ஹரீஷ் கண்பத்

வண்டி சிக்னலில் நிற்கும் போது தான் யதேச்சையாக அந்தக் கட்டிடத்தைப் பார்த்தேன்.சிக்னல் தாண்டியதும் இரண்டாவது பில்டிங்காக வலப்புறம் இருந்தது. ஓரிரு முறைகள் நண்பனுடன் சென்றதுண்டு. தனியாகவெல்லாம் ஒரு நாளும் சென்றதில்லை.

இன்றைக்கு ஏன் போகக் கூடாது? சட்டென்று தோன்றியது. சிக்னல் பச்சைக்கு மாற இன்னும் பல நொடிகள் இருந்தன.எதற்குப் போக வேண்டும்? இன்னொரு பக்கம் யோசனை. அங்கு போனாலாவது இரவில் கொஞ்சம் எல்லாவற்றையும் மறந்து தூங்க முடிந்தால்? சிக்னல் விழுந்து விட்டது. யோசனைகள் எல்லாவற்றையும் துடைத்துத் தள்ளியபடி ஒரு அட்ரினலின் அவசரம் எங்கிருந்தோ குதிக்க, நொடிப் பொழுதின் உந்துதலில் சட்டென்று வலப்புறம் இண்டிகேட்டரைப் போட்டு திருப்பினேன். வண்டி அந்த வளாகத்துக்குள் என்னை இழுத்துக் கொண்டு போனது.

—————

காபியை வாயில் வைத்ததும் தான் தெரிந்தது. சர்க்கரை போட மறந்து விட்டிருக்கிறாள்.இந்த வாரத்தில் இது இரண்டாவது முறை. நானும் எதுவும் கேட்டுக் கொள்வதில்லை.. இப்போதைய சூழ்நிலையில் காபியில் போடும் சர்க்கரையைப் பற்றியெல்லாம் என்னால் யோசிக்க முடிகிறது என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சொல்லப் போனால் அசூயையாக இருந்தது.

இருந்துமென்ன? மனதில் சிரமங்கள் நாவுக்குத் தெரிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? நாக்கு அது பாட்டுக்குத் தன் வேலையைச் செய்கிறது. எழுந்து சென்று சர்க்கரையைப் போட்டு கலக்கிக் கொண்டு வந்தேன்.

ஆபீஸ் போக இன்னும் நேரமிருந்தது. தூக்கம் பிடிப்பதில்லை இப்போதெல்லாம். காலையிலேயே ஏதோ ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் என் தூக்கம் கலைந்து விடக் கூடாதென்று அப்பா அதை அவசரமாக எடுத்ததும் தெரிந்தே இருந்தது.இப்போதும் தொலைபேசி அழைப்பு. அப்பாவுடையது தான்.

சட்டென்று ஓடி வந்து தொலைபேசியை எடுத்தவர் என்னை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே அறைக்குள் ஒதுங்கினார். அடுத்த சில நிமிடங்களுக்கு ஒற்றைச் சொற்களில் அவர் பதிலிறுப்பது கேட்டது. “ம்… ஆமா.. என்ன பண்றது? விதி” போன்ற வார்த்தைகள். இந்த வயசில் இதையெல்லாம் தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கிறது  அவருக்கு.

எனக்குத் தெரியக் கூடாது என் காதில் விழக் கூடாதென்று எவ்வளவு முன்னெச்சரிக்கைகள். ஆனால் எனக்குத் தெரிந்தே இருக்கிறதென்பது அவருக்கும் தெரிந்தே இருக்கிறது. இருந்தும் அந்தப் பாசாங்கு. பாவம் அவர்.

உள்ளே நுழைந்ததும் ஏ சி சில்லிட்டது. வெளியே இருந்த கசகசப்புக்கு இதமாக இருந்தது. அமர்ந்தால் அமிழும் சோபாக்களை தவிர்த்து நடந்தேன். உயரமாய் இருக்கும் கூம்பு நாற்காலிகள் போடப்பட்டிருந்த மேடையின் அருகே சென்றேன். காலியாக இருந்த நாற்காலி ஒன்றில் ஏறி அமர்ந்தேன்.

இசை அதிர்ந்தபடி இருந்தது. இடப் பக்கம் பார்த்தேன். டி வியில் ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டி சத்தம் மழிக்கப்பட்டு சைலண்ட் மோடில் ஓடிக் கொண்டிருந்தது.அந்தப் பையன் வந்து “ என்ன” என்பது போல் பார்த்தான். அப்படியென்றால் ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று அர்த்தம்.

“வோட்கா ஒரு லார்ஜ்”.

“மிக்ஸிங்கு சார்?”

“ ஸ்பிரைட்டோ செவன் அப்போ “

“ஓகே சார்”

“தம்பி….”

“சார்?”

“லெமன் கார்டியலும் கொண்டு வா”

“சரிங்க சார். சைடிஷ் எதுனா ஆர்டர் பண்றீங்கனா இப்பவே சொல்லிடுங்க சார்”

“எதுவும் வேணா. இதை மட்டும் கொண்டு வா போதும்.”

அவன் அகன்றதும் டி வியைப் பார்த்தேன். எவனோ ஒருவன் க்ளீன் போல்டாகிக் கொண்டிருந்தான்.

————

அம்மாவின் கஷ்டம் வேறு மாதிரி. வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பவள் அப்படியே எதிர்மறையாய் மாறி விட்டாள்.

அன்று நான் கண்கள் கலங்க “ இது பத்தி இனிமே பேச வேண்டாமேம்மா ப்ளீஸ்” என்று சொன்னது காரணமாக இருக்கக் கூடும். அதில் தெரிந்த கெஞ்சல் காரணமாக இருக்கக் கூடும். உள்ளுக்குள் வைத்துப் புழுங்குகிறாள்.

மழை வரும் போலிருந்தால் வானத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு மாடித் துணிகளை நனையுமுன் எடுப்பது தான் சமயோசித இயல்பு. மழைக் கோப்பு கூட்டிக் கொண்டு தான் இருந்திருக்கிறது. கடைசி வரை மேலே நிமிர்ந்து பார்க்காமல் விட்டது முழுக்க முழுக்க என் தவறு தான்.

இன்னமும் கூட எனக்கு சவிதாவின் மேல் கோபம் வர மறுக்கிறது. என் குணம் அப்படி. சவிதா சவிதா என்று நான் பிதற்றிக் கொண்டிருப்பது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிந்தால் என்ன ஆவார்கள்? அதற்காக இதை யோசி இதை யோசிக்காதே என்று மனசுக்குக் கட்டளை போட நாம் என்ன மகாஞானியா?

——–

பொதுவாக அவ்வளவாய்க் குடிப்பதில்லை. எப்போதாவது நண்பர்களுடன் சேரும் போது மட்டுமே.அதுவும் நண்பன் வீட்டில் நடக்கும் அல்லது இது மாதிரியான ஓரளவு நாகரிகமான பார்களில் நடக்கும். டாஸ்மாக் வாடை எனக்குப் பிடிக்காது. அதனால் குடிப்பது என்று ஆனால் இது மாதிரி ஏதாவது இடங்களில் தான்.

அதற்கும் கூடத் தனியாய் வந்து ரசித்துக் குடிக்கும் அளவுக்கான அவசியமோ மனநிலையோ ஒரு போதும் இருந்ததில்லை. இன்றென்னவோ சட்டென்று ஒரு உந்துதல்.அந்த சம்பவம் நடந்ததிலிருந்து பெரும்பான்மை இரவுகள் எதற்கோவாய்த் தூக்கம் கெடுவதும் ஒரு காரணம். இதைக் குடித்தாலாவது தூக்கம் கிடைக்காதா என்ற நப்பாசை.

இப்படியெல்லாம் வெளியே சொல்லிக் கொண்டிருந்தாலும், தனியே சென்று ஒரு நாளாவது குடிக்க வேண்டும் என்று ஆழ் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் போட்டு வைத்திருந்த ஆசை தான் இன்று என்னை உந்தியிருக்கிறதோ என்கிற யோசனையும் ஓடியது, அதற்கு என் இப்போதைய மன நிலையும் உறுதுணையாக இருந்து தொலைத்திருக்கிறது போல.

யோசனைகளின் ஊடே ஒவ்வொரு கோப்பையாக மிக்சரும் சுண்டலுமாக என் முன் நிறைந்தது. கடைசியாக வோட்காவைக் கொண்டு வந்து வைத்தான்.மிக்ஸிங்குக்காக வைத்த குளிர்பான பாட்டிலைத் தொட்டேன். அதன் சில்லிப்பு சுரீர் என உறைத்தது.

—–

அன்றைக்கு நடந்ததை நினைக்கக் கூடாது என்று சொல்வது கூட அபத்தம் தான்.அவ்வளவு அமளியிலும் ஏன் ஏன் ஏன் என்று தான் கேட்டுக் கொண்டிருந்தது மனசு. எங்கேயாவது கண்களில் தட்டுப்பட்டு விட மாட்டாளா என்று அபத்தமாய்த் தேடித் திரிந்தது. தெளிவாய் எழுதி வைத்து விட்டுப் போனவளை எதிர்பார்த்தது மடத்தனம் என்று இப்போது உரைப்பது அப்போது உரைக்கவில்லை.

கேள்விகள் கேட்பது எத்தனை சுலபமாய் இருக்கிறது மனிதர்களுக்கு? எத்தனையெத்தனை கேள்விகள்? புரட்டி எடுத்து வேரோடு பிடுங்கி வீசியெறிந்து மேலும் துவைத்துப் புண்ணாக்கும் கேள்விகள். அடர் வனத்தில் நுழைய நுழைய சூரிய வெளிச்சத்தைக் கொஞ்சங்கொஞ்சமாய்க் கிழித்து நம் மேல் படரும் பகலிருளின் கருமை போல் கொஞ்ச நஞ்சம் மனதில் இருக்கும் பிடிப்பையும் அசைத்துப் பார்க்கும் கேள்விகளின் இருள்,

அதை விட அன்று மனதை அறுத்த விஷயம் அவ்வளவு சாப்பாடு வீண். யாரிடமாவது சொல்லி அதை ஏதேனும் சொல்லி அதை ஏதாவது செய்யச் சொல்ல்லாம் என்று துடித்தாலும் அன்றைய நிலையில் அதை விடப் பெரிய பிரச்னைகளைத் தான் நீ பார்க்க வேண்டும் என்று எல்லாரும் சொல்லாமல் சொல்லி விட்டார்கள். போனவள் போய் விட்டாள். அதற்கென்று சாப்பாட்டை வீணாக்குவானேன். எத்தனை லட்சங்கள். யாருடையதாய் இருந்தால் என்ன? ஆனால் இதை நான் அன்று சொல்லியிருந்தால் மூளை குழம்பி விட்டதென்றோ அல்பம் என்றோ சொல்லி இருப்பார்கள். அத்தனை உணவும் என்ன ஆனதென்று தெரியவில்லை. இன்று வரை மனம் ஆறவில்லை.

——–

மெல்லக் குளிர்பான பாட்டிலைத் திறந்து வோட்காவில் அளவாக ஊற்றினேன். வோட்காவினுள் சிறிது சிறிதாகக் கலந்த குளிர்பானம் சிறு நுரையை உண்டு பண்ணியது. குமிழ்ந்து மேலே வந்தபடி இருந்தது அந்த அழுத்தமில்லாத வெண்ணிற நுரை.அது அடங்கும் வரை ஓரொரு வினாடிகள் ஊற்றுவதை நிறுத்தினேன்.

“நீங்க ஸ்மோக் பண்ணுவீங்களா?”

“சேச்சே.. இல்லம்மா”

“தேங்க் காட். எனக்கு அந்த ஸ்மெல்லே பிடிக்காது”

“எனக்கும் தான்”

“அதுசரி.. நீங்க ட்ரிங்க் பண்ணுவீங்களா. பொண்ணு பாக்க வந்த அன்னிக்கு சொன்னதெல்லாம் நான் அழிச்சிடறேன். இன்னிக்கு கரெக்டா சொல்லுங்க பாப்போம்”

“அது….”

“ம்ம்… சொல்லுங்க. பூனைக்குட்டி வெளிய வரட்டும்”

“எப்பயாவதுமா. பிரண்ட்ஸோட சேர்ந்தா மட்டும்”

“அதானே பார்த்தேன். இருக்கட்டும். உங்கள கல்யாணத்துக்கப்புறம் கவனிச்சுக்கறேன்”

மெலிதாய்ச் சிரித்துக் கொண்டேன். இதைச் சொன்னவள் தான் அந்த லெட்டரை எழுதினாளா? எப்படி? மீண்டும் ஊற்றி கிளாஸை நிறைத்தேன்.

——–

அலுவலகம் கிளம்ப நேரமாகி விட்டது.  அலுவலகத்தில் எல்லாரிடமும் ஒரு செயற்கைத் தன்மை வந்து ஒட்டிக் கொண்டு விடுகிறது என்னைப் பார்த்தாலே. நன்றாகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று நாடகத் தனமாகப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள் என் தலை கண்டாலே. எதைப் பேச வேண்டும் எதைப் பேசக் கூடாதென்று அளந்து அளந்து பேசுகிறார்கள். செய்யாத தப்புக்குத் தண்டனை.

ஆனாலும் அந்த அலுவலகத்தில் தான் இரவு வரை சமாளிக்க வேண்டியிருக்கிறது. வேலை என்று பெரிதாக இல்லாத பொழுதுகளிலும் வீட்டிலிருக்கும் வெறுமையிலிருந்து ஓடி ஒளிய அலுவலகம் ஒரு கேடயம். ஏ சி ஓடிக் கொண்டிருக்கும் நாற்காலியும் கணினியும் தந்திருக்கும், வெளியே போ என்று சொல்லாத கேடயம்.

——

சம்பந்தமே இல்லாமல், சம்பந்தமில்லாத இடத்தில் சவிதாவின் நினைவுகள். நினைவுகள் என்றால் அவள் கடிதமெழுதி வைத்து விட்டுப் போனது பற்றீயல்ல. அது தான் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறதே. இப்போதைய நினைவுகள் அவளுடனான இனிமையான தருணங்கள் பற்றி. கால நேரம் அறியாமல் மொபைலில் பேசிக் களித்துக் கிடந்தது பற்றி. அப்போதெல்லாம் அவள் மனதில் அவனைப் பற்றி ஓடிக் கொண்டிருந்திருக்குமா என்ற மனசின் கேள்வியை அவசரமாக ஒரு பக்கம் ஒதுக்கி திமிறத் திமிற மூடி வைத்தேன்.

வோட்காவை இன்னும் குடிக்கவே இல்லை. அதற்கு முன்பே இப்படி. நான் லேசாகச் சிரித்ததை அந்த பையன் பார்த்து விட்டிருக்க வேண்டும். தானாகத் தனியாகச் சிரித்தால் எப்படிப் பார்ப்பார்களோ அப்படிப் பார்த்தான். சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.மீண்டும் சவிதா வந்து அமர்ந்து கொண்டாள்,

——

அம்மாவும் அப்பாவும் நான் கிளம்பிய பிறகு இன்னும் எத்தனை பேர் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ? இது மாதிரி சமயங்களில் அடுத்தவர் மீது வாரி இறைப்பதற்கு மட்டும் எல்லாருக்கும் எங்கிருந்து சுரக்கின்றனவோ டன் டன்னாய் ஆறுதல் வார்த்தைகள். குப்பையைப் போல் எந்தத் தரம்பிரிப்பும் இல்லாமல் கேட்கிறவர்கள் மனநிலை என்ன என்று உணராமல் சொத சொதவென்று கொட்டப்படும் வெற்று வார்த்தைகள்.

அவற்றையெல்லாம் சமாளிக்க தெரிந்தும் அம்மா அப்பாவை முன்னிறுத்திப் பின் மறைந்து கொண்டிருக்கிறேன். பரிதாபத்துக்குரிய மனிதன் அல்லது பொருள் அல்லது வஸ்து நான் தானென்பது எனக்கு மேலும் வசதியாகிப் போயி விட்டது. வெற்றுப் பேச்சு பேசுபவர்களை அடக்காமல் அம்மாவின் பின் ஒளிந்து கொண்டிருப்பதை நினைத்து என் மேல் எனக்கே அவமானம்.

அக்கம் பக்கத்திலும் விசாரிக்கிறார்கள் என்று தெரியும். எத்தனை நாட்களுக்கு சலிக்காமல் ஒரே விஷயம் பற்றி விசாரித்தபடியே இருப்பார்கள் என்பது புரியவே இல்லை. இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. ஓயாமல் இப்படி விசாரிப்பதன் மூலம் இவர்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்? என்ன மாதிரியான பதிலை எதிர்பார்க்கிறார்கள்? நினைக்க நினைக்க பெருமூச்சு தான் மிச்சம்.

ஆண்கள் அழக் கூடாது என்னும் கிறுக்குத் தனமான பிம்பத்தைக் கட்டமைத்து வைத்திருக்கும் ஊரில் பிறந்து தொலைத்ததால் அழுவதைக் கூட இரவின் பிடியில் பெட்ஷீட்டின் அடியில் சப்தங்களைய்க் குறைத்துக் கொண்டு செய்ய வேண்டியிருந்தது.

———–

வைப்ரேஷனில் வைத்திருந்த மொபைல் அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன். அம்மா. இந்த சப்தத்தில் பேச முடியாது. மெல்ல எழுந்து வெளியே வந்தேன்.”எங்கப்பா இருக்க?” குரலில் லேசான நடுக்கம்.இப்போதெல்லாம் வழக்கத்தை விடக் கொஞ்சமே கொஞ்சம் தாமதமானாலும் பயப்படுகிறாள். அவளைச் சொல்லிக் குற்றமில்லை. நான் நடந்து கொள்வதும் அப்படித் தானே இருக்கிறது.

“சொல்லும்மா. ஆபீஸ்ல இருந்து கிளம்பப் போறேன்.”

“உனக்கு பிடிக்குமேன்னு சப்பாத்தியும் தால் ப்ரையும் பண்ணி வெச்சிருக்கேன். வீட்டுக்கு சாப்பிட வந்துடுவல்ல?” என்று கேட்டதில் லேசான தவிப்பு தெரிந்தது.

சில நொடிகள் மௌனமாயிருந்தேன். இந்த சில நொடி மௌனம் நிச்சயம் அவள் துடிப்பை எகிறச் செய்திருக்கும் என்று தெரிந்தே மௌனமாயிருந்தேன்.

பின் பெருமூச்சுடன் சொன்னேன். “ வந்துடறேன்மா. “

“சரிப்பா வச்சிடறேன்” என்றவள் வைக்கவில்லை. சில நொடி கடந்ததும் “ சீக்கிரம் வந்துடுப்பா” என்றாள் தீனமான குரலில்.

அதைக் கேட்காதது போல் இணைப்பைத் துண்டித்தேன்.

———-

உள்ளே நுழைந்து மீண்டும் இருக்கையை அடைந்து அமர்ந்தேன். வோட்கா கிளாஸை உற்றுப் பார்த்தேன்.சலனமற்று அடியாழக் கடல் போல் அமைதியாயிருந்தது. சப்பாத்தியும் டால் ப்ரையும். மீண்டும் புன்னகைத்துக் கொண்டேன்.

நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்து அந்தப் பையனை அழைத்தேன். பில் கொண்டு வா” என்றேன்.

“சுவைக்கப்படாத வோட்காவையும் என் முகத்தையும் சில நொடிகள் மாறி மாறிப் பார்த்தவன் சட்டென்று நகர்ந்தான்.சில நிமிஷங்கள் கழித்து பில்லை எடுத்து வந்து தந்தான். பில் தொகையுடன் கணிசமாய் ஒரு டிப்ஸ் தொகையும் வைத்தவனை அந்தப் பையன் மீண்டும் புதிராகப் பார்த்தான். உயர நாற்காலியில் இருந்து இறங்கி அவனை நோக்கிப் புன்னகைத்தேன். அவன் தோளைத் தட்டி விட்டு நகர்ந்தேன்.

வெளியில் வந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். சாலை அடைந்து வண்டி வேகம் எடுத்ததும் காற்றில் குளிர் கலந்திருப்பது தெரிந்தது. மழைக்கு முன்னான மண் வாசனை விரவியிருந்தது. வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு ஹெல்மெட் கண்ணாடியை விலக்கி விட்டு மேலே நிமிர்ந்து பார்த்தேன்.

எனக்காக காத்திருந்த மழைத் துளியொன்று எங்கிருந்தோ வந்து பொட்டென்று என் நெற்றிப் பொட்டில் விழுந்தது. சிலிர்த்தது. மீண்டும் புன்னகைத்தபடி பைக்கை நகர்த்தத் துவங்கினேன்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மீள்

  1. அருமையான சிறுகதை. இறுதிவரை சம்பந்தப்பட்ட நிகழ்வை நாமாக யூகிக்கவைத்த பாங்கு சிறப்பு. இயல்பான விளைவாக நிகழக்கூடிய மது அருந்துதலையும் போலி அறம்சார்ந்த காரணங்களுக்காக  மறைக்காதது சிறப்பு. வாழ்த்துக்கள் ஹரீஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *