desertindex

 

    குறளின் கதிர்களாய்… (8)

 

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றன் மரந்தளிர்த் தற்று.

                -திருக்குறள்- 78 (அன்புடைமை)

 

புதுக் கவிதையில்…

 

பாலை நிலத்தில்

பசும்மரம் துளிர்த்தாலும்,

பொசுக்கும் வெயிலில்

பட்டுப்போகும்..

 

இதுதான் கதை,

இதயத்தில் அன்பில்லாத

இவ்வுலக வாழ்க்கையிலும்…!

 

குறும்பாவில்…

 

பாலையில் துளிர்க்கும் மரம்,

இதயத்தில் அன்பில்லா வாழ்க்கை..

இரண்டுக்கும் அழிவுதான்…!

 

      மரபுக் கவிதையில்…

 

எங்கும் மணலாம் பாலையிலே

எந்தச் செடியும் வளராது,

தங்கிடும் காய்ந்த மரமதுவும்

துளிர்த்து வரினும் பட்டுவிடும்,

எங்கும் இதுபோல் தானாகும்

எத்தனை உறவுகள் இருந்தாலும்

கங்காய் வாழ்வை அழித்திடுமே

கொஞ்சமும் அன்பிலா இதயமதே…!

 

லிமரிக்…

 

பாலையில் துளிர்த்திடும் மரம்

பட்டிடும் கருகியே சிரம்,

அகத்தன்பு சாகாது,

வாழ்வதுவே ஆகாது

வெயிலால் பட்ட மரம்…!

 

கிராமியப் பாணியில்…

 

பாலவனம் பாலவனம்,

பலனேயில்லாப் பாலவனம்..

 

மணலாத்தான் நெறஞ்சிருக்கும்,

மருந்துக்கொந் தண்ணியில்ல..

காலவச்சாச் சுட்டுப்புடும்,

மரத்தவச்சாப் பட்டுப்போவும்..

 

மனுசனுக்கு அன்புவேணும்

மனசுக்குள்ள அன்புவேணும்..

மனுசவாழுவு இதுதாம்பா-

அன்புருந்தா சோலவனம்,

அதில்லண்ணா பாலவனம்

அதிலநிக்கும் பட்டமரம்..

 

பாலவனம் பாலவனம்,

பலனேயில்லாப் பாலவனம்…!

 

படத்துக்கு நன்றி

 http://www.piersonplaza.com/about_the_area/index.html      

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “குறளின் கதிர்களாய்…(8)

  1. குறும்பாவும் நறுக்…..

    கிராமியப் பாணியின் …..
    “மனசுக்குள்ள அன்புவேணும்..
    மனுசவாழுவு இதுதாம்பா-
    அன்புருந்தா சோலவனம்,
    அதில்லண்ணா பாலவனம்”
    வரிகளும் அருமை. இதை விட எளிதாக  விளக்க முடியாது.

    அருமை… நன்றி …

    அன்புடன் 
    ….. தேமொழி 

  2. எத்தனை உறவுகள் இருந்தாலும் மனதில் அன்பில்லாவிட்டால், சேர்ந்த உறவுகளின் பிரிவுக்கு அதுவே காரணமாகிவிடும். மரபுக் கவிதை அருமை.  லிமரிக்கும் நெஞ்சைக் கொள்ளை கொண்டது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  3. ஒவ்வொரு வரியும் அருமை. மரபுக் கவிதையும், கிராமிய பாணியும் என்னை மிகவும் கவர்ந்தன. வாழ்த்துக்கள்.

  4. கருத்துரை வழங்கிச் சிறப்பித்த
    திருவாளர்கள் தேமொழி, பார்வதி இராமச்சந்திரன், சச்சிதானந்தம்
    ஆகியோருக்கு என் உளம்கனிந்த நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *