-மேகலா இராமமூர்த்தி

இல்லக்கிழத்தியாகிவிட்ட செல்வமகளின் மனைமாண்பைச் செவிலி தேர்ந்த சொற்களால் வருணிக்க, வியப்பில் வாய்மூடாது செவிமடுத்துக்கொண்டிருந்தாள் நற்றாய்.

”காட்டுக் கோழியினது கவர்த்த குரலை உடைய சேவலின் ஒளிபொருந்திய புள்ளிகளை உடைய கழுத்தில் குளிர்ந்த நீர்த்துளி  துளிக்கும்படி,  புதலி(ரி)ன்கண் நீர் ஒழுகும், மலர்மணம் வீசுகின்ற முல்லை நிலத்தின் கண் அமைந்த சிறிய ஊரில் உள்ளாள் நம் காதல் மடந்தை. தலைவனது தேரோ வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை மேற்கொண்டு வேற்றூருக்குச் சென்றாலும், சென்ற ஊரின் கண்ணே தங்கிப் பின்வருதலை அறியாது உடனே வந்து விடும்” என்றாள் செவிலி.

தலைவன் தன் காதல் மனைவியைப் பிரிந்து வேற்றூர்களுக்கு அதிகம் செல்வதில்லை; அவ்வாறு தவிர்க்க இயலாது வேந்தன் இடுகின்ற பணிகளைச் செய்வதற்காகச் சென்றாலும் வேலைமுடிந்தவுடன் உடனே வீடு திரும்பிவிடுவானென்று, தலைவியைப் பிரியாது உடனுறையும், தலைவனின் உயர்பண்பைப் பாராட்டுகின்றாள் செவிலி.

கானங்  கோழி  கவர்குரற்  சேவல்
ஒண்பொறி  எருத்தின்  தண்சிதர் உறைப்பப்
புதனீர்  வாரும்  பூநாறு  புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு  தொழிலொடு  செலினும்
சேந்துவரல்  அறியாது  செம்மல்  தேரே.  (குறு2: 242 – குழற்றத்தன்)

செவிலியின் இன்சொற்கள் நற்றாயின் பொற்செவியில் தேனாய்ப் பாய்ந்தன. மகளின் மணவாழ்க்கை மணம்பொருந்திய வாழ்க்கையாய் அமைந்ததில் அகமகிழ்ந்தாள் அவள்.

செவிலியின் சொல்லில் மிகையில்லை எனும்படியே தலைவனும் தலைவிபால் கழிகாதலொடு விளங்கினான்.

”விரிந்த அலையையுடைய பெரிய கடலலால் வளைக்கப்பட்ட இப்பூவுலக இன்பமும், பெறுதற்கரிய பெருமையையுடைய தேவருலக இன்பமும் ஆகிய இரண்டும், தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும், பொன் போன்ற நிறத்தையும், மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலையும் உடைய தலைவியினது தோளோடு தோள் மாறுபடத்தழுவும் நாளிற்பெறும் இன்பத்தோடு ஒருங்குவைத்து ஆராய்ந்தால், தலைவியொடுபெறும் இன்பத்தின் கனத்திற்கு ஈடாகாது” என்று எண்ணியிருந்தான் அவன். 

விரிதிரைப்  பெருங்கடல்  வளைஇய  உலகமும்
அரிதுபெறு  சிறப்பிற்  புத்தேள்  நாடும்
இரண்டும்  தூக்கிற்  சீர்சா  லாவே
பூப்போல்  உண்கண்  பொன்போல்  மேனி
மாண்வரி  அல்குற்  குறுமகள்
தோள்மாறு  படூஉம்  வைகலோ  டெமக்கே.  (குறுந்: 101 – பரூஉமோவாய்ப் பதுமனார்)
 

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. (1103) எனும் குறளும் இதேகருத்தைப் பேசுவதைக் காணலாம்.

தலைவியும் தலைவனும் அன்பும் அறனும் உடைத்தாய் இல்லறத்தைப் நடாத்திவருகையில் தலைவன் சேர்த்திருந்த பொருள் சிறுகச் சிறுகச் செலவழியலாயிற்று. ஆதலால் மீண்டும் பொருள்தேடவேண்டிய தேவை அவனுக்கு ஏற்பட்டது.

அறம்பெற ஈதலும், இன்பம்பெறத் துய்த்தலுமான காரியங்கள், அப்பொருளைப் பெறாத இல்லோர்க்கு இல்லையாகிப் போகுமாதலால் பொருள்செய்தலை மேலானதாக எண்ணி யான் மேற்கொள்ளும் வினைக்கு, அழகிய மாமை நிறமுடைய இப்பாவையும் உடன் வருவாளோ? இல்லை என்னை மட்டும் தனியாகச் செலுத்துவாயோ?!” என்று தன் நெஞ்சை வினவி விடைகாண முயன்றான் தலைவன்.

ஈதலும்  துய்த்தலும்  இல்லோர்க்  கில்லெனச்
செய்வினை  கைம்மிக  எண்ணுதி  அவ்வினைக்கு
அம்மா  அரிவையும்  வருமோ
எம்மை  உய்த்தியோ  உரைத்திசின்  நெஞ்சே.  (குறுந்: 63 – உகாய்க்குடி கிழார்)

”நீ வற்புறுத்தினாலன்றி நானாகச் செல்லேன்!” என்று தலைவன் தன்னைக் குற்றமற்றவனாக்கித் தன்னை பொருள்வழியிற்செலுத்தும் தன்நெஞ்சைக் குற்றவாளியாக்கும் முயற்சியில் ஈடுபடுவதனை இப்பாடல்வழி உணர்கின்றோம்.

புணரின்  புணராது  பொருளே  பொருள்வயின்
பிரியின்
 புணராது  புணர்வே  ஆயிடைச்
செல்லினும்
 செல்லாய்  ஆயினும்
நல்லதற்கு
 உரியை  வாழிய  நெஞ்சே….  (நற் 16 – சிறைக்குடி ஆந்தையார்)

எனும் நற்றிணைப் பாடலும் பொருள்தேடவிழையும் தன் நெஞ்சுக்குத் தலைவன் கூறும் மறுமொழியாகவே அமைந்திருக்கின்றது.

இளம் மனைவியைப் பிரிந்து பொருள்தேடச்சென்றால் இளமையின்பம் கிட்டாது; ஆனால் வாழ்வை நெடுங்காலம் செம்மையாய் நடத்துவதோ, வறியோர்க்கு ஈந்து மகிழ்தலோ வளமையில்லையேல் எட்டாது”எனும் சிக்கல் தலைதூக்கும்போது காதலா? பொருள்தேடும் கடமையா? என்று இளந் தலைவன் தடுமாறுவது இயல்பே.

காதலும் அதுகூட்டுவிக்கும் இன்பமும் இளமைப்பருவத்துக்கே உரியது; ஆனால் பொருளோ இளமைக்கு மட்டுமல்லாது முதுமைக்கும் வேண்டுவது; ஆதலினால் தலைவிமாட்டுக் காட்டும் காதலினும் பொருளே வாழ்வுக்குத் தேவையானது என்று அவனைத் தெருட்டியது அவன் அறிவு. Spotted Deer pair (Cervus axis), Yala National Park, Sri Lanka, February.

செல்வம் தேட மறுபடியும் செல்வோம் எனும் முடிவுக்குவந்த தலைவன் அதனைப் பக்குவமாய்த் தலைவிக்கு எடுத்துரைக்க விரும்பி, ”பொலிவான குழையணிந்த பெண்ணே! என்னருமைக் கண்ணே! நீலமணி ஒழுகியதுபோல் காட்சிதரும் கரிய அறுகங்கொடியின் மெல்லிய தண்டைப் பெண்மானொடு சேர்ந்து வயிறுநிரம்ப உண்ட ஆண்மானானது துள்ளிவிளையாடும் கானம் ஒன்று நம் ஊருக்கு அணித்தே உள்ளது” என்று மெல்ல ஆரம்பித்தான். தலைவியும் அவன் ஏதோ சுவையான சம்பவத்தைச் சொல்லப்போகிறான் எனும் ஆர்வத்தில் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கத் தொடர்ந்த தலைவன்…

”அந்தக் கானம் பின்னே செல்லுமாறு நான் அதனைக் கடந்துசென்று பொருளீட்டி வரலாம் என எண்ணுகிறேன்; அதுவரை என் பிரிவை இந்தத் தெரிவை தாங்கியிருப்பாள் அல்லவோ?” என்று கேட்குமுன்னமே தலைவியின் கண்கள் கண்ணீர் மழையைக் கொட்டத் தொடங்கியதைக் கண்ட தலைவன், அவள் கலக்கத்தைத் துலக்கமாய்த் தெரிந்துகொண்டான். தன் பயணத்துக்கு ஆயத்தமாக வெளியில் நிறுத்தியிருந்த தேரிலிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டுப் பயணத்தை நிறுத்தினான்.

மணிவார்ந்  தன்ன  மாக்கொடி  யறுகை
பிணிகான்  மென்கொம்பு  பிணையொடு  மார்ந்த
மானே  றுகளுங்  கானம்  பிற்பட
வினைநலம்  படீஇ  வருது  மவ்வரைத்
தாங்கல்  ஒல்லுமோ  பூங்குழை  யோயெனச்
சொல்லா  முன்னர்  நில்லா  வாகி

நீர்விலங்  கழுத  லானா
தேர்விலங்  கினவால்  தெரிவை  கண்ணே.  (குறுந்: 256 – ?)

தலைவியைச் சமாதானப்படுத்திப் புறப்படலாம் எனும் தன் எண்ணத்தில் மண்விழவே ஏமாற்றமடைந்து யோசனையில் ஆழ்ந்தான் அவன். 

அக்காலத்தில் இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய பொருள்தேடும் முயற்சி ஆடவரைக் குடும்பத்தைவிட்டுப் பிரிக்கும் கொடுவாளாக இருந்ததையும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்க்கை வளம்பெற அதனைச் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் அவர்கட்கு அமைந்ததையும் பாலைத்திணைப் பாடல்கள் பலவும் பரக்கப்பேசுகின்றன.

உள்ளூரிலேயே செய்வதற்குத் தகுந்த தொழிலேதும் அமையாததால் அவர்கள் வெளியூர்களுக்கு வேலைதேடிச் சென்றார்களா? கடும் பாலைநிலங்களையும் கொடுஞ்சுரங்களையும் கடந்து அவர்கள் வேலைதேடிச் சென்ற ஊர்கள் யாவை? அங்கு அவர்கள் செய்த வேலைகள் என்ன? போன்ற பல கேள்விகளுக்குச் சங்கப் பாடல்களில் தெளிவான பதிலில்லை.

[தொடரும்]

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *