நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி 141-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

வல்லமை வாசகர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

elephant with guide

மஞ்சுசூழ் நீர்நிலையில் தந்தங்களைப் பாகன் வருடிக்கொடுக்க, குளித்துக் களிக்கின்றதோ இந்தக் களிறு? கண்கவர் காட்சியிதனைத் தன் புகைப்படக்கருவியில் பதிவாக்கி வந்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், போட்டிக்கு இதனைத் தேர்வுசெய்து தந்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நனிநன்றியைக் கனிவோடு தெரிவிக்கின்றேன்.

மதங்கொண்டால் ஊரையே நடுங்கவைக்கும் கொல்களிறு, பாகனிடம் பச்சைக் குழந்தைபோலச் சாதுவாய்ப் பழகுவதைப் பார்க்கையில்,

”பெரும! ஊரில் உள்ள சிறுவர்கள் தனது வெண்மையான தந்தத்தைக் கழுவுதற்கு நீர்த்துறையில் பொறுமையாக அமர்ந்திருக்கும் பெருங்களிற்றைப் போல நீ (புலவர்களாகிய) எமக்கு இனியவன்; ஆனால், உன் பகைவர்க்கு, நெருங்குதற்கு அரிய மதங்கொண்ட யானையைப் போல் இன்னாதவன்” எனும்  சங்கப்புலவர் ஔவையின் புறப்பாடல் நினைவுக்கு வருகின்றது.

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே. (புறம்: 94)

இனி கவிதைகளுக்குச் செல்வோம்!

*****

”பருத்த யானை தன் திறன்உணராது பாகனுக்கடங்கிச் சேவகம் செய்வதுபோல், மாந்தரும் தம் ஆற்றல் அறியாது அயலானிடம் அஞ்சி அஞ்சிச் சாவது வேதனைக்குரியது” என்று விளம்புகின்றார்  திரு. ஆ. செந்தில் குமார். 

யானைப் பாகனும் யானையும்

மரகதப் பச்சைக் கம்பளம் போன்று 
மரங்க ளடர்ந்து மலை காட்சியளிக்க
பளிங்கு நீரை மிகுதியாய்க் கொண்ட
பரந்தத் தடாகம் அதனடியை வருட
பாகனொருவன் தான் அழைத்து வந்த
பருத்த யானையின் தந்தத்தைப் பிடித்து
பரிவுடன் அதையே நீராட்டி மகிழ்ந்தான்!

கார்மேகம் போன்ற கரிய உருவமும்
குறுகுறு வெனவே விழிக்கும் கண்களும்
தூரிகைப் போன்றொரு சிறிய வாலும்
கூரிய வெள்ளைத் தந்தங்க ளிரண்டும்
தூணினைப் போன்று கால்கள் நான்கும்
தன் சிறப்பெனக் கருதும் தும்பிக்கையோடு
தண்ணீரில் அமர்ந்து யானை இருந்தது!

கனிவுடன் உணவை யானைக் களித்து
கடின வேலைகள் பலவும் சொல்லி
அங்குசம் ஒன்றின் துணைக் கொண்டு
ஆனைப் பாகன் அதைப் பயிற்றுவிப்பான்!
தன்வாயால் பாகன் கட்டளை இடவே
தன்வலிமை என்ன வென்பதை மறந்து – அதை
தலையாயச் செயலெனச் செய்து வாழும்!

மானிடர் பலரும் இவ்வானையைப் போன்று
மூளையின் ஆற்றலை அறவே மறந்து
தன் தோள்களின் வலியை உணர மறந்து
தன்னை விடவும் ஆற்றல் குறைந்த
அயலான் ஒருவன் பாதம் பணிந்து
அஞ்சி அஞ்சி வாழ்வைக் கழித்து
அடிமைச் சேவகம் செய்து மறைவர்!!!

*****

”வலிமிகு யானை தன் ஆற்றல் மறந்து இரந்துண்டு வாழும் நிலையடையச்செய்த பாகனின் செயல் மனம் நோகச்செய்வது” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

பிச்சையெடுக்க விட்டவன்…

தும்பிக் கையினை நம்பிநல்ல
துணிச்சல் கொண்ட யானையது
வம்பே யின்றிச் சுதந்திரமாய்
வலமாய் வந்ததைப் பிடித்தேதான்,
தந்த மதனின் வலிமையையும்
தானே மறக்கப் பழக்கியதைச்
சொந்த நலனில் இரந்திடவே
செய்து விட்டான் மனிதனவனே…!

*****

”கணபதிக்கு முகம் தந்தவன்; கடின உழைப்புக்கு இலக்கணம் ஆனவன்; சைவ உணவின் மகத்துவத்தைச் சகத்துக்குச் சாற்றியவன்; பாரதக் கதை மாற்றிய அஸ்வத்தாமன்; பார்ப்பவர் வியந்திடும் கம்பீர உருவுடையான்” என்று யானையின் பீடுதனைப் பாடுபொருளாக்கியிருக்கின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

கம்பீரத்தின் வீழ்ச்சி

கணபதிக்கு முகம் தந்த அன்பின் விளக்கம் நீ!
இந்திரனுக்கு பெருமை சேர்த்த ஐராவதம் நீ!
கடின உழைப்பிற்கு இலக்கணம் ஆனாய் நீ!
ஆலய வாசலின் அனைவரையும் வரவேற்கும் அன்புத் தோழன் நீ!
போரில் முன் நின்று சண்டையிடும் இணையில்லா வீரன் நீ!
நீ நடந்து வரும் அழகை வர்ணிக்க வார்த்தையில்லை !
உனைப் பார்த்து மகிழாத பிள்ளை யாருமில்லை!
உருவத்தால் மட்டுமில்லை! பாசத்திலும் பெரியவன் நீ!

குழந்தையை தாய் சுமக்கும் காலமோ பத்து மாதம்!
உன் குட்டியை நீ சுமப்பாய் இரு பத்து இரண்டு மாதம்!
கூட்டமாய் வாழும் கொள்கை உடையவன் நீ!
பெண் யானைக்கு மட்டும் தான் தலைமைப் பதவி!
மனித இனத்தில் மட்டுமல்ல !யானை இனத்திலும்
பொறுப்பானவர்கள் பெண்களே! எனவே இப்பதவி!
உனைப் பற்றிச் சொல்ல எத்தனை செய்திகள்!
உன் நினைவாற்றல் அரியது!
மோப்ப சக்தியால் நீர் நிலைகளை அறியும் அற்புத ஆற்றல்
வியப்புக்குரியது!
சைவ உணவின் சக்தியை உலகிற்கு உணர்த்தியது!
உனக்கோ பல பெயர்கள்!
வேழம், வாரணம், மாதங்கம், களபம்
குஞ்சரம், மதகயம். போதகம்
எண்திசை காக்கும் அஷ்ட திக் கஜங்கள் ஆனாய்!
அஸ்வத்தாமாவாய் நீ வந்து பாரதக் கதை மாற்றினாய்!
அளப்பரிய ஆற்றல் இருந்தாலும், அங்குசத்திற்கு அடி பணிவாய்!
அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதை அழகாய்ப் புரிய வைத்தாய்!
பாகன் கட்டளைக்கு அடி பணிந்து, வேலை பல விரைந்து முடித்திடுவாய்!
நீர் நிலையைப் பார்த்து விட்டால் குளித்து மகிழ்ந்திடுவாய்!
தும்பிக்கையில் நீர் எடுத்து உன் மேல் ஊற்றிடுவாய்!

நின்றபடி தூங்கிடுவாய்!
யானைக்கு மொழி உண்டாம்! ஆய்வில் கண்ட உண்மை!
பிளிறல் கேட்கையிலே ஏதோ புரிகிறது!
ஆண் யானைகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது!
தந்ததத்தை எடுப்பதற்கு, யானைகளை கொல்கின்ற
அவலம் நெருப்பாய் சுடுகிறது!
கம்பீரமாய் வலம் தந்த யானை கனவாய்க் போகலாமா!

*****

ஆகம சாத்திரத்தில் தடம்பதித்தாய்; ஆலய சிற்பத்திலும் இடம்பிடித்தாய்; வாகனமாய்க் கடவுளுக்கு ஆனாய்; பாகனின் பாகுமொழிகளுக்குப் பணிந்தாய்; சண்டை மட்டுமன்று சர்க்கஸும் நீயின்றிச் சிறக்காது” என்று யானையின் அருஞ்சேவைகளைக் கோவையாக்கியிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

யானை வரும் முன்னே..அதன் பெருமை வரும் பின்னே.!

கோட்பாடு கொண்ட பாலூட்டும் பாசக்குடும்பம்..
……….கோட்டுக்காக வேட்டைக் கிரையாகுமோர்க் களிறு.!
வேட்டஞ் செய்மனிதரும் போற்றும் வகையில்நீ..
……….வேகமின்றி நிதானமாய் அற்புதச் செயல்புரிவாய்.!
ஆட் கொண்டானுனை வாகனமாய் இறைவனும்..
……….அறிவிற் சிறந்து விலங்கில்நீ வேறுபட்டதாலே.!
காட்சிப் பொருளாய் இன்றும்நீ காண்பதற்கரிய..
……….கண்ணுக்கு விருந்தளிப்பாய் சிலையாய் உயிராய்.!.

.ஆகம சாத்திரத்தில் ஆனையும் ஓரங்கமாகும்..
……….ஆலய சிற்பங்களில் சிந்தனைக்கு விருந்தாகும்.!
ஏகபோகம் எல்லாம் அனுபவிக்கும் ராஜாவும்தன்..
……….எதிர்பகை வெல்வானுன் படைத் துணைகொண்டு.!
மேகவாகனுன் கரியநிறத்தை வெள்ளை யாக்கி..
……….மேல்சவாரி செய்ததால் மேலுலகத்திலும் புகழ்.!
தேகப்பயிற்சி இலாமலே திரண்ட உடலமைப்பும்..
……….திகைக்கும் திறன்மிகு உன்தும்பிக்கை அதிசயம்.!.
..
வாகனமாய்க் கடவுளுக்குப் பணி செய்வாய்..
……….வேழமுக வினையகனாக வடிவ மெடுப்பாய்.!
ஊகத்துடன் பாகனின் சைகையறிந்து செயலை..
……….உறுதியுடன் செய்வாய்!ஒன்றாகக் கூடிவாழ்வாய்.!
பாகனிடம் பரிவுண்டு! ஆனால் மதம்பிடித்தால்..
……….பந்தாடி பரலோகம் அனுப்பிடுவாய் அறியாது.!
சோகத்தை நிகழ்த்துகின்ற இச்செயலாலே உன்..
……….சாதனைக்கு இழுக்காக இதுவொரு பங்கம்தான்.!.

லோகத்தை இரட்சிக்கும் பரந்தாமனும் உன்மீது..
……….லாவகமாய்ப் பவனிவந் தவனியைக் காப்பான்.!
சாகசத்தில் சர்க்கஸில் சறுக்கி விளையாடினும்..
……….சற்றுதுள்ளிக் குதிக்கத் தெரியாத அப்பாவியாம்.!
பாகனின் அரையடி அங்குசமுனை அடக்கும்..
……….படுத்து எழுந்திருப்பதற்கு படுங்கஷ்ட மதிகம்.!
வாகாக வளைத்துதன் தும்பிக்கைக் கொண்டுனை..
……….வணங்கும் பக்தருக்கு ஆசிர்வாதம் செய்வாய்.!

*****

களிற்றின் நிறைகுறைகளைக் கருத்தொடு தம் கவிதையில் பொதிந்து தந்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!  

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருக்கும் கவிதை இது!

காக்கக் காக்க களிற்றினந் தன்னை…

”சிங்க மராட்டியரின் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்”
என்று அருங் கவிஞன் எங்களது பாரதியின்
தங்கத் தமிழ் வாய் தவறி உரைத்ததனால்
ஆத்திரத்தை யானை அவன்மீது காட்டியதோ!

என்று மனங்கலங்கி-

அழிகின்ற ஆனைகள் மேல்
அனுதாபம் காட்டாத
பழிவந்து சேராமல்,
பாரதியென் சொற்குருவின்
ஓடித் தவறிவிட்ட ஓர்கவிதைக் கீடாக

ஓர் கால்-

”ஈழத்து வேழநிரை பல பிடித்தே
ஏற்றன்பு செய்பவர்க்கே அனுப்பி வைப்போம்
பாழும் பணத்தினுக்காய் அவற்றைக் கொன்றே
பல்லைப் பிடுங்கி விற்கும் கொடுமை செய்யோம்”

என்று கவி பாடிட வே என்னை மனம் தூண்டியது.

இங்கே
நல்ல பெறுமதி என்றுள்ளூர எண்ணி
பல்லைத் தடவும் பாகனிடம்
கொல்ல நினையாதே என்னையென்று
சொல்லத் தெரியா, வாய்
இல்லா மிருகம்
மெல்லத் தன் கை கூப்பி
வேண்டுகிறகிற காட்சியிதா?
அல்லாவிடிற் தன் அழகு மிகு தந்தத்தை
பாலிஷ் செய்கின்ற பாகன் மேல் அன்பு வைத்து
கையுயுாத்தி நன்றிதனைக் காட்டுகிற காட்சியதா!

எப்படியா யிருந்தாலும் –

காட்டில் சுதந்திரமாய்க் கட்டற்று வாழ்கின்ற
ஆனைகளைப் பிடித்து அங்குசத்தாற் குத்தி
வேதனைக்கு உள்ளாக்கி வேலை பல வாங்கி
பாதகங்கள் செய்யாதீர் பாவமந்த ஜன்மங்கள்!

”சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்று வெள்ளந்தியாய்ச் சொன்னதற்கா எங்கள் செந்தமிழ்ப் புலவனின் ஆருயிரை நீ கவர்ந்திட்டாய்?” என்று ஆனையை ஆற்றாமையோடு கேட்கும் கவிஞர், ” ”பல்லைத் தடவும் பாகனிடம் என்னைக் கொல்ல நினையாதே என்று களிறு கைகூப்பும் காட்சியோ இஃது? என்று கேட்பதும், களிறுகளும் நம் சொந்தங்களே! தந்தங்களுக்காக அவற்றைக் கொன்றழிக்கும் பாவத்தைச் செய்யாதீர் மானுடரே!” என்று  முடித்திருப்பதும் சிறப்பு.

சிந்தனைக்கு விருந்தாகும் நற்கவிதை படைத்தமைக்காக, திரு.  எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    வல்லமை மின்னிதழ் வாசகர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் 2018 ஆங்கிப் புதுவருட (பொதுவருட) வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். ஆண்டின் முதல்
    வாரத்திலேயே சிறந்த கவிஞரென்ற கௌரவத்தைத் தந்த நடுவர் மேகலா இராமூர்த்திக்கும், வல்லமை குழுவினருக்கும் சிரம் தாழ்த்தி நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க