நிலவின் மறுபக்கத்தை நம்மால் ஏன் காணமுடிவதில்லை?

6

தேமொழி

மனித இனம் தோன்றியது முதல் நிலவினைப் பார்த்து வியந்து வந்திருக்கிறது. நிலவைப் பற்றியத் தெளிவான உண்மைகள் அறிந்திராத பொழுதும் புனைக்கதைகள் பல புனைந்து வந்திருக்கிறது, அக்கதைகளைப் புராணங்களில் ஏற்றி கடவுளர்களின் வரிசையில் நிலவினை இடம்பெறவும் செய்துள்ளது.  மேலும் மனித இனம் நிலவின் அழகில் மயங்கி சில நேரங்களில் நிலவைப் பெண்ணாகவும் பாவித்து கவிதைகள் பலப் பாடிப் போற்றியுள்ளது, நிலவையே காதலுக்குத் தூதகவும் அனுப்பியிருக்கிறது.

காலம் உருண்டோட, அறிவியல் வளர, நிலவைப் பற்றிய உண்மைகள் அறிவியல் மூலமாக நிரூபிக்கப்பட்ட பொழுது கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் அந்த உண்மைகளையும் எடுத்தாண்டனர்.

ஜூலை 21, 1969 அன்று அமெரிக்க விண்வெளி வீரர் ‘நீல் ஆர்ம்ஸ்ட்ராங்’ (Neil Armstrong) நிலவில் காலடி வைத்த பிறகு, அதுவும் கவிதைகளில் வெளிப்பட்டது.

“நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்”
என்று கவியரசர் புதிய உலகம் நோக்கி நம்பிக்கைத்  தொனிக்கும் கருத்தைப் பாடினார்.

அத்துடன் நில்லாது, காதலன் தன் காதலியிடம் கேட்பதாக,
“உறவின் ஒருபக்கம் நீயறிவாய்,
இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்?”

என்றும் கவியரசர் கண்ணதாசன் மற்றுமொரு கவிதை வரிகளிலும் ஓர் அறிவியல் உண்மையைப் புகுத்திப் பாடல் வழங்கியிருப்பார்.

பூமியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் நிலவைக் காலம் காலமாக அண்ணாந்து நோக்கினாலும் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து வருகிறோம். நிலவின் மறு பக்கத்தைப் பார்க்க முடிந்ததில்லை. இதுவரை நிலவைச் சுற்றிய விண்வெளி வீரர்களுக்கு மட்டுமே நிலவின் மறுபக்கத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நாம் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது நம் கண்களுக்குப் புலப்படாவிட்டாலும் உண்மையில் நிலவு சுழல்கிறது. பூமியைப் போலவே நிலவுக்கும் தன் அச்சிலேயே (own axis) சுழற்சி உண்டு, ஆனால் நம் கண்களால் அறிந்து கொள்ளும் வண்ணம் அச்சுழற்சி அமையவில்லை.

நிலவு அவ்வாறு சுழலும் பொழுது நிலவின் மறுபக்கம் நமக்குத் தெரிந்துதானே ஆகவேண்டும், பின் ஏன் நிலவின் மறுபக்கத்தை நம்மால் காண இயலவில்லை?

இதற்கு புவியின் சுழற்சியும் நிலவின் சுழற்சியும் ‘ஒத்த சுழற்சிப்பிணைப்பு’ (Tidal locking or captured rotation) என்ற வகையில் அமைந்திருப்பதே காரணம்.  இந்த ஒத்த சுழற்சிப் பிணைப்பு என்ற பண்பினால் நிலவின் ஒருபக்கம் மட்டுமே எப்போதும் புவியை நோக்கி அமைகிறது. இதனைக் கீழ்வரும் படம் விளக்குகிறது.  இடது பக்கம் உள்ள சுழற்சி ஓர் ஒத்த சுழற்சிப்பிணைப்பு. நிலவு புவியைச் சுற்றும் பொழுது கரும்புள்ளிகள் அமைந்த பகுதி புவியை எப்பொழுதும் நோக்கிய வண்ணமே உள்ளது.  புவியும் நிலவும் சுழல்கின்றன.  ஆனால் அவற்றின் சுழற்சி ஒத்திருக்கிறது.  மாறாக வலது பக்கம் உள்ள படம், ஒத்த சுழற்சிப்பிணைப்பு அமைந்திராவிட்டால் எவ்வாறு நிலவின் கரும்புள்ளிகள் அற்ற மறுபக்கமும் புவியை நோக்கித் திரும்பும் என்று விளக்குகிறது.

ஒத்த சுழற்சிப்பிணைப்பு

இந்த ஒத்த சுழற்சிப் பிணைப்பிற்குக் காரணம், நிலவு தன்னைத் தானே முழுமையாக ஒருமுறை சுற்றிவரும் காலமும், புவியை அது முழுமையாக ஒருமுறை சுற்றிவரும் கால அளவும் ஒன்றாகவே இருப்பதால் அமைகிறது.   நிலவு தன் அச்சில் ஒரு முழுமையான சுழற்சியை முடிக்கும் கால அளவு 27 நாட்கள். அதேபோல, நிலவு புவியை ஒருமுறை முழுமையாகச் சுற்றிவரும் கால அளவும் 27 நாட்களே. இவ்வாறான ஒத்த சுழற்சியினால் (synchronous rotation) நிலவின் ஒரே பக்கமே புவியை நோக்கி இருக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.

புவியின் நிலா அதனுடன் ஒத்தசுழற்சிப்பிணைப்பில் இருப்பது போலவே, சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களான செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களின் நிலவுகளும் அந்தந்தக் கோள்களுடன் ஒத்த சுழ்ற்சிப்பிணைப்பிலேயே சுழன்று வருகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளாக, ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் (The National Aeronautics and Space Administration / NASA) செலுத்திய ‘நிலவு ஆய்வு விண்கலம்’ (Lunar Reconnaissance Orbiter / LRO) நிலவைச்சுற்றி வந்து,அதனைப் படங்கள் பல எடுத்து, அத்துடன் இன்றியமையாதத் தகவல்கள் பலவற்றையும் நாசாவிற்கு அனுப்பி வருகிறது.

‘நிலவு ஆய்வு விண்கலம்’ (Lunar Reconnaissance Orbiter / LRO)

விண்வெளி ஆய்வு மையம் இத்தரவுகளையும் படங்களையும் ஆராய்ந்து,  நிலவின் ஒவ்வொரு கோணத்தின் படத்தையும் பொருத்தி இணைத்து “நிலவின் சுழற்சி”யை ஒரு காணொளியாக  சென்ற வாரம் (செப்டம்பர்  11, 2013 அன்று) வழங்கியுள்ளது.  இருபத்தியைந்து நொடிகளே கொண்ட இக்காணொளி மூலம் நாம் இன்று நிலவின் மறுபக்கத்தையும் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  உண்மையில் எப்பக்கம் பார்த்தாலும் நிலவின் அழகு மனத்தைக் கவரும் வண்ணமே அமைந்துள்ளது.

காணொளி: நாசா விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய நிலவின் சுழற்சிப் படம்

 

 

References:
[1]
Amazing NASA video shows the moon like you’ve never seen it before, September 16, 2013, Scott Sutherland, Geekquinox, YAHOO News, http://news.yahoo.com/blogs/geekquinox/amazing-nasa-video-shows-moon-ve-never-seen-164200739.html?vp=1

[2]
Lunar Reconnaissance Orbiter – http://www.nasa.gov/mission_pages/LRO/main/index.html#.UjtQVRD9UQp & http://lro.gsfc.nasa.gov/

[3]
A Unique View Of The Moon – http://lroc.sese.asu.edu/news/index.php?/archives/790-A-Unique-View-Of-The-Moon.html

[4]
Tidal locking – http://en.wikipedia.org/wiki/Tidal_locking

Videos:
Rotating Moon from LRO – http://youtu.be/sNUNB6CMnE8

 

Pictures:
Tidal locking of the Moon with the Earth – http://en.wikipedia.org/wiki/File:Tidal_locking_of_the_Moon_with_the_Earth.gif
Lunar Reconnaissance Orbiter  – http://www.nasa.gov/sites/default/files/styles/466×248/public/screen_shot_2013-06-12_at_10.42.00_am.png?itok=nwO6p8x-

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “நிலவின் மறுபக்கத்தை நம்மால் ஏன் காணமுடிவதில்லை?

  1. /// நிலவைப் பற்றியத் தெளிவான உண்மைகள் அறிந்திராத பொழுதும் புனைக்கதைகள் பல புனைந்து வந்திருக்கிறது, ////

    மெய்யாலுமா!!! 

    விஞ்ஞானிகள்! (இன்றைய அறிவியல்) நிலவிற்கு பின்புறம் பார்த்து விட்டார்கள்! எத்தனை காலம் கழித்து எத்தனை உபகரணங்களுடன்.

    வான் மண்டலத்தையே மிகவும் துல்லியமான அளவில் அதன் சுழற்சி வேகம்= காலம் என்று எத்தனையோ அற்புதங்களை பறந்து பறந்து பார்த்திருக்கிறானே மெஞ்ஞானி!!! அவன் கொடுத்தது எத்தனை இருக்கு முழு பூசணிக்காயை சோற்றில் வைத்து மறைக்கிறீர்களே!!!

    சும்மாத் தானே சொல்றீங்க! உண்மையை அறிந்திராத என்று.. 🙂

  2. ///வான் மண்டலத்தையே மிகவும் துல்லியமான அளவில் அதன் சுழற்சி வேகம்= காலம் என்று எத்தனையோ அற்புதங்களை பறந்து பறந்து பார்த்திருக்கிறானே மெஞ்ஞானி!!! அவன் கொடுத்தது எத்தனை இருக்கு முழு பூசணிக்காயை சோற்றில் வைத்து மறைக்கிறீர்களே!!!///

    நிலவில் பாட்டி வடை சுட்ட கதை, குருத்துரோகியாக மாறியதால் சந்திரன் கெட்டது பெண்ணாலே போன்ற கதைகளை மனதில் வைத்து எழுதினேன் ஆலாசியம்.  நீங்களும் உங்கள் கோணத்தில் மெய்ஞான விளக்கங்களை பகிர்ந்துகொள்ளுங்களேன். 

    மாற்றுக் கோணம் மேலும் விவரங்கள் தருமல்லவா? 
    உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

  3. ///நிலவில் பாட்டி வடை சுட்ட கதை, குருத்துரோகியாக மாறியதால் சந்திரன் கெட்டது பெண்ணாலே போன்ற கதைகளை மனதில் வைத்து எழுதினேன் ஆலாசியம்.  நீங்களும் உங்கள் கோணத்தில் மெய்ஞான விளக்கங்களை பகிர்ந்துகொள்ளுங்களேன். ///

    அப்படிஎன்றால் சரி! 

    /// நிலவைப் பற்றியத் தெளிவான உண்மைகள் அறிந்திராத பொழுதும் புனைக்கதைகள் பல புனைந்து வந்திருக்கிறது, அக்கதைகளைப் புராணங்களில் ஏற்றி கடவுளர்களின் வரிசையில் நிலவினை இடம்பெறவும் செய்துள்ளது.///

    அதிலும் “நிலவைப் பற்றியத் தெளிவான உண்மைகள் அறிந்திராத பொழுதும்”

    இந்த வரிகள் தான் என்னை அப்படி எழுத முனைத்தது…

    தாங்கள் கூறும் கதைகளின் அவசியம் அல்லது அதன் நோக்கம் ஆராய வேண்டியதும் கூட… 

    நிலவை நிலவாக பார்ப்பதும் அந்த நிலவின் இயக்கத்திற்கு காரணமான சக்தியை கடவுளாகப் பார்ப்பதற்குமான வித்தியாசம்…. இந்த பரவெளியில் அந்தரத்தில் சுழலும் இந்தக் கோள்களில் இருக்கும் சூட்சுமத்தைப் பற்றிய கருத்து.. எந்த உபகரணமும் இல்லாமல் உள்ளுணர்வால் இந்த பரவெளிகளை பற்றிய சாஸ்திரங்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கூறிய மகா ஞானிகளின் கூற்றுகளின் சாரம் அவைகள்..

    இறை கொள்கைப் படி அதுவே எல்லாமும் அதனில்லாத வேறேதும் இல்லை என்பதும் ஆகும்… 🙂 

    கடைசியில்….. வேண்டாம் வெவ்வேறு மொழிகளால் ஒருக் கருத்தை பற்றிய உரையாடலாக முடியும் 🙂
     
    பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு! என்பார்களே… 
    அப்படி இனியும் அந்த மெஞ்ஞானத்தால் தான் நமது முன்னோர்களின் வானவியல் சாஸ்திரங்கள் பற்றிய அனைத்தையும்… ஜோதிட சாஸ்திரங்களையும் அதை எங்கும் காணும் மகாபாரத, இராமாயண மற்றும் சங்க இலக்கியங்களில் கூறாததா!

    அனைவரும் அறிந்ததே இருந்தும் கூற வேண்டிய அவசியம் வருமாயின் காண்பிப்பதில் தவறில்லை…

    தாங்கள் அறியாததா! 

    பதிவில், தங்களின் உழைப்பும் அதை அனைவருடனும் பகிரும் நல்ல எண்ணமும் போற்றுதலுக்கு உரியது அதை நான் எப்போதும் போல பாராட்டுகிறேன் சகோதரி!

  4. ஆயிரம் நிலவே வா… என்றொரு பாடல் அது போல் ஆயிரம் பாடல் இந்த நிலவை வைத்து, பெண்ணின் அழகுக்கு நிலவு, குழந்தைக்கு சோறூட்ட நிலவு என்று தேன்கூடு
    போலவே பார்த்து பழகிவிட்ட எனக்கு நிலவின் மறுபக்கம் காண தந்த தேமொழிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

    ஆராய்வதே இந்த விஞானிகளுக்கு வேலை, நிலவின் மறுபக்கம் என்ன என்பதை ஆராய்ந்து அதை தான் கண்டு உலகுக்கும் காண தந்திருக்கும் விஞ்ஞானிகளின் உழைப்பு
    மெச்சி போற்றப்பட வேண்டும்.

    இது போன்ற கட்டுரைகள், செய்திகள் தேடி படிக்க தரும் தாங்களின் உழைப்புக்கும் மிக்க நன்றிகள் தேமொழி, இன்னும் தொடருங்கள்.

  5. ‘நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் இரகசியம் தானா?” என்ற கவிதை வரிகளை விஞ்ஞானிகள் பொய்யாக்கிவிட்டனர்.

    இதுபோன்ற அரிய அறிவியல் கட்டுரைகளை தொடர்ந்து வழங்கிவரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் திருமதி. தேமொழி அவர்களே!

  6. முகத்தை மட்டுமே நமக்குக் காட்டிவரும் நிலவின் முதுகையும் இன்று கண்டோம். நிலவினை ஏன் முழுவதுமாகப் பார்க்கமுடிவதில்லை என்பதற்கான அறிவியல் காரணத்தையும் அறிந்துகொண்டோம் தேமொழி.

    நிலவினை “close up” இல் பார்க்கும்போதுதான் அதன் உண்மையான வடிவம் புலப்படுகிறது. எத்தனை கரும்புள்ளிகள் அதன் முகத்தில்? பெண்களின் முகமும் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது என்று கிண்டல் செய்வதற்காகவே ஆண்கள் ’நிலவுமுகம்’ என்று பெண்களின் முகத்தை (வஞ்சப் புகழ்ச்சியாக) வர்ணிக்கிறார்களோ?! 🙂

    அருமையான புதிய தகவல்கள் பலவற்றைத் தொடர்ந்து தங்கள் கட்டுரைகள் வாயிலாக அறியத் தருகிறீர்கள் தேமொழி! பாராட்டுக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *