கவிழ்ந்திருக்கும்….

 

-உமாமோகன்

 

பார்த்த கணத்திலிருந்து
என் அடிவயிற்றைப் பிசைகிறது
அந்தப்படம்

அழுது வடியும்
விளக்குக் கம்பம் ஒன்றின்கீழ்
தலைகவிழ்ந்து
அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி

பசியில் குறுகியோ
சீண்டலில் சாம்பியோ
தனிமையில் வெம்பியோ
அங்கே அமர்ந்திருப்பதாக
விளக்கம் தராதீர்கள்

தயவு செய்து
உங்கள் படத்தை
சற்றே திருத்துங்கள்
அந்த விளக்குக் கம்பத்திற்கு
சற்றுத் தள்ளி
அரையிருளில்
பாத்திரம் தேய்க்கும் ஒரு அம்மா
இல்லை
நீர் சுமக்கும் அக்கா
வெறுமையாய்ப் பார்க்கும் அப்பா
பண்டம் கவர்ந்த தம்பி
அட
எதுவும் வேண்டாம்
ஒரு சோகைப் பூனையோ,நாயோ
கூடப்போதும்

கோபத்திலோ பிடிவாதத்திலோ
கவிழ்ந்த அவள் தலை
எல்லாம் மறந்து
புன்னகையுடன் நிமிரும் காட்சியை
நானே கற்பனை செய்து உறங்கிவிடுவேன்

3 thoughts on “கவிழ்ந்திருக்கும்….

 1. மனம் பிசையும் இன்றைய வாழ்க்கைச்சூழலின் பிரதிபலிப்பு… தனித்தொரு சிறுமியின் தலை கவிழ்ந்த நிலை அது படமேயானாலும் பார்த்துப் பரிதவித்துப் பிரவாகிக்கும் தாய்மையின் வரிகள். நிறையவே சிந்திக்கவைக்கிறது உமா. படத்தைத் திருத்தட்டும் கரம்… பரிதாப வாழ்க்கையைத் திருத்த முன்வரட்டும் மனிதம். 

 2. கவிதை என்பது மனதைத் தொடுவது..

  காட்சிகளும் அங்கே அமைத்து .. மனத்தை கனமாய் ஆக்கியிருக்கிறீர்கள்.. முடித்துவைக்கும் இடத்திலே உங்கள் வரிகள் அற்புதம்!!

  வல்லமை தளத்திற்கு வருகை தந்திருக்கும் கவிதாயினியை வரவேற்பதில் மகிழ்கிறேன்!
  காவிரிமைந்தன்

 3. உள்ளத்திற்கு உரம் கொடுப்பவையெல்லாம் உடன் பிறப்புகள் தான்
  உற்சாகபாணம்  பணமல்ல…..கவிழும் முகத்தின் மிளிரும் முறுவலே

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க