Author: மேகலா இராமமூர்த்தி

  • படக்கவிதைப் போட்டி 142-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    newly weds

    புதிதாய் மன்றல்கண்ட மணமக்களை மாலையும் கழுத்துமாய்ப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. அனிதா சத்யம். பூமாலை சூடிநிற்கும் இவர்களுக்குப் பாமாலை சூட்டுவதும் பொருத்தமே என்று இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குப் பாசத்தோடு தெரிவுசெய்து தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன்.

    நாணத்தோடு திரும்பிநிற்கும் மனையாட்டியைக் கண்டு மணவாளனின் முகத்தில் வெற்றிப்புன்னகை அரும்பிநிற்கக் காண்கிறோம்.

    கவிஞர்கள் தம் கைவரிசையைக் காட்டத் தோதான புகைப்படமிது என்றே எண்ணுகின்றேன். அவர்களைக் கவிபாட அன்போடு அழைக்கின்றேன்!

    *****

    ”ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள்; உறவென்றும் பட்டுப்போகாது! பெண்ணே…! கணவனைக் கண்ணாய்க் கொண்டு உலகைக் கண்டால் உன் வாழ்வு சிறக்கும்!” என்று இணையருக்கு இல்லற சூக்குமத்தைப் பாட்டினிலே குழைத்துத் தந்திருக்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

    திருமணம்

    வாழ்க்கை துணை நலம் நாடி, திருமண கோலத்துடன் காட்சியளிக்கின்றாய்
    திருமணம் என்பது, இருமனங்கள் கொண்ட ஒருமனம் என உணர்வாய்
    திருமணத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, இல்லறத்தில் இன்பமுடன் ஈடுபடுவாய்
    இனி எச்செயலையும் இருவரின் தீர்மானத்தில் நடத்திக் காட்டிடுவாய்!
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்திடும் வரமே!
    நீ மாண்புறுவதும், பெருமையடைவதும் அவள் வந்த நேரமே!
    திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது வழக்கம்
    அவள் பெயரை செல்லமாக அழைப்பதே பழக்கம்!
    புகைப்படத்திற்காக இன்முகம் காட்டி சிரிக்கின்றீர்கள்
    இல்லற வாழ்க்கையில் சிரிப்பு என்பது சில காலமே என உணருங்கள்!
    ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்ததாகும்
    இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்வதே மிக நன்மையாகும்.
    காலங்களும், கோலங்களும், உலகில் என்றும் மாறும்
    கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்!!
    மலர்போன்று மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!
    பிறந்த வீட்டின் குலம் காக்க வேண்டும் ,
    புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும்
    கணவன் என்றாலே, கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும்!
    அன்பும், அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
    பண்பும், பயனும் அது என்பது வள்ளுவர் வாக்கு.

    ***** 

    ”மண்ணின் மணத்தோடு நிகழும் மணமிதில் ஒப்பனையும் இல்லை; தப்பெதுவும் இல்லை” என்று நிறைந்த மனத்தோடு மணமக்களை வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மண்ணின் மணம்…

    ஒப்பனை காட்டும் முகங்களில்லை
    ஒப்புக் காகச் சிரிக்கவில்லை,
    தப்பிலாக் கிராமக் காதலிலே
    தழைத்த திந்தத் திருமணமே,
    செப்பிட வார்த்தை ஏதுமில்லை
    சொந்த மண்ணின் நாணமிது,
    இப்படித் தொடங்கிடும் மணவாழ்வில்
    இனிதே வாழ்க மணமக்களே…!

    *****

    ”கணவனைக் காணவும் நாணிநிற்கும் இந்நங்கையும் நம்பியும் ஈழமும் தமிழும்போல் நெடிதுநாள் இனிதுவாழ்க!” என்று வாழ்த்துகின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    மணமக்களுக்கு வாழ்த்து

    நாணமும் பயிர்ப்பும் கொண்டு
    நங்கைதன் முகந் திருப்பிக்
    காணவும் கூசுகின்றாள்
    கமராவைப் பக்கல் நிற்கும்
    ஆணவன் சிரிப்பினூடு
    அணைத்திட அவளைத் தன்னோ(டு)
    ஏனடி வெட்கமென்று இழுப்பது
    இனிய காட்சி.

    வாழ்வினிலிணைந்த இந்த
    மணமக்கள் நீடு வாழி
    தோழமை குலையா தென்றும்
    துயர்படா தினிது வாழி
    ஊழ்வினையுருத்து வந்து
    உயர்வினைத் தடுத்திட்டாலும்
    ஈழமும் தமிழும் போலும்
    இணைபிரியாது வாழி

    தம்பதிகாள்!
    அன்புக்கினிய தம்பதியாய்
    அறிவும் திருவும் ஒரு சேர
    இன்பத்தமிழே மூச்சாக
    என்றும் வாழ்க இனிதாக!

    ***** 

    ”மணமகனே! உனைக்கரம் பிடித்த இப்பெண்மணியே இனி உன் கண்மணி; மலரும் மணமுமாய், உடலும் உயிருமாய், குயிலும் குரலுமாய், அகந்தையை நீக்கி அன்பைத் தேக்கி நீவிர் நீடுவாழ்க!” என மணவாழ்த்துக் கூறுகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    உறவின் உன்னதம்:

    இரு மனம் இணையும் திருமணம் !
    ஊர் கூடி வாழ்த்தும் திருமணம்!
    உறவின் பாலம் திருமணம்!
    அழகுக் கோலம் திருமணம்!
    வெட்கம் கலந்த சிரிப்புடனே மங்கை நல்லாள்!
    ஆனந்தம் பொங்கும் முகத்துடனே மாப்பிள்ளை!
    அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்!
    இல்லறம் சிறக்க வாழ்த்துகிறோம்!
    உன்னைக் கரம் பிடித்தாள் இந்தப் பெண்மணி!
    இனி இவள்தான் உந்தன் கண்ணின் மணி!
    மலராய் அவள் இருக்க! நறுமணமாய் நீ இரு!
    உடலாய் அவள் இருக்க! உயிராய் நீ இரு!
    பயிராய் அவள் இருக்க!மழையாய் நீ இரு!
    நிலவாய் அவள் இருக்க!வானாய் நீ இரு!
    பாட்டாய் அவள் இருக்க! பொருளாய் நீ இரு!
    குயிலாய் அவள் இருக்க! குரலாய் நீ இரு!
    தெய்வமாய் அவள் இருக்க! கோவிலாய் நீ இரு!
    உனக்காக அவள் விட்டது ஏராளம்!
    தாய்,தந்தை விட்டு வந்தாள்!
    வீட்டை விட்டு வந்தாள்!
    தன்னை தொலைத்து விட்டு உன்னோடு
    சேர வந்தாள்!
    அவளுக்காய் நீயும் விடு:
    உன் ஆணவத்தை!
    உன் அகந்தையை!
    விட்டு விடாதே:
    உன் அன்பை!
    உன் பண்பை!
    உன் பரிவை!
    உன் உயிரெனும் மேலான மனைவி எனும்
    மங்கை நல்லாளை!!!!

    ***** 

    அல்லி விழிதனில் அஞ்சனமிட்டு, கல் வளையல்களும் காற்சிலம்புகளும் கவிபாட, எதிர்காலம் குறித்த எண்ணவோட்டத்தில் இடையிடும் நாணம் தடைபோட, தலைகுனிந்து நிற்கும் தாமரையை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திருமிகு. ஹேமா வினோத்குமார். 

    நாணத்தில் நான்!!

    அந்நாளிற்காக!!
    செம்மண்ணில் கால்பழுக்க
    கருவேல முள்குத்தி
    அரப்பிலைகளைத் தேடி
    அங்கிருந்த கருஞ்சீகயைச் சேர்த்து
    ஆசையாய் அரைத்து வைத்தேன்!!
    கொட்டைப்பாக்குடன்
    சிறுதுளி மோர் சேர்த்து
    மருதாணி இலைகளை
    மையாய் அரைத்தெடுத்தேன்!!
    கல்வளையல்களும்
    கண்டாங்கிச் சேலையும்
    கள்வா நீ வாங்கி வரக்
    காத்திருந்தேன்!!!
    உன் முற்றம் எம்மொழி சிறக்க
    ஆயிரம் முத்துடைய
    காற்சிலம்பைக் கண்டெடுத்தேன்!!
    மும்மாதமும் மூன்று நாட்களைப்போல்
    உருண்டோடின!!

    தைத்திருநாளில்
    மேகக்கண்ணி இருள்தனைஅப்பி
    சூரியனார் மலைமுகடுகளில்
    கம்பீரமாய் எட்டிப்பார்க்க
    குளிர்க்குப் பச்சைக்கம்பளம் போர்த்திய
    கைத்தமலை நடுவனிலே
    பாங்காய்ப் பனையோலைப்பின்னிப்
    பக்குவத்தோடு பச்சைமேடையமைத்துப்
    பம்பையும் மேளமும்சூழ
    பட்டாடை கட்டி
    செஞ்சந்தனத் திலகமிட்டு
    மகிழம்பூ குங்குமத்தோடு
    மிடுக்காய் நீயும்!!
    அல்லிவிழிதனில் அஞ்சனமிட்டு
    உள்ளங்கை சிவக்கச்
    செங்காந்தள் மலர்சூடி
    கல்வளையல்களோடும்
    காற்சிலம்புகலோடும்
    உன் விழிப்பார்வைக்காக
    நாணத்தில் நான்!!

    நீ கட்டிய மஞ்சக்கொம்போடு
    முவ்வேழு வருடங்கழித்து
    பல்போன கிழடுகளாய்ப்
    பிள்ளைகளோடும்
    பேரப்பிள்ளைகளோடும்
    கொஞ்சிவிளையாடும் தருணத்தில்
    நீ அளிக்கும் கள்ளமுத்தத்தில்
    செம்மேனி சிவந்து
    நினைக்குமட்டும்
    இக்கணமே!!!

    நாணத்தில் நான்!!!

    *****

    மணக்கோலத்தில் மாப்பிள்ளை, பெண்ணைக் கண்ட மகிழ்ச்சியில் தங்கள் மனம்போட்ட கோலத்தைக் காலத்தால் அழியாக் கவிதைகளாக்கித் தந்திருக்கும் கவிவலவர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    எளிய திருமணம்

    எளிய முறையில் இங்கொரு திருமணம்! – உளக்
    களிப்பில் குறைவிலா அழகிய திருமணம்!
    பகட்டு என்பது சிறிதும் இல்லை!
    திகட்டும் மகிழ்வில் குறைவேதும் இல்லை!

    சாரட்டு வண்டியில் பூட்டிய குதிரை
    சரிகைப் பட்டு ஏதும் இல்லை! – மலர்த்
    தோரணம் ஏதும் தொங்க வில்லை!
    காரணம் இல்லாத் துள்ளிசை இல்லை!

    அதிர்வேட்டு ஏதும் முழங்க வில்லை!
    சதிராட்டம் ஏதும் நடக்க வில்லை!
    உணவுப் பொருட்கள் வீணடிப்பு இல்லை!
    கனவுலகம் போன்ற அலங்காரம் இல்லை!

    பொன் வைரம் சீர்வரிசை யெல்லாம்
    கண்ணுக்கு குளிர்ச்சியாய்க் காட்சிப் படுத்தி
    வண்டி வண்டியாய்க் கொட்டிக் கொடுத்தும்
    வாங்கிட முடியுமா வாழ்வின் நிறைவை?

    திருமணம் என்ற பெயராலே அனைவரும்
    தேவையற்ற செலவைத் தவிர்த்திடுவோம்!
    வாழ்க்கைக்காகப் பணம்தேடி நம்
    வாழ்வு தொலைவதை உணர்ந்திடுவோம்!

    சிக்கன வாழ்வைக் கடைப்பிடிப்போம்!
    சிக்கலற்ற வாழ்க்கை வாழ்ந்திடுவோம்!
    பொருள்சார் வாழ்வில் நிறைவைத் தருவது
    பொதுவாய்ச் சிக்கனம் என்ற மந்திரமே! 

    மணவாழ்க்கையின் வெற்றி, பணம் சார்ந்ததில்லை; அது மணமக்கள் மனம் சார்ந்தது! ஆம், செல்வம் என்பது சிந்தையின் நிறைவே!

    திருமணம் என்ற பெயரால் மக்கள் செய்யும் தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து, எளிமையாய் மணமுடித்து இனிமையாய் வாழ்வதே உண்மையில் பொருளுள்ள வாழ்க்கை. அவ்வாறு எளிமையாய் மணம்புரிந்து களிப்போடு இல்லறத்தில் இணைந்திருக்கும் மணமக்களின் உயர்வையும், அவ் எளிய திருமணத்தின் ஏற்றத்தையும் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

     

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 18

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவனைப் பிரிந்த தலைவியின் துயர் எல்லை கடந்ததாயிற்று. ஆகவே கலங்கிச் சோர்வதும் அருகிருந்த அருமைத் தோழியிடம் புலம்பித் தீர்ப்பதுமாகவே அவளுடைய பொழுதுகள் கழிவதாயின.

    ”தோழி! பகல் நீங்க, முல்லைக்கொடிகள் மலர, சூரியனது dark seaவெம்மை தணிந்த செயலறுதற்குரிய மாலைக் காலத்தை இராப்பொழுதின் எல்லையாக எண்ணி நீந்தினோமானாலும் அதைத் தொடர்ந்துவரும் இரவெனும் வெள்ளம் கடலைவிடப் பெரியதாயிருக்கின்றதே…அதனை நீந்திக் கடப்பது எவ்வாறு?” என்று வருந்தினாள் அவள்.

    எல்லை கழிய முல்லை மலர
    கதிர்சினந்
    தணிந்த கையறு மாலையும்
    இரவரம் பாக
     நீந்தினம் ஆயின்
    எவன்கொல்  வாழி தோழி
    கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே(குறுந்: 387 – கங்குல்வெள்ளத்தார்)

    பசிய கால்களையுடைய கொக்கின் புல்லிய புறத்தைப் craneபோல் ஆழமான நீர்நிலையில் வளர்ந்த ஆம்பலின் மலர்களும் கூம்பின; இதோ மாலைக்காலம் வந்துவிட்டது. அது வாழ்க! அது தனியாகவா வந்தது? அதனைத் தொடர்ந்து கங்குலும் வருமே… என் செய்வேன்?! என்று தலைவி பொழுதுகண்டு இரங்கும் மற்றொரு குறுந்தொகைப் பாடலும் இதே கருத்தை நவிலக் காணலாம்.

    பைங்காற்  கொக்கின்  புன்புறத்  தன்ன
    குண்டுநீ
     ராம்பலுங்  கூம்பின  இனியே
    வந்தன்று
     வாழியோ  மாலை
    ஒருதான்
     அன்றே  கங்குலு  முடைத்தே.  (குறுந்: 122 – ஓரம்போகியார்)

    கொக்கின் தோற்றம் ஆம்பல் மலரை ஒத்திருத்தலைக்lily
    குறுந்தொகைப் பாடல் 117-உம், ”மாரி ஆம்பல் அன்ன கொக்கின்…” என்று சுட்டிச் செல்கின்றது. இயற்கை யைக் கூர்ந்துநோக்கி ஒன்றோடொன்றை ஒப்புமைப்படுத்தும் அன்றைய புலவோரின் திறன் சங்கப் பாடல்கள் பலவற்றிலும் சிறப்பாய் வெளிப்படுகின்றது.

    இரவின் வரவை எண்ணிக் கழிவிரக்கம் கொண்ட தலைவியின் துயர்நிலை தோழியின் உளத்தையும் வாட்டியது. யாது சொல்லியேனும் இப்பாவையைத் தேற்றுதலே இப்போதைய தேவை என்பதைத் தெற்றென உணர்ந்த தோழி தலைவியின் தலையை ஆதுரத்தோடு கோதி,

    ”தோழி! ஒன்றோடொன்று உராய்ந்து ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளர்ந்த உயர்ந்த மலைப் பக்கத்தில், புலி தனக்குரிய உணவைத் திணித்துவைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கற்குகையினிடத்து, வழிச் செல்லும் மனிதர் தங்கும், சிகரங்கள் உயர்ந்த விளக்கத்தை உடைய மலைகளைக் கடந்துசென்ற தலைவர் நின் துயரைக் கேளா நிலையில் இருக்கின்றார்; அவர்மட்டும் கேட்டாராயின் சிறந்த பொருள் (தனைவிட்டு) நீங்குவதாக இருப்பினும், நெகிழ்ந்த நூலால் கட்டிய மலர் மாலைகள் சேர்ந்த படுக்கையினிடத்தே இருந்து வருந்தி  நினது பேரழகு நீங்கிய இத்துயரமானது கெடும்படித் தாமதியாது வந்திருப்பார்!” என்றாள்.

    கேளா  ராகுவர்  தோழி  கேட்பின்
    விழுமிது  கழிவ  தாயினு  நெகிழ்நூற்
    பூச்சேர்
     அணையிற்  பெருங்கவின்  தொலைந்தநின்
    நாள்துயர் கெடப்பின்  நீடலர்  மாதோ
    ஒலிகழை
     நிவந்த  வோங்குமலைச்  சாரற்
    புலிபுகா
     வுறுத்த  புலவுநாறு  கல்லளை
    ஆறுசெல்
     மாக்கள்  சேக்கும்
    கோடுயர்
     பிறங்கல்  மலையிறந்  தோரே. (குறுந்: 253 – பூங்கண்ணன்)

    பிரிந்துசென்ற தலைவனையும் பழிக்காது, அவன் பிரிவாற்றாமையால் வாடும் தலைவிக்கும் இதமளிக்கும் வகையில் பதமாய்ப் பேசும் தோழியின் பேச்சுக்கலை நச்சவும் மெச்சவும் உகந்ததாய் இருக்கின்றது.

    தாம் தேடிச்சென்ற அரும்பொருளைத் தேடித் தொகுக்க முடியாவிட்டாலும் நின் துயரறிந்தால் தலைவர் உடனே வந்துவிடுவார் என்று தலைவியைத் தேற்றும் தோழியை நற்றிணையிலும் காணமுடிகின்றது.
    அரும்பொருள் முடியா தாயினும் வருவர் (நற்: 208)

    ஈதொப்ப, ”நின் அருந்துயர் அறிந்தால் நந்தன் என்பான் (நந்த குலத்தைச் சேர்ந்த மன்னன்) தொகுத்து வைத்த செல்வத்தையே எய்துவதாயினும் தலைவர் அங்கே தங்கமாட்டார், விரைந்து வந்துறுவார் உனைக் காண!” என்று தலைவன் பிரிவால் வாடும் தலைவியைப் பரிவொடு தேற்றும் தோழி அகநானூற்றிலும் காணக் கிடைக்கின்றாள்.

    …நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
    தங்கலர் வாழி தோழி…
    (அகம்: 251)

    தோழியின் இடைவிடாத் தேறுதல் மொழிகளால் ஒருவாறு ஆறுதல் அடைந்தாள் தலைவி.

    பொருள்தேட வேற்றுப்புலம் சென்ற தலைவன், தான் தேடவேண்டிய பொருளைத் தேடினான். கார்காலத்தில் வினைமுற்றித் திரும்புவதாய்ச் சொல்லிச் சென்றோம்; இப்போது கார்கழிந்து கூதிரும் வந்துவிட்டது என்பதை உணர்ந்த அவனுள்ளம் தலைவியை உடனே காணவேண்டும் எனும் வேணவா கொண்டது. இதுகாறும் பதுங்கியிருந்த காதல் உணர்வு வீறுகொண்டெழுந்தது!

    ”அசைகின்ற மூங்கிலை யொத்த அழகினையும், பருத்த தோளையும், பெரிய அமர்த்தலையுடைய கண்ணையும் பெற்ற தலைவி இருந்த ஊரானது நெடுந்தூரத்தின்கண் அடைதற்கரிய இடத்தில் உள்ளது. எனது நெஞ்சமோ ஈரம் உண்டாகிய செவ்வியையும், பசிய புனத்தையுமுடைய
    வனாய் ஒற்றை ஏரை மட்டுமே வைத்திருக்கும் உழவனைப்போல் அவளைக் காணுதற்குப் பெரிதும் விரைகின்றது” என்று தன்னுள் கூறி வருந்தினான்.

    ஓரேருழவன், ஈரம் வீணாகாமல் உழுதற்கு விரைதலைப் போல என் நெஞ்சமும் தலைவியை உரிய பருவத்தே கண்டு அளவளாவ விரைகின்றதென்கிறான் தலைவன்.

    பல ஏருடையவன் சிறிது சோம்பியிருப்பினும் ஏவலாளர் உதவிகொண்டு குறுகிய காலத்தில் நிலத்தை உழுதுவிடக் கூடும்; ஆனால் ஓரேருழவனோ அவ்வொரே ஏரைக் கொண்டு ஈரம் வீண்படாமல் உழவேண்டிய கட்டாயத்தினை உடையவனாயிருப்பதால் விரைவானாகலின் அவனை ஈண்டுத் தனக்கு உவமை கூறினான் தலைவன்.  

    ஆடமை  புரையும்  வனப்பின்  பணைத்தோள்
    பேரமர்க்
     கண்ணி  யிருந்த  வூரே
    நெடுஞ்சேண்
     ஆரிடை  யதுவே  நெஞ்சே
    ஈரம்
     பட்ட  செவ்விப்  பைம்புனத்து
    ஓரே
    ருழவன்  போலப்
    பெருவிதுப்பு
     உற்றன்றால்  நோகோ  யானே. (குறுந்: 131 – ஓரேருழவனார்)

    வினைமுற்றித் திரும்பும் வேளையில், நாணொடு செறிந்த கற்பினையும், ஒளிபொருந்திய நுதலையும், இன்மொழிகளையும் உடைய மெல்லியலாளைக் காணத் தன்னைக் காட்டிலும் விரையும் தன்னெஞ்சை நமக்குத் திறந்துகாட்டுகின்றான் மற்றொரு தலைவன் அகநானூற்றில்!

    எம்மினும் விரைந்துவல்  லெய்திப்  பன்மாண்
    ……..நாணொடு
     மிடைந்த  கற்பின்  வாள்நுதல்
    அந்தீங்
     கிளவிக்  குறுமகள்
    மென்றோள்
     பெறநசைஇச்  சென்ற என்  நெஞ்சே.  (அகம்: 9)

    தேடிய தனத்தோடும், காதல் மனைவியைக் காணத் chariotheroதுடிக்கும் மனத்தோடும் தேரில் அமர்ந்திருக்கும் தலைவனின் உள்ளத்துணர்வைத் துல்லியமாய் உய்த்துணர்ந்த, தலைவனின் நெடுநாளைய தோழனான, தேர்ப்பாகன், குறுக்குவழியில் விரைந்து செலுத்தினான் தேரை. அதனால் விரைந்து இல்லத்தை அடைந்த தலைவன், தேர்வலவனின் சாதுரியத்தைத் தேர்ந்த சொற்களால் பாராட்டத் தொடங்கினான்…

    ”நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து செல்வோமாயின் துன்பமின்றி பெருந்தோளையுடைய தலைவியின் காமநோயைக் களையமாட்டேமென்று நன்குணர்ந்து, நன்மையை விரும்பிய மனத்தையுடையவனாகி, பருக்கையையுடைய மேட்டு நிலம் உடையும்படிக் குதிரையை ஏவிக் கரம்பை நிலத்திலே புதிய குறுக்குவழியை உண்டாக்கிய தேர்ப்பாகனே! நோயினால் வருந்தி உறையும் தலைவியை இறந்துபடாமல்தருதற்குக் காரணமாயினமையின் இன்றைக்கு நீ தேரையா தந்தனை? இல்லை… என் தலைவியையே (உயிரொடு) தந்தனை!” என்று கூறித் தேர்வலவனை ஆரத் தழுவினான் தலைவன்.

    சேயாறு  செல்லா  மாயின்  இடரின்று
    களைகலங்
     காமம்  பெருந்தோட்  கென்று
    நன்றுபுரிந்
     தெண்ணிய  மனத்தை  யாகி
    முரம்புகண்  ணுடைய  ஏகிக்  கரம்பைப்
    புதுவழிப்
     படுத்த  மதியுடை  வலவோய்
    இன்று
     தந்தனை  தேரோ
    நோயுழந்து
     உறைவியை  நல்க  லானே.  (குறுந்: 400 – பேயனார்)

    ”தலைவியின் துயர் உன்னால் நலிந்தது” எனும் தலைவனின் பாராட்டைப் பெற்ற தேர்ப்பாகனின் முகத்தில் பெருமிதம் பூத்துப் பொலிந்தது!  

    [தொடரும்]

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 141-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வல்லமை வாசகர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

    elephant with guide

    மஞ்சுசூழ் நீர்நிலையில் தந்தங்களைப் பாகன் வருடிக்கொடுக்க, குளித்துக் களிக்கின்றதோ இந்தக் களிறு? கண்கவர் காட்சியிதனைத் தன் புகைப்படக்கருவியில் பதிவாக்கி வந்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், போட்டிக்கு இதனைத் தேர்வுசெய்து தந்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நனிநன்றியைக் கனிவோடு தெரிவிக்கின்றேன்.

    மதங்கொண்டால் ஊரையே நடுங்கவைக்கும் கொல்களிறு, பாகனிடம் பச்சைக் குழந்தைபோலச் சாதுவாய்ப் பழகுவதைப் பார்க்கையில்,

    ”பெரும! ஊரில் உள்ள சிறுவர்கள் தனது வெண்மையான தந்தத்தைக் கழுவுதற்கு நீர்த்துறையில் பொறுமையாக அமர்ந்திருக்கும் பெருங்களிற்றைப் போல நீ (புலவர்களாகிய) எமக்கு இனியவன்; ஆனால், உன் பகைவர்க்கு, நெருங்குதற்கு அரிய மதங்கொண்ட யானையைப் போல் இன்னாதவன்” எனும்  சங்கப்புலவர் ஔவையின் புறப்பாடல் நினைவுக்கு வருகின்றது.

    ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
    நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
    இனியை பெரும எமக்கே; மற்றதன்
    துன்னருங் கடாஅம் போல
    இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே. (புறம்: 94)

    இனி கவிதைகளுக்குச் செல்வோம்!

    *****

    ”பருத்த யானை தன் திறன்உணராது பாகனுக்கடங்கிச் சேவகம் செய்வதுபோல், மாந்தரும் தம் ஆற்றல் அறியாது அயலானிடம் அஞ்சி அஞ்சிச் சாவது வேதனைக்குரியது” என்று விளம்புகின்றார்  திரு. ஆ. செந்தில் குமார். 

    யானைப் பாகனும் யானையும்

    மரகதப் பச்சைக் கம்பளம் போன்று 
    மரங்க ளடர்ந்து மலை காட்சியளிக்க
    பளிங்கு நீரை மிகுதியாய்க் கொண்ட
    பரந்தத் தடாகம் அதனடியை வருட
    பாகனொருவன் தான் அழைத்து வந்த
    பருத்த யானையின் தந்தத்தைப் பிடித்து
    பரிவுடன் அதையே நீராட்டி மகிழ்ந்தான்!

    கார்மேகம் போன்ற கரிய உருவமும்
    குறுகுறு வெனவே விழிக்கும் கண்களும்
    தூரிகைப் போன்றொரு சிறிய வாலும்
    கூரிய வெள்ளைத் தந்தங்க ளிரண்டும்
    தூணினைப் போன்று கால்கள் நான்கும்
    தன் சிறப்பெனக் கருதும் தும்பிக்கையோடு
    தண்ணீரில் அமர்ந்து யானை இருந்தது!

    கனிவுடன் உணவை யானைக் களித்து
    கடின வேலைகள் பலவும் சொல்லி
    அங்குசம் ஒன்றின் துணைக் கொண்டு
    ஆனைப் பாகன் அதைப் பயிற்றுவிப்பான்!
    தன்வாயால் பாகன் கட்டளை இடவே
    தன்வலிமை என்ன வென்பதை மறந்து – அதை
    தலையாயச் செயலெனச் செய்து வாழும்!

    மானிடர் பலரும் இவ்வானையைப் போன்று
    மூளையின் ஆற்றலை அறவே மறந்து
    தன் தோள்களின் வலியை உணர மறந்து
    தன்னை விடவும் ஆற்றல் குறைந்த
    அயலான் ஒருவன் பாதம் பணிந்து
    அஞ்சி அஞ்சி வாழ்வைக் கழித்து
    அடிமைச் சேவகம் செய்து மறைவர்!!!

    *****

    ”வலிமிகு யானை தன் ஆற்றல் மறந்து இரந்துண்டு வாழும் நிலையடையச்செய்த பாகனின் செயல் மனம் நோகச்செய்வது” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பிச்சையெடுக்க விட்டவன்…

    தும்பிக் கையினை நம்பிநல்ல
    துணிச்சல் கொண்ட யானையது
    வம்பே யின்றிச் சுதந்திரமாய்
    வலமாய் வந்ததைப் பிடித்தேதான்,
    தந்த மதனின் வலிமையையும்
    தானே மறக்கப் பழக்கியதைச்
    சொந்த நலனில் இரந்திடவே
    செய்து விட்டான் மனிதனவனே…!

    *****

    ”கணபதிக்கு முகம் தந்தவன்; கடின உழைப்புக்கு இலக்கணம் ஆனவன்; சைவ உணவின் மகத்துவத்தைச் சகத்துக்குச் சாற்றியவன்; பாரதக் கதை மாற்றிய அஸ்வத்தாமன்; பார்ப்பவர் வியந்திடும் கம்பீர உருவுடையான்” என்று யானையின் பீடுதனைப் பாடுபொருளாக்கியிருக்கின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

    கம்பீரத்தின் வீழ்ச்சி

    கணபதிக்கு முகம் தந்த அன்பின் விளக்கம் நீ!
    இந்திரனுக்கு பெருமை சேர்த்த ஐராவதம் நீ!
    கடின உழைப்பிற்கு இலக்கணம் ஆனாய் நீ!
    ஆலய வாசலின் அனைவரையும் வரவேற்கும் அன்புத் தோழன் நீ!
    போரில் முன் நின்று சண்டையிடும் இணையில்லா வீரன் நீ!
    நீ நடந்து வரும் அழகை வர்ணிக்க வார்த்தையில்லை !
    உனைப் பார்த்து மகிழாத பிள்ளை யாருமில்லை!
    உருவத்தால் மட்டுமில்லை! பாசத்திலும் பெரியவன் நீ!

    குழந்தையை தாய் சுமக்கும் காலமோ பத்து மாதம்!
    உன் குட்டியை நீ சுமப்பாய் இரு பத்து இரண்டு மாதம்!
    கூட்டமாய் வாழும் கொள்கை உடையவன் நீ!
    பெண் யானைக்கு மட்டும் தான் தலைமைப் பதவி!
    மனித இனத்தில் மட்டுமல்ல !யானை இனத்திலும்
    பொறுப்பானவர்கள் பெண்களே! எனவே இப்பதவி!
    உனைப் பற்றிச் சொல்ல எத்தனை செய்திகள்!
    உன் நினைவாற்றல் அரியது!
    மோப்ப சக்தியால் நீர் நிலைகளை அறியும் அற்புத ஆற்றல்
    வியப்புக்குரியது!
    சைவ உணவின் சக்தியை உலகிற்கு உணர்த்தியது!
    உனக்கோ பல பெயர்கள்!
    வேழம், வாரணம், மாதங்கம், களபம்
    குஞ்சரம், மதகயம். போதகம்
    எண்திசை காக்கும் அஷ்ட திக் கஜங்கள் ஆனாய்!
    அஸ்வத்தாமாவாய் நீ வந்து பாரதக் கதை மாற்றினாய்!
    அளப்பரிய ஆற்றல் இருந்தாலும், அங்குசத்திற்கு அடி பணிவாய்!
    அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதை அழகாய்ப் புரிய வைத்தாய்!
    பாகன் கட்டளைக்கு அடி பணிந்து, வேலை பல விரைந்து முடித்திடுவாய்!
    நீர் நிலையைப் பார்த்து விட்டால் குளித்து மகிழ்ந்திடுவாய்!
    தும்பிக்கையில் நீர் எடுத்து உன் மேல் ஊற்றிடுவாய்!

    நின்றபடி தூங்கிடுவாய்!
    யானைக்கு மொழி உண்டாம்! ஆய்வில் கண்ட உண்மை!
    பிளிறல் கேட்கையிலே ஏதோ புரிகிறது!
    ஆண் யானைகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது!
    தந்ததத்தை எடுப்பதற்கு, யானைகளை கொல்கின்ற
    அவலம் நெருப்பாய் சுடுகிறது!
    கம்பீரமாய் வலம் தந்த யானை கனவாய்க் போகலாமா!

    *****

    ஆகம சாத்திரத்தில் தடம்பதித்தாய்; ஆலய சிற்பத்திலும் இடம்பிடித்தாய்; வாகனமாய்க் கடவுளுக்கு ஆனாய்; பாகனின் பாகுமொழிகளுக்குப் பணிந்தாய்; சண்டை மட்டுமன்று சர்க்கஸும் நீயின்றிச் சிறக்காது” என்று யானையின் அருஞ்சேவைகளைக் கோவையாக்கியிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    யானை வரும் முன்னே..அதன் பெருமை வரும் பின்னே.!

    கோட்பாடு கொண்ட பாலூட்டும் பாசக்குடும்பம்..
    ……….கோட்டுக்காக வேட்டைக் கிரையாகுமோர்க் களிறு.!
    வேட்டஞ் செய்மனிதரும் போற்றும் வகையில்நீ..
    ……….வேகமின்றி நிதானமாய் அற்புதச் செயல்புரிவாய்.!
    ஆட் கொண்டானுனை வாகனமாய் இறைவனும்..
    ……….அறிவிற் சிறந்து விலங்கில்நீ வேறுபட்டதாலே.!
    காட்சிப் பொருளாய் இன்றும்நீ காண்பதற்கரிய..
    ……….கண்ணுக்கு விருந்தளிப்பாய் சிலையாய் உயிராய்.!.

    .ஆகம சாத்திரத்தில் ஆனையும் ஓரங்கமாகும்..
    ……….ஆலய சிற்பங்களில் சிந்தனைக்கு விருந்தாகும்.!
    ஏகபோகம் எல்லாம் அனுபவிக்கும் ராஜாவும்தன்..
    ……….எதிர்பகை வெல்வானுன் படைத் துணைகொண்டு.!
    மேகவாகனுன் கரியநிறத்தை வெள்ளை யாக்கி..
    ……….மேல்சவாரி செய்ததால் மேலுலகத்திலும் புகழ்.!
    தேகப்பயிற்சி இலாமலே திரண்ட உடலமைப்பும்..
    ……….திகைக்கும் திறன்மிகு உன்தும்பிக்கை அதிசயம்.!.
    ..
    வாகனமாய்க் கடவுளுக்குப் பணி செய்வாய்..
    ……….வேழமுக வினையகனாக வடிவ மெடுப்பாய்.!
    ஊகத்துடன் பாகனின் சைகையறிந்து செயலை..
    ……….உறுதியுடன் செய்வாய்!ஒன்றாகக் கூடிவாழ்வாய்.!
    பாகனிடம் பரிவுண்டு! ஆனால் மதம்பிடித்தால்..
    ……….பந்தாடி பரலோகம் அனுப்பிடுவாய் அறியாது.!
    சோகத்தை நிகழ்த்துகின்ற இச்செயலாலே உன்..
    ……….சாதனைக்கு இழுக்காக இதுவொரு பங்கம்தான்.!.

    லோகத்தை இரட்சிக்கும் பரந்தாமனும் உன்மீது..
    ……….லாவகமாய்ப் பவனிவந் தவனியைக் காப்பான்.!
    சாகசத்தில் சர்க்கஸில் சறுக்கி விளையாடினும்..
    ……….சற்றுதுள்ளிக் குதிக்கத் தெரியாத அப்பாவியாம்.!
    பாகனின் அரையடி அங்குசமுனை அடக்கும்..
    ……….படுத்து எழுந்திருப்பதற்கு படுங்கஷ்ட மதிகம்.!
    வாகாக வளைத்துதன் தும்பிக்கைக் கொண்டுனை..
    ……….வணங்கும் பக்தருக்கு ஆசிர்வாதம் செய்வாய்.!

    *****

    களிற்றின் நிறைகுறைகளைக் கருத்தொடு தம் கவிதையில் பொதிந்து தந்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!  

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருக்கும் கவிதை இது!

    காக்கக் காக்க களிற்றினந் தன்னை…

    ”சிங்க மராட்டியரின் கவிதை கொண்டு
    சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்”
    என்று அருங் கவிஞன் எங்களது பாரதியின்
    தங்கத் தமிழ் வாய் தவறி உரைத்ததனால்
    ஆத்திரத்தை யானை அவன்மீது காட்டியதோ!

    என்று மனங்கலங்கி-

    அழிகின்ற ஆனைகள் மேல்
    அனுதாபம் காட்டாத
    பழிவந்து சேராமல்,
    பாரதியென் சொற்குருவின்
    ஓடித் தவறிவிட்ட ஓர்கவிதைக் கீடாக

    ஓர் கால்-

    ”ஈழத்து வேழநிரை பல பிடித்தே
    ஏற்றன்பு செய்பவர்க்கே அனுப்பி வைப்போம்
    பாழும் பணத்தினுக்காய் அவற்றைக் கொன்றே
    பல்லைப் பிடுங்கி விற்கும் கொடுமை செய்யோம்”

    என்று கவி பாடிட வே என்னை மனம் தூண்டியது.

    இங்கே
    நல்ல பெறுமதி என்றுள்ளூர எண்ணி
    பல்லைத் தடவும் பாகனிடம்
    கொல்ல நினையாதே என்னையென்று
    சொல்லத் தெரியா, வாய்
    இல்லா மிருகம்
    மெல்லத் தன் கை கூப்பி
    வேண்டுகிறகிற காட்சியிதா?
    அல்லாவிடிற் தன் அழகு மிகு தந்தத்தை
    பாலிஷ் செய்கின்ற பாகன் மேல் அன்பு வைத்து
    கையுயுாத்தி நன்றிதனைக் காட்டுகிற காட்சியதா!

    எப்படியா யிருந்தாலும் –

    காட்டில் சுதந்திரமாய்க் கட்டற்று வாழ்கின்ற
    ஆனைகளைப் பிடித்து அங்குசத்தாற் குத்தி
    வேதனைக்கு உள்ளாக்கி வேலை பல வாங்கி
    பாதகங்கள் செய்யாதீர் பாவமந்த ஜன்மங்கள்!

    ”சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்று வெள்ளந்தியாய்ச் சொன்னதற்கா எங்கள் செந்தமிழ்ப் புலவனின் ஆருயிரை நீ கவர்ந்திட்டாய்?” என்று ஆனையை ஆற்றாமையோடு கேட்கும் கவிஞர், ” ”பல்லைத் தடவும் பாகனிடம் என்னைக் கொல்ல நினையாதே என்று களிறு கைகூப்பும் காட்சியோ இஃது? என்று கேட்பதும், களிறுகளும் நம் சொந்தங்களே! தந்தங்களுக்காக அவற்றைக் கொன்றழிக்கும் பாவத்தைச் செய்யாதீர் மானுடரே!” என்று  முடித்திருப்பதும் சிறப்பு.

    சிந்தனைக்கு விருந்தாகும் நற்கவிதை படைத்தமைக்காக, திரு.  எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 17

    -மேகலா இராமமூர்த்தி

    மறுநாட் காலை தோழியும் தலைவியும் கண்விழித்துப் பார்த்தபோது வீட்டில் தலைவனைக் காணவில்லை. அதிர்ந்த அவர்கள் வீட்டுக்கு வெளியேவந்து பார்த்தனர். தலைவனின் தேரையும் காணவில்லை. தான் விரும்பியபடியே பொருள்தேடச் சென்றுவிட்டான் அவன் என்பதை அறிந்து இருவரும் ஏமாற்றத்தோடு வீட்டுக்குள் வந்தனர். அப்போது சாளரத்தின் ஓரமாய் ஓர் ஓலை நறுக்கைக் கண்டனர்.

    ”அன்புக் கண்மணி! பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை நீ அறியாதவள் அல்லள்! கார்காலம் வருவதற்குள் மீண்டிடுவேன் பொருளோடு! அருமைத் தோழி! இயலுமாயின் தலைவியொடு உறை; நான் திரும்பி வரும்வரை!” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

    தலைவனின் செயலறிந்து ஏக்கப் பெருமூச்சு விட்டாள் தலைவி.

    தன்னைத் தேற்றிக்கொள்ள அவள் எவ்வளவோ முயன்றும் அம்முயற்சியில் தோற்றுத்தான் போனாள். கணவனைப் பிரிந்த ஏக்கத்தால் அவள் தூக்கம் கெட்டது; துக்கம் தீயாய்ச் சுட்டது! கடத்தற்கரிய துன்ப வெள்ளத்தில் அவள் நீந்திக்கொண்டிருந்த வேளையில், அருமைத் தோழி அருகிருந்தது அவளுக்குப் பெரும் ஆறுதலளித்தது. அவளிடம் தன் வேதனையை மனந்திறந்து வெளிப்படுத்தலானாள்…

    “வைகல் வைகல் வைகவும் வாரார்
    எல்லா
    வெல்லை எல்லையுந் தோன்றார்
    யாண்டுளர்
    கொல்லோ தோழி யீண்டிவர்
    சொல்லிய
    பருவமோ விதுவே பல்லூழ்
    புன்புறப்
     பெடையொடு  பயிரி  யின்புற
    இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை
    ஊனசைஇ  யொருபருந்  திருக்கும்
    வானுயர்
     பிறங்கன்  மலையிறந்  தோரே. (குறுந்: 285 – பூதத்தேவன்)

    ”தோழி! இனிய ஆண் புறாவானது  புல்லிய புறத்தை உடைய பெண் புறாவைப் பலமுறையழைத்து, pegeonsஇமைப்பொழுதில் எத்தகைய இன்பத்தை உடையதாக ஆகின்றது! அவை இங்ஙனம் மகிழ்ந்திருப்பவும், ஞெமை மரத்தின் உச்சியில் இறந்தோரது தசையை விரும்பி, ஒற்றைப் பருந்து இருக்கின்ற, வானளவும் உயர்ந்த விளக்கத்தை உடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர், நாள் தோறும் விடியற் காலம் நீங்கிப் பகல் வரவும் அப்பகல் காலத்தில் வந்திலர்; எல்லாப் பகலின் எல்லையாகிய இரவிலும் மீண்டு வந்து தோன்றார்; எங்கே இருக்கின்றாரோ? இங்கே அவர் மீண்டு வருவேன் என்று சொல்லிய பருவம் இதுவே” என்றாள் வேதனையோடு.  

    தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் அண்மித்து விட்டதை எண்ணித் தலைவி கவன்று வேறுபட்டாள். அப்பொழுது தோழி, “தலைவர் விரைவில் மீண்டு வருவார்; நீ ஆற்றியிரு” என்று வற்புறுத்தினாள். அது கேட்ட தலைவி “ஒவ்வொரு நாளும் பகலிலும் இரவிலும் அவர் வரவை எதிர்பார்த்து நிற்கின்றேன். இரவு வந்தால் விடிந்தால் வருவர் என்று எண்ணுவேன்; ஆயினும் விடிந்த பின் அவர் வந்திலர்; அது கண்டு பகல் கழிந்தால் தோன்றுவர் என எண்ணுவேன்; அப்பொழுதும் வந்திலர்” என்று தன் ஆற்றாமையை இப்பாடலில் வெளிப்படுத்துகின்றாள். 

    சின்னாட்கள் சென்றன. கார்காலம் தொடங்கியது.

    கார் வந்துவிட்டது; தலைவனின் தேர் இன்னும் வரவில்லையே என்று வெதும்பிய தலைவியின் விழிகளில் நீர் திரண்டது. கொல்லைப்புறம் சென்றாள். அங்கே அவள் ஆசையாய் வளர்த்திருந்த முல்லைக்கொடி பூத்திருந்தது.

    தலைவி முல்லைப் பூவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதுகண்ட தோழி அவள் தோளைத் தொட்டாள். உடனே தலைவி, “பார்த்தாயாJasmine-Flower தோழி! இளமையின் அருமையை எண்ணிப்பாராமல், பொருளைவிரும்பி என்னைப் பிரிந்துசென்ற தலைவர் இன்னும் இவ்விடம் வந்து சேரவில்லை. எவ்விடத்து உள்ளாரோ… தெரியவில்லையே என்று நான் எண்ணியிருப்ப, நறிய தண்ணிய கார்காலமானது, மழையால் பாதுகாக்கப்பெற்ற பூங்கொடி முல்லையின் தொக்கமுகைகளையே தன் பற்களாகக் கொண்டு “உன் தலைவன் இன்னும் சொன்னபடி இல்லம் திரும்பவில்லையா?” என்று என்னைக் கேலிசெய்வதுபோல் நகைக்கிறது” என்றாள் நாத்தழுதழுக்க.

    இளமை  பாரார்  வளநசைஇச்  சென்றோர்
    இவணும்  வாரார்  எவண  ரோவெனப்
    பெயல்புறந்  தந்த  பூங்கொடி  முல்லைத்
    தொகுமுகை  இலங்கெயி  றாக
    நகுமே  தோழி  நறுந்தண்  காரே.    (குறுந்: 126 – ஒக்கூர் மாசாத்தியார்)

    இதே பொருள்பட வினைமுற்றி மீளும் தலைவன் முல்லைக்கொடியைக் காட்டிடையே கண்டு வினவும் பாடலொன்றும் குறுந்தொகை 162இல் காணக் கிடைக்கின்றது. தலைவன் தலைவி இருவருக்குமே முல்லையின் முகைகள் தமைப்பார்த்து நகைப்பதுபோலவே தோன்றுவது வியப்புக்குரிய உளவொற்றுமையே!

    கார்புறந்  தந்த  நீருடை  வியன்புலத்துப்
    பலர்புகு
     தரூஉம்  புல்லென்  மாலை
    முல்லை
     வாழியோ  முல்லை  நீநின்
    சிறுவெண்
     முகையின்  முறுவல்  கொண்டனை
    நகுவை
     போலக்  காட்டல்
    தகுமோ
     மற்றிது  தமியோர் மாட்டே.   (குறுந்: 162 – கருவூர்ப் பவுத்திரன்)

    ”…முகைவாய் திறந்த நகைவாய் முல்லை” எனும் (அகம்: 244) பாடல் அடியும் இங்கே ஒப்புநோக்கத் தக்கதே.

    கொல்லைப்புறம் அகன்று வாசல் திண்ணையில் வந்தமர்ந்தாள் தலைவி. அப்போது சடசடவென்ற சத்தத்துடன் கார்காலத் தலைப்பெயல் (முதல் மழை) தொடங்கியது.

    கானிடை நின்றிருந்த கவின் மயில்கள் வான்மழைக்கேற்பத் தம் தோகையை விரித்து ஆடத் தொடங்கின. வெளிப்புற நிகழ்வுகள் அனைத்துமே தலைவியின்  அகவாட்டத்தை அதிகப்படுத்திவருவதனைக் கண்டாள் தோழி. இனியும் வாளாவிருத்தல் முறையன்று என்று முடிவுசெய்தவளாய்,

    ”கண்ணே! சென்ற கார்காலத்தில் பெய்யாது எஞ்சியிருந்த peacockபழைய நீரை, புதிய நீரைக் கொள்ளும் பொருட்டுச் சொரிகின்ற, அயன்மை உடைய மேகத்தினது ஓசையைக் கேட்டு, கரிய மயிற்கூட்டங்கள் கார்ப்பருவத்துக்குரிய மழை பெய்தது என்று தவறாக எண்ணி, அம் மழைக்கு எதிரே ஆடுதலைச் செய்தன; பிடாச்செடிகளும் மலர்ந்தன. அவை நம்மைப்போல் ஆறறிவு படைத்தவை அல்லவே. அதனால் இவ்வுண்மையை உணராத அறியாமை உடையன. இது மெய்யான கார்காலம் அன்று! ஆதலால் நீ கவலை ஒழி” என்றாள்.

    மடவ  வாழி  மஞ்ஞை  மாயினம்
    கால  மாரி  பெய்தென  அதனெதிர்
    ஆலலு  மாலின  பிடவும்  பூத்தன
    காரன்று இகுளை  தீர்கநின்  படரே
    கழிந்த  மாரிக்  கொழிந்த  பழநீர்
    புதுநீர்  கொளீஇய  வுகுத்தரும்
    நொதுமல்  வானத்து  முழங்குகுரல்  கேட்டே (குறுந்: 251 – இடைக்காடனார்)

    இஃது உண்மையான கார்காலந்தான் என்பது தோழிக்கும் தெரியும். எனினும் தலைவியின் மனத்துக்குச் சமாதானம் தரும்வகையில் ஏதேனும் உரைத்து, அவள் துயரைச் சிறுபொழுதேனும் ஆற்றக்கூடுமானால் நன்றாயிருக்குமே எனும் அவளின் நல்லெண்ணத்தின் வெளிப்பாடே இப்பொய்யுரை.

    இதனைப் பொய்யுரை என்று கூறுவதுகூடப் பொருத்தமானதன்று.

    ஆம்,
    பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கு மெனின்.
    (குறள்: 292) என்று பொய்யில் புலவரே கூறியிருக்க, தலைவியின் நன்மை கருதித் தோழியுரைத்த பொய்யை ’வாய்மை’ என்றே நாமும் நவில்வோம்.

    தோழியின் சாதுரியமொழி கேட்ட தலைவி அவள் கரத்தைப் பற்றி மீண்டும் கொல்லைப்புறம் அழைத்துப் போனாள். அங்கே கொன்றையும் குருந்தும் அரும்பு கட்டியிருப்பதைத் தோழிக்குச் சுட்டிக்காட்டி,

    ”செல்வர்வீட்டுச் சிறு பிள்ளைகளுடைய சிறிய அடியின்கண் விளங்கும் தவளையின் வாய்போன்ற வாயுடைய பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணிக் காசையொத்த பேரரும்பை வெளிப்படுத்தும் கொன்றையும் குருந்தும் (காற்றில்) சுழலும், மிக்க தண்மையையுடைய பருவத்தையும் கார் காலமன்று என்று நீ கூறுவாயாயின் பின் இங்ஙனம் தோன்றுவது கனவோ என்று யான் உன்னைக் கேட்பேன்…பதில் கூறுவாயாக” என்றாள்.

    செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
    தவளை
    வாய பொலஞ்செய் கிண்கிணிக்
    காசி
    னன்ன போதீன் கொன்றை
    குருந்தோ
    டலம்வரும் பெருந்தண் காலையும்
    காரன்
    றென்றி யாயிற்
    கனவோ
    மற்றிது வினவுவல் யானே.  (குறுந்: 148 – இளங்கீரந்தையார்)

    தன் சாதுரியம் தலைவியிடம் எடுபடாமல் போனதை அறிந்து பேச்சிழந்து நின்றாள் தோழி.

    [தொடரும்]

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 140-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    fishing net

    மீன்வலை தைக்கும் மீனவ நண்பர்களைக் கலைநயத்துடன் படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. லோகேஸ். இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் நன்றியுடையேன்!

    தரைமேல் பிறந்து தண்ணீரில் பிழைக்கும் பரதவர் (மீனவர்) வாழ்க்கை நிலையில்லாததாகவும் இரங்கத்தக்கதாகவுமே இருந்திருக்கின்றது அன்று. நெய்தல் நிலத்தின் உரிப்பொருளாகத் தமிழ் இரங்கலைத் தேர்ந்தெடுத்ததும் அக்காரணம் பற்றித்தான். ஆனால் தொழில்நுட்பமும் அறிவியலும் போட்டிபோட்டு வளர்ந்திருக்கும் இன்றைய சூழலிலும் அந்த அவலநிலை தொடர்வது நெஞ்சில் வேதனையைப் படரச்செய்கின்றது.

    வலையொடு பின்னிப் பிணைந்திருக்கும் பரதவர் வாழ்வு குறித்துப் பாடக் காத்திருக்கும் கவிஞர்களை வரவேற்போம்!

    *****

    அலையோடு விளையாடி வலையோடு போராடும் வலைஞரின் வாழ்வைக் கலப்படமின்றி படம்பிடிக்கும் ஒரு கவிதை, தமிழக மீனவன் இந்திய மீனவனாய் அடையாளப்படுத்தப்படும் நாளே அவன் களையிழந்த வாழ்வின் களையெடுத்து, அவனையும் ஒரு மனிதனாய்த் தலையெடுக்க வைக்கும்நாள் எனும் எண்ணத்தை வெளிப்படுத்தும் மற்றொரு கவிதை என இரு அழகிய கவிதைகளைப் படைத்தளித்திருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.  

    வலைஞரின் வாழ்க்கை
    மீன்பிடி வலைதன்னில் முந்தினத்தில் ஏற்பட்ட

    முக்கியப் பழுதுகளை முத்தாய்ப்பாய் சரிசெய்து
    பாய்மரச்சீலை விரித்து பக்குவமாய் வடம்பிடித்து
    கடலோடு உறவாடி அலையோடு விளையாடி 
    காற்றோடு கவிபாடி வலையோடு போராடி
    கட்டுமரத் தொட்டிலையே கடலலைகள் தாலாட்ட…

    நெகிழியிழைப் படகோடு நெஞ்சமெல்லாம் நிறைவோடு
    தோணிகளின் துணையோடு தோழர்களின் படையோடு
    வள்ளங்கள் மரக்கலங்கள் விசைப்படகின் இசைவுடனே 
    எங்கும் நிறைந்திருக்கும் எல்லையில்லாப் பெருங்கடலில் சங்கும் முத்துச்சிப்பியும் அரியபலவும் மீனுங்கொணர
    வலைஞர் விரைந்திடுவர் வான்குலவும் கடலாட…

    ஆழ்கடலில் வலைவிரித்து அகப்பட்ட மீனையெல்லாம்
    அயர்ச்சியென்றும் இல்லாமல் முயற்சிக்கிழுக்கு நேராமல்
    மழையென்றும் வெயிலென்றும் புயலென்றும் பாராமல்
    முறையாகப் பாதுகாத்து முனைப்புடனே கரைசேர்த்து
    காத்திருக்கும் வணிகரின் கூடையெல்லாம் மீன்நிரம்ப – எதிர்
    பார்த்திருக்கும் மக்களின் பசிபோக்க முனைந்திடுவர்…

    இளைப்பாற வலையுலர்த்த உதவிற்ற கச்சத்தீவை
    இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அளித்ததனால்
    தமிழக மீனவர்கள் பரிதவித்து நிற்கின்றார்
    தரங்கெட்ட சிங்களனும் செய்நன்றி மறந்துவிட்டுத்
    தமிழனின் வலையறுத்துச் சிறைப்பிடித்து மகிழ்கின்றான் – இதைத்
    தட்டிக்கேட்க நாதியற்றுத் தமிழன்தன்னுயிரைக் கொடுக்கின்றான்…

    *****
    மீனவன்
    இன்று

    கடந்துவந்த பாதையின் கசப்பான நினைவுகளோடு
    மீன்பிடித் தடைக்காலம் நீங்குமுன்னே
    பழுதுப்பட்ட வலைகளைச் சரிசெய்தான்
    எதிர்வரும் பருவத்தை மனதிற்கொண்டு…

    அலை மோதும் கடலினிலே
    வலை வீசும் மீனவனின் – உயிருக்
    குலை வைக்கும் போராட்டம்
    மலை போல ஏராளம் – அதை
    சிலை போல தாங்கி – நிதம்
    நிலை குலையாது இருந்திடுவான்…

    […]

    அன்று
    காற்றழுத்தத் தாழ்வுநிலையின் சீற்றம் தாளாமல்
    சிதைவுற்ற வலையோடு மீனின்றிக் கரைசேர்ந்தான்…
    இழையோடும் சோகத்தால்
    களை இழந்து காணப்பட்டான்…

    நெகிழி இழை கொண்டு
    நேர்த்தியுடன் பின்னப் பட்ட
    பெரிய வலை எடுத்து
    புறப்பட்டான் ஆழ் கடலுக்கு…மீனோடு வரும்
    மணாளனை எதிர்நோக்கி
    மனையாள் காத்தி ருந்தாள்
    அன்று
    […]
    இனிவரும் காலங்களில்
    தமிழக மீனவன் சுடப்பட்டான்
    தமிழக மீனவன் சிறைப்பட்டான்
    என்று செய்திசொல்லும் நிலைமாறி
    இந்திய மீனவன் சுடப்பட்டான்
    இந்திய மீனவன் சிறைப்பட்டான்
    என்று சொல்லிடும் நிலைவேண்டும்…
    அப்போதேனும் கன்னடர்க்கும் காசுமீரிக்கும் 
    மத்திய அரசுக்கும் மளையாளிக்கும் – நெஞ்சில்
    சற்றேனும் ஈரம் பிறக்கும்….!

    *****

    ”வாழ்வாதாரமாகும் வலையே மீனவர்க்குக் கவலை எனும் சேதாரத்தையும் தருகின்றது. கவலையில்லா வாழ்வை மீனவர்க்கு வலை கொண்டுவருவது எந்நாளோ? என்று வினா எழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    (க)வலையா…

    வலை,
    வாழ்வாதாரமாகிறது
    மீனவர்களுக்கு..

    சிலநேரம் அது
    கவலையைக் கொண்டுவருகிறதே-
    கடலில் மீன்பிடிக்கச் சென்றால்..

    மீன் கிடைக்கவில்லை என்பது
    சிறு கவலை,
    மீனவனே கிடைக்கவில்லை என்பது
    மீளமுடியாக் கவலை..

    கவலையேயில்லா வாழ்வைக்
    கொண்டுவருமா வலை-
    காத்திருப்போம்…!

    *****

    மீன்களோடும் விண்மீன்களோடும் நடுக்கடலில் உறவாடி, மாதம்பாதி மண்ணிலும் மீதம்பாதித் தோணியிலும் வாழ்க்கையைக் கடத்தி விடியலைத் தேடும் மீனவ நண்பர்கள் வாழ்க்கையைப் பாங்காய்ப் படம்பிடித்திருக்கிறார் திருமிகு. ஹேமா வினோத்குமார்.

    விடியலை நோக்கி!!!

    கட்டுமரங்கட்டி
    கவனத்தோடு வலைபின்னிச்
    சொந்தங்களுக்குப்
    பிரியா விடையளித்து
    நடுக்கடல் நோக்கி…!!
    பகலெல்லாம் பாடுபட்டு
    இரவெல்லாம் கண்விழித்து
    மாதம்பாதி மண்ணிலும்
    மீதம்பாதித் தோணியிலும்
    அப்பா வருவார் என்று மகளும்
    ஐயா வருவார் என்று மகனும்
    ஆசையாய் மலர்சூடி
    அத்தான் வருவார் என்று என்னவளும்
    அன்புடன் தமையாளும்
    பிரார்த்தனையோடு பெற்றோரும்
    எனக்காக!!
    என் பாதச்சுவடுகளுக்காக!!
    வழியின் மேல் விழி வைத்து!!
    வழியின் மேல் விழி வைத்து…
    உப்புக்காற்றில் கரைந்து
    எம்மக்கள் நினைவுகளோடு
    கட்டுமரத்தில் அயர்ந்து
    வயிற்று பிழைப்பிற்காக
    ஆயிரம் ஆயிரம்
    மீன்களோடும் விண்மீன்களோடும்
    நடுக்கடலில்…!!
    காற்றோடு கவிபாடி
    வலையோடு விளையாடி
    சிற்றுயிர் கொய்து
    பாவஞ்சுமந்த மனதுடன்
    கரையை நோக்கிக்
    கட்டுமரத்தில் நான்!!
    வழிபுரளாமல்
    எல்லை தாண்டாமல்
    பெருங்கவனத்துடன்
    அலைகளோடு புரண்டு
    சுடுமணலில் கால்பதிக்க
    ஓடத்துடன் ஓடி
    இரண்டாஞ்சாமத்தில் கிழியோடு
    கட்டுமரத்தில்!!
    சின்னஞ்சிறு ஆசைகளை
    சுமந்து…!!!

    மீனவனாய்!!

    விடியலை நோக்கி!!

    *****

    அலை குதிரைகளில் சவாரி செய்யும் சமுத்திர ராசனின் செல்லப்பிள்ளைகளாம் மீனவ நண்பர்களின் வலையில் மீன் சிக்கினால் வீட்டில் உலை கொதிக்கும்; இல்லையேல் வயிற்றுத் தீயால் அவர் உடல்கொதிக்கும் என்று உணர்வுபூர்வமாய்க் கவி வடித்திருக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    கண்ணீர்க் கடல்:

    அலை குதிரைகளில் சவாரி செய்யும் மன்னர்கள்!
    சமுத்திர ராசனின் செல்லப் பிள்ளைகள்!
    ஆழ்கடல் பயணம் அனுதினம் போய் வரும்
    மீனவ நண்பர்கள்!
    உயிரைப் பணயம் வைத்து, மீன்களை நமக்குத்
    தரும் கர்ம வீரர்கள்!
    வலையில் மீன்கள் சிக்கினால் தான்!
    மீனவன் வீட்டில் உலை கொதிக்கும்!
    மீன் கிடைக்காத நாட்களிலே!
    பசிக் கொடுமையினால் உடல் கொதிக்கும்!
    கிழிந்த வலையில் மீன் சிக்காது!
    மீனவன் வாழ்வில் என்றும் மகிழ்விருக்காது!
    கடலருகில் வலை போட்டால் மீன் கிடைக்காது!
    ஆழ்கடல் சென்றாலோ உயிருக்கு
    உத்தரவாதம் இருக்காது!
    கடல்நீர் ஏன் உப்பென்று காரணம்
    இன்று தான் புரிந்தது!
    மீனவப் பெண்டிர் வடித்த கண்ணீர் தான்
    கடல் நீரை உப்பாய் மாற்றியது!!!
    கிழிந்த வலையைத் எளிதாய்த் தைத்து விடலாம்!
    தொலைந்த இவர்கள் வாழ்வை
    நாம் முயன்றால் தேடிக் கொடுத்து விடலாம்!

    *****

    ஆழிசூழ் உலகாம் நெய்தல் திணையின் பிள்ளைகள், புயலுக்கும் மழைக்கும் அந்நியரின் கொலைவெறிக்கும் ஆட்பட்டுக் கதறும் அவலத்தை உளம்தொடும் பாவாக்கியிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    கடலோடியின் கதறல்..! 

    கடலால் சூழ்ந்திடும் மண்ணுலகம் இருப்பதாலே..
    ……….கடல்சார்ந்து வாழ்வதுதான் கடலோடியின் நிலை.!
    அடலேறுபோல உடலுறுதி கொண்டவரே யாயினும்..
    …….அலைநடுவே ஆபத்துடன் கழிப்பதேயம் வாழ்வு.!
    இடர்ப்படும் துன்பமும் தொல்லையுமெம்
    உடன்பிறப்பு..
    ……….இல்வாழ்வில் இன்பமென்றால்
    யாருக்கும் தெரியாது.!
    கடலுக்கும் கரைக்குமுள்ள
    தூரத்தாலே எங்களது..
    ……….உடலுக்கும்
    உயிருக்குமொரு உத்திர வாதமில்லை.!.

    .
    வலைவீசி மீனுக்காகக் காத்திருக்கும் வேளையில்..
    …….வஞ்சகர்கள் வீசும் வலையிலும்யாம்
    வீழ்வதுண்டு.!
    அலைமேலேறித் தாவும்
    பெருந்திமிங்கிலம் போல்..
    ……….ஆயிரமைல்
    வேகத்தில் வருமன்னியப் படையது.!
    வலையறுக்கும்!
    படகுடைக்கும்! பகை விலக்கியாம்..
    …….தொலைதூரம் சென்றால்?எல்லை
    தாண்டினாயென..
    கொலையும் செய்வார்! கொடும்
    பாவியரப்போது..
    ……….அலைதான் எங்களுக்கெலாம்
    ஆறுதல் சொல்லும்.!.

    .
    காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?எனக்..
    …….கருத்துக் கவிபுனைந்தான் கவியரசு
    கண்ணதாசன்.!
    காற்றுடனும் அலையுடனும் போராடி
    உறவாடும்..
    ……….கண்ணீரும் கடல்நீரும்
    வற்றாதென்பது இயற்கை.!
    காற்றழுத்தம் வரும்
    போதலையின் சீற்றத்தால்..
    ……….காய்ந்த கருவாடு
    போலநாளும் கரைசேருவோம்.!
    மாற்றுவழி
    வாழவொரு வழியில்லை ஆற்றாதழுத..
    …….மனதைக் கல்லாக்கி தேற்றியும்யாம் வாழுகிறோம்.! 

    *****

    சமீபத்தில் ’ஒக்கி’ புயலில் சிக்கி, விக்கிநிற்கும் குமரி மாவட்ட மீனவரின் அவல வாழ்வியல் நிகழ்வுகள் கவிஞர்கள் அனைவரின் கவிதைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கக் காண்கிறேன். காலத்துக்கேற்ற வகையில் கவிவடித்திருக்கும் உங்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    வலைப்பதிவு

    தண்ணீரில் நித்தமும் நீந்திச் செல்லும் என்னால்
    கண்ணீரில் நிற்க முடியாது தத்தளிக்கிறேன்

    பெற்ற மகனையும் கட்டிய கணவனையும்
    பேரலை வந்து அள்ளிச்சென்றதெனக் கேட்டு
    பேரதிர்ச்சியில் கதறி அழும் பந்தங்களின் கண்ணீரில்

    அப்பா எப்போது வருவார்; முத்தம் தருவார்;
    அள்ளி அணைத்து அழகிய புத்தாடை வாங்கித் தருவார் என
    ஆயிரம் கனவுகளுடன் ஏங்கிக் கிடக்கும்
    அல்லி மலர்களின் கண்ணீரில் –

    தத்தளிக்கிறேன்.. தவிக்கிறேன்..
    கரைபுரண்டோடும் வெள்ளத்தில் நீந்தி மகிழும் என்னால்
    கவலையில் ஊற்றெடுக்கும் இக் கண்ணீரில் நொடி கூட நிற்க முடியவில்லை..

    நானே வருகிறேன் தலைவா.. எனை நம்பி வாழ்வை நடத்தும் என் தலைவா..
    காலங்காலமாக உனக்காய் மீன்களை பிடித்துத் தரும் என்னால்,
    காப்பாற்ற ஆளில்லாமல் பரிதவிக்கும் உனை
    காக்க முடியாதென்று நினைத்தாயோ?!
    எவரும் வேண்டாம் என் வேந்தனே..
    இதோ நான் வருகிறேன்..
    உனைக் காப்பாற்றிக் கரை சேர்க்க..
    உற்றவரிடம் உனைக்கொண்டு சேர்க்க…!

    கடலன்னை புயலாய்ச் சீற்றங்கொண்டால் தன் பிள்ளைகளென்றும் பாராமல் பரதவரையும் பந்தாடிவிடுகின்றாள். அவளின் அடாத செயல்கண்டு துடிதுடித்து நிற்கும் பரதவர் வடிக்கும் கண்ணீர், உயிரற்ற மீன்வலையையும் உயிர்கொண்டு உதவச் செய்திடும் ஆற்றலுடையது எனும் புதிய சிந்தனையைத் தன் பாட்டில் பதியமிட்டிருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.  

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 16

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவன் மீண்டும் பொருள்தேடுவதற்காகத் தன்னைப் பிரிந்துசெல்ல விழைகின்றான் எனும் உண்மை புலப்படவே தலைவியின் மனத்தில் மீண்டும் கவலை வலை பின்னலாயிற்று.

    பொருளின்றி இனி நெடுங்காலம் வளமாய் வாழவியலாது எனும் எண்ணம் தலைவனின் உள்ளத்தை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

    அவ்வேளையில் தலைவிபேணும் இல்லறத்தை அருகிருந்து காண வந்திருந்தாள் அவள் ஆருயிர்த்தோழி. கவலையினால் இருண்டிருந்த தலைவி முகம் தோழியின் வரவுகண்டு சற்றே மலர்ந்தது. விரைந்து வாயிலுக்குச் சென்று அவளைக் கட்டியணைத்து அகத்தினுள் அழைத்துவந்தாள்.

    வீட்டினுள் வந்த தோழி, தலைவனைக் கண்டு நலம் விசாரித்தாள். தலைவனும் அவளை முகமலர்ச்சியோடு வரவேற்றான்.

    பிறகு தலைவி தோழியை அழைத்துக்கொண்டு அடுக்களைப் பக்கம் சென்றாள். “எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது உன் மணவாழ்க்கை?” என்று மெதுவாக ஆரம்பித்தாள் தோழி.

    “நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றது….ஆனால்…” என்று தலைவி இழுக்கவும், ”ஆனால் என்ன?” என்றாள் தோழி தலைவியின் முகத்தைக் கூர்ந்துநோக்கியபடி.

    ”ஒன்றுமில்லை…” என்று தலைவி மழுப்பவே, ”ஒன்றுமில்லை என்று நீ சொல்லும் தோரணையே ஏதோ இருக்கின்றது என்பதைக் காட்டிக்கொடுக்கிறதே…என்னிடம் எதற்கு மறைக்கவேண்டும்? நடந்ததைச் சொல்!” என்று தூண்டினாள் தோழி.

    cactus”காலத்தில் பெய்தலை உடைய மழை பெய்யாதுநீங்கிய தனிமைமிகு பாலைநிலத்தில், கவைத்த முள்ளினையுடைய கள்ளியின் காய் வெடிக்கும்போது விடும் கடிய ஒலியானது, நெருங்கிய மென்சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய சோடிப் புறாக்களை நீங்கசெய்கின்ற அருவழிகள் கடத்தற்கரியனவென்று கருதாமல் பொருளீட்டும் பொருட்டுத் தலைவர் நமைத்துறந்து பிரிவாராயின் இவ்வுலகத்தில் நிச்சயமாகச் செல்வமே உறுதிப் பொருளாவது; அருள் தன்னை ஏற்பார் யாருமற்ற அநாதையானது” என்றாள் தலைவி; அவள் கண்களில் நீர் துளிர்த்தது.

    பெயன்மழை  துறந்த  புலம்புறு  கடத்துக்
    கவைமுட்  கள்ளிக்  காய்விடு  கடுநொடி
    துதைமென்  தூவித்  துணைப்புற  விரிக்கும்
    அத்தம்  அரிய  என்னார்  நத்துறந்து
    பொருள்வயிற்  பிரிவா  ராயினிவ்  வுலகத்துப்
    பொருளே  மன்ற  பொருளே
    அருளே  மன்ற  ஆருமில்  லதுவே.   (குறுந்: 174 – வெண்பூதியார்)

    இதே பொருளமைந்த மற்றொரு பாடலும் தலைவி கூற்றாகக் குறுந்தொகையில் இடம்பெற்றிருப்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

    அருளும் அன்பும்  நீக்கித் துணைதுறந்து
    பொருள்வயிற் பிரிவோர்  உரவோ  ராயின்
    உரவோர்
     உரவோர்  ஆக
    மடவ
     மாக  மடந்தை  நாமே.  (குறுந்: 20 – கோப்பெருஞ்சோழன்)

    பாண்டிநாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு (முகத்துக்கு முகம்) பாராமலேயே அகநட்பு பாராட்டிய சோழமன்னன் கோப்பெருஞ்சோழன், அரச புலவனாகவும் திகழ்ந்துள்ளமையை இப்பாலைப் பாடல் புலப்படுத்துகின்றது. இப்பாடலேயன்றி, மருதத்திணையில் ஒரு பாடல் #53, குறிஞ்சித் திணையில் ஒரு பாடல் #129, மற்றொரு பாலைப் பாடல் #147 என 4 பாடல்கள் கோப்பெருஞ்சோழனின் பெயரால் குறுந்தொகையில் காணக்கிடைப்பது சோழனின் கவிபாடும் திறமைக்குத் தக்க சான்றுகளாகும்.

    ஈதொப்ப,

    ”…அருளி லாளர் பொருள்வயி னகல
    எவ்வந்
    தாங்கிய இடும்பை நெஞ்சத்து
    யானெவன்
    உளனோ தோழி….” (அகம்: 305) எனும் பாடலும் தலைவனின் அருளற்ற பொருள்வயிற் பிரிவை எண்ணித் தலைவி தோழியிடம் கவலும் பாடலே.

    சரி… தலைவி தோழி உரையாடலை விட்ட இடத்திலிருந்து நாம் தொடர்ந்து செவிமடுப்போம் வாருங்கள்!

    தலைவன் மீண்டும் பொருள்தேடச்செல்ல உத்தேசித்துள்ளான் என்பதைத் தலைவி வாயிலாய் அறிந்த தோழி,

    ”பெண்ணே! ஆடவர்க்கு வினைதான் உயிர் என்று சொல்லத் தொடங்கவும், எங்கே தலைவன் பொருள்தேடிப் போவதை இவள் நியாயப்படுத்த முனைகிறாளோ என்று ஐயுற்ற தலைவி அவளை அச்சத்தோடு நோக்க, அவள் மனத்தைப் படித்தறிந்த தோழி, ஆனால் தம்இல்லம் கடவாது மனையுறைகின்ற மகளிர்க்கோ அந்த ஆடவர்தானே உயிர்? இதனை நம்மிடம் சொன்னவரே தலைவர்தான். அப்படியிருக்க உடலாகிய உனைநீங்கி உயிராகிய அவர் எங்ஙனம் பிரிவார்? ஒருநாளும் பிரியார்!” என்றுகூறித் தலைவியின் விழிநீரை வழித்தெறிந்தாள்.

    வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
    மனையுறை
    மகளிர்க்கு ஆடவர்  உயிரென
    நமக்குரைத்
     தோருந்  தாமே
    அழாஅல்
     தோழி அழுங்குவர் செலவே.     (குறுந்: 135 – பாலைபாடிய பெருங்கடுங்கோ)

    ”தலைவிமீது கொண்ட காதல்நீங்கி நான் பொருளைநாடிப் பிரிவது அவள் சாதலுக்கு வழிவகுக்கும்” என்று தலைவன் தன் நெஞ்சுக்கு உரைப்பதுபோன்ற ஓர் அகப்பாடலும் இங்கே எண்ணிப்பார்க்க ஏற்றது.

    ….நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு
    உயிரியைந்
    தன்ன நட்பின் அவ்வுயிர்
    வாழ்தல்
    அன்ன காதல்
    சாதல்
    அன்ன பிரிவரி யோளே.  (அகம்: 339 – நரைமுடி நெட்டையர்/நிறைமுடி நெட்டையார்)

    ஆக, தான் பிரிவதால் தலைவியின் உடலும் உயிரும் கெடும் என்பது தலைவனுக்குத் தெரியாமலில்லை. அது தெரிந்தபின்னும் அவன் துணிந்தே அவளைப் பிரிந்துசெல்கின்றான் என்பதை அறிக.

    தலைவிக்கு ஆறுதல்மொழி பகர்ந்து அவளைத் தேற்றிய தோழி, தலைவனின் உளக்குறிப்பை உய்த்துணர அவனிருக்கும் அறைநோக்கிச் சென்றாள்.

    அங்கே அலைபாயும் மனத்தோடு குறுக்கும் நெடுக்கும் உலவிக்கொண்டிருந்த தலைவன் தோழியைக் கண்டதும், நடைபயில்வதை நிறுத்திவிட்டு அவளை வரவேற்றான்.

    தலைவனின் முகத்தை உற்றுநோக்கிய தோழி அதில் தெரிந்த சிந்தனைக் கோடுகளை கவனித்தாள்.

    துணிவை வரவழைத்துக்கொண்டு ”ஐய! உம்மையே காப்பாக எண்ணித்தானே என்னருமைத் தோழியை இல்லறம்பேண உம்மோடு அனுப்பி வைத்தேன். நீர் இப்போது அவளைப் பிரிந்து மீண்டும் பொருள்தேட விழைவதாய் அறிகின்றேன். அது மெய்தானா?” என்றாள்.

    தலையசைப்பில் தன் ஆமோதிப்பைத் தெரிவித்தான் தலைவன்.

    அதுகண்ட தோழி, “கண்ணியை அணிந்த கொம்பையும், தன்னினத் தலைமையும் உடைய நல்ல மலை எருதானது, செவ்விய தண்டுகளையுடைய அறுகின்  நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னும் மடப்பம் பொருந்திய கண்ணையுடைய மலைப் பசுவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு, புல்லிய அடியையுடைய உகாஅய் மரத்தின் வரி நிழலில் தங்குகின்ற கடத்தற்கரிய இன்னா அருஞ்சுரத்தை இனிய துணைவியை நீத்துக் கடத்தல் உமக்கு இனிமையுடைத்தோ பெரும?” என்றாள் அகவருத்தம் முகத்தில் தோன்ற.

    கண்ணி  மருப்பின்  அண்ணல்  நல்லேறு
    செங்கோற்  பதவின்  வார்குரல்  கறிக்கும்
    மடக்கண்
     வரையா  நோக்கி  வெய்துற்றுப்
    புல்லரை  யுகாஅய்  வரிநிழல்  வதியும்
    இன்னா  அருஞ்சுரம்  இறத்தல்
    இனிதோ  பெரும  இன்துணைப்  பிரிந்தே. (குறுந்: 363 – செல்லூர்க் கொற்றன்)

    தோழியின் கேள்விக்குப் பதிலேதும் அளிக்கவில்லை அந்தப் பெருமான்.

    [தொடரும்]

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 139இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    cat and child

    பூனையும் குழந்தையும் கொஞ்சிமகிழும் அழகுக்காட்சி நெஞ்சைக் கவர்கின்றது. இந்த அரிய காட்சியை அற்புதமாகப் படம்பிடித்துவந்திருக்கும் திரு. எஸ்.எம்.கே.வுக்கும், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குப் பரிந்துரைத்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி.

    உறவுகளையும் நட்பையும் தகுதி அடிப்படையில் தெரிவு செய்யும் பெரியோர் மத்தியில், உயிர்களிடத்தில் பேதமின்றிப் பரிவுகாட்டும் கள்ளமற்ற வெள்ளை மனம் பிள்ளைகளுடையது!

    பாலுளம் படைத்த அப்பிஞ்சுகளை நஞ்சாக்கும் திருப்பணியைப் பெற்றோரும் சுற்றமும் செய்யாதிருக்கவேண்டும்!

    இனி, கவிஞர்கள் கவிபாடும் நேரம்!

    *****

    ”வீட்டுப் பூனையையும் காட்டுப் புலியையும் பேதம்காட்டாமல் நேசிக்கும் பிள்ளைகளுக்கு உணவோடு வேண்டாத பழக்கங்களையும் சேர்த்து ஊட்டுகின்றானே பாவி மனிதன்!” என உளம் நோகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வளர்வது…

    அஞ்சுவதில்லை
    பிஞ்சுக் குழந்தை,
    அதற்கு
    புலிக் குட்டியும்
    பூனைக் குட்டியும் ஒன்றுதான்..

    பிள்ளை வளர
    உணவு ஊட்டுவதனுடன்,
    உதவாத பழக்கங்களையும்
    ஊட்டிவிடுகிறானே மனிதன்..

    விளைவு-
    அச்சமும் பேதங்களும்
    பிள்ளையின்
    வெள்ளை உள்ளத்தைக்
    கொள்ளைகொண்டுவிடுகின்றன,
    வளர்வது
    பிள்ளையின் உடல்தான்-
    உள்ளமல்ல..

    மாறுவாயா மனிதா
    இனியாவது…!

    *****

    ”தன் சின்னச் சின்ன ஆசைகளைப் பட்டியலிட்டு, கூண்டுக்கிளியாய் அடைபட்டிருக்கும் தனக்கு அந்த ஆசைகள் கைகூடும்வரை, இந்தப் பூசையே (பூனை) துணை” என்றுரைக்கும் குழந்தையைக் காண்கின்றோம் திருமிகு. ஹேமா வினோத்குமாரின் கவிதையில்.

    நின்னை பிரியோன்!!

    சிறுபிள்ளையென்று செல்கிறாயோ??
    விளையாட மறுக்கிறாயோ??
    அம்மா வைகிறாள்!!
    அப்பா கோபிக்கிறார்!!
    தாத்தாவும் தமையனும் தண்டிக்கிறார்கள்!!
    புறம் செல்லாமல் அடைபட்டேன்
    கூண்டிற்கிளியாய்!!
    புறம் சென்றால் கால் பழுக்கும்
    பாட்டியின் கடுஞ்சொல். !!
    புழுதிமண்ணில் தவழ ஆசை!!
    ஏர்மாட்டின் பின்செல்ல ஆசை!!
    சேற்றுமண்ணோடு விளையாட ஆசை!!
    குஞ்சுக்கோழிகளைக் கொஞ்ச ஆசை!!
    இவ்வனைத்தும் நிறைவேற வேண்டும்
    என்று நினைவெல்லாம் ஆசை!!
    இவ்வனைத்திற்கும் அப்பால்
    உன்னைக் கொஞ்சி மகிழ ஆசை!!
    மேற்சொன்ன ஆசை எப்போதோ??
    கூண்டிற்கிளியாய்!!
    ஆசைகளுடன்!!
    நீயாவது விலகாதே!!
    ஆசை நிறைவேறும் மட்டும்!!
    அதுவரை!!

    நின்னை பிரியோன்!!

    *****

    ”பயமறியாத இளங்கன்று பேதமறியாது உயிர்களை அரவணைக்கின்றது. அன்பின் வழியதன்றோ உயிர்நிலை!” என்று அன்பின் இன்றியமையாமையை அகிலத்துக்கு உணர்த்துகின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம். 

    அரவணைப்பு:

    பூந்தளிர் அணைப்பில் ஒரு பூனை இங்கே!
    சாந்தமாய் இருக்குது தன் குணம் மறந்தே!
    இளங் கன்று பயமறியாது!
    பிள்ளைக்கு பேதம் தெரியாது!
    அன்பின் பிடியில் அகப்படும் மலையே!
    அன்பின் விளைவில் அனைத்தும் நலமே!
    அன்னையின் அணைப்பில் பிள்ளை மகிழும்!
    பிள்ளையின் அணைப்பில் அகிலம் மகிழும்!
    நீரின் அணைப்பில் பயிர்கள் வாழும்!
    ஆண்டவன் அணைப்பில் உலகம் வாழும்!
    காற்றின் அணைப்பில் சீவன் வாழும்!
    அணைப்பில்லா உலகம்!
    உயிரில்லா மெய்யாகும்!
    மணமில்லா மலராகும்!
    இ!சையில்லா பாட்டாகும்!
    ஒளியில்லா விளக்காகும்!
    மழையில்லா பயிராகும்!
    அன்பில்லா தாயாகும்!
    அரவணைத்து வாழ்ந்திட்டால்!
    உலகம் உன் வசமாகும்!
    கணவன், மனைவி அரவணைத்து சென்றிட்டால்!
    இல்லறம் இனிதாகும்!
    அண்ணன், தம்பி அரவணைத்து வாழ்ந்திட்டால்!
    குடும்பம் சிறந்தோங்கும்!
    மாமியார், மருமகள் அரவணைத்து இருந்திட்டால்!
    சொர்க்கம் வீட்டிலே உருவாகும்
    அவனின்றி ஓர் அணுவும் அசையாது!
    இது ஆன்றோர் மொழி!
    அரவணைப்பின்றி உலகம் மகிழாது!
    இதுவே இன்றைய வாழ்வின் வழி!

    *****

    ”சாதியற்ற சமூகத்தைப் படைக்கவும், சமநீதியற்ற சமூகத்தை உடைக்கவும் நாம் இணைந்து பாடுபடுவோம்” என்று புரட்சிசெய்யப் பூனையைத் துணைக்கழைக்கும் பாப்பாவைக் காண்கிறோம் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனின் பாட்டில். 

    பாப்பா பாட்டு

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    நாம் அனைவரும் ஒன்றென பாரதி சொன்னாரே

    காக்கை குருவி எங்கள் சாதியெனப் பாடினாரே
    சாதிகள் இல்லை என்றென்னிடம் கூறினாரே

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    பேதமின்றி வாழ்ந்திடக் கற்றோரே

    இணைந்திருவரும் பாடம் புகட்டலாம்
    வேற்றுமையும் பாகுபாடும் தவறென உணர்த்தலாம்

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    நானில மனிதருக்கு நல்வழி புகட்டிடுவீரே

    எந்நிற மிருப்பினும் யாவும் ஒரே தரமென்று
    எந்நிலையிலும் தன்னிலை மாறாமல்
    என்றும் எங்கும் கூடி வாழும் பூனையாரே

    எம் மனிதருக்கும் அதை உணர்த்திட வாரீரே
    மதம் நிறம் மொழியென அவர் பாடும்
    வேற்றுமை கீதங்கேட்டு பாரதத்தாய் வருந்துவதைப் பாரீரே..

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    மனிதரிடம், சாதிகள் இல்லையென உணர்த்துவீரே
    பாகுபாடு கூடாதென தெளிய வைப்பீரே

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    நாம் அனைவரும் ஒன்றென பாரதி சொன்னாரே!!

    *****

    ஆசையுடன் மழலையர் விளையாட ஏற்றது மீசை வைத்த பூனைக்குட்டி; பாரதியின் ஏட்டில், மருதகாசியின் பாட்டில் துள்ளி இடம்பிடித்தது இந்தப் பூனைக்குட்டி; பாய்ந்து இரையைப் பிடிக்கவும் செய்யும்; சாய்ந்து மழலை மடியில் உறவாடவும் செய்யும்” என்று இனிய பூனைக்கதையொன்றைத் தன் கவிதையில் சொல்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    குழந்தையும் பூனையும்..!

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றென..
    ……………கவியரசின் மனதிலன்று தத்துவமே பிறந்தது.!
    மழலை பேசும்அழும் விழும்எழும்.!…வீட்டில்..
    ……………பழகும் பிராணியோடு பயமின்றி விளையாடும்.!
    அழுக்காக்கிக் கொள்ளும் உடம்பையும் சட்டையும்..
    ……………அழுக்கதன் மனதிலொரு போது மில்லையாம்.!
    பழுத்த பெரியோர்களைப் பழமைபேசச் சொல்லி.!
    ……………குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும்.!.
    ஆசையுடன் வளர்ப்பதற்கும் பழகு தற்கும்..
    ……………ஐந்தறிவு ஜீவிகளும் பலவுண்டு நம்மிடையே.!
    மீசைவச்ச பூனைக்குட்டியும் அதிலே ஒன்றாம்..
    ……………மியாமியா வெனக்கத்தும்! நம்காலடியில் சுற்றும்.!
    தோசைபோல ஒட்டிக் கொள்ளும் நம்மடியில்..
    ……………தொட்டு வருடினால் மனதுக்கு இதமளிக்கும்.!
    ஆசைநாயகிக்கு அருமைப் பரிசாக அப்பூனையை..
    ……………அயல்நாட்டில் வழங்கும் வழக்கமும் உண்டாம்.!..

    வானூர்திபோல சிறிதுதூரம் வேகமாக ஓடியே..
    ……………வகையாய் இரையை வாயால் பிடிக்கும்.!
    தானும் புலிக்குச் சற்றும் சளைத்தவனில்லை..
    ……………எனச்சீறிப் பாய்ந்துதன் பல்லைக் காட்டும்.!
    ஊனுண்ணும் பாலூட்டி,!..சஷ்டியின் வாகனமது!..
    ……………உபத்திரவம் மனிதர்க் கென்றும் செய்யாது.!மீனுணவை விரும்பி உண்ணும் மிச்சமதை..
    ……………தானீன்ற குட்டிக்குப் பகிர்ந்து கொடுக்கும்.!..

    காட்டில் உலவும் புலியுமிதற்கொரு உறவாகும்..……………கனிவுடன் பழகும் ஆபத்தில்லா அழகுப்பூனை.!
    வீட்டில் நமக்குப் பொழுதுபோகும் தன்னிடம்..
    ……………மாட்டிய எலியைக் கவ்வித்தூக்கியே பந்தாடும்.!
    பாட்டில் பாரதியு மிதற்கொரு இடமளித்தான்..
    ……………பூனையின் பலநிறம் சொல்லும் தத்துவத்தாலே.!
    ஏட்டில் எழுதிய மியாவ்மியாவ்ப் பாடலின்றும்..……………என்றும் ஒலிக்கிறது மருதகாசியின் நினைவாக.!

    *****

    ”காலை நேரப் பரபரப்பில் தாய்க்கும் தந்தைக்கும் குழந்தையிடம் பாசம் காட்ட நேரம் வாய்க்கவில்லை; அன்புக்கு ஏங்கும் குழந்தை பூனையைக் கொஞ்சி நெஞ்சம் ஆறுகின்றது” என்கிறார் மரு. எஸ். பார்த்தசாரதி. 

    காலத்தை வெல்ல வேண்டுமே !
    கால்களில் காகமும் குருவியும் —
    காலையில் கிழக்கு நோக்கி
    பணிக்குப்பறக்கும் தந்தை –
    வேகுமோ அரிசியும் பருப்பும்
    வேகத்தில் நடக்கிறது சமையல் –
    அவகாசம் கொடுக்காத அவசரம் –
    வேலைக்கு நேரமாகிறதே –
    மேற்கே பறக்கும் தாய் –
    ஓ ! குட்டிப்பூனையே !
    அந்தக்குழந்தை
    அன்பு காட்ட ,
    பாசம் பொழிய ,
    உன்னைத்தவிர யாரிருக்கார்
    இந்த பொருள் சார் உலகில் ?

    *****
    பூனையும் குழந்தையும் பரிவோடு இணைந்திருக்கும் காட்சியை, அதில் தெரியும் அன்பின் மாட்சியை அழகுறப் பதிவுசெய்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து…

    குழந்தை மனம்

    பூனையின் பட்டுடல் தொட்டப்
    பூங்கரம் கொண்டு மொட்டு
    விரிந்திடும் மலரைப் போன்று
    வியந்திடுமன்றோ குழந்தை மனம்! – அதை
    பட்டம் பதவி பணமென்ற
    பகட்டுக ளனைத்தும் சேர்ந்தாலும்
    எட்டிப் பிடிக்க இயன்றிடுமா
    எந்திர வாழ்க்கை மனிதனுக்கு?

    வண்ணத்துப்பூச்சி பறப்பதைக் கண்டும் – வானில்
    விண்மீன் இருப்பதைக் கொண்டும்
    மிதக்கும் வட்ட நிலவினைப்போல
    முகம் மகிழ்ச்சியடையும் மழலைக்கு! 
    அரும்பாடு பட்டு உழைத்து
    அங்கம் நோக ஈட்டியவெல்லாம்
    தங்கமனம் கொண்ட குழந்தையின் 
    தகுதிக் கென்றும் ஈடாமோ?

    இருப்பதைக்கொண்டு மகிழும் இதயம்
    இன்முகத்தோடு இருந்திடும் என்றும்
    சற்றும் தளரா சுறுசுறுப்பு – வெறுப்பைச்
    சடுதியில் மறந்திடும் குழந்தைமனம்!
    தரங்கெட்ட குறுகிய நோக்கம்
    தகுதியற்ற கோணல் புத்தி
    செல்லும் குறுக்கு வழிகளெல்லாம் – மனிதா 
    செம்மை வாழ்வைக் கொடுத்திடுமா?

    குழந்தைமை ஒரு வரம்! ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இறையடியாரைப் போல் குழந்தையின் உலகில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் பேதமில்லை! ”எத்துணைப் பொருட்செல்வத்தை வாரிவாரிக் குவித்தாலும் மழலையின் பொன்மனத்துக்கு அவை ஈடாகுமா?” என்று கவிஞர் கேட்கும் கேள்வி நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

    பூனையைத் தொட்டு மகிழும் பூந்தளிரின் மகிமையைச் சொல்லோவியமாய்த் தீட்டியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமார் இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பினைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

     

     

     

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 15

    -மேகலா இராமமூர்த்தி

    இல்லக்கிழத்தியாகிவிட்ட செல்வமகளின் மனைமாண்பைச் செவிலி தேர்ந்த சொற்களால் வருணிக்க, வியப்பில் வாய்மூடாது செவிமடுத்துக்கொண்டிருந்தாள் நற்றாய்.

    ”காட்டுக் கோழியினது கவர்த்த குரலை உடைய சேவலின் ஒளிபொருந்திய புள்ளிகளை உடைய கழுத்தில் குளிர்ந்த நீர்த்துளி  துளிக்கும்படி,  புதலி(ரி)ன்கண் நீர் ஒழுகும், மலர்மணம் வீசுகின்ற முல்லை நிலத்தின் கண் அமைந்த சிறிய ஊரில் உள்ளாள் நம் காதல் மடந்தை. தலைவனது தேரோ வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை மேற்கொண்டு வேற்றூருக்குச் சென்றாலும், சென்ற ஊரின் கண்ணே தங்கிப் பின்வருதலை அறியாது உடனே வந்து விடும்” என்றாள் செவிலி.

    தலைவன் தன் காதல் மனைவியைப் பிரிந்து வேற்றூர்களுக்கு அதிகம் செல்வதில்லை; அவ்வாறு தவிர்க்க இயலாது வேந்தன் இடுகின்ற பணிகளைச் செய்வதற்காகச் சென்றாலும் வேலைமுடிந்தவுடன் உடனே வீடு திரும்பிவிடுவானென்று, தலைவியைப் பிரியாது உடனுறையும், தலைவனின் உயர்பண்பைப் பாராட்டுகின்றாள் செவிலி.

    கானங்  கோழி  கவர்குரற்  சேவல்
    ஒண்பொறி  எருத்தின்  தண்சிதர் உறைப்பப்
    புதனீர்  வாரும்  பூநாறு  புறவிற்
    சீறூ ரோளே மடந்தை வேறூர்
    வேந்துவிடு  தொழிலொடு  செலினும்
    சேந்துவரல்  அறியாது  செம்மல்  தேரே.  (குறு2: 242 – குழற்றத்தன்)

    செவிலியின் இன்சொற்கள் நற்றாயின் பொற்செவியில் தேனாய்ப் பாய்ந்தன. மகளின் மணவாழ்க்கை மணம்பொருந்திய வாழ்க்கையாய் அமைந்ததில் அகமகிழ்ந்தாள் அவள்.

    செவிலியின் சொல்லில் மிகையில்லை எனும்படியே தலைவனும் தலைவிபால் கழிகாதலொடு விளங்கினான்.

    ”விரிந்த அலையையுடைய பெரிய கடலலால் வளைக்கப்பட்ட இப்பூவுலக இன்பமும், பெறுதற்கரிய பெருமையையுடைய தேவருலக இன்பமும் ஆகிய இரண்டும், தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும், பொன் போன்ற நிறத்தையும், மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலையும் உடைய தலைவியினது தோளோடு தோள் மாறுபடத்தழுவும் நாளிற்பெறும் இன்பத்தோடு ஒருங்குவைத்து ஆராய்ந்தால், தலைவியொடுபெறும் இன்பத்தின் கனத்திற்கு ஈடாகாது” என்று எண்ணியிருந்தான் அவன். 

    விரிதிரைப்  பெருங்கடல்  வளைஇய  உலகமும்
    அரிதுபெறு  சிறப்பிற்  புத்தேள்  நாடும்
    இரண்டும்  தூக்கிற்  சீர்சா  லாவே
    பூப்போல்  உண்கண்  பொன்போல்  மேனி
    மாண்வரி  அல்குற்  குறுமகள்
    தோள்மாறு  படூஉம்  வைகலோ  டெமக்கே.  (குறுந்: 101 – பரூஉமோவாய்ப் பதுமனார்)
     

    தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு. (1103) எனும் குறளும் இதேகருத்தைப் பேசுவதைக் காணலாம்.

    தலைவியும் தலைவனும் அன்பும் அறனும் உடைத்தாய் இல்லறத்தைப் நடாத்திவருகையில் தலைவன் சேர்த்திருந்த பொருள் சிறுகச் சிறுகச் செலவழியலாயிற்று. ஆதலால் மீண்டும் பொருள்தேடவேண்டிய தேவை அவனுக்கு ஏற்பட்டது.

    அறம்பெற ஈதலும், இன்பம்பெறத் துய்த்தலுமான காரியங்கள், அப்பொருளைப் பெறாத இல்லோர்க்கு இல்லையாகிப் போகுமாதலால் பொருள்செய்தலை மேலானதாக எண்ணி யான் மேற்கொள்ளும் வினைக்கு, அழகிய மாமை நிறமுடைய இப்பாவையும் உடன் வருவாளோ? இல்லை என்னை மட்டும் தனியாகச் செலுத்துவாயோ?!” என்று தன் நெஞ்சை வினவி விடைகாண முயன்றான் தலைவன்.

    ஈதலும்  துய்த்தலும்  இல்லோர்க்  கில்லெனச்
    செய்வினை  கைம்மிக  எண்ணுதி  அவ்வினைக்கு
    அம்மா  அரிவையும்  வருமோ
    எம்மை  உய்த்தியோ  உரைத்திசின்  நெஞ்சே.  (குறுந்: 63 – உகாய்க்குடி கிழார்)

    ”நீ வற்புறுத்தினாலன்றி நானாகச் செல்லேன்!” என்று தலைவன் தன்னைக் குற்றமற்றவனாக்கித் தன்னை பொருள்வழியிற்செலுத்தும் தன்நெஞ்சைக் குற்றவாளியாக்கும் முயற்சியில் ஈடுபடுவதனை இப்பாடல்வழி உணர்கின்றோம்.

    புணரின்  புணராது  பொருளே  பொருள்வயின்
    பிரியின்
     புணராது  புணர்வே  ஆயிடைச்
    செல்லினும்
     செல்லாய்  ஆயினும்
    நல்லதற்கு
     உரியை  வாழிய  நெஞ்சே….  (நற் 16 – சிறைக்குடி ஆந்தையார்)

    எனும் நற்றிணைப் பாடலும் பொருள்தேடவிழையும் தன் நெஞ்சுக்குத் தலைவன் கூறும் மறுமொழியாகவே அமைந்திருக்கின்றது.

    இளம் மனைவியைப் பிரிந்து பொருள்தேடச்சென்றால் இளமையின்பம் கிட்டாது; ஆனால் வாழ்வை நெடுங்காலம் செம்மையாய் நடத்துவதோ, வறியோர்க்கு ஈந்து மகிழ்தலோ வளமையில்லையேல் எட்டாது”எனும் சிக்கல் தலைதூக்கும்போது காதலா? பொருள்தேடும் கடமையா? என்று இளந் தலைவன் தடுமாறுவது இயல்பே.

    காதலும் அதுகூட்டுவிக்கும் இன்பமும் இளமைப்பருவத்துக்கே உரியது; ஆனால் பொருளோ இளமைக்கு மட்டுமல்லாது முதுமைக்கும் வேண்டுவது; ஆதலினால் தலைவிமாட்டுக் காட்டும் காதலினும் பொருளே வாழ்வுக்குத் தேவையானது என்று அவனைத் தெருட்டியது அவன் அறிவு. Spotted Deer pair (Cervus axis), Yala National Park, Sri Lanka, February.

    செல்வம் தேட மறுபடியும் செல்வோம் எனும் முடிவுக்குவந்த தலைவன் அதனைப் பக்குவமாய்த் தலைவிக்கு எடுத்துரைக்க விரும்பி, ”பொலிவான குழையணிந்த பெண்ணே! என்னருமைக் கண்ணே! நீலமணி ஒழுகியதுபோல் காட்சிதரும் கரிய அறுகங்கொடியின் மெல்லிய தண்டைப் பெண்மானொடு சேர்ந்து வயிறுநிரம்ப உண்ட ஆண்மானானது துள்ளிவிளையாடும் கானம் ஒன்று நம் ஊருக்கு அணித்தே உள்ளது” என்று மெல்ல ஆரம்பித்தான். தலைவியும் அவன் ஏதோ சுவையான சம்பவத்தைச் சொல்லப்போகிறான் எனும் ஆர்வத்தில் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கத் தொடர்ந்த தலைவன்…

    ”அந்தக் கானம் பின்னே செல்லுமாறு நான் அதனைக் கடந்துசென்று பொருளீட்டி வரலாம் என எண்ணுகிறேன்; அதுவரை என் பிரிவை இந்தத் தெரிவை தாங்கியிருப்பாள் அல்லவோ?” என்று கேட்குமுன்னமே தலைவியின் கண்கள் கண்ணீர் மழையைக் கொட்டத் தொடங்கியதைக் கண்ட தலைவன், அவள் கலக்கத்தைத் துலக்கமாய்த் தெரிந்துகொண்டான். தன் பயணத்துக்கு ஆயத்தமாக வெளியில் நிறுத்தியிருந்த தேரிலிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டுப் பயணத்தை நிறுத்தினான்.

    மணிவார்ந்  தன்ன  மாக்கொடி  யறுகை
    பிணிகான்  மென்கொம்பு  பிணையொடு  மார்ந்த
    மானே  றுகளுங்  கானம்  பிற்பட
    வினைநலம்  படீஇ  வருது  மவ்வரைத்
    தாங்கல்  ஒல்லுமோ  பூங்குழை  யோயெனச்
    சொல்லா  முன்னர்  நில்லா  வாகி

    நீர்விலங்  கழுத  லானா
    தேர்விலங்  கினவால்  தெரிவை  கண்ணே.  (குறுந்: 256 – ?)

    தலைவியைச் சமாதானப்படுத்திப் புறப்படலாம் எனும் தன் எண்ணத்தில் மண்விழவே ஏமாற்றமடைந்து யோசனையில் ஆழ்ந்தான் அவன். 

    அக்காலத்தில் இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய பொருள்தேடும் முயற்சி ஆடவரைக் குடும்பத்தைவிட்டுப் பிரிக்கும் கொடுவாளாக இருந்ததையும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்க்கை வளம்பெற அதனைச் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் அவர்கட்கு அமைந்ததையும் பாலைத்திணைப் பாடல்கள் பலவும் பரக்கப்பேசுகின்றன.

    உள்ளூரிலேயே செய்வதற்குத் தகுந்த தொழிலேதும் அமையாததால் அவர்கள் வெளியூர்களுக்கு வேலைதேடிச் சென்றார்களா? கடும் பாலைநிலங்களையும் கொடுஞ்சுரங்களையும் கடந்து அவர்கள் வேலைதேடிச் சென்ற ஊர்கள் யாவை? அங்கு அவர்கள் செய்த வேலைகள் என்ன? போன்ற பல கேள்விகளுக்குச் சங்கப் பாடல்களில் தெளிவான பதிலில்லை.

    [தொடரும்]

     

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 138-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    shadow lighting

    திரு. பார்கவ் கேசவனின் இருளும் ஒளியும் உறவாடும் இந்தப் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குப் பரிந்துரைத்தவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    நிழலோவியமாய்ப் பெண்; அவளருகே அழலுருவாய் ஓர் ஒளிவட்டம். இருளும் ஒளியும் இணைந்ததுதான் வாழ்க்கை என்பதைச் சொல்லாமல் சொல்கிறதோ இந்த நிழற்படம்?

    ஒளிகண்டு உவக்கும் மனித மனம் இருள்கண்டு மருள்கின்றது. 

    படிமம், குறியீடு போன்ற பொருண்மைகளைக் கொண்டு உட்பொருளை நுட்பமாய் விளக்கும் புதுக்கவிதை போல், காண்போரின் உளப்பாங்குக்கேற்ப உருக்காட்டும் இந்த ஒளிஓவியம்குறித்து நம் கவிவலவர்கள் என்ன சிந்தித்திருக்கிறார்கள் என்று அறிந்துவருவோம்.

    *****

    ”சிவந்த கடல்போல் எரியும் என் மனத்துக்கு ஒற்றடம் கொடுக்கும் நிலவுப் பறவையே! உன் மோன கானத்தை இன்னும் பாடு! விடிந்ததும் உன்னைக் கடந்துபோகிறேன்” எனும் இளம்பெண்ணின் எண்ணக்குமுறலை வண்ணமுறப் பதிவுசெய்திருக்கிறார் திருமிகு. சந்திரா மனோகரன்.

    நிலாப் பேச்சு

    தொலைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த வெண்பறவைக்கு
    துயரம் என்பதே இல்லையா ?
    அதன் விழிகளுக்கு யாரைப் பிடிக்கிறதோ தெரியவில்லை
    ஓர் இளம்பெண்ணின் பறவை ஓலம்
    அந்த செவிட்டு நிலவுக்கு எட்டாது !
    அதன் கதகதப்பிலும் அப்பிக்கிடக்கும் இருளிலும்
    அவள் நினைவுகள் நீர்த்துப்போனவை
    இன்னும் பாடு ….இன்னும் பாடு !
    உன் சப்தமற்ற இசையில் விடிந்ததும் கடந்துபோவேன்
    நிலவு பாவம்துணையற்ற ஏகி !
    ஒருவேளை உன் பிம்பத்தின் சாயலில் நானும் …?
    கடலிலும் , கரையிலும் , மணலிலும்
    சிப்பிபோல் கிடக்கும் உன்னை சேமிப்பேன் அப்போது
    சலசலக்கும் நீர்வெளியில் நீ சரசமாடுகிறாயே
    ஆயுசுக்கு அது போதும் எனக்கு !
    என் மௌனத்தை உடைப்பதும் , கட்டுவதும்
    உன் பாங்கு ஒப்புமையற்றது !
    சிவந்த கடல்போல் சிலபோது என்மனம் எரிகிறது
    உன் ஒற்றடம் பெரிது அதை அணைப்பதற்கு
    உயிரற்ற அவன் நிழல்களை இனி நீ நனைக்காதே !
    கடந்துபோன நதியின் மிச்சம் இல்லை
    கடலின் கருமையில் கரைய மறுக்கும் என் நினைவுகளில்
    இறந்தவனின் மோனம் நொறுங்கிய சிற்பமாய் ..
    கற்பாறையாய் இறுகிப்போன என் மனசில்
    சிதறும் உன் ஒளிக்கதிர்களில் மிளிரும் என் எதிர்காலம் ..

    ***** 

    ”அலர் நீ! மலர் நீ! என்று கொண்டாடிய காதற் கணவர் ஈசனின் திருவடி மலர் ஏகிவிட, அவர் எப்போது வருவார் தன் கலிதீர” எனக் காத்திருக்கும் மங்கை இசைக்கும் சோக கீதத்தைக் கேட்கிறோம் திருமிகு. ஹேமா வினோத்குமார் கவிதையில். 

    நீ!! நான்!! தனிமை!!

    பலயுகங்களாய்த் தனிமையில் நீ
    நாட்களில் நான்!!
    தனிமையில் வெறுப்பு
    இவைகள் தமக்கில்லையோ??
    மும்மாதங்களுக்கு முற்பொழுதில்
    பச்சை நிறப் பட்டுடுத்தி
    மஞ்சள் முகம் பூசி
    மணங்கமழ மல்லிகைசூடி
    நெற்றித் திலகமிட்டு
    காதிற்கினிய வளையோசையுடன்
    பெற்றோர் மற்றோர் உடனிருக்க
    காதலித்து கரம்பற்றினேன் என் கள்வனை!!
    மும்மாதந்தள்ளி மகிழம்பூவாய்
    ஈரலர்கள் என்னுள் பூத்திருக்க
    பகிர்வதற்குள் விண்ணுலகமாள
    சென்றாரோ என் கணவர்!!!
    அலர் நீ!!அகலம் நீ!!!என்றவர்
    இப்பொழுது ஈசனிடம்!!!
    பெற்றெடுத்த தாயிருக்க
    கரம்பற்றிய நானிருக்க
    அவசர பணியாற்ற
    விண்ணுலகம் சென்றாரோ??
    வெகுண்ட மனதோடு
    மீண்டும் வருவார் என்றெண்ணி
    நம்பிக்கையில்!!
    உன்னைப்போல் நானும்!!!
    தனிமையில்!!!

    ***** 

    நிலவின் கறையைத் தனக்குத் தந்து, கரைசேர்க்க மறந்துசென்ற கண்ணாளனை நினைந்துவாடும் பெண்ணைப் பார்க்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் பாவில்.

    வருவானா…

    நீதான் மண்ணில்
    நிலவென்று சொல்லியவன்,
    நினைத்ததை முடித்துச் சென்றுவிட்டான்..

    நிலவே
    உன் கறையை
    எனக்குத் தந்துவிட்டான்..

    சொன்னதுபோல வருவானா,
    நான்
    சோர்ந்துபோக விடுவானா..

    சொல்லிடு நிலவே அவனிடமே,
    சீக்கிரம் வரச்சொல் என்னிடமே…!

    *****

    ”வானுக்கு வெளிச்சம் தரும் வெண்ணிலவைப் போல் உன் வாழ்வுக்கு வெளிச்சம் தர பெண்ணிலாக்கள் உண்டு; ஆடவ ஆதவர்களும் உண்டு! ஆதலால், அறியாமை இருள்விரட்டி அறிவொளி கூட்டப் புறப்படு!” என்று இருட்டில் நிற்கும் பெண்ணைத் தெருட்டுகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    வெளிச்சம் தந்த இருள்:

    உலகிற்கெல்லாம் வெளிச்சம் தரச் செங்கதிரோன் வந்து விட்டான் பெண்ணே!
     இருட்டிலே இன்னும் ஏன் நிற்கின்றாய் பெண்ணே!
    பாரதி பெண் விடுதலைக்கு, குரல் கொடுத்ததற்கும் பின்னே!
    உனக்கு மட்டும் ஏன் விடியவில்லை பெண்ணே!
    குடும்பத்திற்கே வெளிச்சம் கொடுத்தாய் பெண்ணே!
    இருந்தாலும் உன் புகழை மறைத்தார் இருளின் பின்னே!
    கருவறை இருட்டில், உயிர்களைச் சுமந்தாய் பெண்ணே!
    கைம்மாறாய் கிடைத்தது இருளடைந்த வாழ்வு தானே பெண்ணே!
    ஆண்களை வெளிச்சம் போட்டுக் காட்ட!
    நீ இருட்டாய் இதுவரை இருந்தது போதும் பெண்ணே!
    கல்விச் சூரியன் ஒளி படாமல் மறைத்தனர் ஆண்கள்!
    ஞானஒளி உனக்கு கிடைத்து விடும் என அஞ்சித் தானே பெண்ணே!
    ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் வெளிச்சம், குடும்பத்தின் வெளிச்சம்!
    இந்த உண்மையை ஆண்கள் மறந்தது ஏனோ பெண்ணே!
    நீ இருட்டில் இருப்பதற்கு, ஆண்கள் மட்டுமா காரணம் பெண்ணே!
    பெண்களின் பங்களிப்பும் உண்டு இதில்! அறிவாயா பெண்ணே!
    ஒற்றுமை பெண்களுக்குள் குறைவு! வருத்தமான உண்மை இது பெண்ணே!
    இனி, உங்களுக்கு இதமான வெளிச்சம் தர, பெண் நிலாக்கள் அருகிருப்பார் இளம் பெண்ணே !
    உங்கள் உயர்வு உலகெங்கும் நிறைந்திருக்க இளைய ஆண் கதிரவன்கள்
    உன்னோடு இணைந்திருப்பார் அருமைப் பெண்ணே!

    *****

    ”கட்டியவன் தேசநலன்காக்கும் போரில் துஞ்சியபோதும் அஞ்சாது மகனை அனுப்பினேன் தேசங்காக்க! அவனைக்கண்டு, அன்னையவள் உனைக்காணக் காத்திருக்கிறாள்; வழி பார்த்திருக்கிறாள் என்று தூது சொல்லாயோ பகலவனே” என்று ஆதவனுக்கு தூதுவிடும் அன்னையைக் காட்டுகின்றார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன் தன் பாட்டில்.

    அல்லும் பகலும் அலைந்து திரிந்து- இளைப்பாற
    அன்னை மடி தேடி ஓடும் பகலவா..

    எல்லைக் கோட்டில் அல்லும் பகலும் பாடுபடும்
    என் மகன் எப்போது வருவான்
    என் மடி சாய்ந்து ஓய்வெடுக்க…??!!

    கட்டிய கணவனை கயவன் சுட்டானைன்ற சேதி கேட்ட நொடியே
    கட்டிளங்காளையை தட்டி அனுப்பினேன் – தேசங்காக்க

    அவனி முழுதும் வலம் வரும் நீ
    அவனைக் கண்டு தூது சொல்வாயா…??
    அன்னையவள் உனக்காக காத்திருக்கிறாள் என்று..

    தூது சொல்வாயா..
    உயிரைக் கையில் பிடித்து
    உறங்காமல் காத்திருக்கிறாள்
    உனை ஈன்றவள் என்று..

    காத்திருக்கிறேன் இனி உனக்காக
    “பத்திரமாய் திரும்புவான் உன் மகன்” எனும்
    பதில் கொண்டு வரும் வரையில்..
    பகலவா…

    ***** 

    அருந்தமிழ்க் கவிகளுக்குக் கவிவிருந்து படைக்கத் துணையாவாள்; அழுங்குழந்தைக்கு அமுதூட்ட வருவாள்! சங்கரனின் தலையில் திங்களாய்த் தவழ்வாள்; மங்கையர்க்கென்றும் மங்கலம் தருவாள்” என்று வானில் உலவும் நிலவை அழகுச்சொல்லெடுத்துப் போற்றுகின்றார் பெருவை. திரு. பார்த்தசாரதி.

    கதிரவன் காதலி..!

    செங் கதிரோன்தன் காதலியைக் கனிவுடன் தேடுவதைத்..
    ……….திங்களவள் மறைந்திருந்து அவன் தவிப்பைப் பார்ப்பாள்.!
    பொங்கும் ஆவலால் அவன் முகமுழுதும் சிவந்திருக்கும்..
    ……….தங்காது ஓரிடத்தில் உலகுமுழுதும் ஒருநாளில் சுற்றுவான்.!
    மங்கையவளைக் கண்டதும் மயக்கத் திலவன் மறைவான்..
    ……….மணமேடை காணமுடியா நிலையில் இருவரும் ஒன்றாக..
    சங்கமம் ஆகிவிட்டால் அகிலமனைத்தும் இருள் கவ்வும்..
    ……….சோகத்தினால் அவள் பெருமையை அவனே பாடுகிறான்.!
    எங்கு நோக்கினும் எனக்குள் அவளிருப்பதை அறிவேன்..
    ……….என்னுதவி இல்லையெனில் இவ்வுலகு அவளுதவி பெறும்.!
    பங்கு கேட்காத ஒர்உறவென்றால் அவள் ஒருத்திதான்..
    ……….பற்றுள்ளதாயும் மகவிற்கு அமுதூட்ட ஓடோடி வருவாள்.!
    இங்கிவளைக் கவிதையின் கருவாய் கவிஞரும் கொள்வார்..
    ……….இவளை நினையின் அருந்தமிழ் அருவியென ஓடிவரும்.!
    குங்குமப் பொட்டுக்காரி குவலயத்தின் குறை தீர்ப்பாள்..
    ……….கிரகங்களில் இவள் அழகுக்கு ஒப்பில்லை என்பார்கள்.!
    சிங்கங்கள் இரவிலிரைதேட சிறிதே வெளிச்சம் தருவாள்..
    ……….சிற்றிடைப் பாவையின் வளைந்த புருவம் ஒத்திருப்பாள்.!
    செங்கொன்றை மலரைப் போல சிலநாள் சிரித்திருப்பாள்..
    ……….சட்டென மேகத்தில் மறைந்து பட்டென வெளிப்படுவாள்.!
    பொங்கலிட்டு வழிபட எனக்குமுன் அவள் தோன்றுவாள்..
    ……….சங்கரன் அவளைத் தலைமேல் வைத்தே சிறப்பித்தான்.!
    மங்களம் இனிமை அன்பு அமுதமெனும் சொற்களுக்கு..
    ……….மங்காத நன்மதிப்பை மங்கையருக்குகந் தளிப்பாளவள்.!

    ***** 

    கணவனின் அன்பின்றி வாழு(டும்) தன்னிலையை வெண்ணிலவிடம் உரைத்து ஆறுதல்தேடும் பெண்ணை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திரு(மிகு?). சபி கௌன்.

    நீயும் நானும்…

    தொட்டுத் தொடரும் பந்தம் எனத் தோன்றும்
    தொலைவில் இருந்து உனைப் பார்ப்பவர்களுக்கு

    நெருங்கிச் சென்றால் தான் தெரியும்
    நெருப்புப் பந்தும் நீரும் கலக்கவில்லை என்று..

    மணமுடித்து மாதங்கள் பல உருண்டோடியும்
    மகிழம் பூக்கள் மலரவில்லை எனக் குற்றச்சாட்டு

    உனைப்போல் நெருங்கிச் சென்றாலும்
    உன் கடல் போல் விலகியே செல்கிறான் என்னவன்

    பழி சொல்லும் பந்தங்கள் அறிய வாய்ப்பில்லை
    பக்குவமாய் நிதர்சனம் மறைத்து மனதில் அழுவதால்

    உன்னைப் பார்த்து தேற்றிக் கொள்கிறேன்
    உயிர் வாழ வழி பார்த்துக் கொள்கிறேன்

    நான் படும் துயர் போல்
    நாட்கணக்கின்றி நீயும் பட்டால் கூட
    நானிலம் போற்ற வாழ்ந்து கொண்டிருக்கிறாய்….

    ***** 

    கடந்துபோன பௌர்ணமி நாட்களைக் கனத்த மனத்தோடு அசைபோட்டுப் பார்க்கும் ஆரணங்கைத் தன் கவிதையின் நாயகியாக்கியிருக்கிறார் திருமிகு. சொல்லின் செல்வி.

    ரேகை தொலைத்த தேவதை

    அமாவாசையில் ஏதுமற்ற
    வானம் போல நானிருந்தேன்
    வளர்பிறையின் நிலவாய்
    என் வசம் நீ வந்தாய்
    முழுமதியின் நாளின்போது
    பெளர்ணமிக் காதலாய்
    நாம் மணம் புரிந்தோம்.
    ஆனாலும்
    தேய்பிறை நிலவாய்
    நம் பிரிவில் நான் இழந்தேன்
    மீண்டும்…
    அமாவாசையின் ஏதுமற்ற
    வானம் போல நானிருக்கிறேன்.

    இதோ.. இப்போது
    இந்நிலவைக் காணும் போது
    நம் நினைவலைகளில்
    என் எண்ண அதிர்வுகளில்
    கண்ணீர் வடிக்கிறேன்.
    கண்ணீர் வடிந்த கன்னங்கள்
    மென்மையைத் தொலைத்துவிட்டன.
    விரல்களில் ரணமேறியதால்
    ரோஜா இதழ்களே
    என் விழிநீரை ஏந்தி
    பதியம் போடுகின்றன.
    ஆம்…
    என் கண்ணீரைத்
    துடைத்துத் துடைத்தே
    என் கைவிரல் ரேகைகள்
    தொலைத்துவிட்டேன்.

    துளை சரியில்லாத குழல்
    இசை மறுப்பதைப் போல..
    தூரிகை சரியில்லாத ஒவியம்
    அழகை இழப்பதைப் போல..
    சாயம் சரியில்லாத சேலை
    நிறம் போவதைப் போல..!
    சாலை சரியில்லாத பாதை
    தடம் மாறுவதைப் போல..!
    உளி சரியில்லாத சிலை
    வடிவம் இழந்ததைப் போல…
    என் வாழ்க்கை அதன்
    வசந்தத்தை இழந்துவிட்டது,

    ஆகவே..
    அன்று வந்த துணைவா..
    எந்தன் இருதயத்திலிருந்து
    உனை வெளியேற்றி
    உனை நுழைக்காத முடியாத
    கடும் மனநிலையாய்
    இருதயத் தமனிகளால்
    கடும் பூட்டு போட்டுவிட்டேன்
    என்றாலும்
    நம் பெளர்ணமி நாட்களை
    என்னால் மறக்க இயலாது!
    என்றும் மறைக்க இயலாது.!

    ***** 

    ”பாவையின் பார்வைபட்டு வெண்ணிலவு செந்நிலவானதோ?” என்று வியக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    வெண்ணிலவே செம்மையானதோ பாவை முகம் கண்டு,
    முகத்தின் அழகு அகத்தில் சிலசமயம் தெரிவதுண்டு
    தனிமையில் இனிமை காண முடியாத நிலமையுண்டு
    உன் ஏக்கத்திற்கு, என்றைக்கும் உன்னிடமே தீர்வுண்டு

    ***** 

    வானில் தெரியும் ஒளிவட்டத்தை மதியாகவும் கதிராகவும் வைத்து, இருளில்நிற்கும் பாவைக்குப் பொருள்பொதிந்த மொழிகளை ஆறுதலாகவும் அறிவுரையாகவும் அள்ளித்தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்! 

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை எனும் சிறப்பைப் பெறும் கவிதை அடுத்து…

    விடியல் கற்கண்டு

    விடியலுக்காகக் காத்திருந்தது போதும்
    பெண்ணே! ..
    பெண்ணியம் பேசும்
    பெண்ணியம் என்பது
    ஆண்களுக்கு எதிரான
    காழ்ப்புணர்ச்சி அல்ல.!
    பெண்களுக்கான விழிப்புணர்ச்சி!
    பகுத்தறிவாளர்களாக இருக்கவேண்டிய
    சுயமரியாதை எழுச்சி!

    சமதர்மச் சமுதாயத்தை,
    சுயமரியாதையைப்
    போற்றுகிற ஒரு குரல்!..
    அடக்கு முறைக்கு எதிராக
    ஏற்றதாழ்வுகளுக்கு எதிராக
    ஒலிக்கும் போராட்டக் குரல்!..
    தனிமனிதப் பழக்கவழக்கத்தின்
    வெளிப்பாடுகளுக்கும்
    அது சார்ந்த உரிமைப்
    பிரச்சனைகளுக்குமான
    சுதந்திரத் தேடலுக்கான
    ஒரு தார்மீக குரல்..!

    கடவுள் நம்பிக்கையற்ற
    ஓர் ஆணைப் பகுத்தறிவாளராக
    அறிவு ஜீவியாக
    ஏற்றுக்கொள்ளும் இந்தச் சமூகம்
    எதையும்
    பகுத்து அறியும் ஒரு பெண்ணை
    பெண் நாத்திகவாதியாக
    செயல்பட அனுமதிக்காத
    போலி ஆத்திகத்தை எதிர்க்கும் ஒரு குரல்..

    இயற்கையிலேயே பெண்
    பலவீனமானவள் என்பது
    முற்றிலுமாக மறுத்தலிக்கப்படவேண்டி
    ஓங்கி ஒலிக்கும் ஒரு கம்பீரக் குரல்

    அதிகாரத்தை துஷ்பிரயோகத்தை
    எதிர்ப்பதற்கான ஒரு குரல்..!

    பொதுப்பண்புகளை
    கண்மூடித்தனமாக
    ஏற்றுக்கொள்ளும் சுதந்திரம்
    நிலவுவது போல்
    அதை மறுக்கும் சுதந்திரமும்
    பொருட்படுத்த வேண்டி ஒரு குரல் !

    கற்பனாவாதக் கட்டுப்பாடுகள்
    அவற்றை மீறுவதில் நிலவும்
    சுவாரசியத்தை ஒழுக்க
    மீறலுக்கான வெற்றியாகவும்
    புரட்சிகரச் சிந்தனையாகவும்
    தவறாக புரிந்துக்கொள்வோரை
    கண்டித்து மன்றாடும் ஒரு குரல்..!

    பெண்ணின் சிந்தனை
    ஆண்களுக்கு விடுதலை அளிக்கவும்
    வல்லமைமிக்கது என்பதை
    உணர்த்த எழுந்த குரல்…!

    மனித மதிப்பிற்கான
    சமூக அளவுகோல்
    மாறும் வரை…
    ஓயாத கடலைப் போல
    காத்திரமான புயலைப் போல
    சுதந்திரமான பறவையாய்
    விடியலைக் கேட்கும் கிழக்காய்த்
    தொடர்ந்து தொடர்ந்து
    ஒலிக்க வேண்டிய குரல்..!

    பெண்ணே.. !
    உன் உரிமை
    நிழலாய்க் கசப்பது அல்ல!
    நிஜமாய் இனிக்கும்
    விடியல் கற்கண்டு..!

     

    பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு
    மண்ணடிமைத் தீர்ந்துவருதல் முயற்கொம்பே” என்றார் பாவேந்தர். ”அந்தப் பெண்ணடிமைத்தனத்தை மண்ணோடு மண்ணாக்கும் ஒரு குரல்! பெண்ணின் சுயமரியாதையையும், சிந்தனையையும் வந்தனை செய்யும் ஒருகுரல்! அவள் பகுத்தறிவைப் பாருக்குணர்த்தும் ஒரு குரல்! அந்த உரிமைக்குரல் எப்போது கேட்கும்? பெண் வாழ்வில் மறுமலர்ச்சி எப்போது வாய்க்கும்? அந்நாளே இனிக்கும் கற்கண்டுத் திருநாள்!” என்று இனிய சொற்கொண்டு பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்கும் திருமிகு. முழுமதியின் கவிதையை இவ்வாரத்தின் சிறந்த கவிதை என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 14

    -மேகலா இராமமூர்த்தி 

    தலைவன் தலைவி சென்ற வழியை விசாரித்து அறிந்துகொண்டு அவர்கள் சென்ற வழியிலேயே தானும்சென்றாள் செவிலி. தொலைவில் ஆணும்பெண்ணுமாய் இணைந்து வருவோரைக் காணுந்தொறும் அவர்கள் தலைவியும் அவள் காதலனுமாக இருப்பரோவென ஐயுற்று நோக்குவாள். அவர்கள் வேற்றாட்களாக இருப்பதைக் கண்டு வாட்டமடைவாள். இவ்வாறு காட்டுவழியிலும், அதனைத்தொடர்ந்து பாலைவழியிலும் நெடுந்தூரம் நடந்து ஓய்ந்துபோனாள் அவள்.

    ”நடந்து நடந்து என் கால்கள் ஓய்ந்தன; ஆணும் பெண்ணுமாய் இணைந்து வருவோரையெல்லாம் (இவர்கள் நம் மகளும் அவள் காதலனுமோ) என்று நோக்கி நோக்கியே கண்களும் ஒளியிழந்தன. நம் மகளும் தலைவனும் அல்லாத பலரும் வானிலுள்ள மீன்போல் கணக்கற்றவராய் இவ்வுலகில் உளர்; ஆனால் கதிரும் மதியுமனைய அவர்களைக் காணேனே” என்று கவன்றாள் அரிநரைக் கூந்தல் செம்முது செவிலி. 

    காலே  பரிதப்  பினவே  கண்ணே
    நோக்கி  நோக்கி  வாளிழந்  தனவே
    அகலிரு  விசும்பின்  மீனினும்
    பலரே  மன்றவிவ்  வுலகத்துப்  பிறரே.  (குறுந்: 44 – வெள்ளிவீதியார்)

    ”நீளிடை  அத்தம்  நோக்கி  வாள்அற்றுக்
    கண்ணுங்  காட்சி  தௌவின….” எனும் நற்றிணை 397ஆம் பாடலிலும் நெடுவழி நோக்கியே ஒளியிழந்த கண்களின் தன்மை பேசப்படுதல் காண்க. 
     

    வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்
    என்று வள்ளுவர் படைத்த தலைவியின் நிலையும் இத்தன்மைத்தே!
     

    சோர்வின் மிகுதியால் அருகிருந்த மரத்தின்மீது சாய்ந்தமர்ந்த செவிலியின் பார்வையில் ஓர் இளைஞனும் இளமகளும் சேர்ந்துசெல்லும் காட்சி பட்டது. ”இவர்களும் காதலர்கள் தாமோ?” என்று அவள் யோசித்திருந்த வேளையில், அவ்வழியே சென்ற இருவர் இந்த இளையோரைச் சுட்டிக்காட்டிப் பேசியமொழிகள் அவள் காதில் விழுந்தன. 

    “இதோ! இந்த ஆடவன் இருக்கிறானே…இவன் சிறுவனாக இருந்தபோது சிறுமியாக இருந்த இவளின் கூந்தலைப் பிடித்திழுப்பான்; இவளும் சளைத்தவளல்லள்…இவன் தலைமயிரைப் பதிலுக்கு வளைத்திழுப்பாள். இவர்கள் இருவரும் போடும் சண்டையை இடைமறித்துத் தடுக்க முயன்றும் தோல்வியையே தழுவுவர் இவர்களின் செவிலித்தாயர். அன்று அப்படி (எலியும் பூனையுமாக) இருந்தவர்கள் இன்று, இரட்டையாய்ச் சேரத்தொடுத்த மலர்மாலைபோல், மனமொத்த காதலராய் இணைந்துசெல்லும் காட்சியைக் காண்கிறோம். இவர்களைக் கூட்டுவித்த விதியே நீ மிகவும் நல்லை” என்று விதியைப் புகழ்ந்துரைத்தபடிச் சென்றதைக் கண்டாள். 

    இவனிவள்  ஐம்பால்  பற்றவும்  இவளிவன்
    புன்தலை  ஓரி  வாங்குநள்  பரியவும்
    காதற்  செவிலியர்  தவிர்ப்பவுந்  தவிராது
    ஏதில்  சிறுசெரு  வுறுப  மன்னோ
    நல்லைமன்  றம்ம  பாலே  மெல்லியல்
    துணைமலர்ப்  பிணையல்  அன்னவிவர்
    மணமகிழ்  இயற்கை  காட்டி  யோயே. (குறுந்: 229 – மோதாசனார்)

    சிறுவயதில் சிண்டுபிடி சண்டையிடுவோர், பின்னாளில் காதலராய் மாறும் காட்சிகளைத் தமிழ்த் திரைப்படங்களில், குறிப்பாக மண்மணம் கமழும் கிராமத்துக் கதைகளை மையமாகக் கொண்ட படங்களில், நாம் அவ்வப்போது காணலாம். அதனையொத்த காட்சியொன்றை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே குறுந்தொகை அழகாய்க் காட்சிப்படுத்தியிருப்பதை நோக்குங்கால், காலமாற்றம் தமிழ்மாந்தரின் உளவியலில் பெரியஅளவில் மனமாற்றம் எதனையும் நிகழ்த்தவில்லை என்பதனையே புலப்படுத்துகின்றது. 

    வழிப்போக்கர்களின் வார்த்தைகள் குறித்துச் சிந்திக்கலானாள் செவிலி…

    ”நம் மகளைப்போலவே உடன்போக்கு மேற்கொள்ளும் பல இளையோரைக் காண்கையில், இஃது இளமையின் இயல்பே என்று அறிகின்றேன். இனியும் நம் மகளைத் தேடிச்செல்வது தேவையற்ற வீண்வேலை. அவள் தன் விருப்பப்படியே மணவாழ்வு கண்டு இன்புறட்டும்!” என்று எண்ணிக்கொண்டு தன்னூரை நோக்கித் திரும்பிப் பயணப்படலானாள். 

    இல்லம் சேர்ந்தவள், உலகியல்பைத் தக்கமுறையில் நற்றாய்க்கு விளக்கி அவளைத் தேற்றினாள்; துயர் ஆற்றினாள்!

    சின்னாட்களில் தோழியின் வாயிலாக நல்லதோர் செய்தி அவர்கட்குச் கிட்டியது. தலைவனும் தலைவியும் கடிமணம் புரிந்துகொண்டு இல்லறம் எனும் நல்லறத்தை வேற்றூரில் தொடங்கிவிட்டனர் என்பதே அது!

    அதனைக்கேட்ட தாயுள்ளங்கள் நனிமகிழ்ந்தன!

    மகள் நடாத்தும் இல்லறத்தைக் கண்ணால் காணவேண்டும் எனும் வேணவா தாயர்க்கு எழுந்தது. நற்றாய், தன் தோழியான செவிலியைத் தலைவியின் ஊருக்கு அனுப்பினாள். செவிலியும் தலைவியின் மனைசென்று அவளைக் கண்டாள். தன் வளர்ப்புத் தாயை நேரில் கண்டதும் நெஞ்சம் நெகிழ்ந்தாள் அந்த நங்கை. அன்னையை ஆரத்தழுவித் தன் அன்பைப் புலப்படுத்தினாள். பெற்ற தாயையும், தந்தையையும், தமையன்மாரையும் அக்கறையாய் விசாரித்தாள்.

    சில நாள்களேனும் தன்னோடு தங்கித்தான் செல்லவேண்டும் எனும் மகளின் அன்புக்கட்டளையை மீறமுடியாத செவிலித்தாய் அங்கே சிலநாள்கள் தங்கி மகள்பேணும் குடித்தனத்தை நேரிற்காணும் பேறுபெற்றாள். பின்பு மகளிடமும் மாப்பிள்ளையிடமும் பிரியாவிடைபெற்று ஊருக்குத் திரும்பினாள்.

    மகளின் மனையறத்தை அறிந்துகொள்ளத் துடித்துக்கொண்டிருந்த நற்றாய்,

    ”மகள் நலமா? மருமகன் நலமா? அவர்கள் இருவரும் அன்போடு வாழ்கிறார்களா? பிரச்சனை ஏதுமில்லையே?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

    ”பொறு தோழி! உனக்கு எல்லாவற்றையும் விவரமாக எடுத்துரைக்கிறேன்!” என்று முறுவலித்த செவிலி, தலைவியின் மனையில் தான்கண்ட காட்சிகளை விரித்துரைக்கத் தொடங்கினாள்…

    ”இங்கே நம்மோடு இருக்கும்போது அடுப்பங்கரைக்குப் போவதென்றாலே நம் மகளுக்கு எட்டியாய்க் கசக்கும்; அங்கேயோ அருமையாய் அட்டிற்தொழில் செய்கிறாள்!”

    ”அப்படியா?!”  – நற்றாய்.

    ”ஆம்!”   – செவிலித்தாய்.

    thalaivi cooking”நன்றாக முற்றிய தயிரைப் பிசைந்த தன்னுடைய காந்தள் மலரன்ன மெல்லியவிரல்களைத் துடைத்துக்கொண்ட ஆடையைத் துவைக்காமல் உடுத்துக் கொண்டு, குவளை மலர்போன்ற மையுண்ட தன் கண்களில் தாளிப்பினது புகை மணக்கத் தானே துழாவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பைத் தன் கணவன் இனிதென்று உண்பதைக் கண்ட நம் மகளின் முகம் நுண்ணிதாய் மகிழக் கண்டேன்.” என்று செவிலி தலைவியின் சமையற்கலையை வருணிக்கக் கேட்ட நற்றாய்,

    ”அடேயப்பா! அவ்வளவு பக்குவமாய்ச் சமைக்கிறாளா என் மகள்? திருமணம் ஆகிவிட்டால், விளையாட்டாய்க் காலங்கழித்த பெண்களுக்குக்கூட எத்துணைப் பொறுப்புணர்ச்சியும், சாமர்த்தியமும் வந்துவிடுகிறது பார்த்தாயா?” என்று மகளைப் பற்றிச் செவிலியிடம்கூறிப் பூரித்தாள் நற்றாய்.

    ”ஆமாம்…ஆமாம்” என்று நற்றாயின் கூற்றை வாயெல்லாம் பல்லாய் வழிமொழிந்தாள் செவிலி.

    முளிதயிர்  பிசைந்த  காந்தள்  மெல்விரல்
    கழுவுறு  கலிங்கம்  கழாஅது  உடீஇக்
    குவளை  யுண்கண்  குய்ப்புகை  கழுமத்
    தான்றுழந்  தட்ட  தீம்புளிப்  பாகர்
    இனிதெனக்  கணவ ன்  உண்டலின்
    நுண்ணிதின்  மகிழ்ந்தன்று  ஒண்ணுதல்  முகனே. (குறுந்: 167 – கூடலூர் கிழார்)
     

    இப்பாடலில் புளிப்பாகர் என்பதைப் புளிக்குழம்பு என்று கொள்ளாது, பாகற்காயில் புளிப்பெய்து அதன் கசப்பை நீக்கித் தலைவி சமைத்த பாகற்கறி என்று புதிய விளக்கம் தருகின்றார் இரா. இராகவையங்கார். அட…அதுகூடச் சுவையாகத்தான் இருக்கிறது!!

    தலைவியின் கரம்பட்ட அடிசிலை இனிதென அவள் கணவன் பாராட்டி உண்பதை,

    ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
    வானோரமுதம் புரையுமால் எமக்கென (தொல். கற்பு.5)  எனும் தொல்காப்பியக் கற்பியல் நூற்பாவோடு நாம் ஒப்பிட்டுக் காணலாம்.

    ”அப்புறம் நீ அங்கே என்ன கண்டாய்?” என்று ஆவலாய்க் கேட்டாள் நற்றாய்!

    தலைவியின் மனையில் தான் கண்டவற்றை மேலும் விவரிக்கலானாள் செவிலி…

    [தொடரும்]

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 137-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    boy on tree branch

    மரத்தின் கிளையில் சாய்ந்துபடுத்து அலைபேசியை ஆராய்ந்துகொண்டிருக்கும் இளைஞனைத் தன் புகைப்படத்தில் பதிவுசெய்து, அதனைப் படக்கவிதைப் போட்டிக்கு நல்கியிருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கு என் நன்றி!

    ”எல்லாப்பொருளும் இதன்பால் உள” என்று திருக்குறளை அன்றைய புலவோர் புகழ்ந்தது இன்றைய அலைபேசிக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்துகின்றது. நம் உள்ளங்கைக்குள் உலகையே விரித்துக்காட்டி, மாயக்காரனாய் நம்மை  மலைக்கவைக்கின்றது இந்த அலைபேசி!

    பயன்பாடுகளைப் பொறுத்து நன்மையொடு தீமையும் இந்த அலைபேசியால் அவனிக்குக் கிடைத்துவருவது கண்கூடு. கத்தியைப் பயன்படுத்துவதுபோல் கவனத்தோடும் புத்தியோடும் இந்தக் கருவியைப் பயன்படுத்தினால் தீயவிளைவுகளைத் தடுக்கலாம்.

    அலைபேசியின் நன்மை தீமைகளை அலசிஆராயக் கவிவாணர்கள் வரிசையில் காத்திருப்பதால் அவர்களை வரவேற்று நான் விடைபெறுகிறேன்.

    *****

    படித்துப்பட்டம் பெற்றும் வேலை கிடைக்கும் வேளை இன்னும் வாராததால் மரக்கிளையில் அலைபேசியோடு அளவளாவிக்கொண்டிருக்கும் உழவர்குடித் தோன்றலையும், அவன் தேடிவந்த நகரத்தின் நரகவாழ்வையும், பட்டம்பெற்ற அவனுள்ளம் உண்டிகொடுத்து உயிர்கொடுக்கும் உழவுத்தொழிலையே மீண்டும் நாடிநிற்பதையும் பாடியுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா..!

    அய்யா! அவனங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்தால்..
    ……………அன்றாடம் அலைந்து ஓய்ந்தவனெனவும் தெரியும்.!
    அய்யே!இனியிந்த நாய்ப்பிழைப்பு வேண்டாமென..
    ……………அருவருக்குமவன் மனநிலையையும் அறிய முடியும்!
    ஒய்யாரமாய் ஓய்வெடுக்க ஒடிந்துவிழுந்த கிளையின்..
    ……………ஓரத்திலமர்ந்து நீநினைவது என்னவென்பதும் புரியும்!
    வெய்யிலுக்கு மரநிழல்தரும் சுகம்போல இப்போது..
    ……………வீணாகப்போகும் நேரத்தில் வாட்ஸ்அப் இதம்தரும்!

    படித்துப் பட்டம் பெற்றவர்கள் வேலைதேடியிங்கே..
    ……………பல்லாயிரம் பேர்வருவார் மொத்தமாக ஓரிடத்துக்கு!
    அடிக்கொரு அலுவலகம் இருந்தாலுமதன் கதவுகள்..
    ……………அனைத்திலும் வேலை காலியில்லை எனுமறிவிப்பு.!
    கடிமணமாகாத காளையரென்றால் குடியிருக்க வீடு..
    ……………கிடைக்காது இக்கொடுமை போதாதெனில் அங்கே!
    முடியைப் பிய்த்துக்கொண்டு முழுநேரமும் வேலை..
    ……………முடிந்தபின்னும் வீடுதிரும்ப முடியா நிலையிதுவே!

    சொந்த ஊரிலிருந்த சுகமெல்லாமிங்கே இல்லை..
    ……………சந்துபொந்துக்குப் பஞ்சமில்லை சத்துண வில்லை!
    பந்தங்கள் இருந்தும் பெயருக்குத்தான் சொந்தம்..
    ……………பணக்காரத் தனத்தினால் உறவுக்குக் வந்ததுகேடு!
    மந்திரசக்தியால் மாம்பழம் பறிப்பது போலத்தான்..
    ……………எந்திரசக்தி கொண்டுதான் எதுவுமிங்கே இயங்குது!
    சிந்திக்கக் கூடயிங்கே சிறிதளவேனும் நேரமில்லை..
    ……………பந்தியிலுட்கார்ந்து சாப்பிட பக்கத்தில் நிற்கவேணும்!

    உழைக்கும் விவசாயி குடும்பத்தில் பிறந்தவனவன்..
    ……………ஊர்விட்டு ஊர்வந்தான் பிழைப்புதேடி ஒருவனாக.!
    உழவுக்குடி உயரவே உயர்படிப்பு படித்தானவன்..
    ……………உயரும் நாகரீகத்தில் நரகமேமேலென நினைத்தான்!
    அழகுதிமிர்க் காளைபோல கட்டுடல் மேனிகொண்ட..
    ……………அவன்மனது…உழவுத் தொழில்மீதே நிழலாடுகிறது.!
    உழலுமவன் மனதுக்கு ஆறுதலுமிங்கில்லை மீண்டும்..
    ……………இழந்ததைப்பெற கிராமத்துக்கே போக விழைகிறான்!

    *****

    ”நாணயத்தின் இருபக்கங்கள்போல் நன்மையும் தீமையும் கலந்த கலவையாய் உலவும் அலைபேசியை, படிக்கும் வயதில் சிறியோர் தவிர்த்தல் நலம்; பெரியோரும் முறையறிந்து பயன்படுத்துதலே பலம்” எனும் நன்மொழிகளைத் தாங்கி நிற்கின்றது திரு. பழ.செல்வமாணிக்கத்தின் கவிதை.

    தீதும் நன்றும்:

    தூரத்தை குறைக்க வந்தது தான் தொலை பேசி!
    துயரத்தை தர வந்தது ஏனோ இந்த அலை பேசி!
    விஞ்ஞானத்தின் வியத்தகு படைப்பு இந்தக் கைபேசி!
    ஆனால் குடும்பத்தை தீவுகளாய் பிரித்த
    அரக்கன் இந்த அலை பேசி!
    காதலனைப் பிரியாத காதலியாய் கைக்குள்ளே
    எப்போதும் கை பேசி!
    உணவு மறந்தது! காரணம் அலை பேசி!
    உறக்கம் போனது! காரணம் அலை பேசி!
    நேரடிப் பேச்சும் குறைந்தது! காரணம் அலை பேசி!
    சிந்தனை குறைந்தது! காரணம் அலை பேசி!
    வாகனத்தை ஓட்டும் போதும் விலகாத கை பேசி!
    எமனின் பாசக் காயிறாய் உயிரெடுக்கும் கை பேசி!
    சிட்டுக்குருவிகளே இவ்வுலகில் இல்லாமல்!
    அழித்தது இந்த அலை பேசி!
    சின்னஞ் சிறு பிள்ளைகளை சீரழித்தது இந்தக் கை பேசி!
    தீமைகள் மட்டும் தருவதா இந்த அலை பேசி!
    நன்மைகள் பல உண்டு, இதனால், நீ அதை யோசி!
    பயணத்தை குறைத்து,
    நேரத்தை நமக்குத் தரும் இந்தக் கைபேசி!
    பயன் தரும் செய்திகள், பலவற்றை நம்மிடம்
    கொண்டு சேர்ப்பது இந்த அலை பேசி!
    வேலைக்குச் செல்லும் பெண்களின் கூடவே இருக்கும்
    பாதுகாவலன் இந்த அலை பேசி!
    தொழில் செய்ய உதவும் தோழன்!
    இசையைத் தரும் இனிய கலைஞன்!
    குறுஞ்செய்தி கொண்டு செல்லும் அஞ்சல் காரன்!
    அழகுக் காட்சிகளை அள்ளித் தரும் அன்பு நண்பன்!
    நாணயத்திற்கு இரண்டு பக்கம்!
    நல்லது , கெட்டது அனைத்திலும் இருக்கும்!
    படிக்கும் வயதில் வேண்டாமே அலை பேசி!
    நல்ல புத்தகங்கள் நீ வாசி!
    நாளைய உலகம் உயர்வு பெற!
    நான் சொன்னதை நீ யோசி!

    ***** 

    வெட்டப்பட்ட மரத்தின்மேல் சாய்ந்திருக்கும் இளைஞனின் வாழ்க்கைப் பாதையை நமக்கு வெட்டவெளிச்சமாக்கும் திருமிகு. சொல்லின் செல்வி, போதிமரமாய் அந்தப் பாதிமரம் அவ்விளைஞனுக்கு ஞானத்தைத் தானம் செய்வதையும் காட்சிப்படுத்தத் தவறவில்லை.

    மரத்தோடு மடி சாய்ந்த நேரம்
    வாராத படிப்பை
    வாதாடி முடித்தேன்
    வாய்தாக்கள் போல் அரியர் வைத்து
    நான்காண்டுகள் ஓடின.

    சொல்லாத என் காதல்
    சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதென்று
    கல்லாத காவியத்தை
    கற்றவனாய் ஒப்பித்துவிட்டு
    விடைக்காக காத்திருக்கிறேன்
    மூன்றாண்டுகள் ஓடின.

    பிடிக்காத வேலையில் சேர்ந்து
    அடுக்கான பொறுப்புகள் வகித்து
    மிடுக்காக வலம் வந்து பார்த்து
    பொறுப்பான ஆண் மகனாய் ஆனேன்
    இராண்டாண்டுகள் ஓடின.

    கடந்து வந்த பள்ளிப்படிப்பையும்
    பட்டப்படிப்பையும்
    பாலைவன கானல்நீரைப்போல
    பாவையவள் காதலையும்
    எதிர்கால முன்னேற்றப்பாதையும்
    எண்ணிப்பார்த்து பார்த்தே
    ஓராண்டும் ஓடின.

    இவையனைத்தும் அழகாய் பதிவானது
    மட்டுமல்ல
    என் கையிலிருக்கும் கைப்பேசியிலும் தான்.

    இந்த
    வெட்டப்பட்ட மரத்தின்
    கிளைப்போல்
    என் எத்தனை ஆசைகளை
    வெட்டியுள்ளது
    தோல்வியெனும் கோடாரி.

    ஆனால்
    நான் தோள் சாயும்
    அன்பு மரமே..
    புனிதமிக்க
    உன் மீது அமரும் முன்
    என்
    காலணிகளை அகற்றிவிட்டு விட்டது போல
    புத்தன் சொன்ன புத்திமதி போல
    ஆசைகளை அகற்றிவிட்டு
    புனிதமான
    இலட்சியங்களை
    எளிதால் அடையலாம் தானே.
    தினம் சாயுங்காலம்
    நான் சாய மடிதரும்
    என் நண்பனே..!
    என் மரமே ! ???

    *****

    வெட்டுண்ட மரம், தான் உயிரோடு இருந்தபோதும் வெட்டப்பட்டு வீழ்ந்தபோதும் பயன்பட்ட விதத்தைப் பாந்தமாய்ச் சொல்வதையும், வெட்டப்படபோகும் மரமோ, ”அழுதாலும் தொழுதாலும் கோடரியால் எனக்கு விளையப்போகும் கேடகற்ற யாருளர்?” என்று அழுதுபுலம்புவதையும் உணர்வுமிகு கவிதையாக்கியுள்ளார் திரு. சி. ஜெயபாரதன்.

    சுட்ட மரமும், சுடாத மரமும்

    சுடாத மரத்தின் கூக்குரல்
    தலைக்கு மேலே கத்தி
    தொங்குது !
    வெட்டப் போகிறார் !
    விலைக்கு வாங்கத்
    தரகர் கையில்
    நிறைய பணக் கத்தை !
    அழுதாலும் பயனில்லை !
    தொழுதாலும் பயனில்லை !
    பரம்பரை வாரிசு இனிமேல்
    பிறந்திடாது !
    விதியை வெல்ல
    நிதியால் தான் முடியுது !
    நாளை எனக்கில்லை !
    நரக வாழ்வில்
    நம்பிக்கை இல்லை !
    நமன் வரும்
    தருணமிது எனக்கு !
    வாசலில் நிற்கிறான்,
    வழிவிடு எனக்கு !
    கோடரிக்குத் தலை கொடுக்கவா ?
    உடல் அளிக்கவா ?
    கடவுளே காப்பாத்து !

    ++++++++++++

    சுட்ட மரத்தின் கூக்குரல் !

    வெட்டப் பட்டுக் கீழே
    வீழ்ந்து கிடக்கிறேன் பார் !
    மட்டப் பலகையாய்
    வீடு கட்ட உதவினேன் !
    மாட்டு வண்டிச் சக்கரம்
    ஆக்க உதவினேன் !
    கப்பல் கட்ட, படகு கட்ட
    உப்புக் கடலில் மீன் பிடிக்க
    உதவினேன் !
    கனிகள் காய்க்கும்
    மரமானேன் ஒரு காலம் !
    இருந்தாலும்
    ஆயிரம் பொன் நான் !
    இறந்தாலும்
    ஆயிரம் பொன் !

    *****

    மரத்தையும், மரத்தில் சாய்ந்திருக்கும் இளைஞனையும், அவன் கையிலிருக்கும் அலைபேசியையும் முன்னிலைப்படுத்தித் தம் சிந்தனைச் சிறகுகளை அகலவிரித்து ஆழ்ந்த கருத்துக்களை அளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வுபெற்றிருப்பது அடுத்து…

    இப்படிக்கு…

    அதிர்ஷ்டசாலி நான்..!
    ‘கை வலிக்கிறது’ என ஒரு போதும்

    எனை நீ கீழே இறக்கி விட்டதில்லை

    ‘தூக்க முடியவில்லை நடந்து வா’ என்ற வார்த்தையை
    நான் உன்னிடம் இருந்து கேட்டதில்லை

    ‘வேலை இருக்கிறது; பின்பு கவனிக்கிறேன்’ என
    ஒருநாளும் எனைத் தனியே விட்டுச் சென்றதில்லை

    என் அழுகுரல் கேட்டு ஒரு நொடி கூடத் தாமதித்ததில்லை
    உடனே ஓடிவந்து கையில் ஏந்திக் கொள்வாய்

    நித்தமும் அரவணைப்பு; நீங்காத பந்தம்; நிறைவான பாசம்…

    பொறாமைப் படத்தானே செய்வார்கள்- உன்
    தாயும் தந்தையும்; மகனும் மகளும்; அன்பான மனைவியும்…

    பேசாத எனைப் பேணிக்காக்கிறாய்
    பேதையாய் உன் பின் வருபவரைப் பரிதவிக்க வைக்கிறாய்!!

    அன்பே… நீ எனை நேசிப்பதைப் போல
    அவர்களையும் நேசித்துப் பாரேன்…
    அழகாகும் உன் வாழ்க்கை; வரமாகும்; வசந்தம் வீசும்..!

    இப்படிக்கு
    உன் கைபேசி…

    ”குடும்பத்தை மறந்து, உறவுகளைத் துறந்து அலைபேசியையே ஆருயிர்க்காதலியாய் எப்போதும் அணைத்திருக்கும் இளைஞனே! பேசாத என்னைப் பேணிக்காக்கும் நீ, பேசும் பொற்சித்திரங்களான உன் குழந்தைகளை மறந்ததேன்? என்னிடம் காட்டும் பாசத்தை அவர்களிடமும் காட்டு; குடும்பத்தை நோக்கியும் உன் நேசக்கரத்தை நீட்டு” எனும் இக்கவிதை இன்றைய இளைஞர்களுக்கான எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கக் காண்கிறேன். காலத்தின் தேவையறிந்து கவிதை பாடியிருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 13

    -மேகலா இராமமூர்த்தி 

    தோழியின் இனிய இதயத்தை எண்ணி உளம்நெகிழ்ந்தவண்ணம் தலைவனும் தலைவியும் தம் பயணத்தைத் தொடரலாயினர். நடக்க நடக்க நீண்டுகொண்டே சென்றது சுரவழி. பகல்கழிந்து அந்திமாலையும் வந்து சேர்ந்தது! அப்போதும் தலைவனின் ஊர்நோக்கிய நெடும்பயணத்தை நிறுத்தாது, தலைவனும் தலைவியும் சென்றுகொண்டிருந்தனர். வழியில் எதிர்ப்பட்ட ஊரை அவர்கள் கவனித்திலர். ஆனால் அவ்வூரினர் களைத்துவரும் இவ்விளையோரைக் கவனித்துவிட்டனர். இவர்கள் உடன்போக்கு நிகழ்த்தும் காதலர்கள் என்பதையும் கணித்துவிட்டனர்.

    நில்லாது சென்றுகொண்டிருந்த தலைவன் தலைவியைப் பார்த்து,

    ”சிறியபிடி போன்றவளுக்குத் துணைவ! பகலவன் வானைவிட்டு அகலும்நேரம் நெருங்கிவிட்டது. வணிகக்கூட்டம் வந்திருக்கின்றது என்றெண்ணி, பகைப்புலத்தில் கொள்ளும் பகைபோல், வளையணிந்த நெடுவேலேந்தி அவ்வணிகரின் பொருள்களைக் களவாடும் ஆவலில் எம் காவற்காடுவரைவந்து வணிகரைக் காணாது வறிதே பெயரும் ஆறலை கள்வர் முழக்கும் தண்ணுமையெனும் வாத்திய ஒலியைக் கேளுங்கள்! நீவிர் இருவரும் பயணம் மேற்கொள்வதை இவ்வேளையில் தவிர்த்தலே நலம்” என்று நவின்றனர்.

    பாலைநிலத்திற் செல்லும் வணிகர்கூட்டத்தை எதிர்த்து, அவரது பொருளைக் கைக்கொள்ளல் ஆறலை கள்வரின் இயல்பு. ஆறலைகள்வர் தண்ணுமை ஒலியைக் கேள் என்று தலைவனுக்கு இடைச்சுர மக்கள் சொன்னதன் நோக்கம், அக்கள்வரால் இக்காதலருக்கு ஏதம்வரும் என்பதை உணர்த்தவே.

    எல்லும் எல்லின்று பாடுங்  கேளாய்
    செல்லா  தீமோ  சிறுபிடி  துணையே
    வேற்றுமுனை  வெம்மையிற்  சாத்துவந்  திறுத்தென
    வளையணி  நெடுவேல்  ஏந்தி
    மிளைவந்து  பெயரும்  தண்ணுமைக்  குரலே.  (குறுந்: 390 – உறையூர் முதுகொற்றனார்)

    அம்மக்களின் விருப்பப்படியே அன்றிரவை அவ்வூரில் கழித்துவிட்டு மறுநாள்காலை தம் பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர் காதலர்கள்.

    thalaivan thalaiviதலைவனுடன் செல்லும் பயணமாதலால் கல்லும் முள்ளுங்கூடத் தலைவியின் கால்களுக்கு மெத்தையாகவே இருந்தன. சிறிதுதூரம் சென்றதும் கண்ணிற்பட்ட நெல்லிமரத்திலிருந்து காய்களைப் பறித்துத்தின்ற தலைவி, அருகிருந்த சுனையின் அழுக்குநீரைக்கூட அமுதமாய் எண்ணிப் பருகினாள். நாவினித்தது! உடனே, நெல்லியைத் தின்னச்சொன்ன அருமைத்தோழியின் நினைவுவந்ததால் நெஞ்சினித்தது. இத்தகு உத்தமத் தோழியைப் பெற்றநான் பேறுபெற்றவள் என நினைந்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.

    அவள் கண்ணீரைத் துடைத்த தலைவன் அவளை அன்பொடு நோக்கி, “கண்ணே! தம் வழிபடுதெய்வத்தை நேரிற்கண்ட மக்கள் எப்படி உளம் மகிழ்வரோ அவ்வாறு உனையடைந்ததால் நான் மகிழ்கின்றேன். நம் நடைப்பயணத்தால் நீ களைக்கலாகாது; ஆதலால் நிழல்காணுந்தோறும் இளைப்பாறு! மணல் காணுந்தோறும் வண்டலிழைத்து (சிற்றில்கட்டி) விளையாடு! அவசரம் ஏதுமில்லை” என்றான்.

    இதனிடையே, தலைவியின் தமர்க்குத் தலைவி ஆடவன் ஒருவனோடு உடன்போக்கு மேற்கொண்ட விவரம் தெரியவர, அவர்கள் அடைந்த துயருக்கோர் அளவில்லை. தலைவியின் நல்வாழ்வை எண்ணியே நாளுங்கவலும் தம்மிடங்கூடச் சொல்லாமல் தன் வாழ்வைத் தானே முடிவுசெய்துவிட்ட அருமை மகளையெண்ணி நற்றாயும் செவிலித்தாயும் வெகுளியும் வேதனையும் அடைந்தனர்.

    தோழியும் இதற்கு உடந்தையோ என்று ஐயுற்ற அவர்கள், அம்மடந்தையிடம் இதுகுறித்து விசாரிக்கலாயினர்.

    அவளோ, “அயல்மணத்தைத் தலைவிக்கு நீங்கள் நிகழ்த்தவிரும்பும் இத்தருணத்தில், உம்மிடம் தன் காதலைச் சொன்னால் அதனை நீங்கள் ஏற்பீர்களோ… மாட்டீர்களோ என்றஞ்சி அவ்வஞ்சி தான்விரும்பிய காதலனோடு சென்றிருக்கலாம்” என்று பட்டும்படாமலும் பதில்சொல்லித் தனக்கும் தலைவியின் உடன்போக்குக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று காட்டிக்கொண்டாள்.

    தலைவியின் பிரிவால் அருமணி யிழந்த நாகம்போல அலமரலுற்றனர் தாயர் இருவரும். மகளின் எதிர்காலத்தை எண்ணியெண்ணி, பெற்றவளான நற்றாயும் பாலூட்டி வளர்த்த செவிலித்தாயும் புலம்பலாயினர்.

    ”பாலுமுண்ணாது, தனக்கினிய பந்தையும் விரும்பாது, மகளிர் கூட்டத்துடன் இடைவிடாது விளையாடுவதிலேயே நாட்டம்கொண்டிருந்த தலைவி, உலர்ந்த கிளையையுடைய ஓமை மரத்தினைக் குத்திய உயர்ந்த கொம்புடைய ஆண் யானை, வேனிற் தன்மையுடைய, மலையின் வெப்பம் மிகுந்த அடிவாரத்தில், மேகம் முழங்குகின்ற கடிய முழக்கத்தைக் கூர்ந்து கேட்கின்ற, மூங்கில்கள் உலர்ந்த, செல்லுதற்கரிய இடத்திலே, தலைவனோடு செல்லுதல் எளிது என நினைத்தாளோ?” என்று தலைவியின் மென்தன்மைக்கு வன்மைமிகு பாலைவழிப் பயணம் எப்படிப் பொருந்தும் என வருந்தினாள் நற்றாய்.

    பாலும்  உண்ணாள்  பந்துடன்  மேவாள்
    விளையாடு  ஆயமொடு  அயர்வோ  ளினியே
    எளிதென  உணர்ந்தனள்  கொல்லோ  முளிசினை
    ஓமை  குத்திய  உயர்கோட்டு  ஒருத்தல்
    வேனிற்  குன்றத்து  வெவ்வரைக்  கவாஅன்
    மழைமுழங்கு  கடுங்குரல்  ஓர்க்கும்
    கழைதிரங்  காரிடை  அவனொடு  செலவே.  (குறுந்: 396 – கயமனார்)

    பெற்றவளைத் தொடர்ந்து வளர்த்தவளான செவிலித்தாய் தன் மனவருத்தத்தை வெளிப்படுத்தலானாள்…

    ”கையிலேந்திய செம்பொன்னாலாகிய பாத்திரத்திலுள்ள அழகிய பொரியோடு கலந்த பாலையும் மிகுதி என்று கூறி உண்ணாத, திரட்சியமைந்த குறிய வளையணிந்த, தளிர்போன்ற மென்மையையுடைய என்மகள், நிழல் அடங்கி அற்றுப் போன, நீர் இல்லாத கடத்தற்கரிய பாலை நிலத்திலே வீரக்கழலணிந்த தலைவன் தன்னைப் பாதுகாப்ப விரைந்து சென்று, நீர்வளமற்ற சுனையின் பக்கத்தில் உலர்ந்து வெம்மை கொண்ட கலங்கல் நீரை ’தவ்’வென்னும் ஓசைபடக் குடிக்கும் வலிமையை எங்ஙனம் பெற்றாள்?” என்று சொல்லித் துயருற்றாள் செவிலித்தாய்.

    நிழலான்  றவிந்த  நீரில் ஆரிடைக்
    கழலோன்  காப்பக்  கடுகுபு  போகி
    அறுசுனை  மருங்கின்  மறுகுபு  வெந்த
    வெவ்வெங்  கலுழி  தவ்வெனக்  குடிக்கிய
    யாங்கு  வல்லுநள்கொல்  தானே  ஏந்திய
    செம்பொற்  புனைகலத்து  அம்பொரிக்  கலந்த
    பாலும்  பலவென  உண்ணாள்
    கோலமை  குறுந்தொடித்  தளிரன்  னோளே. (குறுந்: 356 – கயமனார்)

    இப்பாடலில் ‘செம்பொற் புனைகலத்து ஏந்தியபால்’ என்பது தலைவியின் தாய்வீட்டுச் செல்வநிலையை உணர்த்தி நிற்கின்றது. இத்துணை வளமையாய் வாழ்ந்தவள் வறண்டநிலத்தைக் கடக்கும் துன்பத்துக்கு ஆளாக நேர்ந்ததே என்பது செவிலியின் வேதனை. இவ்வாறு மாற்றி மாற்றித் தாயர் இருவரும் தம் மகளின் உடன்போக்கினைக் கடிந்தும், அவள் பிரிவினால் மனமொடிந்தும் புலம்பிக்கொண்டே இருந்தனர்.

    ஒருவாறு சற்றே சமாதானமடைந்த செவிலி, ”நம்மைப் பிரிந்து, ஒளிபொருந்திய நெடிய வேலையுடைய தலைவனோடு, மடப்பத்தையும் மாமையையும் உடைய நம் மகள் சென்ற பாலைநிலம், கதிரவன் காயாது மரத்தின் நிழல் பொருந்தியதாய்,  மலையிடத்தேயுள்ள சிறிய வழியின்கண் மணல்மிகப் பரவப்பெற்று குளிர்ந்த மழை பெய்ததாகுக” என்று தலைவிசென்ற சுரவழி அவளுக்கு இடரளிக்காது இதமளிக்க வேண்டும் என்று கரங்குவித்து இறைதொழுதாள்!

    inside-the-forestஞாயிறு  காயாது  மரநிழற்  பட்டு
    மலைமுதற்  சிறுநெறி  மணன்மிகத்  தாஅய்த்
    தண்மழை  தலையின்  றாக  நந்நீத்துச்
    சுடர்வாய்  நெடுவேற்  காளையொடு
    மடமா  அரிவை  போகிய  சுரனே.     (குறுந்: 378 – கயமனார்)

    தலைவி சென்றபாதை அவளுக்கு இனிதாய் இருக்கவேண்டும் என்று செவிலித்தாய் வேண்டுவதை ஐங்குறுநூற்றுப் பாடலொன்றிலும் நாம் காணவியலும்.

    மள்ளர்  கொட்டின்  மஞ்ஞை  யாலும்
    உயர்நெடுங்
     குன்றம்  படுமழை  தலைஇச்
    சுரநனி
     யினிய  வாகுக  தில்ல
    அறநெறி
     யிதுவெனத்  தெளிந்தவென்
    பிறைநுதற்
     குறுமகள்  போகிய  சுரனே’’     (ஐங். 371)

    தம் பிள்ளைகள் இன்னாதன செய்தாலும் அவர்களுக்கு இனியவே நினைப்பது தாயர்க்கே வாய்த்த தனிக்குணம் போலும்!

    ஆனால், நற்றாயின் மனம் மகளைப் பிரிந்த துயரிலிருந்து சிறிதும் விடுபடவில்லை. கண்ணீரும் கம்பலையுமாக அவள் பித்துப்பிடித்தவள்போல் அமர்ந்திருப்பதைக் கண்ட செவிலிக்கு மனம் பதறியது. ஒருமுடிவுக்கு வந்தவளாய் நற்றாயின் கண்ணீரைத் துடைத்தவள், ”கவலாதே தோழி! சுரவழி சென்ற தலைவியின் கரம்பற்றி அழைத்துவந்து, விரைவில் ஒப்படைக்கிறேன் உன்னிடம்!” என்று சூளுரைத்துப் புறப்பட்டாள் தலைவியைத் தேடி! 

    [தொடரும்]

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 136-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    crackers

    கந்தக வெடிகளைச் சுற்றிக்கொண்டிருந்தாலும் மந்தகாசப் புன்னகையைக் குறைவின்றி அள்ளி வழங்கும் வனிதையரைப் படத்தில் காண்கிறோம். திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் படம்பிடித்து வந்திருக்கும் இவ்வண்ணப் படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் நம் நன்றிக்குரியோர்.

    ’செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்றார் குமரகுருபரர். இவர்கள் இன்முகத்தில் பூத்திருக்கும் கள்ளமிலா வெண்முறுவல் இவர்களின் நிறைவான சிந்தையின் வெளிப்பாடாகவே காட்சிதருகின்றது.

    வனிதையரையும் வாணவெடிகளையும் வைத்துப் பாப்புனையப் பாவலர்களை ஆவலுடன் அழைக்கின்றேன்.

    ***** 

    கரித்துகளில் கிடந்துழன்றாலும் கம்பீரமாய், ஔவையின் மொழிபோற்றும் அரிவையராய் வாழும் இலட்சியப் பெண்களைத் தன் கவிதையில் காட்சிப்படுத்துகின்றார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன்.

    பூரிப்பு

    ஆனந்த சிரிப்பு..அடடா
    ஆச்சரியச் சிரிப்பு அக்காவின் முகத்தில்
    ஆவலில் சென்று கேட்டேன்..
    துயரங்களை உன்னுள் மறைத்து
    துளிர்விடும் இந்தப் புன்னகை போலிதானே?!
    புன்னகை மாறாமல் அழகாய்ப்
    புரிய வைத்தாள் எனக்கு.
    கழுதை போலப் பொதி சுமந்தாலும்
    காகம் போல வெயிலில் அலைந்தாலும்
    கரித்துகள்களிலே கிடந்து கஷ்டப்பட்டாலும்
    கம்பீரமாய் நிற்கிறேன்.. பூரிக்கிறன்.. ஆம்
    கல்வி கற்கிறேனடா என் கண்ணே!
    ஔவை மொழி கேட்டிலையோ?
    அஃதே செய்கிறேன் புரியலையோ?
    நீயும்
    அடியெடுத்து வை இன்றே – புதிய
    அத்தியாயம் துவங்க..
    அடியெடுத்து வை இன்றே
    அடிமைச் சிறையை தகர்த்தெறிய..
    அடியெடுத்து வை இன்றே
    அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க..
    அடியெடுத்து வை இன்றே
    அழகிய வருங்காலம் வரைய..

    வெகு தொலைவில் இல்லை
    வெற்றிப் பாதை!

    *****

    ”குடும்ப வறுமையெனும் இடும்பையைச் செயற்கை முறுவலால் மூடி, வெடிகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வாடும் பூங்கொடிகள் இவர்கள்” என்று இப்பெண்களின் வாழ்க்கைப் பின்னணியை வேதனையோடு விளம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    சிரிப்பிலே

    வெடித்துச் சிதறும் வெடிகளுடன்
    வெடிக்கும் சிரிப்புடன் வேடிக்கையாய்த்
    துடிப்புடன் உழைக்கும் வனிதையரும்
    துயரைச் சிரிப்பில் தான்மறைத்தார்,
    குடிக்கும் தந்தை செயலாலே
    குடும்ப வறுமை தனைப்போக்கக்
    கொடிகள் காய்ந்தே பணிக்குவரும்
    காரணம் காட்ட வேண்டாமே…!

    *****

    ”விதி செய்த (வறுமையெனும்) சதியால் கல்விகற்க முடியாமல், வீட்டுத்திண்ணையிலே அமர்ந்து வெடிசுற்றும் பிஞ்சுகளைக் காணுகையில் நெஞ்சுபொறுக்குதிலையே…இதற்கோர் விடிவிலையோ?” என்று நொந்து வினவுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உயிருக்கும் உலகுக்கும் ஆபத்து பட்டாசு..!

    பாட்டெழுதிக் குவித்தார்கள் பாவலரும் கவிஞரும்..
    ……….பஞ்சம் பசிபட்டினி வறுமை கொடுமைபற்றியே.!
    நாட்டில் நடக்கும் அநியாயதையும் அவலத்தையும்..
    ……….நம்பிய மக்களுக்கு நயம்படப் புரியவைத்தார்கள்..!
    பட்டாசு வெடிப்பதாலே பயனென்ன என்பதையும்..
    ……….பலருக்கும் புரியும்படிப் பகலிரவாய் எழுதினார்கள்.!
    கேட்டவரால் புவிகொரு பயனுமில்லை இன்னும்..
    ……….கெடவைக்கிறார் ஓசோனையும் காற்றுவெளியையும்.!

    ட்டுக் கல்வியென்பது ஏழைக்கு எட்டாக்கனியாகும்..
    ……….இலவசக்கல்வி என்பது இன்னும் ஏட்டளவிலேதான்..!
    ஓட்டுக் கேட்கும்போது உங்களுக்கும் வழிபிறக்கும்..
    ……….என்பார்.! அதன்பிறகு அடுத்தமுறைதான் வருவார்.!
    வீட்டுத் திண்ணையிலே அமர்ந்து வெடிசுத்துகிறோம்..
    ……….விதியை நொந்து படிக்கமுடியாமல் போராடுகிறோம்.!
    பாட்டுகொரு புலவன் மாகவிபாரதியும் இதைத்தானா..
    ……….புண்ணியம்கோடி ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான்.?

    ஆட்டுக்குட்டி மாடுகன்னு வளர்த்தாலும் ஆயுளாவது..
    ……….அதிகரிக்கும் இத்தொழிலோ உயிருக்கே உலைவைக்குது.!
    ஓட்டுப்போட்ட மக்களால் மிகஉயர்வுக்குச் சென்ற..
    ……….அதிகாரியே முறையின்றியிதைச் செய்ய அனுமதிப்பது.!
    பட்டாசு ஆலைகளும் ஆவணமின்றி முளைக்கிது..
    ……….பசும்பிஞ்சுகளும் பட்டாசோடு சேர்ந்து சாம்பலாகுது.!
    அட்டபந்தன விழாவில் அனுமதியின்றிக் கொல்லத்தில்..
    ……….ஆயிரம்வாலா வெடித்ததில் ஐநூறுபேரையது கொன்றது.!

    குடிக்காதே புகைக்காதே எச்சரிக்கிறது அரசாங்கம்..
    ……….குடிபுகை இரண்டையும் மறந்துவிடு அவைநலமில்லை.!
    குடித்தலும் புகைத்தலும் உடல்நலத்துக்குத் தான்கேடு..
    ……….வெடிக்கும் பட்டாசோ வேறுலகுக்கு அனுப்பிவிடும்.!
    வெடிதயாரிப்பதை உரிமமின்றிச் செய்கின்றார் பலர்..
    ……….விதிகள்பல இதற்குண்டு பின்பற்றுவோர் யாருமில்லை.!
    வெடித்து உயிர்கருகியபின் விபத்தென்பார் இதுகூட..
    ……….படித்த மாந்தர்களுக்கும் புரிவதில்லை..“இந்தமாயை”.!

    *****

    ”மருந்துகளோடு பணிபுரிவதால் நீ மருத்துவச்சி இல்லை; வெடிகுண்டு தயாரிப்பதால் நீ தீவிரவாதியும் இல்லை. இந்த ஆபத்தான தொழில் உன் வாழ்க்கைக்கான பிழைப்பு! இத்தொழிலால் ஊறின்றி நீ வாழ்ந்திடவேண்டும் ஆண்டு நூறு!” என்று வாழ்த்துகின்றார் திருமிகு. சொல்லின் செல்வி.

    கந்தகச் சிரிப்பு

    மருந்துகளோடு பணிபுரிவதால்
    நீ மருத்துவச்சியும் அல்ல
    வெடிகளை உருவாக்குவதால்
    நீ தீவிரவாதியும் அல்ல.
    ஆபத்தென தெரிந்தாலும்
    உன்னை வேலைக்கு அனுப்பிய
    அன்னையும் இந்நேரம் ஏனோ
    அனல் மூட்டிய
    பட்டாசு திரியாய்
    பதறிக்கொண்டுதானே இருப்பாள்.?
    ஆமாதானே தோழி.?

    உன் கந்தகம் தோய்ந்த
    கரங்களில்
    முத்தம் பாய்ச்சும்
    உன்னவனுக்கு
    உன் மத்தாப்பு வெட்கம்
    பூக்கும் இந்த சிரிப்புதானே
    காதல் சங்கீதம்..?
    ஆமாதானே தோழி..?

    நீ திரிக்கும்
    இந்த பட்டாசு மட்டும்
    எங்கள் வீடுகளில் வெடித்தாலும்
    சிலசமயம்
    இதோ வெடிக்கும்
    உன் புன்னகை போலவெ
    சில புன்னகைப் பூக்களின்
    சில தொழிலாள சோதிரிகளின்
    யாக்கையும் வெடித்திடும் போது
    உள்ளம் ரணமாகி
    இருதயம் வெடித்து விடுகிறது
    தோழி..?

    என்றாலும் என்ன..
    ஆபத்தில்லா வாழ்வை
    நீ வாழ
    வாழ்த்துகிறேன்..
    உன் கந்தக புன்னகை
    கண்டு
    என் கண்களில்
    கந்தக கண்ணீர் தோழி
    ஆனந்தமாய்..
    ஆனந்தமாய்!

    *****

    வெடிகளையும் அதைச்சுற்றும் பூங்கொடிகளையும் வைத்துப் பொருள்பொதிந்த கவிதைச் சரத்தைத் தொடுத்துத் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டு.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து வருகின்றது…

    நீ சிரித்தால் தீபாவளி:

    நம் மகிழ்ச்சியை கொண்டாட விதவிதமாய் வெடிகள்!
    செய்து தருவது எண்ணற்ற பிஞ்சுக் கரங்கள்!
    படிக்கும் வயதில், இவர்களுக்கேன் இந்தப் பாடு?!
    வறுமையால் விளைந்தது இந்தக் கேடு!
    பூச்சரம் சூடி வாழத்தான் ஆசைகள்!
    வெடிச் சரம் செய்வது விதி வரைந்த கோலங்கள்!
    இவர்கள் கை வண்ணத்தில் மத்தாப்பின் ஒளிச் சிதறல்கள்!
    ஆனால் இவர்களின் வாழ்வில் என்றும் இருட்டின் சாயல்கள்!
    வானை முட்டும் இவர்கள் உழைப்பில் கிடைத்த வெடிகள்!
    மண்ணிலே புதைந்து போகும் இவர்களின் ஆசைகள்!
    ஆண்டவன் படைப்பினிலே ஏனிந்த பேதங்கள்!
    வசதிகள் சிலருக்கும், வறுமை பலருக்கும், ஏன் இங்கே?
    விடை தெரியாக் கேள்விகள்!
    இருந்தும் இப்பெண்கள் முகத்தில் புன்னகைப் பூக்கள்!
    போனதை எண்ணிச் சிறிதும் கலங்காத மாதர்கள்!
    வரும் காலம், நன்மை தரும் எனும் நேரிடை எண்ணங்கள்!
    நம்பினோர்க் கெடுவதில்லை! ஆன்றோரின் வார்த்தைகள்!
    நல்லகாலம் அமைவதற்கு நம் அனைவரின் வாழ்த்துக்கள்!

    ”படிக்கும் வயதில் வெடித் தொழிற்சாலையில் வேலை செய்யும் பிஞ்சுகளைப் பார்க்கையில் நெஞ்சு துடிக்கின்றது. இவர்கள் கைவண்ணத்தில் உருவான மத்தாப்புக்கள் ஒளிச்சிதறல்களை எங்கும் வாரியிறைத்த போதிலும் இவர்கள் வாழ்வில் படிந்திருப்பதென்னவோ மருட்டும் இருட்டின் சாயலே!

    இந்த முரணான வாழ்விலும் முறுவலிக்கும் இவர்களின் மனோதிடம் மற்றவரும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம். இந்தப் பிஞ்சுகளின் வாழ்வில் காரிருள் அகன்று கவினொளி துலங்கட்டும்! அதுவே நம் அனைவரின் வாழ்த்தாக இருக்கட்டும்!” எனும் கருத்தமைந்த கவிதையைத் தந்து நம் இதய வீணையின் உணர்ச்சி நரம்புகளை மீட்டிச் சென்றிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 12

    -மேகலா இராமமூர்த்தி

    நாளைக் காலை எவரும் அறியாமல் நான் தலைவியை மலைச்சாரலிலுள்ள வேங்கை மரத்தடிக்கு அழைத்துவருவேன். நீங்களும் அவ்விடம் வந்துவிடுங்கள். அங்கிருந்தே நீங்கள் இருவரும் உங்கள் இல்லறப் பயணத்தை தொடங்கிவிடலாம் என்றாள் தோழி தலைவனைப் பார்த்து.

    அவள் யோசனைக்கு அமைதியாய்த் தலையசைத்துத் தன் ஆமோதிப்பைத் தெரிவித்தான் தலைவன்.

    அன்றைய இரவுப்பொழுது கழிந்தது. கதிரவன் தன் கிரணங்களை நீட்டிப் புவியின் இருளைத் தொட்டழித்தான். புள்ளினங்கள் மரங்களில் இருந்தபடியே பள்ளியெழுச்சி பாடின.

    தலைவியைச் சந்திக்க அவள் இல்லம் நோக்கி நடைபோட்டாள் தோழி. தலைவியைச் சந்தித்தவள், ”இன்னுமா நீ கிளம்பவில்லை? நேரம் கடந்துகொண்டிருக்கிறதே! புறப்படு சீக்கிரம்” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தாள்.

    உடன்போக்கன்றித் தானும் தலைவனும் இல்லறத்தில் இணைய வழியேதுமில்லை என்பதைத் தலைவியும் அறிந்திருந்தபோதிலும், அன்னையும் அத்தனும் அறியாது பிறந்தகம் நீங்கி, காதலனொடு தனித்துச் செல்ல அந்தப் பெண்ணுளம் மறுத்தது; உடன்பிறந்த நாணம் தடுத்தது. கால்களோ வாயில்கடக்க மறுத்து மறியலில் ஈடுபட்டன.

    தன்னைத் துரிதப்படுத்திய தோழியை நோக்கி, “இன்றே செல்லவேண்டுமா? நாளை செல்லலாமே!” என்று தட்டுத்தடுமாறி சொல் முத்துக்களை உதிர்த்தாள் தலைவி!

    தோழி வியப்பில் தன் புருவங்களை உயர்த்தியவளாய், ”பெண்ணே! என்ன சொல்லுகிறாய்?! நீ உடன்போக இசைந்தாய் என்று நான் கூறியதால்தான் தலைவன் குறியிடத்திற்கு வந்து உனக்காகத் காத்திருக்கின்றான். நீயோ கையும் காலும் ஓய்ந்து வருத்தமுற, இன்றைய பொழுது கழியட்டும்; நாளை போகலாம் என்கிறாயே! உன் சொற்கேட்டுத் தீயில்விழுந்த தளிராய் நான் நடுங்குகின்றேன். இனி நான் செய்வதற்கு ஏதுமில்லை” என்றாள் ஏமாற்றத்தோடு!

    நீயுடம்  படுதலின்  யான்தர  வந்து
    குறிநின்  றனனே  குன்ற  நாடன்
    இன்றை  யளவை  சென்றைக்  கென்றி
    கையுங்  காலும்  ஓய்வன  அழுங்கத்
    தீயுறு  தளிரின்  நடுங்கி
    யாவதும்  இலையான்  செயற்குரி  யதுவே.   (குறுந்: 383: படுமரத்து/படுமாத்து மோசிகீரன்.)

    தலைவி நாணமிகுதியால், ”இன்று வேண்டாம்… நாளை செல்வோம்” என்று கூறியபொழுதில், ”நாணினும் உன் கற்பே நனிசிறந்தது. காதலித்த தலைவனையன்றி வேறொருவனை நீ மணப்பது உன் கற்புக்கு இழுக்கு; ஆதலால் தலைவனொடு உன் வாழ்வை அமைத்துக்கொள்ள இன்றே புறப்படு!” என்று தலைவியை ஆற்றுப்படுத்துவதே இங்குத் தோழியின் நோக்கம்.

    நாணால் தடுமாறிய தலைவி, சிறுபொழுதில் தன்னிலை உணர்ந்தாள்; தமரறியாது தோழியொடு புறப்பட்டாள்.

    குறியிடத்தில், தலைவியை அழைத்துச்செல்ல ஏற்கனவே வந்து காத்திருந்தான் தலைவன்.

    ”அன்ப! நான் சொன்னதுபோலவே தலைவியை அழைத்துவந்து உம்மிடம் ஒப்படைத்துவிட்டேன் என்றாள் தோழி. உணர்ச்சிமேலீட்டால் அவள் குரல் கரகரத்தது. ஒருசில நொடிகள் மௌனமாய் நின்றவள், தான் சொல்லவேண்டிய கருத்துக்களை மனத்துக்குள் ஒழுங்குபடுத்திக்கொண்டு மீண்டும் பேச்சைத் தொடங்கினாள்…

    cow_elk”அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, தண்ணிய நறிய மலைப்பக்கத்தின்கண், மெல்லிய நடையுடைய மரையா (female elk), இலைகளை விரும்பி உண்டு, துயிலுதற்கிடமாகிய, நல்ல மலை நாட்டையுடைய தலைவ! பெரிய நன்மையொன்றை ஒருவர் தமக்குச் செய்தால் அங்ஙனம் செய்தாரைப் போற்றாதாரும் உளரோ?  யாவருமே போற்றுவர்! ஆனால் அஃது சிறப்புக்குரியதன்று! சிறிதளவு நன்மையை இத்தலைவி பெற்றவளாயிருக்கும் காலத்திலும் விருப்பத்தோடு புலவிதீர இவளை நீ பாதுகாப்பாயாக! நினையன்றி பற்றுக்கோடு ஏதுமற்றவள் இவள்!” என்றாள் தோழி. 

    பெருநன்  றாற்றிற்  பேணாரும் உளரே
    ஒருநன்  றுடையள்  ஆயினும்  புரிமாண்டு
    புலவி  தீர  அளிமதி  இலைகவர்
    பாடமை  ஒழுகிய  தண்ணறுஞ்  சாரல்
    மென்னடை  மரையா  துஞ்சும்
    நன்மலை  நாட  நின்னல  திலளே.  (குறுந்: 115 – கபிலர்)
     

    இப்பாடலின் பொருளை இன்னும் சற்று எளிமைப்படுத்திச் சொல்வதானால்…”தலைவி இப்போது இளமை நலத்தினள்; தலைவனுக்கு இன்பம்நல்கும் பருவத்தினள்; ஆதலால் தலைவன் அவளை விரும்புவதில் வியப்பில்லை. ஆனால் இதே தலைவி நரைகூடிக் கிழப்பருவம் எய்தும் காலமும் வரும். அப்போது தலைவி,

    ”புதுமலர் அல்ல; காய்ந்த 
         புற்கட்டே அவள் உடம்பு! 
    சதிராடும் நடையாள் அல்லள்
     
         தள்ளாடி விழும் மூதாட்டி 
    மதியல்ல முகம் அவட்கு
     
         வறள்நிலம்! குழிகள் கண்கள்!”  என்று சொல்லும் நிலையில் இருப்பள்.

    அப்போதும் தலைவன் அவளை வெறுக்காது, அவளிடம் அன்புகாட்ட மறுக்காது அவளை இன்முகத்தோடு காக்கவேண்டும் எனும் தன் எதிர்பார்ப்பைத் தலைவனுக்கு இப்பாடலில் குறிப்பால் உணர்த்துகின்றாள் சிறுமுதுக்குறைவியான (சிறு பருவத்திலேயே பேரறிவு படைத்தவள்) தோழி.

    ஈதொப்ப, தலைவியைத் தலைவனிடம் ஓம்படுத்தி (அடைக்கலப்படுத்தி), இவள் இளமை யெழில்நலம் தளரினும், நன்னெடுங்கூந்தல் நரையெய்தினும் அன்பொடு புரப்பாய்” என்று தோழி மொழியும் பொருள்செறிந்த அரும்பாடலை நற்றிணையிலும் காணலாம்.

    அண்ணாந்து   ஏந்திய   வன முலை   தளரினும்
    பொன்நேர்   மேனி   மணியின்  தாழ்ந்த
    நல்நெடுங்  கூந்தல்  நரையடு  முடிப்பினும்
    நீத்தல்   ஓம்புமதி  பூக்கேழ்  ஊர
    இன்கடுங்  கள்ளின்  இழைஅணி  நெடுந்தேர்க்
    கொற்றச்  சோழர்  கொங்கர்ப்  பணீஇயர்
    வெண்கோட்டு  யானைப்  போஒர்  கிழவோன்
    பழையன்  வேல்  வாய்த்தன்ன  நின்
    பிழையா  நன்மொழி  தேறிய  இவட்கே.  (நற்: 10)

    தலைவியின்மாட்டுப் பெருங்காதலும் பேரன்பும் கொண்டவள் அல்லவோ தோழி? ஆதலால், தலைவியை இன்னும் சற்றுநேரத்தில் பிரியப்போகிறோம் எனும் உணர்வு அவளுக்குச் ஆற்றொணா வேதனையை அள்ளித்தந்தது. தன்னருமைத் தோழி அவள்விரும்பிய காதலனோடு இன்பமாய் வாழவேண்டும் எனும் நாட்டமும், அவளை இனி எப்போது மீண்டும் காண்போம் எனும் வாட்டமும் அவளை மாறிமாறி அலைக்கழித்தன.

    தன் உயிரன்ன தோழியாம் தலைவியைக் கண்ணின் கருமணியாய்த் தலைவன் பேணவேண்டும் எனும் தன் வேணவாவை மீண்டும் ஒருமுறை அவனிடம் அழுத்தமாகத் தெரிவிக்க விரும்பிய தோழி மேலும் சில சொல்லலுற்றாள்… 

    “அரும்புகள் முதிர்ந்த ஞாழலினது முட்டையைப் போன்ற திரண்ட மலர்களை  நெய்தலது கரிய மலரிலேwater-lily பெய்வதைப்போலக் குளிர்காற்றுத் தூவுகின்ற வன்மையுடைய கடற்கரைக்குத் தலைவ! ஈன்றவள் சினந்து வருத்தும்போதும் வாய்திறந்துஅன்னையே என்று அழுங் குழந்தையைப் போல் என் தோழியாகிய இத்தலைவிக்கு நீ இன்னாதவற்றைச்செய்தாலும், இனிதாகத் தலையளி செய்தாலும் இவள் நின்னாற் புரக்கப்பட வேண்டிய எல்லையிலிருப்பவள்; நின்னையன்றித் தனது மிக்க துன்பத்தை நீக்குவாரைப் பெற்றிலள் என்பதை அறிந்து இதமாக நடந்துகொள்க” என்றாள்.

    நனைமுதிர்  ஞாழற்  தினைமருள்  திரள்வீ
    நெய்தல்  மாமலர்ப்  பெய்தல்  போல
    ஊதை  தூற்றும்  உரவுநீர்ச்  சேர்ப்ப
    தாயுடன்று   அலைக்கும்  காலையும்  வாய்விட்டு
    அன்னா  வென்னுங்  குழவி  போல
    இன்னா  செயினும்  இனிதுதலை  யளிப்பினும்
    நின்வரைப்  பினளென்  தோழி
    தன்னுறு  விழுமம்  களைஞரோ  இலளே.  (குறுந்: 397 – அம்மூவனார்)

    தாய் தனக்குத் துன்பம் செய்தாலும் குழந்தையானது அழுதுகொண்டு அவளையே நாடி நிற்பதுபோல், தலைவனல்லால் வேறு பாதுகாப்பும், பற்றுக்கோடும் அற்றவளாய்த் தலைவி இருப்பதனால், அவளிடம் தலைவன் எப்போதும் தயவாய் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அவனுக்குப் பல்லாற்றானும் வலியுறுத்துகின்றாள் தோழி.

    mother-and-child-pencil-artதாய் அலைப்பினும் தளர்நடைக் குழவி அவளையே நாடிநிற்கும் நிலையை குலசேகராழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியும், நான்மணிக்கடிகை (எனும் பதினென்கீழ்க்கணக்கு) நூலின் 25ஆம் பாடலும் உருக்கமாய்ப் பேசுகின்றன.

     “….அரிசினத்தால்  ஈன்றதாய்  அகற்றிடினும்  மற்றவள்தன்,
    அருள்நினைந்தே அழுங்குழவி அதுவேபோன் றி ருந்தேனே (பெருமாள். 5:1.)

    குழவி அலைப்பினும்  அன்னேயென்  றோடும் (நான்மணி. 25)

    தலைவனும் தலைவியும் தோழியிடம் பிரியாவிடைபெற்றுப் புறப்பட, விழிநீர் பார்வையை மறைக்க அவர்கள் செல்லும் வழியையே நெடுநேரம் பார்த்தபடி நின்றிருந்தாள் அந்த அருள்நங்கை!

    தலைவியின் நல்வாழ்வே தன்வாழ்வு எனும் நன்னர்நெஞ்சுடைய தோழியின் கழிபேரன்பு நமக்குப் பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. தன்னலம் என்பது கடுகளவுமற்ற தூயபெண்ணாய்த் தோழியைப் புனைந்திருக்கும் சங்கப் புலவோரின் திறத்தைப் போற்றுதற்கு வார்த்தையில்லை!

    [தொடரும்]

     

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 135-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    monkeys

    கூட்டமாகக் குந்தியிருக்கும் மந்திகளும் அதன் பறழ்களும் (குட்டிகள்) நம் உள்ளத்தை அள்ளிக்கொண்டு போகின்றன. இந்தக் காட்சியைத் தன் படப்பெட்டியில் பதிவுசெய்து தந்திருக்கும் திரு(மிகு?). சத்யாவுக்கும், படக்கவிதைப் போட்டிக்கு இந்த அழகிய படத்தைத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி உரியது.

    படத்தில் காணும் கவிகளைப் (குரங்குகள்) பாட, வல்லமைமிகு நம் கவிகள்  (கவிஞர்கள்) அணிவகுத்து நிற்பதால் தாமதமின்றி அவர்களை அழைத்துவிடுகிறேன். கவிகளே எழுக! கவிமழை பொழிக!

    *****

    “கூடிவாழும் குரக்கினம் மலைமீதில் இளைப்பின்றி ஏறும்; பழந்தின்றுக் களைப்பின்றி ஆடும்; கைப்பொருளைப் பறித்துக்கொண்டு ஓடும்” என்று குரங்கின் குணங்களைச் சுவையாய்ப் பட்டியலிடுகின்றார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

    குடும்பமுடன் கூடிவாழும் குரங்கினத்தைக் காணீர்
    ***
    கொஞ்சுதமிழ்ச் சொல்லெடுத்துப் புலவோரே பாடீர்
    !
    தடுமாற்ற மில்லாமல் கிளைகளிலே தாவும்
    ***
    தன்னோடு குட்டியையும் சுமந்துகொண்டு போகும் !
    படுவேக மாகவது மலைமீதி லேறும்
    ***
    பழந்தின்று பசியாறிக் களிப்பினிலே ஆடும் !
    வெடுக்கென்று கைப்பொருளைப் பறித்துக்கொண் டோடும்
    ***
    விரட்டிவிட்டால் முறைத்தவண்ணம் பார்த்திருக்கும் நின்றே !!
     

    *****

    குரங்கின் வாழ்வியலைத் தன் கவிதையில் எளிமையாய்ப் பதிவுசெய்திருக்கிறார் திரு. ரா.பார்த்தசாரதி.

    மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு என்றான்
    சிந்திக்கும் ஆற்றலை குரங்கிற்கு கடவுள் கொடுக்க மறந்தான்
    அவைகளுக்கிடையே ஒற்றுமை எனும் பண்பைக் கண்டான்
    பிறரிடம் பறித்துக் கொண்டு தின்னும் குணத்தையும் கண்டான்
    மலையும், மரக்கிளை அதன் குடியிருப்பாக கொள்ளும்
    இடம்விட்டு இடம் மாறி உணவிற்காக செல்லும்
    குட்டியைத் தன் வயிற்றில் விட்டுவிடாமல் சுமந்து செல்லும்
    தானும் உண்டு, தன்னைச் சூழ்ந்த தன் இனத்திற்குக் கொடுக்கும்.!
    மனித மனம் ஒரு குரங்குதான், அது அங்குமிங்கும் தாவும்
    மனம் சொன்னபடி மனிதனின் உடல் கேட்காது எனத் தெரியும்
    இருந்தும் கடல் அலைபோல் மனம், அலைபோலப் பாயும்
    மன இறுக்கத்தால் உடல் சோர்வும், நோயும் வந்தடையும்!
    […]
    பகுத்துண்டு எனும் பண்பினை அதனிடம் கற்கவேண்டும்
    குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றது ஆதிகாலம்
    மனிதன் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்யும்
    பேசும் ஆற்றல் இல்லாத பிராணியாகவே கருதப்படும் !
    குரங்கே மூன்று குட்டிகளானாலும் அன்புடன் வளர்க்கிறாய்
    ஒன்று உன் முதுகின் பின்னும்,சிறிய குட்டியை அணைத்தும்
    மற்றொன்றைத் தகப்பனிடம் பாதுகாப்பாக அமர்த்தியும்
    உண்ண என்ன கிடைக்கும் என நினைத்துக் கூடி அமர்ந்துளாயா?!

    *****

    ”ஓ மாந்தர்காள்! குரங்குச் சிலையை ஆலயத்தில் கண்டால் ஆஞ்சநேய அவதாரமென்று கன்னத்தில் போட்டுக்கொள்ளும் நீங்கள், நிஜக்குரங்குகளைக் கண்டால் அஞ்சி ஓடுகின்றீர்; மனித மனம் மந்தியைப் போல் என்று தத்துவம் பேசும் நீவிர், எமை அடக்க முந்துகின்றீர்; உம் உளம்அடக்க மறக்கின்றீர்” என்று மாந்தர்களுக்கு அறிவுகொளுத்தும் புந்திமிகு மந்தியைக் காண்கிறோம் திரு. கொ.வை.அரங்கநாதனின் கவிதையில்.

    கோடையிலே இளைப்பாறக்
    கூடு ஒன்று எங்களுக்கில்லை
    கொட்டு மழை பெய்தால்
    நனைவதைத் தவிர வழியில்லை

    காட்டிலே வாழ்ந்திருந்தால்
    கஷ்டமின்றி இருந்திருப்போம்
    நாட்டுக்குள் வந்ததால்
    நாங்கள் படும் துயரம் கொஞ்சமல்ல

    சுவரின்மேலே நாங்கள்
    சும்மாவே உட்கார்ந்திருந்தாலும்
    கல்லால் அடித்துவிட்டு
    கைகொட்டிச் சிரிக்கிறீர்கள்

    குழந்தை குட்டியுடன் நாங்கள்
    குடும்பமாய்த் திரியும்போதும்
    வேடிக்கையும் பார்த்துவிட்டு
    விரட்டவும் செய்கிறீர்கள்

    பூட்டிய வீட்டினுள்ளும்
    புகுந்துத் திருடும்
    மனிதர்களே இருக்கும்போது
    திறந்த வீட்டினுள்
    திண்பண்டங்கள் நாங்கள் எடுத்தால்
    தேசத்துரோகிப் போல்
    தேடித் தேடி வதைக்கிறீர்கள்

    ஆஞ்சனேய அம்சமென்று
    கன்னங்களில் போட்டு கொள்கிறீர்கள்
    அடுக்களையில் எட்டிப் பார்த்தால்
    அலறி ஏன் ஓடுகின்றீர்கள்?

    […]

    மனிதர்களின் மனமெல்லாம்
    மந்திகள் போன்றெதென்று
    தத்துவங்கள் பேசுகின்றீர்கள்
    எங்களை அடக்கத்தான்
    எத்தனை பேர் வருகின்றீர்கள்!
    உங்கள் உள்ளிருக்கும்
    ஒரு மந்தியினை அடக்க
    உங்களால் முடியுமாவென்று
    ஒரு முறை முயன்று பாருங்கள்
    அப்புறமாய் எங்களிடம் வாருங்கள்!

     *****

    ”குரங்குகள் கூட்டத்தோடு வாழும்; குட்டிகளை நாட்டதோடு பேணும். குரங்கின் துணையோடு தன் வாழ்க்கைத்துணையை மீட்டான் காகுத்தன் என்கிறது இராமகாதை. குரங்கு பொம்மைகளை வைத்துக் குவலயத்துக்கே நீதியுரைத்தார் அண்ணல் காந்தியார். குரங்குகள் இன்று குணங்கெட, தரங்கெட்ட மனிதர்களின் சகவாசந்தான் காரணமோ?” என்று வினவுகின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம் 

    *****

    மனிதக் குரங்குகள் :

    குரங்கின் பரிணாம வளர்ச்சி மனித இனமாம்!
    டார்வின் உலகிற்குச் சொன்ன உண்மை!
    தட்டிப் பறிப்பதினால், மனிதனும், குரங்கும்
    ஒன்றென்று சொன்னாரோ!
    தாவும் பழக்கத்தால் இரண்டும்
    ஒன்றென்று சொன்னாரோ!
    குரங்கின் நல்ல பண்புகளை என்றேனும்
    நினைத்துப் பார்த்ததுண்டா!
    குரங்குகள் கூட்டமாய் வாழும் அதன் ஒற்றுமையைக் காட்டி!
    குட்டியை சேர்த்தணைத்துத் தான் திரியும்!
    குட்டி பெரிதாகும் வரையில் பாசத்தைக் காட்டி!
    குரங்குகள் துணையோடு, ராமன், சீதையை சிறை மீட்டார்!
    அனுமன் என்ற குரங்கோ பக்திப் பெருக்காலே!
    ராமர், சீதையையே தன் இதயச் சிறையில் வைத்தார்!
    அண்ணல் காந்தி மகான், தீயவை அழிவதற்கு!
    குரங்கு பொம்மைகளால், நீதிதனை உரைத்தார்!
    ஆதிகால மனிதர்கள் கூட்டமாய் தான் வாழ்ந்தார்!
    குழந்தைகள், குடும்பமென்று அன்போடு தான் இருந்தார்!
    ஆதலினால் சொல்கிறேன்!
    ஆதி கால குரங்குகள் நல்லவை தான்!
    தரங்கெட்ட மனிதர்களைப் பார்த்துத்தான்!
    குரங்குகள் குணம் கெட்டதாய் மாறியதோ!

    *****

    ”மாந்தகுலம் தாம் பெற்ற பிள்ளைகளை மண்ணிற்கு உரமாய் வீசியெறியும் இக்காலத்தில், மந்திகளோ தம் குட்டிகளை வரமாய் வளர்க்கின்றன. ஆதலினால் தாய்மையின் தூய்மையை மந்திகளிடம் கற்பீர் மானிடரே!” என்கிறது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை.

    தாய்மையே சிறப்பு…

    குரங்கி லிருந்து பிறந்ததாகக்
    கூறிக் கொள்ளும் மானிடரே,
    தரமது குறைந்து நீங்களெல்லாம்
    தாய்மையை இழிவாய் விடலாமா,
    உரமாய்ப் போய்விடக் குப்பையிலே
    உங்கள் பிள்ளையைப் போடலாமா,
    வரமாய்க் குட்டிகளை வளர்ப்பதைத்தான்
    வந்து பாரீர் எம்மிடமே…!

    *****

    ’உன்னில் இருந்துவந்த எந்தன் செயல்களை எண்ணி நீ தலைகுனிகின்றாயோ?’ என்று குரங்கிடம் வருந்திக் கேட்கிறார் திருமிகு. சிந்து. 

    உன்னில் இருந்து வந்த
    என்னை எண்ணித்
    தலை குனிகிறாயோ?
    என் செயல்களால்
    உன் தலை குனிவதை
    நினைத்து…

    *****

    ”குரக்கினங்கள்கூடத் தம் உறவுகளோடு நேயமாய் வாழ்ந்திருக்க, மனிதனோ இரக்கமின்றி, பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றான். தாயின் காலடியில் சொர்க்கம் கொலுவிருக்க, அவளைப் புறக்கணித்தல் நலமாமோ?” என்று தாய்மையின் சிறப்பைத் தரணிக்கு உணர்த்துகின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    தாய்மை

    அன்பின் பகிர்வில் பாகுபாடு இல்லை
    அரவணைத்துக் கொள்வதில் அவளுக்கு ஈடு இல்லை
    ஒரறிவு முதல் ஆறறிவு வரை குழந்தை வளர்ப்பு அன்னையின் நிழலில்

    குட்டியின் பசியாற்றிப் பசியாறும் ஒரே ஜீவன் அன்னை மட்டுமே
    குழந்தையின் நலன் ஒன்றே தாய்மையின் எதிர்பார்ப்பு
    குழந்தையின் புன்னகையே தாயின் பூரிப்பு
    ஆதரவு தருவதாய் ஏமாற்றும் இவ்வுலகில்
    அன்னையின் அன்பு மட்டுமே நிரந்தரமானது
    கும்பிடும் தெய்வம் தேடிஅலையும் மானுடம்
    குலங்காக்கும் தாய்மையின் நலங்காத்தல் இல்லை
    குரங்கினம் தன் குட்டியின் நலம் ஒன்றைப் பேணுகையில்
    குழந்தை முதல் பேணி வளர்த்த பெற்றோரைப் பேணாமல்
    முதியவர் காப்பகம் சேர்ப்பது மானுட இனத்தில் மட்டுமே
    காட்டுக்குள் கூடிவாழும் உயிரினக் குடும்பம்
    கரம்கோத்து உறவினைக் அன்பில் மூழ்கடிக்கும்
    செல்ல விளையாட்டும் கள்ளக் குறும்பும்
    உள்ள மகிழ்வோடு நாளும் அரங்கேறும்
    கானகம் கூத்தாட உயிரினநேயம்
    வையகம் தழைக்கச் செய்தி சொல்லும்
    வைப்பு நிதி தராத இன்பமதனை
    தாய்மையின் அருகினில் நித்தம் பருகலாம்
    ஆதலால்

    தாய்மை போற்றுவோம்.

    *****

    ”டிஜிட்டல் இந்தியாவின் சீர்கேடுகளைப் பட்டியலிட்டு, இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் கண்களையும் காதுகளையும் வாயையும் மூடிக்கொண்டிரும் மந்திகள் நாம்” என்று கனல்கக்கும் வரிகளைத் தன் கவிதையில் பொதிந்துவைத்துள்ளார் திருமிகு. லீலா.

    குரங்கு பொம்மை:

    ஒரு பக்கம் விவசாயப் போராட்டம்..
    மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம்
    அணு உலைப் போராட்டம்
    மீனவர் சிறைப்பிடிப்பு..
    மணல் கொள்ளை…
    மழை, டெங்கு இதற்கு இடையில் சின்னத்தை மீட்பதில் இருக்கிறது இன்றைய அரசாங்கம்
    இந்தியாவை விட்டு
    தமிழ்நாடு பிரிந்தால் இந்தியாவே …
    ஒற்றைக் காலில்
    நிற்கும்… என்று அறைகூவல் விட எனக்கும் ஆசைதான்…
    தேசபக்தி பற்றிப் படம் எடுக்கும் கூட்டம்…
    ஒருபுறம்…
    விமானவிபத்தில் இறந்த ராணுவ வீரரை மதிக்காமல் அட்டைப்பெட்டியில் சுற்றி வைத்துள்ளது மறுபுறம்…
    டிஜிட்டல் இந்தியாவா மாற்ற நினைக்கும் மத்திய அரசு … இராணுவ வீரனுக்கான இறுதி மரியாதைகூட வழி இல்லாமல் தவிக்கிறது…
    அரசாங்க ஊழியர்களுக்கு 20% தரும் அரசு…
    ஏழைகள் அன்றாடம்
    உபயோகிக்கும் பொருட்களின் விலை
    உயர்த்தியுள்ளது…
    தன் இனத்திற்கு ஒரு
    கொடுமை என்றால்
    மற்ற இனங்கள் துணிந்து போராடும்…
    மனித வர்க்கம் மட்டுமே
    செல்பி எடுக்கும்…
    காந்தி சொன்ன
    வார்த்தைகளை பின்பற்ற
    அநீதி கண்டால்
    கண்களை, காதுகளை, வாயும் மூடும் குரங்கு கூட்டம் யாமே.. வீழ்வதா?! வாழ்வதா?!

    *****

    ”குரங்குகள் குடும்பத்தோடு பாசத்தைப் பகிர்ந்தபடி வாழ்கையில், மனிதன்மட்டும் அன்பைத் துறந்து அருளின்றிக் கண்டம்விட்டுக் கண்டம் போகிறான் பொருள்தேடி” என்று வேதனைப்படுகின்றார் திருமிகு. சொல்லின் செல்வி.

    குரங்கின் மனமாய்

    போதும் புறப்பட்டு வந்துவிடு
    ஏதும் காரணம் சொல்லிவிடு
    காசுக்கு ஆசைப்பட்டு
    வெளிநாட்டு அடிமையாய்
    வீட்டுக்கு பொருள் சேர்த்தது போதும்

    அடுத்தவர் ஒன்றாய் வாழ்ந்தது பார்த்து / அழுது தவித்தது போதும்
    எனக்குக் கணவனாக
    பிள்ளைக்குத் தகப்பனாக
    ஒரு முழு நாள் ஆனது .
    ஆண்டு மூன்றாண்டுகிறது/
    அப்பா எனக் கூப்பிட்டு
    அழும் குழந்தையை
    அள்ளி அணைக்கவா முடியும்?
    அலைபேசியில்
    காதலாகப் பேசினாலும்
    இறுக்கி அணைக்கவா முடியும்?
    ஏக்கத்தைக் கொடுக்கும் என் வாழ்க்கை
    தாக்கத்தை தருகிறது தனிமையில் சிறையில்..!

    குரங்குகள் கூட்டுக் குடும்பமாய்..
    குரங்கின் பரிணாமம் நாமோ தனித்தனியாய்
    பாசத்திற்கு ஏங்குகிறேன்
    குரங்கை விட மோசமாய்..!

    *****

    கவிக்குலத்தின் செயல்களையும் அவற்றின் வாழ்வியலையும் மனித குலத்தோடு ஒப்பிட்டுச் சுவைபடப் பாடியிருக்கும் கவிகளை மனதாரப் பாராட்டுகின்றேன்!

    ******

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    குரங்கின் செயல் நல்வழிகாட்டும்!

    பக்தியுடன் பார்த்தால் குரங்கல்ல வானரவீரன்..
    ……….பகவானிடம் பணிசெய்யும் பக்திச் சேவகனாம்.!
    சக்தி வேண்டினதுவே சஞ்சீவி ஆஞ்சனேயன்..
    ……….சரணடையின் சுமையிலாது புலனடக்க எளிது.!
    யுக்திசெயும் இயல்பினிலிது தந்திர மந்தியாம்..
    ……….வாலில்வைத்த தீயால் இலங்கையை அழித்தது.!
    முக்திதரும் காகுத்தனைக் காட்டும் மாருதியாய்..
    ……….முன்வினை பின்வினை அகல வழிகாட்டுமாம்.!

    குடும்பம் பிரிவினை பொறாமை ஏதுமில்லை..
    ……….கூட்டுக் குடும்பமாய் வாழுமிதன் இயல்பாகும்.!
    எடுத்துச் சொல்லு மளவுக்கு இராமகாதையில்..
    ……….இடம் பிடித்தபெருங் குடும்பப் பேரினமாகும்.!
    இடுப்பில் இறுகப்பற்றித் தொங்குமதன் குட்டி..
    ……….இடுக்குவழி வீழாததைக் “குரங்குப்பிடியென்பர்”.!
    கடுவனின் சாதனையாம்!.சீதாப் பிராட்டியைக்..
    ……….காணும்வரை உண்ணா நோன்பிருந்தது வரலாறு.!

    “குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்” எனும்..
    ……….கூற்றை உணர்த்தும் செயல்கள் பலவுண்டாம்.!
    மரத்துக்கு மரம்தாவும் குரங்கின் செயல்களில்..
    ……….மானுடம் கற்கவேண்டும் “வாழ்வியல் பாடம்”.!
    அரக்கச் செயல்கள் செய்யும் மனிதர்களையே..
    ……….குரங்குச் சேட்டையொடு ஒப்பிட்டுப் பேசுவர்.!
    இரண்டு மனமுடன் குழப்பும் இம்மாந்தரைக்..
    ……….குரங்குமனம் கொண்டவர்கள் என்றே கூறுவர்.!

    இன்றொரு பேச்சு நாளையது மாறிப்போச்சு..
    ……….என்றொரு நிலையில் “மனமொரு குரங்காம்”.!
    இன்றிருக்கும் அரசியலே இதற்கு உதாரணம்..
    ……….இவர்கள்செயும் செயலே “குரங்குகை பூமாலை”.!
    தின்று ஏப்பம்விட்ட மக்கள்வரிப் பணமெலாம்..
    ……….திரைக்குள் மறைக்க “இஞ்சிதின்ன குரங்காவார்”.!
    மென்று விழுங்கியது போதா தென்கிறபோதில்..
    ……….வெகுண்டெழுவார் “கள்ளுண்ட குரங்கு போல”.!

    ”இடுப்பில் இறுகப்பற்றித் தொங்குமதன் குட்டி..
          இடுக்குவழி வீழாததைக் “குரங்குப்பிடியென்பர்!” 

    ஆம், குரங்குக்குட்டி தன் தாய்க்குரங்கைக் ’குரங்குப்பிடி’யாய் இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் இயல்புடையது. இதனை ’மர்க்கட (குரங்கு) நியாயம்’ என்பார் வைணவ வடகலை மரபை வளர்த்த வேதாந்த தேசிகர். இதன் பொருளாவது… உயிர்கள் தாமே வலியச்சென்று இறைவனை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

    மாந்த குலத்தின் முன்னோராக அடையாளப்படுத்தப்படும் குரங்குகளின் செயல்களில் வேடிக்கையும் உண்டு; விபரீதமும் உண்டு. குரங்கு கையில் பூமாலை கிடைத்துவிட்டால் போதும்…அதனைப் பிய்த்தெறிந்த பின்பே ஓயும்; கள்ளைப் பருகிவிட்டு அதுபோடும் ’உண்டாட்டு’ ஏனையோர்க்குத் தருவதோ பெருந் திண்டாட்டம்!

    நாட்டில் அதிகாரத்திலிருக்கும் பலரின் செயல்கள் கள்ளுண்ட குரங்கின் செயல்களாகவே காட்சியளிக்கின்றன என்று நடப்பியலைத் தன் பாட்டில் நயமாய்ச் சொல்லியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share