Author: மேகலா இராமமூர்த்தி

  • படக்கவிதைப் போட்டி 14-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. வனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்தை  (பட்டுப்புழுவின் கூடுகள் இவை)  போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமை இதழின் நன்றிகள்.

    10609031_716498245161097_1832540875_n

    பட்டுநூலைச் சுரந்துதரும் பட்டுப்புழுவைக் கொன்றே மனிதர்கள் அந்நூலைச் சேகரிக்கின்றனர் என்று அறியும்போது மனம் துயரத்தில் துடிக்கின்றது.

    பட்டுநூலைத் தந்துவிட்டுப்
    பட்டுப்போகும் புழுவே  என்
    பளபளக்கும் பட்டுக்குள் உன்
    மரண ஓலம் கேட்கின்றதே! என்று அவற்றின் தியாகத்தை நம் உதடுகள் வேதனையோடு முணுமுணுக்கின்றன.

     ***

    சரி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் நெஞ்சம் தொ(சு)டும் கவிதை வரிகளைப் படித்துவருவோம் முதலில்!

    விருப்பமில்லாவிடினும் வயிற்றுப் பிழைப்புக்காய்க் கூட்டுப்புழுக்களை வளர்க்கும் தானும் ஒரு கூட்டுப்புழுவே எனக் குமுறும் மாதரசியின் எண்ணவோட்டத்தைப் பதிவுசெய்திருக்கிறார் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர்.

    ரெண்டு மாசகாலமா
    காவலிருந்து கண்ணுல
    வெச்சு வளர்த்த
    வெண்பட்டுக் கூடிது.!
    […]
    கருவுக்குள் உறங்கும் உயிரை
    நானறிய மாட்டேனா?
    சிறகுகள் முளைக்குமுன்னே
    சூரியனைக் காணுமுன்னே
    கூண்டோடு கைலாசம்..
    அனுப்ப எனக்கும்
    நெஞ்சம் ஒப்பவில்லை..!

    மனித வயிறு இல்லையென்றால்
    கூடைக்குள் கூறு கட்டி
    வெந்நீரில் வேகப் போடும்
    வேதனை ஏதுமின்றி
    கூட்டுப் புழுக்களிதும்
    சுதந்திரமாய்ப் பறந்திருக்கும்..!
    […]

    பாவங்கள் எண்ணாத
    மலட்டு மனங்கள்..!
    வருமானங்கள் எண்ணியே
    பழகிக் கொல்லும்..!

    பாவிதான் நானுமிதில்
    மீளாது மாட்டிக்கிட்டேன்
    கூட்டுப்புழுக்களாய்
    கூடைக்குள் நெளியும்
    உயிர்கள் பலியாக..!

    காய்ந்த வயிறும்
    காலித் தட்டுமே
    இந்நிலைக்கு
    என்னைத் தள்ள
    உள்ளுக்குள் வேதனையும்
    உதட்டளவில் புன்னகையும்
    சுமந்து நெளியும்
    நானும்கூடக் கூட்டுப்புழு..!

     ***

    ’இரவுகள் என்னைப் பயமுறுத்துவதில்லை; ஜன்னல் கீறி உள்ளே நுழையும் பகலின் அத்துமீறல் என்னால் மன்னிக்கமுடியாதது’ என்று இங்கே குரல்கொடுப்பது கூட்டுப்புழுவா? இல்லை….புன்னகைக்கும் மாதரசியா? என நம்மை யோசிக்கவைக்கிறார் திரு. கவிஜி.

    …மெழுகுவர்த்தி அற்ற 
    இரவுகள் கூட
    நிலவுக்கு அழைத்துச் 
    செல்லும் 
    யதார்த்தங்களில் ஒன்று…

    கீற்றொளியென 
    ஜன்னல் கீறும் பகலை நான் 
    மன்னிப்பதில்லை
    அது ஓர் அத்துமீறல்…
    […]
    இரவுகளின் கைகளில் 
    சிறு குழந்தையென
    பசி மறக்கும் இறுமாப்புடன் 
    நீண்டு கிடக்கிறது 
    எனது நீட்சிகள்…

    அங்கே பல்லாங்குழியோ 
    கோலி குண்டோ 
    விளையாடும் 
    இரவின் நிழலுக்குள் 
    நான் காலம் கடந்து 
    பின்னோக்கி செல்கிறேன்…

    அப்போது 
    தலை தடவிச் 
    சிரிக்க எப்போதும் 
    பகலை விரட்டிய 
    ஒரு பின்னிரவு 
    காத்திருக்கிறது…
    எனக்காக…

    ***

    பட்டுநூல் விற்றுப் படிக்கவைத்து மகளை மருத்துவராக்கிவிட்டதில் மகிழும் அன்னை உள்ளத்தைக் காட்டுகிறார் திரு. ஹரீஷ்.

    பூச்சி தந்த நூலெடுத்துப்
    பெரும்பாடு பட்டு வித்து
    வாயக் கட்டி வாழ்ந்து பழகி
    வயத்துப் பாட்டப் பாத்தாச்சு
    மனசு போலப் படிச்சிடத் தான்
    மவ அவளும் ஆசப்பட்டா

    வாழ்க்கைக்கே வழி இல்ல
    வக்கணையாப் படிப்பெதுக்குன்னு
    கேள்வியேதும் கேக்காம
    கெழவி நானும் தலையசைச்சேன்
    […]
    தங்கம் போலப் பொண்ணு மவ
    டாக்டராவே ஆகிப்புட்டா
    சங்கடமெல்லாம் ஓடிப் போச்சு
    சந்தோசம் இனி நிரந்தரமாச்சு
    மூஞ்சியில பொங்குது சிரிப்பு
    இனி கவுரதையாச்சு எங்க இருப்பு.

    ***

    தான் கட்டிய பட்டுக்கூடு தனக்கே சிறைச்சாலை ஆனதை எண்ணிச் சீறும் பட்டுப்பூச்சியின் கோபத்தைப் பாட்டாக்கியிருக்கிறார் திரு. சாயாசுந்தரம்.

    இழை இழையாய்
    கட்டப் பட்டக் கூட்டுக்குள்
    எப்போது நான்
    சிறைப்பட்டேன் என எப்படி
    யோசித்தும் தெரியவில்லை எனக்கு …….

    கேட்பதற்கு ஆயிரம்
    கேள்விகள் இருந்தும்
    கேட்கவே கூடாது என
    எந்த இழையால்
    கட்டப் பட்டது என் நாவு …..

    முளைத்த சிறகுகள் விரித்து
    பறக்க இயலாமல்
    அடைத்து வைத்து என்னை
    அடையாளம் இழக்கச்செய்வது தான்
    அன்பென்று சொன்னால் …..
    அறுத்துக் கிழிக்கவா

    அத்துமீறவா—-இல்லை
    அகப்பட்டுக் கொண்டது தான்
    சாஸ்வதம் என
    ஆசுவாசப்படுத்திக் கொண்டு
    […]
    நேரம் வந்தால் செத்துப் போவதா? 

    ***

    மரத்தை வெட்டிச் சாலைகள் அமைத்ததிலும், குளத்தைத் தூர்த்துக் குடியிருப்புக்கள் கட்டியதிலும் சமுதாயத்தின் வாழ்வாதாரத் தேவையிருக்கின்றது. ஆனால் பகட்டுக்கான பட்டிற்காகப் பட்டுப்புழுவைக் கொல்வதில் பாவத்தைத் தவிர வேறென்ன இருக்கிறது? என வினாத்தொடுக்கிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    நீண்ட நெடிதுயர்ந்த மரங்களை
    நெடுஞ்சான் கிடையாய் வீழ்த்தி
    நெடுஞ்சாலைகள் அமைத்தோம்
    நேரத்தை மிச்சப்படுத்த
    […]
    நீர் தேக்கும் மையங்களாம்
    ஆறு குளம் ஏரியென
    அத்தனையும் தூர்த்து
    அடுக்குமாடிகள் கட்டினோம்
    இனப் பெருக்கத்தை எதிர் கொள்ள
    […]
    அத்தனை அழித்தல்களும்
    சமூக குறிக்கோளொன்றைச்
    சார்ந்திருந்தது

    ஆனால்
    பட்டுப் புழுக்களே
    உங்களை பலியிடுவது
    பணத்தின் பலம் காட்டும்
    பகட்டிற்காக மட்டுமே…
    ஆனால்
    அந்தப் பாவத்தில்
    எனக்கேதும் பங்கில்லை
    ஏனென்றால்
    பட்டாடை அணிய 
    பணவசதி எனக்கில்லை
    என் புன்முறுவலதை
    உங்களுக்கு புரியவைத்திருக்கும்!

     ***

    தன்னுழைப்பில் முன்னேறிய பெண்ணின் பெருமிதம் கூறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பட்டுப் பூச்சி கூடுகட்டிப்
         பாது காத்தது பட்டுநூலை,
    பட்டு நூலைச் சேர்த்தவள்தான்
         பருத்தி நூலின் ஆடையிலே,
    கெட்டிட வில்லை, வாழவைத்தாள்
         கடின உழைப்பில் பிள்ளைகளை,
    மட்டிலா மகிழ்வை முகங்காட்டும்
         மங்கை வாழ்வை வென்றவளே…!

     ***

    பருத்திப்பஞ்சை நெய்து உடுத்தும் எளிமையான ஆடைகளே ஏற்றமிக்கவை; பட்டாடைகளுக்கு ஏது அந்த மிடுக்கு? எனக் கேட்கின்றார் திருமிகு. துஷ்யந்தி.

    …பட்டுடுத்தி செல்வாக்காய்
    இருந்ததில்லை நாமிங்கே
    பருத்தி நூலில் செய்யுமாடை
    நிகரில்லை பட்டுக்கே…!

    பத்துதரம் துவைத்த போதும்
    பதம் குறையா நூலிதே…
    பாட்டன் பூட்டன் காலந்தொட்டு
    நமக்கு கைவந்த கலையிதே…!

    சிட்டுபோல சேர்த்தெடுத்து
    கொண்டுவந்த பருத்திப் பஞ்சிதே
    செல்வாக்காய் நம்நாட்டை
    உயர்த்தும் ஒரு தொழிலிதே….!

    ***

    ’பட்டு’ எனும் சொல்லையே இறுதிச் சொல்லாக்கிப் பாவையொருத்தியின் வாழ்க்கையைப் ’பா’வாக்கியிருக்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    வாலிபத்துக் காலந்தொட்டு பட்டுப்பூச்சி 
    ==வளர்த்தெடுக்க ஆசைப்பட்டு பழக்கப்பட்டு  
    தாலிகட்டி வந்தபின்னும் தொடரப்பட்டு 
    ==தனிமரமாய் ஆனபின்னும் துணையாய்பட்டு 

    விட்டுப்போன கணவனாலே வெறுக்கப்பட்டு 
    ==வீதியிலே அனாதைபோல விடவேபட்டு 
    பட்டுப்போன வாழ்க்கைதனை மீட்கப்பட்டு…

    ***

    பட்டுப்புழுவைக் கொல்வதால் ’தீட்டு’ப்பட்ட அந்தப் பட்டை உடுத்துதல் தவிர்மின் பெண்டிர்காள்! என நல்லுரை நவில்கிறார் திருமிகு. புனிதா கணேசன்.

    கூட்டுப் புழுவின் பட்டு
    கூட்டைப் பிரித்து உயிர்க்
    கூட்டை வதைக்கும் கோரம்
    பட்டுப் புழுவின் வாழ்வு ..
    வெட்டிப் புதைத்துத் தேடும்
    தீட்டுப் (பட்ட) பட்டை நாடும்
    வீட்டுப் பெண்டிர் கேண்மீர்
    கூட்டுப் புழுவை வதைத்து
    பட்டுச் சீலை சூட நாட்டமேன்?
    விட்டு விடும் உயிர் பிழைக்க…

    ***

    தம் உமிழ்நீரே தனக்கு எமனானதை எண்ணி வருந்தும் பட்டுப்புழுவின் சோகத்தைப் பிழிந்து தந்திருக்கின்றார் திருமிகு. தமிழ்முகில்.

    புழுவாய் ஊர்ந்த நானும் எந்தன்
    உமிழிக் கூட்டுள் அடைக்கலமானேன் !
    எந்தன் உலகம் சுருங்கிய போதும்
    ஆசைக் கனவு சுருங்கவில்லை !
    ஆனால்…..
    ஏனோ இறைவா ! ஏனிந்த வேதனை !
    எதிர்பாரா நொடியில்
    வெந்நீரில் வெந்து மாண்டேன் !
    என் உமிழ்நீரே எனக்கு
    எமனாகிப் போனதே !

    ***

    வறுமையிலும் செம்மையாய் வாழும் கண்ணியமான பெண்மையை நமக்கு அறிமுகப்படுத்தி, இல்லார்க்கு உதவுவதே நல்லறம் என்பதையும் எடுத்தியம்புகிறார் திரு. சுரேஜமீ.

    …மானுடம் வாழ்வல்ல
     மனிதம் வாழ்ந்திடுங்கள்
    மண்ணில் நிலைபெறவே
     மாற்றவர் வணங்கிடவே
    மாதவம் செய்திட்ட
     மலர்கள் சொல்லுமிதை
    மங்கை யான்பெற்ற
     மண்ணின் தவமிதுவே!

    மலர்கள் மட்டுமல்ல
     மனதும் வெண்மைதான்
    மதியொளி ஒத்தவொரு
     மழலையின் சுகமிதுதான்
    மாண்பாய் வாழ்வதில்தான்
     மண்ணும் பயனுறுமே
    மகிழ்ச்சிக் கடலினிலே
     மல்லிகை மணமுடனே!
    […]
    இதயம் உணரட்டும்
     இல்லார் துயரத்தை;
    இருப்பவர் கொடுக்கட்டும்
     இன்முகம் பார்க்கட்டும்
    இல்லை வருமையென
     இனிமை மலரட்டும்
    இயன்றவரை செய்வோம்
     இனியொரு விதிசெய்வோம்!!

    ***

    பட்டுச்சேலை நெசவிற்காக ஆயிரமாயிரமாய்ப் பட்டுக்கூடுகள் அழிவதைக் கண்டாலும், பட்டுடுத்தும் மக்களின் ஆசை அழியாது என்கிறார் திருமிகு. வானதி வேதா. இலங்காதிலகம்.

    ஒரு பட்டுச் சேலை நெசவிற்கு
    ஒரு 4000 – 5000 பட்டுக் கூடு
    ஒரு புறம் கொலை, அழிவு, கொடுமை!
    மறுபுறம் அழகிய ஆடை புதுமை!
    பலர் சீவனம், வருவாய் பிழைப்பு!
    எவர் பட்டை வேண்டாம் என்பார்!
    சிலர் பட்டு அணிவதே இல்லை!
    சிந்தனைக்குரிய சிறு கைத்தொழிலே!

     ***

    பட்டுப்புழுவிடம் தன் அவலக் கதையைச் சொல்லிப் புலம்பும் மங்கையின் சோகத்தைக் கவிதையாக்கியுள்ளார் திரு. ரோஷான் .ஜிப்ரி.

    பட்டுப் புழுவே,பட்டுப் புழுவே
    என் பாட்டினை நீ அறிவாய்
    கொட்டும் மழையிலும்
    வெட்ட வெளியிலும்
    என் ஏக்கத்தை நீ உணர்வாய்
    பட்டுப் போகாது தினம்
    வாழ்வை துளிர்ப்பிக்க
    பட்டு நூல் செய்கின்றேன்-பிறர்
    கெட்டுப் போகாமல்
    தேகம் மறைத்திட
    ஆடை நான் நெய்கின்றேன்
    கொட்டன் உடுதுணி தேடி அலைபவர்
    குறைகளை களைகின்றேன்
    கூழுக்கு மாரினை அடித்த படி நான்
    நாளும் அலைகின்றேன்.

    ***

    ஒருவரின் மகிழ்ச்சியில் இன்னொருவரின் வீழ்ச்சி ஒளிந்திருக்கக் காண்கிறோம். இதுதான் வாழ்வின் நியதி என்கிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    கொடுத்து கொடுத்தே
    சிவந்தன கர்ணனின் கரங்கள்
    நீயும் கூட நூலிழை கொடுத்தே
    சிவப்பு நிறம் கொண்டாயோ
    மல்பரி இலைகளில் வளர்ந்து
    மற்றவர்களுக்காக உயிர் விடுகிறாய்
    இது யார் குற்றம்?
    படைத்தவனின் குற்றமா இல்லை
    பட்டுப்புடவைக்கு ஆசைப்பட்ட
    மகளிரின் குற்றமா?இல்லை இல்லை
    இறைவன் போட்ட கணக்கு பாதி வழியில்
    இறப்பு,ஒருவரின் துன்பம்
    மற்றவரின் லாபம்
    இது இறைவன்வகுத்த நியதி
    இதில் வருத்தம்  ஏன்  அமைதி

    ***

    அருமையான கவிதைகளால் கவனம் ஈர்த்த அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் கண்டுவருவோம்!

     மனிதர்களே! உங்களுக்கு நியாயம் வேண்டுமென்றால் மேடை போட்டு முழக்குகின்றீர்! நீதிமன்றம் செல்கின்றீர். ஆனால் பேச வாயில்லாத ஓர் சீவனைச் சித்திரவதை செய்து கொல்கின்றீரே? நீதி மனிதர்களுக்கு மட்டுந்தானா…எங்களுக்கில்லையா? என்று ஏக்கத்தோடு வினவி, ’நாங்கள் பஞ்சுப் பொதிகளல்ல! வெந்து கருகிய பிஞ்சுக்கனவுகள்’ எனும் பட்டுப்புழுவின் கோபம் கலந்த வேதனைக்குரலைப் பிரதிபலித்த கவிதையொன்று நெஞ்சைப் பதைக்க வைத்தது.

    அக்கவிதை…

    பட்டுப்பூச்சி நியாயங்கள்

    உனக்குத் தெரியுமா?
    உன் தோள் சாய்ந்திடும் பட்டு
    உன் அடக்குமுறைகளின் வெளிப்பாடு

    உயிரைப் பிழிந்து நூலெடுத்து
    கனவுக் கோட்டையை வேய்ந்தது
    கல்லெறிந்துக் கலைக்கவா?

    இங்கே கொட்டி வைத்துள்ளது
    பஞ்சுப் பொதிகள் அல்ல
    வெந்து கருகியப் பிஞ்சுக் கனவுகள்

    மாய்ந்து மாய்ந்து கட்டிய
    கருவறையே
    அன்பின் சமாதி ஆனால்?
    வெற்றுத் தட்டில் வேதனையும்
    பஞ்சுப் பெட்டகத்தில்
    பட்டுப் பூச்சிகளின் வெந்த ஆன்மாக்களும்
    மட்டுமே மிஞ்சும்!

    இக்கவிதையின் ஆசிரியர் திரு. கனவுதிறவோனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்கிறேன்.

    ***

    ’பட்டுப்புழுவும் ஓர் படைப்பாளியே! படைப்பாளிக்குச் சமூகத்தில் மதிப்பில்லை; பட்டுப்புழுவும் அதற்கு விதிவிலக்கில்லை!’ எனும் உண்மைநிலையைப் பதிவுசெய்திருக்கும் திரு. எஸ். பழனிச்சாமியின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்ச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

     அக்கவிதை…

    படைப்பாளி!

    மனதுக்கு பிடித்த கலரில்
    மயில்கழுத்து வண்ண பார்டரில்
    பட்டுப்புடவை வாங்கத்தான் ஆசை
    மகிழ்ச்சிக் கனவில் திளைக்கும்
    அந்த மங்கைக்குத் தெரியுமா 
    புடவை நெய்ய நூல் தந்தது 
    மல்பெரியைத் தின்று இங்கே
    தான்வாழவே நூலில் வீடுகட்டிய
    புழுவும் ஒரு படைப்பாளி என்று

    படைப்பாளிக்கு என்றும் மதிப்பில்லை
    பட்டுப்புழுவும் அதற்கு விலக்கில்லை
    மல்பெரியைத் தின்று பட்டுநூல் 
    பிறப்பிக்கும் பட்டுப்புழுவைப் போன்றே
    படைக்கும் மனிதர்களும் பாரினிலுண்டு
    படைப்புதனை வாங்கி விற்கும் 
    கெட்டிக்கார வியாபாரி மட்டும் 
    பணம்தனை ஏராளமாய் குவிப்பதுண்டு

    பட்டுப்புழு கடவுள் அருளால்
    யோசிக்கும் சக்தி பெற்றால்
    மறுகணமே அது மல்பெரியைத்
    தின்னக்கூட காசு கேட்கும்
    தான் படைக்கும் நூலுக்கு
    விலை சொல்லியே விற்கும்
    பெரும் பணம் சேர்த்த
    பிஸினஸ்மேனாய் அது இருக்கும்
    படைப்பாளியே நீயும் யோசி!

    ***

    போட்டியில் கலந்துகொண்ட அனைத்துப் படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுக்கள்!

     

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    இங்கிலாந்தின் இணையற்ற சிந்தனையாளர் – பெர்ட்ரண்ட் ரசல் (Bertrand Russell)

    Bertrand_Russellபுகழ்பெற்ற தத்துவவாதி, ஏரணவியலர்(தருக்கவாதி), கணிதவியலாளர், சமூகச் சீர்திருத்தவாதி எனப் பன்முகங்கள் கொண்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் ஆர்தர் வில்லியம் ரஸல் ஆவார். அவருடைய பகுப்பாய்வுத் தத்துவவியல் (analytical philosophy) 20-ஆம் நூற்றாண்டில் சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தையும் புரட்சியையும் தோற்றுவித்தது எனில் மிகையில்லை.

    பிரிட்டனிலுள்ள மேட்டுக்குடியினரிடம் பெரும் செல்வாக்குக் கொண்ட வளமான குடும்பமொன்றில் மே 18, 1872-இல் பிறந்தார் பெர்ட்ரண்ட் ரஸல். அவருடைய தாய் தந்தையர் இருவருமே முற்போக்குச் சிந்தனைகள் உடையோர். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், அருமை அன்னையின் அன்பைத் தொடர்ந்து பெறமுடியாத வகையில் ரஸலின் வாழ்வில் விதி குறுக்கிட்டது. ஆம்! தன்னுடைய இரண்டாவது வயதிலேயே டிப்தீரியா நோய்க்குத் தாயைப் பலிகொடுத்த ரஸல், தன் இளமைப் பருவத்தைப் பாட்டி வீட்டில் கழித்தார். அதனால்தானோ என்னவோ, அவர் பாட்டிக்குப் பிடித்த விவிலிய வாசகமான “கும்பலைப் பின்பற்றிப் பிறருக்குத் தீங்கு செய்யாதே!” என்பதே பின்னாளில் அவருடைய தாரக மந்திரமாயிற்று!

    தன் இளமைப்பருவத்தைப் பெரும்பாலும் தனிமையிலேயே கழிக்கவேண்டிய அவலநிலை ரஸலுக்கு நீடித்ததால், தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி அவருக்குத் தலையெடுத்திருக்கின்றன. அத்தருணங்களிலெல்லாம் தன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தவை ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் படைப்புக்களே என்று தன் சுயசரிதையில் ரஸல் குறிப்பிடுவது, ஷெல்லியின் ஆளுமையை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.

    பள்ளிக்கல்விக்குப்பின், கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் கணிதம், தத்துவம் ஆகியவற்றை விருப்பப் பாடங்களாகப் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார் ரஸல்.

    தன் வாழ்நாள் முழுவதுமே அரசியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்த பெர்ட்ரண்ட் ரஸல், போருக்கு எதிரான புரட்சியாளராகவும் (anti-warist), முதலாளித்துவத்தை முற்றும் எதிர்ப்பவராகவும் (anti-imperialist) திகழ்ந்தார். அவருடைய எண்ணங்களும் எழுத்துக்களும் இடதுசாரிச் சிந்தனையாளராக அவரை அடையாளப்படுத்தினாலும், தன்னை முழுமையான பொதுவுடைமைவாதி என்று கூறுவதற்கில்லை என்று அவரே குறிப்பிட்டிருப்பது இங்கே எண்ணத்தக்கது.

    1896-ஆம் ஆண்டு தன்னுடைய அரசியல் ஆய்வு நூலான ‘ஜெர்மானிய சமுதாய மக்களாட்சி’யைப் பதிப்பித்து வெளியிட்டார். 1905-ஆம் ஆண்டு ’மைண்ட்’ எனும் தத்துவ இதழில் இவருடைய ‘ஆன் டினோட்டிங் (On denoting) எனும் புகழ்பெற்ற கட்டுரை வெளியானது. 1903-இல் கணிதக் கோட்பாடுகள் (principles of mathematica) என்ற நூலையும், 1910-இல் ’கணித அணுகுமுறை’ என்ற மற்றொரு நூலையும் வெளியிட்டார்.

    1914—ஆம் ஆண்டு தொடங்கிய முதல் உலகப்போரை (World War I) எதிர்த்ததால் அவர் சிறைசெல்ல நேரிட்டது. அதற்காக அவர் மனந்தளரவில்லை. போருக்கு எதிரான அவருடைய சிந்தனைகளிலும் மாற்றமில்லை. 1939-இல் மீண்டும் தொடங்கிய இரண்டாம் உலகப்போரையும் (World War II) அவர் கடுமையாக எதிர்த்து அதற்குக் காரணமாயிருந்த ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருக்கு எதிராகப் பிரசாரங்கள் செய்தார்.

    தன்னுடைய சொந்த வாழ்வில் பல்வேறு சிக்கல்கள், தொடர் மணமுறிவுகள் என்று தோல்விகள் ஒருபக்கம் இருந்தாலும் அதன்காரணமாய் அவருடைய எழுத்துப்பணிகள் முடங்கிப்போகவில்லை. தொடர்ந்து பல்வேறு நூல்களை எழுதிக் குவித்தார். அவருடைய மேனாட்டுத் தத்துவத்தின் வரலாறு (History of Western Philosophy) பரபரப்பாக விற்பனையாகிப் பணமழையைக் கொட்டச் செய்தது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1950-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.

    தருக்கவியல், அறிவியல், மொழியியல், கணிதம் எனப் பல்துறைகளில் தொடராய்வுகள் செய்து நூல்கள் எழுதி வெளியிட்ட ரஸல், இறையியல் குறித்தும் தன் கருத்துக்களை எவ்வித ஒளிவுமறைவுமின்றித் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கின்றார். இறைநம்பிக்கையைப் பொறுத்தவரைத் தான் நாத்திகனும் அல்லன்; ஆத்திகனும் அல்லன்; கடவுளைப்பற்றியே கவலைப்படாதவன் (Agnostic) என்று கூறியிருக்கிறார் அவர்.

     இன்றளவும் பிரபலமாகத் திகழ்ந்துவரும் அவருடைய கிறித்துவ இறையியல் மறுப்பு நூலான ‘நான் ஏன் ஒரு கிறித்துவன் இல்லை? (Why I am not a Christian?) எனும் நூலில் அவர் முன்வைக்கும் கருத்துக்களாவன:

    ”மதம், முக்கியமாக அச்சத்தின் மேல் உண்டாக்கப்பட்டதுதான் என எண்ணுகிறேன். அதன் ஒரு பகுதி, நமக்கு தெரியாதவற்றைப் பற்றிய நம் அச்சம்; மற்றொரு பகுதி, நம் பக்கத்திலேயே ஓர் சகோதரன் இருந்து நம் துக்கங்களிலும், துயரங்களிலும் ஆதரவு கொடுப்பதுபோன்ற ஓர் உணர்வு! ஒரு நல்ல உலகமானது அறிவு, கருணை, திடமனம் இவற்றை வேண்டுகிறது. அது கடந்த காலத்தின் மேல் பச்சாதாபமுள்ள புலம்பல்களையும், நெடுங்காலத்திற்குமுன் அறிவற்றவர்கள் சொன்ன வார்த்தைகளால் சிறைப்படுவதையும் விரும்பவில்லை”

    அணுஆயுதத் தடையில் தொடர்ந்து ஆர்வம் காட்டினார் ரஸல். 1955-ஆம் ஆண்டு அணுகுண்டுப் பயன்பாட்டைக் கைவிடுவதற்கான ரஸல்-ஐன்ஸ்டைன் பிரகடனம் பதினொரு அணுஇயற்பியலாளர்களின் உடன்பாட்டுடன் கையெழுத்தானது.

    தன் வாழ்நாளின் கடைசிவரைத் தன் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளாத மனவுறுதியுடன் வாழ்ந்த பேரறிஞர் ரஸல், பிப்ரவரி 2, 1970-இல் மறைந்தார். அவருடைய விருப்பப்படியே அவர் உடல் எவ்வித மதச் சடங்குகளுக்கும் உட்படுத்தப்படாது எரிக்கப்பட்டது.

    இங்கிலாந்தின் இணையற்ற சிந்தனையாளரான ரஸல், “எல்லாவிதமான மூடப்பழக்கங்களுக்கும், கொடுமைகளுக்கும் பிறப்பிடமாயிருப்பது அச்சமே; அத்தகைய அச்சத்தை வெல்வதே அறிவின் தொடக்கமாகும்” என்று கூறியிருப்பது நாம் எண்ணிப்பார்க்க ஏற்றது. எனவே அச்சத்தை விடுத்து அறிவைத் துணைகொள்வோம்!

    ***

    கட்டுரைக்கு உதவிய தளங்கள்:
    http://en.wikipedia.org/wiki/Bertrand_Russell

    http://www.brainyquote.com/quotes/authors/b/bertrand_russell.html
    http://www.britannica.com/EBchecked/topic/513124/Bertrand-Russell

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 13-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் போட்டிக்கான படத்தை எடுத்துள்ள திரு. பாபு ராஜ், இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் ஆகியோருக்கு எங்கள் நன்றி!

    little boy

    மரக்கிளையில் குறும்பு கொப்பளிக்க அமர்ந்திருக்கும் இச்சிறுவனின் இதழ்களில், வெளிவரத் துடிக்கும் முறுவல் ஒன்று ஒளிந்திருக்கக் காண்கின்றேன். கணினி விளையாட்டுக்களே கதியென்றாகிவிட்ட இன்றைய நகரப் பிள்ளைகள் முற்றும் தொலைத்துவிட்ட இயற்கையோடு இயைந்த இனிய வாழ்க்கை இச்சிறுவனுக்காவது வாய்த்திருப்பதை எண்ணி நம் மனமும் குழந்தையாய்க் குதூகலிக்கின்றது.

    அன்னையைப்போல் தன் கிளைக்கரங்களால் இச்சிறுவனை அணைத்திருக்கும் இம்மரத்திற்குத் தாழ்த்துகிறேன் என் சிரம்!

    வல்லமை வாய்ந்த நம் கவிஞர்களுக்கு இப்படம் சிறந்ததோர் கற்பனைக்களம் அமைத்துத் தந்திருப்பதை அவர்களின் படைப்புக்கள் உறுதி செய்கின்றன.

    இனி, போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் சிறப்பான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ள கவிதை வரிகளை முதலில் பார்த்துவிடுவோம்.

    ***

    யானையாகவும், ஒட்டகமாகவும், பல்வேறு வாகனங்களாகவும், படுக்கும் மெத்தையாகவும் தனக்குத் திகழும் மரத்தைப் போற்றும் சிறுவனை நம் கண்முன் காட்சிப்படுத்தியுள்ள திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரின் வரிகள்…

    ஒய்யார ஒட்டகமும் நீ
    பறக்கும் குதிரையும் நீ தான்
    அடி சறுக்காத யானையும் நீ
    பஞ்சு மெத்தையும் நீ தான்..!

    ஓடும் பஸ்ஸும் நீ தான்
    நான் ஓட்டும் காரும் நீ தான்
    வேகமெடுக்கும் பைக்கும் நீ
    உன் முதுகிலேறி ஓட்டுவேன் நான்..!

    இங்கிருந்தே நாம் போய் வரலாம்
    டெல்லி மும்பாய் கொல்கத்தா
    சுற்றிப் பார்ப்போம் சந்தோஷமா

    வாழ்நாள்பூரா உன் நிழலில் தான்
    காத்திடுவேன் உனை உயிர் போல்தான்
    நாளை நான் கூட தாத்தாவாகலாம்
    நீயும் என் பேரனை இது போல் சுமக்கலாம்..!

    ***

    குறும்புகள் பல செய்து மரத்தின் காவல்காரனிடம் அகப்பட்டுக்கொண்டு விழிக்கும் சிறுவனின் நிலையைக் குறும்புடன் கூறும் திரு. ஜெயபாரதனின் வரிகள்…

    சிந்தனைக்கு பள்ளிக்குச் செல்லாமல் 
    துள்ளி  விளையாடும் 
    கள்ளன் அவன்
    கோலிக் குண்டு ஆடும் 
    பாலன் அவன்
    கண்ணன் அவன் என்று 
    கவி பாடினான்
    களிப்புடன் பாரதி ! அவன் 
    திருவிளையாடல்
    பெரிய புராணம் !
    பள்ளிக்குப் போவாது  
    மரமேறல் !
    மாங்கனி திருடல் !
    இன்று
    அகப்பட்டுக் கொண்டான்
    சுட்டிப் பயல் !
    விழிப்பதைப் பார் !
    காவல் காரன் கீழே
    கம்புடன் !

    ***

    மரத்தை வைத்தே, பொருள்பொதிந்த வாழ்வியல் நீதியை இந்தச் சுட்டிப் பையனுக்கு உணர்த்தும் திரு. கனவு திறவோனின் வரிகள்…

    மரத்திற்குக் கிளைகள் பலவுண்டு
    ஆனால் தண்டு ஒன்றுதான்
    உயரப் போனதும் எதிலும் அமரலாம்
    ஆனால் உயரப் போக
    வழுக்கும் தண்டு
    வசப்படாமலும் போகலாம்!
    மரத்தைத் தாங்கமட்டும்
    விழுதுகள் அல்ல
    ஏற கைப்பிடியும் அது தான்
    என்றுணர்ந்ததால்
    நீ உயரத்தில்!

    கிளைகளுக்கிடையில்
    உன் இருக்கை
    தெம்பைத் தருகிறது
    […]
    மரக்
    குரங்கு விளையாட அல்ல
    உலகைப் பார்க்க

    ***

    ’மரங்கள் வளர்த்து வையம் காப்போம்!’ எனும் ஆக்கபூர்வமான கருத்தை வலியுறுத்தும் திரு. செண்பக ஜெகதீசனின் வரிகள்…

    உயர்ந்த மரத்தினில் ஏறிநின்றே
    உலகம் பார்க்கும் சின்னவனே,
    பயிராய் இதனை வளர்த்திட்ட
    பாட்டனை என்றும் மறவாதே,
    உயிராய் மரங்களைக் காக்காமல்
    வெட்டிச் சாய்ப்பதை விரும்பாதே,
    இயன்ற வரையில் மரம்வளர்ப்போம்
    இனிதாய் வையம் வளம்பெறவே…!

    ***

    ’பறவையாய் மாறினால் எல்லா மரங்களும் போதிதான்!’ எனும் புதிய சிந்தனையைப் பதியன் போடும் திரு. கவிஜியின் வரிகள்…

    பறவையான பிறகு 
    அமரும் மரங்களெல்லாம் 
    போதியாகின்றன….

    ***

    மாயக்கண்ணன்போல் லீலை செய்து, அம்மாவின் அடிக்குப் பயந்து மரத்தில் பதுங்கியிருக்கும் சிறுவனுக்கு நல்லுரை புகட்டும் திரு. சாயாசுந்தரத்தின் வரிகள்…

    பாட்டி கூறிய இரவுக் கதையில் 
    மாயக் கண்ணன் செய்த மயக்கும் லீலையை 
    காலை எழுந்தவுடன் நீயும் செய்ய 
    குச்சி வைத்து விரட்டும் அன்னை யசோதையிடம் 
    தப்பித்து மரம் ஏறி அமர்ந்தாயோ நந்தனே ….
    […]
    பொய்யற்றுச் சூது அற்று
    கள்ளம் அற்று கபடம் அற்று
    அன்பெனும் எல்லையில்லா
    வானம் பார்க்க ஆளுக்கொன்றாய்
    சொருகி வைத்த இறகு விரித்து
    பறக்கலாம் சிறிதுக் காலம் கடந்த பின் …..
    […]
    மரம் விட்டு இறங்கி வந்து
    அம்மாவை அணைத்துக் கொள்ளேன்

    ***

    மரத்திலேறிய காரணத்தைச் சிறுவனிடம் நயமாக வினவி, ”அச்சத்தையும் ஆசையையும் விட்டொழி!” எனும் அறவுரையையும் அவனுக்களிக்கும் திரு. பழனிச்சாமியின் வரிகள்…

    மாட்டிக் கொண்ட பட்டத்தை எடுக்க
    மரத்தின் மீதேறி அமர்ந்தாயோ
    போட்டியைக் காண்கின்ற ஆசையை கிரிக்கெட் 
    பொங்கிட வைத்து விட்டதோ
    கூட்டுக்குத் திரும்புகின்ற குருவிகள் கண்டு
    குதூகலம் அடைந்திட வந்தாயோ?
    காட்டுப்புலி உன்னைத் துரத்த பயத்தில்
    கலவரம் அடைந்து விட்டாயோ
    […]
    பாட்டினில்
    நான்சொல்லும் கருத்து இதுதான் 
    பயம்ஆசை இரண்டும் வேண்டாமே!

    ***

    கணினியில் கட்டுண்டு கிடக்காமல் கவின்மிகு மரக்கிளையில் அமர்ந்திருக்கும் சின்னவனின் மனத்தை அறிய வினாத்தொடுக்கும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    தொலைக்காட்சியும் கணினியும் கட்டுப்படுத்தாத
    அற்புதச்
    சிறுவனா நீ ? – வீட்டினுள் அடையாது
    கொளுத்தும்
    வெயிலுக்கு இதமாய்குளுமையான
    வேப்ப
    மரத்தில் தஞ்சம் புகுந்து விட்டாயோ ?
    […]
    மரத்தில்
    எத்தனை பறவைக் கூடுகள்
    ஒவ்வோர்
    கூட்டிலும் எத்தனை முட்டைகள்
    தெளிவாய்
    கணக்கெடுத்து வைத்துக் கொண்டாயோ ?
    நாளை
    நெல்லெடுத்து வைக்க வசதியாய் இருக்குமே !
    […]
    பத்திரமாக பார்த்துக் கொள்!- இயற்கை
    உனது
    சொத்து !

    ***

    ”குடும்ப வறுமைக்கு உன்னைப் பலிகொடுத்துக் குழந்தைத் தொழிலாளி ஆக்கமாட்டேன்! வறுமையை வென்று வாழ்வை வசமாக்குவோம்!” என வீரவுரை பகரும் மறத்தாயை மாண்புறக் காட்டும் திரு. கொ. வை. அரங்கநாதனின் வரிகள்…

    பொல்லாத வறுமையை காட்டி
    உன்னைப் பள்ளிக்கு அனுப்பாமல்
    […]
    மேலத் தெரு ஓட்டலுக்கு
    உழைக்கச் சொல்லி அனுப்பி
    அதில் உயிர் வாழ்வேன்
    என  நினைத்துத்தான்
    மரமேறிச் சென்று என்
    மனத்தை வதைக்கிறாயா?

    நீவீத் தலைவாரி 
    நெற்றியில் முத்தமிட்டு 
    பாடசாலை செல் பைந்தமிழே
    என நாளும் வழியனுப்பும்
    பாவேந்தன் பேத்தியடா நான்!
    […]
    வறுமையை
    வென்று
    வாழ்வை வசமாக்குவோம்
    வளர்ந்த மரமாகி
    வறியவர்க்கு நிழல் கொடுப்போம்

    ***

    மரக்கிளையில் தங்கும் பறவைகளும்கூட வாழ்க்கைப்பாடம் நடத்துவதை நயமுடன் நவிலும் திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

    …ஏறிய மரக்கிளையில்  வந்தமர்ந்த 
    காக்கைகள் எனக்கு ஒற்றுமை பற்றியும் 
    குயில்கள் சங்கீதத்தையும் 
    கிளிகள் பேச்சின் இனிமையையும் 
    மயில்கள் நடனத்தின் சூட்சுமத்தையும் 
    சொல்லித்தந்த வேளை 
    வந்தமர்ந்த கழுகுமட்டும் 
    சமூகத்தில் நெளியும் 
    மூட நம்பிக்கை பாம்பை வட்டமிடும்
    பார்வை சொல்லிக் கொடுத்ததால் 
    முயற்சிக்கிறேன்.

    ***

    விகாசத்தோடு மரக்கிளைச் சிம்மாசனம் ஏறி நிகாசமற்ற ஆனந்தத்தோடு வீற்றிருக்கும் மாவீரனை நமக்கு அறிமுகப்படுத்தும் திருமிகு. வானதி வேதா. இலங்காதிலகத்தின் வரிகள்…

    நிகாசம் இல்லாத ஆனந்தம்!
    மகாராசா போலவோ ஒரு
    மகாவீரன் போல இங்கு
    விகாசமான ஒரு சிம்மாசனம்!
    ஆகா! சொன்னீர்களே எல்லோரும்
    ஏறாதே முடியாது என்று!
    ஏகாடம் பண்ணாதீர்கள் யாரையும்!
    சகாயம் எமக்குத் துணிவொன்றே!

    (ஏகாடம் – ஏளனம்; விகாசம் – மலர்ச்சி;  நிகாசம் – உவமை)

     ***

    படிப்பில் கோட்டைவிட்டு, அன்னையின் அடிக்கு பயந்து மரமேறிய பாலனுக்குப் புத்திமதி சொல்லும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

    …படிக்கும்போது
    இல்லாத பயம்
    அடிக்குப் பயந்து
    மரமேறி அமருகிறாய்

    போனால் போகட்டும்
    வெற்றியும் தோல்வியும்
    வீரனுக்கழகு
    ஒன்பதாவதுதானே
    அடுத்தமுறையாவது
    அயராமல் படித்து
    உயரப்பார்…

    ***

    ’மரம் இயற்கை தந்த வரமல்லவா!’ என்று வியந்துபோற்றும் சிறுவனின் நல்லுள்ளத்தைப் புகலும் திரு. ரோஷான் . ஜிப்ரியின் வரிகள்…

    நான் வேறு
    ஆயினும்….,
    எப்படி பரப்பினாய்
    எனக்கான கிளைகளை?
    எதிர்பார்ப்பு அறியா
    இயற்கை சேவகன்
    நீ என்றால் அதற்கு
    நிகருண்டா
    உன்னை மரம் என்பவனோடு நான்
    மல்லுக்கு நிற்பேன்
    உன்னை வரம் என்று போற்றி
    உயிர்வரை காப்பேன்.

    ***

    உச்சிக்கிளையில் ஒய்யாரமாய் அமர்ந்து உலகை இரசிக்கும் சிறுவனுக்குள் எழும் இமயம்தொட்ட இறுமாப்பை இயம்பும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    இமயம் தொட்ட இறுமாப்பு
    இதயம் நிரப்பி நிற்கிறது!
    உச்சிக் கிளையின் உயரத்தில்
    அச்சமின்றி நானும் வீற்றிருக்க
    பச்சை இலைகளின் குழுமை
    இச்சையுடன் என்னுள் பரவுகிறது!
    [..]
    பழக்கமாகிப் போன பழைய உலகத்தின் இயக்கத்தில்
    வேறு ஒரு பரிமாணம் தெரிகின்றதே என்னுள்
    உறுதியுடன் உச்சியில் அமர்ந்திருக்கும் போழ்து
    தன்னம்பிக்கை என்னுள் சுடர்கிறதே பிரகாசமாய்
    என் வதனம் மலர்க்கிறதே இறுமாப்புப் பூக்களை
    உச்சிக் கிளையின் உயரம் உல்லாச அழகு
    மெச்சுகின்றதே என் விக்கிரமாதித்த விடாமுயற்சியை!

    ***

    மரக்கிளையில் அமர்ந்திருக்கும் ’இளையபாரதத்திடம்’ தொலைந்துபோன நம் தாய்த்திருநாட்டின் முகவரியை மீட்பாய்!” என அன்பு வேண்டுகோள் விடுக்கும் திரு. கோபாலகிருஷ்ணனின் வரிகள்…

    மாநகர பூங்கா மரத்தினிலே, வியப்பும் ,பயமும் கலந்த உணர்வு கலவை
    உன் கண்ணிலே கசிவதை உணரமுடிகிறது என்னால் .
    ஏதோ வழக்கத்திற்கு மாறாய் நிகழ்வுகள் அரங்கேருகிற
    உன் பார்வை விரிப்பில்
    நம் ஊரில் விறகிலே வெந்த பானை இங்கே
    மின்சாரத்திலே வேகுகிறதோ ?
    […]
    இந்த சமுதாயத்தை கண்டு வேதனைப்படவும் அதை களையவேண்டும் என
    கனா காண மட்டுமே எங்களுக்கு ஆண்டவன் சக்தியை கொடுத்திருக்கிறான்.
    ஆனால் உன்னில் வீரிய சிந்தையாலும் விறைப்பேறிய தசைத்திறனாலும்
    தொலைந்த நம் முகவரியை மீட்டெடுத்து மானுடம் எந்நாளிலும் மண்ணுலகில்
    மகிழ்வாய் வாழ என் கனவுகளை உன் கரங்களில் சமர்பிக்கிறேன் …..

    ***

    சிந்தனைக்கு நல்விருந்தாய்ச் ’சொல்விருந்து’ படைத்த கவிஞர்குழாத்திற்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!

    அதிக எண்ணிக்கையிலான கவிதைகளை (வழக்கம்போலவே) எழுதிக் குவித்திருக்கும் திரு. ஜெயபாரதன், திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர் இருவருக்கும் என் சிறப்பான (ஸ்பெஷல்) பாராட்டுக்கள்!

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அடையாளம் காணவேண்டிய தருணமிது!

    மானுடர்க்கு நிழல்தந்து, புசித்திடக் கனி தந்து, வெட்டினாலும் மரக்கட்டைகளாய்ப் பயன்தந்து உதவும் மரங்கள், மனிதன் மறந்துவிட்ட பொதுநலத்தை நாளும் நமக்கு நினைவுறுத்தும் இயற்கை தந்த வரங்களே! அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை ஊருக்கு உதவுகின்ற நயனுடையானைப் பயன்தரும் மரத்தோடு ஒப்பிட்டார்!

    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின்.
    (குறள்: 216)

    அவ்வகையில், தன் தந்தை அழியாமல் காத்துவைத்த மரத்திலமர்ந்து, அம்மரத்தைப்போலவே ”நானும் ஊருக்குப் பயன்படுவேன்! அத்தோடு நில்லாமல், மேலும் பல மரங்கள்நட்டு மன்னுயிர்களைக் காப்பேன்!” என்று இலட்சியச் சபதமேற்கும் உயர்ந்த உள்ளங்கொண்ட சிறுவனை நம்முன் உலவவிட்டிருக்கும் திரு. சுரேஜமீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    அக்கவிதை…

    …நல்மரம் உன்னை
    நானும் பார்த்தே
    நன்றியாய் வளர்கிறேன்
    நாளைய நிழலாய்
    நம்பிக்கை தரவே
    நன்னெறி யேகி
    நாளும் பெற்றவர்
    நயம்படக் காத்திட!

    மரமாய் இருக்க
    மனிதர்க்கு நிழலாய்
    மாபெரும் கூடாய்
    மனைதேடும் பறவைக்கு
    தென்றல் தவழ
    தேடிடும் கிளையாய்
    தினமும் விளையாட
    திண்ணையாய் எனக்கும்!

    இன்னமும் வியப்பே
    இதுகாறும் நீயிருக்க
    எதிர்ப்படும் வீதியில்
    எல்லாம் சாய்ந்தும்
    உனைமட்டும் விலக்கி
    உயிர் காத்தவர்
    எந்தை எனும்போது
    எண்ணிலடங்கா மகிழ்வே
    […]
    உன்னிடம்
    கற்று
    உளதெலாம் கொடுத்து
    ஓங்கும் புகழொடு
    ஒற்றுமை சிறந்து
    உலகம் போற்ற
    உயர்வோம் என்றும்
    உன்னால் பெருமை
    இந்நாள் அறிந்தேன்
    விளையாட்டாய்
    வந்தயென்
    விழிப்பார்வை திறந்தாய்
    வீதியொரு
    மரம்நட
    வீறுகொண் டெழுவோம்!
    இனிவரும் சமுதாயம்
    இன்பமாய் வாழ்ந்திட
    இன்றே உறுதிகொண்டு
    இனிதாய் வளர்ப்போம்!
    […]
    அழகிய
    வனமாய்
    ஆகட்டும் உலகெலாம்!

    ***

    அறிவியல் வளர்ச்சியால் விரைவாய் அழிந்துவரும் அழகிய இயற்கையை எண்ணி வருந்தியும், சித்தப்பா தந்த மஞ்சள் சட்டையோடு மரக்கிளையில் அமர்ந்திருந்த தன் இளமைக்காலத்தை ஏக்கத்தோடு மனவெளியில் ஓடவிட்டும் பார்க்கின்ற ஓர் இனிய கவிதையைக் கண்டேன்; அதன் வரிகளில் இழையோடும் மெல்லிய சோகம் நெஞ்சைக் கனக்கச் செய்தது.

    அக்கவிதை…

    ஊரின் நுழைவில்
    கண்மாய் தூர்த்துக் கிடக்கிறது
    சாவடித் திருப்பம் கடந்ததும் வரும்
    மாதையன் தாத்தாவின் தோட்டம்
    கற்கள் நடப்பட்டு விற்பனைக்கு
    மலர்வல்லி அம்மன்
    கான்கிரீட் கோவிலுக்குள் குடி புகுந்து
    நாட்கள் பலவாகி விட்டிருக்கலாம்
    […]
    சின்னத்
    தெரு முடிவில்
    ஓங்கி நிற்கும் அய்யனார்
    சோர்ந்து நிற்கிறார் வயதின் காரணமாய்
    வடமூலைக் குளக்கரை ஒட்டிய
    என் மறுவீடான அப்பச்சி மரத்தை
    அடி நிழலில் நின்று நிமிர்ந்து பார்க்கையில்
    சுடர் சித்தப்பா பரிசளித்த
    பொத்தான்களற்ற மஞ்சள் சட்டையணிந்து
    பால்யத்தைத் தேடிச் சோர்ந்த என்னையே
    உற்றுப் பார்த்தபடி இருக்கிறேன்
    பால்யத்தின் நான்.

    இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஹரீஷைப் பாராட்டுக்குரியவராய்த் தேர்ந்தெடுக்கிறேன்.

    ***

    கவிஞர்களே! போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றுவரும் உங்கள் ஊக்கமும், உற்சாகமும் என்னை எல்லையிலா மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

     

     

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    ’காலை எழுந்தவுடன் படிப்பு’ என்றார் பாரதியார். ஆனால் நம்மில் பலருக்குக் ’காலை எழுந்தவுடன் காபி’ என்பதுதான் தாரக மந்திரம். படுக்கையைவிட்டு எழுந்தவுடன் காபி குடிப்பதற்குப் பதிலாகச் சிறிது எலுமிச்சை சாற்றைப் பருகினால் மிகநல்ல பலன்களைப் பெறலாம் என்று நம் காதோரம் கிசுகிசுக்கின்றது மருத்துவ அறிவியல்.

    அதைப் பற்றித்தான் கொஞ்சம் அறிந்துகொள்வோமே!

    lemon-juiceகாலைவேளையில் முதல்வேலையாக ஒரு கோப்பை வெந்நீரில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவிட்டுப் பிற வேலைகளைக் கவனிப்பது நல்லது. மற்ற சத்துபானங்களைவிட இது சிறந்ததாகும். எலுமிச்சையின் புளிப்புச் சுவையை எண்ணி நாம் முகச்சுளிப்பு கொள்ளாது அதனைப் பருகினால் விளையும் நன்மைகளைப் பட்டியலிடுகிறேன் பாருங்கள்!

    எலுமிச்சையில் அமிலத்தன்மை மிகுதியாக உள்ளதால் (it contains citric acid) அது உடலினுள் சென்று வேதிவினை புரிந்து இரத்தத்தில் கலக்கும்போது உடலின் கார, அமில விகிதத்தைச் சமப்படுத்துகின்றது. வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாற்றைப் பருகினால், அது நம் கல்லீரலை (விறுவிறுப்பாய்) விழித்தெழச் செய்து, தேவையற்ற நச்சுப் பொருள்களை உடனடியாய் வெளியேற்றுகின்றது என்கிறார் அமெரிக்காவைச் சார்ந்த, நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைத்துறை நிபுணராகவும், மேற்கத்திய, கிழத்திய மருத்துவங்களை இணைத்துத் தீர்வுகாண்பதில் பயிற்சி பெற்றவருமான மருத்துவர் ஃப்ராங்க் லிப்மேன் (Dr. Frank Lipman).

    கல்லீரல் மட்டுமல்லாது இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்ட சீரணப் பாதைகளையும் (digestive tract) இச்சாறு சுத்தீகரித்து, நாமுண்ணும் உணவுகளை இப்பாதையில் சிக்கலின்றிப் பயணிக்க வைக்கின்றது.

    உடம்பில் எக்கச்சக்கமாக எடைகூடி, அதனைக் குறைக்க வழிதெரியாது திணறும் ’கனவான்’களுக்கு எலுமிச்சை கைகண்ட மருந்தாகும். எலுமிச்சைச் சாற்றில் நிறைந்திருக்கும் ’பெக்டின்’ (pectin) எனும் (நீரில் கரையும்) மாவுச்சத்து (complex carbohydrate) உடல் எடையை வெகுவிரைவாய்க் குறைக்கும் மாய வித்தைக்காரனாய்ச் செயல்படுகின்றது.

    இரவில் அதிகமாய் உணவு உண்போர் சிலருக்குக் காலையில் எழும்போது நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் முதலிய தொந்தரவுகள் இருக்கும். அவற்றை நீக்குதற்குச் சுடுநீர் கலந்த எலுமிச்சைச் சாறு அருந்துணையாகும். எலுமிச்சையிலுள்ள ஃப்ளாவனாய்டு எனும் கூட்டு வேதிப்பொருள் (Flavonoids), வயிற்றின் அமிலத்தன்மையை மட்டுப்படுத்த, சுடுநீரானது சீரணப்பாதையினைச் சீராக்க, வயிற்றுப் பிரச்சனைகளும் நெஞ்செரிச்சலும் சொல்லாமல் கொள்ளாமல் உடலைவிட்டு ஓட்டம்பிடிக்கும்; சுறுசுறுப்பு அங்கே இடம்பிடிக்கும்.

    இவையேயன்றி சீறுநீரகக் கற்களைக் கரைப்பது, மலச்சிக்கலைத் தீர்ப்பது, சளி உள்ளிட்ட தொற்றுநோய்களை நீக்குவது போன்ற எண்ணற்ற மருத்துவப் பயன்களை அள்ளிவழங்கும் மாமருந்து எலுமிச்சை.

    பொதுவாக நாம் எலுமிச்சையை ஊறுகாய் போடுவதற்கும், (எலுமிச்சை) சாதம் தயாரிப்பதற்குமே அதிகமாய்ப் பயன்படுத்துகின்றோம். இப்படிக் சுவையான வகையில் அதனை உண்பதில் தவறில்லை! ஆனால் இவ்வகைத் தயாரிப்புகளில் எண்ணெய், காரம், உப்பு போன்றவையும் கூடுதலாகச் சேர்ந்துவிடுவதால் எலுமிச்சையின் முழுப்பலனும்  நமக்குக் கிடைப்பதில்லை. எனவே அதன் முழுப்பலனும் கிடைக்கச் சாறாய் அருந்துவதே சாலச் சிறந்தது!

    மருத்துவப் பயன்களேயன்றி சிறந்த அழகுசாதனப் பொருளாகவும் பயன்பட்டுவருகின்றது எலுமிச்சை. எலுமிச்சைச் சாற்றுடன் சிறிதளவு தேனோ அல்லது கடலை மாவோ கலந்து முகத்தில் பூசிச் சிறிதுநேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவிவந்தால் முகப்பொலிவு கூடி, முகத்தில் முகம் பார்க்கலாம்!

    சூரிய ஒளியால் தோலில் ஏற்படும் நிறமாற்றத்தைத் தடுக்கவும் (Suntan) எலுமிச்சைச் சாற்றை உபயோகிக்கலாம். தலையில் எலுமிச்சைச் சாற்றைத் தேய்த்துக் குளித்துவரப் பொடுகு பறந்தோடும்.

    கறைகளைப் போக்கும் வெளுப்பானாக (bleaching agent) எலுமிச்சை விளங்குவதால் துணி துவைக்கும் சோப்புகள் தொடங்கிப் பாத்திரம் துலக்கும் சோப்புகள், நீர்மங்கள், குளியல் சோப்புகள் என அனைத்திலும் இது முக்கிய மூலப்பொருளாய்த் திகழ்கின்றது.

    ”உங்க பேஸ்ட்டுல எலுமிச்சையும் உப்புமிருக்கா?” என்று வீட்டுக்கே வந்து கேட்டுவிட்டுச் செல்லும் தொலைக்காட்சி பற்பசை விளம்பரங்களைத் தினமும் நாம் பார்க்கிறோம்! இப்பற்பசைகளை வாங்கி நம் காசைக் கரியாக்குவதைவிட, நம் வீட்டிலேயே இருக்கும் எலுமிச்சையில் சிறிதளவு சாறெடுத்து அத்துடன் ஒரு சிட்டிகை பொடிஉப்பைச் சேர்த்துப் பல்துலக்கினால் போதும்! ’ஜொலிக்குதே பற்கள் ஜொலிக்குதே’ என்று பாடத் தொடங்கிவிடுவோம்!

    இப்படி எலுமிச்சையின் மகத்துவத்தை முடிவில்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம்; ஆம்! எலுமிச்சை அளவில் சிறிதாயினும் ஆற்றலில் பெரிது!

    உடல்நலத்தைச் சிறப்பாய்ப் பேண எலுமிச்சை மீது இச்சை கொள்ளுவோம்! நோய்களைத் துச்சமெனத் தள்ளுவோம்!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 12-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தைத் தந்திருக்கும் திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம், இப்படத்தைத் தேர்வுசெய்திருக்கும் திருமிகு. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமையின் நன்றி.

     man

    பச்சைப்பசேல் என்ற வயல்வெளி, அருகே மாற்றுத் திறனுடைய பெரியவர் ஒருவர், அவரின் இருபுறமும் இளைய பாரதத்தினர் இருவர், இம்மக்களின் உள்ளம்போல் உயரப் பறக்கும் பலூன்கள் என்று பலவகை வண்ணக்கலவையோடு கூடிய இப்புகைப்படம் நம் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகளை எழுப்பவே செய்கின்றது.

    அதோ… அந்தப் பெரியவரின் முகத்தைப் பாருங்கள்! அதில் ஏதோவோர் உறுதி பளிச்சிடுவதைக் காணமுடிகின்றது. அவர் முகத்தின் உறுதி அகத்திலும் இல்லாமலா போய்விடும்?

    ஐயா!

    உடலின் ஊனம் தனைக்கண்டு
    உள்ளம் தளரா மனங்கொண்டு
    திடமாய் உழைத்தால் உயர்வுண்டு
    தடைகள் கடக்க வழியுண்டு
    மாற்றுத் திறனை உடையவரே
    முயன்றால் ஒருநாள் இவ்வுலகை
    மாற்றும் திறனும் நீர்பெறுவீர்
    மாநிலம் போற்றும் நிலைபெறுவீர்

    என்று அவருள் நம்பிக்கை விதைகளை நாமும் தூவுவோம்!

     இனி, படக்கவிதைப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் கருத்தாழமுள்ளவற்றை முதலில் காண்போம்!

    ***

    பலூனே உயரப் பறக்கும்போது அதனினும் பலமுள்ள மனிதன் துவளலாமா? எனப் பொருத்தமாய்க் கேள்வி எழுப்பும் திரு. கனவு திறவோனின் வரிகள்…

    காற்றடைத்த பலூனே
    உயரப் பறக்கும் போது
    உயிரடைத்த
    உடம்பு
    விழுந்தா விடும்
    மண்ணில்?
    எழுந்து நிற்க
    கால்கள் வேண்டாம்
    தூக்கி நிறுத்த
    துணைகள் வேண்டாம்
    இதயம் போதும்!
    மிரள வேண்டாம் நண்பா
    என் கவிதைக்குள் உன்னைக்
    காட்சியாக்கி
    ஊருக்குள் உன் உரத்தை
    உரக்கச் சொல்வேன்
    துணிந்து வா நண்பா!

    ***

    ’காலம் எங்கே போய்விடும்; அது என்னையும் வாழ வைத்திடும்’ என்ற மாற்றுத் திறனாளியின் மனோதிடத்தைக் காட்டும் திரு. ரா. பார்த்தசாரதியின் வரிகள்…

    என்னைப் போன்ற மாற்று திறனாளிக்கு  மனதில் பலமுண்டு 
    வாழ்க்கையில்  முன்னேற  எனக்கு என்றும் திறனுண்டு 
    வாழ்க்கையில் ஏமாற்ற பலரும், சிலரே உதவி செய்வதுண்டு 
    எங்கே சென்றிடும் காலம்! அது  என்னையும்  வாழவைக்கும் !

    ***

    ”ஊனம் உடலிலிருந்தால் என்ன? உண்மையாக உழைத்து உயர்பவர்கள் நாங்கள்!” என்று வீரமுழக்கமிடும் பெரியவரின் பெற்றியைப் போற்றும் திருமிகு. ஸ்ரேயாரேவதியின் வரிகள்…

    பச்சை பசுமைகளில் பேரப்பிள்ளைகள் !
    ஊனமாக இருந்தாலும் உண்மையாக உழைத்திடுவோம் !
    இன்பமாக வாழ்ந்திடவே விற்றிடுவோம் வண்ண பலூன்கள் !
    ஒற்றுமையாய் இருந்தால்தான் கோடிநன்மை அடைந்திடலாம்!
    அறிந்திடுங்கள் மானிடரே! நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்களே!

    ***

    ’நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமுமிருக்க, ஊனமொரு தடையில்லை’ என்று கம்பீரமாய் முறுவலிக்கும் மாமனிதனைக் கவிதையில் காட்டியிருக்கும் திரு. ரோஷான் ஏ. ஜிப்ரியின் வரிகள்…

    வானவெளி பெருத்த ஒன்று
    உணர்ச்சிக்கு தோணவில்லை
    ஊனமிது வருத்தமென்று
    பலூன் விற்றோ,வடை விற்றோ
    வாழ விழியிருக்கு
    கங்கில் தெறித்த களம்மீண்ட எந்தனது
    நெஞ்சில் உரமிருக்கு நீ எதற்கு கலங்குகிறாய்…
    […]

    மூங்கில் பிடிக்குள்
    முறுவலிப்பாய் இருக்கின்றேன்
    தேங்கி அடங்கிடாமல்
    தேடலுக்காய் நடக்கின்றேன்

    ***

    மாலையிலே தான்கொண்ட போதைமயக்கம் தன்வாழ்க்கைப் பாதையையே மாற்றிப் பரிதவிக்கவிட்டதை வேதனையோடு நினைவுகூரும் பெரியவரைப் பாட்டில் காட்டியிருக்கும் திரு. கட்டாரியின் வரிகள்…

    மசண்டப் பொழுது சாயபோதயில
    மல்லாக்க நானுஞ் சாய
    என்னப்போல ஏத்திவந்தஒரு
    எளந்தாரி லாரிக்காரன்..
    காங்கிரீட்டு பாலத்தோட
    கழட்டிப் போனாங் எங்கால…..
    ஊனக்கால மூணுகாலா
    உத்தவுக பழிச்சிப் பாட..
    காரச்செவரு..சாணித்திண்ண
    கழனி தோட்டம் எல்லாம் போக..
    கப்பிரோடுக் கால்நடையா
    கருவேலஞ் செடி தெளிநெழலு….
    நாந்திணிச்ச நாறக்காத்துஎந்
    நாஞ்சிவிட்ட மூச்சுக்காத்து
    ரப்பரு மூட்டைக்குள்ள ரம்மியமா
    சிரிச்சியாட….
    நாம்பெத்த புள்ள ரெண்டும்
    நடுவீதி வந்திருச்சே…..

    ***

    ’நிலையில்லா வாழ்க்கையிலே மனிதருக்குள் பேதமும் வெறுப்பும் எதற்கு? ஆருயிர்க்கெலாம் அன்புசெயலன்றி மனித வாழ்வின் பயனேது?’ என்ற உயர்தத்துவங்களை உதிர்க்கும் காயம்பட்ட மனமொன்றைக் கண்முன்னே நிறுத்தும் திருமிகு. துஷ்யந்தியின் வரிகள்…

    குழந்தைக்கு இருக்கும்
    கள்ளமில்லா அன்பு உள்ளம்
    படித்தவர்க்கு பாரிலே
    இல்லாது போனதேன்..???

    உதறிவிட்ட உறவுகளால் நான்
    தெருவோரம் நின்றாலும்
    அன்பு காட்ட மறுக்கவில்லை
    மாசில்லா மழலைகள்…!

    வாழுகின்ற காலத்தில்
    பிறர் வாழ்விற்கு வாசனை
    சேர்க்க முடியாவிடினும்,
    பிறர் வாழ்வின் வாசனையை
    போக்காது காப்போமே…!

    மண்ணிலே பிறந்ததெல்லாம்
    மண்ணுக்கே சொந்தமாம்
    இதையுணர்ந்து ,
    வாழும் சில நொடிகளை
    மகிழ்வுடன் வாழ்வோமே.!!!

    ***

    கற்சிலைக் கடவுளரின் இரும்பு உண்டியலை நிரப்பும் மக்கள், பேசும் நற்சிலைகளாய் வீதியில் நிற்கும் ஏழைமாந்தர்க்கு உண்டி கொடுத்து அவர்தம் வயிற்றை நிரப்புவதில்லை! கடவுளரும் இக்கொடுமையைக் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை! எனும் கசப்பான உண்மையைக் கவினுற விளம்பும் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரின் வரிகள்…

    திருவிழாக் கோயிலில்
    காற்றுப்பலூன் விற்க
    வந்தோம் வயிற்றுப்பசி
    மட்டுமே ஜெயிக்க
    நிற்கிறோம் கால்கடுக்க..!
    உச்சி வெய்யிலிலே
    வாடிப்போகுது பிஞ்சுமனம்
    நெஞ்சில் ஈரம்
    இருப்பவர் வாங்குங்க
    அண்ணாச்சி ஒண்ணாச்சும் …!

    கோயிலுக்குள் கூட்டம்
    பக்திக்குக் குறைவில்லை
    இரும்பு உண்டியல்
    நிறைந்தாலும் நிறையும்
    ஏழைகள் வயிறு
    ஒருநாளும் நிறையாதே
    பக்தர்கள் கண்களில்
    சிலைக்கு மட்டுமே இடம்
    சிலையாக நிற்கும்
    எங்கள் பக்கமும்
    திரும்பட்டுமே மனம்..!
    முடிந்தால் கல்லுச்சாமி
    நீ எங்கிருக்கே
    எங்களுக்கும் காமி…!

    ***

    ’ஊன்றுகோல் இல்லை ஐயா…இது எனது மூன்றாம் கால்! விரிந்த மனத்தின் வெளிச்சத்தைக் காட்டவே இப்புகைப்படம்; என் ஊனத்தைப் பறைசாற்ற அன்று!” என்று மிடுக்காய்ப் பேசும்  மானுடனைப் போற்றும் திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

    ஊன்றுகோல் என்றே உவமானம் சொல்லாதீர்
    மூன்றுகால் என்றே முடிவெடுங்கள்தோன்றும்
    நிலைபார்க்கும் நீங்கள் நினைக்கும் வகைஎன்
    அலையில்லை வாழ்க்கை அமிழ்து 

    பேரக் குழந்தைகள் பேருதவி யால்நெஞ்சு
    ஈர வயலாய் எழில்பூத்துசாரல்
    மழைபோல் மனம்நனைக்கும் மட்டில்லா அன்பால்
    தழைத்திருக்கும் வாழ்க்கை வயல்.
    […]
    வகையற்று வாடும் வரலாற்று சோக 
    புகைப்பட மல்ல இதுவேமுகைபோல் 
    விரிந்த மனசின் வெளிச்சத்தைக் காட்ட 
    தெரிந்த உணர்வின் திறம்.

    ***

    ’மன ஊனம் கொளலே தீது! உடல் ஊனம் முன்னேற்றத்திற்கென்றும் தடையாயிருந்திடாது!’ எனும் உற்சாகச் செய்தியை வரலாற்றுச் சாதனையாளர்கள் வாயிலாய் அறியத்தரும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

    மன ஊனத்தைவிட
    உடல் ஊனம்பெரிதல்ல
    […]
    பீதோவன்செவிடாகிருந்த
    நிலையில்தான் 
    சாகாவரம் பெற்ற ராகங்களை
    உருவாக்கினார்
    கவிஞர் மில்டன்
    பார்வையற்ற நிலையில்தான்
    சொர்க்கம் இழக்கப்படல் 
    என்கின்றகாவியம் எழுதினார்
    ஜூலியஸ்சீசர்
    காக்கா வலிப்பு  நோய்
    இருந்தபோதும் மாவீரனாய்
    திகழ்ந்தார்
    இவர்கள்யாரும் யாரிடமும்
    அனுதாபத்தை
    எதிர்பார்க்கவில்லை
    […]
    இதோஇந்த மனிதனும் அப்படியே
    தன் மகன்களின்
    சந்தோஷத்தில் மகிழ்ச்சி கொள்ளும்
    மன உறுதி கொள்கின்றார்

    ***

    உழைப்பின் உயர்வைக் கண்டுமகிழ்ந்து காற்றாடியாய்க் காற்றில் பறக்கும் நெஞ்சத்தை நேயமுடன் விவரிக்கும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    போரின் வக்கிரங்கள் கொண்டு போயின
    வீரியமிக்க காளையின் காலையும் தான்!
    ஊன்று கோல்கள் ஆகிய மூங்கில்
    ஈன்றது அவன் தைரியத்தை மீண்டும்!
    […]
    உழைத்த கரங்கள் மண்ணில் மீண்டும்
    விதைத்த முளைகள் பயிர் கொண்டு பசுமை!
    பசுமை வயலில் மட்டுமா விளைந்தது
    தேசுடன் அவன் மனதிலும் தான்!
    பாசமாய் அவன் பெற்ற செல்வங்கள்
    மாசிலா அன்புடன் ஊன்றுகோல்களாய் அவனைச் சூழ்ந்திட
    லேசாகிக் கரைந்து மறைந்தன அவன் மனதின் ஊனங்கள்!
    […]
    நீலவானில் நீந்தும் காற்றாடி ஆன அவன் இதயம்!
    சீலமாய் உரைத்தது பகிரங்கமாக …ஒரு பழமொழி
    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்றே
    பச்சை
    வயல்களும் நீலவானமும் சாட்சியமாக…

    ***

    அருமையான கவிதைகளைப் படைத்தளித்திருக்கும் கவிஞர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றேன்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்தித்துவருவோம் வாருங்கள்!

    காலில்லை என்று சோர்ந்துபோகாமல், கோலின் துணையோடு, தாளை(உழைப்பு) நம்பிப் புறப்படும் பெரியவரின் மனத்தில் ஊடாடும் ஆசைகளை இயல்பாய்க் கொணர்ந்திருக்கும் கவிதையொன்றைக் கண்ணுற்றேன்.

    அக்கவிதை…

    ஒற்றைக்கால் இல்லையென
    ஒருநாளும் சோர்ந்ததில்லை
    அற்றைக்கிரை தேடுதற்கு
    அதிகாலைக் கிளம்பிவிட்டேன் !

    பெற்றமகன் துணையிருக்க
    பெருமகிழ்வு கூடிடுதே
    விற்றிடுவேன் பலூனூதி
    விரட்டிடுவேன் வறுமைதனை !

    உற்றதுணை யாயெனக்கு
    உதவுமிரு ஊன்றுகோலே
    பற்றற்ற வாழ்க்கையிதே
    பழக்கமாக ஆயிற்றே !

    கற்காத காரணத்தால்
    கவலையென்னை வாட்டுவதால்
    கற்பிப்பேன் பிள்ளைக்கு
    கடமையது எந்தனுக்கு !

    குற்றுயிராய்க் கிடந்தாலும்
    குனிவுவர விடமாட்டேன்
    நற்பேரும் நானெடுப்பேன்
    நன்மைகளும் செய்திடுவேன் !

    சுற்றியுள்ள பசும்வயலும்
    சுவர்க்கம்தான் எங்களுக்கு
    வற்றாத வரமாக
    வசமாகும் வானமுமே ….!!

    இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. சியாமளா ராஜசேகரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    ***

    ’சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு’ என்பார் வள்ளுவப் பேராசான். ஆம்! வாழ்வில் துயரமும், துன்பமும் வரிசைகட்டி நிற்கும்போதுதான் அயராத நெஞ்சுரம் வேண்டும்; அதுவே துன்பத்தைத் தூர்த்தெறியும் கோடரி. அவ்வகையில், பிறரின் அனுதாபம் வேண்டாத, வீரவுணர்ச்சிமிக்க மாற்றுத் திறனாளியைத் தன் கவிதையெனும் உளிகொண்டு சிறப்பாய்ச் செதுக்கியிருக்கும் திரு. ருத்ரா. இ. பரமசிவனை இவ்வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    மூங்கில் எலும்புகள்
    முட்டு கொடுத்தது
    இந்த உலகத்தின் 
    மொத்த கனத்தையும்
    துணிக்கட்டு

    துணிச்சலில் நெய்த துணியில்.
    இன்னும்
    கனவு பாக்கியிருக்கிறது
    […]
    சொர்க்கத்தையும்
    கடவுள்களையும்
    அதோ பார்க்கிறேன்
    வண்ண வண்ணப் பலூன்களாய்.
    எங்களைக்கொல்ல
    உங்களுக்கு துப்பாக்கி குண்டுகள்
    தேவையில்லை.
    த்சோ த்சோ”…போதும்
    அந்த காலின் மிச்சத்தையா தேடுகிறீர்கள்.
    அதை நான் 
    அவன் சற்று வலியில் ஓய்ந்தால் 
    எடுத்துக்கொள்ளட்டுமே
    என்று இரவல் கொடுத்திருக்கிறேன்
    ஒலிம்பிக் வீரன்
    பீலே”வுக்கு.

    ***

    ஊக்கத்தோடு ஆக்கங்களைத் தொடர்ந்து படைத்தளித்துவரும் அனைத்துக் கவிஞர்களுக்கும் என் நன்றி!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 11-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இந்த அழகிய புகைப்படத்தை எடுத்துத்தந்துள்ள திரு. கோகுல்நாத், இதனைப் போட்டிக்கான படமாகத் தெரிவுசெய்துதந்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமிகு. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமை மின்னிதழின் நன்றி.

    11212317_828493147204886_734930307_n

    அலையாடும் கடற்கரையில் அலைபேசியோடு உரையாடிக்கொண்டிருக்கும் இந்த ஆடவனுக்காக அருகிருக்கும் ஆரணங்கு ஆசையாய்க் கட்டியிருக்கும் இந்த மணற்கோட்டையைப் பார்க்கும்போது இவள் மனக்கோட்டையின் சாமி இவன் தான்போலும் என்ற எண்ணம் நம்முள்ளும் எழுகின்றது.

    நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும்
    ஆரள வின்றே சாரற்
    கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
    பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
    (குறுந்: 3)

    என்று தலைவனோடு தான்கொண்ட நட்பின் அகலத்தை, ஆழத்தை, உயரத்தை உரைத்தாள் அன்றைய குறுந்தொகைக் காதலி. இன்றைய குறுஞ்செய்தி(கால)க் காதலியோ தன் எண்ணங்களைக் கடலோரத்தில் அழகுற மணற்கவிதையாய்ப் படைத்திருக்கின்றாள்.

    எந்தப் படத்தைத் தந்தாலும் துள்ளிக்கொண்டு கவிதை எழுதும் வல்லமை பெற்ற நம் கவிஞர்குழாம் ஓர் அருமையான காதற்களத்தை விட்டுவிடுவரா என்ன? புகுந்துவிளையாடியிருக்கிறார்கள் இம்முறையும்!

    என்னைக் கவர்ந்த கவிதைவரிகள் முதலில்…

    இருவேறு சிற்பங்களாய் மாறிய பெற்றோரின் கதையுரைக்கும் திரு. கவிஜியின் வரிகள்…

    …குழந்தையின் 
    கனவில் வந்து கொண்டிருப்பது
    நேற்று மாலை -அது 
    தெரியாமல் 
    அழித்து விட்ட 
    மண் சிற்பத்தின் அழுகையாகக் கூட 
    இருக்கலாம்…
    எதுவும் பிடிபடாத 
    யோசனையில் 
    நாங்கள் சிற்பமாகவும்
    முடியாமல்… 
    சிணுங்கிடவும் முடியாமல் 
    இரண்டு பக்கமும்
    அமர்ந்து கிடக்கிறோம்
    ஒரே  மாதிரியான 
    இரு வேறு
    சிற்பமாக…

    *****

    கண்மணியின் கவலை போக்க இணையத்தில் வழிதேடும் காதலனைக் கவினுறக்காட்டும் திருமிகு. கீதா மதிவாணனின் வரிகள்…

    அலையாடிய அழகுப்பாதங்கள்
    அலுத்தோய்ந்து கிடக்க…
    மணலளைந்த மலர்க்கரங்கள்
    கன்றிச் சிவந்திருக்க… 
    கனவு இல்லமொன்றை கடற்கரையில் 
    கட்டுகிறாள் என் காதல் கண்மணி!
    […]
    கவலை வேண்டாமடி கண்மணி!
    உன் கனவை நனவாக்கும் வழிகளைத்தான்
    இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன் இப்போது!

    *****

    ”கலைமகளிவள் கட்டிய மணற்கோட்டை இவள் மனக்கோட்டைதானோ? என்ற காதலனின் வினாவைக் கவிதையாக்கியிருக்கும் திரு. ரா. பார்த்தசாரதியின் வரிகள்…

    கல்லிலே கலைவண்ணம் கண்டவனின் மகள்
    மணலிலே கோட்டை கட்டி பெருமிதம் அடைந்தாள் 
    அவள் காதலனோ வாழ்வில் கோட்டை கட்ட நினைக்கின்றான் 
    […]
    முனைப்போடு நீ கட்டிய மணற்கோட்டை 
    என்னை நினைத்து கட்டிய மனகோட்டையா ! மணற்கோட்டையா !

     *****

    கதிரொளி தெளிக்க, மெல்லிய தென்றல் தீண்டக் காதலியிவள் தன்னன்புக் காதலனுக்காய்க் கட்டிய மண்மாளிகையை நமக்கும் காட்டுகின்ற திருமிகு. ரேவதிஸ்ரேயாவின் வரிகள்…

    ஒரு பெண் தன் காதலனுக்காக கட்டிய ஓவியம் !
    கார்மேகம் சூழ !சூரியஒளி தெளிக்க !மெல்லிய தென்றல் தீண்ட !அலை கடல் ஓசை இசைக்க !உனக்கென ஆசையோடு இந்த மண்மாளிகை உனக்கு பரிசாக தர கட்டியுள்ளேன் கொஞ்சம் திரும்பிப் பாரடா !

    *****

    சின்னச் சின்னக் கோட்டைகட்டிச் சிங்காரமாய் வாழ வழிசொல்லும் பெண்ணைக் கண்முன் நிறுத்தும் திருமிகு. லட்சுமியின் வரிகள்…

    சின்னச் சின்ன கோட்டை கட்டி
    சிங்காரமாய் வாழ்ந்திடுவோம்!
    சிறிய செல்லிடப்பேசியிலே
    சின்னதாகப் படம் பிடிப்பாய்!
    சின்னப் பெட்டி அல்ல உன் உறவு!
    […]
    வண்ண வண்ண வானவில்லாய்
    வானம் எட்டும் ஆசைகளால்
    இல்லறம் கசந்திட வழிவகுக்கும்
    ஈந்து மகிழ்ந்து சிறப்புடனே
    இருப்பதைக் கொண்டு வாழ்ந்திட்டால்
    ஈசனும் நமக்குத் துணையாவான்

    *****

    ”கணினித் தொழில்நுட்பத்தில் தன்னைத் தொலைத்த காதலன், காதல் தொழில்நுட்பத்தை முற்றும் மறந்தானோ…?” என்று குமுறும் கோதையின் வேதனையை வெளிப்படுத்தும் திருமிகு. ஜெயஸ்ரீஷங்கரின் வரிகள்…

    …இன்றோ பௌர்ணமி…இருந்தும் ஏனோ
    அமாவாசையாய் நீ முகம் கவிழ்த்து
    ‘அன்ராயிட்’டுக்குள் உன்னை அடமானம்
    வைத்துக் கொண்டாய்…!
    உன்னோடு வாய் ஓயாமல் பேசுபவள்
    உனது ‘ஸ்மார்ட்’ கைபேசி..!
    உன்னையே நேசித்து தோற்றுப் போனேனா
    இந்த வாய்பேசி..?
    உனதழகு ‘வொய்ஃபை’ ஓரந்தள்ளி
    அழ வைப்பவள் அந்த ‘ஆப்பிள்’ அழகி…
    அவளே எனக்கு ‘வைஃபை’ அரக்கி..!
    நீ ‘வாட்ஸ் அப்’பில் உறைந்து கிடக்கும்
    வேளையில் நானும் ‘வாட்ஸ் நெக்ஸ்ட்’
    என்று கேட்காமல் உறங்கிக் கிடப்பேன்…!

    *****

    நிஜவுலகின் நிலைதன்னை யதார்த்தமாய் எடுத்தியம்பும் திரு. ஜெயபாரதனின் வரிகள்…

    ஒருபுறம்
    ஆக்கவினை புரிந்து
    கலைத்துவ
    ஆலயம் கட்டுவாள்
    கன்னி ஒருத்தி !
    எதிர்ப்புறம் 
    எதற்கு அதுவென வெறுத்து
    எதிர்ப்பான்
    காளை ஒருவன் !
    இருவர்
    போராட்டத்திற்கும்
    இடையே
    அழிக்கப் பயமுறுத்தும்
    அடுத்தடுத்து
    ஆழிப்
    பேரலைகள் ! 

    *****

    குறும்பாக்களில், மனிதர்களின் உள்ளக் குறிப்புகளைக் குறும்பாக உலகுக்குணர்த்தும் திரு. ருத்ரா. இ. பரமசிவனின் வரிகள்…

    கனவுகளை பிசைந்தனர்.
    கையில் வந்ததோ
    கடலின் சதை.

    அகங்களில் அணைத்திருக்க‌
    முகங்களில் பட்டிமன்றம்.
    மண முறிவா? மண மகிழ்வா?

    பிரம்மன் தோற்றான்.
    மனிதன் வென்றான்.
    உளி இங்கே உள்ளம் அல்லவா.

    *****

    ”தன்னுடைய பிறந்தநாள், ஊடலின் பிறந்தநாளாய் மாறிப்போனதில் மங்கைக்கு வருத்தம்தான்! காதலன் ஊடல்தீர்க்கக் கோட்டை கட்டுகிறாள் மணலில்!” என அழகிய கதைசொல்லும் திரு. பழனிச்சாமியின் வரிகள்…

    அலைகடலின் ஓரத்தில்
    அந்திசாயும் நேரத்தில் 
    சந்திக்க வந்தவனோ
    சற்றேதான் தூரத்தில்
    மற்றொரு நாளென்றால்

    மன்னிப்புத் தந்திடுவாள்
    இன்றைக்குப் பிறந்தநாள்
    இயற்கையின் பேரழகில்
    மயங்கியே  ரசித்திடஓர்

    மந்திரம் சொன்னவளை
    சந்தித்த வேளையிலா
    சச்சரவு எழவேண்டும் 
    […]
    தவிக்கின்ற பெண்ணைவிட்டு
    தனியேதான் இருக்கின்றான்
    இனிமையான பொழுதுதான்
    இம்சையைத் தருகிறது

    *****

    ”மழைவருமுன்னே இம்மண்சிற்பத்தைப் படமெடுத்துவிடு மன்னவா! அசலழிந்தாலும் நகலிருக்கும் அலைபேசியில் என்றும்!” எனும் காதலியின் கோரிக்கையைக் கூறும் திருமிகு. சியாமளா ராஜசேகரின் வரிகள்…

    அடிவானம் கருத்திருச்சு
    அடைமழைக்கும் வாய்ப்பிருக்கு 
    அலைகளெல்லாம் ஆர்ப்பரித்து 
    அருகினிலே வருகிறது
    அச்சமென்னுள்  தோன்றிடுது 
    அழிந்திடுமோ சிற்பமென ….!
    அதற்குள்நீ சீக்கிரமாய்  

    அலைபேசிக் காமராவில் 
    அடுக்கடுக்காய்ப் படம்பிடிப்பாய்  
    அசலழிந்து போனாலும் 
    அற்புதமாய்ப்  பதிந்தநகல் 
    அழியாது ஆயுளுக்கும் …!!

    *****

    காதல் தலைவனின் புறக்கணிப்பைத் தாளமாட்டாத தலைவியின் மனப்போராட்டத்தை விளக்கியிருக்கும் திரு. செல்வக்குமார் சங்கரநாராயணனின் வரிகள்…

    விளையாட்டாய் நினைத்து நீ 
    வேடிக்கை பார்ப்பதற்குமோ 
    தகுதியை இழந்திருக்கிறது 
    உனக்கான என் கனவு மாளிகை
    அலையது கூட இதைக் காக்க

    முன்னேற்றவில்லை அன்பே! 
    […]
    எவ்வளவு விசித்திரம் அன்பே இந்தக் காதல் 
    எனக்கான நீ உனக்கான யாரையோ 
    தேடுவதை 
    என் கண் முன்னே காட்டிக் கரைய வைக்கிறதே!

    *****

    அற்ப ஆசைகளை விடுத்து அன்பினில் ஒன்றாய் இணைய ஆசைக்காதலனை அழைக்கும் ஆயிழையை அறியத்தரும் திரு. செண்பக ஜெகதீசனின் வரிகள்…

    சிற்பம் அழகாய் மணலினிலே
         செய்தவள் உள்ளம் பாராமல்,
    கற்பனை உலகில் சஞ்சரிக்கும்
         கணவன் மனமும் மாறாதோ…
    அற்பமாம் ஆசைகள் புறந்தள்ளி
         அன்பிலே ஒன்றாய் இணைந்தாலே,
    கற்பனை மிஞ்சிய நல்வாழ்வு
         கனிந்திடும் இனிய இல்லறத்திலே…!

    *****

    அலைபேசியில் மூழ்கி, ஆசையாய் மனைவி வடித்த கலைவண்ணத்தைக் காணமறந்த கணவனின் நிலைக்காகக் கவலும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    நீண்ட நெடிய தொலைபேசி உரையாடல் முடிந்து
    மெல்ல தலை திருப்பி பார்க்கும் கணவனுக்கு
    மனைவியின் கைவண்ணத்தில் மண் கோட்டை
    காதல் கோட்டையாய் காட்சி தருமா ? – அல்லது
    கவனக் குறைவாய் கைபட்டு – எழிலாய் எழுந்திருக்கும்
    ஆசைக் கோட்டையும் சரிந்து விட – அதை
    அறியக்கூட முடியாத அளவுக்கு
    பணிகளும் சுமைகளும் அவனையே
    ஆக்கிரமித்து விடுமா ?

     *****

    ”கணவனின் துணையோடு தான் வாழவிருக்கும் இல்லத்திற்கான மாதிரி வடிவமே இது!” எனும் முன்னுரையோடு மங்கையொருத்தி தன் ஆசைகளைப் பட்டியலிடுவதைப் பகரும் திரு. அமீரின் வரிகள்…

    மணல்கொண்டு
    மனக்கோட்டை கட்டவில்லை சுந்தரா
    உன் துணைகொண்டுவாழ
    மாதிரி கோட்டை கட்டுகிறேன் நமக்காக!
    […]
    வடக்கு பார்த்த வாசல்
    மேற்கில்  பரந்த தோட்டம்!
    வடக்கு பக்கம் நீர்நிலை
    தெற்கு பக்கம் பெட்டக அறை!
    […]
    ஐந்தடியில் தலைவாசல்
    பூவேலை கதவினில்!
    பொன்வண்ண வெளிப்பூச்சு
    இளவண்ண உட்பூச்சு!
    திரைசீலை தொங்கவிட்டு
    அழகாய் அதை மடித்துகட்டி!
    என்னிரண்டு அறைகளோடு
    மிளிரவேண்டும் நவீனகலை!

    *****

    ”வாரநாட்கள் முழுவதும் அலுவலகத்திலேயே உழலும் இவர்களுக்கான ஒரே பொழுதுபோக்கு இந்தக்கடற்கரையும், மணல் விளையாட்டும்தான்! இவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!” என்று அன்புக் கட்டளையிடும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

    சின்ன வயசு சந்தோஷத்தை
    சிறைபடுத்தி மண்ணிலே
    கலையுணர்வு  காண
    […]
    தங்களை தாங்களே
    புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள்
    அடுத்த  நாள்  விடியலுக்காக
    பாவம் அவர்கள்
    வேலைப்பளுவில்
    இந்த சின்ன சந்தோஷத்திற்காக
    கடற்கரை  மணலில்  ஹாயாக!
    யாரும் டிஸ்டர்ப் செய்யாதீர்கள்

    *****

    ”புவியிலே நான் மணல்மாளிகை கட்டுகிறேன், நீ அப்புறம் திரும்பி (அலைபேசியில்) ஓர் கவிமாளிகை கட்டேன்!” என்று காதலனுக்கு யோசனை சொல்லும் காதலியைக் காண்பிக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் வரிகள்…

    வார்த்து முடியும் வரை
    பார்க்காது இந்தப் புறம்
    சேர்த்திடு காதல் வரிகள்.
    காதல் பித்தம் ஏறியும்
    கலைப் பித்து முற்றிட
    காவற்காரனாய் நீ மாற
    ஆவல் தீர்க்கிறேன் நான்.

    *****

    தன் காதல் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடுமோ? என்று அஞ்சிக் கண்ணீர்சிந்தும் காரிகையின் அவலத்தை, எண்ணத் தூரிகைகொண்டு தீட்டியிருக்கும் திரு. கொ. வை. அரங்கநாதனின் வரிகள்…

    அன்று
    கடலோரம் நீ
    காதலால் கட்டிய கோட்டை
    மணல் கோட்டையாகுமென
    மனதாலும் நினைக்கவில்லை
    உச்சி சிலை

    உயிர் காக்கும்
    சாமி என்றாய்
    மீசை இரண்டும்

    நம் ஆசை காக்க
    ஆண்டவன் இட்ட
    வேலி என்றாய்
    […]
    உன் சிரித்த முகத்தையும்
    சிந்திய சொற்களையும்
    கைபேசியில் அடைத்து வைத்து
    கண்ணீரில் வார்த்தெடுத்து
    தினமும்
    கனவுகளில் கரைகிறேன்

    *****

    ”கடற்கரைக் காதற்படகிற்கு எவரோ துடுப்பு?” என்று வினாத்தொடுக்கும் திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

    வெளிச்சத்தில் நின்று இருளுக்குள் செல்ல 
    உளியற்ற எண்ணம் செதுக்கும் –களிப்பற்ற 
    பாதை கடக்கும்  பயணமன்றோ காதலெனும்  
    போதை சரிக்கும் புயல்.

    அணிந்த சிவப்பு அறிவிப்பை ஏற்றுத் 
    துணிந்து துடியாய் துடிக்க – கணித்த 
    கடவுளின் நீதி கடற்கரை காதல் 
    படகிற் கெவரோ  துடுப்பு?

    *****

    வாழ்வின் சூட்சுமத்தை, வாழ்வியல் நெறிதன்னை வகையாய் உரைத்திடும் திரு. சுரேஜமீயின் வரிகள்…

    வாழ்வில் இருபக்கம்
    வசந்தம் ஒருபக்கம்
    வாடும் மறுபக்கம்
    வளைத்துப் பழகிக்கொள்!
    வாழ்வே சுகமாகும்

    வளர்தமிழ் தினம்படித்து
    வள்ளுவம் ஏகிடுவாய்
    வாழ்வின் நெறிவிளங்கும்!
    […]

    மணலினின் தேடாதே
    மானுடம் தேடிஎடு
    காற்றினில் கலந்துவந்து
    கடவுளாய் வாழ்த்திடுவேன்!!

    வீடுகட்ட வேண்டும் எனும் தன் ஆசைக்கனவின் வெளிப்பாடாய் மணல்வீடுகட்டி மகிழ்ந்திருக்கும் மங்கையின் மனநிலையை விவரிக்கும் திருமிகு. ராதா மரியரத்தினத்தின் வரிகள்…

    நேற்றுக் கடற்கரைக்குச் 
    சென்று மண் அளைகையிலே
    வீட்டுக் கனவு வந்து 
    கையது தன்னாலே
    கட்டியது மணல் வீடு
    கனவினில் கண்டது
    நிஜத்தினில் வந்து நிற்க​
    பனித்தது எந்தன் கண்கள்
    என் கனவு வீட்டைப் பாரீர்

    *****

    மேட்டு நிலத்தினிலே மணற்கோட்டை கட்டும் குமரியின் குதூகலத்தைக் காட்டும் திரு. சிவராமனின் வரிகள்…

    ஆட்டமும் பாட்டமும் அன்போ டியைந்திட்டு
    வாட்டமாய் நாம்வாழ வாசல் பலவைத்து
    மேட்டு நிலத்தினில் மாளிகை போன்றதோர்
    கோட்டையைக் கட்டு கிறேன்

    *****

    அழகிய சொற்களால் கவிதைக்கோட்டைகள் எழுப்பிய உங்களனைவருக்கும் பாராட்டுக்கள் கவிஞர்களே!

    அடுத்த கேள்வி…இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என்பதே!

    ஆடவனின் முரட்டுப் பிடிவாதத்தையும் அவனிடம் யாசிப்பதே பெண்மையின் இலக்கணம் என்றாகிப் போகும் உள்ளம் சுடும் நிதர்சனத்தையும்  உருக்கமாய் வடித்திருக்கும் ”மணல் வீடு…’எனும் கவிதை என் மனவீட்டைக் கொள்ளைகொண்டது.

    அக்கவிதை…

    ஒவ்வொரு முறையும் 
    காத்துக் கிடக்கின்றேன்
    முகம் காட்ட மறுக்கும் 
    முரட்டுப் பிடிவாதத்துக்குப்
    பின்னான முரண்படுதல்களில் எல்லாம் 
    யாசிப்பவளாக மட்டுமே…

    பூங்கொத்துக்கள் பரிசளிக்கவே
    விரும்புகின்றவள் 
    என்றான போதும்…கீறிடும்
    முட்களைப் பற்றிய 
    முன்னெச்சரிக்கையில்
    மெல்லக் கூம்பி இதழ் 
    உதிர்க்கிறது என் தனிமை…

    கடந்து போன ஒன்றுக்குள் இருந்து
    என்னைத் தொலைப்பவனும்
    தொலைந்து போகும் ஒன்றுக்குள் இருந்து
    என்னை மீட்டெடுத்துக் காப்பவனும்
    என்றாகிப் போன உனக்கு….
    இம்முறையும் பரிசளிக்கிறேன்
    மணலால் செய்த மாளிகை ஒன்றை
    உனக்கான காயங்கள் ஏதுமின்றி 
    வழமை போல கலைத்து விட்டுப் போ….
    எனக்கான நேசத்தில் 
    குறைவற்றுப் போகும் வரை
    உனக்கான முகத் திருப்பலுக்காய்
    முயற்சிக்க வைத்தலில்
    குறை ஒன்றும் இல்லை…

    இக்கவிதையின் ஆசிரியர் திரு. சாயாசுந்தரத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

    அடுத்து, கண்ணீரோடு மங்கையெழுப்பும் மணற்கோட்டையில் கொட்டிக்கிடக்கும் அவளன்பை அழகான சொற்களால் கவிதையாய்த் தொடுத்திருக்கும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகளும் மனத்தை நிறைத்தன. அவரைப் பாராட்டுக்குரியவராய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    அக்கவிதை…

    கண்ணீர் துகள்களின் சேர்க்கையாய்
    மணல்துகள்கள் அவள் கைகளுள்!
    கைகள் பிசைந்ததில் பிரசவித்துக்
    கொண்டிருந்தன மணல் கோட்டைகள்
    மனக் கோட்டைகளின் பிரதிபலிப்பாய் !
    கண்ணீரின் உப்பும் மணல் துகளில்
    கடல் நீரின் உப்புடன் சேர்ந்தே இருந்தது !
    தொலைத்து விட்ட பிள்ளைப் பிராயத்தைத்
    தேடிக் கொண்டிருந்தன அவள் கைகள்
    சிலையாகும் ஒரு மணல் மாளிகையில்!
    கரை தழுவும் கடல் அலைகள் -அதைக்
    கரைத்தும் செல்லும் யதார்த்தங்கள்
    அவள் ஆழ் மனதின் ஏக்கங்கள் போல
    அழிந்து பொசுங்கித் துகள்கள் ஆக்கலாம்…
    சில பொழுதாவது சிதைந்து போகாத
    அழகியல் நிலையை ரசித்துக் கொண்டே
    நிர்மாணித்துக் கொண்டிருந்தாள் – தன்
    உள்ளக் கிடக்கையைப் பகிரங்கமாக!
    மணல் மாளிகை நிறைத்த அறைகள் யாவும்
    தன் அன்பை நிறைத்திருந்தாள்…அவனோ
    புறமுதுகிட்டே புறக்கணிப்பு நிகழ்த்துகிறான்…!

    கவிஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    Share
  • அன்னையர் தினச் சிந்தனைகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இன்று அன்னையர் தினம். அன்னையரைக் போற்றிக் கொண்டாடவேண்டிய நன்னாள். கடந்த சில ஆண்டுகளாக உலகிலுள்ள பல நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு அன்னையர் தினத்தை வெகு உற்சாகத்தோடு கொண்டாடி வருவது நாமறிந்ததே!

    அன்னையர் தினத்தை அன்னா ஜார்விஸ் எனும் பெண்மணி 1908-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி அமெரிக்காவில் பிள்ளையார்சுழிப் போட்டு ஆரம்பித்து வைத்தாலும் அதன் நதிமூலம் என்னவோ நம்மை இங்கிலாந்தை நோக்கி இழுத்துச் செல்கின்றது.

    இடைக்காலத்தில், இங்கிலாந்தின் (Medieval England) பணக்கார வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்த சிறுவர், சிறுமியர் தம்முடைய எஜமானர்களின் வீடுகளிலேயே தங்கியிருந்து வேலை செய்வதே வழக்கமாயிருந்தது. தங்கள் சொந்த ஊர்களிலிருந்து வெளியூர்களுக்குச் சென்று இவ்வாறு பணிபுரிந்துவந்த இந்த ஏழைச்சிறுவர்கள் தம் சொந்த ஊர்களுக்குச் சென்று தம்முடைய வழிபடு தெய்வமாகிய அன்னை மேரியைத் தொழுவதற்கு எஜமானர்களால் ஒருநாள் விடுப்பு அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அவ் விடுமுறைதினம் மே மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது எனவும், அந்நாள் ’Mothering Sunday’ என்ற சிறப்புப்பெயரோடு அழைக்கப்பட்டது எனவும் தெரியவருகின்றது.

    கிறித்துவ அன்னை மேரியை வழிபடச்செல்லும் அச்சிறுவர்கள் அவ்வழிபாட்டின்பின் தமையீன்ற அன்னையரையும் காண மலர்களோடும், மகிழ்வோடும் தம் இல்லங்களுக்குச் சென்றனர். அந்நன்னாளில் பழங்களினால் ஆன சிம்னல் (Simnel Cake) கேக்கையும் செய்து மகிழ்ந்திருக்கின்றனர் இங்கிலாந்து மக்கள். இன்றும் அந்தநாளை நினைவுகூறும் வகையில் ’சிம்னல் கேக்’ செய்யும் வழக்கம் இங்கிலாந்தில் இருக்கின்றதாம்.

    இவ்வாறு இங்கிலாந்தில் முளைவிட்டு, அமெரிக்காவில் எழுச்சிபெற்ற அன்னையர் தினத்தை பின்பு உலகின் பெரும்பாலான நாடுகள் தத்து எடுத்துக்கொண்டுவிட்டன.

    இனி, அன்னையர் தினத்தின் நாயகியரான அன்னையரைப் பற்றியும் சற்று சிந்திப்போம்.

    அனைத்து உறவுகளினும் புனிதமானது அன்னையெனும் உறவே. அது உன்னதமானது; தன்னலமற்றது. பூமித்தாயினும் விஞ்சிய பொறுமையோடு நம் தாய்மார்கள் குடும்பங்களைத் தம் தியாகத்தால் தாங்கிப்பிடிப்பதால்தான் குடும்பம் எனும் கட்டமைப்பு இன்னும் நம் புண்ணிய பாரதத்தில் சிதறிப்போகாமல் உறுதியாய் நிற்கின்றது. குடும்பத்தின் விளக்காகத் திகழ்ந்து அதனைச் சுடர்விட்டு ஒளிரச் செய்பவள் தாய்.

    முந்தித் தவமிருந்து முந்நூறு நாள் சுமந்து பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவள் அன்னை. தன் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக உழைப்பதே தன் தலையாயக் கடமை எனும் எண்ணம் கொண்டவள் அவள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி உண்ணச் சோறில்லாமல் தான் பட்டினி கிடக்கும் நிலைவந்தாலும், தன் பிள்ளைகளின் வயிறு வாடக்கூடாது என்று எண்ணி, இருப்பதைக் குழந்தைகளுக்குக் கொடுத்துக் காக்கும் வள்ளல் அவள்!

    ’ஈன்ற புறந்தருதல் என் தலைக்கடனே; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்றாள் சங்ககாலத் தாயொருத்தி. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. பல குடும்பங்களில் தம் பிள்ளைகளைச் சான்றோராக்குவதும் அன்னையரே! கல்வியறிவு நிரம்பப்பெற்ற இன்றைய தாய்மார்கள் உண்டிகொடுத்துக் குடும்பத்தார்க்கு உயிர்கொடுப்பதோடு தம் கடமை முடிந்தது என்று நின்றுவிடாமல் கல்வியெனும் அழிவற்ற செல்வத்தையும் பிள்ளைகளுக்கு அளித்து இரண்டாவது ஆசிரியராகவும் செயலாற்றுகின்றனர்.

    கற்றாரும் மற்றாரும் போற்றும் சான்றோனாகத் தன் மகனைப் பார்ப்பதில்தான் ஓர் தாய்க்கு எத்துணை மகிழ்ச்சி! அப்போது அவள் அடையும் உவகை அக்குழந்தையை ஈன்றபோது அவளடைந்த உவகையைவிட மிகப்பெரிது என்பார் தெய்வப்புலவர்.

    ”ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்”
    என்பது அவர் திருவாக்கு.

    தாய்ப்பாலோடு வீரத்தையும் ஊட்டி வளர்த்தனர் அன்றைய தாயர் என்பதைச் சங்க நூல்கள் வாயிலாய் அறிந்து மகிழ்கின்றோம். தன் மகன் புறப்புண்பட்டு இறந்திருந்தால் அவனுக்குப் பாலூட்டிய மார்பை அறுத்தெறிவேன் என்று வீரத்தோடு முழங்கிய தாயையும், போரில் தன் தந்தையையும், கணவனையும் இழந்தபின்னும் தைரியம் இழக்காது குடும்பத்தின் கொழுந்தாக இருந்த ஒரே மகனையும் போருக்கு அனுப்புகின்ற மறத் தாயையும் கண்டு மெய்சிலிர்த்துப் போகிறோம் நாம்!

    இன்னொருபுறம் அன்புமகள் தான் விரும்பிய காதலனோடு தன்னிடம் சொல்லாமல் சென்றுவிட, அவளை ஆசையோடு வளர்த்த அன்னை, அவள் வளர்த்த பிராணிகளையும், அவள் வைத்து விளையாடிய பொம்மைகளையும் கண்டுக் கண்ணீர்சொரிந்து ஏங்கியழுவதை நம் பண்டைய இலக்கியங்கள் உருக்கத்தோடு காட்டுவதைப் பார்த்து மனம் பதைக்கின்றோம்.

    இதுவென் பாவை பாவை யிதுவென்
    அலமரு
    நோக்கின் நலம்வரு சுடர்நுதற்
    பைங்கிளி
    யெடுத்த பைங்கிளி யென்றிவை
    காண்டொறுங்
    காண்டொறுங் கலங்க
    நீங்கின
    ளோவென் பூங்க ணோளே. (ஐங்: 375)

    காலங்கள் மாறலாம்; மனிதர்கொண்ட கோலங்கள் மாறலாம். ஆனால் என்றும் மாறாதது தன்னேரிலாத தாயன்பு. பிள்ளைகள் வல்லவராய் இருப்பதைவிட நல்லவராய் இருக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு தாயின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஆகும். தங்கள் எதிர்பார்ப்பு நன்முறையில் நிறைவேற வேண்டும் என்று எண்ணியே பல தாய்மார்கள் நம்முடைய புராணங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும் சிறந்த கதாபாத்திரங்களைப் பற்றியும் அவர்தம் குணநலன்கள் பற்றியும் தம் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்ப்பர்.

    நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளுக்குச் சத்தியத்தின் நித்தியத்தை உணர்த்தியது, அவருடைய அன்னை புத்லிபாய் சிறுவயதில் அவருக்குச் சொல்லிய அரிச்சந்திரன் எனும் வாய்மை வழுவாத மன்னனின் வரலாறே என்று அறிகின்றோம். அதுபோல் மராட்டிய சிவாஜியை வீரசிவாஜியாக மாற்றியது அவருடைய அன்னை சொல்லிய வீரக்கதைகளே என்றும் கேள்விப்படுகின்றோம்.

    மொழியைத் தாய்மொழியென்றும், நாட்டைத் தாய்நாடென்றும் போற்றிக் கொண்டாடும் நம் மரபே தாய்க்கு நாம்தரும் உயர்வைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. படமாக ஆடிக்கொண்டிருக்கும் தெய்வங்களைவிடவும் நம்மெதிரில் நடமாடிக்கொண்டிருக்கும் தாய்மார்களே நாம் வணங்கி வழிபடவேண்டிய இல்லுறை தெய்வங்கள்.

    தனக்கென்று தனியான ஆசைகள் எதையும் வைத்துக்கொள்ளாமல் தம் பிள்ளைகளுக்காவே வாழும் அன்னையருக்குப் பிள்ளைகள் கைம்மாறாகச் செய்யவேண்டியது என்ன? இல்லங்களை எழிலாக்கும் மனை விளக்குகளாம் அன்னையரின் ஆசைகளை, அவர்தம் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவதும், வயதான காலத்தில் அவர்களைப் புறக்கணிக்காது அன்போடு பேணிக்காப்பதுமே அவை.

    அன்னையர் தினத்தன்று மட்டும் அன்னையரைக் கொண்டாடுவது அயல்நாட்டு மரபு; அன்பின் திருவுருவாய், ஆற்றலின் உறைவிடமாய்த் திகழும் அன்னையரைத் தினமும் கொண்டுவதே நம் இந்திய மரபு. எனவே அன்னையரை நிதமும் போற்றுவோம்; அன்னையர் தினத்தன்று இன்னும் சற்றுச் சிறப்பாகவே!

    Share
  • படக்கவிதைப் போட்டி 10-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் போட்டிக்கான ஒளிப்படத்தைத் தந்திருக்கும் திரு. என். எஸ். ஹ்ரிஷிகேஷுக்கும், இதனைப் போட்டிக்கான படமாகத் தேர்வுசெய்த திருமிகு. சாந்தி மாரியப்பனுக்கும் எங்கள் நன்றி.

    dog my darling

    நாய்க்குட்டியைக் கொஞ்சும் நங்கையின் புகைப்படம் பல எண்ண அலைகளை மனக்கடலில் எழுப்புகின்றது. மனிதருக்குக் காவலாய், அவர்களுக்குக் காதலாய், நன்றி பாராட்டுதலில் தன்னை ஒப்பாரின்றித் திகழும் ஒரே உயிர் நானிலத்தில் நாயன்றி வேறில்லை. அதனாலன்றோ நன்னெறிகளை நுவலுகின்ற நாலடியார், ”யானையின் குணமுடையாரின் நட்பை விடுத்து நாயின் குணமுடையாரிடம் நட்பு கொள்க” என்று அறிவுறுத்துகின்றது.

    யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
    கேண்மை
    கெழீஇக் கொளல்வேண்டும் யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
    மெய்யதா வால்குழைக்கும் நாய்.
    (நாலடி: 213)

    இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் என் கவனத்தைக் கவர்ந்தவற்றைப் பட்டியலிடுகிறேன்.

    *****

    நளின மொழியில் நாயின் புகழ்பாடும் திரு. கவிஜியின் வரிகள்…

    உன் செல்ல சிணுங்கலை  
    பிடித்துக் கொண்டு போகிறது 
    முன் வாசல்கடந்து போகும் 
    மண் வாசனை…
    […]
    வீடெங்கும் சொட்டும் 
    உன் ஈரப் பாதங்களில் 
    நீர்க் கோடுகள்…
    வளைந்து நெளிந்து
    வால் ஆட்டுவதில், 
    அழகு கூட்டுகிறது 
    உன் உடல்…

    *****

    வாழ்வின் யதார்த்தம் பேசும் திருமிகு. சாரா பானுவின் வரிகள்…

    உன்னை முத்தமிட்டால் கிடைத்து விடுகிறது
    மாற்றாக வாலாட்டல், சிறு துள்ளல், செல்ல உரசல்என பாசப்பரிமாற்றம்….
    கிடைப்பதில்லை இங்கு பலசமயம் பரிவு கூட…

    *****

    நிகழ்வின் அழகைப் படம்பிடிக்கும் திரு. கட்டாரியின் வரிகள்…

    இப்படியே பிள்ளையாகிவிடு….
    என்னும்..இவளின் 
    முத்தத்தைப் போல……
    எதற்காகத் தவறவிட்டாள்
    என்னைப் பெற்றவள்… என்னும்
    இவனின்… தேடல்களைப்
    போல…
    நிழந்துகொண்டிருப்பது….
    அழகாகிறது….!!

    *****

    இயற்கையோடும், விலங்குகளோடும் பேணும் உறவு மனிதர்களோடு சாத்தியமற்றுப்போவதை விளக்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனின் வரிகள்…

    உன்னோடும் 
    மலைகளோடும்
    பூக்களோடும்
    நதிகளோடும்
    மனம் கொள்கிற
    உறவை
    சக மனிதர்களோடு
    கொள்ள முடிவதில்லை
    நன்றியுள்ள நீ மேல்
    மனிதர்களைவிட!

    *****

    ”பெற்றால்தான் பிள்ளையா? நீயும் என் குழந்தையே!” என்று நாய்க்குட்டியை அரவணைக்கும் திருமிகு. சியாமளா ராஜசேகரின் வரிகள்…

    தன்னந் தனியாய்த் தவித்திட்டக் குட்டியுனை
    அன்னையாய் நானும் அரவணைப்பேன் – அன்புடன் 
    கொஞ்சி மகிழ்வேன் குழந்தையாய்க் காத்திடுவேன் 
    அஞ்சாதே என்றும் இனி.

    *****

    மனிதருக்கு மனிதரே எதிரியாகும் தருணங்களைப் பட்டியலிட்டு நாயின் அன்புதரும் கதகதப்பைக் கவினுறக் கழறும் திரு.ருத்ரா இ. பரமசிவனின் வரிகள்…

    …மனிதருக்கு மனிதர்
    முன்பின் தெரியாமல் இருக்கும்போதே
    இப்போது
    மனிதருக்கு மனிதரே எதிரி.
    […]
    உன் விழியின்
    குறு குறுப்பும்
    செவி மடல்களின்
    உடுக்கை அடிப்புகளில்
    உதிர்ந்து விழும்
    அந்த இனிய ஓசைத்துடிப்புகளும்
    மட்டுமே போதும்.
    இந்த உலகத்தை
    விரித்து மடக்கி
    நீ உட்காரத்தருகிறேன் வா!

    *****

    அன்பே நம் மதம், அதுவே நம் வேதம், அதை ஓதுவோம் நிதமென்று அன்பின் வலிமையை வளமையாய்ச் சொல்லியிருக்கும் திரு. சுரேஜமீயின் வரிகள்…

    உலகின் 
    இன்பத்தை
    உன் அணைப்பில்
    காணும் ஒவ்வொரு
    கணமும் நான்
    புத்துயிர் பெறுகிறேன்!
    […]
    உயிர்கள்

    ஒன்றுதானே
    வாழும் 
    உயிர்க்கு!
    மரணம் 
    உண்டுதானே
    வாழ்வில்
    எவர்க்கும்!
    […]
    மனிதன் மாறட்டும்;
    மனங்கள் விரியட்டும்;
    புறங்கள் தெளியட்டும்;
    கரங்கள் நீளட்டும்!

    *****

    காளமேகப் புலவராய் மாறி நாயின் குணத்தோடு மனத்தை இணைத்து இரட்டுற மொழிந்திருக்கும் திரு. எஸ். பழனிச்சாமியின் வரிகள்…

    அன்பால் வசமாகும் வீட்டில் ரகசியமாய்
    கன்னம் இடுவோரைக் கண்டதும் – மென்னி
    பிடிக்கத் துடிக்கும் விளையாடி பல்லால்
    கடிக்கும் குலைக்கும் அதட்டி..
    […]
    அன்பைப் பொழியும் அவரின் அடிமையாய்
    தன்னையே தந்து முடிந்திடும் – ஒன்றியே
    நன்றியைக் காட்டிடும் சித்தர்தம் கூற்றினால்
    என்றும் மனமது நாய்.

    *****

    நாய்க்குட்டியின் நல்லன்பில் நெகிழ்ந்திருக்கும் பெண்ணின் மனத்தைக் காட்டும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    ஒரு சிறு வருடல் தான்
    நான் உனக்கு கொடுத்தது –
    வாலாட்டியபடியே என் கைகளில்
    தஞ்சமானாய் ! – உந்தன்
    அன்பை மழையாய் பொழிந்தாய் !
    […]
    தன்னலமிலா உந்தன் அன்பே
    உயர்வென்று உரக்க சொல்வேன் !

    *****

    ”வெறிச்சோடிய இல்லத்தின் வெறுமையைப் போக்கிய சுடரொளியே!” என்று நாயைக் கொஞ்சும் தாயின் அன்பை நயமுறச் செப்பும் திரு. சி. ஜெயபாரதனின் வரிகள்…

    வெறிச்சோடிச்
    சூனிய மான இல்லத்தை
    உயிர்ப்பித்து
    சூட்டிகையாய், சுடர் ஒளியாய்,
    சுறுசுறுப்பாய் நீ
    […]
    என் தனிமை போக்கி
    இனிமையுடன் , இன்முகத்துடன்
    தவழும் பிள்ளையாய்
    உன்னை நான்
    தத்தெடுத்தேன் ! 
    முத்தம் ஒன்று தருகிறேன்
    அத்தாட்சி யாக
    மடிமேல்
    தாவிய உனக்கு !

    *****

    சிந்தையில் மகிழ்ச்சியை விதைத்து வாழ்வை அர்த்தமாக்குகின்ற நாயின் நற்பண்பை வியக்கும் திருமிகு. துஷ்யந்தியின் வரிகள்…

    ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
    என் சிந்தையில் பறப்பதாய்
    எனக்குள்ளே ஆனந்தம்
    நீ பசியாலே துடிக்கையில்
    பதறித்தான் போகின்றேன்
    தினம் கண் விழிக்கையில்
    வழியெங்கும் தேடுகிறேன்….
    […]
    சின்னவள் உன்னிடம்
    நற்பண்பை உணர்கிறேன்
    நன்றியின் அர்த்தந்தனை
    நன்றே கற்றுக் கொள்கிறேன்…

    *****

    வாலாட்டி நிற்கும் நாய்ப்பாசத்தை வியக்கும் பெண்மையைத் தன் கவிதையின் பாடுபொருளாக்கிய திரு. ஜெயராம சர்மாவின் வரிகள்…

    வாலாட்டி வாலாட்டி வலம்வந்து நிற்பாயே
    வாசல்வந்து நின்றுவெனை வரவேற்றும் நிற்பாயே
    நோயென்று நான்படுத்தால் நூறுதரம் நக்கிடுவாய்
    வாய்பேசா விட்டிடினும் மனமெல்லாம் நீதானே ! 

    *****

    நங்கையிடம் நாய்க்குட்டியே தன்னிலை நவிலுமழகை, தன்பிறப்பை இகழும் மனிதனின் மடமையை எண்ணி அது வருந்துவதைக் காட்டும் திருமிகு. பி. ஆர். லட்சுமியின் வரிகள்…

    உன் உள்ளங்கை ஸ்பரிசம்
    தாயின் கருப்பை பாதுகாப்பு
    உனது இதழ்களின் தொடுதல்
    தாயின் தாலாட்டு!
    […]
    பிறப்பாலே நன்றி அவதாரமாக நான்!
    எங்கோ ஒருவன் என் பிறப்பு
    வேண்டாம் என்ற உச்சரிப்புடன் 
    இறைவனிடம் மண்டியிட 
    காரணம் புரியாத சோகத்தில் நான்!

    *****

    ’நாயின் துணையே நற்றுணையாம்’ என்று போற்றும் திரு. செண்பக ஜெகதீசனின் வரிகள்…

    நன்றி யுள்ளது நாயென்றுதான்
         நல்ல துணையும் அதுவென்றுதான்,
    நன்றெனக் கொண்ட நட்பென்றுதான்
         நாளும் உதவிடும் கரமென்றுதான்,
    என்றும் ஏய்த்திடா உறவென்றுதான்
         எதிரியை ஓட்டிடும் பகையென்றுதான்,
    ஒன்றிய நட்பில் உயர்வென்றுதான்
         உன்னைக் கொண்டேன் நாய்க்குட்டியே…!

    *****

    பேரன்பின் பிறப்பிடமாய்க் காட்சியளிக்கும் ஈருயிர்களைப் பாராட்டும் திரு. அமீரின் வரிகள்…

    கூறடா
    உன்னத
    அன்புக்கு பாத்தியம்
    மாறடா
    கண்டிதை
    பேரன்பு சாத்தியம்.
    பாருடா
    கருணைக்கு
    தாயான இளையவளை
    பாடுடா
    துயர் நீக்க
    தோள்கொடுக்கும் மூத்தவளை
    வாழுடா
    உயிரனைத்தும்
    நேசித்து மண்ணிலே…

    *****

    மனம் நடுங்கவைக்கும் நிலநடுக்கத்தில் சிக்கி உறவுகளை இழந்த பெண்ணுக்கு உற்றதுணையாய்க் கிடைத்த நாய்க்குட்டியை வாழ்த்தும் திரு. மெய்யன் நடராஜின் நேச வரிகள்…

    கோடி குவித்து குவலயம் ஆண்டவரும் 
    மாடி மனையிடிந்து மண்ணுக்குள் –மூடி 
    முடங்கி ஒருநொடியில் மூச்சடக்க வைத்த 
    இடத்தில் துணைநீ எனக்கு.
    எதுவுமில்லா வாழ்வில் எனக்கோர் துணையாய் 
    புதுஉறவாய் வந்து கிடைத்தாய். –இதுபோதும் 
    கைத்தடி கொண்ட குருடனினா தாரமாய் 
    மெய்ப்பொருள் காண்பேன்  இனி.

    *****

    ’உயிர்களை இணைக்கும் இன்பமொழி அன்பு’ என்று அன்பின் பெருமையை அகிலத்துக்குணர்த்தும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    அகிலம் நிறைக்கும் மொழி அன்பு
    திகிலகற்றும் தீர்க்க மொழி அன்பு
    அன்பில் திளைத்ததனால் ….
    இன்பமே சூழ்ந்திருக்க …
    இவ்வுலகம் மறந்திருந்தோம் !

    *****

    அருமையான கவிதை வரிகளால் அகங்குளிர வைத்த கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக!

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைத் தேர்ந்தெடுக்கும் தருணமிது…

    ’அன்பின் வழியது உயிர்நிலை’ என்பார் ஐயன் திருவள்ளுவர். ஆம்! உலகவாழ்க்கைக்கு ஆதாரமே அன்புதான்! அதிலும் அன்பின் அருமையை நன்குணர்ந்தோர் ஆதரவற்றோரே! அத்தகைய ஆதரவற்றோர் இருவர், அன்பில் இணைவதை, அதில் கரைவதை அழகாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் ஓர் இனிய கவிதை என் மனங்கவர்ந்தது.

    அக்கவிதை…

    தெருவோரத்துக்
    குப்பைத் தொட்டியில்
    தொட்டில் குழந்தையாகி
    நடுங்கிக் கொண்டிருந்தது

    வால் உயர்த்தி…!
    வாலில் ரிப்பன் கட்டி
    நெற்றியில் பொட்டிட்டு
    மை தடவி அழகனுக்கு
    ‘சுப்பிரமணி’ பெயர் சூட்டி
    அழைத்துச் சிரிக்க
    என் முன்னே
    காமெரா கண்களில்லை…!

    வீதியோரத்து
    மரத்தடி நிழலில்
    விதியை நொந்தவள்
    அமர்ந்தேன்…!

    “அனாதை நாயே”
    என அடித்துத் துரத்திய
    முகங்கள் கண்முன்னே…!
    […]
    இறைவன் ஈந்த
    துணையாய்
    நடுங்கிய அவனைக்
    கரங்களில் அணைத்துக்
    கொண்டேன்…!

    கொடுப்பதன் இன்பம்
    பெறுவதன் சுகம்
    மௌனமாய்
    நிமிடத்தில் பரிமாற ..!
    நெஞ்சை அழுத்திய
    பாரம் முழுதும்
    இப்போது அந்தக்
    குப்பைத் தொட்டியை
    நிறைத்தது…!
    அன்பு தரும்
    பாதுகாப்பில்
    உள்ளம் நிறைந்தது..!

    நெஞ்சை நெகிழ்த்தும் இக்கவிதையைப் படைத்த கவிஞர் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    *****

    இன்னொரு கவிதையும் பாடுபொருளின் அமைப்பில் தனித்து நிற்கின்றது.

    அக்கவிதை…

    பள்ளிவிட்டு வந்தவுடன் சொல்ல
    பலப்பல கதைகள் உண்டு என்னிடம்..
    பாந்தமாய் பக்கம் அமர்ந்து
    கேட்கவொரு செவியில்லை இவ்விடம்!

    கதவின் பூட்டுக்கான சாவிமட்டுமே என்னிடம்
    இதயப்பூட்டுக்கான சாவிகளின் இருப்பு எவ்விடம்?

    முதியவர் இல்லத்தில் கூட்டாய் வாழ்கிறது 
    என் மூத்த தலைமுறை
    முந்தைய வாழ்வை தமக்குள் பகிர்ந்தபடி!
    […]
    வெதும்பிக்கழியும் என் நிகழ்காலம் குறித்த 
    பிரக்ஞையற்றவர்களுக்கு
    ஒருபோதும் புரியப்போவதில்லை என் பிரியம்!

    தெருவில் கிடப்பதோடு என்ன கொஞ்சலென்று
    விருட்டென்று என் கைப்பிடித்து 
    வீட்டுக்குள் இழுத்துப்போக
    வெகுநேரம் ஆகப்போவதில்லை.
    அதுவரையிலும்…
    கொஞ்சிக்களித்து கூடியிருப்போம்.. வா!

    இக்கவிதையை இயற்றியுள்ள திருமிகு. கீதா மதிவாணனை இவ்வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

    பங்குபெற்றோர், பாராட்டுப்பெற்றோர் அனைவருக்கும் என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

     

    Share
  • நூல் மதிப்புரை – அம்ருதா

    நூல் மதிப்புரை

    அம்ருதா (வரலாற்றுப் புதினம்)

    ஆசிரியர்: திரு. வெ. திவாகர்

     -மேகலா இராமமூர்த்தி

    சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், வல்லமை மின்னிதழின் ஆசிரியர்குழு ஆலோசகர் என்ற பன்முகங்கள் கொண்டவர் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திரு. வெ. திவாகர். அவருடைய சமீபத்திய வெளியீடாக வந்திருக்கின்றது வரலாற்றுப் புதினம் ‘அம்ருதா.’

    வம்சதாரா, திருமலைத்திருடன், எஸ்எம்எஸ் எம்டன் 22/09/1914 ஆகிய அருமையான வரலாற்றுப் புதினங்களை ஏற்கனவே எழுதி வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் திரு. திவாகர். இவருடைய திருமலைத்திருடன் புதினத்தைப் படித்து அக்கதையில் உள்ளத்தைப் பறிகொடுத்த வாசகர்கள், ’அபயன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட முதற்குலோத்துங்கன், சோழ அரசனான வரலாற்றையும் ஆசிரியர் விரிவாக எழுதவேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுக்க, அதனைப் பூர்த்தி செய்யுமுகத்தான் இப்புதினத்தை எழுதியுள்ளார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

    ’அம்ருதா’ புதினம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்குமுன் இக்கதையின் பின்னணியைச் சுருக்கமாய்க் கூறிவிடுவது பொருத்தமாயிருக்கும் என எண்ணுகின்றேன்.

    விஜயாலயச் சோழரால் கி.பி. 850-இல் நிர்மாணிக்கப்பட்ட பிற்காலச்amrutha 1 சோழவம்சம் அதன்பின்னர் ஆல்போல் செழித்து அறுகுபோல் வேரூன்றி வளர்ந்தது. முதலாம் இராசராசனின் காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியும், பெருமையும் பெற்ற சோழராட்சி, அடுத்துப் பட்டமேறிய அவருடைய திருமகனான முதலாம் இராசேந்திரன் காலத்தில் தென்னகம் மட்டுமல்லாது கிழக்காசிய நாடுகளிலும் பல்கிப் பரவிற்று. இவ்வாறு மீப்பெரு வளர்ச்சி கண்டுவந்த சோழர் தொல்குடி, முதலாம் இராசேந்திரனின் மூன்றாவது மைந்தனான வீரராசேந்திரன் அரியணை ஏறி ஆட்சிசெலுத்தியவரைத் தந்தைவழி மரபிலேயே நீடித்தபோதிலும், அடுத்த பட்டத்துக்குரியவனாக மாமன்னர் முதலாம் இராசேந்திரன் தேர்வு செய்திருந்தது, தன்னருமை மகளான அம்மங்காதேவியின் புதல்வன் அபயனென்னும் முதற் குலோத்துங்கனையே!

    ஆனால் விதியாலும், உள்நாட்டுச் சதியாலும் ஆட்சி வீரராசேந்திரனின் மகன் அதிராசேந்திரனுக்குச் சென்றுவிடுகின்றது. இந்நிலையில் பாட்டனாரின் அபிமானத்துக்குரியவனும், சோழநாட்டு மக்களின் அன்புக்குரியவனுமான அபயனின் நிலை என்ன? அவனால் அதிராசேந்திரனை வென்று ஆட்சியைக் கைப்பற்றமுடிந்ததா? என்பவற்றையெல்லாம் வெகுசிறப்பாக அம்ருதாவில் விவரித்துள்ளார் புதின ஆசிரியர்.

    நண்பர்களே! ஒரு கதையின் வெற்றியில் ஐம்பது விழுக்காடு கதைக்களத்தைச் சரியாய்த் தேர்வு செய்வதில்தான் இருக்கின்றது எனக் கூறலாம். அவ்வடிப்படையில் பார்த்தால், மகோன்னதமான நிலையிலிருந்த சோழசாம்ராஜ்யம் ஒரு பலத்த சரிவைச் சந்திக்கும் வேளையில், வீரமும் விவேகமும் வாய்ந்த அக்குலத்தோன்றலொருவன் அதனை எப்படிச் சீர்செய்து ஆட்சியை நேர்செய்கின்றான் எனும் வரலாறு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அத்தகைய சிக்கலான காலகட்டத்தைக் கதைக்கருவாகத் தெரிவுசெய்த ஆசிரியரின் திறமையை எண்ணி வியக்கின்றேன். கதைக்களத்தைப் போலவே கதையையும் சிறப்பாகவும், வெகுநேர்த்தியாகவும் அவர் நகர்த்திச் செல்லும் பாங்கு அவரை ஓர் தேர்ந்த கதாசிரியராய் முத்திரை குத்த வைக்கின்றது.

    இனி அம்ருதாவைச் சற்று ஆராய்வோம்.

    சோழமன்னன் அதிராசேந்திரனை மணப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காம்போய நாட்டு இளவரசியும், கண்டோர் மயங்கும் கட்டழகியுமான கதாநாயகி அம்ருதா, வேங்கி நாட்டின் விஜயவாடிகைக்குக் (இன்றைய விஜயவாடா) கப்பலில் வந்திறங்குவதிலிருந்து கதை தொடங்கி வாசகர்களின் இரசனைக்கு விருந்தாய் ஒன்பான் சுவைகளையும் (நவரசம்) அள்ளி வழங்கியபடி வளர்ந்து செல்கின்றது. கதையில் இடம்பெற்றுள்ள மாந்தர்கள் அனைவருமே ஒவ்வொரு வகையில் நம் உள்ளத்தைக் கொள்ளையிடுகின்றனர்.

    கதாநாயகனும் வேங்கிநாட்டுக்கு அரசனாக முடிசூட்டப்பட்டவனுமான அபயன் தன் நேர்மை, குறும்புத்தனம், வீரம் முதலியவற்றால் நம்மைக் கவர்கிறானென்றால், அவனுடைய அத்யந்த நண்பனும், வேங்கியின் காவற்படைத் தலைவனுமான நாராயணன் தன்னுடைய அசகாயச் சூரத்தனத்தாலும், சமயோசிதத்தாலும் நம்மைக் காந்தம்போல் ஈர்க்கிறான். சோழர்குலத்தின் குருவாக வருகின்ற அகோரசிவாசாரியார் தன்னுடைய புத்திக்கூர்மை, சோழகுலத்தின் நலனில் காட்டும் அளவற்ற அக்கறை, தெய்வபக்தி முதலியவற்றால் நம்மை வசீகரிக்கின்றார்.

    நற்குணங்களால் இவர்கள் நம் நெஞ்சில் இடம்பிடிக்கின்றார்கள் என்றால், துர்க்குணங்களாலும் நம் கவனத்தைப் பெறுகின்றனர் வேறு சிலர். சாளுக்கிய அரசனான விக்கிலன் (எனும் ஆறாம் விக்கிரமாதித்தன்), வேங்கியின் அரசைக் கைப்பற்ற நினைக்கும் விஜயாதித்தன், போத்தராஜு, ஜனநாதன், மணவாளன் போன்றோர் இவ்வகையினர்.

    ஆண்களின் பாத்திரப்படைப்புக்களை விஞ்சும் வகையில் பெண்பாத்திரங்கள் கதையில் மிளிர்வது பாராட்டத்தக்கது. சான்றாக, சோழ மக்களின் பெருமதிப்புக்குரியவராக விளங்கும் அபயனின் தாய் அம்மங்காதேவி, இளகிய மனமும் இளமை நலமும் வாய்க்கப்பெற்ற சேரஇளவரசி இளவழகி, மருத்துவத்துறையில் ஆழ்ந்த அறிவும், ’மக்கள் சேவையே மகேசன் சேவை’ எனும் உயர்ந்த குறிக்கோளும் கொண்ட இனியபெண் மலையவாசினி, தில்லையம்பலவனிடம் தீராத காதல்கொண்டு அவன் திருப்பதியங்களைப் பாடுவதில் பெருமகிழ்வுகாணும் விக்கிலனின் மனைவியும், சோழநாட்டு இளவரசியுமான யாமினி, அத்தை அம்மங்கைக்குச் சேவை செய்வதிலேயே இன்பமெய்தும் அபயனின் மனைவி மதுரா(ந்தகி) எனப் பெண்களின் பங்களிப்பைக் கணிசமான அளவில் இப்புதினத்தில் காணமுடிகின்றது.

    வெறும் அலங்காரப் பதுமைகளாகப் பெண்களைக் காட்டாமல், தங்கள் உரிமைக்குக் குரல்கொடுக்கும் துணிச்சலும், சுயமரியாதையும் கொண்டோராய் அவர்களை ஆசிரியர் படைத்திருப்பது அவருடைய பெண்ணியச் சிந்தனைகளின் வெளிப்பாடாய்த் திகழ்கின்றது. இதற்கே ஆசிரியரைத் தனியாய்ப் பாராட்டலாம்!

    கதைக்குள் மற்றொரு கதையாய் நாயன்மார்களில் முதன்மையானவராய்க் கருதப்படும் ’தம்பிரான் தோழரான’ சுந்தரமூர்த்தி நாயனார், திருவொற்றியூர் திருத்தலத்தில் சங்கிலி நாச்சியாரை மணந்த வரலாறு சுவையாகப் பேசப்பட்டுள்ளது. இவ்வரலாற்றை மிகச்சரியான இடத்தில் பொருத்தியிருக்கும் ஆசிரியரின் நுண்மாண்நுழைபுலம் போற்றத்தக்கது.

    இவையேயன்றி, திடுக்கிட வைக்கும் திருப்பங்கள், திகைக்க வைக்கும் மர்மங்கள், மகிழவைக்கும் நகைச்சுவைகள், நெகிழவைக்கும் தியாகச் செயல்கள் என்று பல்வகைச் சம்பவங்களும் கதையில் இடம்பெற்றுக் கதைக்கு வலுவூட்டுகின்றன.

    இறுதியாகச் சில வரிகள்….வரலாற்றுப் புதினங்கள் படைப்போர் மிகவும் அருகிவரும் காலமிது. காரணம்…மற்ற கதைகளைப்போல் நினைத்ததையெல்லாம் வரலாற்றுப் புதினங்களில் எழுதிவிட முடியாது. யாருடைய வரலாற்றை எழுதுகின்றோமோ அவர்களைக் குறித்த வரலாற்று ஆவணங்கள், பதிவுகள் அனைத்தையும் முதலில் திரட்டவேண்டும். கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் போன்றவையும் இதில் அடக்கம். இதற்கு அசாதாரண உழைப்பும் தளராத ஊக்கமும் தேவை.

    வரலாற்று ஆதாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு கதையெழுதிவிட முடியுமா? நிச்சயம் முடியாது! நிகழ்ந்த வரலாற்றை, ’வரலாற்றுப் புதினமாக்க’ நகாசு வேலைகள் நிறையச் செய்தாக வேண்டும். அதற்குக் கற்பனைப் பாத்திரங்களின் துணை மிக அவசியம். கதையின் நம்பகத்தன்மையும், ஓட்டமும் கெடாதவகையில் கற்பனைப் பாத்திரங்களையும், அவர்கள் சார்ந்த நிகழ்வுகளையும் உண்மைச் சம்பவங்களோடு அழகாகவும் அளவாகவும் இணைக்கவேண்டும். எத்துணைக் கடினமான செயலிது? இதனைத் திறம்படச் செய்வதற்கு வறட்சியற்ற கற்பனை வளமும், மதியூகமும் வேண்டும் ஓர் எழுத்தாளனுக்கு! அப்போதுதான் வரலாற்றுப் புதினத்தை வகையாகச் சமைக்க முடியும். இப்பண்புகள் அனைத்தும் இறையருளால் ஒருங்கே வாய்க்கப்பெற்றுள்ள புதின ஆசிரியர் திரு. திவாகர், தெவிட்டாத அமுதவிருந்தாய் அம்ருதாவைப் படைத்துள்ளதில் வியப்பேது! ஆசிரியரின் இவ்வரிய முயற்சியை வரவேற்பதும், இப்புதினத்தை வாங்கிப் படிப்பதுமே நாம் அவருக்குச் செய்யவேண்டிய கைம்மாறாகும்.

    வாசக அன்பர்களே! தமிழர்களின் பொற்காலமாய் மின்னிய சோழர்களின் காலத்தை, அவர்களின் வரலாற்றை நம்கண்முன்னே காவியமாய் நிறுத்தியிருக்கும் அம்ருதாவை அவசியம் வாங்கிப் படியுங்கள்! ஆனந்தம் அடையுங்கள்!

    நான்கு வரலாற்றுப் புதினங்களை வரிசையாய் எழுதி ’வரலாறு’ படைத்திருக்கும் திரு. திவாகர் மேலும் பல அருமையான நூல்களை யாத்து அன்னைத் தமிழுக்கு அணிசெய்வாராக!

    அம்ருதாவைப் பெற:
    பழனியப்பா பிரதர்ஸ்
    கோனார் மாளிகை
    25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 600014
    தொலைபேசி: 04428132863/43408000
    புத்தகத்தின் விலை: ரூ. 335/

    மேலதிகத் தகவல்களுக்கு ஆசிரியர் திரு. வெ. திவாகரைத் தொடர்பு கொள்ளவும்.
    ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி: vdhivakar@rediffmail.com

     

    Share
  • பாவேந்தரின் நகைச்சுவை!

    -மேகலா இராமமூர்த்தி

     

    bharathidasanபுதுவையில் பிறந்து புதுமைச் சிந்தனைகளில் வளர்ந்து பாரதியைத் தன் ஆசானாக ஏற்றுக் கனகசுப்புரத்தினம் எனும்தன் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர் ’புரட்சிக்கவிஞர்’ என்று பெரியாராலும், ’புரட்சிக்கவி’ என்று அறிஞர் அண்ணாவாலும் அன்போடு அழைக்கப்பட்ட கவிஞர் பாரதிதாசன்.

    சமுத்துவம், பொதுவுடைமை, பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், கருத்தடையின் அவசியம், முதியோர் காதல் எனப் பல்வேறு புரட்சிக்கருத்துக்களை மிகத் துணிச்சலாக அன்றே தன் கவிதைகள் வாயிலாய் வலியுறுத்தியவர் அவர். அற்புதமான படைப்புக்கள் பலவற்றைத் தந்து நம் சிந்தனைக்கு விருந்து படைத்த பாவேந்தர், அத்தோடு நில்லாமல் நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை வித்தகராகவும் விளங்கியிருக்கின்றார் என்பதற்கு அவர்தம் படைப்புக்களே சான்று பகர்கின்றன. அவருடைய ஆக்கங்களில் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டதாயில்லாமல் மிக இயல்பாக அமைந்திருப்பதைக் காணும்போது அவருடைய நகைச்சுவை உள்ளம் நமக்குத் தெற்றெனப் புலனாகின்றது.

    அவ்வாறு நான் இரசித்த பாவேந்தரின் நகைச்சுவைகள் சிலவற்றை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

    ஒரு குடும்பத்தை விளங்கச் செய்பவள், அதற்கு விளக்காயிருப்பவள் பெண்ணே என்பது உலகறிந்த உண்மை. அத்தகைய குடும்ப விளக்காகத் ’தங்கம்’ என்ற பெண்ணரசியை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் கவிஞர் தன்னுடைய ’குடும்ப விளக்கு’ எனும் காவியத்தில். அனைவரும் படித்துமகிழவேண்டிய ஓர் அருமையான காவியமிது!

    அதிலிருந்து ஓர் நகைச்சுவைக் காட்சி…

    வெளியூருக்குச் சென்றுவிட்டுத் தன்மகன் வீட்டுக்குத் திரும்புகிறார்கள் தங்கத்தின் மாமியும், மாமனும். அவர்கள் வீட்டிற்கு வாங்கிவந்திருக்கும் பொருள்களைப் பார்த்தால் நாம் வியப்பில் வாய்பிளப்போம். (அவற்றில் பல இன்றைய தலைமுறையினருக்குப் பரிச்சயமே இல்லாதவை என்றுகூடச் சொல்லலாம்.)

    ஓர் கூண்டுவண்டி திணறும் அளவிற்குத் தங்கத்தின் வீட்டுவாயிலில் வந்திறங்கிய அந்தப் பொருள்களை நாமும்தான் தெரிந்துகொள்வோமே!

    கொஞ்ச நாள் முன்வாங்கிட்ட
       கும்ப கோணத்துக் கூசா,
    மஞ்சள், குங்குமம், கண்ணாடி,
       மைவைத்த தகரப் பெட்டி,
    செஞ்சாந்தின் சீசா, சொம்பு,
       வெற்றிலைச் சீவற் பெட்டி,
    இஞ்சியின் மூட்டை ஒன்றே,
       எலுமிச்சைச் சிறிய கோணி

    புதியஓர் தவலை நாலு,
       பொம்மைகள், இரும்புப் பெட்டி,
    மிதியடிக் கட்டை, பிள்ளை
       விளையாட மரச்சா மான்கள்,
    எதற்கும்ஒன்றுக்கி ரண்டாய்
       இருக்கட்டும் வீட்டில் என்று
    குதிரினில் இருக்கும் நெல்லைக்
       குத்திட மரக்குந்தாணி

    தலையணை, மெத்தைக் கட்டு,
       சல்லடை, புதுமு றங்கள்,
    எலிப்பொறி, தாழம் பாய்கள்,
       இப்பக்கம் அகப்ப டாத
    இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி,
       இட்டலித் தட்டு, குண்டான்,
    கலப்பட மிலாநல் லெண்ணெய்,
       கைத்தடி, செந்தாழம்பூ

    திருமணம் வந்தால் வேண்டும்
       செம்மரத் தினில்முக் காலி,
    ஒருகாசுக் கொன்று வீதம்
       கிடைத்த பச்சரிசி மாங்காய்,
    வரும்மாதம் பொங்கல் மாதம்
       ஆதலால் விளக்கு மாறு,
    பரிசாய்ச் சம்பந்தி தந்த
       பாதாளச் சுரடு, தேங்காய்…

    இப்படியாக இன்னும் நீளுகிறது வாங்கிவந்த பொருள்களின் பட்டியல்! அப்பப்பா! படிக்கின்ற நமக்கே மூச்சுவாங்குகிறதே…இவற்றைச் சுமந்துவந்து இறக்கியவர்களின் நிலை என்னவோ!

    மலையளவு சாமான்களை மாமனும், மாமியும் வீட்டுவாயிலில் இறக்கிக்கொண்டிருப்பதைக் கண்ட தங்கம் வீட்டினுள்ளிருந்து விரைந்து வருகின்றாள். பொருள்களின் குவியலைப் பார்த்து மலைத்தவள், “இவ்வளவு சாமான்களும் வண்டிக்குள் இருந்ததென்றால் பூச்சிகள்கூட வண்டிக்குள் நுழைய இடமிருக்காதே! நீங்களிருவரும் எங்கே அமர்ந்திருந்தீர்கள்?” என்று வினவினாள் திகைப்புடன்.

    அதற்கு அவள் மாமியார், ”அதையேன் கேட்கிறாய் தங்கம்! இவ்வளவு பொருள்களையும் வண்டிக்குள் நிரப்பிய உன் மாமன் குன்றின்மீது அமர்ந்திருக்கும் குரங்குபோல் என்னை அவற்றின்மீது உட்கார வைத்தார்; என்னாலோ தலையை நிமிர்த்தவே முடியவில்லை. அதனால், வண்டியின் உச்சியில் ஓர் பொத்தலிட்டார். அதன் வழியாகத்தான் நான் தலையை வெளியில் நீட்டினேன்” என்றார்.

    பீறிட்டுக் கிளம்பிய சிரிப்பை அடக்கிக்கொண்ட தங்கம், ”அப்படியானால் மாமா…?” என்று இழுத்தாள்.

    ”அவருக்கு வண்டியில் உட்கார ஏது இடம்? அவர் வண்டியுடன் கூடவே நடந்துவந்தார்; இந்தக் காட்சியைப் பார்த்து ஊரே சிரித்தது” என்றார் தங்கத்தின் மாமியார் சலிப்புடன்.

    ஊர் மட்டுமா சிரித்தது? நமக்கும் சிரிப்பு வரத்தானே செய்கிறது.

    இதுபோல் மற்றுமோர் மறக்கமுடியாத நகைச்சுவைக் காட்சி புரட்சிக்கவிஞரின் ’இருண்டவீடு’ காவியத்திலிருந்து…

    ’குடும்ப விளக்கு’ காவியத் தலைவிக்கு நேர்மாறான பாத்திரப் படைப்பு ’இருண்டவீட்டின்’ தலைவி. அவளுடைய சோம்பேறித்தனமும் மதியீனமும் எவ்வாறு அந்தக்குடும்பத்தைச் சின்னாபின்னமாக்குகின்றது என்பதைப் பாவேந்தர் ஒருவரால் மட்டுமே இவ்வளவு நயத்துடன் விளக்கமுடியும் என்பதை இக்காவியம் படிப்போர் நன்கு உணருவர்.

    இதோ…காலைப்பொழுது புலர்ந்து சூரியன் வானின் மேலேறி வலம்வரத் தொடங்கிவிட்டான். இருண்டவீட்டின் இல்லத்தரசியோ இப்போதுதான் மெதுவாகச் சோம்பல்முறித்தபடி படுக்கையைவிட்டு எழுகின்றாள். கவனமேயில்லாமல் தூக்கக் கலக்கத்தோடு அவள் தள்ளாடி நடந்துவரும் நிலைகண்டாலே ’அடுத்து என்ன விபரீதம் அங்கு நடக்கப்போகிறதோ?’ எனும் கலக்கம் நமக்கு ஏற்படுகின்றது. அதற்கேற்றாற்போலவே அவள் தன்வீட்டு வேலைக்காரன் கறந்துவைத்திருந்த பாலை, ’தண்ணீர்’ என்று நினைத்துக்கொண்டு அதில் சாணத்தைக் கலந்து வாசல் தெளிக்கின்றாள். அவள் தோற்றம்கண்டு பகலவனே நடுங்குகின்றானாம்!

    தலைவிக்கு முன்பாகவே அவளுடைய மூத்த பையன் எழுந்து உட்கார்ந்திருக்கின்றான் காலைச் சிற்றுண்டிக்காக. அப்போது கதவு தட்டப்படுகின்றது. பாய்ந்து கதவைத் திறக்கின்றான் பையன். அங்கே பிட்டுக்காரி நின்றுகொண்டிருக்கின்றாள். அவளுக்காகவே காத்திருந்தவன் அவளிடமிருந்து பிட்டையும் வடையையும் வேகமாகத் தட்டில் வாங்கி அங்கிருந்த பெட்டிமீது அமர்ந்துகொள்கின்றான் உண்ண வசதியாக. அந்தநேரம் பார்த்து அவனுக்கு நடுவயிறு வலிக்கத் தொடங்குகின்றது. அவசரமாகக் காலைக்கடன் கழிக்கவேண்டும் என்பதை உணர்ந்தான். ஆனால் வடையின் சுவையோ அவனை ’விடேன்’ என்றது.

    கொல்லை நோக்கிச் செல்லத்துடித்தது ஒரு மனம்; ’வடையை விட்டுச் செல்வதா?’ என்று கேள்வியெழுப்பியது இன்னொரு மனம். இயற்கையை வெல்லமுடியாததால் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல் விரைந்து கொல்லை நோக்கிச் சென்றவன் கவனக்குறைவாய் நடுவில் கிடந்த நாயை மிதித்து, ஓரமாயிருந்த பானைகளைப் படபடவெனத் தள்ளி, கன்றுக்குட்டியைக் கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி அருகில் நின்றிருந்த பசுவின் நெற்றியில் பலமாக மோதிக்கொண்டதில் முன்வரிசைப் பற்கள் இரண்டைத் தொலைத்துக் கீழே உருண்டுபுரண்டு கொல்லையை அடைந்தான் ஒருவழியாக!

    இதைக் கவிஞரின் விவரிப்பில் காணுங்கள்…

    பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்
    பெட்டி மீதில் இட்டுட்கார்ந்தான்.
    ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்
    நாவில் இடுகையில் நடுவயிறு வலித்தது!
    வெளிக்குப் போக வேண்டுமென்றுணர்ந்தான்
    வடையின் சுவையோ விடேன்விடேன் என்றது!
    கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்!
    மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்!
    வில்லம்பு போல மிகவிரைவாக
    நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்
    படபட வென்று பானையைத் தள்ளிக்
    கன்றின் கயிற்றால் கால்தடுக்குற்று
    நின்ற பசுவின் நெற்றியில் மோதி
    இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப்
    புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!

    எப்படி இருக்கிறது? சிரித்துச் சிரித்து நமக்கும் வயிற்றுவலி வந்துவிட்டதல்லவா?

    இதுபோல் இன்னும் பல நகைச்சுவைக் காட்சிகளை நாம் கண்டு இரசிக்கலாம் இருண்டவீட்டில் தொடர்ந்து பயணித்தால்!

    இப்போது சொல்லுங்கள்! பாவேந்தர் நகைச்சுவையிலும் தனிமுத்திரை பதித்திருக்கும் வித்தகர்தானே?

    (இன்று பாவேந்தரின் 125-ஆவது பிறந்தநாளாகும்.)

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 9-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தை எடுத்துத் தந்துள்ள திரு.வெங்கட் சிவாவுக்கும், போட்டிக்குரிய படமாய் இதனைத் தெரிவுசெய்த திருமிகு. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை ஆசிரியர் குழுவின் நன்றிகள்.

    11180014_822542801133254_1503319428_n

    கூடாரத்தின் (கைப்)பிடியை உறுதியாய்ப் பிடித்தபடி எம்மை உற்றுநோக்கும் சிறுவனே! உன் கண்களில் கனல்தெறிக்கின்றதே…ஏன்? மிகக் கொடிதான வறுமையை இவ்விளமையிலேயே தாங்கும் உன் பொறுமையைப் போற்றுகின்றோம்!

    வறுமையின் கொடிது எது? என்று ஐயன் வள்ளுவரைக் கேட்டால் ’வறுமையின் கொடிது வறுமையே’ என்பார்.

    இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது.

    தம்பி! இன்று ஏழைமை உன்னோடு தோழமை கொண்டிருந்தாலும், நாளை உன் எதிர்காலம் சுடர்விட்டு ஒளிரும் எனும் நம்பிக்கை கொள்! அதற்கு நீ உடனடியாய்க் கைக்கொள்ளவேண்டிய மெய்ப்பொருள் கல்வியே!

    இனி, இவ்வாரப் போட்டியில் பங்கேற்றுள்ள கவிஞர்கள் இச்சிறுவனைப் பற்றி என்ன சிந்தித்திருக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

    முதலில், என் உள்ளம்தொட்ட கவிதை வரிகளை உவப்போடு உங்களுக்கு அறியத் தருகிறேன்!

    *****

    தந்தையின் குடியால் தங்கள் குடியே சீரழிந்ததை வேதனையோடு இச்சிறுவன் விளம்புவதையும், பசியால் வாடினாலும் பிச்சை எடுக்கமாட்டேன் எனும் அவன் கொள்கைப்பிடிப்பையும் காட்டும் திரு. சி. ஜெயபாரதனின் வரிகள்…

    துள்ளித் திரியும் காலத்தில்
    துடுக்கடக்கிப்
    பள்ளிக்கு வைக்க வில்லை
    பாலகன் என்னை !
    மரத்தடியில் தினம் சீட்டாடி
    தெருச்சுற்றிப் பணம்
    திருடி 
    அப்பனுக்கு மாலையில்
    கப்பம் கட்டுவேன் !
    […]

    குடி வாழ்வைக் கெடுத்தது !
    […]
    பல நாட்கள்,

    பட்டினி கிடந்தேன் !
    ஜெகத்தினை எரித்திடப் 
    பாரதி வரவில்லை !
    ஆயினும் பிச்சை
    எடுக்கப்
    போக வில்லை !

    ******

    தந்தை தாயற்ற இச்சிறுவனைக் கண்டோர் சொல்லும் கேலிச்சொற்கள், அதுகண்ட அவன் உள்ளக்குமுறல் ஆகியவற்றை அருமையாய்ப் படம்பிடித்திருக்கும் திரு. நல்லை. சரவணாவின் வரிகள்…

    எச்சில் குவளைகள் 
    இரண்டைத் தவறவிட்டிருந்த பொழுதில் 
    அப்படித்தான் அழைத்தார் 
    அன்றைய நாளின் 
    முதலாளியாகியிருந்த அவர்…
    […]
    குப்பிச் சாக்குகளோடு 

    தெருமுனை கடக்க…
    யார் பெற்ற பிள்ளையோ என 
    உச்சுக் கொட்டியவனிடம் 
    கத்திச் சொல்லத் தோன்றியது….
    உனக்காகவும் இருக்கலாம்…

    *****

    சமூகத்தின் பிரதிநிதியான இச்சிறுவனை நல்லவனாக்குவதும், தீயவனாக்குவதும் இச்சமூகமே எனும் உண்மையைச் சுட்டும் திரு. கவிஜியின் வரிகள்…

    நின்றிருக்கின்றேன் 
    எப்படி வேண்டுமானாலும் 
    தெரியும் நீங்கள் என்னை 
    தேர்ந்தெடுங்கள், 
    கத்தியாகவோ…
    புத்தகமாகவோ….

    *****

    வாடகைத்தாய் பெற்றபிள்ளைகூடச் சீரோடு வாழ்ந்திருக்க, சொந்தத்தாய் பெற்றபிள்ளையோ சொந்தமின்றி, பந்தமின்றி, யாரார்க்கோ அடிமையாய் வாழ்ந்திருக்கும் அவலத்தைச் சொல்லும் திரு. சுரேஜமீயின் வரிகள்…

    ஈட்டுத்தாய் பெற்று
    உற்ற கருவாக்கி
    ஊரார் மெச்ச
    என் பிள்ளையென
    ஏந்திப் பிடித்தே
    ‘ஐ’ யென மகிழ்ந்திருக்க!
    ஒரு துணையுமின்றி நான் மட்டும்
    ஓடுகாலிகளின்
    ஔரதனாய் 
    ….வாழ்தற்கு?

     *****

    சிறுவனுக்கு நல்வழிகாட்டும் திரு. செண்பக ஜெகதீசனின் வரிகள்…

    பார்வையில் கோபம் வேண்டாமே
         பாவப் பட்ட பாலகனே,
    தீர்வு வராதே வன்முறையில்
         திருந்தி வாழ்ந்திடு நல்வழியில்,
    வேர்வை சிந்தி உழைத்திடுவாய்
         வெல்லும் வழிதான் வந்திடுமே,
    நேர்மை என்றும் வழியாகும்
         நிலைத்த வாழ்வை நீபெறவே…!

    *****

    குழந்தைத் தொழிலாளியின் குமுறலையும், முதுகெலும்பு படைத்த நான் உழைத்து உயர்வேன் எனும் அவன் வைராக்கியத்தையும் அழகாய் விளக்கும் திருமிகு. ஜெயஸ்ரீஷங்கரின் வரிகள்…

    பசிக்கும் வயிற்றுக்கும்
    துடிக்கும் மனத்துக்கும்
    இடையே போராடும்
    ஒரு போராளியாய்
    நானொரு
    குழந்தைத் தொழிலாளி..!
    […]
    இயலாமை தான்

    என்றாலும்
    முயலாமல் இருக்கலாமா?
    கூடுங்கள் தோழர்களே
    குனிந்த முதுகின்
    முதுகெலும்பே
    எதிர்க்கும்
    ஆயுதங்களாகட்டும்..!

    *****

    ’பார்வையில் காட்டத்தைக் காட்டாதே; நல்வாழ்வு உனக்குண்டு!’ என நல்வார்த்தை சொல்லும் திருமிகு. சியாமளா ராஜசேகரின் வரிகள்…

    பார்வையிலே காட்டமேன் பாலகனே சொல்லடா 
    சோர்ந்தாயோ நீயும் சுமைதூக்கி – நேர்வழியில் 
    சென்றால் பயமில்லை செல்வா ! கலங்காதே 
    நன்றாய் சிறப்புறும் வாழ்வு.

    *****

    மன்னன்மகனின் நிலைகண்டு மனங்கலங்கும் திரு. ஜெயராம சர்மாவின் வரிகள்…

    எல்லோரும் இந்நாட்டு 
    மன்னர் என்றால்
    இப்பிள்ளை அப்பாவும் 
    மன்னர் அன்றோ 
    மன்னன் மகன்
    நடுவீதி நிற்பானானால்
    மக்கள்நிலை என்னாகும்
    சிந்திப்போமா ? 

    *****

    ’தெருவோரம் வளரும் அக்கினிக் குஞ்சு இச்சிறுவன்; இவனைச் சீண்டாதீர்!’ என எச்சரிக்கை விடுக்கும் திரு. அமீரின் வரிகள்…

    ஒதுங்கச்சொல்லி
    காறித்துப்ப
    அவன் எச்சமல்ல…
    பதுங்கி கில்லி
    ஏறியடித்தால்
    உயிர் பிழைப்பார்
     அங்கு எவருமல்ல!
    […]
    தா தா 

    என்று மாமுல் கேட்டால்
    என்ன செய்வான்
    உழைக்கும்பிள்ளை…
    தாதாவாக
    வளர்வதன்றி
    வேறு வழியுமில்லை!

     *****

    மனிதருக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் தரும் உறுத்தலை உணர்த்தும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனின் வரிகள்…

    கிழிந்த சட்டையுடன்
    மழிக்காதமுடியுடன்
    குப்பை அள்ளும்
    சிறார்களையும்
    […]
    சைக்கிள் கடையில்

    வேலை பார்க்கும்
    சிறார்களையும்
    பார்க்கும்போது
    காரில் பள்ளிப்
    போகும் மகன்
    நிழலாடி உறுத்தல்தருகிறது 

    *****

    ’காசுக்கு விற்கப்படும் கல்வியால் ஏழைகளுக்குப் பயனேது?’ என்று இச்சிறுவன் ஏங்குவதாய்க் காட்டுகின்ற திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    கல்வி என்பது பணம் படைத்தோரின்
    சொத்தாகிப் போய்விடுமோ எனும் கவலை
    உனை ஆட்கொண்டு விட்டதோ?
    […]
    எத்தனையோ இலவசங்கள்
    வரிசை கட்டி வந்தாலும் – உழைத்தாலன்றி
    அடுத்த வேளை உணவென்பது
    கேள்விக்குறியான போது – நானும்
    இங்கே குழந்தை தொழிலாளி ஆனதில்

    பிழை என்ன இருக்கிறதென்று கேட்கிறாயோ ?

    *****

    இளமைக்கல்வியும் இனியசொற்களும் புறக்கணிக்கப்பட்ட இளம்பிஞ்சின் உள்ளக்கொதிப்பை அழகாய்ச் சொல்லுகின்ற திருமிகு. துஷ்யந்தியின் வரிகள்…

    “பள்ளிப் பருவம் எதற்குனக்கு
    தள்ளி நில்லு நீ” என்று
    துளி கூட உள்ளமில்லா
    மனங்கள் என்னை தூற்றின…!
    போலி உலகை கண்டு ஓய்ந்து
    கல்லாய் மாறின உள்ளமதில்
    இனி கருணைக்கு இடமில்லை
    இனி உறங்கப் போவதில்லை…!

    *****

    பார்வையால் பல்லாயிரம் மொழிபேசும் பாலகனின் கல்விக்காய்க் குரல் கொடுக்கும் அறிமுகக் கவிஞர் திரு. சதாசிவத்தின் வரிகள்…
    (முயற்சி நன்று! தொடர்ந்து எழுதுங்கள் கவிஞரே!)

    பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் பேசுமே
    […]
    கல்வியை கற்றுவிட்டால் சேருமிடம் நன்றே!
    ஐயன்மீர் யாராகிலும் சேர்த்தணைத்துக் கொள்வீர்!
    சேர்த்த புண்ணியம் யாதாகிலும்,  உடன் புகழ் பெறுவீரே.

    *****

    ’சூரியனைச் சுடும் பார்வையோடு யார்மீது கோபமுற்றிருக்கிறாய்?’ என சிறுவனை வாஞ்சையோடு வினவும் திரு. கொ.வை. அரங்கநாதனின் வரிகள்…

    அந்நியர்கள் இங்கிருந்து அகன்று
    அறுபதாண்டுகள் ஆகியும் கூட 
    சொந்த மைந்தர்களை தினம்
    சோற்றுக்கு அலைய வைக்கும்
    சுதந்திர நாட்டின் மீதா?
    […]
    வாழவழி தெரியாத உனக்கு
    ஏதும் செய்ய இயலாது
    புகைப்பட மெடுத்தவர் மீதா
    கவிபாட வந்த எங்கள் மீதா?

    *****

    சிறுவனின் வாழ்வு சீர்பெற வழிசொல்லும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    கல்விக் கண்கள் திறந்திடவும்
    இல்லாமைப் பேய் ஒழிந்திடவும்!
    சின்ன வயிறு நிறைந்திடவும்
    அன்னமிட்டு உதவிடுவோம்!
    சேற்றிலும் செந்தாமரைகள்
    வீற்றிருக்கும் திடமாய் நம்புவோம்!
    நல்லதோர் எதிர்காலம்
    வெல்வான் இவன் !

    *****

    இவற்றினூடே, அண்டைபூமியான ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் உயிரோடு கொள்ளிவைக்கப்பட்ட நம் தமிழ்ச்சோதரர்களின் குடும்பத்தில் ஒருவனாக இச்சிறுவனை இனங்கண்டு, இவ்வினப்படுகொலையால் சுற்றத்தை இழந்து சொந்தநாட்டிலேயே அகதியாக்கப்பட்ட இவனுடைய கண்ணீர்க் கதையைக் கவிதையாய் வடித்துள்ள திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் ‘காத்திருப்பேன் காலத்திற்காய்’ எனும் கவிதை என்னைச் சிந்திக்க வைத்தது; கண்ணீர் சிந்தவும் வைத்தது. அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கிறேன்.

    அக்கவிதை…

    காத்திருப்பேன் காலத்திற்காய்!

    வண்ணம் பூசி வரைந்து பல
    எண்ணக் கனவுகளோடு வாழ்ந்தோம் அன்று
    கண்ணிறைந்த வாழ்வு சிதறி இன்று
    உண்ண உணவிற்கே திண்டாடும் நிலை
    உதட்டில் மட்டும் காயம் எம்
    உயிர் தப்பியது அபூர்வம்! ஒரு
    ஊர்க் கோடியில் கோணித் திரையுள்
    அகதி வாழ்வு இது கொடுமை!

    கூனிக் குறுகி ஒடுங்கிய வாழ்வு!
    ஏனிந்த நிலையிது நீதியே இல்லை!
    காரணகர்த்தாக்களை உருத் தெரியாது அழிக்க
    கருவெடுக்கிறது கொலை வெறி நெஞ்சில்.
    அகதி நான் எனது நாட்டிலேயே!
    தகுதியற்ற நிலையிது காத்திருப்பேன் காலத்திற்காய்.
    காட்சிப் பொருளாக நாமின்று படத்தில்.
    ஆட்சி, அரண்மனைக்கு அடிபடுகிறாரின்று பலர்!

    *****

    அடுத்து, ஏழைகளுக்குத் தேவை கல்வியா? செல்வமா? எனும் பட்டிமன்றத்தைக் கவிதையில் நடத்தி அதற்கு நடுவராய்க் கடவுளையே நியமித்திருக்கும் இன்னொரு கவிதையும் மெச்சும்படி இருந்தது.

    சிட்டாக வேபறந்தேன் கோயிலுக்கு அங்கு 
           சிலையாக நின்றிருந்த கடவுளிடம்
    திட்டாமல் தேம்பாமல் வேண்டினேன் பொங்கித்
           தவிக்கின்ற மனமுருகக் கெஞ்சினேன்
    பட்டாசு கம்பெனியில் என்குடும்பம் பட்டம் 
           படிக்கின்ற ஆசையில் நானொருவன்
    எட்டாத ஓர்கனவாய் ஆகிடுமோ என்றும்
           ஏழையாய் என்வாழ்வும் மாறிடுமோ

    […]

    தட்டாமல் அக்கடவுள் என்கனவில் வந்தார் 
           தக்கதொரு தீர்வுதனை சொல்லி(ச்)சென்றார்
    திட்டாக கோணியொன்றில் மூடியதை நீயும் 
           திறந்திட்டால் அங்கிருக்கும் உன்வாழ்க்கை
    கட்டாக புத்தகம்கு விந்திருந்தால் கல்வி
           கனமான எந்திரம்என் றால்செல்வம் 
    கட்டாயம் ஏற்படும்வ ரம்அளித்தேன் என்றார் 
           கவிஞர்காள் சொல்லுங்கள் என்னவரம்?

    *****

    என்ன வரம் தரலாம் இச்சிறுவனுக்கு? என்னைக் கேட்டால் வயிற்றுப்பசி தீர்க்கும் செல்வத்தையும், அறிவுப்பசி தீர்க்கும் கல்வியையும் சேர்த்தே அவனுக்குத் தருவதுதான் கடவுளின் கடமை என்பேன்! இக்கவிதையை யாத்த திரு. எஸ். பழனிச்சாமியைப் பாராட்டிற்குரிய கவிஞராய் அறிவிக்கிறேன்.

    நண்பர்களே! தொடர்ந்து போட்டியில் பங்குகொள்ளுங்கள்! பாராட்டைப் பெறுங்கள்!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 8-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் போட்டிக்கான ஒளி ஓவியத்துக்குச் சொந்தக்காரர் திரு. எச். பிலால் அவர்களுக்கும், இப்படத்தைத் தெரிவுசெய்த திருமிகு. சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும் வல்லமை ஆசிரியர் குழுவின் நன்றி.

     

    11129746_819039241483610_1321350885_n

    அரத்தநிறச் சேலை, கழுத்திலே உருத்திராக்கத்தை ஒத்த பல்நிற மணிகள், தலையிலே அப்பிய மஞ்சள்வண்ணப் பொடி என்று மங்கலக் கூட்டணியோடு காட்சிதரும் இப்பெண்களின் கையிலிருக்கும் வீச்சரிவாள்தான் சற்றே நமக்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்றது.

    யார் இவர்கள்? தமக்குப் பிறரிழைத்த அநீதி கண்டு பொங்கிச் சினந்து, நீதிகேட்டு ஆயுதமேந்திப் புறப்பட்டிருக்கும் கண்ணகியின் வழித்தோன்றல்களா? இல்லை வண்ணமும் சுண்ணமும் தண்ணருஞ் சாந்தமும், கோடும் குழலும் பீடுகெழு மணியும் கையேந்தி வீச்சரிவாளால் விலங்கை வீழ்த்திக் கொற்றவைக்குப் பலியிடவந்த தொல்குடிப் பெண்களா?

    ஆண்களே அச்சத்தோடு இப்பெண்களைப் பின்னால் நின்றுபார்ப்பது இவர்கள் கொண்ட கொள்கையின் உறுதியைக் காட்டுகின்றது.

    நம் புலவர் தோழர்களின் உள்ளங்களில் இப்படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை அவர்தம் ஆக்கங்கள் வழியாய் இனிக் காண்போம் வாருங்கள்!

    கவிதைகள் வெள்ளமெனப் பொங்கிப் பாய்ந்திருக்கின்றன இம்முறையும்! என் உள்ளம் தொட்ட வரிகள் அவற்றினின்று…

    ###########################################

    சிவப்புச் சக்திகளை அடையாளம் காட்டும் திருமிகு. ரேவதி நரசிம்மனின் வரிகள்…

    மனதில்,கண்களில்,கைகளில் 
    உறுதி காட்டும் சிவப்பு சக்திகள். 
    ஆக்கவும்  தெரியும் 
    தாக்கப் பட்டால் அழிக்கவும் தெரியும் 
    என்கிறார்களோ !

    ###########################################

    ’உரிமை தேடி!’ எனும் தலைப்பில் திரு. சி. ஜெயபாரதன் எழுதிய வரிகள்…

    காட்டு ஜாதி ஆயினும், நியாயம்
    கேட்க வருகிறோம் !
    கத்தி காட்டி மிரட்டியும்
    சத்தியம் காக்கத் திரள்கிறோம் !
    பூர்வ குடியினர் யாமெல்லாம்
    பூரண உரிமை கேட்கிறோம் !
    வாழ எமக்கு ஊழியம்
    வயிற்றை நிரப்ப ஊதியம்.
    பிள்ளை குட்டி படித்திட
    பள்ளிக்கூடம் கட்டுவீர் !

     ############################################

    உடலில் பூசிய வண்ணங்களை மிஞ்சும் வகையில் சமூகத்தில் நிலைகொண்டிருக்கும் வர்ணங்களைச் (சாதிகளை) சாடும் திரு. சுரேஜமீயின் வரிகள்…

    குருதியில்
    பச்சை உண்டோ?
    கருப்பு உண்டோ?
    நீலம் உண்டோ?
    ஆனால், உனக்கு மட்டும்
    ஏதடா
    வண்ணத்தை மிஞ்சும்
    வர்ணங்கள்?

    எவனோ அன்று
    பிரித்தாளச் செய்த
    சூழ்ச்சியை;
    இன்றும் நீ
    பிடித்துக் கொண்டு
    இருக்கிறாயே
    மூடனே!

     ###########################################

    மாரியாத்தாளை மங்கையர் போற்றுவதைக் காட்டும் திரு. பழனிச்சாமியின் வரிகள்…

    அம்மனுக்கு வேண்டியே தான்விரதம் இருப்போம்
    ஆடிமாதம் வந்திடக் கொண்டாட்டம்
    கும்மியடிப் போம்குல வைச்சத்தம் இடுவோம்
    கையிலேதான் தூக்குவோம் ஓர்அறிவாள்
    செம்மையுடை மஞ்சளை யும்தடவிக் கிட்டு
    சுத்திவந்தா நல்லதே எங்களுக்கு
    மும்மாரி பெய்யவே செய்திடுவா அருள்மிக்()
    மாரியாத்தா எங்களைக் காத்திடுவா

    #############################################

    ஆயுதம் ஏந்தியும் அமைதியையே நாடும் அரிவையரைப் போற்றும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    ஆயுதம் சுமந்து நின்றாலும்
    அமைதியையே இறைவனிடம்
    இறைஞ்சி
    நிற்கின்றோம் !
    சக்தி
    வடிவம் நாங்கள்
    எந்நாளும்
    ஆக்க சக்தியாய்-
    ஊக்க
    சக்தியாய் திகழ்வோம் !
    நானிலம்
    நலமுடன் விளங்க
    நல்லெண்ணங்களை
    மனங்களில்
    வித்தாக்கிடுவோம் !

    ############################################

    வாளேந்திய வஞ்சியரை வாழ்த்தும் திருமிகு. சியாமளா ராஜசேகரின் வரிகள்…

    செஞ்சாந்து பொட்டிட்டு செவ்வாடை மேலுடுத்தி 
    மஞ்சளிலே நீராடி மங்களமாய்அஞ்சாமல் 
    வஞ்சியரும் வில்லுடன் வாளேந்தி ஆடிவர 
    தஞ்சமுற கெஞ்சும் சனம் .

    ############################################

    கண்ணப்பன்போல் கடவுள்பால் முரட்டுக்காதல் கொண்ட பெண்களைப் பாராட்டும் திரு. ஜெயராம சர்மாவின் வரிகள்…

    கண்ணப்பன் பக்தியைநாம்
    எண்ணியே பார்த்துவிடின்
    கையில்கத்தி வைத்துள்ளார்
    பக்திகொள்ளல் தவறாமா?

    சிறுத்தொண்டர் வெட்டியதால்
    சிவனருளைப் பெற்றாரே
    அவர்வழியில் இவரெல்லாம்
    ஆயுதத்தை ஏந்துகிறார் !

    #############################################

    பெண்மையின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    அன்பின் திருஉருவாய் ஆளும் பெண்மை
    இன்னல் படுவோர்க்கு இரங்கும் பெண்மை
    தீமை கண்டு கொதித்தெழும் பெண்மை
    ஊமை மடந்தையாய் காதல் செய் பெண்மை
    இன்னும் பற்பல சக்தியாய் உலகினில் பெண்மை

    ############################################

    தலைமுறை காக்கவும், கயவரைக் கருவறுக்கவும் பெண்கள் வாளேந்தியிருப்பதை விளம்பும் திரு. கொ.வை. அரங்கநாதனின் வரிகள்

    பெண்ணைப் பெருந்தெய்வம் என்று சொன்ன நாட்டிலின்று
    கண்ணைச் சுடும் காட்சிகள்தான் எத்தனை எத்தனை
    அன்னை என்றார் ஆண்டவனில் பாதியென்றார் இன்று
    அரக்கராய் மாறிவிட்டதே அவர்தம் கொடுஞ்செய்கைஅதனால்தான்
    வளயல் அணியும் கைகளில் இன்று வாளேந்தினோம்
    களையெடுக்க அல்ல கயமையின் கருவறுக்க!
    கலை யுரைத்த கைகளில்  இன்று கருவிகள் கொண்டோம்
    தலைகள் எடுக்க அல்ல எங்கள் தலை முறையை காக்க!

    ############################################

    புத்தரின் அகிம்சைவழியை ’வாளே’(!) வஞ்சியர்க்கு வலியுறுத்துவதாய் அமைந்த டாக்டர். லட்சுமியின்  வரிகள்…  

    மண்ணுலகில் படைத்திட்ட
    அனைத்தையும் அன்பே வழிநடத்தும்
    அகிம்சையால் அகிலத்தை ஆள
    தூக்கிய என்னைத் தூர எறிந்து
    தூரத்துமரத்தின் ஆணியில்
    தொங்கவிடப்பட்ட புத்தரின் வழி நடப்போம்.

    ############################################

    மேற்கண்டவை நான் மெச்சுகின்ற கவிதை வரிகள்.

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார்? எனும் கேள்வி உங்களிடம் தொக்கி நிற்பதை உணர்கின்றேன். இதோ அவரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

    சமீபத்தில் ஆந்திராவிற்குச் செம்மரங்களை வெட்டச்சென்ற நம் தமிழகத் தொழிலாளர்களை அரக்கமனம் படைத்த ஆந்திரக் காவல்துறை இரக்கமின்றிச் சுட்டுக்கொன்றதையறிந்து நம் குருதி கொதித்ததல்லவா! இப்பின்னணியைப் பாடுபொருளாக வைத்து அப்படுகொலை நிகழ்த்திய பாதகர்களைக் பலிகொள்ள இச்செவ்வாடைப் பெண்கள் சிலிர்த்தெழுந்து புறப்படுவதாய்ப் புனையப்பட்ட கவிதையொன்று என் உள்ளம் தொட்டது; உணர்வைச் சுட்டது. அக்கவிதையின் படைப்பாளர் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    #############################################

    ”எதிரிகளை உதிரிகளாக்கத் தமிழர்களே அணிதிரளுங்கள்!” என்று அறைகூவல் விடுக்கும் அக்கவிதை…

    மரம்வெட்ட போன மறத்தமிழன் மேனி
    மரமாகிச் சாயத் துடித்தோம்சரமாரி
    எனவே பொழிந்த எதிராளித் தோட்டா
    சினம் கண் டெழுந்தோம் சிவந்து. 

    உயிரெடுக்குந் தெய்வ உருவெடுத்து விட்டோம்
    கயிறாய் திரித்திடுவோம் தமிழன் உயிரை
    பயிராய் அறுக்கும் பகைவன் திமிரை
    தயிராய்க் கடைவோம் துணிந்து.

    காட்டு மகமாயி காளி வழிகாட்ட
    நாட்டில் நலிந்த தமிழரினிகூட்டுக்
    குயில்போல் குமுறும் நிலைமாற்றிக் காட்ட
    எயிலாய் இருப்போம் இணைந்து.
    (
    எயில்அரண்

    ##############################################

    அடுத்து, தெய்வங்களிலும்கூடப் பணமற்றோர் வணங்கும் பாமரத் தெய்வங்கள், பணம்படைத்தோர் போற்றும் பகட்டான தெய்வங்கள் எனும் வேறுபாடிருப்பதைக் கண்டு உளங்கொதித்துச் ’சாமிக்குள்ளயும் சாதியிருக்கா?’ எனும் பகுத்தறிவுக் கேள்வியை வீச்சரிவாளாய் வீசியிருக்கும் திரு. நல்லை. சரவணாவின் கவிதையை இவ்வாரத்திற்கான பாராட்டத்தக்க கவிதையாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    அக்கவிதை…

    ஆடம்பரக் கோவிலில்லகாவி 
    அடிச்சிவிடக் காசுமில்ல…!
    ஆலமரத்தடிக் கீத்துக் கூடு 
    அதச்சுத்தியொரு காரச் செவரு..
    மஞ்ச வேட்டி இடுப்புத் துண்டு 
    மச மசன்னு கம்பங் கூழு
    பஞ்சாமிர்தம் ஊட்டலையே
    சந்தனக் கூழும் ஊத்தலையே
    இத்தனக் கொறயிருந்தும்
    இரும்புத் தூணா காத்து நிக்கெ
    தலமொறையத் தவறாம
    தழைக்க வச்சிப் பாத்து நிக்கெ…!
    எஞ்சாமிஎஞ்சாமி..
    எங்காதுக்குள்ள சொல்லிப்புடு..
    மறுவீடு மாமியா வீடுன்னு
    எங்கிட்டும் போகாம
    இங்கனயே நிக்கிறியே…. !

    சாமிக்குள்ளயும் சாதியிருக்கா?

    ############################################

    படக்கவிதைப் போட்டியில் தொடர்ந்து நாட்டத்துடன் பங்கெடுத்து நல்ல கவிதைகளை நல்கிவரும் கவிஞர் பெருமக்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 7-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கவிஞர்களின் சிந்தனைப் பசிக்குச் சிறந்த தீனிபோடும் புகைப்படத்தைத் தந்த திருமிகு. ராமலக்ஷ்மிக்கும், அதனைத் தேர்வு செய்த திருமிகு. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை ஆசிரியர் குழுவின் பாராட்டுக்கள்.

    11134356_815628041824730_874016360_n

    தந்தை தோளில் ’ஜம்’மென்று அமர்ந்தபடி வாயில் வைத்த விரலோடும், விழிகளில் விரியும் வியப்போடும் இக்குழவி அங்கே நோக்குவதுதான் எதனை? என்ற ஆர்வம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது இப்புகைப்படத்தைப் பார்க்கும்போது!

    ஆர்வமாய் தந்தை தோளில்
      அமர்ந்துநீ உலகந் தன்னைப்
    பார்வையால் அளக்கின் றாயே
      பாலகா உனக்கார் ஈடு? என்று  அக்குழந்தையைக் கொண்டாடத் தோன்றுகின்றது.

    இன்று, தன் இளம் மகனை அந்த அன்புத் தந்தை தன்தோளிலும், மார்பிலும் சுமக்கின்றார் ஆசையாக! இதே பாரம் இடம்மாறும் காலமும் வரும். அப்போது இப்பிள்ளை தன்னன்புத் தந்தையைப் (பாரமாய் நினையாது) பாசமாய்ச் சுமக்கவேண்டுமே எனுமோர் ஏக்கமும் இக்காட்சியின் நீட்சியாய் நம் உள்ளத்தில் எட்டிப்பார்க்கவே செய்கின்றது.

    கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரம் வீழ்ந்துவிடாதபடி அதன் விழுதுகள் அதனைத் தாங்கிப்பிடிப்பதுபோல் வயதுசென்ற தந்தைக்குத் தள்ளாமை வந்து பிணியெனும் கறையான்கள் அவருடலை அரிக்கும்போது அவருடைய புதல்வன் அவரைத் தாங்கிப் பிடிக்கவேண்டும். அதுவே மகன் தந்தைக்கு ஆற்றும் தலையாயக் கடன்! இவ்வாழ்வியல் உண்மையை நாலடியார்ப் பாடலொன்று நன்றாய் விளக்குகின்றது. அப்பாடல் நம் சிந்தனைக்கு…

    சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
    மதலையாய்
    மற்றதன் வீழூன்றி யாங்குக்
    குதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற
    புதல்வன் மறைப்பக் கெடும். (நாலடி: 197)

    இனி, போட்டிக்கு வந்துள்ள கவிதைகள் குறித்துப் பார்ப்போம்.

    இவ்வாரமும், ’நீ முந்தி நான் முந்தி’ என்று போட்டி போட்டுக்கொண்டு கவிஞர் பெருமக்கள்  ’கவிதைப் பந்தி’ நடத்தியிருக்கின்றீர்கள். பல்வேறு கருத்துக் குவியல்களையும், சிந்தனைச் சிதறல்களையும் அள்ளி வழங்கி ’எந்தக் கவிதையைத் தேர்ந்தெடுப்பது?’ என்று எங்களைத் திகைக்கச் செய்திருக்கின்றீர்கள். உங்கள் சீரியமுயற்சிக்கு எம் பாராட்டுக்கள்!

    என் சிந்தைதொட்ட கவிதை வரிகளின் பட்டியலை முதலில் தந்துவிடுகின்றேன்…

    பருவமாற்றங்களையும் அதனோடு இணைந்தே வரும் மனமாற்றங்களையும் தந்தைக்குக் தனயன் செப்புவதாயுள்ள திரு. பா. இராஜசேகரின்  ரசமான வரிகள்…

    தந்தை
    உன்
    விரல்பிடித்து
    நடைபயின்று!
    நீ
    சுமக்க
    தோழ்அமர்ந்து
    வலம்வந்தேன்
    பிஞ்சுக்காலம்!
    நீ
    அறிவுரைத்தாய்
    முகம்திருப்பி
    கைவிடுத்து
    கண்மறைந்தேன்
    விடலைக்காலம்!

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    குறள்வரிகளின் சாயலில் கவிவடித்துச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கும் திரு. சி. ஜெயபாரதனின்  எழில் வரிகள்…  

    தந்தை மகற்காற்றும் உதவி
    முந்தி விழாக் காணக்
    கழுத்தில் 
    குந்தி இருக்கச் செயல் !
    மகன் தந்தைக் களிக்கும்
    தகவல்
    இவன் தந்தை
    ’ஏணிப்படி’ என்று உலகுக்கு
    எடுத்துச் சொலல் !

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    மகனுக்குத் தந்தை சொல்லும் வாழ்வியல் உண்மைகளை விளக்கும் திரு. ரா. பார்த்தசாரதியின்  யதார்த்த வரிகள்…

    தோளில்  தாங்கி  உனக்கு  உலகை காட்டுகின்றேன் 
    தாயோ  அன்பும்,  பாசமும் உன்னிடம் காட்டுகிறாள் 
    அறியாப்   பருவத்தில் உனக்கு நான்  வழிகாட்டி 
    முதுமைப் பருவத்தில் நீதான் என் வழிகாட்டி!

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    தன்னலமிலாத் தந்தையின் உள்ளத்தைக் கண்ணாடிபோல் துல்லியமாய்க் காட்டியிருக்கும் திருமிகு. சியாமளா ராஜசேகரின்  சீர்மிகு வரிகள்…

    பட்டுவிரல்  நோகுமென்று பாலகனைத் தோள்சுமப்பார் 
    சுட்டியவன் சேட்டைகளில் சொக்கிடுவார் – மட்டிலா 
    அன்பால் கரைத்திடுவார் ஆக்கமுடன் கற்பிப்பார் 
    தன்னல மில்லாத்தந் தை .

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    தந்தை மகன் உறவில் காலம்போடும் அதிசயக் கோலங்களை அழகாய்க் காட்டியிருக்கும் திரு. எஸ். பழனிச்சாமியின்  பாங்கான வரிகள்…

    தந்தைக்கும் மைந்தனுக்கும் உள்ள இணைப்புஅது
    தன்னலமில் லாதபாசத் தின்பிணைப்பு – மந்திரம்தான்
    தந்தைசொல் ஐந்தாம் வயதில் வயதுவந்த
    பின்னால் அவரேதான் வில்லன்.

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    அரையில்(இடுப்பில்) வைக்கும் அன்னையையும், உயரவைக்கும் தந்தையையும் எண்ணி உளம்பூரிக்கும் மகனைக் காட்டும் திரு. ஜெயராம சர்மாவின்  ரம்மியமான வரிகள்…

    அம்மாவோ அரையில் வைப்பாள்
    அப்பாவோ உயர வைப்பார்
    என்னிளம் பருவம் தன்னை
    இங்கு நான் காணுகின்றேன்.

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    வாழ்க்கை நடைமுறைகளை வண்ணங்களினூடே வனப்பாய்ச் சொல்லியிருக்கும் நல்லை திரு. சரவணாவின்  சிந்தனை வரிகள்…

    நமக்கான அவசரங்களைவிட
    வேகமாயிருக்கிறது… எதிர்காலம்…
    எப்போது வேண்டுமானாலும்
    உறிஞ்சிக்கொள்ளப்படலாம்….நிறங்கள்..!!
    …. கடைசியாய் சாறு தெளித்துக்
    களித்திருந்த தலைமுறை
    என்னுடையதாகவும்…
    பூசப்படா பச்சை
    ரசித்திருந்த தலைமுறை
    உன்னுடையதாகவும் இருக்கலாம்…!!

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    தந்தையின் கலப்படமற்ற அன்பை விளக்கிப் ’பிதாவே பிள்ளையின் முன்னறி தெய்வம்’ எனும் அவ்வை வாக்கை வழிமொழிந்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனின்  செம்மாந்த வரிகள்…

    தந்தை எதையும் தாங்கிடுவான்
    தனது பிள்ளை மேன்மைபெற,
    சிந்தையில் இதனைக் கொண்டேதான்
    சிரிக்கும் பிள்ளைத் தோளமர்த்தி
    விந்தை யான உலகினிலே
    வியக்கக் காட்சிகள் காட்டிடினும்,
    சிந்தையில் பிள்ளை உயர்வுதானே,
    சிறந்த கடவுளும் தந்தைதானே…!

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    ’உன்தோளில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் அரும்பிடம் உன் கடந்தகாலக் குறும்புகளைச் சொல்லிமகிழ்கிறாயோ?’ என்று தந்தையிடம் வினாத்தொடுக்கும் திரு. அமீரின் அசத்தல் வரிகள்…

    ஊனும் உயிரும்
    உனக்கு உன்மகனோ?
    உள்ளும் புறமும்
    அவனுக்கு நீதானோ?
    ஒன்றானது உங்கள்
    உணர்வோ?
    பிள்ளையிடம் சொல்வதெல்லாம்
    உந்தன் பழைய நினைவோ?

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    மகன்பெற்ற இன்பமே தான்பெற்ற இன்பமாய்க் குதூகலிக்கும் தந்தையின் உணர்வுகளைச் சொல்லும் திருமிகு. தமிழ்முகிலின்  இன்பத்தமிழ் வரிகள்…

    ..உன்னை சுமந்து சுற்றுவதிலேயே
    இன்பம்
    காண்கிறேன் நானுமே !
    உன் பிறப்பாலேயே நானும்
    தந்தையென
    பிறப்பெடுத்தேன் !
    புது வாழ்வு காண்பித்த பிள்ளையே
    நீயே
    எந்நாளும் எந்தன் வாழ்க்கையே !

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    மகன் தந்தைக் காற்றும் உதவியை வள்ளுவப் பேராசானின் வழிநின்று விளக்கியிருக்கும் திருமிகு. நாகினியின்  நயமிகு வரிகள்…

    இம் மகனை(ளை)ப் பெற 
    இவர் என்ன தவம் செய்தாரோ’ என 
    ஊர் உலகம் மெச்சும் வண்ணம்
    உலக அளவை மிஞ்சும் 
    உன்னத பண்பில் உயர் 
    நேர்மையாளன் இவனெ(ளெ)னும்  
    பாராட்டால் தலைசிறக்கும்  
    நன்நடத்தை உலகையே உமக்கு 
    கைம்மாறாய் வழங்கிடுவேன்
    அன்புமிகு மகனா(ளா)ய் என்றென்றும்!

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    ’ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனும் புறநானூற்றுப் புலவரின் பொன்வரிகளை அடியொற்றித் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன் வடித்துத் தந்திருக்கும் வைர வரிகள்…

    தாய்  உன்னை   ஈன்றாலும்
    தந்தை  யான    என்கடமை
    தரமான  கல்வி   யையும்
    உரமான  மன    தையும்
    திடமான உடலையும் தந்து
    ….
    என் வாய் உன்  தூய
    நடத்தை  யையும் கேட்டு
    இறும்பூ தெய்தவும் விழையும்…

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    நான் மேற்குறிப்பிட்டவை அனைத்துமே சிறந்த கவிதை வரிகளாய் ஒளிர்கின்றன; மிளிர்கின்றன! எனினும், இக்கவிதைகள் பலவற்றில் ஒன்றின் சாயலை மற்றொன்றில் தெளிவாகவே காணமுடிகின்றது. இக்குறையை இனிவரும் போட்டிகளில் கவிஞர்கள் கவனத்துடன் களைவார்களாக!

    இவற்றினின்று மாறுபட்டுத் தன்தோளில் அமர்ந்திருக்கும் மகன் எவ்வாறு வாழவேண்டும் என்பதைப் புலவர்கள் அரசர்கட்குச் சொல்லும் ’செவியறிவுறூஉ’ பாணியில் தந்திருக்கும் ஓர் இலட்சியத் தந்தையை இங்கே கண்டேன். ’வரம் வேண்டும்…’ எனும் தலைப்பில் அவர் வடித்திருக்கும் கவிதையை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகவும், கருத்துச்செறிவுள்ள அக்கவிதையைப் படைத்தளித்திருக்கும் திரு. கொ. வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகவும் தேர்ந்தெடுக்கிறேன்.

    …என் அனுபவ உயரத்தில்
    அவன் அகிலத்தைக் கண்டு
    தனக்கொரு வழியினை
    தானே அமைத்து 
    தலை நிமிர்ந்து
    நடந்திட வேண்டும்!

    ஊர் கோவில் திருவிழாவை
    உயரத்தில் இருந்துப் பார்த்தாலும்
    தானுயரும் நிலை வரும்பொழுது
    வானோக்கி நடக்காத
    வரமவனுக்கு வாய்க்க வேண்டும்!

    தள்ளாடி நான் நடக்கும்
    பொல்லாத காலம்
    புலருகின்றபொழுது
    எல்லோரும் போற்றும் வண்ணம்
    என் இரு கரம் பற்றி
    மெல்ல அழைத்துச் செல்லும்
    நல்ல மனம் நாளு மவன்
    நாதனருளால் பெற
    வேண்டும்!

    இக்கவிதையேயன்றி, (படத்திலிருக்கும்) குழந்தையையும், தந்தையையும் மவுனமாக்கி அருகிருக்கும் மரத்தைப் பேசவிட்டிருக்கும் புதுமைக் கவிஞர் ஒருவரையும் சந்தித்தேன். இப் புதியமுயற்சி என்னை வெகுவாய்க் கவர்ந்தது. சாதாரண மனிதனைப்போல் அல்லாமல் ஓர் மாமனிதனைப்போல் அல்லவா அந்தமரம் தத்துவங்களை உதிர்த்துள்ளது!!
    திரு. சுரேஜமியின்மரம் பேசியது’ எனும் அக்கவிதையை இவ்வாரத்தின் ’பாராட்டத்தக்க கவிதை’யாய்ச் சுட்ட விரும்புகிறேன்.

    அம்மரம் பேசியதை நாமும் செவிமடுப்போம்…

    …எவர் தந்த விதையோ
    இன்று நான் மரமானேன்;
    எத்தனை இன்னல்கள்
    ஏற்ற மரமாக?
    …வாழும் வரை
    உயிர்க்காக;
    வீழும்போது
    உனக்காக!!
    என்னிடம் கற்றுக்கொள்!
    தன்னிடமிருந்து கொடுத்தால்
    தர்மம்!
    தான் மடிந்து கொடுத்தால்
    தானம்!
    சொல்வாயா தாங்கி
    நிற்கும் குழந்தைக்கு?

    இத்தகைய புதுமைச் சிந்தனைகள் தொடர்க!

    பாராட்டுப் பெற்ற கவிஞர்களுக்கும், சிறப்பான பங்களிப்பை நல்கியிருக்கும் கவிஞர்களுக்கும் என் நெஞ்சுநிறை வாழ்த்துக்கள்! தொடர்ந்து ஊக்கத்தோடு பங்குபெறுக! சிறந்த ஆக்கங்களைத் தருக!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 6-இன் முடிவுகள்

    மேகலா இராமமூர்த்தி

     

    11096973_812600832127451_1724852484_n

    திருமிகு. ஆர். லக்ஷ்மி அவர்களின் கைவண்ணத்தில் மிளிரும் ’மாடும், மாதும் ஒற்றையடிப் பாதையில் நடைபயிலும்’ இப்புகைப்படம், கவிதை வடிப்பதற்கு அழகானதோர் களத்தைக் கவிஞர்கட்குத் தந்திருக்கின்றது.

    முன்னே மாட்டை நடக்கவிட்டுப் பின்தொடரும் அம்மங்கை, தன் கையிலுள்ள கோலை மாட்டை அடிப்பதற்காக உயர்த்திப் பின்பு அதன்மீது அடிவிழா வகையில் இறக்கியிருப்பதைக் காண்கையில் ‘கடிதோச்சி மெல்ல எறிக!’ எனும் வள்ளுவம் என் நினைவில் நிழலாடக் காண்கிறேன்.

    முன்பு, நம் மக்களின் செல்வமாகத் திகழ்ந்தவை இம்மாடுகளே அல்லவா? வீட்டிலிருக்கும் மாடுகளின் எண்ணிக்கையை வைத்துத்தான் முல்லைநில மக்களின் செல்வச்செழிப்பு அக்காலத்தில் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதனாலன்றோ ’மாடு’ எனும் சொல்லே அன்று ’செல்வம்’ எனும் பொருளைத் தந்தது. வான்புகழ் வள்ளுவரும்,

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    மாடல்ல மற்றை யவை. (குறள்: 400) எனும் குறளில் மாட்டை, ’செல்வம்’ எனும் பொருளில் பயன்படுத்தியிருப்பதைக் காண்க.

    இனி, கவிஞர்களின் படைப்புக்களுக்கு வருவோம். கிட்டத்தட்ட 25 கவிதைகள் இவ்வாரப் படக்கவிதைப்போட்டிக்கு வந்திருப்பது வல்லமை வாசகர்கள் இப்போட்டிக்குத் தரும் பேராதரவைத் தெளிவாய்ப் புலப்படுத்துகின்றது.

    கவிதைகளைக் கவனித்ததில், ஒரு சில கவிதைகள் தவிர்த்துப் பெரும்பாலானவை பசுமையற்ற வறட்சி, அவ்வறட்சியால் உயிர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவலநிலை, அதிவேக நகரமயமாதலால் விரைந்து அழிந்துவரும் உழவுத் தொழில் இவற்றைப் பற்றியே கவல்கின்றன. சமூக அக்கறையோடு கூடிய இச்சிந்தனைகள் வரவேற்பிற்குரியவையே என்றபோதிலும் அளவுக்கதிகமான அவலச் சுவையை இவை கவிதைகட்கு ஊட்டிவிடுகின்றன என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும்.

    இவ்வுத்தியை விடுத்து, ஒருசிலரேனும் வேறுவகையில் சிந்தித்து, மங்கையும் மாடும் தத்தம் பணிகளைச் செவ்வனே முடித்துவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்புவதாகவோ, அல்லது மாடு தன் கன்றுக்குப் பாலூட்ட வேண்டுமென்ற வேட்கையில் மங்கையை முந்திக்கொண்டு விரைந்து செல்லுகின்றது என்ற வகையிலோ தங்கள் கவிதைகட்கு உவகைச் சுவை ஊட்டியிருக்கலாம், கவிதையின் போக்கை மாற்றியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. எனினும் உங்கள் முயற்சிகட்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து, என் கருத்தைக் கவர்ந்த கவிதை வரிகள் உங்கள் பார்வைக்கு…

    கொடுவெயில் எரித்து என் பாதம் கருக்கியே
    கடுக்கின்ற கால்கள் இரண்டும் – வெந்தாலும்
    பாடுபட்டு உழைக்கும் பாமரப் பெண் நான்
    விடுபடாதென் நெஞ்சுரம் என்றும்! என்று பாமரப் பெண்ணின் நெஞ்சுரம் பேசும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    *********************

    களிறைக் கட்டி
    கலநெல் அடித்து
    களிப்பாய்க் கூடி
    வாழ்ந்த காலமெங்கே?
    கையால் அடித்து
    வரும்நெல் சேர்த்து
    வயிறு வளர்க்க
    வாழும் காலமிங்கே! எனும் திரு. சுரேஜமீயின் அக்கால இக்கால ஒப்பீட்டு வரிகள்…

    ********************

    வான் பொய்ப்பினும், தான் பொய்யா
    மலைத்தலைய கடற்காவிரி
    கானல் நீரெனப் பொய்ப்ப…….
    ….
    பசுந்துளிர் தேடும் நீள்பயணம்,
    மங்கைக்கும் மாட்டுக்கும்
    விடியலில் முடியட்டும்! எனும் திருமிகு. ஞா. கலையரசியின் நம்பிக்கை வரிகள்…

    *********************

    மாடு கண்ணு காடு கழனியில
    புல்லு தின்ன காலம் மாறி
    நெகிழி பையை தின்னுற
    நிலைமை தான் ஆச்சுது! என்று மாட்டின் இன்றைய அவலம் கூறும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    *********************

    தாகமான மாட்டுக்கு
    தண்ணிதேடி போறியா- இல்லை 
    பசியெடுத்த மாட்டுக்குப் 
    புல்லுதேடிப் போறியா- இல்லை 
    மாமனுக்கு சீதனமாய்
    மாட்டைத்தரப் போறியா? என்று கேள்விக்கணைகளை மங்கையிடம் தொடுக்கும் திரு. எஸ். பழனிச்சாமியின் வரிகள்…

    **********************

    அறுப்புக்குப் போடாமல் அன்போடு மேய்க்கும் 
    பொறுப்பில் இருக்கும் கருணை வடிவமே  
    ஆண்டவன் வாழும் அமைப்பு… என்று மாட்டிடம் அன்பு பாராட்டும் மங்கையைப் பாராட்டுகின்ற திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

    ***********************

    இல்லாமை வெள்ளாமை
    ஆகும் போது 
    வேளாண்மைத் தொழில்
    பொல்லாமை ஆகுது !…
    வறுமை நீக்கா உரிமை நாடு
    வாழ்வை அரிக்கும்
    நரகக் காடு! என்று மக்களைக் காவாத நாட்டை இடித்துரைக்கும் திரு. ஜெயபாரதனின் வரிகள்…

    ***********************

    என்ஜோட்டு 
    பொண்ணுங்கள்ளாம் 
    கல்யாணம் கட்டிக்கிட்டு 
    ஓடிப் போக 
    நான் மட்டும் 
    உன் வாலைப் 
    பிடிச்சிக்கிட்டு  
    ஊரு மேயறேன்! என்று படிப்பு வராததால் மாடுமேய்ப்பதாக மங்கையவள் புலம்பும் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரின் வரிகள்…

    ************************

    வரலாறு பதிந்து கொண்டிருக்கா 
    இந்த ஒற்றையடிப் 
    பிரபஞ்சங்கள்… அழுகவுமில்லை..
    இடிந்துவிட்டிருக்கவும் இல்லை…என்று நம்பிக்கைக் கீற்றைக் கவிதையில் நட்டிருக்கும் திரு. நல்லை. சரவணாவின் வரிகள்…

    *************************

    கால் நடையா போற எனக்கு
    இந்த கால்நடையை தவிர
    வழித்துணையா யாரும் இல்லை…என்று சோகத்தினூடும் வார்த்தை விளையாட்டு நிகழ்த்தியிருக்கும் திரு.திருமலைசோமுவின் வரிகள்…

    *************************

    இப்படி, நல்ல ஓட்டமும் சொற்செட்டும் கொண்ட கவிதைகள் பல நம் இரசனைக்கு விருந்து படைத்தாலும், சுருக்கமும், கருத்தாழமும் கொண்ட நம்பியவள் நடக்கின்றாள்’ எனும் கவிதையை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகவும், சொல்லவந்ததை ’நச்’சென்று சொல்லி விளங்க வைத்திருக்கும் திரு. ஜெயராம சர்மாவை இவ்வாரப் போட்டியின் சிறந்த கவிஞராகவும் தேர்ந்தெடுக்கிறேன்.

    நம்பியவள் நடக்கின்றாள்
    ———————————————

    நீரற்ற நெடுந்தரை நெஞ்சமெலாம் பெருங்கனவு
    காரற்ற நெடுவானம் கற்றரையில் நடைப்பயணம்
    வேரற்ற வாழ்வினிலே விடிவுதனை எதிர்பார்த்து
    நார்போன்ற பெண்ணவளும் நரம்புதெரி எருதோட்டி
    நம்பிக்கை மனமேற்றி நம்பியவள் நடக்கின்றாள்!

    பாராட்டுப்பெற்ற, பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்கட்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து படக்கவிதைப் போட்டிகளில் ஊக்கத்தோடு பங்குபெறுக! சிறந்த கவிஞராய்த் தேர்வு பெறுக! என வல்லமை வாசகர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.

    Share
  • ஆடல் காணீரோ – பகுதி 3

    -மேகலா இராமமூர்த்தி

    முன்னொருகாலத்தில் புகழ்பெற்றிருந்த அசுரர்களில் ஒருவன் வாணாசுரன். இவன் மாபலிச் சக்கரவர்த்தியின் மகனாவான். இவனுடைய மகளாகிய உஷை, காமனின் மகனான அநிருத்தன்மீது காதல் கொண்டாள். (அநிருத்தன் கண்ணனின் மகனான பிரத்யும்னனின் மகன் என்கின்றன வைணவ நூல்கள்; ஆனால் சிலம்பின் உரையாசிரியர்கள் அவனைக் காமனின் மகன் என்றே குறித்துள்ளனர்.) தந்தைக்குத் தெரியாமல் அவனைத் தன் அரண்மனைக்குத் தோழி சித்ரலேகை உதவியால் கொண்டுவரச்செய்த உஷை, அவனைக் கந்தர்வமணம் புரிந்து வாழ்ந்து வந்தாள்.

    இதையறிந்த வாணாசுரன் கடுங்கோபம்கொண்டு அநிருத்தனைச் சிறைப்படுத்த, அதையறிந்து, மாயோனாகிய கண்ணன் வாணனின் ’சோ’ நகரத்திற்குச் சென்று அங்கே அவனால் சிறைவைக்கப்பட்டிருந்த அநிருத்தனை மீட்க, மண்ணாலும் உலோகங்களாலுமான பலகுடங்களைக் கையிலேந்தி ஆடியதாய்க் கருதப்படுவது ‘குடக்கூத்து’. இது விநோதக் கூத்துவகைகளில் ஒன்று.

      madavi1குடக்கூத்தாடுவோர் ‘தலையிலே அடுக்குக் குடமிருக்க, இரு தோள்களிலும் இரு குடங்களிலிருக்க, இருகைகளிலும் குடங்களையேந்தி ஆகாசத்திலேயெறிந்து ஆடுவர்’ என்கின்றனர் உரையாசிரியர்கள். ஆடுவதற்கு அதிகப் பயிற்சியும் முயற்சியும் தேவைப்படும் இக்கூத்தை மலர்விழியாள் மாதவி அநாயாசமாக ஆடிக்காட்டினாள் என்றே கூறலாம்.

    வாணன் பேரூர் மறுகிடை நடந்து
    நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும். இவைக் குடக்கூத்தை விளக்கும் காப்பிய வரிகள்.

    இக்குடக்கூத்தைப் பற்றிச் சிலப்பதிகாரமேயன்றித் திவ்யப்பிரபந்தமும் பேசுகின்றது. மூன்றாம் திருமொழிப் பாசுரமொன்றில் ’சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ ஆண்டாள் எடுத்தாண்டுள்ள,குடத்தை யெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎங் கோவே’ எனுந்தொடர் கண்ணன் ஆடிய குடக்கூத்தையே குறித்து நிற்கின்றது.

    இவ்வாறு, அநிருத்தனை மீட்க முதலில் கண்ணன் ’சோ’ நகர வீதிகளில் குடக்கூத்தாடினான். அதுபோல், தன் மகனைச் சிறைமீட்க விரும்பிக் கண்ணனோடு சென்றிருந்த காமனும் (தன் பங்குக்குப்) பேடிக் கோலத்தில் (இதன் இன்றைய வழக்குமொழி ’திருநங்கை’) ஓர் ஆடலை நிகழ்த்தினான். ’பேடிக்கூத்து’ எனும் பெயர்கொண்ட அந்தக்கூத்து, நிகழ்ச்சியில் அடுத்ததாக இடம்பெற்றது.

    ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
    காமன் ஆடிய பேடி யாடலும்….. என்பது சிலப்பதிகாரம் பேடிக்கூத்திற்குத் தரும் விளக்கம்.

    காமன் ஆடிய இப்பேடிக்கூத்தை மணிமேகலைக் காப்பியமும்,

    வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
    நீணில மளந்தோன் மகன்முன் னாடிய
    பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்…(மணி-3:123-125) என்று குறிப்பிடுவதை இங்கே ஒப்புநோக்கலாம். (இதில் காமன், திருமாலின் மகனாய்க் குறிக்கப்படுகிறான் என்பதை அறிக.)

    இதுவரை ஆண் கடவுளர், தேவர் போன்றோரின் ஆடல்களையே நிரலாக ஆடிவந்த மாதவி, இப்போது பெண்தெய்வங்கள் ஆடியதாய்ப் புராணங்கள் தெரிவிக்கும் கூத்துக்களை ஆடத் தொடங்கினாள்.

    அவற்றில் முதலாவதாய் அவள் ஆடியது ’மரக்கால் கூத்தாகும்’; இக்கூத்தைக் குறிக்கும் சிலம்பின் வரிகளாவன…

    காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
    மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்

    வெற்றித் தெய்வமான கொற்றவை, அசுரர்கள் நல்லோர்க்குச் செய்கின்ற கொடுந்தொழில் கண்டு ஆற்றாளாகி அவர்களோடு போர்புரியும் வேளையில், அவ்வசுரர்கள் இறைவியொடு நேருக்குநேர் நின்று போர்புரியும் திறனற்றோராய் அவளை வஞ்சத்தால் வெல்லக்கருதி பாம்பு, தேள் முதலிய கொடிய உயிரினங்களின் உருவில் அவளை அழிக்க முயன்றனர். அதை அறிந்த அம்மை, அவ்வஞ்சத்தைத் தன் சாதுரியத்தால் வெல்லக்கருதி மரத்தாலான கால்களின்மேல் ஏறிநின்று அக்கொடிய உயிரினங்கள் வடிவில் இருந்த அசுரர்களை உழக்கிக் கொன்றாள். பின்பு வெற்றிப் பெருமிதத்தோடு அவள் ஆடிய ஆடலே ‘மரக்கால் கூத்தாகும்’. இம்மரக்கால் கூத்தை சிலம்பின் மற்றொரு பகுதியான ’வேட்டுவ வரி’யில் ஆசிரியர் இளங்கோவே மீண்டும் குறிப்பிடுவது இங்கே எண்ணத்தக்கது.

    ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப
    மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கால்மேல் வாளமலை யாடும் போலும்
    மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கால்மேல் வாளமலை யாடுமாயின்
    காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும். (வேட்டுவ வரி)

    ஆடுவதற்கு மிகவும் சவாலான இம்மரக்கால் கூத்தையும் சீரிய நாட்டியப் பயிற்சியைச் சிறுவயது முதலே பெற்றிருந்த மாதவி (மரத்தினாலான கால்களைக் கட்டிக்கொண்டு) சிறிதும் தடுமாறாமல் ஆடிக்காட்ட, கண்டோர் அனைவரும் மூக்கின்உச்சி சுட்டுவிரல் சேர்த்து அதிசயித்தனர்.

    வீரச்சுவை மிக்கிருந்த மரக்கால் கூத்தைத் தொடர்ந்து, காதற்சுவை (சிருங்கார ரசம்) சொட்டும் ஓர் ஆடலை அரங்கு கண்டது; அதன் பெயர் ’பாவைக் கூத்து’.

    போர்க்கோலம் கொண்ட அவுணர்களின் சி(ம)னத்தை மாற்றி, அவர்கள்pencilmadavi மேற்கொள்ளவிருந்த போர்த்தொழிலை நிறுத்தவிழைந்த செய்யோளாகிய திருமகள், ’கொல்லிப்பாவை’போல் (அழகினால் மனத்தைப் பேதலிக்கச் செய்யும் ஒரு பாவை வடிவம்) தோற்றங்காட்டி அழகிய ஆடலொன்றையும் நிகழ்த்தி அவர்களின் சித்தத்தைத் தடுமாறச்செய்து யுத்தத்தை நிறுத்தினாள் என்கிற புராணச் செய்தியை அடியொற்றி அமைக்கப்பட்ட இப்பாவைக் கூத்தைப் பாவை மாதவி ஆட, பார்த்தோர் மனங்களும் பித்தேறி ஆடின.

    செருவெங் கோலம் அவுணர் நீங்கத்
    திருவின் செய்யோள் ஆடிய பாவையும் என்று பாவைக்கூத்தின் இயல்பைப் பாங்காய்ச் செப்புகின்றார் ஆசிரியர்.

    அடுத்ததாய் மேடையில் இடம்பிடித்தது, உழவர்குலப் பெண்போல் உருமாறிய அயிராணி (இந்திரனின் மனைவி இந்திராணி) எனும் தெய்வமடந்தை வாணாசுரனின் ’சோ’ நகரத்தின் வடக்கு வாயிலருகே உள்ள வயலிடத்தே ஆடியதாய்க் கூறப்படும் ‘கடையம்’ எனும் கூத்தாகும்.

    வயலுழை நின்று வடக்கு வாயிலுள்
    அயிராணி மடந்தை ஆடிய கடையமும்

    ’கடைசியர்’ (உழத்தியர்) எனும் பெயரான் அன்று அழைக்கப்பட்ட உழவர்குல மகளிரின் நாட்டியமே ‘கடையம்’ என்பது. மாதவி தன் ஆடல்களின் வரிசையில் கடைசியாக ஆடியது இக்கூத்தையே.

    இவ்வாறு தான் ஆடிய பதினோராடலுள் இறைவனாகிய சிவபெருமான் ஆடிய இரண்டினை முன்வைத்தும், மாயோனாகிய திருமால் ஆடிய இரண்டினையும், சேயோன் முருகன் ஆடிய இரண்டினையும் முறையே அவற்றின்பின் வைத்தும், வெற்றி பற்றி நிகழ்ந்த இக்கூத்துக்களின் தொடர்ச்சியாய்க் காமத்தாற் சிறைப்பட்ட அநிருத்தனை மீட்டல் காரணமாக மாயோனாடிய விநோதக் கூத்தினையும், அதன்பின் காமன் ஆண்மை திரிந்து பேடியுருக்கொண்டாடிய கூத்தினையும், அவற்றின் பின்னர், பெண் தெய்வங்களுள்ளே முறையே கொற்றவையும் திருமகளும் அயிராணியும் ஆடியவற்றையும் வைத்து கூத்துக்களை வகையாய் வரிசைப்படுத்தியிருந்த மாதவி, இக்கூத்துக்களையெல்லாம் அவற்றிற்குரிய இலக்கணம் சிறிதும் வழுவாது ஆடியமுறையின் சிறப்பு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

    அவளுடைய ஆடற்கலையின் நயத்தில் கட்டுண்டு, வேறோர் மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள், அவள் ஆட்டத்தை நிறுத்திய பின்பே நனவுலகிற்கு மீண்டனர். ”புகார் நகரம் பெற்றெடுத்த புதையல் இவள்!” என்று ஒருவருக்கொருவர் வாயூறிப் பேசிக்கொண்டனர். கூட்டத்திலிருந்து ஆட்டத்தை இரசித்துக்கொண்டிருந்த விஞ்சையனும் அப்போதுதான் தன்னுணர்வு பெற்றவனாகத் தன் காதலியைப் பார்த்து, ”இப்போதாவது மாதவி ஆடலின் மகத்துவத்தை உணர்ந்தாயா?” என்று கேட்க, அவளோ “ஆகா பிரமாதம்! இப்படியோர் நாட்டியத்தைத் தேவலோகத்தில்கூட நான் கண்டதில்லையே!” என்று வியக்க, மகிழ்ச்சியோடு அவ்விருவரும் அரங்கிலிருந்து அகன்று சென்றனர்.

    இப்படி, மாதவி ஆடியதாய் இளங்கோவடிகள் நமக்கு அறிமுகப்படுத்தும் பதினோருவகை ஆடல்கள், நம் தமிழகத்தில் அன்றே நாட்டியக்கலை  வியத்தகு வளர்ச்சியடைந்திருந்ததைக் காட்டுகின்றன. அத்தோடு, அன்றைய ஆடல்மகளிர் அரங்கில் ஆடுதற்குப் பின்பற்றிய ஆடல்களின் நிரலொழுங்கையும் நாம் அறிந்துகொள்ளப் பெருந்துணை செய்கின்றன.

    காப்பியத்தின் கதைப்போக்கின்படி அன்று மாதவி ஆடிய ஆடலே அவள் வாழ்வின் கடைசி ஆடலாகவும் அமைந்துவிட்டது. அதை எண்ணும்போது நம் மனம் வேதனையில் கனக்கவே செய்கின்றது. என் செய்வது? ’All good things must (come to an) end’ என்பதே வாழ்க்கை நமக்குணர்த்தும் பாடமல்லவா?  

    (முற்றும்)

    Share