ஸ்னோடென்
பொய்மையைச் சுட்டெரிக்க புறப்பட்ட அக்கினி குஞ்சு
எஸ் வி வேணுகோபாலன்
உலகின் ஆகப் பெரும் சுதந்திர நாடு என்று தன்னை அறிவித்துக் கொள்கிற அமெரிக்காவில் தான் “உஷ்…சத்தம் போடக் கூடாது” என்ற அதிகார மிரட்டல் அமலில் இருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை எல்லா உரிமைகளும் குடிமக்களுக்கு உண்டு. ஆனால் ‘நீங்கள் பேசுவது, எழுதுவது, கருதுவது எல்லாவற்றையும் வேவு பார்க்கும் உரிமை எங்களுடையது’ என்கிறது அமெரிக்க ஆட்சி அதிகாரம். சீட்டு ஆட்டத்தில் அடுத்தவர் கண்ணில் படாமல் தங்களது சீட்டுக்களை அத்தனை சாமர்த்தியமாய் மறைத்துக் கொண்டு ஆடுகிற பலே கில்லாடி ஆட்டக்காரர்கள் உண்டு. அப்போது அங்கே இருக்கவே செய்யாத வேறு ஒரு நபர் வேறு எங்கோயிருந்து அவரை அலைபேசியில் அழைத்து, இந்தச் சீட்டை வச்சுக்காதே, அத எடுத்து ஆடு ” என்று சொன்னால் அவருக்கு எத்தனை அதிர்ச்சியாக இருக்கும்?
இப்படி உலகத்தைத் தனது உள்ளங்கையில் மை தடவிப் பார்த்துவிடுகிற வஞ்சக மந்திரவாதியாக பெரிய உரு எடுத்து நிற்கிறது ஏகாதிபத்தியம். மதுரை மீனாட்சி கோவிலுக்குள் நுழையும்போதே, நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள் என்று வெளியே ஒரு பலகையில் எழுதி வைத்திருப்பதைப் பார்க்க முடியும். அப்படி எதுவும் எழுதி வைக்காமல் உலகம் முழுக்கத் தனது கண்காணிப்பில் கொண்டு வந்து வைத்திருக்கிறது அமெரிக்கா. வெறும் உளவு இல்லை அது, தனி நபர் சுதந்திரத்தின் மீதான களவு என்பதைத் தான் எட்வர்ட் ஸ்னோடென் என்ற 29 வயது இளைஞர் அம்பலப் படுத்தினார். அவர் சொன்னதை விட்டுவிட்டு அவரைச் சிறைக்குள் தள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அவர் மீது என்ன குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது தெரியுமா, ஒற்று வேலை பார்த்ததாக !
எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்காவின் உளவுத் துறை நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் (NSA), பூஸ் அலென் ஹேமில்டன் என்கிற தனியார் குழுமம் ஒன்றினால் காண்டிராக்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தவர். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து அதிர்ந்து போய்விட்டார். இப்படி சொந்த மக்களையே உளவு பார்க்கும் தேசத்திலா நாம் வாழ்கிறோம் என்று வெறுத்துப் போனார். தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல் வழி நடக்கும் விவாதங்கள், கடித போக்குவரத்துக்கள் என ஒன்று விடாமல் மூன்றாவது நபர் ஒருவர் தங்களுடனே பயணம் செய்து கண்காணிக்கிறார், படிக்கிறார், கேட்கிறார், பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறியாத மக்களுக்கு உண்மைகளை உடைத்துச் சொல்லிவிடுவது என்று முடிவெடுத்தார்.
தக்க காரணம் சொல்லப்பட்டு வெளிப்படையான முறையில் எழுத்து பூர்வமான வகையில் யாரை எந்த இடத்தில் சோதனை செய்யப் போகிறோம் என்ற தகவல் தெரிவிக்கப்படாமல் இருக்கும் வரை, குடிமக்களுக்குத் தமது உடல்,வீடு, தஸ்தாவேஜுகள் எல்லாவற்றையும் குறித்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என நான்காவது திருத்தம் கொண்டுவரப்பட்ட அமெரிக்க அரசியல் சாசன சட்டம் 1791 கூறுகிறது. ஸ்னோடென் ஒரு தனி நபர். மனசாட்சி உள்ள ஒரு தனி நபர். தமது நாட்டு அரசியல் சாசன சட்டம் சொல்வதை – ஆட்சியாளர்கள் சத்திய பிரமாணம் எடுத்தவற்றை நம்பிக் கொண்டிருந்த, ஆனால் நடைமுறையில் அவை அத்துமீறப்படுவதை நேரடியாகக் கண்டு நிம்மதி குலைந்துபோன ஒரு தனி நபர். தனது மனம் தனக்கு இட்ட ஓர் ஆணையைத்தான் அவர் நிறைவேற்றினார். தமக்கு என்னவும் நேரலாம்,என்ன நேர்ந்தாலும் சரி என்ற தெளிவோடு தான் அவர் அதைச் செய்தார்.
வெராக்ஸ் (உண்மை விளம்பி) என்ற புனைபெயரை வைத்துக் கொண்டு, ஸ்னோடென் இரண்டு முக்கிய பத்திரிகையாளர்களுக்கு சங்கேத மொழியில் மின்னஞ்சல்கள் அனுப்பி வைத்தார். பார்டன் ஜெல்மன் (வாஷிங்டன் போஸ்ட் ) மற்றும் க்ளென் க்ரீன்வால்ட் (கார்டியன்) இருவருக்கும், அவர் இணைத்து அனுப்பியவை 2038ம் ஆண்டு வரை வெளிப்படையாக்கப் படக் கூடாதவை என்று வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள். இந்த ஜூன் 6ம் தேதியன்று மேற்படி நாளிதழ்கள் இந்த ஆவணங்களில் உள்ளவை குறித்து அம்பலத்திற்குக் கொண்டு வந்தார்கள். மூன்று நாட்கள் கழித்து தமது உண்மை பெயரையும் வெளியிட்டு விடுமாறு ஸ்னோடென் கேட்டுக் கொண்டதை வைத்து அந்த இரு நாளிதழ்களிலும் அவரது பெயரும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நான் செய்வது ஒவ்வொன்றும் நான் அறியாது வேவு பார்க்கப்படும் ஒரு தேசத்தில் வாழவே நான் விரும்பவில்லை என்று பேசிய சமயம், ஸ்னோடென் ஹாங்காங் சென்று அடைந்திருந்தார்.
ஜார்ஜ் புஷ் காலத்தில் பல மடங்கு கூடிப் போயிருந்த ரகசிய .உளவு மற்றும் கண்காணிப்பு வேலைகளால் கொதித்துப் போயிருந்த அமெரிக்க மக்களிடம், தாம் வித்தியாசமாக நடந்து கொள்வோம் என்று தேர்தல் பிரச்சார நேரத்தில் சொன்னவர் பாரக் ஒபாமா. அவரைப் பற்றிய மதிப்பீட்டின் உயரத்தை வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறது ஸ்னோடென் கட்டவிழ்த்துவிட்ட சங்கதிகள். எனவே ஒபாமா உடனடியாகக் கருத்து சொல்ல வேண்டி வந்தது. அவர் என்ன சொன்னார் என்பது முக்கியமானது.ஸ்னோடென் வெளியிட்ட விஷயங்கள் உண்மையா, பொய்யா என்று தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்துக் கூட ஒபாமா கண்டுகொள்ளவே இல்லை. நமது அனைத்து நடவடிக்கைகளின் ரகசியங்கள் எதுவும் இப்படி கசிவதை அனுமதிக்க முடியாது. ஸ்னோடென் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப் படவேண்டும் என்றார். இப்போது ஸ்னோடென் சொந்த தேசத்திற்கு எதிராகக் குற்றம் அல்ல, துரோகம் இழைத்தவராக அரசினால் அடையாளப்படுத்தப் பட்டுவிட்டார். அவர்களுக்கு ஏன்இத்தனை காட்டமாகக் கோபம் வருகிறது என்றால் ஸ்னோடென் அம்பலபடுத்தி இருக்கும் உளவு வேலைகள் அப்படி!
வெரிசான் என்னும் அமெரிக்காவின் இணையதள மற்றும் தொலை தொடர்பு நிறுவனத்தை அமெரிக்க அரசு அதிகார மிரட்டல் செய்து, அவர்களது சேவையைப் பயன்படுத்தி வருகிற எல்லா தொலைபேசி அழைப்புகளின் விவரங்களையும் தங்களுக்கு தெரிவிக்க உத்தரவு போட்டிருக்கிறது. உலகளாவிய அளவில் இணையதள சேவை வழங்கிக் கொண்டிருக்கும் ஆப்பிள், கூகிள், முகநூல், மைக்ரோசாப்ட், யாகூ, யூ டியூப் உள்ளிட்ட அமெரிக்காவின் ஒன்பது முக்கிய நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியான முறையில் விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்க அரசு. தங்களது வசமுள்ள விவரங்களைத் தோண்டி எடுத்துக் கொள்ள தாங்கள் யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று இந்த நிறுவனங்கள் சொல்லிக் கொள்கின்றன. ஆனால் அரசின் வசம் எல்லா விவரங்களும் போய்க் கொண்டிருக்கின்றன.
உலக நாட்டாமையாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்படி சொந்த நாட்டு மக்களின் நிழலையே திருடிக் கொண்டிருப்பதை ஸ்னோடென் அம்பலப் படுத்தியது பேரதிர்ச்சி செய்தியாக மூண்டது. ஆனாலும், ‘இதெல்லாம் தவிர்க்க முடியாதது’ என்ற ஒரு கருத்தாக்கத்தையும் அந்த சமூக அமைப்பு விதித்திருப்பதை, கருத்துக் கணிப்பின் ஏற்ற இறக்கங்களிலிருந்து காண முடிகிறது. செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுர தகர்ப்பு பயங்கர நிகழ்வை எந்த அமெரிக்கக் குடிமகனும், குடிமகளும் மறக்க முடியாது. ஏற்கெனவே உலக அளவில் தங்களுக்கு சவால், எதிர்ப்பு, பகைமை இருப்பதாக சித்தரித்துக் கொண்டே தான் இதர உலக நாடுகளுக்கு சவாலாக, அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் ஏகாதிபத்தியம் மக்களது பாதுகாப்பு உணர்வைத் தூண்டியே அவர்களை பாதுகாப்பற்றவர்களாக நடத்துகிறது.
என் எஸ் ஏ தனது நாட்டு மக்களை மட்டும் உளவு பார்க்கவில்லை. பிரிட்டன் உதவியோடு உலக அளவிலான முறையில் இந்த வேலையைத் திறம்பட செய்து கொண்டிருக்கிறது. 2 பில்லியன் டாலர் – இப்போதைய மதிப்பில், 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உடா என்ற இடத்தில் பெரிய பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றை நிறுவிக் கொண்டிருக்கிறது. அதில் எந்த அளவுக்கு விவரங்கள் சேகரித்து வைக்க முடியும், தெரியுமா? இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தலா பத்து லட்சம் டிவிடி வைத்திருந்தால் அவற்றின் மொத்த சேமிப்பு அளவு எவ்வளவோ அந்த அளவுக்கு!
ஸ்னோடென் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கும் செய்திகளால் பிரிட்டனிலும் மக்கள் அரசைக் கடுமையாகக் குறை கூறத் தொடங்கி உள்ளனர். ஆனால் பிரதமர் கேமரூன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை. “சட்டத்தை மதிக்கும் யாரும் இத்தகு உளவு நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சுவதற்கு எதுவுமில்லை, அவரவர் பாதுகாப்புக்காக சிறிது விலை கொடுத்துத் தான் ஆகவேண்டும்” என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டுவிட்டது.
உலக அளவில் நடக்கும் கூட்டங்களில் எந்தெந்த நாட்டிலிருந்து யார் யார் வந்து என்னென்ன சொல்லப் போகின்றனர் என்று முன் கூட்டியே திருட்டுத் தனமாக ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்து கொள்ளும் வேலையையும் என் எஸ் ஏ உரிய ஆட்களை வைத்து செய்து கொண்டுதான் இருக்கிறது. ஜி 20 கூட்டம் நடக்கையில்,பொருளாதார நிபந்தனைகள், நிர்ப்பந்தங்கள் போன்ற நுட்பமான விஷயங்கள் குறித்து முன்கூட்டியே விவரங்களை கள்ளத் தனமாக அறிந்து வைத்திருந்து பேச்சு வார்த்தைகளின் போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் சார்பாக பங்கேற்கும் பிரதிநிதிகள் உரிய விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவது உள்பட இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. 2009ல் லண்டனில் நடந்த அத்தகைய உச்சி மாநாடு ஒன்றில் அமெரிக்க உளவு நிறுவனத்துடன் பிரிட்டன் நிறுவனமான ஜி சி ஹெச் கியூ (UNITED KINGDOM’S GOVERNMENT COMMUNICATIONS HEAD QUARTERS) இணைந்து வேவு பார்த்திருக்கின்றனர். மேற்படி மாநாட்டில் நமது பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டிருந்தார் என்பதையும் சேர்த்து முந்தைய வரியை வாசிக்கவும்.
இப்போது ஆபத்தின் இன்னொரு பரிமாணத்தை கவனிப்போம். என் எஸ் ஏ வேவு பார்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. நம்மைக் குறித்த விவரங்களின் அளவு, 6.3 பில்லியன் விவரங்கள் அதாவது 6300 கோடி ! எப்படி இவ்வளவு விவரங்கள் போகின்றன என்பதைச் சொல்ல சித்தர் வித்தை எதுவும் தேவை இல்லை. கூகிள், யாஹூ, ஹாட் மெயில் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்கள் வழியாகத் தான் மின்னஞ்சல் பரிமாற்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், இந்தக் கட்டுரையை ஜி மெயிலில் தான் தீக்கதிருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அதைப் பெரும்தீக்கதிர் ஆசிரியர் மின்னஞ்சல் முகவரியும் ஜி மெயிலில் தான் இருக்கிறது. தனி மனிதர்களை விடுங்கள். அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள், பிரதம மந்திரி அந்தரங்க செயலாளர் உள்பட அனைத்து வகையிலும் செய்திகள், கொள்கை முடிவுகள், விவாதங்கள், கருத்துக்கள், முரண்பாடுகள் எல்லாம் அமெரிக்காவுக்கு முதலில் போய்விட்டுத் தான் மனிதர்களைப் போய்ச் சேரும் அளவு என் எஸ் ஏ தகவமைப்பு செய்துகொண்டிருக்கிறது.
ஆதார் அட்டை வாங்கியாயிற்றா என்று பய பக்தியோடு நடுத்தர வர்க்கம் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கிறது. தேடித் தேடித் போய் நின்று அப்பாடா கடமையை முடித்தோம் என்று பெரிய பெருமிதம் பொங்க வாங்கிக் கொண்டு வந்து நிற்கிறோம். ஆதார் விவரங்களை தக்க வைத்துக் கொள்ளவும்,விவரங்களை உரிய இடத்தில் உரிய வகையில் பாதுகாத்துப் பொருத்தி வைக்கவும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிடம் தான் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனங்கள் அமெரிக்க அரசு கேட்கும் எந்த விவரத்தையும் மறு பேச்சின்றி எடுத்துக் கொடுத்தாக வேண்டிய இடத்தில் இருப்பவை என்பதை மறந்துவிடக் கூடாது.
இறைவனது சக்தியைப் பாடும் பக்தர்கள் “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று பாடுவார்கள். அமெரிக்கக் கொள்கையை எதிர்ப்பதானாலும் அவர்கள் அருளால், அவர்களுக்கு முதல் தகவல் தந்துவிட்டுத் தான் நாம் எதிர்க்கவே முடியும். அவ்வளவு ஏன், இந்தக் கட்டுரையும் அவர்களது பார்வைக்கு முதலில் போயிருக்கும். மிக மிக மோசடியான, மோசமான, நய வஞ்சகமும், சூழ்ச்சியும் இணைந்த வலைப்பின்னலாகத் தனது உலக அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறது ஏகாதிபத்தியம். இதன் சில முனைகளை ஏற்கெனவே வெளிக் கொண்டுவந்த விக்கி லீக்ஸ் நிறுவனத்தின் ஜூலியன் அசாஞ்சே இன்னமும் பிரிட்டன் மண்ணில்தான் இருக்கிறார். தமக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கும் ஈகுவடார் நாட்டு தூதரகத்தின் உள்ளே காத்திருக்கும் அவரை ஈகுவடார் நாட்டுக்கு செல்ல இன்னமும் பிரிட்டன் அனுமதிக்கவில்லை. பிராட்லி மேனிங் என்ற இராணுவ வீரர், இராக் போரில் அமெரிக்கா செய்த அத்து மீறல் போர்க் குற்றங்களை புகைப்படம் எடுத்ததை விக்கி லீக்ஸ் நிறுவனத்திற்குத் தந்துதவிய குற்றத்திற்காக 2010 முதல் தனிமைச் சிறையில் வைக்கப் பட்டிருக்கிறார். அண்மையில் இராணுவ நீதிமன்றம் அவர் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றச் சாட்டுக்களில் இரண்டைத் தவிர அனைத்தும் நிரூபிக்கப் பட்டிருப்பதாகவும், மேனிங் குற்றவாளி தான் என்றும் சொல்லிவிட்டது. அவர்கள் கணக்குப் படி, இந்தக் குற்றங்களுக்காக மேனிங்குக்கு என்ன தண்டனை வழங்கப் படலாம் என்று யோசிக்கும்போது, கிட்டத் தட்ட 130 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப் பட வேண்டியிருக்கும்.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய அமெரிக்கர் ஜான் பெர்கின்ஸ், தனது வாழ்விற்குத் துணிந்து தான் உலக வங்கியின் சதி நடவடிக்கைகள் குறித்து புத்தகத்தை வெளியிட்டார். ஆரன் ஸ்வார்ட்ஸ் என்ற கணினி நிபுணரான 26 வயது இளைஞர் (ஆர் எஸ் எஸ் பீட் என்னும் வலைத்தளங்களிளிருந்து உடனுக்குடன் விவரங்கள் கிடைக்கப்பெற உதவும் மென்பொருளை உருவாக்கியவர்), அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பல்கலைக் கழகத்தின் ஜோ ஸ்டார் காப்பகத்தில் விலைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கணக்கற்ற அறிவியல் ஆய்வுகள், விவரங்கள் அடங்கிய உலகின் வாசலை தமது மென்பொருள் ஒன்றின் உதவியால் உடைத்துத் திறந்து ஆர்வமுள்ள யாரும் திறந்து படிக்கட்டும், பயன்படுத்தட்டும் என்று வழிகாட்டியதற்காக விசாரணைக்கு உட்படுத்தப பட்டார். சித்திரவதை தாளாமல் இந்த ஆண்டு ஜனவரி 11 அன்று தன்னை மாய்த்துக் கொண்டார்.
சொந்த நாட்டு மக்களையும் உலகையும் வேவு பார்க்கும் அரசை அம்பலப் படுத்திய ஸ்னோடென் இப்போது ஹாங்காங்கிலிருந்து மாஸ்கோ சென்று அங்கே காத்திருக்கிறார். அவர் ரஷ்யாவில் இருப்பதில் தங்களுக்கு பெரிய ஆட்சேபனை இல்லை, ஆனால் அவர் இந்த அம்பலப் படுத்தும் வேலைகளை விட்டுவிட வேண்டும் என்றும்,என்றும் ரஷ்ய அதிபர் புடின் சொல்லியிருக்கிறார். ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தர ஈகுவடார் தயார் என்று அந்த நாட்டுத் தலைவர் ரபேல் கொரியா சொல்லியிருக்கிறார். நிலைமைகள் எப்படி விரியும் என்று பொறுத்துத் தான் பார்க்க முடியும். அண்மையில் வந்த செய்தியின்படி, ரஷ்யா அவருக்கு அடைக்கலம் வழங்கிவிட்டது. அதனால் அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது.
இந்திய ஆட்சியாளர்கள் ஸ்னோடென் குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. தங்களது நாடு உள்பட அமெரிக்காவின் ரகசிய கண்காணிப்பில் இருக்கிறது என்பதைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள் ஸ்னோடென் பற்றி எதற்கு யோசிக்கப் போகின்றனர்? அண்மையில் பிரண்ட்லைன் இதழுக்கு நேர்காணல் அளித்திருக்கும் சிந்தனையாளர் தாரிக் அலி, ஸ்னோடென் துரோகி அல்ல, விடுதலை போராளி என்று வருணித்திருக்கிறார். ஆனால் பாவம், அவர் தனி நபர். மக்கள் இயக்கமாகப் புறப்படாமல் அரசுகளின் பயங்கரவாதத்தை முறியடிக்க முடியாது என்பதையும் அவர் விளக்குகிறார். ஸ்னோடென் நேர்மையான உள்ளத் துடிப்பு கொண்டு சிறகடிக்கும் இளைய தலைமுறையினரின் குறியீடு. அக்கினி குஞ்சு. பொய்மையைச் சுட்டெரிக்க எரியும் தீ. அது நின்று எரிவது அவசியம். அந்தத் தீயைப் பரப்புவது எதிர்கால உலக சமூகத்திற்கு நல்லது.
***********
நன்றி புதிய ஆசிரியன் (ஆகஸ்ட் 2013)