-மேகலா இராமமூர்த்தி

முன்னொருகாலத்தில் புகழ்பெற்றிருந்த அசுரர்களில் ஒருவன் வாணாசுரன். இவன் மாபலிச் சக்கரவர்த்தியின் மகனாவான். இவனுடைய மகளாகிய உஷை, காமனின் மகனான அநிருத்தன்மீது காதல் கொண்டாள். (அநிருத்தன் கண்ணனின் மகனான பிரத்யும்னனின் மகன் என்கின்றன வைணவ நூல்கள்; ஆனால் சிலம்பின் உரையாசிரியர்கள் அவனைக் காமனின் மகன் என்றே குறித்துள்ளனர்.) தந்தைக்குத் தெரியாமல் அவனைத் தன் அரண்மனைக்குத் தோழி சித்ரலேகை உதவியால் கொண்டுவரச்செய்த உஷை, அவனைக் கந்தர்வமணம் புரிந்து வாழ்ந்து வந்தாள்.

இதையறிந்த வாணாசுரன் கடுங்கோபம்கொண்டு அநிருத்தனைச் சிறைப்படுத்த, அதையறிந்து, மாயோனாகிய கண்ணன் வாணனின் ’சோ’ நகரத்திற்குச் சென்று அங்கே அவனால் சிறைவைக்கப்பட்டிருந்த அநிருத்தனை மீட்க, மண்ணாலும் உலோகங்களாலுமான பலகுடங்களைக் கையிலேந்தி ஆடியதாய்க் கருதப்படுவது ‘குடக்கூத்து’. இது விநோதக் கூத்துவகைகளில் ஒன்று.

  madavi1குடக்கூத்தாடுவோர் ‘தலையிலே அடுக்குக் குடமிருக்க, இரு தோள்களிலும் இரு குடங்களிலிருக்க, இருகைகளிலும் குடங்களையேந்தி ஆகாசத்திலேயெறிந்து ஆடுவர்’ என்கின்றனர் உரையாசிரியர்கள். ஆடுவதற்கு அதிகப் பயிற்சியும் முயற்சியும் தேவைப்படும் இக்கூத்தை மலர்விழியாள் மாதவி அநாயாசமாக ஆடிக்காட்டினாள் என்றே கூறலாம்.

வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும். இவைக் குடக்கூத்தை விளக்கும் காப்பிய வரிகள்.

இக்குடக்கூத்தைப் பற்றிச் சிலப்பதிகாரமேயன்றித் திவ்யப்பிரபந்தமும் பேசுகின்றது. மூன்றாம் திருமொழிப் பாசுரமொன்றில் ’சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ ஆண்டாள் எடுத்தாண்டுள்ள,குடத்தை யெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎங் கோவே’ எனுந்தொடர் கண்ணன் ஆடிய குடக்கூத்தையே குறித்து நிற்கின்றது.

இவ்வாறு, அநிருத்தனை மீட்க முதலில் கண்ணன் ’சோ’ நகர வீதிகளில் குடக்கூத்தாடினான். அதுபோல், தன் மகனைச் சிறைமீட்க விரும்பிக் கண்ணனோடு சென்றிருந்த காமனும் (தன் பங்குக்குப்) பேடிக் கோலத்தில் (இதன் இன்றைய வழக்குமொழி ’திருநங்கை’) ஓர் ஆடலை நிகழ்த்தினான். ’பேடிக்கூத்து’ எனும் பெயர்கொண்ட அந்தக்கூத்து, நிகழ்ச்சியில் அடுத்ததாக இடம்பெற்றது.

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி யாடலும்….. என்பது சிலப்பதிகாரம் பேடிக்கூத்திற்குத் தரும் விளக்கம்.

காமன் ஆடிய இப்பேடிக்கூத்தை மணிமேகலைக் காப்பியமும்,

வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
நீணில மளந்தோன் மகன்முன் னாடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்…(மணி-3:123-125) என்று குறிப்பிடுவதை இங்கே ஒப்புநோக்கலாம். (இதில் காமன், திருமாலின் மகனாய்க் குறிக்கப்படுகிறான் என்பதை அறிக.)

இதுவரை ஆண் கடவுளர், தேவர் போன்றோரின் ஆடல்களையே நிரலாக ஆடிவந்த மாதவி, இப்போது பெண்தெய்வங்கள் ஆடியதாய்ப் புராணங்கள் தெரிவிக்கும் கூத்துக்களை ஆடத் தொடங்கினாள்.

அவற்றில் முதலாவதாய் அவள் ஆடியது ’மரக்கால் கூத்தாகும்’; இக்கூத்தைக் குறிக்கும் சிலம்பின் வரிகளாவன…

காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்

வெற்றித் தெய்வமான கொற்றவை, அசுரர்கள் நல்லோர்க்குச் செய்கின்ற கொடுந்தொழில் கண்டு ஆற்றாளாகி அவர்களோடு போர்புரியும் வேளையில், அவ்வசுரர்கள் இறைவியொடு நேருக்குநேர் நின்று போர்புரியும் திறனற்றோராய் அவளை வஞ்சத்தால் வெல்லக்கருதி பாம்பு, தேள் முதலிய கொடிய உயிரினங்களின் உருவில் அவளை அழிக்க முயன்றனர். அதை அறிந்த அம்மை, அவ்வஞ்சத்தைத் தன் சாதுரியத்தால் வெல்லக்கருதி மரத்தாலான கால்களின்மேல் ஏறிநின்று அக்கொடிய உயிரினங்கள் வடிவில் இருந்த அசுரர்களை உழக்கிக் கொன்றாள். பின்பு வெற்றிப் பெருமிதத்தோடு அவள் ஆடிய ஆடலே ‘மரக்கால் கூத்தாகும்’. இம்மரக்கால் கூத்தை சிலம்பின் மற்றொரு பகுதியான ’வேட்டுவ வரி’யில் ஆசிரியர் இளங்கோவே மீண்டும் குறிப்பிடுவது இங்கே எண்ணத்தக்கது.

ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கால்மேல் வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கால்மேல் வாளமலை யாடுமாயின்
காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும். (வேட்டுவ வரி)

ஆடுவதற்கு மிகவும் சவாலான இம்மரக்கால் கூத்தையும் சீரிய நாட்டியப் பயிற்சியைச் சிறுவயது முதலே பெற்றிருந்த மாதவி (மரத்தினாலான கால்களைக் கட்டிக்கொண்டு) சிறிதும் தடுமாறாமல் ஆடிக்காட்ட, கண்டோர் அனைவரும் மூக்கின்உச்சி சுட்டுவிரல் சேர்த்து அதிசயித்தனர்.

வீரச்சுவை மிக்கிருந்த மரக்கால் கூத்தைத் தொடர்ந்து, காதற்சுவை (சிருங்கார ரசம்) சொட்டும் ஓர் ஆடலை அரங்கு கண்டது; அதன் பெயர் ’பாவைக் கூத்து’.

போர்க்கோலம் கொண்ட அவுணர்களின் சி(ம)னத்தை மாற்றி, அவர்கள்pencilmadavi மேற்கொள்ளவிருந்த போர்த்தொழிலை நிறுத்தவிழைந்த செய்யோளாகிய திருமகள், ’கொல்லிப்பாவை’போல் (அழகினால் மனத்தைப் பேதலிக்கச் செய்யும் ஒரு பாவை வடிவம்) தோற்றங்காட்டி அழகிய ஆடலொன்றையும் நிகழ்த்தி அவர்களின் சித்தத்தைத் தடுமாறச்செய்து யுத்தத்தை நிறுத்தினாள் என்கிற புராணச் செய்தியை அடியொற்றி அமைக்கப்பட்ட இப்பாவைக் கூத்தைப் பாவை மாதவி ஆட, பார்த்தோர் மனங்களும் பித்தேறி ஆடின.

செருவெங் கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையும் என்று பாவைக்கூத்தின் இயல்பைப் பாங்காய்ச் செப்புகின்றார் ஆசிரியர்.

அடுத்ததாய் மேடையில் இடம்பிடித்தது, உழவர்குலப் பெண்போல் உருமாறிய அயிராணி (இந்திரனின் மனைவி இந்திராணி) எனும் தெய்வமடந்தை வாணாசுரனின் ’சோ’ நகரத்தின் வடக்கு வாயிலருகே உள்ள வயலிடத்தே ஆடியதாய்க் கூறப்படும் ‘கடையம்’ எனும் கூத்தாகும்.

வயலுழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்

’கடைசியர்’ (உழத்தியர்) எனும் பெயரான் அன்று அழைக்கப்பட்ட உழவர்குல மகளிரின் நாட்டியமே ‘கடையம்’ என்பது. மாதவி தன் ஆடல்களின் வரிசையில் கடைசியாக ஆடியது இக்கூத்தையே.

இவ்வாறு தான் ஆடிய பதினோராடலுள் இறைவனாகிய சிவபெருமான் ஆடிய இரண்டினை முன்வைத்தும், மாயோனாகிய திருமால் ஆடிய இரண்டினையும், சேயோன் முருகன் ஆடிய இரண்டினையும் முறையே அவற்றின்பின் வைத்தும், வெற்றி பற்றி நிகழ்ந்த இக்கூத்துக்களின் தொடர்ச்சியாய்க் காமத்தாற் சிறைப்பட்ட அநிருத்தனை மீட்டல் காரணமாக மாயோனாடிய விநோதக் கூத்தினையும், அதன்பின் காமன் ஆண்மை திரிந்து பேடியுருக்கொண்டாடிய கூத்தினையும், அவற்றின் பின்னர், பெண் தெய்வங்களுள்ளே முறையே கொற்றவையும் திருமகளும் அயிராணியும் ஆடியவற்றையும் வைத்து கூத்துக்களை வகையாய் வரிசைப்படுத்தியிருந்த மாதவி, இக்கூத்துக்களையெல்லாம் அவற்றிற்குரிய இலக்கணம் சிறிதும் வழுவாது ஆடியமுறையின் சிறப்பு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

அவளுடைய ஆடற்கலையின் நயத்தில் கட்டுண்டு, வேறோர் மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள், அவள் ஆட்டத்தை நிறுத்திய பின்பே நனவுலகிற்கு மீண்டனர். ”புகார் நகரம் பெற்றெடுத்த புதையல் இவள்!” என்று ஒருவருக்கொருவர் வாயூறிப் பேசிக்கொண்டனர். கூட்டத்திலிருந்து ஆட்டத்தை இரசித்துக்கொண்டிருந்த விஞ்சையனும் அப்போதுதான் தன்னுணர்வு பெற்றவனாகத் தன் காதலியைப் பார்த்து, ”இப்போதாவது மாதவி ஆடலின் மகத்துவத்தை உணர்ந்தாயா?” என்று கேட்க, அவளோ “ஆகா பிரமாதம்! இப்படியோர் நாட்டியத்தைத் தேவலோகத்தில்கூட நான் கண்டதில்லையே!” என்று வியக்க, மகிழ்ச்சியோடு அவ்விருவரும் அரங்கிலிருந்து அகன்று சென்றனர்.

இப்படி, மாதவி ஆடியதாய் இளங்கோவடிகள் நமக்கு அறிமுகப்படுத்தும் பதினோருவகை ஆடல்கள், நம் தமிழகத்தில் அன்றே நாட்டியக்கலை  வியத்தகு வளர்ச்சியடைந்திருந்ததைக் காட்டுகின்றன. அத்தோடு, அன்றைய ஆடல்மகளிர் அரங்கில் ஆடுதற்குப் பின்பற்றிய ஆடல்களின் நிரலொழுங்கையும் நாம் அறிந்துகொள்ளப் பெருந்துணை செய்கின்றன.

காப்பியத்தின் கதைப்போக்கின்படி அன்று மாதவி ஆடிய ஆடலே அவள் வாழ்வின் கடைசி ஆடலாகவும் அமைந்துவிட்டது. அதை எண்ணும்போது நம் மனம் வேதனையில் கனக்கவே செய்கின்றது. என் செய்வது? ’All good things must (come to an) end’ என்பதே வாழ்க்கை நமக்குணர்த்தும் பாடமல்லவா?  

(முற்றும்)

1 thought on “ஆடல் காணீரோ – பகுதி 3

  1. ப்ரத்யும்நன் காமதேவனின் அம்சம் பொருந்தியவன், ஆகவே அநிருத்தனைக் காமதேவன் மகன் எனச் சொல்வதில் தவறில்லை

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க