நாகேஸ்வரி அண்ணாமலை

கென்யாவில் நாற்பத்தி இரண்டு பழங்குடி இனங்கள் உள்ளன.  போர்ச்சுகீசியரின் வருகையின் விளைவாகவும் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாகவும் இவற்றில் பல கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவை.  கடற்கரையை ஒட்டி வாழும் இனங்கள் அரேபியர்களின் வணிகத்தின் விளைவாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவை.  இவற்றில் ஒன்று விக்டோரியா ஏரியை ஒட்டியுள்ள லியு (Luo)  என்னும் இனம்.  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தந்தை இந்த இனத்தைச் சேர்ந்தவர்.  இன்னொன்று கிக்கியு (Kikiyu).  இந்த இரண்டு இனங்களும் மக்கள் தொகையில் பெரியவை.  அதனால் அரசியல் செல்வாக்கும் அதிகம்.  இந்த இரண்டு இனங்களிலிருந்துதான் நாட்டுத் தலைவர்கள் தோன்றுகிறார்கள்.  மக்கள் தொகையில் சிறிய மற்ற இனங்கள் இந்த இரண்டு இனங்களில் ஒன்றோடு சேர்ந்துகொண்டு அரசியலில் பங்கு பெறுகின்றன.  தற்போதைய ஜனாதிபதி கென்யாட்டா கிக்கியு இனத்தைச் சேர்ந்தவர்.  ஆடு மாடுகளுக்குப் புல் தேடி இடம் விட்டு இடம் போகும் மசாய் இனத்தைப் பற்றி ஏற்கனவே விரிவாகப் பார்த்தோம்.

ஒவ்வொரு இனத்திற்கும் தனிக் கலாச்சார மரபுகள் உண்டு.  ஒவ்வொரு இனமும் தங்கள் குடியிருப்பை அமைக்கும் முறையும் அதில் ஒரு குடும்பத்தின் குடிசைகளை அமைக்கும் முறையும் அந்தக் குடிசைகளைப் பயன்படுத்தும் விதமும் வேறுபடும்.  நைரோபியில் இந்தக் குடியிருப்புகளின் மாதிரிகளை ஒரு இடத்தில் அமைத்திருக்கிறார்கள்.  இங்கே கணவன் குடிசை, முதல் மனைவியின் குடிசை, இரண்டாவது மனைவியின் குடிசை, ஆண் பிள்ளைகள் குடிசை என்றெல்லாம் வேறுபாடு இருந்தது.  இதற்குப் பக்கத்தில் பல இனங்களின் பாரம்பரிய நடனங்களை ஆடிக் காட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போமாஸ் (Bomas) என்று பெயர்.  போமா என்றால் ஸ்வாஹிலியில் குடியிருப்பு என்று அர்த்தம்.  இந்த நடன நிகழ்ச்சியில் வித்தியாசமான உடைகளுடன் வித்தியாசமான நடனங்களை பல பழங்குடி இன மக்கள் ஆடுவதைப் பார்க்க முடிந்தது.  கடைசியில் சர்க்கஸில் காட்டுவது போல் தீ வளையத்திற்குள் பாய்வது போன்ற தீரச் செயல்களையும் செய்து காட்டினார்கள்.  இந்த நிகழ்ச்சிகளுக்காக ஒரு பிரமாண்டமான அரங்கம் குடிசையைப் போல் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.  நிகழ்ச்சியைப் பார்க்க உல்லாசப் பயணிகள்  மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்.  நவீன கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கலாச்சாரப் பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்ள இது வகை செய்கிறது.

இப்போது கென்யர்களின் பொதுவான சில பண்புகளைப் பார்ப்போம்.  நைரோபியில் நாங்கள் தங்கியிருந்தது ஒரு நடுத்தர ஓட்டல்.  ஒரு கென்யரால் துவங்கப்பட்டது. அங்கிருந்த எல்லா ஊழியர்களும் – வரவேற்பாளரிலிருந்து அறையைச் சுத்தம் செய்பவர் வரை – எங்களிடம் மிகவும் பிரியமாக நடந்துகொண்டனர்.  காலைச் சாப்பாடு அறை வாடகையோடு சேர்ந்தது.  காலை ஏழரை மணியிலிருந்து பத்து மணி வரை காலை உணவு நேரம்.  நான்கு வகைப் பழங்கள், மைதா ப்ரெட், கோதுமை ப்ரெட் என்று இரண்டு வகை ரொட்டிகள், பல வகையான கிழங்கு வறுவல்கள், பல வகை சீரியல்கள், அவற்றோடு சாப்பிட பால், ஆரஞ்சுச்சாறு, மாம்பழச் சாறு, அன்னாசிப்பழச்சாறு என்று மூன்று வகை பழச்சாறுகள், ஏதாவதொரு அசைவ அயிட்டம் என்று பல அயிட்டங்கள் இருந்தன.  இதற்கு மேல் விரும்புபவர்களுக்கு முட்டையை நாம் கேட்கும் விதத்தில் சமைத்துக் கொடுக்கிறார்கள்.   இப்படிப் பல வகை உணவுகளோடு அங்கு வேலைபார்ப்பவர்களும் அன்போடு நமக்குப் பரிமாறுகிறார்கள்.  நாம் முட்டை சாப்பிடவில்லையென்றாலும் தினமும் முட்டை வேண்டுமா என்று கேட்பார்கள்.  பல நாடுகளிலும் உள்ள ஓட்டல்களில் பணிபுரிபவர்கள் இப்படிப் பிரியமாக நடந்துகொண்டாலும் இவர்களுடைய நடத்தையில் உள்ளன்பு இருப்பதாகத் தெரிந்தது.

மதிய உணவையும் இரவு உணவையும் இரவு ஒன்பது மணி வரை நாம் கேட்கும் நேரத்தில் அங்கேயே சமைத்துக் கொடுக்கிறார்கள்.  அதற்குரிய கட்டணம் அப்படி ஒன்றும் அதிகம் இல்லை.  நாம் விரும்பினால் நம் அறைக்கே உண்வைக் கொண்டுவந்துவிடுகிறார்கள்.  இவர்களுடைய இந்த சேவைக்காக எதுவும் ‘டிப்ஸ்’ கொடுக்க வேண்டியதில்லை என்று வரவேற்பாளர் கூறினார்.  கொடுத்தால் பிரியமாக வாங்கிக்கொள்கிறார்கள்.

நாங்கள் எங்கள் துணிகளைத் துவைத்துக்கொள்ள விரும்பினோம்.  அதை அறிந்து ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் கொடுத்தார்கள்.  துணிகளைக் காயப் போடுவதற்கு ஒரு இடம் இருக்கிறது.  நாங்கள் காலையில் வெளியே போய்ச் சாயங்காலம்தான் திரும்ப ஓட்டலுக்கு வந்ததால் இடையில் மழை பெய்தால் என்ன செய்வது என்று யோசித்தபோது ‘நாங்கள் உங்கள் துணிகளை உள்ளே எடுத்துவைக்கிறோம்’ என்றார்கள்.

கென்யாவில் நிறைய வடஇந்தியர்கள் இருப்பதால் அவர்களின் இந்திய உணவு வகைகளும் கென்யர்களின் உணவில் கலந்துவிட்டிருக்கின்றன.  அவற்றில் சப்பாத்தி, அதற்குரிய சப்ஜி, புலவு, சமோஸா ஆகியவை முக்கியமானவை.  ஒட்டலிலும் இவை எல்லாம் சமைத்துக் கொடுத்தார்கள்.  எங்கள் மைசூர் வீட்டின் அறையில் தங்கியிருந்த பல மாணவர்கள் எங்களை ஓட்டலில் வந்து சந்தித்தனர்.  அவர்களில் ஒருவரின் கண்வர், ‘சிறு வயதிலிருந்தே இந்த உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்ததால் இவை கென்ய உணவுகள் என்று நான் நினைத்திருந்தேன்.  விபரம் தெரிந்த பிறகுதான் இவை இந்திய உணவுகள் என்று தெரிந்துகொண்டேன்’ என்றார்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்திய உணவுகள் கென்ய உணவுகளோடு இரண்டறக் கலந்துவிட்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டத்தான்.  இந்தியர்கள் நடத்தும் ஹாண்டி (Haandi) என்னும் இந்திய உணவகம் பிரசித்தமானது.  அங்கு விலையும் கொஞசம் அதிகம்.  இங்கே நிறைய வடஇந்திய சப்ஜிகள், பல வகையான புலவு வகைகள் கிடைக்கும்.  இங்கு வேலைபார்ப்பவர்கள் அனைவரும் கென்யர்கள்.  ஒரு இந்தியர் கூட இல்லை.  அதே சமயத்தில் அங்கு உணவருந்த வந்திருந்தவர்களில் கிட்டத்தட்ட எல்லோரும் இந்தியர்கள்.

அங்கு வாழும் இந்தியர்கள் எல்லோரும் வசதியாக இருப்பவர்கள் போல் தெரிகிறது.  கச்சாப் பொருள்களை வாங்கிவந்து அவற்றைப் பொருள்களாகத் தயாரித்து விற்கும் தொழிற்சாலைகளில் 70 சதவிகிதம் இந்தியர்களின் கையில் இருப்பதாக மாணவ நண்பன் ஒருவன் கூறினான்.  நக்குமார்ட் (Nakumart)  என்னும் பெரிய டிபார்ட்மெண்ட் கடை இந்தியர் ஒருவருக்குச் சொந்தம்.  இந்தியர்களின் பிள்ளைகள் கென்யப் பள்ளிகளில் படித்துவிட்டு மேல் படிப்பிற்காக இந்தியாவிற்கோ பிரிட்டனுக்கோ செல்கிறார்கள்.  இதனால் கல்லூரிகளில் இந்திய வம்சாவளி இளைஞர்களும் கென்ய இளைஞர்களும் நட்புக்கொள்வது அரிது.

நான் முன்பே எழுதியது போல் இந்தியர்கள் கென்யர்களோடு கலப்பதில்லை போல் தெரிகிறது.  அண்மையில் இந்து பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்தது.  கென்யாவில் சுமார் 1000 கன்னடியர்கள் வசிக்கிறார்களாம்.  ஹிருதய வாஹினி என்று மங்களூரிலிருந்து வரும் பத்திரிக்கையும் கன்னட கலாச்சாரக் அமைப்பும் சேர்ந்து 100 பேர் கொண்ட பரதநாட்டிய, யக்ஷகானா கலைஞர்கள் அடங்கிய ஒரு குழுவைக் கென்யாவிற்கு நவம்பர் மாதம் அனுப்பப் போகிறது.  இவர்கள் அங்கு கன்னட கலாச்சாரத்தைப் பரப்பப் போகிறார்களாம்!  ஆயிரம் பேருக்குக் கலாச்சாரத்தைப் பற்றிக் கூற நூறு பேர் போகிறார்கள்.  எத்தனை கென்யர்கள் இவர்களுடைய நிகழ்ச்சிகளைக் காண வருவார்கள் என்று தெரியவில்லை.

இந்தியர்கள் யாரும் கென்யர்களோடு பழகாவிட்டாலும் கென்யர்களுக்கு இவர்கள் மேல் வெறுப்பு இருப்பதாகத் தெரியவில்லை.  இந்தியர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கென்யாவிற்கு வந்து அதன் பொருளாதாரத்தில் பங்கு பெற்றிருப்பதால் தாங்கள் பின்தங்கிவிட்டோம் என்று நினைக்கிறார்களே- யொழிய அவர்கள் மேல் வன்மம் பாராட்டுவதாகத் தெரியவில்லை.  இந்த இந்தியர்கள்தான் அம்மண்ணுக்குரிய கென்யர்களோடு சுமுகமாகப் பழகாமல் தனித்து வாழ்கிறார்கள்.  இந்தியர்கள் குடியிருப்பு தனியாக இருக்கிறது.  கலப்புத் திருமணங்கள் நடப்பதாகத் தெரியவில்லை.  இந்தச் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும்.  இவர்கள் அமெரிக்கக் கருப்பர்கள் தங்களை விட தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள்.  வெள்ளை இனத்தவர்களைத் தங்களை விட உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள்.  இதை எங்கேயிருந்து கற்றார்கள் என்று தெரியவில்லை.  அமெரிக்க இந்தியர்களுக்கு இருக்கும் கருப்பு இன நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  இவர்களைப் போன்றவர்கள்தான் கென்ய இந்தியர்களும்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கென்யா பயணம் – 7

  1. சுற்றுலாத் தளங்களைப் பற்றி எழுதும் ஒரு பயணக் கட்டுரையாக இல்லாமல் கென்ய-இந்திய நட்புறவின் நிலையை மிகவும் அழகாக விளக்கி இருக்கிறீர்கள். இந்தியர்கள் கென்யர்களுடன் வேறுபாடின்றி நெருங்கிப் பழகுவதில்லை என்ற செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்கா சென்ற இந்தியர் ஒருவர் தான் நிறவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் என்பதைத் தற்போது அங்கிருக்கும் இந்தியர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

Leave a Reply

Your email address will not be published.