Featuredஅறிவியல்பத்திகள்

படைப்பாற்றல் நம் மூளையின் எப்பகுதியில் உருவாகிறது?

தேமொழி

[குறிப்பு:  இக்கட்டுரை சென்ற மாத,  ‘சயின்டிஃபிக் அமெரிக்கன்’ (Scientific American, August 19, 2013 issue) இதழில் வெளியான, பேராசிரியர். முனைவர். காப்ஃமன் ஸ்காட்  பேரி (Dr. Kaufman Scott Barry) அவர்களின் கட்டுரையின் மொழி பெயர்ப்பு.  இதனை மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றும் திருவாளர்.காப்ஃமன் ஸ்காட்  பேரி அவர்களிடம் அனுமதி பெற்ற பின்பு மொழிபெயர்த்து வெளியிடப் படுகிறது. அனுமதி கொடுத்த பேராசிரியர். முனைவர். காப்ஃமன் ஸ்காட்  பேரி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.]

 

ஆராய்ச்சிக் கண்ணோட்டம் கொண்டு அலசி ஆராயும் தன்மை, செயல்களில் ஒழுங்குமுறையைக் கடைபிடிக்கும் தன்மை, காரண காரியத் தொடர்புடைய வகையில் தர்க்க ரீதியில் சிந்திக்கும் தன்மை, நிகழக்கூடியவற்றை யதார்த்தமானவற்றை சிந்திக்கும் தன்மை, இயல்பான நடைமுறைக்கேற்ப செயல்படும்  தன்மை போன்ற பண்புகளை வெளிப்படுத்துவது  மனிதர்களின் இடது பக்க மூளையின் செயல் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது.

அது போலவே படைப்பாற்றல், உணர்வுப்பூர்வமான வண்ணமயமான சிந்தனைகள், இன்பம் சுவை போன்றவற்றை அனுபவிக்கும் தன்மை, மனம் கவரும் செயல்பாடுகளை, கவிதைத்துவமான எண்ணங்களை வெளிப்படுத்துதல் போன்ற மென்மையான உணர்வுகளை சித்தரிப்பது மூளையின் வலது பக்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கருதப்பட்டு வந்தது.

crative barain

தற்கால நரம்பியல் ஆராய்ச்சியில் முன்னோடிகளாகத் திகழும் நரம்பியல் துறை ஆராய்ச்சி வல்லுனர்கள் (Rex Jung, Darya Zabelina, John KouniosMark Beeman, Kalina ChristoffOshin Vartanian, Jeremy Gray, Andreas Fink, Hikaru Takeuchi and others; கொடுக்கபட்டுள்ள சுட்டிகளைச் சொடுக்கி இந்த ஆராய்ச்சியாளர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்), மூளை தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பொழுது அது எவ்வாறு இயங்குகிறது என்று தற்கால தொழில் நுட்பங்களின் உதவியுடன் ஆராய்ந்து வருகிறார்கள்.  இவர்களின் கண்டுபிடிப்புகள் இதுவரை படைப்பாற்றல் திறனை மூளை கையாளும் விதத்தைப் பற்றி நாம் கொண்டிருந்த எண்ணங்களை மாற்றி அமைப்பதாக விளங்குகிறது.

நரம்பியல் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆராய்ச்சி முடிவுகள் இதுவரை நாம் எண்ணியது போல மூளை வலது பக்கம் மற்றும் இடது பக்கம் என்று தனித்தனியாக இயங்குவதாக நாம் நினைப்பது தவறு என்று அறிவுறுத்துகிறது.  மொழி தொடர்பான செயல்களில் இடதுபக்க மூளை அதிக பங்கு வகித்தாலும், இடம் சார்ந்த ‘ஸ்பாட்டியல்’ செயல்களில் வலது மூளையின் பகுதி அதிகம் பங்கு வகித்தாலும்; மூளை படைப்பாற்றலில் ஈடுபட்டிருக்கும் பொழுது மூளையின் ஒரு பகுதியோ அல்லது மூளையின் ஒரு பக்கமோ மட்டும் அதில் பங்கேற்பதில்லை என்ற உண்மை இப்பொழுது தெரிய வந்திருக்கிறது.

உண்மையில், படைக்கும் எண்ணம் கருக்கொண்டு, வளர்ச்சியடைந்து, முழுமையாக முற்றுப் பெறும் வரை மூளையின் புலன் மற்றும் உணர்வு தொடர்புடைய பகுதிகள் பல இணைந்து செயலாற்றுகின்றன. நாம் எதனைப் படைக்கிறோமோ அதற்கு ஏற்றவாறு, படிப்படியாக உருவாகும் ஒவ்வொரு நிலைக்கும் தேவையான பணிகளைச் செய்ய மூளையின் வெவ்வேறு பகுதிகள் பங்கேற்கின்றன.  மூளையின் வெவ்வேறு பகுதிகள் தேவைக்கேற்ப ஒருங்கிணைந்து செயலாற்றியே படைப்பாற்றல் வெளிப்படுத்தப்படுகிறது.

முக்கியமாக, ஒரு செயலை நிறைவு செய்ய மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள பல்வேறு பகுதிகள் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டியத் தேவை இருக்கிறது என்பதைத் தற்கால ஆராய்ச்சி முடிவுகள் வலியுறுத்துகின்றன. மூளையின் நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் ஒருங்கிணைத்து பெருமளவில் செயல்படுவதாலேயே நம் புலன்கள் சரிவர செயல்படுகின்றன.

இவ்வாறு மூளையின் பல்வேறு பகுதிகளும் இணைந்து செயல் படுவது நாம் செய்யும் செயலைப் பொருத்து அமைகிறது. காட்டாக, ஒரு சிற்றுந்தின் பின்புறம் உள்ள சாமான்கள் வைக்கும் பகுதியில் பொருட்களை அடுக்கும்பொழுது, அவற்றைத் தேவைக்கேற்றவாறு சுழற்றி சீராக அடுக்க விஷுவோ ஸ்பாட்டியல் என்னும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் (Visuospatial Network)  செயல் தூண்டப்படுகிறது.  இதுபோன்று இடஞ்சார்ந்த முடிவுகளை எடுக்கும் பொழுது மூளையின் பின்புற சுவர் புறணி மற்றும் முன்புற கண் துறைகள் (posterior parietal cortex and frontal eye fields) ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றன.

இது போன்றே, ஒரு உரையாடல் அல்லது சொற்பொழிவு ஆற்றும் பொழுது மொழி மற்றும் பேச்சுக்குத் தொடர்புடைய நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் செயல் தூண்டப்படுகிறது.  அப்பொழுது மூளையின் ‘புரோக்கா’ மற்றும் ‘வெர்னிக்’ பகுதிகள் (Broca’s area and Wernicke’s area  of the brain) இணைந்து செயலாற்றுகின்றன.

அதுபோலவே மூளை படைப்பாற்றலில் ஈடுபடும்பொழுது மூன்று வித நரம்புகளின் வலைக்கட்டமைப்புகளின் செயல்கள்  தூண்டப்படுகின்றன. அவை:
1. கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Attentional Control Network)
2. கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Imagination Network)
3. கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Attentional Flexibility Network)

1. கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:
ஒரு செயலில் ஒருமித்த ஆழ்ந்த கவனம் செலுத்தத் தேவை இருக்கும் பொழுது இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு தூண்டப்படுகிறது. ஒரு விரிவுரையில் கவனம் செலுத்தும் பொழுதோ அல்லது ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும் பொழுதோ நம் நினைவுகளுக்கு அதிக வேலை கொடுக்கப்படுகிறது.  அப்பொழுது மூளையின் புறப்பகுதி, முன்புறம் மற்றும் பின்புறப் பகுதிகள் (lateral regions of the prefrontal cortex and areas toward the posterior of the parietal lobe) யாவும் இணைந்து செயலாற்றத் தேவையாக இருக்கிறது.  இப்பகுதிகளை இணைக்கும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு தூண்டப்பட்டு செயலாற்றுகிறது.

2. கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:

படைப்பாற்றலின் பொழுது, மூளையின் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு ஒருவருக்கு கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களினால் கிடைத்த அடிப்படையான நினைவுகள், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டு, தற்காலத் தேவைக்கேற்ப மாறுபட்ட கோணங்களையும் சிந்திக்கும் வகையில் நாம் செய்யும் செயலில் தொடர்ந்து மாற்றங்களை தூண்டிக்கொண்டிருக்கும். அத்துடன் இந்த கற்பனைத்திறன் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு சமூகத் தாக்கத்தையும் உள்ளடக்கியது.  உதாரணமாக, நாம் அடுத்தவர் இப்பொழுது என்ன சிந்தித்துக் கொண்டிருப்பார் என்று யோசிக்கும்பொழுது இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கும். பெருமூளைப் புறணியின் (cerebral cortex) முன்பகுதியின் உட்புறம், நடுப்பகுதியின் உட்புறம், மற்றும் பக்கவாட்டுப் பகுதியின் உட்புற மற்றும் வெளிப்புறங்கள் யாவையையும் இணைக்கும் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு ஒருங்கிணைந்து செயல்படுவதால் கற்பனை செய்யும் திறன் செயல்பாட்டிற்கு வருகிறது.

crative barain2crative barain3

3. கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:
இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் தன்மை கொண்டது. இது வெளிப்புறத்தில் இருந்து கிடைக்கும் சமிக்கைகளையும், உடலினுள் இருந்து கிடைக்கும் சமிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்தவண்ணம் இருக்கும்.  சமிக்கைகளின் தேவைக்கு ஏற்றவாறு  கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்புக்கோ அல்லது கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்புக்கோ சமிக்கைகளை அனுப்பி தேவையான முடிவெடுத்து, தக்க வகையில் செயலை முடிக்க வழி செய்கிறது. இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு பெருமூளைப் புறணியின் மேல்முன்புறம் உள்ள சிங்குலேட் கார்ட்டெக்ஸ் பகுதிகளையும் (dorsal anterior cingulate cortices), முன்புறம் தனித்திருக்கும் கார்ட்டெக்ஸ் (anterior insular) பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்த அமைப்பு தேவைகேற்ப கவனத்திற்கோ அல்லது கற்பனைக்கோ என சமிக்கைகளை மாற்றிவிட உதவுகிறது.

படைப்பற்றலைப் பற்றிய தோராயமான புரிதல்:
நரம்பியல் அடிப்படையில் படைப்பாற்றலைப் பற்றி அறிந்து கொள்வதில், இந்த மூன்று வகை நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் எவ்வாறு இயங்குகிறது, எந்த வகைகளில் இவற்றின் செயல்கள் தூண்டிவிடப்படுகிறது அல்லது செயலிழக்கச் செய்யப்படுகிறது, எந்த நிலைகளில் எந்தெந்த மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்வது இன்றியமையாதது. சிலநேரங்களில் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் இணைந்தும், சில நேரங்களில் அவ்வாறு இணைந்து செயல்படுவது படைப்பாற்றலைக் குறைக்கும் என்பதால் தனித்தும் இயங்கத் தேவையாகிறது.

சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் ரெக்ஸ் யுங் (Rex Jung and Colleagues) மற்றும் அவருடன் ஆராய்ச்சியில் பங்குபெற்ற நரம்பியல் வல்லுனர்கள் மூளையின் படைப்பாற்றல் உருவாகும் விதத்தின் ஒரு தோராயமான முதல் நிலையை (first approximation) எடுத்துக் காட்டியுள்ளனர். இந்தத் தோராயமான முதல்நிலை வரையறையின்படி, படைக்கும் செயலில் எவ்வாறு நாம் சிந்திக்கும் திறனை கட்டவிழ்க்க வேண்டும், சிந்தனையை சுதந்திரமாக பரவ விட வேண்டும், புதிய வழிகளை கற்பனை செய்ய வேண்டும், உள்மன விமர்சனங்களை அமைதிப் படுத்த வேண்டும், கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பை சிறிதே செயலிழக்கச் செய்ய வேண்டும், மற்ற இரு கற்பனைத்திறனுக்கான மற்றும் கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்புகளின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.  சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றும் ஜாஸ் மற்றும் ராப் இசைக்கலைஞர்கள் தங்கள் இசையை மேம்படுத்த செய்யும் படைப்பாற்றல் முயற்சிகளில் அவர்களது மூளை கட்டற்று சுதந்திரமாக செயல்படும் பொழுது இந்த தோராயமான வரைமுறை குறிப்பிடும் வகையில் படைப்பாற்றல் வெளிப்படுவதைக் காட்டியது.

எனினும், கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் செயல் திறனை சில சமயங்களில் மறுபடியும் தூண்டிவிட்டு படைப்பாற்றலால் உருவாகிய படைப்பை கவனத்துடன் மதிப்பீடு செய்யவும், அந்த எண்ணங்களை செயல் படுத்தவும் தேவை ஏற்படுகிறது.

ரெக்ஸ் யுங் ஆராய்ச்சிக் குழுவினர் வரையறுக்கும் மூளையின் படைப்பாற்றல் திறனின் செயல்முறை பற்றிய இந்தத் தோராயமான கணிப்பு ஆராய்ச்சியின் முதல்படிதான். ஆனால் இது மூளையின் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ள வழி வகுக்கும் விதத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. படைப்பாற்றல் என்பது மூளையின் பல நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் இணைந்து செயலாற்றுவதாலேயே நிகழ்கிறது என்று அறிவியல் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னர் எண்ணியது போல மூளையின் ஒரு சில பகுதிகளோ அல்லது மூளையின் ஒரு பக்கம் மட்டுமோ படைப்பாற்றலுக்குக் காரணம் என்ற எண்ணம் தவறு என்று காண்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலுடன் பிற ஆராய்ச்சித் தகவல்களையும் இணைத்துப் பார்த்தால்; பகல்கனவு காணுதல், எதிர்காலக் கற்பனைகள், தன்னைச் சார்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்தல், ஆக்கப்பூர்வமான சுய பரிசோதனைகள், பொருள் புரிந்து கொள்ளல், சமூக அறிவு போன்றவற்றிக்குக் காரணமான மூளையின் மற்ற பகுதிகள் யாவும் படைப்பாற்றலுக்கு உதவி செய்வது தெரிய வருகிறது. மேலும் தொடரும் ஆராய்ச்சிகள் பல இன, கால வேறுபாடுகள் ஆகியவற்றின்  அடிப்படையிலும் எவ்வாறு படைப்பாற்றல் உருவாகிறது என்பதை விளக்குவதாய் அமைவது படைப்பாற்றல் பற்றி மேலும் அறிய வழி வகுக்கும்.

மூளையின் படைப்பாற்றல் எவ்வளவு சிக்கல் நிறைந்த செயல்பாடு என்பதை ஆராய்ச்சியாளர்கள் பலரின் மூளைகளும் இணைந்து விளக்க முற்படும் இத்தருணம்  நரம்பியல் ஆராய்ச்சியில் ஒரு ஆக்கப்பூர்வமான காலக்கட்டம், இந்நேரத்தில் படைப்பாற்றல் பற்றிய நமது பழைய தகவல்களை விட்டொழித்து படைப்பாற்றல் என்பது மூளையின் பலபகுதிகளையும் உபயோகித்து உருவாகும் செயல்திறன் என்பதை உணரவேண்டும்.

Reference:
Kaufman Scott Barry , The Real Neuroscience of Creativity, August 19, 2013 ,  Scientific American.
http://blogs.scientificamerican.com/beautiful-minds/2013/08/19/the-real-neuroscience-of-creativity/

Note: The author of this article (Dr. Kaufman Scott Barry) granted permission to publish the translation of his work.

 

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (5)

 1. Avatar

  வலப்பக்க மூளையும், இடப்பக்க மூளையும் தனித்தனியேதான் இயங்குகின்றன; பகுத்தாய்வதற்கு இடப்பக்க மூளையும், கவி(தை) வடிக்க வலப்பக்க மூளையுமே உதவி வருகின்றன என்றுதான் இதுநாள்வரை எண்ணியிருந்தேன்.

  ஆனால் நரம்பியல் மருத்துவர் ஸ்காட் பெர்ரி காஃப்மனின் கட்டுரை மூளையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் பற்றிய புதிய உண்மைகள் பலவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து நம்மை திகைப்பிலாழ்த்துகின்றது. (மனித மூளைக்குள் ஒளிந்திருக்கும் மர்மங்களுக்கு அளவேயில்லை போலும்!)

  காஃப்மனின் மருத்துவக் கட்டுரையை அழகிய தமிழ்நடையில் மிகச்சிறப்பாக மொழிபெயர்த்து அளித்துள்ள தேமொழிக்கு என் உளம்நிறைந்த பாராட்டுக்கள்!!

 2. Avatar

  நல்ல கட்டுரையை மொழி பெயர்த்து தந்த தேமொழிக்கு பாராட்டுகளும் நன்றிகளும். படைப்பாளிகள் அதிகம் உள்ள வல்லமையில் வெளியானது இன்னும் பொருத்தம்.இது போன்ற செய்திகளை தேடி படிப்பதற்கு நேரமில்லை.ஆனால் படிப்பதற்கு கிடைக்கும் போது விடுவதில்லை. கற்பனை எப்படி உருவாகிறது என்பதையும் தெரிந்துக்கொண்டேன்.தாங்களின் பெரும் முயற்சிக்கு மீண்டும் என் பாரட்டுக்கள்.

 3. Avatar

  அருமையான தகவல் களஞ்சியங்களை சிந்தனைக்கு கொண்டு வந்தீர்கள்…

  எனினும் பிறந்தக் குழந்தை (ஏன்  மற்ற உயிர்களும்) பிறந்த சில நிமிடங்களில் தனது தாயின் மார்பகத்தே கொண்டு சென்று வைக்கும் போது எப்படித் தானாகப் பாலை குடிக்க ஆரம்பிக்கிறது…. இது மூளையின் எந்த பக்க பதிவில் இருந்தது என்பது வரை ஆராயப் பட வேண்டும்! 🙂
   
  ///மேலும் தொடரும் ஆராய்ச்சிகள் பல இன, கால வேறுபாடுகள் ஆகியவற்றின்  அடிப்படையிலும் எவ்வாறு படைப்பாற்றல் உருவாகிறது என்பதை விளக்குவதாய் அமைவது படைப்பாற்றல் பற்றி மேலும் அறிய வழி வகுக்கும்.///

  ஒரு நூற்றாண்டிற்குள் தான் அறிவியலில் எத்தனை முன்னேற்றம்…. இன்னும் சில நூறுவருடங்களில் இன்னும் எத்தனை அதிசயங்கள் சாதாரண விசயங்கலாகுமோ!

  பகிர்விற்கு நன்றிகள் சகோதரியாரே!

 4. Avatar

  மூளையின் செயல்பாடுகள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை எளிமையான தமிழில் தொகுத்துக் கொடுத்திருக்கும் திருமதி.தேமொழி அவர்களுக்கு என் நன்றிகள். மேலும் இதுபோன்ற பல கட்டுரைகளை தாங்கள் வழங்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.

 5. Avatar

  கருத்துரைகள் வழங்கி  கட்டுரையைச் சிறப்பித்த அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.

  அன்புடன்
  …..தேமொழி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க