தாது மணலும் சுத்தீகரிக்கப்பட்ட நீரும்!

2

பவள சங்கரி

தலையங்கம்

செப்டம்பர் 15, அண்ணா பிறந்த நாளில் சுத்தீகரிக்கப்பட்ட நீர் தமிழக விரைவுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி. தாது மணல், இயற்கை வளங்கள் அனைத்தும் மக்களுக்கு உரிமையானது என்பதில் மாநில, மத்திய அரசுகளும் உறுதியாக இருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டங்களில் கிடைக்கக்கூடிய தாது மணல்களை பல லட்சம் டன் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறகு இப்பொழுதாவது விழித்துள்ளோம். இரும்பு தாதுப் பொருட்களும், நிலக்கரிச் சுரங்களும் கொள்ளையடிப்பதைப் பார்த்து மனம் வெதும்பி போராடக்கூடிய சூழலில் இருக்கிறோம். இது போலவே இந்த சுத்தீகரிக்கப்பட்ட நீரும், இயற்கை வளங்கள்தான். இவைகளுக்கு உரிமையுடையவர்கள் மக்களும், மத்திய மாநில அரசுகளும்தானே. முதலில் ஆரம்பிக்கப்பட்டபோது லிட்டர் 10 ரூபாய், 2 லிட்டர் 16 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இப்போது ஒரு லிட்டர் சுத்தீகரிக்கப்பட்ட நீர் 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் விலையை நிர்ணயிப்பவர்கள் யார். இதனையும் அரசாங்கம் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கேன் 25 முதல் 30ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படியென்றால் சுத்தீகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் தன்ணீர் அவர்களுடைய லாபத்துடன் சேர்த்து ஒரு ரூபாய்தான் ஆகிறது. அப்படியிருக்க எதற்கு இவ்வளவு விலை. செலவினங்களைச் சேர்த்துக் கொண்டாலும் அதிக பட்சமாக லிட்டர் 5 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்னும்போது எதற்கு மக்களை கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். நிலத்தினடியிலிருந்து கிடைக்கும் அனைத்தும் அரசிற்கும், பொது மக்களுக்கும் சொந்தமானது. சுத்தீகரிப்பிற்கான செலவும், அதற்குண்டான லாபமும் வழங்க வேண்டியது மட்டுமே நியாயமல்லவா.. ஒன்றுக்கு 1000 சதவிகிதம் லாபம் வாழ்வாதாரமான குடி நீருக்கு விதிப்பது அநியாயம் அல்லவா.. மாதத்திற்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்குவது போல ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் மாதத்திற்கு குறைந்த பட்சமாக 100 லிட்டர் சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க வேண்டும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தாது மணல் கொள்ளையை தடுத்தது போல அரசு இதிலும் கவனம் செலுத்துமா? தாது மணலிலிருந்து என்னென்ன பொருட்கள் தயார் செய்ய முடியும் என்பதற்கான ஆய்வரங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக வெளிநாடுகளில் அவர்கள் இதனை மூலப் பொருளாகக்கொண்டு என்னென்ன பொருட்கள் தயார் செய்கிறார்களோ அதை நாமும் நம் நாட்டில் தயார் செய்யும்பட்சத்தில் வேலைவாய்ப்பும், நாட்டின் வளமும் பெருகும் இல்லையா?

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தாது மணலும் சுத்தீகரிக்கப்பட்ட நீரும்!

 1. அரசாங்கம் விற்கும் குடி நீர்,நல்லதொரு திட்டம். பயனிகளும், மற்றவர்களும் நன்கு பயன் படுத்திக்கொள்ளும் திட்டம்.அதோடு சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட இட்லி வியாபரம், மதிய உணவு, மற்றும் இரண்டு நாளாக தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் ஆட்டோ மீட்டர்,சோதனை இவையாவும் நடுத்தர மட்டும், கீழ்தட்டு மக்களுக்கு 100 சதவீதம் பொருளாதார சேமிப்பை தரும்திட்டம். இதற்காக தமிழக அரசை பாராட்டியே ஆகவேண்டும்.

  ஆனால் இவைகள் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து ஓட்டு போடும் வர்கத்திற்கு வழங்கி இருக்கும் ஒரு சலுகையாகவோ .தேர்தல் முடிந்த பின் இவைகள் தொடராமலேயோ போகலாம். ஏன் என்றால் நம் இந்திய ஆட்சியாளர்களின் வரலாறு சொல்லும் உண்மை அதுவாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அப்படி இல்லாமல்
  தேர்தலுக்கு பின்பும் இதை இன்னும் செம்மை படுத்தி,நீர், உணவு ஆகியவைகளை தர ஆய்வு செய்து முற்றிலும் சுகாதாரமான முறையில் தந்து தொடரவேண்டும் என்பதே அதனை இப்போது பயன்படுத்தும் சாமன்யனின் வேண்டுகோள், மற்றும் ஆசை.இது கண்டிப்பாக நிறைவேறும் என்றே நம்புவோம்.

  அடுத்து ஆசிரியரின் கட்டுரையில்
  ///ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் மாதத்திற்கு குறைந்த பட்சமாக 100 லிட்டர் சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க வேண்டும்///

  என்று வருவது ஆசிரியரின் நிலையில் மாற்றமோ என என்னம் வருகிறது. சில மாதம் முன்பு ஒரு கட்டுரையில் ‘இலவசம் வேண்டாம்” எனும் பொருள் பட ஒரு நல்ல கட்டுரை தந்திருந்தார்.

  இப்பொதும் இலவசம் வேண்டாம் என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். வேண்டுமென்றால் விலை நிலவரங்களை குறிப்பிட்டு சொன்னது போல் இன்னும் விலை குறைத்து குறிப்பிட்ட இடங்கள் என்று இல்லாமல் தமிழகம் முழுக்க கிடைக்க செய்ய வேண்டும்.

  தாது மணல் மிக முக்கிய பங்காற்றுகிறது எண்ணெய் வளகடல் பகுதியில். பெட்ரோல் கிடைக்கும் கடலில் உள்ள எண்ணெய் கினறுகளின் இரும்பிலான கட்டங்களை (offshore platform) பராமரிக்க இந்த மனலே பயன்படுத்துகிறர்கள். oil and gas offshore platform களின் இரும்புகள் துரு பிடிக்காமல் இருக்க painting செய்வதற்கு முன் blasting செய்வார்கள். அந்த Blasting செய்வதற்கு இந்த மணலே பயன் படுத்துவார்கள். இது நான் சார்ந்த எண்ணெய் வள கடல் பணித்துறை என்பதால் இதனை தந்துள்ளேன். அதிக விலையானது. இதனை கட்டுப்படுத்தி அரசு சொந்தமாக்கியது பாராட்டக்கூடியது.

 2. அரிசியை இலவசமாகக் கொடுக்கும் அரசு சுத்திகரிக்கப்பட்ட நீரை விலைக்கு விற்கிறது. என்ன ஒரு முரண்பாடு. சுகாதாரமான குடிநீரைப் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. mixi, fan, TV எல்லாம் இலவசமாக வழங்குவது போல சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்குகிறோம் என்று எந்த அரசும் கூறிக் கொள்ள முடியாது.

  தாது மணல் இனிமேலாவது சூதுவாது இன்றி முறையாக எடுக்கப்படட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *