ஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

குறுந்தொகை நறுந்தேன் – 16

-மேகலா இராமமூர்த்தி

தலைவன் மீண்டும் பொருள்தேடுவதற்காகத் தன்னைப் பிரிந்துசெல்ல விழைகின்றான் எனும் உண்மை புலப்படவே தலைவியின் மனத்தில் மீண்டும் கவலை வலை பின்னலாயிற்று.

பொருளின்றி இனி நெடுங்காலம் வளமாய் வாழவியலாது எனும் எண்ணம் தலைவனின் உள்ளத்தை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

அவ்வேளையில் தலைவிபேணும் இல்லறத்தை அருகிருந்து காண வந்திருந்தாள் அவள் ஆருயிர்த்தோழி. கவலையினால் இருண்டிருந்த தலைவி முகம் தோழியின் வரவுகண்டு சற்றே மலர்ந்தது. விரைந்து வாயிலுக்குச் சென்று அவளைக் கட்டியணைத்து அகத்தினுள் அழைத்துவந்தாள்.

வீட்டினுள் வந்த தோழி, தலைவனைக் கண்டு நலம் விசாரித்தாள். தலைவனும் அவளை முகமலர்ச்சியோடு வரவேற்றான்.

பிறகு தலைவி தோழியை அழைத்துக்கொண்டு அடுக்களைப் பக்கம் சென்றாள். “எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது உன் மணவாழ்க்கை?” என்று மெதுவாக ஆரம்பித்தாள் தோழி.

“நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றது….ஆனால்…” என்று தலைவி இழுக்கவும், ”ஆனால் என்ன?” என்றாள் தோழி தலைவியின் முகத்தைக் கூர்ந்துநோக்கியபடி.

”ஒன்றுமில்லை…” என்று தலைவி மழுப்பவே, ”ஒன்றுமில்லை என்று நீ சொல்லும் தோரணையே ஏதோ இருக்கின்றது என்பதைக் காட்டிக்கொடுக்கிறதே…என்னிடம் எதற்கு மறைக்கவேண்டும்? நடந்ததைச் சொல்!” என்று தூண்டினாள் தோழி.

cactus”காலத்தில் பெய்தலை உடைய மழை பெய்யாதுநீங்கிய தனிமைமிகு பாலைநிலத்தில், கவைத்த முள்ளினையுடைய கள்ளியின் காய் வெடிக்கும்போது விடும் கடிய ஒலியானது, நெருங்கிய மென்சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய சோடிப் புறாக்களை நீங்கசெய்கின்ற அருவழிகள் கடத்தற்கரியனவென்று கருதாமல் பொருளீட்டும் பொருட்டுத் தலைவர் நமைத்துறந்து பிரிவாராயின் இவ்வுலகத்தில் நிச்சயமாகச் செல்வமே உறுதிப் பொருளாவது; அருள் தன்னை ஏற்பார் யாருமற்ற அநாதையானது” என்றாள் தலைவி; அவள் கண்களில் நீர் துளிர்த்தது.

பெயன்மழை  துறந்த  புலம்புறு  கடத்துக்
கவைமுட்  கள்ளிக்  காய்விடு  கடுநொடி
துதைமென்  தூவித்  துணைப்புற  விரிக்கும்
அத்தம்  அரிய  என்னார்  நத்துறந்து
பொருள்வயிற்  பிரிவா  ராயினிவ்  வுலகத்துப்
பொருளே  மன்ற  பொருளே
அருளே  மன்ற  ஆருமில்  லதுவே.   (குறுந்: 174 – வெண்பூதியார்)

இதே பொருளமைந்த மற்றொரு பாடலும் தலைவி கூற்றாகக் குறுந்தொகையில் இடம்பெற்றிருப்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

அருளும் அன்பும்  நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர்  உரவோ  ராயின்
உரவோர்
 உரவோர்  ஆக
மடவ
 மாக  மடந்தை  நாமே.  (குறுந்: 20 – கோப்பெருஞ்சோழன்)

பாண்டிநாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு (முகத்துக்கு முகம்) பாராமலேயே அகநட்பு பாராட்டிய சோழமன்னன் கோப்பெருஞ்சோழன், அரச புலவனாகவும் திகழ்ந்துள்ளமையை இப்பாலைப் பாடல் புலப்படுத்துகின்றது. இப்பாடலேயன்றி, மருதத்திணையில் ஒரு பாடல் #53, குறிஞ்சித் திணையில் ஒரு பாடல் #129, மற்றொரு பாலைப் பாடல் #147 என 4 பாடல்கள் கோப்பெருஞ்சோழனின் பெயரால் குறுந்தொகையில் காணக்கிடைப்பது சோழனின் கவிபாடும் திறமைக்குத் தக்க சான்றுகளாகும்.

ஈதொப்ப,

”…அருளி லாளர் பொருள்வயி னகல
எவ்வந்
தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யானெவன்
உளனோ தோழி….” (அகம்: 305) எனும் பாடலும் தலைவனின் அருளற்ற பொருள்வயிற் பிரிவை எண்ணித் தலைவி தோழியிடம் கவலும் பாடலே.

சரி… தலைவி தோழி உரையாடலை விட்ட இடத்திலிருந்து நாம் தொடர்ந்து செவிமடுப்போம் வாருங்கள்!

தலைவன் மீண்டும் பொருள்தேடச்செல்ல உத்தேசித்துள்ளான் என்பதைத் தலைவி வாயிலாய் அறிந்த தோழி,

”பெண்ணே! ஆடவர்க்கு வினைதான் உயிர் என்று சொல்லத் தொடங்கவும், எங்கே தலைவன் பொருள்தேடிப் போவதை இவள் நியாயப்படுத்த முனைகிறாளோ என்று ஐயுற்ற தலைவி அவளை அச்சத்தோடு நோக்க, அவள் மனத்தைப் படித்தறிந்த தோழி, ஆனால் தம்இல்லம் கடவாது மனையுறைகின்ற மகளிர்க்கோ அந்த ஆடவர்தானே உயிர்? இதனை நம்மிடம் சொன்னவரே தலைவர்தான். அப்படியிருக்க உடலாகிய உனைநீங்கி உயிராகிய அவர் எங்ஙனம் பிரிவார்? ஒருநாளும் பிரியார்!” என்றுகூறித் தலைவியின் விழிநீரை வழித்தெறிந்தாள்.

வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை
மகளிர்க்கு ஆடவர்  உயிரென
நமக்குரைத்
 தோருந்  தாமே
அழாஅல்
 தோழி அழுங்குவர் செலவே.     (குறுந்: 135 – பாலைபாடிய பெருங்கடுங்கோ)

”தலைவிமீது கொண்ட காதல்நீங்கி நான் பொருளைநாடிப் பிரிவது அவள் சாதலுக்கு வழிவகுக்கும்” என்று தலைவன் தன் நெஞ்சுக்கு உரைப்பதுபோன்ற ஓர் அகப்பாடலும் இங்கே எண்ணிப்பார்க்க ஏற்றது.

….நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிரியைந்
தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல்
அன்ன காதல்
சாதல்
அன்ன பிரிவரி யோளே.  (அகம்: 339 – நரைமுடி நெட்டையர்/நிறைமுடி நெட்டையார்)

ஆக, தான் பிரிவதால் தலைவியின் உடலும் உயிரும் கெடும் என்பது தலைவனுக்குத் தெரியாமலில்லை. அது தெரிந்தபின்னும் அவன் துணிந்தே அவளைப் பிரிந்துசெல்கின்றான் என்பதை அறிக.

தலைவிக்கு ஆறுதல்மொழி பகர்ந்து அவளைத் தேற்றிய தோழி, தலைவனின் உளக்குறிப்பை உய்த்துணர அவனிருக்கும் அறைநோக்கிச் சென்றாள்.

அங்கே அலைபாயும் மனத்தோடு குறுக்கும் நெடுக்கும் உலவிக்கொண்டிருந்த தலைவன் தோழியைக் கண்டதும், நடைபயில்வதை நிறுத்திவிட்டு அவளை வரவேற்றான்.

தலைவனின் முகத்தை உற்றுநோக்கிய தோழி அதில் தெரிந்த சிந்தனைக் கோடுகளை கவனித்தாள்.

துணிவை வரவழைத்துக்கொண்டு ”ஐய! உம்மையே காப்பாக எண்ணித்தானே என்னருமைத் தோழியை இல்லறம்பேண உம்மோடு அனுப்பி வைத்தேன். நீர் இப்போது அவளைப் பிரிந்து மீண்டும் பொருள்தேட விழைவதாய் அறிகின்றேன். அது மெய்தானா?” என்றாள்.

தலையசைப்பில் தன் ஆமோதிப்பைத் தெரிவித்தான் தலைவன்.

அதுகண்ட தோழி, “கண்ணியை அணிந்த கொம்பையும், தன்னினத் தலைமையும் உடைய நல்ல மலை எருதானது, செவ்விய தண்டுகளையுடைய அறுகின்  நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னும் மடப்பம் பொருந்திய கண்ணையுடைய மலைப் பசுவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு, புல்லிய அடியையுடைய உகாஅய் மரத்தின் வரி நிழலில் தங்குகின்ற கடத்தற்கரிய இன்னா அருஞ்சுரத்தை இனிய துணைவியை நீத்துக் கடத்தல் உமக்கு இனிமையுடைத்தோ பெரும?” என்றாள் அகவருத்தம் முகத்தில் தோன்ற.

கண்ணி  மருப்பின்  அண்ணல்  நல்லேறு
செங்கோற்  பதவின்  வார்குரல்  கறிக்கும்
மடக்கண்
 வரையா  நோக்கி  வெய்துற்றுப்
புல்லரை  யுகாஅய்  வரிநிழல்  வதியும்
இன்னா  அருஞ்சுரம்  இறத்தல்
இனிதோ  பெரும  இன்துணைப்  பிரிந்தே. (குறுந்: 363 – செல்லூர்க் கொற்றன்)

தோழியின் கேள்விக்குப் பதிலேதும் அளிக்கவில்லை அந்தப் பெருமான்.

[தொடரும்]

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க