இலக்கியம்கவிதைகள்

அர்த்தம் கண்டேன் உன்னாலே!

-துஷ்யந்தி, இலங்கை

காந்தத்தின் ஈர்ப்பினிலே
கறள் பிடித்த தகரமொன்று
கணப்பொழுதும் தாமதிக்காது
கண்டவுடன் கவர்வதைப் போல்
கைப்பிடியில் உணர்வொன்று
உன் கைப்பட்டதும் தோன்றுதடா…

வயற்காட்டில் அந்நாளில்
சிந்திய வியர்வையை இன்றும்
நினைவூட்டிச் செல்லுதடா…
இன்னும் உழைத்துவாழ
எண்ணம் என்னில் தோன்றுதடா…

முதுமையின் தனிமையில்
உன் முகம் பார்த்து வருகையில்
பல கோடி இன்பங்கள் என்
மனதெங்கும் ஓடுதடா…
பிறப்பின் அர்த்தமும் உன்
செல்லப் பார்வையில்
தெரியுதடா…

கண் மூடும் தருணத்தில்
உன் கைப்பிடி மண்பட
என்னுயிர் உன்னோடு
உண்டென்று தோன்றுதடா…
உன் கைப்பட்ட மண்
என்மீது படுகையில்
என்னுயிர் நிச்சயம்
சொர்க்கத்தைக் காணுமடா…!

வெறுமையாய்க் கிடந்த
வார்த்தைகள் எல்லாம்
கவிஞனின் பேனைபட
அழகுக் கவியாவதுபோல்
நீ தொட்ட இன்பம்
என் வாழ்க்கைக்கு அர்த்தம்
சொல்லிப் போகுதடா
அளவில்லா இன்பத்தை
என்னிலே பாய்ச்சுதடா…!!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க