க. பாலசுப்பிரமணியன்

 

திருவஹீந்திரபுரம் (அருள்மிகு தேவநாதப் பெருமாள் )

perumal

 

கண்ணயர்ந்து பொழுதினிலும் கருணைதரும் கண்ணனைக்

காலமெல்லாம் தொழுதிடவே கருநாகன் சேடனுமே

காவிரிக் கரைதன்னில் ஆலயமே எழுப்பிடவே

கானிருந்த முனிவரெல்லாம் கைகூப்பி நின்றனரே

 

பாம்பணைமேல் படுத்தவன் பள்ளி எழுந்தான்

பக்தர்களைக் காத்திடவே பேரொளியாய் நின்றான்

பார்வையிலே மூவராகப் பிரிந்த தத்துவமே

பாங்குடனே ஒன்றாகித் தந்தருளும் தரிசனமே !

 

மரணத்தை வென்ற மார்க்கண்டேயன் மனம்மகிழ

மாதவனும் வந்தானே தெய்வ நாயகனாய் !

மாமுனியாம் மணவாளரும் மனமுருகி வேண்டிடவே

மாலனும் மனமிசைந்து மகிழ்வோடு நின்றானே !

 

அழகுக்கு அழகளிக்கும் ஆனந்தன் தேவநாதன்

அழகுடன் ஆதிசேடன் ஆலயத்தில் நின்றான்

அளவில்லா தாகத்தில் அச்சுதனும் நீர்வேண்ட

ஆதிசேடன் வாலசைக்க வளர்ந்ததோர் கங்கையம்மா !!

 

வான்பறந்த கருடனுமே மாமுனியின் கமண்டலத்தை

வலுவாகத் தள்ளிடவே வளர்ந்ததங்கே வற்றாதநதியே !

வந்தவினை தீர்ந்திடுமே வைகுந்தன் பார்வையிலே

வந்தவரை வரதனவன் வளம்பெறுக வாழ்விப்பான் !

 

சங்கோடு சக்கரத்தைக் கையேந்தி அவனிருக்க

அங்கத்தை மலரோடு துளசியும் அலங்கரிக்க

செங்கமலத் தாயும் மலர்மார்பில் உடனிருக்க

மங்கலமே உன்னெழிலே மாதவனே போற்றிடுவேன் !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *