படக்கவிதைப் போட்டி 135-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
கூட்டமாகக் குந்தியிருக்கும் மந்திகளும் அதன் பறழ்களும் (குட்டிகள்) நம் உள்ளத்தை அள்ளிக்கொண்டு போகின்றன. இந்தக் காட்சியைத் தன் படப்பெட்டியில் பதிவுசெய்து தந்திருக்கும் திரு(மிகு?). சத்யாவுக்கும், படக்கவிதைப் போட்டிக்கு இந்த அழகிய படத்தைத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி உரியது.
படத்தில் காணும் கவிகளைப் (குரங்குகள்) பாட, வல்லமைமிகு நம் கவிகள் (கவிஞர்கள்) அணிவகுத்து நிற்பதால் தாமதமின்றி அவர்களை அழைத்துவிடுகிறேன். கவிகளே எழுக! கவிமழை பொழிக!
*****
“கூடிவாழும் குரக்கினம் மலைமீதில் இளைப்பின்றி ஏறும்; பழந்தின்றுக் களைப்பின்றி ஆடும்; கைப்பொருளைப் பறித்துக்கொண்டு ஓடும்” என்று குரங்கின் குணங்களைச் சுவையாய்ப் பட்டியலிடுகின்றார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.
குடும்பமுடன் கூடிவாழும் குரங்கினத்தைக் காணீர்
***கொஞ்சுதமிழ்ச் சொல்லெடுத்துப் புலவோரே பாடீர்
!
தடுமாற்ற மில்லாமல் கிளைகளிலே தாவும்
***தன்னோடு குட்டியையும் சுமந்துகொண்டு போகும் !
படுவேக மாகவது மலைமீதி லேறும்
***பழந்தின்று பசியாறிக் களிப்பினிலே ஆடும் !
வெடுக்கென்று கைப்பொருளைப் பறித்துக்கொண் டோடும்
***விரட்டிவிட்டால் முறைத்தவண்ணம் பார்த்திருக்கும் நின்றே !!
*****
குரங்கின் வாழ்வியலைத் தன் கவிதையில் எளிமையாய்ப் பதிவுசெய்திருக்கிறார் திரு. ரா.பார்த்தசாரதி.
மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு என்றான்
சிந்திக்கும் ஆற்றலை குரங்கிற்கு கடவுள் கொடுக்க மறந்தான்
அவைகளுக்கிடையே ஒற்றுமை எனும் பண்பைக் கண்டான்
பிறரிடம் பறித்துக் கொண்டு தின்னும் குணத்தையும் கண்டான்
மலையும், மரக்கிளை அதன் குடியிருப்பாக கொள்ளும்
இடம்விட்டு இடம் மாறி உணவிற்காக செல்லும்
குட்டியைத் தன் வயிற்றில் விட்டுவிடாமல் சுமந்து செல்லும்
தானும் உண்டு, தன்னைச் சூழ்ந்த தன் இனத்திற்குக் கொடுக்கும்.!
மனித மனம் ஒரு குரங்குதான், அது அங்குமிங்கும் தாவும்
மனம் சொன்னபடி மனிதனின் உடல் கேட்காது எனத் தெரியும்
இருந்தும் கடல் அலைபோல் மனம், அலைபோலப் பாயும்
மன இறுக்கத்தால் உடல் சோர்வும், நோயும் வந்தடையும்!
[…]
பகுத்துண்டு எனும் பண்பினை அதனிடம் கற்கவேண்டும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றது ஆதிகாலம்
மனிதன் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்யும்
பேசும் ஆற்றல் இல்லாத பிராணியாகவே கருதப்படும் !
குரங்கே மூன்று குட்டிகளானாலும் அன்புடன் வளர்க்கிறாய்
ஒன்று உன் முதுகின் பின்னும்,சிறிய குட்டியை அணைத்தும்
மற்றொன்றைத் தகப்பனிடம் பாதுகாப்பாக அமர்த்தியும்
உண்ண என்ன கிடைக்கும் என நினைத்துக் கூடி அமர்ந்துளாயா?!
*****
”ஓ மாந்தர்காள்! குரங்குச் சிலையை ஆலயத்தில் கண்டால் ஆஞ்சநேய அவதாரமென்று கன்னத்தில் போட்டுக்கொள்ளும் நீங்கள், நிஜக்குரங்குகளைக் கண்டால் அஞ்சி ஓடுகின்றீர்; மனித மனம் மந்தியைப் போல் என்று தத்துவம் பேசும் நீவிர், எமை அடக்க முந்துகின்றீர்; உம் உளம்அடக்க மறக்கின்றீர்” என்று மாந்தர்களுக்கு அறிவுகொளுத்தும் புந்திமிகு மந்தியைக் காண்கிறோம் திரு. கொ.வை.அரங்கநாதனின் கவிதையில்.
கோடையிலே இளைப்பாறக்
கூடு ஒன்று எங்களுக்கில்லை
கொட்டு மழை பெய்தால்
நனைவதைத் தவிர வழியில்லை
காட்டிலே வாழ்ந்திருந்தால்
கஷ்டமின்றி இருந்திருப்போம்
நாட்டுக்குள் வந்ததால்
நாங்கள் படும் துயரம் கொஞ்சமல்ல
சுவரின்மேலே நாங்கள்
சும்மாவே உட்கார்ந்திருந்தாலும்
கல்லால் அடித்துவிட்டு
கைகொட்டிச் சிரிக்கிறீர்கள்
குழந்தை குட்டியுடன் நாங்கள்
குடும்பமாய்த் திரியும்போதும்
வேடிக்கையும் பார்த்துவிட்டு
விரட்டவும் செய்கிறீர்கள்
பூட்டிய வீட்டினுள்ளும்
புகுந்துத் திருடும்
மனிதர்களே இருக்கும்போது
திறந்த வீட்டினுள்
திண்பண்டங்கள் நாங்கள் எடுத்தால்
தேசத்துரோகிப் போல்
தேடித் தேடி வதைக்கிறீர்கள்
ஆஞ்சனேய அம்சமென்று
கன்னங்களில் போட்டு கொள்கிறீர்கள்
அடுக்களையில் எட்டிப் பார்த்தால்
அலறி ஏன் ஓடுகின்றீர்கள்?
[…]
மனிதர்களின் மனமெல்லாம்
மந்திகள் போன்றெதென்று
தத்துவங்கள் பேசுகின்றீர்கள்
எங்களை அடக்கத்தான்
எத்தனை பேர் வருகின்றீர்கள்!
உங்கள் உள்ளிருக்கும்
ஒரு மந்தியினை அடக்க
உங்களால் முடியுமாவென்று
ஒரு முறை முயன்று பாருங்கள்
அப்புறமாய் எங்களிடம் வாருங்கள்!
*****
”குரங்குகள் கூட்டத்தோடு வாழும்; குட்டிகளை நாட்டதோடு பேணும். குரங்கின் துணையோடு தன் வாழ்க்கைத்துணையை மீட்டான் காகுத்தன் என்கிறது இராமகாதை. குரங்கு பொம்மைகளை வைத்துக் குவலயத்துக்கே நீதியுரைத்தார் அண்ணல் காந்தியார். குரங்குகள் இன்று குணங்கெட, தரங்கெட்ட மனிதர்களின் சகவாசந்தான் காரணமோ?” என்று வினவுகின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம்
*****
மனிதக் குரங்குகள் :
குரங்கின் பரிணாம வளர்ச்சி மனித இனமாம்!
டார்வின் உலகிற்குச் சொன்ன உண்மை!
தட்டிப் பறிப்பதினால், மனிதனும், குரங்கும்
ஒன்றென்று சொன்னாரோ!
தாவும் பழக்கத்தால் இரண்டும்
ஒன்றென்று சொன்னாரோ!
குரங்கின் நல்ல பண்புகளை என்றேனும்
நினைத்துப் பார்த்ததுண்டா!
குரங்குகள் கூட்டமாய் வாழும் அதன் ஒற்றுமையைக் காட்டி!
குட்டியை சேர்த்தணைத்துத் தான் திரியும்!
குட்டி பெரிதாகும் வரையில் பாசத்தைக் காட்டி!
குரங்குகள் துணையோடு, ராமன், சீதையை சிறை மீட்டார்!
அனுமன் என்ற குரங்கோ பக்திப் பெருக்காலே!
ராமர், சீதையையே தன் இதயச் சிறையில் வைத்தார்!
அண்ணல் காந்தி மகான், தீயவை அழிவதற்கு!
குரங்கு பொம்மைகளால், நீதிதனை உரைத்தார்!
ஆதிகால மனிதர்கள் கூட்டமாய் தான் வாழ்ந்தார்!
குழந்தைகள், குடும்பமென்று அன்போடு தான் இருந்தார்!
ஆதலினால் சொல்கிறேன்!
ஆதி கால குரங்குகள் நல்லவை தான்!
தரங்கெட்ட மனிதர்களைப் பார்த்துத்தான்!
குரங்குகள் குணம் கெட்டதாய் மாறியதோ!
*****
”மாந்தகுலம் தாம் பெற்ற பிள்ளைகளை மண்ணிற்கு உரமாய் வீசியெறியும் இக்காலத்தில், மந்திகளோ தம் குட்டிகளை வரமாய் வளர்க்கின்றன. ஆதலினால் தாய்மையின் தூய்மையை மந்திகளிடம் கற்பீர் மானிடரே!” என்கிறது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை.
தாய்மையே சிறப்பு…
குரங்கி லிருந்து பிறந்ததாகக்
கூறிக் கொள்ளும் மானிடரே,
தரமது குறைந்து நீங்களெல்லாம்
தாய்மையை இழிவாய் விடலாமா,
உரமாய்ப் போய்விடக் குப்பையிலே
உங்கள் பிள்ளையைப் போடலாமா,
வரமாய்க் குட்டிகளை வளர்ப்பதைத்தான்
வந்து பாரீர் எம்மிடமே…!
*****
’உன்னில் இருந்துவந்த எந்தன் செயல்களை எண்ணி நீ தலைகுனிகின்றாயோ?’ என்று குரங்கிடம் வருந்திக் கேட்கிறார் திருமிகு. சிந்து.
உன்னில் இருந்து வந்த
என்னை எண்ணித்
தலை குனிகிறாயோ?
என் செயல்களால்
உன் தலை குனிவதை
நினைத்து…
*****
”குரக்கினங்கள்கூடத் தம் உறவுகளோடு நேயமாய் வாழ்ந்திருக்க, மனிதனோ இரக்கமின்றி, பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றான். தாயின் காலடியில் சொர்க்கம் கொலுவிருக்க, அவளைப் புறக்கணித்தல் நலமாமோ?” என்று தாய்மையின் சிறப்பைத் தரணிக்கு உணர்த்துகின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.
தாய்மை
அன்பின் பகிர்வில் பாகுபாடு இல்லை
அரவணைத்துக் கொள்வதில் அவளுக்கு ஈடு இல்லை
ஒரறிவு முதல் ஆறறிவு வரை குழந்தை வளர்ப்பு அன்னையின் நிழலில்
குட்டியின் பசியாற்றிப் பசியாறும் ஒரே ஜீவன் அன்னை மட்டுமே
குழந்தையின் நலன் ஒன்றே தாய்மையின் எதிர்பார்ப்பு
குழந்தையின் புன்னகையே தாயின் பூரிப்பு
ஆதரவு தருவதாய் ஏமாற்றும் இவ்வுலகில்
அன்னையின் அன்பு மட்டுமே நிரந்தரமானது
கும்பிடும் தெய்வம் தேடிஅலையும் மானுடம்
குலங்காக்கும் தாய்மையின் நலங்காத்தல் இல்லை
குரங்கினம் தன் குட்டியின் நலம் ஒன்றைப் பேணுகையில்
குழந்தை முதல் பேணி வளர்த்த பெற்றோரைப் பேணாமல்
முதியவர் காப்பகம் சேர்ப்பது மானுட இனத்தில் மட்டுமே
காட்டுக்குள் கூடிவாழும் உயிரினக் குடும்பம்
கரம்கோத்து உறவினைக் அன்பில் மூழ்கடிக்கும்
செல்ல விளையாட்டும் கள்ளக் குறும்பும்
உள்ள மகிழ்வோடு நாளும் அரங்கேறும்
கானகம் கூத்தாட உயிரினநேயம்
வையகம் தழைக்கச் செய்தி சொல்லும்
வைப்பு நிதி தராத இன்பமதனை
தாய்மையின் அருகினில் நித்தம் பருகலாம்
ஆதலால்
தாய்மை போற்றுவோம்.
*****
”டிஜிட்டல் இந்தியாவின் சீர்கேடுகளைப் பட்டியலிட்டு, இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் கண்களையும் காதுகளையும் வாயையும் மூடிக்கொண்டிரும் மந்திகள் நாம்” என்று கனல்கக்கும் வரிகளைத் தன் கவிதையில் பொதிந்துவைத்துள்ளார் திருமிகு. லீலா.
குரங்கு பொம்மை:
ஒரு பக்கம் விவசாயப் போராட்டம்..
மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம்
அணு உலைப் போராட்டம்
மீனவர் சிறைப்பிடிப்பு..
மணல் கொள்ளை…
மழை, டெங்கு இதற்கு இடையில் சின்னத்தை மீட்பதில் இருக்கிறது இன்றைய அரசாங்கம்
இந்தியாவை விட்டு
தமிழ்நாடு பிரிந்தால் இந்தியாவே …
ஒற்றைக் காலில்
நிற்கும்… என்று அறைகூவல் விட எனக்கும் ஆசைதான்…
தேசபக்தி பற்றிப் படம் எடுக்கும் கூட்டம்…
ஒருபுறம்…
விமானவிபத்தில் இறந்த ராணுவ வீரரை மதிக்காமல் அட்டைப்பெட்டியில் சுற்றி வைத்துள்ளது மறுபுறம்…
டிஜிட்டல் இந்தியாவா மாற்ற நினைக்கும் மத்திய அரசு … இராணுவ வீரனுக்கான இறுதி மரியாதைகூட வழி இல்லாமல் தவிக்கிறது…
அரசாங்க ஊழியர்களுக்கு 20% தரும் அரசு…
ஏழைகள் அன்றாடம்
உபயோகிக்கும் பொருட்களின் விலை
உயர்த்தியுள்ளது…
தன் இனத்திற்கு ஒரு
கொடுமை என்றால்
மற்ற இனங்கள் துணிந்து போராடும்…
மனித வர்க்கம் மட்டுமே
செல்பி எடுக்கும்…
காந்தி சொன்ன
வார்த்தைகளை பின்பற்ற
அநீதி கண்டால்
கண்களை, காதுகளை, வாயும் மூடும் குரங்கு கூட்டம் யாமே.. வீழ்வதா?! வாழ்வதா?!
*****
”குரங்குகள் குடும்பத்தோடு பாசத்தைப் பகிர்ந்தபடி வாழ்கையில், மனிதன்மட்டும் அன்பைத் துறந்து அருளின்றிக் கண்டம்விட்டுக் கண்டம் போகிறான் பொருள்தேடி” என்று வேதனைப்படுகின்றார் திருமிகு. சொல்லின் செல்வி.
குரங்கின் மனமாய்
போதும் புறப்பட்டு வந்துவிடு
ஏதும் காரணம் சொல்லிவிடு
காசுக்கு ஆசைப்பட்டு
வெளிநாட்டு அடிமையாய்
வீட்டுக்கு பொருள் சேர்த்தது போதும்
அடுத்தவர் ஒன்றாய் வாழ்ந்தது பார்த்து / அழுது தவித்தது போதும்
எனக்குக் கணவனாக
பிள்ளைக்குத் தகப்பனாக
ஒரு முழு நாள் ஆனது .
ஆண்டு மூன்றாண்டுகிறது/
அப்பா எனக் கூப்பிட்டு
அழும் குழந்தையை
அள்ளி அணைக்கவா முடியும்?
அலைபேசியில்
காதலாகப் பேசினாலும்
இறுக்கி அணைக்கவா முடியும்?
ஏக்கத்தைக் கொடுக்கும் என் வாழ்க்கை
தாக்கத்தை தருகிறது தனிமையில் சிறையில்..!
குரங்குகள் கூட்டுக் குடும்பமாய்..
குரங்கின் பரிணாமம் நாமோ தனித்தனியாய்
பாசத்திற்கு ஏங்குகிறேன்
குரங்கை விட மோசமாய்..!
*****
கவிக்குலத்தின் செயல்களையும் அவற்றின் வாழ்வியலையும் மனித குலத்தோடு ஒப்பிட்டுச் சுவைபடப் பாடியிருக்கும் கவிகளை மனதாரப் பாராட்டுகின்றேன்!
******
இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…
குரங்கின் செயல் நல்வழிகாட்டும்!
பக்தியுடன் பார்த்தால் குரங்கல்ல வானரவீரன்..
……….பகவானிடம் பணிசெய்யும் பக்திச் சேவகனாம்.!
சக்தி வேண்டினதுவே சஞ்சீவி ஆஞ்சனேயன்..
……….சரணடையின் சுமையிலாது புலனடக்க எளிது.!
யுக்திசெயும் இயல்பினிலிது தந்திர மந்தியாம்..
……….வாலில்வைத்த தீயால் இலங்கையை அழித்தது.!
முக்திதரும் காகுத்தனைக் காட்டும் மாருதியாய்..
……….முன்வினை பின்வினை அகல வழிகாட்டுமாம்.!
குடும்பம் பிரிவினை பொறாமை ஏதுமில்லை..
……….கூட்டுக் குடும்பமாய் வாழுமிதன் இயல்பாகும்.!
எடுத்துச் சொல்லு மளவுக்கு இராமகாதையில்..
……….இடம் பிடித்தபெருங் குடும்பப் பேரினமாகும்.!
இடுப்பில் இறுகப்பற்றித் தொங்குமதன் குட்டி..
……….இடுக்குவழி வீழாததைக் “குரங்குப்பிடியென்பர்”.!
கடுவனின் சாதனையாம்!.சீதாப் பிராட்டியைக்..
……….காணும்வரை உண்ணா நோன்பிருந்தது வரலாறு.!
“குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்” எனும்..
……….கூற்றை உணர்த்தும் செயல்கள் பலவுண்டாம்.!
மரத்துக்கு மரம்தாவும் குரங்கின் செயல்களில்..
……….மானுடம் கற்கவேண்டும் “வாழ்வியல் பாடம்”.!
அரக்கச் செயல்கள் செய்யும் மனிதர்களையே..
……….குரங்குச் சேட்டையொடு ஒப்பிட்டுப் பேசுவர்.!
இரண்டு மனமுடன் குழப்பும் இம்மாந்தரைக்..
……….குரங்குமனம் கொண்டவர்கள் என்றே கூறுவர்.!
இன்றொரு பேச்சு நாளையது மாறிப்போச்சு..
……….என்றொரு நிலையில் “மனமொரு குரங்காம்”.!
இன்றிருக்கும் அரசியலே இதற்கு உதாரணம்..
……….இவர்கள்செயும் செயலே “குரங்குகை பூமாலை”.!
தின்று ஏப்பம்விட்ட மக்கள்வரிப் பணமெலாம்..
……….திரைக்குள் மறைக்க “இஞ்சிதின்ன குரங்காவார்”.!
மென்று விழுங்கியது போதா தென்கிறபோதில்..
……….வெகுண்டெழுவார் “கள்ளுண்ட குரங்கு போல”.!
”இடுப்பில் இறுகப்பற்றித் தொங்குமதன் குட்டி..
இடுக்குவழி வீழாததைக் “குரங்குப்பிடியென்பர்!”
ஆம், குரங்குக்குட்டி தன் தாய்க்குரங்கைக் ’குரங்குப்பிடி’யாய் இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் இயல்புடையது. இதனை ’மர்க்கட (குரங்கு) நியாயம்’ என்பார் வைணவ வடகலை மரபை வளர்த்த வேதாந்த தேசிகர். இதன் பொருளாவது… உயிர்கள் தாமே வலியச்சென்று இறைவனை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
மாந்த குலத்தின் முன்னோராக அடையாளப்படுத்தப்படும் குரங்குகளின் செயல்களில் வேடிக்கையும் உண்டு; விபரீதமும் உண்டு. குரங்கு கையில் பூமாலை கிடைத்துவிட்டால் போதும்…அதனைப் பிய்த்தெறிந்த பின்பே ஓயும்; கள்ளைப் பருகிவிட்டு அதுபோடும் ’உண்டாட்டு’ ஏனையோர்க்குத் தருவதோ பெருந் திண்டாட்டம்!
நாட்டில் அதிகாரத்திலிருக்கும் பலரின் செயல்கள் கள்ளுண்ட குரங்கின் செயல்களாகவே காட்சியளிக்கின்றன என்று நடப்பியலைத் தன் பாட்டில் நயமாய்ச் சொல்லியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
ஊக்குவிக்கும் வகையில் நல்லதொரு வாய்ப்பளித்து வரும் வல்லமை ஆசிரியர் திருமதி பவளசங்கரிக்கும், கவிதைக்குரிய சிறப்புகளை சீராக ஆய்ந்து, தொடர்ந்து தனது கருத்துக்களையும் கவிதையோடு எடுத்துச்சொல்லி, சிறப்பான கவிதைக்குப் பாராட்டு நல்கிவரும் திருமதி மேகலா ராமமூர்த்திக்கு அவர்களுக்கும், இம்முறை படம் தந்துதவிய சத்யாவுக்கும், படத்தைத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் அனைவருக்கும் நன்றி.
வல்லமையில் வெற்றிகரமாக தொடர்ந்து 135 வது கவிதை அரங்கேறி கவிதைப்போட்டிக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், என்னுடைய கவிதை சிறந்த கவிதையாக தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
உண்மையில் நானொரு ஆஞ்சனேய பக்தன், இந்தப் படத்தைப் பார்த்தவுடனே அனுமனின் வீரதீரச் செயல்களே என் நினைவுக்கு வந்தது. அதனால் முதல்வரியிலேயே அதைக்குறிப்பிட்டு விட்டேன். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், குரங்கை விலங்காகப் பார்க்காமல், பக்தியுடன் பார்த்ததால், இக்கவிதையை மிகக்குறுகிய நேரத்தில் அதாவது ஒரு அரைமணி நேரத்தில் எழுதிவிட்டேன்.
நேரத்தைக் கணக்கிடாமல், பாராட்டைக் கருதாமல், தொடர்ந்து ஒவ்வொரு முறையும், கவிதைப் போட்டியில் பங்கேற்றுவரும் அனைத்து கவிஞர்களுக்கும் எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் பெருவை பார்த்தசாரதி