சிலை அழுதது – 1
தேமொழி
அந்த சிறிய சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்களின் கையில் அமெரிக்க தேசியக் கொடிகள் படபடத்துக் கொண்டிருந்தது. வயது வித்யாசமின்றி அனைவரும் கையில் ஆளுக்கொரு வாசகங்கள் எழுதிய அட்டையையோ, தேசியக் கொடியையோ ஆட்டியவண்ணம் இருந்தனர். ‘உன்னை மறக்க மாட்டோம் ரிச்சர்ட்’, ‘உன் ஆன்மா சாந்தி அடையட்டும்’, ‘நீ எங்களை பெருமை அடைய செய்துவிட்டாய், ‘நீ ஒரு சிறந்த வீரன் ரிக்கி’, என தங்கள் மனதில் ரிச்சர்டைப் பற்றி எழுந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுத்த அட்டையை ஏந்திக்கொண்டு அவன் மறைந்த துக்கத்தை அனுசரித்துக் கொண்டிருந்தார்கள்.
வெய்யிலுக்கு கண்ணைச் சுருக்கிக் கொண்டிருந்த அனைவரது கண்களும் அந்த ‘ஃபர்ஸ்ட் பாப்டிஸ்ட் சர்ச்’ என்ற தேவாலயத்தின் வாசலையே நோக்கிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் சோகத்தால் யாரும் உரத்து பேசாமல் கிசு கிசு என்று பேசிக் கொண்டிருதாலும் அதுவும் ஒரு கசமுசா சத்தத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. தேவாலயத்தின் உள்ளே இராணுவ வீரர்களும், மிக முக்கிய உறவினர்களும், நண்பர்களும் ரிச்சர்டின் இறுதி சேவையில் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். தேவாலயத்தின் வாசலுக்கு இருபுறத்திலும் மக்களின் ஊர்திகள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு அரை மைல் தொலைவிற்குச் சாலை வெறிச்சோடி இருந்தது. தேவாலயத்தின் வாசலில் ஒரு கருப்பு அமரர் ஊர்தியும், அதன் அருகில் இரு இராணுவ வீரர்கள் மட்டுமே இருந்தார்கள்.
ரிச்சர்ட் வில்லியம்ஸ் பிறந்து வளர்ந்து படித்த ஊர் அது. பல தலைமுறைகளாக அவன் குடும்பம் அங்கிருப்பதால் பெரிய உறவினர் கூட்டமும், கணக்கிடலங்கா நண்பர்கள் கூட்டமும் அந்த ஊரில் இருந்தனர். அனைவருக்கும் ரிச்சர்ட் தனது முப்பது வயது தாண்டுவதற்குள் இறந்தது அதிர்ச்சியைத் தந்தது. வில்லியம்ஸ் குடும்பம் தீவிர நாட்டுப் பற்று உள்ள குடும்பம். அப்பா வில்லியம்ஸ் தனது பரம்பரையில் அனைவரும் அமெரிக்க இராணுவப் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பதில் அளவிட முடியாப் பெருமை கொண்டவர். வில்லியம்ஸின் தாத்தா இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர். வில்லியம்ஸின் தந்தை வியட்நாம் போரிலும், வில்லியம்ஸின் பெரியப்பா கொரியன் போரிலும் பங்கேற்றவர்கள். வில்லியம்ஸும் அவரது சகோதரர்களும் ஈராக் போரிலும், ஆபரேஷன் டெசெர்ட் ஸ்டார்மிலும் (Operation Desert Storm) பங்கேற்றவர்கள்.
தனது மகன்களும் மகளும் அதுபோன்றே தங்கள் பரம்பரைப் பெருமையைக் காக்கும் வண்ணம் இராணுவத்தில் சேர்ந்தது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. முதல் மகனும், அடுத்த மகளும் ஆபரேஷன் அனகொண்டா (Operation Anaconda) வில் பங்கேற்று ஆப்கானிஸ்தான் சென்றார்கள், ஒருவர் கண்ணிவெடிகுண்டில்(landmine) சிதற, மற்றவர் தற்கொலைப்படைத் தாக்குதலில் (suicide attack) உயிர் இழந்ததற்கு வில்லியம்ஸ் மிக வருந்தினாலும், அதனால் அவர் அசரவில்லை. அடுத்து ரிச்சர்ட் தானும் இராணுவத்தில் சேரப்போகிறேன் என்றதும் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார். சென்ற வாரம் அவனும் சில வீரர்களும் பயணித்த ‘ப்ளாக் ஹாக்’ (Black Hawk) ஹெலிகாப்டர் விமானம் கிழக்கு ஆஃப்கானிஸ்தான் பகுதியில் விபத்திற்குள்ளாகி வீரர்கள் அனைவரும் அதில் உயிரிழந்தனர். இராணுவம் இன்னமும் விபத்தின் காரணத்தைப் பற்றிய விசாரணையை முடிக்கவில்லை. இராணுவத்தினர் ரிச்சர்டின் உடலைச் சவப் பரிசோனைக்குப் பிறகு இன்று குடும்பத்திடம் ஒப்படைத்து தங்கள் இறுதி மரியாதையை செலுத்த வந்துள்ளனர். இனி தனது பரம்பரையில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றுவதைத் தொடர யாரும் இல்லை என்ற அதிர்ச்சியிலும், இருந்த ஒரே மகனையும் பறிகொடுத்ததில் அப்பா வில்லியம்த் மிகவும் ஆடிப்போயிருந்தார். சிறிது நாட்களுக்கு முன்தான் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் போனார். இப்பொழுது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
தேவாலயத்தின் கதவு திறந்தது. அனைவரும் தங்கள் பேச்சுக்களை நிறுத்தியதால் அந்தஇடத்தில் பேரமைதி நிறைந்தது. ரிச்சர்ட் விமானப் படையில் இருத்தால், விமானப்படை வீரர்கள் ஆறு பேர், சவப் பெட்டியைச் சுமக்கும் ‘பால் பியரர்ஸ்’ ஆக, பக்கத்திற்கு மூவராக, அமெரிக்கக் கொடி போர்த்திய அவனது சவப் பெட்டியைச் சுமந்து கொண்டு மிகவும் விறைப்பாக அணிவகுத்து வந்தனர். அவர்களுக்கு முன் புறம் ஒரு வீரரும் பின் புறம் ஒரு வீரரும் அவர்களைப் போலவே விறைப்பாக நடந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னர் கருப்பு ஆடைகளும் தொப்பிகளும் அணிந்த நண்பர்களும், உறவினர்களும் கண்களைத் துடைத்துக் கொண்டு வந்து நின்றனர். உள்ளூர் தொலைக்காட்சி நிலைய படம் பிடிப்பவர்களும், செய்தியாளர்களும் மட்டுமே சிறிது அங்கும் இங்கும் ஓடிப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
சவப்பெட்டியைச் சுமந்து வந்த வீரர்களில் இரு பெண் வீராங்கனைகளும் இருந்தார்கள். அனைவரும் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து, படிப்படியாக ஐந்து முறை திரும்பி, 90 பாகையில் நேர் செங்குத்தாகத் திரும்பி மீண்டும் விறைப்பாக நடந்து அமரர் ஊர்தியில் சவப் பெட்டியை ஏற்றினார்கள். பிறகு வண்டியின் இரு பக்கமும் பக்கத்திற்கு நால்வராக அணிவகுத்து விரைந்து நடந்து, வண்டியைதாண்டியதும் வரிசை கலைந்து ஓடிப்போய் தேவாலய ஊர்திகள் நிறுத்துமிடத்தில் இருந்த தங்கள் இராணுவ வண்டியில் ஏறிக் கொண்டார்கள். எங்கிருந்தோ சொல்லி வைத்தது போல உச்சியில் விளக்குகள் மின்ன காவல்துறை ஊர்தியும், அதற்கும் முன் இரு மோட்டார்பைக் காவலர்களும் திடுமெனத் தோன்றி அமரர் ஊர்தி முன்னர் தங்கள் ஊர்திகளை நிறுத்திக் கொண்டனர்.
இதற்குள் ரிச்சர்ட் குடும்பத்தின் உறவினர்களும் நண்பர்களும் ஊர்திகள் நிறுத்துமிடத்திற்குச் சென்று தங்கள் வண்டிகளில் ஏறிக் கொண்டார்கள். சக்கரநாற்காலியில் அப்பா வில்லியம்சைத் தள்ளி வந்த ரிச்சர்டின் அம்மாவும், ரிச்சர்டின் மனைவி அபியும் அவருக்காக பிரத்யேகமாக தருவிக்கப்பட்ட, சக்கர நாற்காலியை ஏற்றும் வாடகை வேன் அருகில் வந்ததும் அதில் அவரை ஏற்றினார்கள். அப்பா வில்லியம்ஸுடன் அம்மா பின்னால் அமர்ந்துகொள்ள, அபி முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ளவும் வண்டி புறப்பட்டது. தேவாலய வாசலில் நின்ற அனைவரும் அமைதியாக கொடிகளை அசைத்தனர். முன்னால் காவலர்களின் வண்டிகள், ரிச்சர்டின் அமரர் ஊர்தி, இரு இராணுவ வாகனங்கள், தொடர்ந்து ரிச்சர்டின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஊர்திகள் என ஊர்வலம் நகரின் மற்றொரு புறத்தில் இருந்த மயானத்தை நோக்கி ஊர்ந்தது. சாலையின் போக்குவரத்து சிறிது தடங்கலுற்றது. காவலர்களின் சைகைக்கு காத்திராமல் இறுதி ஊர்வலம் என்று தெரிந்த உடனேயே ஊர்திகளில் சென்றவர்கள் தானாகவே சாலையில் ஓரங்கட்டி வழி விட்டனர். வழியில் நின்ற பேஸ் பால் கேப் தொப்பிகள் அணிந்திருந்த ஒரு சில இளைய தலைமுறையினரும் தொப்பிகளை அகற்றி தலைகுனிந்து அஞ்சலி செலுத்தினர்.
வில்லியம்ஸின் வண்டி ரிச்சர்ட் படித்த பள்ளியை நெருங்கியது. பள்ளியின் வாசலில் உள்ள அறிவிப்புப் பலகையில், “உன் ஆன்மா சாந்தி அடையட்டும் ரிச்சர்ட் வில்லியம்ஸ், உன் வாழிகாட்டுதலை நாங்களும் தொடர்வோம், நாட்டுப் பணியில் பங்கேற்போம்” என்ற வாசகங்கள் எழுதப் பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அபியின் கண்கள் கலங்கியது. பின்னால் ரிச்சர்டின் அம்மாவிடம் இருந்து ஒரு விசும்பல் தோன்றியது. எத்தனை முறை மகனை இந்தப் பள்ளியின் வாசலில் வண்டியில் கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறார். எத்தனை முறை அவன் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளராக வந்து மகனுக்கு உற்சாக மூட்டியிருக்கிறார். அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
அப்பா வில்லியம்ஸ் உணர்சிகளற்ற சிலையாகவே அமர்ந்திருந்தார். வண்டி மயானத்தை அடைந்தது. மீண்டும் இராணுவ வண்டிகளில் இருந்து வெளிப்பட்ட எட்டு வீரர்களும் விறைப்பாக நடந்து அமரர் ஊர்தியை நெருங்கினார்கள். ரிச்சர்டின் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் அங்கு தற்காலிகமாக போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்தார்கள். முன் வரிசையில் ரிச்சர்டின் அம்மா, சக்கரநாற்காலியில் ரிச்சர்டின் அப்பா, பிறகு அபி என அமர்ந்து கொண்டார்கள். இருபாதிரியார்கள் விவிலியத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிரார்த்தனைகாகத் தயாராக நின்றார்கள்.
வீரர்கள் முன்போலவே பக்கத்திற்கு மூவராக அணிவகுத்து, முன்னும் பின்னும் இருவர் தொடர ரிச்சர்ட் உறங்கிய சவப்பெட்டியை கொண்டுவந்து பந்தலுக்கருகில் இருந்த ஒரு மேடையில் வைத்தார்கள். பிறகு லாவகமாக சடாரென சப்பெட்டியின் மேல் போர்த்தியிருந்த தேசியக் கொடியை உருவினார்கள். பக்கத்திற்கு நால்வராக நின்று கொண்டு சடார் சடாரென ஒலி வரும் வண்ணம் கொடியை உதறி, நீள வாக்கில் மடித்து, தொடர்ந்து நீவிவிட்டவாரே மடிக்கத் தொடங்கினர். சிவப்பு வெள்ளை பட்டைகள் மட்டும் உள்ள பகுதியில் மடிக்க ஆரம்பித்து 13 முறை முக்கோண வடிவில் மாற்றி மாற்றிப் போட்டு மடித்து, வெள்ளை நட்சத்திரங்களும், நீல வண்ணமும் கொண்ட பகுதி வெளியில் தெரியுமாறு முக்கோண வடிவில் மடித்து முடித்தனர். அதை ஒருவர் மட்டும் கையில் பெற்றுக்கொள்ள மற்ற வீரர்கள் அணிவகுத்து மீண்டும் வெளியேறிய பிறகு களைந்து சென்றனர்.
கொடியைப் பிடித்திருந்த வீராங்கனை மட்டும் விறைப்பாக ரிச்சர்டின் குடும்பத்தை நோக்கி நின்றார். ரிச்சர்டின் அம்மாவும், அபியும் எழுந்து நின்று கொண்டார்கள். பாதிரியார்கள் ஒவ்வொருவராக பிரார்த்தனை முடித்து ஆமன் சொல்லி முடித்ததும், வீராங்கனை அபியை நெருங்கி இராணுவ மரியாதை செய்த கொடியை அபியின் கையில் கொடுத்துவிட்டு, ரிச்சர்டின் பணிக்கு இராணுவத்தின் சார்பாக நன்றி சொல்லிவிட்டு, அவன் ஆன்மா சாந்தியடையட்டும் என்று சொல்லி சல்யூட் அடித்துவிட்டு விரைப்புடன் நடந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இறுதி மரியாதைகள் நடந்து ரிச்சர்ட் அடக்கம் செய்யப்பட்டான். அவ்வப்பொழுது தாள முடியாமல் அபியும் ரிச்சர்டின் அம்மாவும் கண்கலங்கினர், அல்லது விசும்பினார். ஆனால் அப்பா வில்லியம்ஸ் சிலை போன்ற உணர்சிகளற்ற முகத்துடனேயே இருந்தார்.
சடங்குகள் அனைத்தும் முடிந்து அனைவரும் வெளியே வந்து தங்கள் ஊர்திகளில் கிளம்பினர். அபியும், ரிச்சர்டின் அம்மாவும் மீண்டும் சக்கரநாற்காலியை வாகனத்தில் ஏற்றினர். ரிச்சர்டின் அம்மா ஏறியவுடன் கதவைச் சாத்த உதவிய அபி, முன்னிருக்கை கதவை நோக்கி நகர்ந்தாள். அதற்குள், “வண்டியை எடு” என்று அப்பா வில்லியம்ஸின் கடினமானக் குரல் கேட்டது. அபி அதிர்ச்சி அடைந்தாள். அவளைப் போலவே அதிர்ச்சியுடன் வண்டியோட்டியும், ரிச்சர்டின் அம்மாவும் வில்லியம்ஸின் முகத்தைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு அபியைப் பார்த்தனர், அவள் முகத்தில் இருந்து அபி அதிர்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்று தெரிந்தது. திறக்கப்போன வாகனத்தின் கைப்பிடியில் இருந்து தனது கைகளை அதிர்ச்சியில் இருந்து மீளாமலே அகற்றிக் கொண்டாள். ரிச்சர்டின் அம்மா அபி என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார். இடைவெட்டிய வில்லியம்ஸ் வண்டியோட்டியை நோக்கி, “இன்னமும் கிளம்பவில்லையா?” என்று உறுமினார். வண்டியோட்டியும் பரிதாபமாக ஒருமுறை அபியை நோக்கிவிட்டு தயக்கத்துடன் வண்டியை ஓட்டத் தொடங்கினார்.
வண்டி அவளைக் கடந்தபொழுது தலைகுனிந்து, கண்ணீர் வழிந்த முகத்துடன் ரிச்சர்டின் அம்மாவின் முகமும், சிலையாக இருந்த வில்லியம்ஸின் முகமும் அபியின் பார்வையில் தட்டுப் பட்டது. இனி எவ்வாறு மயானத்தில் இருந்து ஊருக்குள் செல்வது, ஏதேனும் நண்பர்களோ உறவினர்களோ சவாரி கொடுத்து உதவி செய்ய இருக்கிறார்களா அல்லது வாடகை வண்டியை எப்படி மயானத்திற்கு வரவழைப்பது என்று குழம்பிய அபி சுற்றும் முற்றும் பார்த்தாள்.
(தொடரும்)
படம் உதவி:
http://photoblog.statesman.com/wp-content/uploads/2010/08/lkv-processionblog.jpg
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSpWyVdRB2zx_sg0bNyNy2fu6UMxzJz829AJ5VT_6wHx35ES5Dd2w
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSyODas5KYOAvTZTve6GwZ1CXq8829lzqMsozsY1jYdVCmGDlIz1A
இராணுவ வீரர் ரிச்சர்டின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் மனைவி அபி பற்றிய தகவல்களையும் முழுமையாக அறியும் ஆவலைக் கிளறிவிட்டுவிட்டது கதை. அடுத்த பகுதியை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருக்கிறேன் தேமொழி. தொடருங்கள்…..வாழ்த்துக்கள்!!
ஊக்கமூட்டும் கருத்துரைக்கு நன்றி மேகலா.
அன்புடன்
….. தேமொழி