பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

26058118_1516491791738348_1614789308_n

அனிதா சத்யம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.01.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி (142)

 1. தனி மனிதர் படங்களைப் போட்டு, அவரது அனுமதியின்றி கருத்தோட்டக் கவிதைகள் புனைவது, திறனாய்வு செய்வது நேர்மையான வினையாகத் தெரியவில்லை எனக்கு.

  சி. ஜெயபாரதன், கனடா

 2. திருமணம்

  வாழ்க்கை துணை நலம் நாடி, திருமண கோலத்துடன் காட்சியளிக்கின்றாய்

  திருமணம் என்பது, இருமனங்கள் கொண்ட ஒருமனம் என உணர்வாய்

  திருமணத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, இல்லறத்தில் இன்பமுடன் ஈடுபடுவாய்

  இனி எச்செயலையும் இருவரின் தீர்மானத்தில் நடத்திக் காட்டிடுவாய் !

  மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்திடும் வரமே

  நீ மாண்புறுவதும், பெருமையடைவதும் அவள் வந்த நேரமே

  திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது வழக்கம்

  அவள் பெயரை செல்லமாக அழைப்பதே பழக்கம் !

  புகைப்படத்திற்காக இன்முகம் காட்டி சிரிக்கின்றிர்கள்

  இல்லற வாழ்க்கையில் சிரிப்பு என்பது சில காலமே என உணருங்கள்

  ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்ததாகும்

  இருப்பதை கொண்டு மனநிறைவுடன் வாழ்வதே மிக நன்மையாகும்.

  காலங்களும், கோலங்களும், உலகில் என்றும் மாறும்
  கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்!!

  .மலர்போன்று மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
  மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

  பிறந்த வீட்டின் குலம் காக்க வேண்டும் ,
  புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும்

  கணவன் என்றாலே, கண்ணைப் போன்றவனாகும்,
  அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !

  அன்பும், அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
  பண்பும், பயனும் அது. என்பது வள்ளுவர் வாக்கு.

  ரா. பார்த்தசாரதி

 3. எளிய திருமணம்
  ******************

  எளிய முறையில் இங்கொருத் திருமணம்! – உளக்
  களிப்பில் குறைவிலா அழகியத் திருமணம்!
  பகட்டு என்பது சிறிதும் இல்லை!
  திகட்டும் மகிழ்வில் குறைவேதும் இல்லை!

  சாரட்டு வண்டியில் பூட்டிய குதிரை
  சரிகைப் பட்டு ஏதும் இல்லை! – மலர்த்
  தோரணம் ஏதும் தொங்க வில்லை!
  காரணம் இல்லாத் துள்ளிசை இல்லை!

  அதிர்வேட்டு ஏதும் முழங்க வில்லை!
  சதிராட்டம் ஏதும் நடக்க வில்லை!
  உணவுப் பொருட்கள் வீணடிப்பு இல்லை!
  கனவுலகம் போன்ற அலங்காரம் இல்லை!

  பொன் வைரம் சீர்வரிசை யெல்லாம்
  கண்ணுக்கு குளிர்ச்சியாய்க் காட்சிப் படுத்தி
  வண்டி வண்டியாய்க் கொட்டிக் கொடுத்தும்
  வாங்கிட முடியுமா வாழ்வின் நிறைவை?

  திருமணம் என்றப் பெயராலே அனைவரும்
  தேவையற்ற செலவைத் தவிர்த்திடுவோம்!
  வாழ்க்கைக்காகப் பணம் தேடி நம்
  வாழ்வு தொலைவதை உணர்ந்திடுவோம்!

  சிக்கன வாழ்வைக் கடைப்பிடிப்போம்!
  சிக்கலற்ற வாழ்க்கை வாழ்ந்த்திடுவோம்!
  பொருள்சார் வாழ்வில் நிறைவைத் தருவது
  பொதுவாய் சிக்கனம் என்ற மந்திரமே!

   -ஆ. செந்தில் குமார்.

 4. மண்ணின் மணம்…

  ஒப்பனை காட்டும் முகங்களில்லை
  ஒப்புக் காகச் சிரிக்கவில்லை,
  தப்பிலா கிராமக் காதலிலே
  தழைத்த திந்தத் திருமணமே,
  செப்பிட வார்த்தை ஏதுமில்லை
  சொந்த மண்ணின் நாணமிது,
  இப்படித் தொடங்கிடும் மணவாழ்வில்
  இனிதே வாழ்க மணமக்களே…!

  -செண்பக ஜெகதீசன்…

 5. மணமக்களுக்கு வாழ்த்து

  நாணமும் பயிர்ப்பும் கொண்டு
  நங்கைதன் முகந் திருப்பிக்
  காணவும் கூசுகின்றாள்
  கமராவைப் பக்கல் நிற்கும்
  ஆணவன் சிரிப்பினூடு
  அணைத்திட அவளைத் தன்னோ(டு)
  ஏனடி வெட்கமென்று இழுப்பது
  இனிய காட்சி.

  வாழ்வினிலிணைந்த இந்த
  மணமக்கள் நீடு வாழி
  தோழமை குலையா தென்றும்
  துயர்படா தினிது வாழி
  ஊழ்வினையுறுத்தி வந்து
  உயர்வினைத் தடுத்திட்டாலும
  ஈழமும் தமிழும் போலும்
  இணைபிரியாது வாழி

  தம்பதிகாள்1
  அன்புக்கினிய தம்பதியாய்
  அறிவும் திருவும் ஒரு சேர
  இன்பத்தமிழே மூச்சாக
  என்றும் வாழ்க இனிதாக.

 6. உறவின் உன்னதம்::::: இரு மனம் இனையும் திருமணம் !
  ஊர் கூடி வாழ்த்தும் திருமணம்!
  உறவின் பாலம் திருமணம்!
  அழகுக் கோலம் திருமணம்!
  வெட்கம் கலந்த சிரிப்புடனே மங்கை நல்லாள்!
  ஆனந்தம் பொங்கும் முகத்துடனே மாப்பிள்ளை!
  அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்!
  இல்லறம் சிறக்க வாழ்த்துகிறோம்!
  உன்னைக் கரம் பிடித்தாள் இந்தப் பெண் மணி!
  இனி இவள் தான் உந்தன் கண்ணின் மணி!
  மலராய் அவள் இருக்க! நறுமணமாய் நீ இரு!
  உடலாய் அவள் இருக்க! உயிராய் நீ இரு!
  பயிராய் அவள் இருக்க!மழையாய் நீ இரு!
  நிலவாய் அவள் இருக்க!வானாய் நீ இரு!
  பாட்டாய் அவள் இருக்க! பொருளாய் நீ இரு!
  குயிலாய் அவள் இருக்க! குரலாய் நீ இரு!
  தெய்வமாய் அவள் இருக்க! கோவிலாய் நீ இரு!
  உனக்காக அவள் விட்டது ஏராளம்!
  தாய்,தந்தை விட்டு வந்தாள்!
  வீட்டை விட்டு வந்தாள்!
  தன்னை தொலைத்து விட்டு உன்னோடு
  சேர வந்தாள்!
  அவளுக்காய் நீயும் விடு:
  உன் ஆணவத்தை!
  உன் அகந்தையை!
  விட்டு விடாதே:
  உன் அன்பை!
  உன் பண்பை!
  உன் பரிவை!
  உன் உயிரெனும் மேலான மனைவி எனும்
  மங்கை நல்லாளை!!!!

 7. நாணத்தில் நான்!!

  அந்நாளிற்காக!!
  செம்மண்ணில் கால்பழுக்க
  கருவேல முள்குத்தி
  அரப்பிலைகளைத் தேடி
  அங்கிருந்த கருஞ்சீகயைச் சேர்த்து
  ஆசையாய் அரைத்து வைத்தேன்!!
  கொற்றைப்பாக்குடன்
  சிறுதுளி மோர் சேர்த்து
  மருதாணி இலைகளை
  மையாய் அரைத்தெடுத்தேன்!!
  கல்வளையள்களும்
  கண்டாங்கிச் சேலையும்
  கள்வா நீ வாங்கி வரக்
  காத்திருந்தேன்!!!
  உன் முற்றம் எம்மொழி சிறக்க
  ஆயிரம் முத்துடயைய
  காற்ச்சிலம்பை கண்டெடுத்தேன்!!
  மும்மாதமும் மூன்று நாட்களைப்போல்
  உருண்டோடின!!
  தைத்திருநாளில்
  மேகக்கண்ணி இருள்தனைஅப்பி
  சூரியனார் மலைமுகடுகளில்
  கம்பீரமாய் எட்டிப்பார்க்க
  குளிர்க்குப் பச்சைக்கம்பளம் போற்றிய
  கைத்தமலை நடுவனிலே
  பாங்காய் பனையோலைப்பிண்ணி
  பக்குவத்தோடு பச்சைமேடையமைத்து
  பம்பையும் மேளமும்சூழ
  பட்டாடைக் கட்டி
  செஞ்சந்தனத் திலகமிட்டு
  மகிழம்பூ குங்குமத்தோடு
  மிடுக்காய் நீயும்!!
  அல்லிவழிதனில் மஞ்சனமிட்டு
  உள்ளங்கை சிவக்கச்
  செங்காந்தல் மலர்சூடி
  கல்வளையள்களோடும்
  காற்ச்சிலம்புகலோடும்
  உன் விழிப்பார்வைக்காக
  நாணத்தில் நான்!!
  நீ கட்டிய மஞ்சக்கொம்போடு
  முவ்வேழு வருடங்கழித்து
  பல்ப்போன கிழடுகளாய்
  பிள்ளைகளோடும்
  பேரப்பிள்ளைகளோடும்
  கொஞ்சிவிளையாடும் தருணத்தில்
  நீ அளிக்கும் கள்ளமுத்தத்தில்
  செம்மேனி சிவந்து
  நினைக்கும்மட்டும்
  இக்கணமே!!!

  நாணத்தில் நான்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *