அண்ணாகண்ணன்

Nithila Annakannan

நித்திலமே நித்திலம்
நின்றொளிரும் ரத்தினம்
புத்தம்புது புத்தகம்
புத்துணர்வுப் பெட்டகம்
கொத்துமலர் கோகிலம்
குதித்துவரும் சாகசம்
தத்திவரும் பூரதம்
சிரித்துவரும் சித்திரம்

ஆடிவரும் அற்புதம்
ஓடிவரும் உற்சவம்
தேடிவரும் காவியம்
தீட்டாத ஓவியம்
பாடிவரும் பாசுரம்
நாடிவரும் நாட்டியம்
கூடிவரும் மங்கலம்
கோடியின்பம் நித்திலம்.

ஆருயிரின் ஆரமுதம்
ஆசைதரும் பேரமுதம்
ஓருலக வேரின்பம் – ஈர்
ஏழுலகப் பேரின்பம்
ஊருலகம் பாராட்டும்
உச்சி தனில் சீராட்டும்
ஆரமடி முத்தாரம் – நீ
அகிலத்தின் ஆபரணம்.

2 thoughts on “நித்திலமே நித்திலம்

 1. சுட்டும் விழியிரண்டும்
  சுடர்மிகுந்திருக்கக் கண்டேன்!
  சித்திரம் அசைந்துவந்து
  சிரித்திடும் அழகைக் கண்டேன்!
  ஒவ்வொரு அசைவிலும்
  ஓராயிரம் அர்த்தங்களோ?
  ஒளிர்திங்கள் முகமாக
  உருவகித்து வந்தவளோ?
  உயிரனைய மகளெனவே
  உலகில்வந்த உறவிவளோ?
  உன்முகத்தைப் பார்த்திருந்தால்
  வேறேதும் தோன்றாதோ?
  முத்துச்சிரிப்பினைக் கொட்டிடும்
  முக மதுவே உன்னிடமோ?
  அன்பினில் ஆளவந்த
  அருஞ்செல்வப் புதையலோ?
  இன்பமே இளங்குயிலே
  இசைத்தமிழ் உன் குரலோ?
  இன்றுபோல் என்றும் நீயே
  இசைபட வாழ்க! வாழ்க!!
  அன்புடன்
  காவிரிமைந்தன்

 2. மலர்ந்த விழிகளிலே 
  ஒளிருதடி மத்தாப்பு…!

  வட்டமுக அதரங்களில் 
  புன்னகையே முத்தாய்ப்பு ..1

  கால் முளைத்த அற்புதமே 
  இல்லத்து  இளம்பிறையே 

  தேடாது கையமர்ந்த 
  வலம்புரியே  எங்கும் 

  காணக் கிடைக்காத 
  கற்பகமே  அன்பு 

  மன மிசைக்கும் 
  தூய மந்திரமே .

  காஞ்சிப் பட்டுடுத்திய 
  சுந்தரியே கேட்போரை 

  மயங்க வைக்கும் 
  யாழ்மொழியாளே    

  உன்னைப் பெற்றெடுத்த 
  உள்ளங்களின் மனராணியே  

  அள்ளும் ஏகாந்த சுவாசத்தில் 
  மரிக்கொழுந்தே 

  பைந்தமிழ்ச் சித்திரச் 
  சிறுமலரே 

  ஏகாந்த ரகசியத்தின் 
  ராஜாங்கமே 

  பாக்கியமே 
  புவியாளப் பிறந்த 
  பொன்மகளே 

  தாயவளின் நெஞ்சத்து 
  முத்தாரமே 

  தந்தையெனக்கு நீயே 
  வைரமணிப்  புதையலடி..!

  உனை  ஏந்தியே எங்கள் 
  காலங்கள் ஊஞ்சலாடுதடி 

  நீ வாழும் இல்லமிதே 
  எந்நாளும் கோயிலடி…!

  ஜெயஸ்ரீ ஷங்கர் 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க