இந்த வார வல்லமையாளராக திரு கவுதம சன்னா அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

கவுதம சன்னா ஒரு சிறந்த சமூக- அரசியல் எழுத்தாளர் ஆவார். அரசியல் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் பல நூல்களையும், படைப்புகளையும் எழுதியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராக மக்கள் தொண்டாற்றி வருகிறார். வசிப்பிடம் சென்னை ஆகும்.

இவர் பேராசிரியர் யூகோ கொரிங்கே அவர்களுக்கு அளித்த பேட்டி சவுத் ஆசியனிஸ்ட் பத்திரிக்கையில் வெளியிடபட்டு உலகெங்கும் தமிழ் பேசும் பட்டியல் இன மக்களின் உரிமைப்போரின் வரலாற்றை கொண்டு செல்லும் வண்ணம் அமைந்தது. அதில் பல புரட்சிகரமான முற்போக்கு கருத்துக்களை சன்னா முன்வைக்கிறார்.

அம்பேத்கர் நூற்றாண்டு விழாவின் போதுதான் பட்டியல் இன மக்களின் உரிமைப்போர் தமிழகத்தில் தொடங்கியது எனும் பொதுக்கருத்தை உடைத்து, அயோத்தி தாச பண்டிதர் காலத்தில் 19ம் நூற்றாண்டிலேயே பட்டியல் இன மக்களின் விடுதலைக்குரல் தமிழகத்தில் முழங்க துவங்கியதை சன்னா அப்பேட்டியில் சுட்டிக்காட்டுகிறார். பட்டியல் இன மக்களின் தலைவர் சிவராஜை பற்றி பின்வருமாறு கூறுகிறார்

“சிவராஜ் (குடியரசு கட்சி தலைவர்) ஒரு முக்கியமான தலைவர். அவர் அம்பேத்கருக்கு அடுத்த நிலையில் அவருடன் இருந்தவர். ஆனால் அவரைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை சொல்லுங்கள்? அவர் அம்பேத்கரை விட ஒரு வருடம் மட்டுமே மூத்தவர், ஆனால் அவரைப்பற்றி எழுதுபவர்கள் யாருமே இல்லை. அம்பேத்கரின் மறைவுக்கு பின் அவர் அமைக்க விரும்பிய குடியரசுக் கட்சியை என் சிவராஜ் அமைத்தார். அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியை அமைக்க விரும்பி அதற்கான விதிகளையும், கொள்கைகளையும் எழுதினார். ஆனால் அக்கனவு நனவாகும் முன்னரே மறைந்தார். குடியரசுகட்சியை உருவாக்கி அகில இந்திய அளவில் கொண்டு சென்றதில் பெரும்பங்கு என். சிவராஜுக்கு உண்டு. அப்போது அதிகம் புகழ் பெற்ற தலைவர்கள் தமிழகத்தில் பலர் இருந்தார்கள். அம்பேத்கர் 1956ல் இறந்தார். குடியரசுக்கட்சி 1957ல் உதயமாகிறது. 1962 தேர்தலில் திமுக குடியரசுக் கட்சியுடன் கூட்டணி சேர்கிறது. கூட்டணி உருவாகும் சமயத்தில் தமிழகத்தில் இருந்த முக்கிய தலித் தலைவர் ஆர்ய சங்கரன் ஆவார். அவருக்கு பின் பள்ளிகொண்டா எம். கிருஷ்ணசாமி, ஜி.மூர்த்தி, சக்திதாசன், சேப்பன், எல். இளையபெருமாள், வை.பாலசுந்தரம் மற்றும் பல தலைவர்களும் பிற்காலத்தில் வந்த இயக்கங்களுக்கு வழிகோலினார்கள். இந்த தலைவர்களை யாருமே அங்கீகரிக்கவில்லை. திமுகவுடன் கூட்டு சேரும் அளவுக்கு அக்காலகட்டத்தில் குடியரசுக்கட்சி வலுவானதாக இருந்தது. என்.சிவராஜ் வேலூரில் போட்டியிட்டு இரண்டாமிடத்தை பிடித்தார்”

தமிழ் தேசியம் குறித்து பின்வரும் கருத்தை முன்வைக்கிறார்

“தமிழகத்தில் மக்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் என்றால் தலித் கட்சி என மட்டுமே நினைக்கிறார்கள். அம்பேத்கரின் எழுத்தை பார்த்தால் அவர் தலித்துகளை “பெரும்பான்மை, ஆனால் சிதறிய பெரும்பான்மை” என குறிப்பிடுகிறார். நாடு முழுக்க பார்த்தால் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் (தொகுதி, ஊர், நகரம்) என்பது போன்ற சிறிய வட்டங்களில் பார்த்தால் அவர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். ஆக தொகுதி என வருகையில் அவர்கள் சிறுபான்மையாகவே இருக்கிறார்கள். இந்திய அளவில் தலித்துகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் ஒவ்வொரு பகுதியிலும் அவர்கள் சிறிய கட்சிகளாகவே இருக்கமுடியும். இத்தகைய ஒட்டுவங்கியை வைத்துக்கொண்டு தலித் கட்சிகள் ஆட்சியை பிடிக்க முடியாது. இது நடக்கவேண்டுமெனில் மேலும் பல வேலைகளை நாம் செய்யவேண்டும். அதே சமயம் தலித்துகள் பெரும்பான்மை சமூகத்தில் அங்கீகாரத்தை பெற்றால் அவர்கள் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உதாரனமாக அம்பேத்கர் துவக்கிய “சுதந்திர தொழிலாளர் கட்சியில்” தலித்துகளும், தலித் அல்லாதவர்களும் இருந்தார்கள். அதன்பின் அவர் அதை “எஸ்.சி தொழிலாளர் அமைப்பாக” மாற்றுகிறார். எஸ்.சி அரசியல் செய்யவேண்டும் என்ற நிலை வந்தவுடன் அவர் தலித்துகளை ஒரு அரசியல் சக்தியாக மாற்றியபின்னரே மற்றவர்களுடன் அவர்களை இணைந்து பணியாற்றவைக்க முடியும் என நம்பினார். இதன்பின் இந்திய குடியரசுகட்சிக்கான ஆலோசனையை அவர் முன்வைக்கிறார்.

இந்த வேறுபாடுகளை பார்க்கவும்: முதலில் சுதந்திர தொழிலளர் கட்சி. அதன்பின் எஸ்.சி தொழிலாளர் அமைப்பு, அதன்பின் இந்திய குடியரசுக்கட்சி. ஆக அவர் முதலில் ஒரு பொதுவான அடையாளத்தை அமைக்க முயன்றார். அது வெற்றியடையவில்லை. அதன்பின் சாதி அடையாளத்தை உருவாக்குகிறார். அது ஒரு அளவு வெற்றியும் பெறுகிறது. ஆனால் சாதிய அடையாளத்தை மட்டும் வைத்த்க்கொன்டிருந்தால் அதுவே ஒரு தடைக்கலாக மாறும் என்பதை உணர்ந்து இந்திய குடியரசுக்கட்சி எனும் ஜனநாயக அமைப்பை உருவாக்குகிறார். இதுபோன்ற சிந்தனைகளை அனைத்து இந்திய கட்சிகளிலும் காணலாம். பலவிதங்களில் அவர்கள் இதேபோன்ற உத்திகளை கையாண்டார்கள். தமிழ்நாட்டில் முதலில் ரிபப்ளிக்கன் கட்சி உருவானது, அதன்பின் ஆதிதிராவிடர் கட்சிகள் உருவாகின, அதன்பின் பள்ளர்களுக்கான இயக்கம், பறையர்களுக்கான இயக்கம், அருந்ததியினருக்கான இயக்கம் ஆகியவை உருவாகின. இப்படி உருவானபின் கொஞ்ச காலம் இயக்கங்களாக் அவை தொடர்கின்றன. ஆனால் சாதி அடிப்படையிம் மட்டுமே அவற்றால் இயங்கமுடியாது என வருகையில் அவை விடுதலை சிறுத்தைகள். புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சி என்பது போன்ற கட்சிகளாக உருவெடுக்கின்றன. பொதுவான பெயர்களில் கட்சிகளை துவக்கி, பொதுமக்களை திரட்ட முயலுகையில் பொதுவான ஒரு காரணியை வைத்தே அணுக முடிகிறது. இதுவே நல்ல வாய்ப்பு என்பதால் தமிழ் தேசியம் என்பது மக்களை திரட்டும் மிக நல்ல ஒரு அடித்தளமாக அமைகிறது. இதனால் பல தலித் கட்சிகள் தமிழ் தேசியத்தை முன்வைக்கின்றன. பொதுவான அடையாளத்தை தேடும் முயற்சியின் ஒரு பகுதியே இது என கூறலாம். அதே சமயம் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கபட்ட போது அனைவரும் அவர்களுக்காக குரல் கொடுத்தாலும், ஒடுக்கபட்டவர்கள் எனும் அடிப்படையில் தலித்துகள் அவர்களுக்கு குரல் கொடுத்தபோது அதில் இருந்த உணர்ச்சிகரமான பிணைப்பு மற்ற கட்சிகள் குரல் கொடுத்தபோது இல்லாமல் போனது. இங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தலித்துகள், அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தமிழர்களில் 80% என கூறலாம்.புலிகள், புலிகள் அல்லாதவர்கள் என அனைத்து தமிழருமே அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தார்கள்.

சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் பொதுவான தமிழ் அடையாளத்தை முன்வைத்தபோது அதேபோன்ற ஒரு பொதுவான அடையாளத்தை தமிழ்தேசியம் இங்கேயும் பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் தலித்துகள் தமிழ் தேசியத்தை கையில் எடுக்கிறார்கள். தமிழ் தேசியம் தலித்துகளுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்குமா என்ற கேள்வி இருந்தாலும் அது பொதுவான அடையாளத்தை நோக்கி நகரும் ஒரு முயற்சியே ஆகும். இது ஒப்புக்கொள்ளபட்டு ஏற்றுக்கொள்ளபப்ட்டால் சாதி உணர்வுகள் குறைந்து, சாதிய அரசியலும் குறைந்து உண்மையான ஜனநாயகம் மலரும். இந்த அடிப்படையிலேயே தமிழ் தேசிய அரசியலை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.”

தலித் அல்லாதவர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் அளிப்பது பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்

” நாங்கள் தலித் அல்லாதவருக்கு கட்சியில் பதவிகளை கொடுப்பது பிற கட்சிகளுக்கும், சாதியினருக்கும் “நீங்களும் இக்கட்சியின் ஒரு அங்கம்” எனும் செய்தியை அளிக்கிறது. இதுவரை மற்ற சாதியினர்க்கும், கட்சிகளுக்கும் நெருக்கமாகும் வாய்ப்பு எங்களுக்கு மிக குறைந்த அளவிலேயே இருந்துவந்தது. பிற சாதிக்கட்சி தலைவர்களுடன் எங்களால் நேரடியாக பேச முடியவில்லை. அந்த தலைவர்களுக்கும் தலித் தலைவர்களுடன் பேசும் மனநிலையும் இல்லை. இத்தகைய மனத்தடை நீடித்து வந்தது. ஆக இம்மாதிரி சமயங்களில் கூட்டணி பற்றி பேசுவதற்கும், தொகுதிகளை பற்றி பேசுவதற்கும் எங்கள் கட்சியில் உள்ள தலித் அல்லாதோர் பெருமளவு உதவியாக இருக்கிறார்கள். இதன் இன்னொரு பலனும் என்னவெனில் எங்காவது ஜாதிக்கலவரம் நிகழ்ந்தால் எங்கள் கட்சியில் உள்ள தலித்-அல்லாத தலைவர்கள் களத்தில் உள்ள தலித் அல்லாதவருடன் எளிதில் பேச முடிகிறது. இது அமைதியை உருவக்கவும், பிரசனைகளை தீர்க்கவும் உதவுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள தலித் அல்லாதோர் இதில் பெரும்பங்கு வகித்துள்ளார்கள். அவர்கள் பங்கை அங்கீகரிப்பதன் மூலமும், மதிப்பதன் மூலமும் இதுவும் ஒற்றுமை நிலவும் சமூகத்தை உருவாக்கும் முயற்சியே என்பதை புரிந்து கொள்ளலாம்.”

தமிழக பட்டியல் இன மக்களின் போராட்ட வரலாற்றை இத்தனை தெளிவாக உலக மக்களுக்கு எடுத்துரைத்த சன்னா அவர்கள் பல்வேறு சமூக, மக்கள் நல போராட்டங்களில் கலந்துகொண்டும் தமிழ் பவுத்தத்தின் மீட்டெடுப்பில் ஆர்வம் செலுத்தியும் பங்காற்றி வருகிறார். இத்தகைய கூர்ந்த சிந்தனையாளரை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சியும், உவகையும் அடைகிறது.

வல்லமையாளர் கவுதம சன்னாவுக்கு நம் நல்வாழ்த்துகள்.

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர் (255)

  1. திரு. கவுதம் சன்னா அவர்களுக்கு பாராட்டுகள். அதற்கு மேல் தலைவர் சிவராஜ் பற்றி அக்கறையை ஏற்படுத்தியதுக்கு செல்வனுக்கு பாராட்டுகள். நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவரை பற்றி அக்கறை இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *