தொலைத்ததும்.. கிடைத்ததும்..! – 4

ஜெயஸ்ரீ ஷங்கர்

இந்தா…வளியை விடு என்று அவனைப் பார்த்து ஏளனமாகச் சொன்ன மலர்விழி, சார்….பாக்கிங் ஆபீசுக்கு அளைச்சிட்டுப் போறதாச் சொன்னீங்களே….அதான் ரூம்பைக் காலி பண்ணீட்டு வந்தேன். இப்பவே அங்கன போயிரலாமா..என்று தனது பையை டேபிளின் மீது தொப்பென்று வைத்தாள் .

அதுங்கையிலே….சொல்லிட்டியா…? கர கரத்தது மேனஜரின் குரல்.

..ம்ம்ம்……! சரின்னிச்சு.

அப்பச் சரி. கெளம்பு….என்றவர், எட்டிப் பார்த்து, ஏல பாண்டி….நில்லு..! நீயும் கூட வா. நானே அளச்சிட்டுப் போறேன்,

அது எதுக்கு சார் அந்த எடத்துக்கு ? ஒண்ணுமே தெரியாதவள் போலக் கேட்டாள் மலர்.

.ம்ம்ம்ம்ம்…..உங்களோட சேர்ந்து கும்மியடிக்க…! எரிச்சலுடன் சொன்னவர், நொய்யி…நொய்யின்னு எல்லாத்துக்கும் கேள்வி கேட்கப் படாது. வாயை மூடிட்டு வா….என்றவர் கதவைப் போட்டுவிட்டு பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

இதைப் பார்த்த மலர், சிரித்து விட்டாள் .

ஏம்புள்ள ….என்னாத்துக்கு இந்தச் சிரிப்பு…?

ஏன்…சார்…..பூட்டுல போயி நீங்க இந்தத் தொங்கு தொங்கிப் பார்க்கறீங்களே …..உங்க கனம் தாங்காமே…..அது அப்படியே களண்டு விழுந்துச்சின்னா….! அத்த நினைச்சித் தான் சிரிச்சேன்.

பல்லக் களட்டீருவேன் …..சாக்கிரத..!

அம்மாடியோ…பொய் கோபத்துடன் கூடவே நடந்தாள் .

தூரத்தில் பாண்டி, புகை பிடித்தபடியே  புகைவளையம் விட்டபடியே இவளைப் பார்த்தபடியே எதையோ யோசித்துக் கொண்டு நின்றிருந்தான். ‘இந்தப் புள்ள நல்ல அளகி தான்….அந்த ஷீலாவைக் காட்டியும்….அத்தத் தள்ளி விட்டுட்டு இத்தக் கட்டிக்கிட்டாப் போச்சு…..டேய் பாண்டி நீ சூபெர்டா….என்று தனக்குத் தானே தட்டிக் கொள்கிறான்.

அவனைப் பார்த்தவள் ,லச்சாதிபதி கனவு காணறியா? பின்னால லத்தில வாங்கும் போது புரியும்…! மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள் மலர்விழி.

மூவரும், மூன்று விதமாக நினைத்தபடி டெம்போ வண்டி ஏறி பாக்கிங் ஆபீஸ் வந்து சேர்ந்தார்கள். வந்திறங்கிய இடத்தைப் பார்த்து சற்றே பயந்து போனாள் மலர்விழி.

பெரிய பெரிய கிரானைட் கற்களை  சிமெண்டில் புதைத்து ஆறடி உயரத்தில் எழுந்து நின்றது நீளமான காம்பௌண்ட் சுவர். அதன் உயரத்தையும் மீறி கூர்மையான கண்ணாடித் துண்டுகள் புதைக்கப்பட்டு அதுவும் போதாதென்று இரும்பு முள் வேலி வேறு அவளை பயமுறுத்தியது.

இரும்புக் கதவுகள் க்ர் க்ர் க்ர் க்ர் க்ர் க்ர் க்ர் க்றீச்……கனமான இரும்புக் கதவைத் திறந்த அறுவாள் மீசை இவளை ஒரு மாதிரி பார்த்து மிடறு விழுங்கியது. மேனேஜருக்கு விறைப்பாக நின்று சலாம் போட்டது.

தரையில் நேராகப் பாதை முழுதும் கரடு முரடாக கூழாங்கற்கள் பதிக்கப்பட்டு கம்பீரமாக இருந்தது. அதன் இரண்டு பக்கமும்
அடர்த்தியாக பஞ்சுப் பொதிகளாக பச்சைப் புல்வெளி….அழகாக மிரட்டியது .

பால் வெள்ளை நிறத்தில் பல அடுக்கு மாடி வீடுகள், ஜன்னல்கள், பால்கனிகள், பூந்தொட்டிகள் என்று ரம்மியமாக இருந்த அந்தக்
குடியிருப்பை அதிசயமாகப் பார்த்தபடியே மெல்ல நடந்து வந்தவள்..கருப்பு கிரானைட்டில் ‘ஆஞ்சநேயுலு ப்ளாசா” என்று  தங்க எழுத்துக்களாக மின்னிக் கொண்டிருந்தது. அதைப் படித்தவளுக்கு ‘அமீர்பெட் ஆஞ்சநேயுலு ‘ கண் முன்னே வந்து போனார்.

எத்தனை அபலைப் பெண்களின் கண்ணீரும், வயிற்றெரிச்சலும், போட்ட  சாபங்களும் இப்படி இவன் மனது போல செங்கல்லும்,கூழாங்கல்லும்.கிரானைட் கல்லுமாக மாறி கட்டிடமாய் எழும்பி நிக்கிதோ…? படு பாவி…..உன்னைப் பார்த்தால் ஏதோ ஆஞ்சநேயர் கோயில் பூசாரி மாதிரி இருந்துக்கிட்டு, இப்படி அட்டூழியம் பண்றியே ….அந்த ஆஞ்சநேயருக்கே பொறுக்கலை….! அதான் என் மூலமா வந்திருக்காரு.  இத்தோட உன் ஆட்டம் க்ளோஸ்..! அமீர்பெட் ஆஞ்சநேயுலு…… உன் முகத்திரை கிழியப் போகுதுலு ….! எண்ணிக்கொண்டே நடந்தாள்….நடந்தாள் …!

பல வண்ண நிறத்தில் கார்கள் வரிசையாக நின்று வரவேற்றது போலிருந்தது இவளுக்கு.

அதையும் கடந்தார்கள்.

பாண்டி தான் சொன்னான்….! பார்டி பல்லானதா…இருக்கும் போல்ருக்கு …! சும்மா சினிமா சூட்டிங்கு நடக்குற எடத்துக்கு போறாப்புலல்ல இருக்கு. இங்க லட்சம் எல்லாம் ஜுஜூபி…! கண்ணா…..கோடி எண்ண ஆசையா…? என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

வாங்குவ….வாங்குவ…!அதுக்கும் மேலே கொடுப்பாங்க…..அத்தனையையும் எண்ணிட்டு கம்பியையும் எண்ணு …! இவளும் சொல்லிக் கொண்டாள் .

அங்கங்கு தென்படுபவர்கள் ஒவ்வொருவரும் செக்யூரிட்டியாகவே இருந்தார்கள். ‘இது நெசமாலுமே ஊறுகாய் பாக்கிங் கம்பெனி தானா…இம்புட்டு பெரிசா இருக்கு…? சந்தேகமாக மேனஜரைப் பார்த்து கேட்டு வைத்தாள் .

நீ…உன் வாயை வெச்சுக்கிட்டு சும்மாலுமே வரமாட்டியா..? இங்கன வா….ஒரு பட்டனைத் தட்டுகிறார்.

புள்ளிப் புள்ளியாக சிகப்பு விளக்குகள் கீழ் குறியிட்டு மின்னியது. சிறிது நேரத்தில் லிஃப்ட் வந்து நின்றது.

உள்ளார வா….மாடிக்கு இட்டுண்டு போகும்….சொல்லியப்படியே உள்ளே நுழைந்து கொள்ள…கதவு மூடப் போகிறது…அதைத் தடுத்த பாண்டி….ஏய்….ஏறு என்று அதட்டுகிறான்.

இதென்னது..? மேலேர்ந்து ரூம்பு வருது….? பயந்து போனவள் நான் இதில வரலை….மாடிக்கி நான் மச்சு வளியா வரேன்….அடம் பிடிக்கிறாள்.

சீ …..உள்ளார வா..என்று அவளது கைகளைப் பிடித்து இழுக்கப் போக, வேறு வழியில்லாமல் உள்ளே அவளே நுழைந்து கொள்கிறாள்.

லிஃப்ட் மேலே ஏறும் போது , திகிலுடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்கிறாள். அங்கிருந்த பெரிய கண்ணாடியில் ஆச்சரியமாக தன்னை பல கோணங்களில் பார்த்துக் கொள்கிறாள். கூடவே அந்த இரண்டு பேரும் தன்னை கவனிக்கிறார்களா..? என்றும் பார்த்துக் கொள்கிறாள்…மலர்.

ஆறாவது மாடியில் சென்று இவர்களை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் கீழிறங்கும் லிஃப்டை  கண் கொட்டாமல் பார்த்தவள், திடீரெனத் திரும்ப அங்கு யாரையும் காணாமல் திடுக்கிட்டு….சுற்றும் முற்றும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு அந்த பெரிய கண்ணாடி போல பள பளக்கும் நீண்ட கரும் பச்சை மார்பிள்  தரையில் காலை வைத்ததும், சொய்ங் …என்று வழுக்கத் தடுமாறியவள் சுதாரித்துக் கொண்டு மெல்ல மெல்ல கைகளால் அப்படியும் இப்படியும் பாலன்ஸ் செய்து கொண்டே நடக்கிறாள்…
தனிமை, ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி, மூடிய கதவுகளும் ஜன்னல்களும்,நிசப்தமான சூழல் இவையாவும் அவளைத் திகிலடையச் செய்தது.

பா…..பா….பா….ண்டி …..பாண்டீஈஈஈஈ….என்று தட தட வென்று ஓடி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரென்று வழுக்கி விழுந்ததும்……யம்மாஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…….என்று கண்களை இறுக்க மூடிக் கொள்கிறாள்.

இவள் விழுந்து கிடப்பதைக் கண்டு கல கல வென்று சிரித்தபடியே அவளுக்கு உதவ பாண்டி ஓடி வருகிறான்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.