-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் போட்டிக்கான ஒளிப்படத்தைத் தந்திருக்கும் திரு. என். எஸ். ஹ்ரிஷிகேஷுக்கும், இதனைப் போட்டிக்கான படமாகத் தேர்வுசெய்த திருமிகு. சாந்தி மாரியப்பனுக்கும் எங்கள் நன்றி.

dog my darling

நாய்க்குட்டியைக் கொஞ்சும் நங்கையின் புகைப்படம் பல எண்ண அலைகளை மனக்கடலில் எழுப்புகின்றது. மனிதருக்குக் காவலாய், அவர்களுக்குக் காதலாய், நன்றி பாராட்டுதலில் தன்னை ஒப்பாரின்றித் திகழும் ஒரே உயிர் நானிலத்தில் நாயன்றி வேறில்லை. அதனாலன்றோ நன்னெறிகளை நுவலுகின்ற நாலடியார், ”யானையின் குணமுடையாரின் நட்பை விடுத்து நாயின் குணமுடையாரிடம் நட்பு கொள்க” என்று அறிவுறுத்துகின்றது.

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை
கெழீஇக் கொளல்வேண்டும் யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
(நாலடி: 213)

இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் என் கவனத்தைக் கவர்ந்தவற்றைப் பட்டியலிடுகிறேன்.

*****

நளின மொழியில் நாயின் புகழ்பாடும் திரு. கவிஜியின் வரிகள்…

உன் செல்ல சிணுங்கலை  
பிடித்துக் கொண்டு போகிறது 
முன் வாசல்கடந்து போகும் 
மண் வாசனை…
[…]
வீடெங்கும் சொட்டும் 
உன் ஈரப் பாதங்களில் 
நீர்க் கோடுகள்…
வளைந்து நெளிந்து
வால் ஆட்டுவதில், 
அழகு கூட்டுகிறது 
உன் உடல்…

*****

வாழ்வின் யதார்த்தம் பேசும் திருமிகு. சாரா பானுவின் வரிகள்…

உன்னை முத்தமிட்டால் கிடைத்து விடுகிறது
மாற்றாக வாலாட்டல், சிறு துள்ளல், செல்ல உரசல்என பாசப்பரிமாற்றம்….
கிடைப்பதில்லை இங்கு பலசமயம் பரிவு கூட…

*****

நிகழ்வின் அழகைப் படம்பிடிக்கும் திரு. கட்டாரியின் வரிகள்…

இப்படியே பிள்ளையாகிவிடு….
என்னும்..இவளின் 
முத்தத்தைப் போல……
எதற்காகத் தவறவிட்டாள்
என்னைப் பெற்றவள்… என்னும்
இவனின்… தேடல்களைப்
போல…
நிழந்துகொண்டிருப்பது….
அழகாகிறது….!!

*****

இயற்கையோடும், விலங்குகளோடும் பேணும் உறவு மனிதர்களோடு சாத்தியமற்றுப்போவதை விளக்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனின் வரிகள்…

உன்னோடும் 
மலைகளோடும்
பூக்களோடும்
நதிகளோடும்
மனம் கொள்கிற
உறவை
சக மனிதர்களோடு
கொள்ள முடிவதில்லை
நன்றியுள்ள நீ மேல்
மனிதர்களைவிட!

*****

”பெற்றால்தான் பிள்ளையா? நீயும் என் குழந்தையே!” என்று நாய்க்குட்டியை அரவணைக்கும் திருமிகு. சியாமளா ராஜசேகரின் வரிகள்…

தன்னந் தனியாய்த் தவித்திட்டக் குட்டியுனை
அன்னையாய் நானும் அரவணைப்பேன் – அன்புடன் 
கொஞ்சி மகிழ்வேன் குழந்தையாய்க் காத்திடுவேன் 
அஞ்சாதே என்றும் இனி.

*****

மனிதருக்கு மனிதரே எதிரியாகும் தருணங்களைப் பட்டியலிட்டு நாயின் அன்புதரும் கதகதப்பைக் கவினுறக் கழறும் திரு.ருத்ரா இ. பரமசிவனின் வரிகள்…

…மனிதருக்கு மனிதர்
முன்பின் தெரியாமல் இருக்கும்போதே
இப்போது
மனிதருக்கு மனிதரே எதிரி.
[…]
உன் விழியின்
குறு குறுப்பும்
செவி மடல்களின்
உடுக்கை அடிப்புகளில்
உதிர்ந்து விழும்
அந்த இனிய ஓசைத்துடிப்புகளும்
மட்டுமே போதும்.
இந்த உலகத்தை
விரித்து மடக்கி
நீ உட்காரத்தருகிறேன் வா!

*****

அன்பே நம் மதம், அதுவே நம் வேதம், அதை ஓதுவோம் நிதமென்று அன்பின் வலிமையை வளமையாய்ச் சொல்லியிருக்கும் திரு. சுரேஜமீயின் வரிகள்…

உலகின் 
இன்பத்தை
உன் அணைப்பில்
காணும் ஒவ்வொரு
கணமும் நான்
புத்துயிர் பெறுகிறேன்!
[…]
உயிர்கள்

ஒன்றுதானே
வாழும் 
உயிர்க்கு!
மரணம் 
உண்டுதானே
வாழ்வில்
எவர்க்கும்!
[…]
மனிதன் மாறட்டும்;
மனங்கள் விரியட்டும்;
புறங்கள் தெளியட்டும்;
கரங்கள் நீளட்டும்!

*****

காளமேகப் புலவராய் மாறி நாயின் குணத்தோடு மனத்தை இணைத்து இரட்டுற மொழிந்திருக்கும் திரு. எஸ். பழனிச்சாமியின் வரிகள்…

அன்பால் வசமாகும் வீட்டில் ரகசியமாய்
கன்னம் இடுவோரைக் கண்டதும் – மென்னி
பிடிக்கத் துடிக்கும் விளையாடி பல்லால்
கடிக்கும் குலைக்கும் அதட்டி..
[…]
அன்பைப் பொழியும் அவரின் அடிமையாய்
தன்னையே தந்து முடிந்திடும் – ஒன்றியே
நன்றியைக் காட்டிடும் சித்தர்தம் கூற்றினால்
என்றும் மனமது நாய்.

*****

நாய்க்குட்டியின் நல்லன்பில் நெகிழ்ந்திருக்கும் பெண்ணின் மனத்தைக் காட்டும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

ஒரு சிறு வருடல் தான்
நான் உனக்கு கொடுத்தது –
வாலாட்டியபடியே என் கைகளில்
தஞ்சமானாய் ! – உந்தன்
அன்பை மழையாய் பொழிந்தாய் !
[…]
தன்னலமிலா உந்தன் அன்பே
உயர்வென்று உரக்க சொல்வேன் !

*****

”வெறிச்சோடிய இல்லத்தின் வெறுமையைப் போக்கிய சுடரொளியே!” என்று நாயைக் கொஞ்சும் தாயின் அன்பை நயமுறச் செப்பும் திரு. சி. ஜெயபாரதனின் வரிகள்…

வெறிச்சோடிச்
சூனிய மான இல்லத்தை
உயிர்ப்பித்து
சூட்டிகையாய், சுடர் ஒளியாய்,
சுறுசுறுப்பாய் நீ
[…]
என் தனிமை போக்கி
இனிமையுடன் , இன்முகத்துடன்
தவழும் பிள்ளையாய்
உன்னை நான்
தத்தெடுத்தேன் ! 
முத்தம் ஒன்று தருகிறேன்
அத்தாட்சி யாக
மடிமேல்
தாவிய உனக்கு !

*****

சிந்தையில் மகிழ்ச்சியை விதைத்து வாழ்வை அர்த்தமாக்குகின்ற நாயின் நற்பண்பை வியக்கும் திருமிகு. துஷ்யந்தியின் வரிகள்…

ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
என் சிந்தையில் பறப்பதாய்
எனக்குள்ளே ஆனந்தம்
நீ பசியாலே துடிக்கையில்
பதறித்தான் போகின்றேன்
தினம் கண் விழிக்கையில்
வழியெங்கும் தேடுகிறேன்….
[…]
சின்னவள் உன்னிடம்
நற்பண்பை உணர்கிறேன்
நன்றியின் அர்த்தந்தனை
நன்றே கற்றுக் கொள்கிறேன்…

*****

வாலாட்டி நிற்கும் நாய்ப்பாசத்தை வியக்கும் பெண்மையைத் தன் கவிதையின் பாடுபொருளாக்கிய திரு. ஜெயராம சர்மாவின் வரிகள்…

வாலாட்டி வாலாட்டி வலம்வந்து நிற்பாயே
வாசல்வந்து நின்றுவெனை வரவேற்றும் நிற்பாயே
நோயென்று நான்படுத்தால் நூறுதரம் நக்கிடுவாய்
வாய்பேசா விட்டிடினும் மனமெல்லாம் நீதானே ! 

*****

நங்கையிடம் நாய்க்குட்டியே தன்னிலை நவிலுமழகை, தன்பிறப்பை இகழும் மனிதனின் மடமையை எண்ணி அது வருந்துவதைக் காட்டும் திருமிகு. பி. ஆர். லட்சுமியின் வரிகள்…

உன் உள்ளங்கை ஸ்பரிசம்
தாயின் கருப்பை பாதுகாப்பு
உனது இதழ்களின் தொடுதல்
தாயின் தாலாட்டு!
[…]
பிறப்பாலே நன்றி அவதாரமாக நான்!
எங்கோ ஒருவன் என் பிறப்பு
வேண்டாம் என்ற உச்சரிப்புடன் 
இறைவனிடம் மண்டியிட 
காரணம் புரியாத சோகத்தில் நான்!

*****

’நாயின் துணையே நற்றுணையாம்’ என்று போற்றும் திரு. செண்பக ஜெகதீசனின் வரிகள்…

நன்றி யுள்ளது நாயென்றுதான்
     நல்ல துணையும் அதுவென்றுதான்,
நன்றெனக் கொண்ட நட்பென்றுதான்
     நாளும் உதவிடும் கரமென்றுதான்,
என்றும் ஏய்த்திடா உறவென்றுதான்
     எதிரியை ஓட்டிடும் பகையென்றுதான்,
ஒன்றிய நட்பில் உயர்வென்றுதான்
     உன்னைக் கொண்டேன் நாய்க்குட்டியே…!

*****

பேரன்பின் பிறப்பிடமாய்க் காட்சியளிக்கும் ஈருயிர்களைப் பாராட்டும் திரு. அமீரின் வரிகள்…

கூறடா
உன்னத
அன்புக்கு பாத்தியம்
மாறடா
கண்டிதை
பேரன்பு சாத்தியம்.
பாருடா
கருணைக்கு
தாயான இளையவளை
பாடுடா
துயர் நீக்க
தோள்கொடுக்கும் மூத்தவளை
வாழுடா
உயிரனைத்தும்
நேசித்து மண்ணிலே…

*****

மனம் நடுங்கவைக்கும் நிலநடுக்கத்தில் சிக்கி உறவுகளை இழந்த பெண்ணுக்கு உற்றதுணையாய்க் கிடைத்த நாய்க்குட்டியை வாழ்த்தும் திரு. மெய்யன் நடராஜின் நேச வரிகள்…

கோடி குவித்து குவலயம் ஆண்டவரும் 
மாடி மனையிடிந்து மண்ணுக்குள் –மூடி 
முடங்கி ஒருநொடியில் மூச்சடக்க வைத்த 
இடத்தில் துணைநீ எனக்கு.
எதுவுமில்லா வாழ்வில் எனக்கோர் துணையாய் 
புதுஉறவாய் வந்து கிடைத்தாய். –இதுபோதும் 
கைத்தடி கொண்ட குருடனினா தாரமாய் 
மெய்ப்பொருள் காண்பேன்  இனி.

*****

’உயிர்களை இணைக்கும் இன்பமொழி அன்பு’ என்று அன்பின் பெருமையை அகிலத்துக்குணர்த்தும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

அகிலம் நிறைக்கும் மொழி அன்பு
திகிலகற்றும் தீர்க்க மொழி அன்பு
அன்பில் திளைத்ததனால் ….
இன்பமே சூழ்ந்திருக்க …
இவ்வுலகம் மறந்திருந்தோம் !

*****

அருமையான கவிதை வரிகளால் அகங்குளிர வைத்த கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக!

இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைத் தேர்ந்தெடுக்கும் தருணமிது…

’அன்பின் வழியது உயிர்நிலை’ என்பார் ஐயன் திருவள்ளுவர். ஆம்! உலகவாழ்க்கைக்கு ஆதாரமே அன்புதான்! அதிலும் அன்பின் அருமையை நன்குணர்ந்தோர் ஆதரவற்றோரே! அத்தகைய ஆதரவற்றோர் இருவர், அன்பில் இணைவதை, அதில் கரைவதை அழகாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் ஓர் இனிய கவிதை என் மனங்கவர்ந்தது.

அக்கவிதை…

தெருவோரத்துக்
குப்பைத் தொட்டியில்
தொட்டில் குழந்தையாகி
நடுங்கிக் கொண்டிருந்தது

வால் உயர்த்தி…!
வாலில் ரிப்பன் கட்டி
நெற்றியில் பொட்டிட்டு
மை தடவி அழகனுக்கு
‘சுப்பிரமணி’ பெயர் சூட்டி
அழைத்துச் சிரிக்க
என் முன்னே
காமெரா கண்களில்லை…!

வீதியோரத்து
மரத்தடி நிழலில்
விதியை நொந்தவள்
அமர்ந்தேன்…!

“அனாதை நாயே”
என அடித்துத் துரத்திய
முகங்கள் கண்முன்னே…!
[…]
இறைவன் ஈந்த
துணையாய்
நடுங்கிய அவனைக்
கரங்களில் அணைத்துக்
கொண்டேன்…!

கொடுப்பதன் இன்பம்
பெறுவதன் சுகம்
மௌனமாய்
நிமிடத்தில் பரிமாற ..!
நெஞ்சை அழுத்திய
பாரம் முழுதும்
இப்போது அந்தக்
குப்பைத் தொட்டியை
நிறைத்தது…!
அன்பு தரும்
பாதுகாப்பில்
உள்ளம் நிறைந்தது..!

நெஞ்சை நெகிழ்த்தும் இக்கவிதையைப் படைத்த கவிஞர் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

*****

இன்னொரு கவிதையும் பாடுபொருளின் அமைப்பில் தனித்து நிற்கின்றது.

அக்கவிதை…

பள்ளிவிட்டு வந்தவுடன் சொல்ல
பலப்பல கதைகள் உண்டு என்னிடம்..
பாந்தமாய் பக்கம் அமர்ந்து
கேட்கவொரு செவியில்லை இவ்விடம்!

கதவின் பூட்டுக்கான சாவிமட்டுமே என்னிடம்
இதயப்பூட்டுக்கான சாவிகளின் இருப்பு எவ்விடம்?

முதியவர் இல்லத்தில் கூட்டாய் வாழ்கிறது 
என் மூத்த தலைமுறை
முந்தைய வாழ்வை தமக்குள் பகிர்ந்தபடி!
[…]
வெதும்பிக்கழியும் என் நிகழ்காலம் குறித்த 
பிரக்ஞையற்றவர்களுக்கு
ஒருபோதும் புரியப்போவதில்லை என் பிரியம்!

தெருவில் கிடப்பதோடு என்ன கொஞ்சலென்று
விருட்டென்று என் கைப்பிடித்து 
வீட்டுக்குள் இழுத்துப்போக
வெகுநேரம் ஆகப்போவதில்லை.
அதுவரையிலும்…
கொஞ்சிக்களித்து கூடியிருப்போம்.. வா!

இக்கவிதையை இயற்றியுள்ள திருமிகு. கீதா மதிவாணனை இவ்வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

பங்குபெற்றோர், பாராட்டுப்பெற்றோர் அனைவருக்கும் என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி 10-இன் முடிவுகள்

  1. பங்குபெற்ற மற்றும் பாராட்டு பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் இனிய வாழ்த்துகள். இந்த வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராய் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் தொடர்ந்து எழுதும் ஊக்கமும் தருகிறது. தெரிவு செய்த மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் வாய்ப்பளித்த வல்லமைக்கும் கனிவான நன்றி. 

  2. அன்புச் சகோதர சகோதரிகளே, 

    வணக்கம்.  தங்களின் வரிகளில் தமிழனின் சிந்தனையைப் பார்க்கும்போதுதான் நம்பிக்கை வருகிறது இனம் வாழுமென்று!

    உங்களின் கவிதைகளுக்குப் பாராட்டுக்கள்!

    சகோதரி மேகலாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல அவர்தம் இப்பணிக்கு!

    ஊற்றுக்கண் திறப்பதோடு மட்டுமல்லாமல், நிறைகளை ஆராய்ந்து, அவற்றுள் மிகை கொளல்தான் சிறப்பு எனும் விதைகளையும் விதைக்கிறார் அன்புச் சகோதரி மேகலா என்றால் மிகையாகாது!

    வெற்றி பெற்ற கவிதாயினி ஜெயஸ்ரீ ஷங்கருக்கும், இவ்வார சிறந்த கவிதையைக் கொடுத்த கவிதாயினி கீதா மதிவாணன் மற்றும் அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    அன்புடன்
    சுரேஜமீ

  3. வெற்றி பெற்ற கவிஞர் ஜெயஸ்ரீ ஷங்கருக்கும் , பாராட்டு பெற்ற கவிஞர் கீதா மதிவாணன் , மற்றும் பங்கு பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

  4. வெற்றிபெற்றஜெயஸ்ரீ ஷங்கருக்கும்,பாராட்டுப்பெற்ற கவிஞர்கீதாமதிவாணனுக்கும்,மனமார்ந்தபாராட்டுக்கள்—சரஸ்வதிராசேந்திரன்

  5. வாராவாரம் புகைப்படத்திற்கு கவிதை அளித்துப் பங்கேற்கும் அனைத்துக் கவிஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், இவ்வார சிறந்த கவிதையைக் கொடுத்த கவிதாயினி கீதா மதிவாணன் அவர்களையும் பாராட்டி, எனது கவிதையை இந்த வாரப் போட்டியில் தேர்ந்தெடுத்த திறம்மிகு கவிதாயினி மேகலா அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

  6. மனம் நிறைந்த​ பாராட்டுக்கள்…கவிதைகள் அனைத்தும் மிகச் சிறப்பு ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *