மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) 18

க. பாலசுப்பிரமணியன்

 

திரு பரமேஸ்வர விண்ணகரம்  அருள்மிகு வைகுந்தப் பெருமாள் கோவில்

26165798_759459714238180_188493417537423249_n

கைலாசனின் அருளாலே களிப்புற்றான் விரோசனனும்

கையிரண்டில் தவழ்ந்தனவே காவல் தெய்வங்களே

கைகூப்பிக் கண்ணனையே காலமெல்லாம் தொழுதிடவே

கைலாயனின் கண்ணருகில் கண்ணனின் விண்ணகரம் !

 

பரமசிவன் கருணையினால் பரமபதம் வந்தது

பாரெல்லாம் போற்றிடவே பேரருளைத் தந்தது

பல்லவனின் பேரன்பால் பரமேஸ்வரம் அமர்ந்தது

பரவசத்தில் அடியார்களுக்கு அருட்சுனையாய் அமைந்தது !

 

ஆழ்கடலின் நடுவினிலே அமைதியாய் அயர்ந்தவனே

பாழ்மனமே அலைபாய நிலைக்காக்க வருவாயோ ?

ஊழ்வினையே ஒன்றாகி உள்ளமெல்லாம் உலுக்கிவிட

யாழிசையாய் வந்திடுவாய் என்னுயிரை மீட்டுவிட !

 

அன்னையவள் சொல்காக்கக் கானகத்தில் நடந்தாய்

அரியணையின் நலம்காக்கத் தூதுவனாய் நடந்தாய்

அடியவர்கள் மனம்காக்க அகிலமெல்லாம் நடந்தாய்

அண்டமெல்லாம் காத்திருக்கும் உன்னடிகள் எதிர்நோக்கி !

 

தூணொடித்து நடுவாயிலில் அமர்ந்த நரசிம்மா !

வில்லொடித்து வைதேகி கைப்பிடித்த காகுந்தா !

சொல்லெடுத்து நான்வந்தேன் சுவையாக உனைப்பாட

மண்ணெடுத்த பிறவியிலே வைகுந்தா! வாழ்வளிப்பாய் !

 

வைகுந்தம் எங்கென்று யாரேனும் அறிந்தாரில்லை

வைகுந்தன் வடிவழகை யாரேனும் கண்டாரில்லை

வைகுந்தன் பெயர்சொல்ல யாரேனும் மறந்தாரில்லை

வைகுந்தா ! வையகத்தில் உன்னருளிருக்க வீழ்ந்தாரில்லை!

About க. பாலசுப்பிரமணியன்

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க