓடுவது போலப் பாசாங்கு செய்து அவளைப் பார்த்துச் சிரித்தான். அவளுக்கும் அவன் செய்கையைப் பார்த்து சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து சிரித்ததில் புரைக்கேறியது. பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவனிடன் தான் அவனை முழுக்கட்டிய இரண்டாவது பெண் என்று அவன் சொன்னதைக் குறிப்பிட்டு முதலாவது பெண் யாரென்று கேட்டாள். அவனும் மிக உற்சாகமாக தனது பள்ளி இறுதியாண்டு ப்ரோம் நடனத்துணை ஷெர்லி டேவிஸுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட தகராறையும், அவள் அவன் தலையில் மில்க் ஷேக் ஊற்றியதையும், நடனத் திட்டம் தடம் மாறிப் போக ப்ரோம் நடனத்திற்கு அவளது சகோதரியுடன் ஆடியதையும் விவரமாகச் சொன்னான். பின்னர் பேஸ்புக்கில் நண்பர்களானார்கள், அவ்வப்பொழுது ஒருவரை ஒருவர் ‘போக்’ செய்து கொண்டார்கள்.
அவள் தனது பயிற்சி முடிந்து, விடுமுறை முடிந்து இறுதியாண்டிற்கென மீண்டும் பல்கலை சென்ற பின்னர் அவர்களுக்குத் தங்கள் தொடர்பு சாதாரண நட்பு அளவிற்கும் மேலே சென்று விட்டது புரிந்தது. ரிக்கி அவ்வப்பொழுது வார இறுதியில் மேரிலாண்ட் வந்து அவளை சந்தித்தான். அவளை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து ஒரு மோதிரம் பரிசளித்தான். அவளும் சம்மதித்து அவள் படிப்பு முடிந்து பட்டம் வாங்கிய பின்னர் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.
அந்த ஆண்டு இறுதியல் தேங்க்ஸ் கிவ்விங் என்னும் நன்றி கூறும் விழா நடக்கும் வார இறுதியில் அவளைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவனது பெற்றோருக்கு அவளை அறிமுகப்படுத்தி அவளை மணந்து கொள்ளப் போவதாகச் சொன்னான். அவனது அப்பா வில்லியம்ஸ் கொதித்தெழுந்தார். அதற்குக் காரணம் வெள்ளை இனத்தவரான அவரால் கறுப்பினப் பெண்ணான அபியைத் தனது மருமகளாகவோ அல்லது தனது மகனின் துணையாகவோ நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவனது தாயார் அதனைப் பெரிது படுத்தவில்லை. அவர் வெள்ளை இனத்தவரானாலும் நாட்டின் வட பகுதியிலேயே பெரும்பாலும் வாழ்ந்தவர். சிக்காகோவில் பிறந்து, நியூயார்க்கில் வளர்ந்து, வாஷிங்டன் டி.சி. யில் படித்து வேலை பார்த்தவர். அப்பொழுதுதான் இராணுவத்தில் பணிபுரிந்த ரிச்சர்டின் அப்பாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து மணந்து கொண்டார். அத்துடன் இயல்பாகவே அவர் பரந்த மனத்துடன் இன வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதவர்.
ஆனால் ரிச்சர்டின் தந்தை வில்லியம்ஸின் பின்புலம் வேறு. அவர் குடும்பத்தினர் நாட்டின் தென் மாநிலங்களில் ஒன்றில் பரம்பரை பரம்பரையாகக் குடியிருப்பவர்கள். வெள்ளை இனத்தவர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று ஆழ் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டவர்கள். அப்பா வில்லியம்ஸின் தந்தையும் பெரிய தந்தையும், அதாவது ரிச்சர்டின் தாத்தாவும் பெரிய தாத்தாவும், இனவெறி கொண்ட கே.கே.கே. அல்லது ‘கு க்ளக்ஸ் கிளான்’ (KKK / Ku Klux Klan), என்ற இனவெறிக் கும்பலுடன் மறைமுகத் தொடர்பு கொண்டு ஆதரவும் அளித்ததாக அரசல் புரசலாக ஊரில் செய்திகள் உண்டு. இந்த இனவெறிக்கூட்டம் கொள்ளையர்கள் போன்று தங்கள் முகத்தைக் காட்டாமல் வெள்ளை முகமூடி அணிந்து, நீண்ட வெள்ளை அங்கி அணிந்து, கறுப்பர்களுக்கு சம உரிமை தருவதை 1950 மற்றும் 1960 களில் எதிர்த்துக் கலவரம் செய்த தீவிரவாதிகள். கறுப்பர்களைத் துன்புறுத்துவதையும், அவர்களது வீட்டு வாசல்களில் சிலுவைகளை எரித்து அச்சுறுத்துவதையும் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் அந்தக் கும்பல் பரவலாகச் செய்து வந்தார்கள். இதுபோன்ற அர்த்தமற்ற பிடிவாதப் போக்கு கொண்ட கொள்கைகளைக் கொண்ட கும்பலுடன் தொடர்பு கொண்டவர்களது குடும்பத்தோர் கறுப்பின ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதை நினைத்தும் பார்க்க முடியாதுதான்.
ஆனால் கறுப்பின ஒபாமாவை நாட்டின் அதிபதியாகத் தேர்ந்தெடுத்த இக்கால இளைஞர் கூட்டத்தைச் சார்ந்தவன் ரிச்சர்ட். அவனுக்கு ஏனோ எப்பொழுதும் இன வேற்றுமை மனதில் தோன்றியதில்லை. அபியையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தேங்க்ஸ் கிவிங் பண்டிகைக்கு அபியை அவன் அழைத்து வந்து இவள்தான் என் வருங்கால மனைவியாக வரப் போகிறவள் என்று அறிக்கைவிடுவான் என்று அவன் குடும்பத்தில் யாரும் எதிர்பாக்கவில்லை. அப்பா வில்லியம்ஸ் அபியிடம் முகம் கொடுத்து பேசவேயில்லை. ரிச்சர்டின் விருப்பம் தெரிந்தவுடன் அவனிடமும் பேச மறுத்துவிட்டார். அபிக்கு அந்தக் குடும்பப் பண்டிகை அவளது வரவால் மகிழ்ச்சி இழந்தது வருத்தமாக இருந்தது. ஆனால் ரிக்கி சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. அவளையும் அடுத்த நாளே அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். அபியிடமும், “வருந்தாதே, அவர்கள் அக்கால மனிதர்கள். பழமையிலிருந்து வெளி வர விரும்பாத அசட்டுப் பிடிவாதம் என் அப்பாவிற்கு அதிகம். நீயும் நானும் சிறியவர்கள் அல்ல. உனக்கும் எனக்கும் என்ன பிடிக்கிறது என்று நமக்குத் தெரியும். வாழ்க்கையில் எது சரி எது தவறு என்று ஆராய்ந்து பார்க்கும் அறிவு உள்ளவர்கள்தான் நாம். நமக்கு பிடித்த வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்ததில் எந்த தவறும் இல்லை,” என்று ஆறுதல் சொன்னான்.
தொடர்ந்து கோடையில் அவர்கள் திட்டப்படியே அபி பட்டம் வாங்கியதும் அவர்கள் திருமணம் நடந்தது. அபியின் குடும்பமும் உறவினர்களும், நண்பர்களும், ரிக்கியுடன் பணியாற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். அவன் பெற்றோர் திருமணத்தை புறக்கணித்து விட்டனர். அவன் தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவனது திருமண படங்களின் தொகுப்பையும் காணொளியையையும் யூ டியுப், பிக்காஸா, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொண்டு செய்தி அனுப்பினான். திருமணமான கையோடு அவனுக்கு ஆஃப்கானிஸ்தான் செல்ல வேண்டிய உத்தரவு கிடைத்தது. எனவே அவன் திரும்பி வரும் வரை குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடவும், அவள் மேல் படிப்பில் சேர்ந்து அவன் திரும்பி வருவதற்குள் அவளது படிப்பை முடிக்கவும் திட்டம் போட்டார்கள். ரிக்கிக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் ஆசை என்று அவளுக்குத் தெரியம். குழந்தை பிறக்கும் பொழுது அவன் உடன் இருப்பதை அபியும் விரும்பினாள்.
பெரும்பாலான இராணுவ வீரர்களுக்குத் தங்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுது அருகிருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. படங்களையும் காணொளிகளையும்தான் முதலில் பார்பார்கள். போர் முனையில் இருந்து வந்து சேர்வதற்குள் குழந்தை வளர்ந்திருக்கும். யாரோ மூன்றாவது மனிதரை அறிமுகப் படுத்துவது போல இதுதான் உன் அப்பா, இதுதான் உங்கள் பிள்ளை என்று அறிமுகப் படுத்த வேண்டியிருக்கும். அவர்களும் வாழ்வில் ஒரே ஒரு முறை கிடைக்கும் அறிய வாய்ப்புகளை, விரைவில் வளரும் குழந்தைகளின் முதல் மழலைச் சொல், முதல் நடை போன்ற மகிழ்ச்சி தரும் அனுபவங்களைத் தொலைத்துவிடுவார்கள். எனவே அவன் போருக்குச் சென்றதும் இவள் படிப்பைத் தொடர்ந்தாள். இருவரும் மின்னஞ்சல் மூலம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வளர்த்துக் கொண்டார்கள். மீண்டும் திருமணத்திற்கு முன் இருந்த கல்லூரி நாட்கள் போலவே காலம் சென்றது.
அவன் திரும்பி வருவதையும், அவள் பட்டம் வாங்குவதையும் ஒரு சேர்த்துக் கொண்டாட ஹவாய் அல்லது கரீபியன் தீவுகளுக்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டாடுவது, அல்லது உல்லாசக் கப்பல் பயணம் போவது, எங்கு வாழ்க்கையைத் தொடங்குவது போன்ற சிறியதும் பெரியதுமாக பலப் பலத் திட்டங்கள் இருவரிடமும் இருந்தது. ஆனால் அத்தனை திட்டங்களும் இராணுவத்தில் இருந்து ஒரு நாள் நள்ளிரவு வந்த தொலைபேசி அவசர செய்தி ஒன்றில் சிதைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியல் நிகழ்ந்த ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் விமான விபத்தில் ரிச்சர்டும் மேலும் சில வீரர்களும் இறந்து விட்டார்கள் எனவும், அவனது உடல் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு டெலாவேரில் உள்ள டோவர் ஏர் ஃபோர்ஸ் பேஸிற்கு அனுப்பிவைக்கப் படவிருப்பதை அறிவித்து வருத்தமும் தெரிவிக்கப் பட்டது. தூக்கத்தில் சிறிது நேரம் ஏதும் பயங்கரக் கனவு கண்டு கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் அபிக்கு வந்தது. அதிர்ச்சி மட்டும்தான் அவளுக்கு அப்பொழுது இருந்தது அழுகை சுத்தமாக வரவேயில்லை. நிலைமை உண்மைதான் என உணர்ந்ததும் ரிச்சர்டின் தாயைக் கூப்பிட்டு செய்தியைச் சொன்னாள். பிறகு அவனது உடலை அவன் ஊருக்கு எடுத்துச் சென்று இறுதி மரியாதை செய்வதற்கும் அடக்கம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தாள். ரிச்சர்டின் பெற்றோர்கள் அவர்கள் பங்குக்கான ஏற்பாடுகளை தங்கள் ஊரில் தயாராக செய்து வைத்திருந்தார்கள்.
அபி நேற்று இரவு ரிச்சர்டின் ஊருக்கு வந்தாள், நாளை பொழுது விடியும் முன்னரே மீண்டும் பால்டிமோருக்குப் பயணமாவாள். ஏனோ வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்தது போல, அர்த்தமில்லாமல் போனது போல உணர்ந்தாள். கைபேசியை எடுத்து மணியைப் பார்த்தாள் நள்ளிரவுக்கு மேலே ஆகியிருந்தது. இன்னமும் மூன்று மணி நேரத்தில் கிளம்ப வேண்டும். தூக்கம் வரும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. கைபேசி வழியே தனது ஃபிலிக்கர் தளத்திற்குச் சென்று தனது படங்களின் தொகுப்பில் ரிச்சர்டின் படங்களாகத் தேடித் தேடி பார்க்க ஆரம்பித்தாள், கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது, பார்வையை மறைத்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பார்ப்பதைத் தொடர்ந்தாள். ரிச்சர்டிற்குப் பிறகு கையோடு தன்னை வெட்டிவிட்ட ரிச்சர்டின் தந்தை மீதோ, அதனை மறுத்து ஏதும் செய்ய இயலாமல் கலங்கிப் போயிருந்த ரிச்சர்டின் தாயின் மீதோ அவளுக்கு ஏனோ சிறிதும் கோபமே வரவில்லை. ரிச்சர்டே போன பிறகு இவர்கள் யார் என்ற நிலைக்கு அவள் மனம் எப்பொழுதோ சென்றுவிட்டிருந்தது.
(தொடரும்)
படம் உதவி:
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQEkiA2xBeeJAprVUE2GVZSneEGljw3LMTW4BKo_2WAg9m7HKYQ
http://media2.wavy.com//photo/2009/06/09/fireworks1_20090609143951_320_240.JPG
தேமொழி
விண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு
விண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
உன் கைகொடு காலைச் சூரியனை இங்கே பிடித்திழுப்போமே
நம் கரத்திலதன் ஒளியை ஏந்தி அதைச் சுற்றியும் வீசிடுவோமே
உன் கைகொடு காலைச் சூரியனை இங்கே பிடித்திழுப்போமே
நம் கரத்திலதன் ஒளியை ஏந்தி அதைச் சுற்றியும் வீசிடுவோமே
தொடுவானமே நமதெல்லை, அதை நோக்கி பெருமித நடை போடு
தொடுவானமே நமதெல்லை, அதை நோக்கி பெருமித நடை போடு
விண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு
விண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
நம் பாரதமே
பாரதம்
குறிப்பு:
லீட் இந்தியா (Lead India, http://timesofindia.indiatimes.com/ileadindia.cms) வெளியிட்ட , இந்தியாவின் புதிய தேசிய கீதம் என்ற புகழினைப் பெற்ற “டும் சலோ டு ஹிந்துஸ்தான் சலே” (Tum Chalo to Hindustan Chale) என்றப் பாடலை மொழி பெயர்க்கும் எனது முயற்சியில் உருவான கவிதை.
Tum chalo, to hindustan chale – Lyrics
Falak pakad ke utho, aur hawa pakad ke chalo
Falak pakad ke utho, aur hawa pakad ke chalo
Tum chalo, to hindustan chale
Tum chalo, to hindustan chale
Tum chalo, to hindustan chale
Tum chalo, to hindustan chale
Lagao haath ke suraj subah nikala karein,
Hatheliyon bhare dhoop aur uchhala karein,
Lagao haath ke suraj subah nikala karein,
Hatheliyon bhare dhoop aur uchhala karein,
Ufaq pe paav rakho, aur chalo akad ke chalo,
Ufaq pe paav rakho, aur chalo akad ke chalo,
Falak pakad ke utho, aur hawa pakad ke chalo,
Falak pakad ke utho, aur hawa pakad ke chalo,
Tum chalo, to hindustan chale
Tum chalo, to hindustan chale
Hndustan chale
Chalo
Tum chalo, to hindustan chale – English Translation
Hold the sky to stand, and walk with the wind in your hands,
Hold the sky to stand, and walk with the wind in your hands,
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Lend your hand to pull out the Sun in the morning,
Fill your hands with sunlight, and throw it around,
Lend your hand to pull out the Sun in the morning,
Fill your hands with sunlight, and throw it around,
Keep you legs on the horizon, and walk with pride,
Keep you legs on the horizon, and walk with pride,
Hold the sky to stand, and walk with the wind in your hands,
Hold the sky to stand, and walk with the wind in your hands,
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Hindustan (India) walks with you.
காணொளி:
குறிப்பு: “Ads by Google” என்பதனை நீக்கினால்/குறைத்தால் காணொளியில் தமிழில் பாடல் வரிகளைக் காணலாம்.
வரிகள் உதவி:
http://info.w3calculator.com/free-code/lyrics/indias-new-anthem-tum-chalo-toh-hindustan-chale/
தேமொழி
“மிஸ்ஸிஸ் வில்லியம்ஸ் உங்கள் வண்டி வரும் என்று காத்திருக்கிறீர்களா? உங்களுக்கு உதவ எங்களை அனுமதிப்பீர்களா?” என்ற குரல் கேட்டு அபி திரும்பினாள். வாட்ட சாட்டமான உருவத்துடனும், துக்கத்தை அனுசரிக்க கருப்பு ஆடை அணிந்திருந்த ஒரு சிறுவனையும் சிறுமியையும் இருகைகளிலும் பிடித்துக் கொண்டு கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவள் அவமானப் படுத்தப்பட்டு விட்டுச் செல்லப்பட்டதைப் பார்த்திருந்தாலும், அது தனக்குத் தெரியாதது போல நாகரிகமாக கேள்விகளை எழுப்பிய அவர் மேல் அபிக்கு ஒரு மரியாதை வந்தது.
“என் பெயர் அபிகெயில்… அபி என்று எல்லோரும் அழைப்பது போலவே நீங்களும் கூப்பிடுங்கள், நீங்கள்…உங்கள் பெயர் மிஸ்டர் …” என இழுத்தாள்.
“என் பெயர் தாமஸ் ஜோன்ஸ், டாமி என்று என்னை எல்லோரும் அழைப்பது போலவே நீங்களும் கூப்பிட்டால் மகிழ்ச்சி அடைவேன். இது எனது மகள் கேண்டிஸ்ஸும், மகன் கேரியும்,” என அறிமுகப் படுத்தினார்.
சிறுவர்கள் இருவரும் அபியின் கையைக் குலுக்கினர். அபிக்கு வழிகாட்டியவாறு தனது வண்டியை நோக்கி நடந்த டாமி, தான் ரிச்சர்டின் பள்ளிநாட்களின் நண்பன் என்றும், இப்பொழுது மாநிலத்தின் பல்கலைக்கழகக் கால்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளர் என்றும் தன்னை அறிமுகப்டுத்திகொண்டார். டாமியும் அபியும் முன்னிருக்கையிலும், குழந்தைகள் பின்னிருக்கையிலும் அமர்ந்து கொள்ள, டாமி நகரை நோக்கி வண்டியைச் செலுத்தினார்.
“உன்னை எங்கே இறக்கிவிடவேண்டும் அபி?”
“நான் விடுதியில் இருந்து தேவாலயத்திற்கு வாடகை வண்டியில்தான் வந்தேன், அங்கிருந்து மயானத்திற்கு ரிச்சர்டின் பெற்றோர்களுடன் வந்தேன், என்னை நான் தங்கும் விடுதியிலேயே இறக்கிவிட்டால் நலம், விமானநிலையதிற்கு அருகில் இருக்கும் ‘ஹாலிடே இன்’னில் தங்கியிருக்கிறேன்.”
“திரும்பவும் எப்பொழுது ஊருக்குப் போகிறாய்? எங்கள் வீட்டிற்கு வர நேரமிருக்குமா?”
“வரவேற்பிற்கு வந்தனம் டாமி, ஆனால் நாளை அதிகாலை விமானப்பயணத்திற்கு திரும்பிச் செல்லும் பயணச்சீட்டை பதிவு செய்திருப்பதால் இம்முறை வர இயலாது, அடுத்தமுறை பார்ப்போம். சொல்லு டாமி, இதுவரை ரிச்சர்ட் தனக்கு ஒரு கால்பந்தாட்டக் குழு பயிற்சியாளர் நண்பன் இருந்ததைச் சொன்னதில்லையே!”
“இல்லை, இது எனது புதிய பணி அபி. பணியில் சேர்ந்து ஓராண்டுதான் ஆகிறது. எனது பின்புலம், கல்லூரியில் படித்தது எல்லாம் கணினி அறிவியல். கணினி நிரல்கள் எழுதுவதில் எனக்கு விருப்பம் அதிகம். ஆனால் பள்ளி நாட்களில் இருந்து கால்பந்தாட்டத்தில் சூரன். அதனால் நல்ல நிதியுதவி பெற்று புகழ் பெற்ற பல்கலையில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பிறகு புகழ் பெற்ற சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனம் ஒன்றில் நல்ல ஊதியத்தில் ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. ஆனால் மனிதரை மனிதர் காலை வாரிவிடும் வணிக நிறுவனங்களில் என்னால் ஆர்வத்துடன் வேலை செய்ய முடியவில்லை. என் கனவு, குறிக்கோள் எல்லாம் கால்பந்தாட்டம்தான். அதனால் இந்த மாநிலப் பல்கலையில் பயிற்சியாளராக பணி புரிய ஒரு வாய்ப்பும் கிடைத்ததால் மீண்டும் ஊருக்கே வந்துவிட்டேன்.”
“அதனால் என்ன டாமி? வாழ்க்கையில் உனக்குப் பிடித்த பாதையில் நீ பயணம் செய்கிறாய், அதுதானே முக்கியம். அத்துடன் மாநில அரசுப்பணிகளில் அதிக ஊதியம் பெறுபவர்கள் பல்கலைகளின் கால்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளர்கள்தானே. ஊதியத்தைப் பொறுத்தவரை நீ அதிகமாக தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்காது. உன் திறமை சரியாக வெளிப்பட்டால் பெரிய தேசிய அளவு குழுக்களிலும் நீ இடம் பெற வாய்ப்பும் கிடைக்கலாம், அப்படி கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அப்படி நடந்தால் தொலை காட்சியில் கால் பந்தாட்ட வீர்களிடம் நீ தொண்டை கிழியக் கத்துவதையும், அடுத்த பந்துகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குப் படம் போட்டு விளக்கித் தலை தலையாக அடித்துக் கொள்வதையும் பார்த்து ரசிக்கலாம் அல்லவா?” என்று அபி சிரித்தாள். “ஆனால் உன் கணினி நிரல்கள் எழுதும் திறமை வீணாகிறதே என்றுதான்…. என்று இழுத்தவள், திடீரென நினைவு வந்தவளாக, முகம் பளீரிட இரு…இரு … நீதானே பள்ளி இறுதி ஆண்டின் ப்ரோம் நடனத்தில் உன் நடனத் துணையை ரிச்சர்டுக்கு மாற்றிக் கொடுத்து உதவி செய்த டாமி?” என்றாள்.
“ஹ..ஹா..ஹா..” என்று சப்தமாகச் சிரித்த டாமி, “உனக்கு அதை ரிக்கி சொல்லியிருந்தாலும், நீ மறக்காமல் நினைவு வைத்திருப்பதுதான் ஆச்சரியம்” என்றான். பிறகு பள்ளி நாட்களை நினைத்து அவன் முகம் மலர்ந்தது.
“ஷெர்லி டேவிஸ், ஆஷ்லி டேவிஸ் என்ற சகோதரிகள் இருவர், இரட்டையர்கள்” என்றாள் அபியும் புன்னகைத்தப்படி.
“அட, பரவாயில்லையே, உனக்கு நல்ல ஞாபக சக்திதான் அபி,” என்று புருவத்தை தூக்கி கண்கள் விரிய வியந்தான் டாமி. “ஆமாம், இந்த ஷெர்லி ரிக்கியின் தோழி. பள்ளி இறுதியாண்டு ப்ரோம் நடனத்தின் போது அவனது நடனத்துணையாக ரிக்கியுடன் அவள் நடனமாட ஒருவருக்கொருவர் முடிவு செய்திருந்தார்கள். அவள் சகோதரி ஆஷ்லி என் நடனத் துணைவி. அந்த பள்ளி நாட்களின் இறுதி வாரத்தில் ஒருநாள் நாங்கள் மெக் டானால்ட்ஸ் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று அரட்டை அடித்தவாறே கொறித்துக் கொண்டிருந்தோம். பேச்சு அப்படியே அரசியல் பக்கம் போயிற்று. அப்பொழுது குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் இரண்டாம் முறையும் அதிபராக விரும்பி அதற்குப் போட்டியிட்டு ஜார்ஜ் புஷ் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கிட்டத் தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. ஷெர்லி ஒரு தீவிரக் குடியரசுக் கட்சி ஆதரவாளி, ரிக்கியும்தான். நானும் ஆஷ்லியும் மக்களாட்சி கட்சியின் ஆதரவாளர்கள் என்றாலும் அரசியலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ரிக்கி அன்று ஏதோ ஒரு உற்சாகமான மனநிலையில் இருந்தான். தேர்தலைப் பற்றியும் புஷ்ஷின் திறமை பற்றியும் ஷெர்லி ஆவலுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இவன் குறுக்கே குறுக்கே இடக்காகப் பேசி, புஷ் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர், போன தேர்தலிலேயே ஃப்ளோரிடாவில் மீண்டும் மீண்டும் வாக்குகளை எண்ணித்தான் அதிபரானார். இந்த முறை எத்தனை தடவை வாக்குகளை எண்ணித் தொலைய வேண்டுமோ இவரை மீண்டும் அதிபராக்க என்றெல்லாம் கூறி அவளைச் சீண்டிவிட்டுக் கொண்டே இருந்தான். அவளுக்கோ கோபம் ஏறிக் கொண்டே போனது. இறுதியில் அவனது சீண்டலைத் தாளமுடியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஃப்ரென்ச் ஃப்ரயை அவன் முகத்தில் விட்டெரிந்து, குடித்துக்கொண்டிருந்த மில்க் ஷேக்கை அவன் தலையில் கொட்டி முழுக்காட்டி விட்டு வெளியேறிவிட்டாள். பிறகு அவனுடன் முகம் கொடுத்தும் பேசவில்லை. ரிக்கி விளையாட்டுக்குத்தான் சொன்னேன் என்று சமாதானப் படுத்தியும் பார்த்தான். ம்ம்ம்ஹூம்… அவள் கோபமே குறையவில்லை. பிறகு ரிக்கிக்கும் அவளது அடம் கோபத்தை ஏற்படுத்தியது. எப்படி இவர்கள் இணைந்து நடனமாடப் போகிறார்கள் என்று நண்பர்கள் நாங்கள் பேசிக் கொண்டோம். அது போலவே இருவரும் எனக்கு நடனத் துணையாக நீ தேவையில்லை என்று ஒருவருக்கொருவர் அறிக்கை விட்டுப் பள்ளியில் களேபரம் செய்தார்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் தங்களது நடனத் துணை யாரென்று அச்சாரம் செய்து விட்டதால் கடைசி நேரத்தில் மாற்று நடனத் துணையும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. கடைசியில் நானும் ஆஷ்லியும் ஆள் மாற்றிக் கொண்டு அவர்களுக்கு உதவ முன் வந்தோம். ரிக்கியும் ஆஷ்லியும், நானும் ஷெர்லியும் அந்த விழாவில் ஒருவருக்கொருவர் துணை”, என்றான் டாமி சிரித்தவாறு.
ரிக்கியே இதனைப் பலமுறை அபியிடம் சொல்லியிருக்கிறான். இன்று டாமியும் அதையே ஆர்வத்துடன் சொல்லும் பொழுது அபி வியப்புடன் குறுக்கிடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நண்பர்கள் கூட்டம் அனைவருக்கும் இது பசுமை மாறாத நிகழ்ச்சியாக இருப்பதைப் புரிந்து கொண்டாள். “இப்பொழுது அந்த சகோதரிகள் எங்கே இருகிறார்கள் டாமி?”
“ஹ்ம்ம்… அவர்கள் அப்பாவிற்கு பிட்ஸ்பர்கில் வேறு ஒரு நல்ல வேலைக் கிடைத்ததும் குடும்பத்துடன் குடி பெயர்ந்தார்கள். ஷெர்லியும் ஆஷ்லியும் அங்கேயே பல்கலையில் படிப்பைத் தொடர்ந்தார்கள். பிறகு எங்களுக்குள் தொடர்பு விட்டுப் போயிற்று. ஃபேஸ்புக்கில் நானும் சில நண்பர்களும் அவர்களைத் தேடினோம். அடுத்த ஆண்டு பள்ளியில் நாங்கள் பட்டம் பெற்ற பத்தாமாண்டு விழா வருகிறது. அதனால் வகுப்புத் தோழர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டோம். இந்தப் பெண்களைத் தேடிக் கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது. திருமணமானதும் தனது கணவர்களின் குடும்பப் பெயருக்கு மாறிவிட்டார்கள். அதனால் சிரமம். உனக்குத் தெரியுமோ? அவர்கள் இருவருக்கும் மீண்டும் இரட்டைக் குழந்தைகள். ஆளுக்கு இரண்டு இரண்டு பையன்கள்.”
“இதைக் கேட்டால் ரிக்கி மிகவும் மகிழ்ச்சி அடைவான்” என்றாள் அபி. பிறகு தான் பேசியதில் உள்ள தவறு அவளுக்குப் புரிந்தது. “இதைக் கேட்டிருந்தால் ரிக்கி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பான், இல்லையா டாமி?” என்று கரகரத்த குரலில், கலங்கிய கண்களுடன் பரிதாபமாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.
அவளது கலங்கிய முகத்தை திரும்பிப் பார்த்த டாமி, இடது கையால் வண்டியை ஓட்டிக் கொண்டே வலது கையால் அவளது முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். அவளது கண்ணீர் அவனையும் கண் கலங்கச் செய்தது. தொண்டையைச் செருமிக் கொண்டு சாலையில் கவனமாக இருப்பவன் போல முகத்தைத் திருப்பிக் கொண்டான். பிறகு சோகமான குரலில், “உனக்கு ஒன்று தெரியமா அபி, பிற்காலத்தில் வாழ்வில் சிறந்த சாதனைகள் செய்யப் போகிறவனாக அவனை மாணவர்கள் நாங்கள் யாவரும் தேர்ந்தெடுத்தோம். அது கனவாகப் போய்விட்டது.”
“ஆமாம், நானும் உங்கள் பள்ளியின் ஆண்டு மலரில் பார்த்திருக்கிறேன், உன்னையும் நீ பெரிய பில்கேட்ஸாகவோ, ஸ்டீவ் ஜாப் ஆகவோ வரப் போகிறவன் என்றும் குறிப்பிட்டிருந்தது. அந்த ஆண்டு மலரில் உன் படத்தையும் பார்த்திருக்கிறேன். அப்பொழுது தலை நிறைய சுருள் சுருளான கருகரு முடியுடன் ஒடிசலாக இருந்தாய். இப்பொழுது மொட்டைத் தலையுடன், சிறிது எடையும் போட்டு ஆளையே அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.”
“அடுத்த ஆண்டு நடக்கப் போகும் பத்தாண்டு சந்திப்பில் என்னை யாருக்கும் அடையாளம் தெரியப் போவது இல்லை எனத் தெரிகிறது, இல்லையா அபி? ஆனால் எங்களுடன் ரிக்கி அந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதை நம்புவது எனக்குச் சிரமமாக இருக்கிறது,” என்றான் கம்மியக் குரலில். சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தார்கள். ரிக்கியைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க எண்ணினார்கள். வண்டியில் பெருத்த அமைதி நிலவியது. சிறுவர்களும் அவர்களது உரையாடலில் குறுக்கிடாமல், தொந்தரவு செய்யாமல் அமைதி காத்தார்கள். அபி பேச்சை மாற்ற எண்ணி அவர்கள் நல்ல பிள்ளைகளாக நடத்து கொள்வதற்கு அவனையும் சிறுவர்களையும் பாராட்டினாள்.
“எல்லாம் எனது அம்மா… அவர்களது பாட்டியின் கண்டிப்பான வளர்ப்பு செய்யும் மாயம். அவர்கள் நல்லொழுக்கதிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதனால் நானும் என் மனைவியும் அவர்கள் வளர்ப்பில் குறுக்கிடுவதே இல்லை,” என்றான் பெருமையாக. பிறகு “நீ இப்பொழுது என்ன செய்கிறாய் அபி, எங்கிருக்கிறாய்?” என்றான்.
“எனது மேல்படிப்பு முடிய இன்னமும் ஒரு ஆண்டு இருக்கிறது. நிர்வாக இயலில் நிதிநிர்வாகத்தை சிறப்புப் பாடமாகப் படிக்கிறேன். இப்பொழுது நியூ யார்க்கில் உள்ள வால்ஸ்ட்ரீட் நிதி நிறுவனம் ஒன்றின் கிளையில் கோடைகாலத்தில் செயல்முறைப் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு பட்டம் பெற்றதும் பிரபல நிதி நிறுவனங்கள் ஒன்றில் உதவியாளராக சிறிது காலம் பணி புரிய உத்தேசம். தேவையான அனுபவம் கிடைத்ததும் சேமிப்பு, பங்கு முதலீடு போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்கும் நிதி ஆலோசகராக சொந்தத் தொழில் செய்யும் திட்டம் இருக்கிறது.”
“என் உத்தியோக வருமானங்களை ஒப்பிட்டு நீ கருத்து சொன்ன பொழுதே நினைத்தேன், நீ இவ்வாறு நன்கு பொருளாதார ரீதியில் ஆராய்ந்து முடிவெடுப்பவள் என்று. பணத்தின் மதிப்பை நன்கு உணர்ந்தவள் என்று சொல், நல்ல திட்டம்தான். நீ தொழிலை ஆரம்பித்ததும் சொல், நான் உன் வாடிகையாளராகாச் சேர்ந்து பயன் பெறுகிறேன். முதலில் ஃபேஸ்புக்கில் நாம் நண்பர்களாக மாறுவோம்” என்றான். சிறிது நேர அமைதிக்குப் பிறகு திடீரென, “அப்பா வில்லியம்ஸிற்கு ரிக்கி உன்னை கலப்பு மணம் செய்து கொண்டதில் வருத்தம் என்பது இங்கு அவன் நண்பர்கள் யாவருக்கும் ஓரளவுக்குத் தெரியும். ஆனால் இன்று நடந்ததற்கு அவர் மீது வருத்தம் கொள்ளாதே. பக்கவாதத்தினால் முடக்கப்பட்ட வாழ்க்கை, மகனின் இழப்பு, நிதிநிலைமை சரியில்லை என அடிமேல் அடி. ஏற்கனவே அவர் கொஞ்சம் முசுடு என்பது பலருக்கும் தெரிந்த உண்மை,” என்றான்.
“என்ன நிதி நிலைமை சரியில்லையா?”
“ஆமாம், ஏகப்பட்ட மருத்துவச் செலவு என நினைக்கிறேன், அத்துடன் வசிக்கும் வீட்டின் மேலும் கடன் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. கடன் அட்டையிலும் இனி வாங்க முடியாத நிலை. இது எனக்கு எதேச்சையாகத் தெரிந்தது. எனது தம்பி பல்கலையில் படிப்பவன் அவ்வப்பொழுது கிடைக்கும் பகுதி நேர வேலை செய்து படிப்புக்குப் பணம் சேர்ப்பான். வில்லியம்ஸிற்கு சக்கர நாற்காலி வாழ்க்கை என்றதும் அவர்கள் வீட்டில் பல மாறுதல்கள் செய்ய வேண்டி வந்திருக்கிறது. கட்டுமானப் பணியில் இவனும் ஈடுபட்டிருந்தான். வாசலில் சக்கரநாற்காலிக்குத் தோதாக சரிவு அமைப்பது, சில வாசல்களை அகலப் படுத்துவது, குளியலறையை மாற்றுவது போன்ற வேலைகள். அப்பொழுது ஒருமுறை அவரும் அவர் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றுவிட, தம்பியும் அவன் நண்பர்களும் வீட்டில் தனியாக வேலை செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். தொலைபேசியில் பல அழைப்புகள் வந்ததாம். செய்திப் பெட்டியில் செய்திகள் விட்டுச் சென்றவர்களில் இருந்து அழைத்தவர்கள் கடனை வசூல் செய்ய நெருக்கடி கொடுத்து, கிட்டிபோட்டு கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் என்று தெரிந்திருக்கிறது. தம்பி சொல்லித்தான் எனக்குத் தெரியும். என்ன செய்வது வயதான பின்பு நோய் என ஏதும் வந்தால் சிரமம்தான். மருத்துவச் செலவுகள் செய்துக் கட்டுப்படியாகாது. வில்லியம்ஸிடம் வசதியாக சக்கரநாற்காலியை ஏற்றி இறக்கும் வாகனமும் இல்லை. ஒவ்வொருமுறை வெளியே செல்ல வாடகைக்கு வண்டி எடுக்க வேண்டியிருக்கிறது. சொந்த வண்டி இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி வெளியே போய் வர வாய்ப்பிருக்கும். அவ்வாறு செல்வது மனச்சுமையைக் குறைக்கும். எப்பொழுதும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். போதாக்குறைக்கு அடிமேல் அடி விழுகிறது அவர்களுக்கு. மனிதர் வெறுப்பின் உச்சத்தில் இல்லாமல் வேறு எப்படி இருப்பார்?”
அபி மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ரிக்கியின் அம்மா அப்பாவின் நிலையை நினைத்து, வயதான காலத்தில் பிள்ளைகள் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு, உதவிக்கு யாரும் இன்றி, கடனுடனும் நோயுடனும் போராடிக் கொண்டு எவ்வளவு சிரமமாக இருக்கும் என்று தோன்றியது. அவர்கள் நிலைமையை மனிதாபிமானத்துடன் நோக்கி அவர்களுக்காக வருந்தியும் பரிந்தும் பேசும் டாமியின் மீது அவளுக்கு மதிப்பு அதிகமாகியது. அவளை அவளது விடுதியில் விட்டுவிட்டு டாமியும் அவன் குழந்தைகளும் சென்றுவிட்டார்கள். அறைக்கு சென்று அபி விட்டத்தைப் பார்த்துக் கொண்டு ரிக்கியை நினைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அவளுக்கு உறக்கம் வரவில்லை. அவளுக்குரியவன் நகரில் மற்றொரு மூலையில் பெட்டிக்குள், தரைக்கடியில் மீளாத் துயில் கொண்டு இவள் வேதனையை பற்றிச் சிறிதும் அறியாமல் இருப்பதும், இவள் நகரின் மற்றொரு மூலையில் அவனை நினைத்து அழுது கொண்டிருப்பதும் நடக்கப் போகிறது என்று சென்ற வாரம் வரை அவள் நினைத்திருக்கவில்லை. அவனும் அவளும் சேர்ந்து கண்ட கனவுகளும், போட்ட திட்டங்களும் இப்பொழுது அர்த்தம் இல்லாமல் போனதை அவளால் நம்பமுடியவில்லை.
(தொடரும்)
படம் உதவி:
http://www.road-reality.com/wp-content/uploads/2010/03/2011-Lincoln-MKZ-Hybrid-02.jpg
http://mvgazette.com/sites/default/files/article-assets/main-photos/2012/ia_prom_dance.jpg
தேமொழி
அந்த சிறிய சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்களின் கையில் அமெரிக்க தேசியக் கொடிகள் படபடத்துக் கொண்டிருந்தது. வயது வித்யாசமின்றி அனைவரும் கையில் ஆளுக்கொரு வாசகங்கள் எழுதிய அட்டையையோ, தேசியக் கொடியையோ ஆட்டியவண்ணம் இருந்தனர். ‘உன்னை மறக்க மாட்டோம் ரிச்சர்ட்’, ‘உன் ஆன்மா சாந்தி அடையட்டும்’, ‘நீ எங்களை பெருமை அடைய செய்துவிட்டாய், ‘நீ ஒரு சிறந்த வீரன் ரிக்கி’, என தங்கள் மனதில் ரிச்சர்டைப் பற்றி எழுந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுத்த அட்டையை ஏந்திக்கொண்டு அவன் மறைந்த துக்கத்தை அனுசரித்துக் கொண்டிருந்தார்கள்.
வெய்யிலுக்கு கண்ணைச் சுருக்கிக் கொண்டிருந்த அனைவரது கண்களும் அந்த ‘ஃபர்ஸ்ட் பாப்டிஸ்ட் சர்ச்’ என்ற தேவாலயத்தின் வாசலையே நோக்கிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் சோகத்தால் யாரும் உரத்து பேசாமல் கிசு கிசு என்று பேசிக் கொண்டிருதாலும் அதுவும் ஒரு கசமுசா சத்தத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. தேவாலயத்தின் உள்ளே இராணுவ வீரர்களும், மிக முக்கிய உறவினர்களும், நண்பர்களும் ரிச்சர்டின் இறுதி சேவையில் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். தேவாலயத்தின் வாசலுக்கு இருபுறத்திலும் மக்களின் ஊர்திகள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு அரை மைல் தொலைவிற்குச் சாலை வெறிச்சோடி இருந்தது. தேவாலயத்தின் வாசலில் ஒரு கருப்பு அமரர் ஊர்தியும், அதன் அருகில் இரு இராணுவ வீரர்கள் மட்டுமே இருந்தார்கள்.
ரிச்சர்ட் வில்லியம்ஸ் பிறந்து வளர்ந்து படித்த ஊர் அது. பல தலைமுறைகளாக அவன் குடும்பம் அங்கிருப்பதால் பெரிய உறவினர் கூட்டமும், கணக்கிடலங்கா நண்பர்கள் கூட்டமும் அந்த ஊரில் இருந்தனர். அனைவருக்கும் ரிச்சர்ட் தனது முப்பது வயது தாண்டுவதற்குள் இறந்தது அதிர்ச்சியைத் தந்தது. வில்லியம்ஸ் குடும்பம் தீவிர நாட்டுப் பற்று உள்ள குடும்பம். அப்பா வில்லியம்ஸ் தனது பரம்பரையில் அனைவரும் அமெரிக்க இராணுவப் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பதில் அளவிட முடியாப் பெருமை கொண்டவர். வில்லியம்ஸின் தாத்தா இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர். வில்லியம்ஸின் தந்தை வியட்நாம் போரிலும், வில்லியம்ஸின் பெரியப்பா கொரியன் போரிலும் பங்கேற்றவர்கள். வில்லியம்ஸும் அவரது சகோதரர்களும் ஈராக் போரிலும், ஆபரேஷன் டெசெர்ட் ஸ்டார்மிலும் (Operation Desert Storm) பங்கேற்றவர்கள்.
தனது மகன்களும் மகளும் அதுபோன்றே தங்கள் பரம்பரைப் பெருமையைக் காக்கும் வண்ணம் இராணுவத்தில் சேர்ந்தது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. முதல் மகனும், அடுத்த மகளும் ஆபரேஷன் அனகொண்டா (Operation Anaconda) வில் பங்கேற்று ஆப்கானிஸ்தான் சென்றார்கள், ஒருவர் கண்ணிவெடிகுண்டில்(landmine) சிதற, மற்றவர் தற்கொலைப்படைத் தாக்குதலில் (suicide attack) உயிர் இழந்ததற்கு வில்லியம்ஸ் மிக வருந்தினாலும், அதனால் அவர் அசரவில்லை. அடுத்து ரிச்சர்ட் தானும் இராணுவத்தில் சேரப்போகிறேன் என்றதும் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார். சென்ற வாரம் அவனும் சில வீரர்களும் பயணித்த ‘ப்ளாக் ஹாக்’ (Black Hawk) ஹெலிகாப்டர் விமானம் கிழக்கு ஆஃப்கானிஸ்தான் பகுதியில் விபத்திற்குள்ளாகி வீரர்கள் அனைவரும் அதில் உயிரிழந்தனர். இராணுவம் இன்னமும் விபத்தின் காரணத்தைப் பற்றிய விசாரணையை முடிக்கவில்லை. இராணுவத்தினர் ரிச்சர்டின் உடலைச் சவப் பரிசோனைக்குப் பிறகு இன்று குடும்பத்திடம் ஒப்படைத்து தங்கள் இறுதி மரியாதையை செலுத்த வந்துள்ளனர். இனி தனது பரம்பரையில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றுவதைத் தொடர யாரும் இல்லை என்ற அதிர்ச்சியிலும், இருந்த ஒரே மகனையும் பறிகொடுத்ததில் அப்பா வில்லியம்த் மிகவும் ஆடிப்போயிருந்தார். சிறிது நாட்களுக்கு முன்தான் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் போனார். இப்பொழுது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
தேவாலயத்தின் கதவு திறந்தது. அனைவரும் தங்கள் பேச்சுக்களை நிறுத்தியதால் அந்தஇடத்தில் பேரமைதி நிறைந்தது. ரிச்சர்ட் விமானப் படையில் இருத்தால், விமானப்படை வீரர்கள் ஆறு பேர், சவப் பெட்டியைச் சுமக்கும் ‘பால் பியரர்ஸ்’ ஆக, பக்கத்திற்கு மூவராக, அமெரிக்கக் கொடி போர்த்திய அவனது சவப் பெட்டியைச் சுமந்து கொண்டு மிகவும் விறைப்பாக அணிவகுத்து வந்தனர். அவர்களுக்கு முன் புறம் ஒரு வீரரும் பின் புறம் ஒரு வீரரும் அவர்களைப் போலவே விறைப்பாக நடந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னர் கருப்பு ஆடைகளும் தொப்பிகளும் அணிந்த நண்பர்களும், உறவினர்களும் கண்களைத் துடைத்துக் கொண்டு வந்து நின்றனர். உள்ளூர் தொலைக்காட்சி நிலைய படம் பிடிப்பவர்களும், செய்தியாளர்களும் மட்டுமே சிறிது அங்கும் இங்கும் ஓடிப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
சவப்பெட்டியைச் சுமந்து வந்த வீரர்களில் இரு பெண் வீராங்கனைகளும் இருந்தார்கள். அனைவரும் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து, படிப்படியாக ஐந்து முறை திரும்பி, 90 பாகையில் நேர் செங்குத்தாகத் திரும்பி மீண்டும் விறைப்பாக நடந்து அமரர் ஊர்தியில் சவப் பெட்டியை ஏற்றினார்கள். பிறகு வண்டியின் இரு பக்கமும் பக்கத்திற்கு நால்வராக அணிவகுத்து விரைந்து நடந்து, வண்டியைதாண்டியதும் வரிசை கலைந்து ஓடிப்போய் தேவாலய ஊர்திகள் நிறுத்துமிடத்தில் இருந்த தங்கள் இராணுவ வண்டியில் ஏறிக் கொண்டார்கள். எங்கிருந்தோ சொல்லி வைத்தது போல உச்சியில் விளக்குகள் மின்ன காவல்துறை ஊர்தியும், அதற்கும் முன் இரு மோட்டார்பைக் காவலர்களும் திடுமெனத் தோன்றி அமரர் ஊர்தி முன்னர் தங்கள் ஊர்திகளை நிறுத்திக் கொண்டனர்.
இதற்குள் ரிச்சர்ட் குடும்பத்தின் உறவினர்களும் நண்பர்களும் ஊர்திகள் நிறுத்துமிடத்திற்குச் சென்று தங்கள் வண்டிகளில் ஏறிக் கொண்டார்கள். சக்கரநாற்காலியில் அப்பா வில்லியம்சைத் தள்ளி வந்த ரிச்சர்டின் அம்மாவும், ரிச்சர்டின் மனைவி அபியும் அவருக்காக பிரத்யேகமாக தருவிக்கப்பட்ட, சக்கர நாற்காலியை ஏற்றும் வாடகை வேன் அருகில் வந்ததும் அதில் அவரை ஏற்றினார்கள். அப்பா வில்லியம்ஸுடன் அம்மா பின்னால் அமர்ந்துகொள்ள, அபி முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ளவும் வண்டி புறப்பட்டது. தேவாலய வாசலில் நின்ற அனைவரும் அமைதியாக கொடிகளை அசைத்தனர். முன்னால் காவலர்களின் வண்டிகள், ரிச்சர்டின் அமரர் ஊர்தி, இரு இராணுவ வாகனங்கள், தொடர்ந்து ரிச்சர்டின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஊர்திகள் என ஊர்வலம் நகரின் மற்றொரு புறத்தில் இருந்த மயானத்தை நோக்கி ஊர்ந்தது. சாலையின் போக்குவரத்து சிறிது தடங்கலுற்றது. காவலர்களின் சைகைக்கு காத்திராமல் இறுதி ஊர்வலம் என்று தெரிந்த உடனேயே ஊர்திகளில் சென்றவர்கள் தானாகவே சாலையில் ஓரங்கட்டி வழி விட்டனர். வழியில் நின்ற பேஸ் பால் கேப் தொப்பிகள் அணிந்திருந்த ஒரு சில இளைய தலைமுறையினரும் தொப்பிகளை அகற்றி தலைகுனிந்து அஞ்சலி செலுத்தினர்.
வில்லியம்ஸின் வண்டி ரிச்சர்ட் படித்த பள்ளியை நெருங்கியது. பள்ளியின் வாசலில் உள்ள அறிவிப்புப் பலகையில், “உன் ஆன்மா சாந்தி அடையட்டும் ரிச்சர்ட் வில்லியம்ஸ், உன் வாழிகாட்டுதலை நாங்களும் தொடர்வோம், நாட்டுப் பணியில் பங்கேற்போம்” என்ற வாசகங்கள் எழுதப் பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அபியின் கண்கள் கலங்கியது. பின்னால் ரிச்சர்டின் அம்மாவிடம் இருந்து ஒரு விசும்பல் தோன்றியது. எத்தனை முறை மகனை இந்தப் பள்ளியின் வாசலில் வண்டியில் கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறார். எத்தனை முறை அவன் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளராக வந்து மகனுக்கு உற்சாக மூட்டியிருக்கிறார். அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
அப்பா வில்லியம்ஸ் உணர்சிகளற்ற சிலையாகவே அமர்ந்திருந்தார். வண்டி மயானத்தை அடைந்தது. மீண்டும் இராணுவ வண்டிகளில் இருந்து வெளிப்பட்ட எட்டு வீரர்களும் விறைப்பாக நடந்து அமரர் ஊர்தியை நெருங்கினார்கள். ரிச்சர்டின் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் அங்கு தற்காலிகமாக போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்தார்கள். முன் வரிசையில் ரிச்சர்டின் அம்மா, சக்கரநாற்காலியில் ரிச்சர்டின் அப்பா, பிறகு அபி என அமர்ந்து கொண்டார்கள். இருபாதிரியார்கள் விவிலியத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிரார்த்தனைகாகத் தயாராக நின்றார்கள்.
வீரர்கள் முன்போலவே பக்கத்திற்கு மூவராக அணிவகுத்து, முன்னும் பின்னும் இருவர் தொடர ரிச்சர்ட் உறங்கிய சவப்பெட்டியை கொண்டுவந்து பந்தலுக்கருகில் இருந்த ஒரு மேடையில் வைத்தார்கள். பிறகு லாவகமாக சடாரென சப்பெட்டியின் மேல் போர்த்தியிருந்த தேசியக் கொடியை உருவினார்கள். பக்கத்திற்கு நால்வராக நின்று கொண்டு சடார் சடாரென ஒலி வரும் வண்ணம் கொடியை உதறி, நீள வாக்கில் மடித்து, தொடர்ந்து நீவிவிட்டவாரே மடிக்கத் தொடங்கினர். சிவப்பு வெள்ளை பட்டைகள் மட்டும் உள்ள பகுதியில் மடிக்க ஆரம்பித்து 13 முறை முக்கோண வடிவில் மாற்றி மாற்றிப் போட்டு மடித்து, வெள்ளை நட்சத்திரங்களும், நீல வண்ணமும் கொண்ட பகுதி வெளியில் தெரியுமாறு முக்கோண வடிவில் மடித்து முடித்தனர். அதை ஒருவர் மட்டும் கையில் பெற்றுக்கொள்ள மற்ற வீரர்கள் அணிவகுத்து மீண்டும் வெளியேறிய பிறகு களைந்து சென்றனர்.
கொடியைப் பிடித்திருந்த வீராங்கனை மட்டும் விறைப்பாக ரிச்சர்டின் குடும்பத்தை நோக்கி நின்றார். ரிச்சர்டின் அம்மாவும், அபியும் எழுந்து நின்று கொண்டார்கள். பாதிரியார்கள் ஒவ்வொருவராக பிரார்த்தனை முடித்து ஆமன் சொல்லி முடித்ததும், வீராங்கனை அபியை நெருங்கி இராணுவ மரியாதை செய்த கொடியை அபியின் கையில் கொடுத்துவிட்டு, ரிச்சர்டின் பணிக்கு இராணுவத்தின் சார்பாக நன்றி சொல்லிவிட்டு, அவன் ஆன்மா சாந்தியடையட்டும் என்று சொல்லி சல்யூட் அடித்துவிட்டு விரைப்புடன் நடந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இறுதி மரியாதைகள் நடந்து ரிச்சர்ட் அடக்கம் செய்யப்பட்டான். அவ்வப்பொழுது தாள முடியாமல் அபியும் ரிச்சர்டின் அம்மாவும் கண்கலங்கினர், அல்லது விசும்பினார். ஆனால் அப்பா வில்லியம்ஸ் சிலை போன்ற உணர்சிகளற்ற முகத்துடனேயே இருந்தார்.
சடங்குகள் அனைத்தும் முடிந்து அனைவரும் வெளியே வந்து தங்கள் ஊர்திகளில் கிளம்பினர். அபியும், ரிச்சர்டின் அம்மாவும் மீண்டும் சக்கரநாற்காலியை வாகனத்தில் ஏற்றினர். ரிச்சர்டின் அம்மா ஏறியவுடன் கதவைச் சாத்த உதவிய அபி, முன்னிருக்கை கதவை நோக்கி நகர்ந்தாள். அதற்குள், “வண்டியை எடு” என்று அப்பா வில்லியம்ஸின் கடினமானக் குரல் கேட்டது. அபி அதிர்ச்சி அடைந்தாள். அவளைப் போலவே அதிர்ச்சியுடன் வண்டியோட்டியும், ரிச்சர்டின் அம்மாவும் வில்லியம்ஸின் முகத்தைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு அபியைப் பார்த்தனர், அவள் முகத்தில் இருந்து அபி அதிர்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்று தெரிந்தது. திறக்கப்போன வாகனத்தின் கைப்பிடியில் இருந்து தனது கைகளை அதிர்ச்சியில் இருந்து மீளாமலே அகற்றிக் கொண்டாள். ரிச்சர்டின் அம்மா அபி என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார். இடைவெட்டிய வில்லியம்ஸ் வண்டியோட்டியை நோக்கி, “இன்னமும் கிளம்பவில்லையா?” என்று உறுமினார். வண்டியோட்டியும் பரிதாபமாக ஒருமுறை அபியை நோக்கிவிட்டு தயக்கத்துடன் வண்டியை ஓட்டத் தொடங்கினார்.
வண்டி அவளைக் கடந்தபொழுது தலைகுனிந்து, கண்ணீர் வழிந்த முகத்துடன் ரிச்சர்டின் அம்மாவின் முகமும், சிலையாக இருந்த வில்லியம்ஸின் முகமும் அபியின் பார்வையில் தட்டுப் பட்டது. இனி எவ்வாறு மயானத்தில் இருந்து ஊருக்குள் செல்வது, ஏதேனும் நண்பர்களோ உறவினர்களோ சவாரி கொடுத்து உதவி செய்ய இருக்கிறார்களா அல்லது வாடகை வண்டியை எப்படி மயானத்திற்கு வரவழைப்பது என்று குழம்பிய அபி சுற்றும் முற்றும் பார்த்தாள்.
(தொடரும்)
படம் உதவி:
http://photoblog.statesman.com/wp-content/uploads/2010/08/lkv-processionblog.jpg
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSpWyVdRB2zx_sg0bNyNy2fu6UMxzJz829AJ5VT_6wHx35ES5Dd2w
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSyODas5KYOAvTZTve6GwZ1CXq8829lzqMsozsY1jYdVCmGDlIz1A
தேமொழி
உலகின் இருவேறு மூலைகள், புவிக்கோளத்தின் வெவ்வேறு பக்கங்கள், இரு பகுதியிலும் இருக்கும் நாடுகளுக்கு இடையே உள்ள கால இடைவெளி சரியாக அரை நாள். ஒருநாட்டினர் உழைத்துக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். கலாச்சாரத்திலும் பெரிய வேறுபாடு. ஆனால் இரு நாடுகளும் ஒன்றாக எதிர் கொண்டிருப்பதும், இரண்டாம் மில்லினியத்திலும், இந்த நூற்றாண்டிலும் இப்படியா என்று அதிர்ந்து போயிருப்பதற்கும் காரணம் … இரு இளைஞர்களின் அகால மரணம்.
இயற்கையின் சீற்றத்தினாலோ, போக்குவரத்து விபத்தினாலோ, அல்லது நோயின் காரணமாகவோ அவர்கள் வாழ்வு ஆரம்பமாவதற்குள் முடிந்திருந்தால்கூட ஒருவகையில் மனது சமாதானம் அடையும். ஆனால் அவர்கள் உயிரிழக்க நேர்ந்ததன் அடிப்படைக் காரணம், சமுதாயத்தில் இன்றும் நிலைத்து வாழும் வேற்றுமை என்னும் மனநோயால் என்பது வேதனைக்குரிய செய்தி. மக்களிடம் பரவி இருக்கும் மூடத்தனமான வேறுபாடுகள் பற்றியக் கருத்துக்களின் காரணமாக; கருப்பு-வெளுப்பு வேறுபாடு, தாழ்வு-உயர்வு வேறுபாடு என்று இன்றும் நிலவும் கொடுமையின் தீவிரத்திற்கு பலியாகி உள்ளார்கள் இந்த இளைஞர்கள். இந்த இளைஞர்களில் ஒருவர் தமிழக மக்கள் தாழ்ந்த குலமாகக் கருதும் ஒரு குலத்தினைச் சார்ந்த இளவரசன். மற்றொரு இளைஞர் அமெரிக்காவின் தாழ்ந்த இனமாகக் கருதப்படும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஃப்ளோரிடா மாநிலத்தில் வாழ்ந்த பள்ளிச் சிறுவன் ட்ரேவான் மார்ட்டின்(Trayvon Martin).
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்
என்று பாரதி அறிவுறுத்திச் சென்று ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் பெரும்பாலான மக்களின் அறிவை அது சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அதற்கு எடுத்துக்காட்டு, தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன்- திவ்யா இவர்களின் காதல் கலப்புத் திருமணம் பட்டபாடு. செல்லங்கொட்டாய் கிராமத்து திவ்யா உயர் குலமாகக் கருதப்படும் ஒரு குலத்தில் பிறந்தவர். இவர் காதலித்ததோ நத்தம் காலனியைச்சேர்ந்த இளவரசனை. இவரோ தாழ்ந்த குலமாகக் கருதப்படும் குலத்தில் உதித்தவர். இந்த வேறுபாடுகள் காதலித்த இருவருக்கும் ஒரு பொருட்டாகவே இருந்திருக்கவில்லை. எங்கும் இயல்பாக இருக்கும், பெற்றோரின் அறிவுரைக்கு உடன்படாத பிள்ளைகளின் செயல்களால் வருத்தமடையும் குடும்பங்களின் பிரச்சனையும், இரு குடும்பங்களுக்குள் இருந்திருக்க வேண்டிய சாதாரண மன வருத்தங்களும், உறவுப் பிரச்னைகளும் தேவையற்றவர்களின் ஊடுருவலால் பெரிதாகி இளவரசன் வசித்த நத்தம் காலனி எரிக்கப்பட்டிருக்கிறது. காதலர்களையும் ஊர் ஊராக ஓடவைத்து இறுதியில் நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது.
இதற்கிடையில் பள்ளி நாட்களில் நண்பர்களாக இருந்த காதலர்களின் தந்தைகளுக்குள் பிரிவு ஏற்பட்டிருக்கிறது, இளவரசனுடன் சென்றுவிட்ட திவ்யாவின் செய்கையால் அதிர்ச்சியுற்ற அவளது தந்தை தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். பல உச்சக்கட்ட விறுவிறுப்பான நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தாயுடன் சேர்ந்த திவ்யா, நீதிமன்றத்தில் இளவரசனை விட்டுப் பிரிந்து வாழ முடிவெடுத்துவிட்டாதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து தற்கொலையா, கொலையா என்று கணிக்க முடியாத விதத்தில் இளவரசன் இறந்திருக்கிறார்.
இளவரசனின் மரணம் தற்கொலையா… கொலையாயோ… என்ற கேள்விகளையும் கடந்து, இளவரசன் மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதின் அடிப்படையை ஆராய்ந்தால், திவ்யா – இளவரசனைப் பிரித்ததில் முக்கியப் பங்கு யாருக்கு என்னும் கேள்வியை எழுப்பினால், இதற்குக் காரணம் சாதிக்கொடுமை என்ற மனித நேயமற்ற செயல் என்பது தெரிய வருகிறது. இந்தக் காதல் கலப்பு மணத்தில் அரசியல் மூக்கை நுழைத்து, திவ்யாவின் வாழ்க்கையைப் பாழாக்கி, இளவரசனின் உயிரைப் பறித்திருக்கிறது. பத்தொன்பது வயது இளைஞர் இளவரசனின் தேவையற்ற உயிரிழப்பிற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் சாதி வேற்றுமை பாராட்டி ஆரம்பத்தில் இருந்தே இளவரசன்-திவ்யா காதலைக் குலைத்தவர்கள்.
அடுத்து அமெரிக்காவின் கதை; சென்ற ஆண்டு (2012) பெப்ரவரி மாதம், இரவு நேரம் வீட்டிற்கு அருகில் உள்ள தெருமுனையில் இருந்த கடையில் மிட்டாயும், குளிர்பானமும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறான் ட்ரேவான். வசதியான மக்கள் வாழும் பகுதியில் அமைந்திருந்திருக்கிறது அச்சிறுவன் தங்கியிருந்த வீடு. இது போன்ற பகுதிகளில் குற்றங்கள், கொள்ளைகளைத் தவிர்க்க அப்பகுதி மக்களே கண்காணிப்பில் கவனம் செலுத்தும் அமைப்பும் உள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினரான ஜார்ஜ் சிம்மர்மேன் (George Zimmerman), வெள்ளைக்கார தந்தைக்கும் பெரு நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்ட தாய்க்கும் பிறந்த கலப்பின மனிதர். சிம்மர்மேன் ஊர்தியில் வரும் பொழுது, அவர் கண்களில் தானுண்டு தனது வேலையுண்டு என்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ட்ரேவான் பட்டுவிடுகிறான்.
கறுப்பர்கள் என்றாலே கயவர்கள் என்ற மனப்பான்மை இன்றும் பல அமெரிக்க மக்களின் மனதில் ஆழப் பதிந்திருக்கும் எண்ணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கறுப்பர்களைத் தேவையில்லாமல் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், அவர்களைத் தவிர்ப்பதும் பெரும்பான்மையோருக்கு வழக்கம். வசதியான கறுப்பர்கள் தங்களது விலை உயர்ந்த ஊர்தியில் சென்றால் காவலர்கள் அவர்களை நிறுத்தி, தேவையற்ற சந்தேகத்தின் பேரில் அவர்களது வண்டியின் உரிமத்தை சரிபார்த்து அது திருட்டு வண்டியா எனச் சோதனை செய்வதும், அவர்களை அடிக்கடி நிறுத்தி போதைப் பொருட்கள் வைத்திருக்கிறார்களா என்று வண்டியைச் சோதனை செய்வதும் மிகவும் கண்டனதிற்குள்ளானாலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இவ்வாறு இனத்தின் அடையாளம் கொண்டு, மனதில் ஒருவரைப்பற்றி ஆதாரம் இன்றி முடிவெடுக்கும் மனப்பான்மை ட்ரேவான் வீடு திரும்பிக் கொண்டிருந்த அன்றும் தனது வேலையைக் காட்டத் துவங்கியது.
ட்ரேவானை ஒரு களவாணி என்று தானே முடிவு கட்டிய சிம்மர்மேன், காவல் துறைக்கு தொலை பேசியின் வழியாக ட்ரேவானைப் பற்றிய விவரம் கொடுத்திருக்கிறார். அவர் இது போன்று அடிக்கடி காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்பவரும் கூட. காவலர்கள் சிறுவனைத் தொடராதீர்கள் என்று பதிலுக்கு எச்சரித்தும் அதைப் பொருட்படுத்தாது சிம்மர்மேன் சிறுவனைத் தொடர்ந்து சென்று கேள்விகள் கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. இதன்முடிவாக ட்ரேவான் சிம்மர்மேனால் சுடப்பட்டு உயிரிழந்தான். சிம்மர்மேன் காவலரைக் கூப்பிட்டு நிலைமையை விளக்கினார். பலமணி நேர விசாரணைக்குப் பின், இருவருக்கும் ஏற்பட்ட தாக்குதலில், ட்ரேவான் சிம்மர்மேனின் தலையைத் தரையில் மோதி மோதித் தாக்கியதால், வேறு வழியின்றி தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தற்காப்பிற்காக சிம்மர்மேன் ட்ரேவானை சுட்டுக் கொல்ல நேர்ந்ததாக வாக்குமூலம் பதிவு செய்தார்கள் காவலர்கள். சிம்மர்மேனின் தலைக்காயங்களைக் குறித்துக் கொண்டு அவற்றிற்கு சிகிச்சை அளித்து, அவர் மேல் குற்றம் இல்லை, இது திட்டமிடப்படாத தற்காப்பிற்காக எடுத்த நடவடிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்பு என அறிக்கை தயார் செய்து கொண்டு அவரை விடுதலை செய்து விட்டனர்.
இவ்வாறு காவலர்கள் ஒரு சிறுவனின் உயிர்ழப்பிற்குக் காரணமான ஒருவரை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் முன் கொண்டு சென்று நிறுத்தாமல் விடுதலை செய்தது கறுப்பின மக்களுக்கும், மனித நேயமுள்ளவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கோபமூட்ட அவர்கள் ட்ரேவானின் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டுப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் திட்டமிடப்படாதக் கொலை, செகண்ட் டிகிரி மர்டர் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு சிம்மர்மேன் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். இந்த வழக்கு சென்ற மாதம் (ஜூன் 2013) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இந்த மாதம் (ஜூலை 2013) தீர்ப்பும் வழங்கப் பட்டது. சிம்மர்மேன் குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானார்.
தீர்ப்பின் முடிவு கறுப்பின மக்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அமெரிக்க மக்கள் மத்தியில் இதைப் பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. பத்திரிக்கைகளும், ஆரய்ச்சி நிறுவனங்களும் மக்களின் கருத்துக் கணிப்பைச் சேகரித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. கருத்துக் கணிப்புக்களின்படி பெரும்பான்மையான கறுப்பின மக்களுக்கும், மகளிருக்கும், இளைய தலைமுறையைச் சார்ந்த வெள்ளையர்களுக்கும் தீர்ப்பின் முடிவு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிகிறது.
வழக்கின் முடிவைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உரை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்புகளின் உதவியின்றி, முன் தயாரிக்கப்பட்ட உரையினைப் படிக்கும் வழக்கம் போல் இல்லாமல், அதிபர் ஒபாமா உணர்ச்சிபூர்வமாக, மனம் திறந்து உரையாற்றினார். கறுப்பின மக்களுக்கு நேரும் அநீதிகளைப் பற்றியக் கவலை அவர் உரையில் தொனித்தது. ட்ரேவான் கொலையுண்டபொழுது முன்னர் கருத்து தெரிவித்திருந்த அதிபர் ஒபாமா எனக்கொரு மகன் இருந்திருந்தால் இதே வயதில் ட்ரேவான் போலத்தான் இருந்திருப்பான் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்பொழுது தன்னையே ட்ரேவான் இடத்தில் வைத்துப் பார்த்து, 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்ததை ட்ரேவானுடன் ஒப்பிடுகிறேன். ட்ரேவான் போலத்தான் நானும் இனவேறுபாடுகளால் பல வேதனை தரும் சமுதாயத்தின் நடவடிக்கைகளை எதிர்கொண்டேன். மனிதர்களின் புறத்தோற்றத்தை, தோலின் நிறத்தைக் கொண்டு ஒருவரை எடைபோடுவதைத் தவிர்த்து, அவர்களது குணத்தைக் கொண்டு மதிக்கும் நாள் வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இக்கருத்தை முதலில் தெரிவிப்பவர் அதிபர் ஒபாமா மட்டுமல்ல. சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் கறுப்பின மக்களின் சம உரிமைக்காகப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிரையும் விட்ட டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கும் சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது புகழ் பெற்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார். “எனது கனவு” (“I Have a Dream” – a public speech delivered by American activist Martin Luther King, Jr. on August 28, 1963) என்ற உரையில், “எனக்கொரு கனவிருக்கிறது, எனது நான்கு குழந்தைகளும் வளரும் இந்த நாட்டில் ஒரு நாள் வரும், அந்நாளில் மக்கள் அவர்களது தோலின் நிறத்தினைக் கொண்டு மதிப்பிடப்படாமல் அவர்களது குணத்தின் அடிப்படையில் மதிக்கப் படுவார்கள்”, என்றார்.
ட்ரேவான் வெள்ளை இனத்தைச் சார்ந்த ஒரு இளைஞனாக இருந்திருந்தால், முதற்கண் அவன் சந்தேகக் கண்ணோடு பின்தொடரவேப் பட்டிருக்க மாட்டான், தனது நிலையை உணர்த்த வாக்குவாதத்தில் இறங்க வேண்டியத் தேவையும் அவனுக்கு இருந்திருக்காது, அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று வன்முறையின் இறுதியாக உயிரை இழந்திருக்கவும் நேர்ந்திருக்காது என்பதுதான் அதிர்ச்சி தரும் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை உண்மை.
எந்த நாடாக இருந்தாலும் பிரிவினை வேறுபாடுகள் தலையெடுத்தாடி உயிர்ப்பலி கேட்கிறது. மனிதர்கள் தன்னை ஒத்த மனிதர்களைத் தாழ்வாகக் கருதாது தன்னைப் போன்ற மனிதராகவே மதித்து நடத்தும் காலம் இந்த உலகில் என்றுதான் வருமோ என்ற ஏக்கமும் வருகிறது. மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு அரை நூற்றாண்டு கழிந்தும் நிறைவேறவில்லை என்பது வேதனைக்குரியது.
References:
Shooting of Trayvon Martin – http://en.wikipedia.org/wiki/Shooting_of_Trayvon_Martin
Polls Show Wide Racial Gap On Trayvon Martin Case, by ALANA LEVINSON, NPR News. July 22, 2013 – http://www.npr.org/blogs/itsallpolitics/2013/07/22/204595068/polls-show-wide-racial-gap-on-trayvon-martin-case
Pew Research Center poll: Big Racial Divide over Zimmerman Verdict, Whites Say Too Much Focus on Race, Blacks Disagree. July 22, 2013 – http://www.people-press.org/2013/07/22/big-racial-divide-over-zimmerman-verdict/
A Washington Post/ABC News poll: Vast Racial Gap on Trayvon Martin Case Marks a Challenging Conversation. July 22, 2013 – http://www.langerresearch.com/uploads/1150a1TheMartinZimmermanCase.pdf
Ilavarasan’s family seeks probe by independent agency, The Hindu. Jul 20, 2013 – http://www.thehindu.com/news/national/tamil-nadu/ilavarasans-family-seeks-probe-by-independent-agency/article4935296.ece
Dalit man’s death in Tamil Nadu: Ilavarasan’s parents seek CBI probe. NDTV. Jul 20, 2013 – http://www.ndtv.com/article/india/dalit-man-s-death-in-tamil-nadu-ilavarasan-s-parents-seek-cbi-probe-394744
Ilavarasan: ‘Killed’ by politics? NDTV. July 20, 2013 23 – http://www.ndtv.com/article/india/ilavarasan-killed-by-politics-394887
Videos:
Kelada Manida – http://www.youtube.com/watch?v=ScA2TJ-IUkU
I Have a Dream Speech – http://www.youtube.com/watch?v=smEqnnklfYs
President Obama Speaks on Trayvon Martin – http://www.youtube.com/watch?v=MHBdZWbncXI
Pictures Courtesy:
http://www.thehindu.com/multimedia/dynamic/01511/08_ilavarasan_1511753f.jpg
http://en.wikipedia.org/wiki/File:Trayvon_Martin_on_the_backseat_of_a_car.png
தேமொழி
(கட்டுரையின் நிறைவுப் பகுதி)
முன் குறிப்பு:
இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.
_____________________________________________
Related Articles:
War is over: Imaginary ‘Bicholim Conflict’ page removed from Wikipedia after five years, Eric Pfeiffer, Yahoo! News. Eric Pfeiffer, Yahoo! News January 4, 2013, http://news.yahoo.com/blogs/sideshow/war-over-imaginary-bicholim-conflict-page-removed-wikipedia-234717353.html
A copy of the deleted Wikipedia’s Bicholim Conflict Article: http://www.absoluteastronomy.com/topics/Bicholim_conflict
_____________________________________________
எழுச்சியின் துவக்கம்
மராட்டியர்கள் மேலும் படைகளை அனுப்பி போரிட இயலாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் விரைவாகவும் திறம்படவும் முன் நிகழ்த்திய போர்களுக்கு எதிர் மாறாக, இப்போரில் போர்ச்சுக்கீசியர்களின் அதிநுட்ப போர்க்கருவிகளின் தாக்குதலைத் தவிர்ப்பதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது [9]. மராட்டியர்களின் படை வதாடியோவில் முற்றுகையில் சிக்கித் தவித்தது. அவர்கள் தங்களுக்கு அதிக இழப்புகளைத் தரும் நடவடிக்கைகளைத் தவிர்க்க எண்ணி சூழ்நிலை சாதகமாக மாறும் காலத்தை எதிர்நோக்கி இருந்தார்கள் [9].
ஆனால் போர்ச்சுக்கீசியர்கள் வதாடியோ நகரில் வாழ்ந்த இந்துக்களை கைது செய்ததும், அவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியதும் அருகில் உள்ள கோவாவின் கிராமப் பகுதிகளுக்கு வெகு வேகமாகப் பரவியது [16]. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் போர்ச்சுக்கீசியர்களின் விருப்பத்திற்கு மாறாக மராட்டியர்களுடன் இணைந்த வதாடியோ மக்கள் படுகொலைகள் செய்யப்பட்டதாக மிகைப்படுத்தப்பட்ட வதந்திகள் உருவெடுத்து கதைகள் பரவ ஆரம்பித்தது [11]. இப்ரம்பூர் நகரில் முதல் பெரிய எதிர்ப்பு தோன்றியது. இப்ரம்பூர் முதலில் மராட்டியர்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும் இப்பொழுது அவர்கள் போர்ச்சுக்கீசியர்களின் பலத்த கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார்கள் [9]. இம்பரம்பூர் மக்கள் தங்கள் பணிகளை விட்டுவிட்டு போர்ச்சுக்கீசியப் படைகளை எதிர்க்க முனைந்தார்கள். ஆயுதமற்ற கலகக்காரர்கள் நிகழ்த்திய இந்த எதிர்ப்பை, போர்ச்சுக்கீசியர்கள் வானை நோக்கிச் சுட்டுப் பலரைக் கதிகலங்கச் செய்தும், அடங்காது தொல்லைகள் கொடுத்தவர்களைச் சிறையிலடைத்தும் சுலபமாக கலவரத்தை அடக்கி நகருக்கு அதிகம் சேதம் விளைவிக்காத நடவடிக்கைகளை மேற்கொண்டனர் [9]. இப்ரம்பூருக்கு வடக்கில் இருந்த அன்கோனம் (Anconem) நகருக்கும் இதே கதிதான் ஏற்பட்டது [9].
எனினும், அலோர்னா கோட்டைக்கு வடக்கில் உள்ள தற்றாடிங்கம் (Tatradingam) என்ற குக்கிராமத்தின் மக்கள் கோட்டைக்கு ஊர்வலமாகச் சென்று, போர்ச்சுக்கீசியர்கள் பேர்நேம்மை (Pernem) மராட்டியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நிர்பந்தித்தார்கள், இதன் விளைவாக சிறிய சண்டையும் நிகழ்ந்தது [9]. அத்துமீறி கோட்டைக்குள் நுழைந்த கிராம மக்களிடம் போர்சுகீசியப் பிரதிநிதிகள் எந்த உடன்படிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இது இராணுவ தளத்தின் மீது நிகழ்த்தப் பட்ட அத்துமீறிய ஊடுருவல் என்பதால், கோட்டையின் தளபதி மக்களைத் தாக்க முடிவெடுத்து மக்களில் சிலரைக் காயமுறவும் செய்தார் [9]. அவர் கட்டளையின் கீழ் அதி உற்சாகமாகத் தாக்கிய படையினர் மக்களில் பெரும்பகுதியினரை மரண காயங்கள் ஏற்படும் அளவிற்குத் தாக்கினர். காயமடைந்தோரால் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் இயலாது போனது [9]. டி ஆல்பெகுயிர்கேவும் (De Albequerque) படைத்தளத்தை பாதுகாக்க இத்தாக்குதல் அத்தியாவசியம் என்ற கண்ணோட்டத்துடன் இந்தத் தாக்குதலை அணுகியதால், இந்த வன்முறையை அவரும் கண்டிக்கவில்லை[9].
பிக்கோலிம் நகர மக்கள் டி மெல்லோ (D’Mello) தங்கியிருந்த அரசு மாளிகையைச் சூழ்ந்துகொண்டு இந்தப் படுகொலைகளை நிறுத்தச் சொல்லிப் போராட்டம் நடத்தினார்கள் [9]. ஆனால் டி மெல்லோ சர்ச்சைக்குரிய விதத்தில் படைகளிடம் நகரில் ஊரடங்கு உத்திரவை நிறைவேற்றக் கட்டளை இட்டார் [9]. இந்த ஊரடங்கு உத்தரவு பிக்கோலிமின் பிற பகுதிகளுக்கும் அதிகப் படைகளின் கண்காணிப்பின் கீழ் நீட்டிக்கப் பட்டது [9]. சிரிகவோ (Sirigao) பகுதியில் துவங்கிய மற்றொரு புரட்சி எழுச்சி பிக்கோலிம் பகுதி முழுமையிலுமே (போர்ச்ச்கீசியர்களின் கட்டுப்பாட் டிற்குள் அடங்கிய பகுதிகளில்) அவசர நிலைப் பிரககடனத்தை அறிவிக்கும்படி செய்தது[9]. பேரிநேமின் கிழக்குப் பகுதியும் இராணுவத்தின் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது [9].
டிசெம்பர் மாத இறுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்நோக்கி இருக்கும் பொழுது, பார்டெஸ் (Bardez) நகரின் ட்ராவிண்டா (Dravinda) பகுதியில், ஐந்திலிருந்து பத்து இந்துக்கள் அடங்கிய ஒரு குழுவினர் நகரில் உள்ள வீடுகளுக்குத் தீ வைத்தனர். அவர்கள் கோவாவை சுதந்திரமடையச் செய்து மராட்டியர்களிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்தார்கள் [11]. இத்தாக்குதல் மோசமான பழிவாங்கும் எதிர் விளைவை ஏற்படுத்தியது. போர்சுக்கீசியர்கள் இந்த ட்ராவிண்டா கலகக் கும்பலை சுற்றி வளைத்தனர். இவர்களுடன் சேர்ந்து சதி செய்தவர்களையும், இப்போராட்டக் குழுவினரையும் தண்டிக்கும் பொருட்டு பொதுமக்கள் முன்னிலையில் அவர்களைத் தூக்கிலிட்டனர் [11].
புத்தாண்டு பிறந்ததும், போர்ச்சுக்கீசியர்கள் மவுலிஞ்சியம் (Maulinguem) பகுதியில் மராட்டியர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த சிறுபகுதியைத் தாக்கினர் [9]. வெற்றிகரமான இத்தாக்குதலின் இறுதியில் அதிக இழப்பின்றி நகரைக் கைப்பற்றினர் [9]. மீண்டும் துரோகிகள் என்று குற்றம் சாட்டி மேலும் சில குடிமக்களைக் கைது செய்தனர் [9]. பிக்கோலிம்மில் தாங்கள் இழந்த பகுதியைக் கைப்பற்றும் எண்ணத்தில் போர்சுக்கீசியர்கள் முன்னேறினார்கள். மராட்டியப்படைகள் தங்கள் கைவசம் இருந்த பகுதிகள் போர்ச்சுக்கீசியர்கள் வசம் செல்லத் தொடங்கியதும் கோவாவை விட்டு வெளியேற நேர்ந்தது[9]. எனினும், மேலும் பல மராட்டியப் படையினர் எல்லையில் ஒருங்கிணைந்து மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் வாய்ப்பினை எதிர்நோக்கி இருந்தனர் [9]. அந்நிலையில் கோவாவில் மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே பகுதி வதாடியோ மட்டுமே [9]. அங்கும் மராட்டியப் படை இரண்டு மாதங்களாக முற்றுகைக்கு கீழ் இருந்ததால் தீவிர மராட்டிய ஆதரவாளர்களும் அமைதியை இழக்கத் துவங்கினர் [9].
சமாதான உடன்படிக்கை
வதாடியோவில் மராட்டியர்களின் உணவுக் கிடங்குகள் போர்ச்சுகீசியர்களால் நாசப்படுத்தப்பட்டது, இது அவர்கள் உறுதியைக் குலைக்கும் இறுதிப் பேரிடியாக இறங்கியது. எனினும் மராட்டியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வதாடியோ நகர மக்கள் பட்டினி கிடந்து மரணத்தை தழுவும் அவலத்தை விரும்பாததால், 1641 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெள்ளைக்கொடியை உயர்த்தி சமாதானத்தைத் தெரிவித்துச் சரணடைந்தார்கள் [9]. முதலில் இந்த நடவடிக்க்கையைச் சந்தேகித்த போர்ச்சுகீசியர்கள் தாக்குதலை எதிர்பார்த்துத் தயாராக இருந்தார்கள். ஆனால் சிறு சிறு குழுக்களாக நகரில் இருந்து வெளியேறிய மராட்டியப் படைகள் எந்த வித தீங்கும் இழைப்பதாகத் தெரியவில்லை [9]. போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் பங்கிற்கு, மராட்டியப் படையினர் நகரை விட்டு சுதந்திரமாக வெளியேற அனுமதித்தனர். உடனடியாக தங்கள் ஆயுதங்களை ஒப்புவிக்காத மராட்டியப் படையினரை மட்டுமே அவர்கள் கைது செய்தனர் [9]. மராட்டியப் படை வீரர்கள் போர்சுக்கீசியர்களைத் தாக்க எண்ணியிருந்தாலும் பலநாள் பட்டினியினாலும், மனஉறுதி குலைந்த நிலையிலும் மிக எளிதில் போரில் தோல்வி அடைந்திருப்பார்கள் என ஸ்ரீநிவாசன் வசந்தகுலன் கருதுகிறார். போர்ச்சுக்கீசியர்கள் மிக விரைவில் படைகளை பலப்படுத்தியதால் மராட்டியர்களைவிட போர்ச்சுக்கீசியப் படையினரின் எண்ணிக்கை நகரில் அதிக அளவு இருந்தது [9].
பிப்ரவரி மாதத் துவக்கத்தில் மராட்டியப் படைகள் இப்ரம்பூருக்குள் நுழைந்தது. ஆனால் இம்முறை அவர்கள் உடன்படிக்கை ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதைத் தெரிவித்தனர். மராட்டியப் போர்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், மராட்டிய ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப் படவேண்டும் என்றக் கோரிக்கைகளையும் முன் வைத்தனர் [9]. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியே டி’ ஆல்பெகுயிர்கேவை நேரில் சந்தித்து சமாதான உடன்படிக்கைக் கோரிக்கைகளைக் குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்தினார். அந்த உடன்படிக்கையின் படி; மராட்டியப் பேரரசுக்கும் போர்ச்க்கீசியர்களின் கோவாவிற்கும் இடையிலான எல்லையையும், அருகில் உள்ள சிற்றரசுகளின் எல்லைகளையும் மராட்டியர்கள் அங்கீகரிப்பதாகத் தெரிவிக்கப் பட்டது [9]. பதிலுக்கு போர்ச்சுகீசியர்களும் தங்கள் வடபகுதியின் எல்லையை விரிவுபடுத்த முயற்சிப்பதில்லை எனவும் முடிவானது [9].
இந்த உடன்படிக்கை ஏற்பட்டதன் காரணங்கள் பற்பல [11] [13]. மராட்டியர்கள் வதாடியோவில் கைது செய்யப்பட்டிருக்கும் அவர்களது படைவீரர்களை மீட்டு மீண்டும் தங்கள் படையில் இணைத்துக் கொள்ள விரும்பினர். மராட்டியர்கள் தாங்கள் முன் நினைத்திருந்ததைப் போல கோவாவை விரைவானத் தாக்குதல் மூலம் கைப்பற்றி விடலாம் என்பது இனி நிச்சயமற்ற நிலை என அறிந்திருந்தனர். அத்துடன் முதலில் திட்டமிட்டபடியே மராட்டியப் பேரரசின் தென் எல்லையை மட்டும் பாதுகாப்பதே போதுமானது என்ற முடிவுக்கும் வந்தனர். இதனால் தெற்கெல்லையில் போரைத் தொடர அவர்களுக்கு விருப்பம் இருக்கவில்லை. இந்த உடன்படிக்கையின் மூலம், இரு அரசுகளுக்கும் இடையே இருந்த மராட்டியர்களின் தெற்கெல்லை முழுவதிலுமே அமைதியான முறையில் பாதுகாப்பினைப் பெற வழி கிடைக்கும் [11].
போர்ச்சுக்கீசியர்களின் கண்ணோட்டதில், பிக்கோலிம்மிலும் பேரிநேமிலும் ஏற்பட்டது போன்ற மக்களின் புரட்சிகரமான எழுச்சி விரைவில் மற்ற பகுதிகளுக்கும் பரவி, அந்த சூழ்நிலை மராட்டியர்களுக்கு ஆதரவாக மாறிவிடலாம் என்ற அதிகப்படியான அச்சம் இருந்தது. அத்துடன் அவர்களுக்கு மராட்டியர்கள் எல்லைபகுதியில் படைகளைக் குவித்து தங்களைப் பலப்படுத்திக் கொண்டிருப்பதும் தெரிந்திருந்தது . ஒரே சமயத்தில் மக்களின் எழுச்சிப் போராட்டமும், எல்லையிலிருக்கும் மராட்டியப் படைகளின் தாக்குதல்களும் நிகழ்ந்தால் கோவாவின் வட பகுதி முழுமையையுமே மராட்டியர் வசம் இழக்க நேரிடலாம். அத்துடன் பான்ஞ்சிம் (Pangim) மற்றும் வாஸ் கோடா காமா நகர்களின் பாதுகாப்பான நிலையும் கேள்விக்குறியாகிவிடும் என்பதும் போர்ச்சுக்கீசியர்களுக்குப் புரிந்திருந்தது [9] [11]. ஒப்பந்த பேச்சுவார்த்தை நிகழ்ந்த பொழுதே மராட்டியர்களும் தங்களால் இப்ரம்பூரை எந்தவித எதிர்ப்புமின்றி தாக்க முடியும் என்பதையும் போர்ச்சுக்கீசியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் [11].
ஒரு சில கோவா குடிமக்களுக்கு இந்த உடன்படிக்கை திருப்தி அளிக்கவில்லை. மராட்டிய எல்லையை விரிவுபடுத்த கிடைத்த வாய்ப்பு நழுவிப் போனது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஆனால் பெரும்பாலோருக்கு இந்த உடன்படிக்கை ஏற்பட்டது மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்தது. மராட்டியர்களுக்கும் போர்சுக்கீசியர்களுக்கும் ஏற்படும் உடன்படிக்கை மூலம் அமைதி நிலவிட்டால் தாங்கள் எதிர்கொள்ளும் பாரபட்சமான நடவடிக்கைகள் தொடராது என இவர்கள் கருதினர் [2]. போர் கோவாவின் மக்களிடையே தோன்றிய எழுச்சியை நிறுத்தாவிட்டாலும் அதைத் தீவிரமாகக் குறைத்தது. மேலும் மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே நிகழ்ந்த இந்தப் போராட்டம் போர் என்ற முறையில் வரலாற்றில் எங்குமே குறிப்பிடப் படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் இருதரப்பினருமே தாங்கள் போர் நிகழ்த்துவதாக வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை. ஆயினும் மராட்டியர்களும் போர்ச்சுக்கீசியர்களும் ஒருவரை ஒருவர் தாக்க, போருக்குத் தங்களைத் தயார் படுத்திய வண்ணமே இருந்தனர் [9].
பாரம்பரிய சிறப்பு
வரலாற்றுச் சிறப்பு
இந்தச் சிறப்பு மிக்க சமாதான உடன்படிக்கையின் காரணத்தினால் மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே நம்பிக்கையும் நல்லெண்ணமும் வளர்ந்தது. இதன் காரணமாக பின்னர் மராட்டியப் பேரரசு மிகவும் வலிமை நிறைந்ததாக இருந்த காலத்திலும் கோவாவை நோக்கித் தனது தெற்கு எல்லையை விரிவு படுத்த முயலவில்லை. இதனால் போர்ச்சுக்கீசியர்கள் கட்டுபாட்டிலேயே கோவா தொடர்ந்து இருந்து வந்தது, பின்னர் இந்தியாவின் நடுவண் அரசின் ஒன்றிய ஆளுமைப் பகுதிகளில் ஒன்றாக1961 இல் இணைத்துக் கொள்ளப்பட்டது [17]. தற்கால கோவா தனக்கென ஒரு அரசாங்கமும், கலாச்சாரமும் கொண்டு, தன்னுரிமைப் பெற்று இந்தியாவின் ஒன்றிய ஆளுமைப் பகுதியாக விளங்கி வருகிறது.
கலாச்சார சிறப்பு
இந்தப் போர் மிகக் குறுகியது, இதன் தாக்கமும், போரின் இழப்புகளும், சேதங்களும் மிகக் குறைவு. இதன் காரணமாக வரலாற்று ஆசிரியர்களின் கவனத்தையோ, திரைப்படத் தயாரிப்பளர்களின் கவனத்தையோ இது சற்றும் ஈர்க்கவில்லை. 1921 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபிராங்க் மெச்காலஸ் (Frank McCallus) எழுதிய புதினமொன்றில் விவரிக்கப்பட்ட இந்தியப் புரட்சி பற்றிய நிகழ்ச்சியில் பிக்கோலிம் போர் போன்ற நிகழ்சிகளின் குறிப்பிடத்தக்க சாயல்கள் உள்ளது [17]. மற்றொரு கோவாவின் எழுத்தாளர் விக்டர் டி’ ஸோசா 1958 இல் வெளியிட்ட ‘கோவாவில் வாழ்க்கை’ (Goan Life, a Book by Victor D’ Souza) என்ற நூலில், கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவக் குடும்பம் ஒன்று மராட்டியப் பேரரசின் மீது உள்ள தங்கள் பற்றுதலை விளக்கிக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்தக் கதை பிக்கோலிம்போரினால் ஏற்பட்ட தாக்கத்தினால், அந்த நிகழ்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம் [17].
References:
[1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
[2] Thompson op cit. p 208.
[3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
[4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
[5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
[6] Thompson op cit. p 199.
[7] Thompson op cit. p 200.
[8] Thompson op cit. p 201.
[9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
[10] Thompson op cit. p 203.
[11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
[12] Thompson op cit. p 211.
[13] Thompson op cit. p 212.
[14] Thompson op cit. p 206.
[15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
[16] Thompson op cit. p 215.
[17] Thompson op cit. p 219.
Further reading
Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003
______________________________________
குறிப்பு:
இத்துடன் ‘பிக்கோலிம் போர்’ என்ற தலைப்பில் விக்கிபீடியாவில் இடம்பிடித்து பின்பு நீக்கப்பட்ட, அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுக் கட்டுரையின் மொழி பெயர்ப்பான ‘பிக்கோலிம் புளுகு’ கட்டுரையும் நிறைவு பெறுகிறது.
படம் உதவி:
அலோர்னா கோட்டை- http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg
______________________________________