-மேகலா இராமமூர்த்தி

கவிஞர்களின் சிந்தனைப் பசிக்குச் சிறந்த தீனிபோடும் புகைப்படத்தைத் தந்த திருமிகு. ராமலக்ஷ்மிக்கும், அதனைத் தேர்வு செய்த திருமிகு. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை ஆசிரியர் குழுவின் பாராட்டுக்கள்.

11134356_815628041824730_874016360_n

தந்தை தோளில் ’ஜம்’மென்று அமர்ந்தபடி வாயில் வைத்த விரலோடும், விழிகளில் விரியும் வியப்போடும் இக்குழவி அங்கே நோக்குவதுதான் எதனை? என்ற ஆர்வம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது இப்புகைப்படத்தைப் பார்க்கும்போது!

ஆர்வமாய் தந்தை தோளில்
  அமர்ந்துநீ உலகந் தன்னைப்
பார்வையால் அளக்கின் றாயே
  பாலகா உனக்கார் ஈடு? என்று  அக்குழந்தையைக் கொண்டாடத் தோன்றுகின்றது.

இன்று, தன் இளம் மகனை அந்த அன்புத் தந்தை தன்தோளிலும், மார்பிலும் சுமக்கின்றார் ஆசையாக! இதே பாரம் இடம்மாறும் காலமும் வரும். அப்போது இப்பிள்ளை தன்னன்புத் தந்தையைப் (பாரமாய் நினையாது) பாசமாய்ச் சுமக்கவேண்டுமே எனுமோர் ஏக்கமும் இக்காட்சியின் நீட்சியாய் நம் உள்ளத்தில் எட்டிப்பார்க்கவே செய்கின்றது.

கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரம் வீழ்ந்துவிடாதபடி அதன் விழுதுகள் அதனைத் தாங்கிப்பிடிப்பதுபோல் வயதுசென்ற தந்தைக்குத் தள்ளாமை வந்து பிணியெனும் கறையான்கள் அவருடலை அரிக்கும்போது அவருடைய புதல்வன் அவரைத் தாங்கிப் பிடிக்கவேண்டும். அதுவே மகன் தந்தைக்கு ஆற்றும் தலையாயக் கடன்! இவ்வாழ்வியல் உண்மையை நாலடியார்ப் பாடலொன்று நன்றாய் விளக்குகின்றது. அப்பாடல் நம் சிந்தனைக்கு…

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய்
மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். (நாலடி: 197)

இனி, போட்டிக்கு வந்துள்ள கவிதைகள் குறித்துப் பார்ப்போம்.

இவ்வாரமும், ’நீ முந்தி நான் முந்தி’ என்று போட்டி போட்டுக்கொண்டு கவிஞர் பெருமக்கள்  ’கவிதைப் பந்தி’ நடத்தியிருக்கின்றீர்கள். பல்வேறு கருத்துக் குவியல்களையும், சிந்தனைச் சிதறல்களையும் அள்ளி வழங்கி ’எந்தக் கவிதையைத் தேர்ந்தெடுப்பது?’ என்று எங்களைத் திகைக்கச் செய்திருக்கின்றீர்கள். உங்கள் சீரியமுயற்சிக்கு எம் பாராட்டுக்கள்!

என் சிந்தைதொட்ட கவிதை வரிகளின் பட்டியலை முதலில் தந்துவிடுகின்றேன்…

பருவமாற்றங்களையும் அதனோடு இணைந்தே வரும் மனமாற்றங்களையும் தந்தைக்குக் தனயன் செப்புவதாயுள்ள திரு. பா. இராஜசேகரின்  ரசமான வரிகள்…

தந்தை
உன்
விரல்பிடித்து
நடைபயின்று!
நீ
சுமக்க
தோழ்அமர்ந்து
வலம்வந்தேன்
பிஞ்சுக்காலம்!
நீ
அறிவுரைத்தாய்
முகம்திருப்பி
கைவிடுத்து
கண்மறைந்தேன்
விடலைக்காலம்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

குறள்வரிகளின் சாயலில் கவிவடித்துச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கும் திரு. சி. ஜெயபாரதனின்  எழில் வரிகள்…  

தந்தை மகற்காற்றும் உதவி
முந்தி விழாக் காணக்
கழுத்தில் 
குந்தி இருக்கச் செயல் !
மகன் தந்தைக் களிக்கும்
தகவல்
இவன் தந்தை
’ஏணிப்படி’ என்று உலகுக்கு
எடுத்துச் சொலல் !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மகனுக்குத் தந்தை சொல்லும் வாழ்வியல் உண்மைகளை விளக்கும் திரு. ரா. பார்த்தசாரதியின்  யதார்த்த வரிகள்…

தோளில்  தாங்கி  உனக்கு  உலகை காட்டுகின்றேன் 
தாயோ  அன்பும்,  பாசமும் உன்னிடம் காட்டுகிறாள் 
அறியாப்   பருவத்தில் உனக்கு நான்  வழிகாட்டி 
முதுமைப் பருவத்தில் நீதான் என் வழிகாட்டி!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தன்னலமிலாத் தந்தையின் உள்ளத்தைக் கண்ணாடிபோல் துல்லியமாய்க் காட்டியிருக்கும் திருமிகு. சியாமளா ராஜசேகரின்  சீர்மிகு வரிகள்…

பட்டுவிரல்  நோகுமென்று பாலகனைத் தோள்சுமப்பார் 
சுட்டியவன் சேட்டைகளில் சொக்கிடுவார் – மட்டிலா 
அன்பால் கரைத்திடுவார் ஆக்கமுடன் கற்பிப்பார் 
தன்னல மில்லாத்தந் தை .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தந்தை மகன் உறவில் காலம்போடும் அதிசயக் கோலங்களை அழகாய்க் காட்டியிருக்கும் திரு. எஸ். பழனிச்சாமியின்  பாங்கான வரிகள்…

தந்தைக்கும் மைந்தனுக்கும் உள்ள இணைப்புஅது
தன்னலமில் லாதபாசத் தின்பிணைப்பு – மந்திரம்தான்
தந்தைசொல் ஐந்தாம் வயதில் வயதுவந்த
பின்னால் அவரேதான் வில்லன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அரையில்(இடுப்பில்) வைக்கும் அன்னையையும், உயரவைக்கும் தந்தையையும் எண்ணி உளம்பூரிக்கும் மகனைக் காட்டும் திரு. ஜெயராம சர்மாவின்  ரம்மியமான வரிகள்…

அம்மாவோ அரையில் வைப்பாள்
அப்பாவோ உயர வைப்பார்
என்னிளம் பருவம் தன்னை
இங்கு நான் காணுகின்றேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வாழ்க்கை நடைமுறைகளை வண்ணங்களினூடே வனப்பாய்ச் சொல்லியிருக்கும் நல்லை திரு. சரவணாவின்  சிந்தனை வரிகள்…

நமக்கான அவசரங்களைவிட
வேகமாயிருக்கிறது… எதிர்காலம்…
எப்போது வேண்டுமானாலும்
உறிஞ்சிக்கொள்ளப்படலாம்….நிறங்கள்..!!
…. கடைசியாய் சாறு தெளித்துக்
களித்திருந்த தலைமுறை
என்னுடையதாகவும்…
பூசப்படா பச்சை
ரசித்திருந்த தலைமுறை
உன்னுடையதாகவும் இருக்கலாம்…!!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தந்தையின் கலப்படமற்ற அன்பை விளக்கிப் ’பிதாவே பிள்ளையின் முன்னறி தெய்வம்’ எனும் அவ்வை வாக்கை வழிமொழிந்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனின்  செம்மாந்த வரிகள்…

தந்தை எதையும் தாங்கிடுவான்
தனது பிள்ளை மேன்மைபெற,
சிந்தையில் இதனைக் கொண்டேதான்
சிரிக்கும் பிள்ளைத் தோளமர்த்தி
விந்தை யான உலகினிலே
வியக்கக் காட்சிகள் காட்டிடினும்,
சிந்தையில் பிள்ளை உயர்வுதானே,
சிறந்த கடவுளும் தந்தைதானே…!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

’உன்தோளில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் அரும்பிடம் உன் கடந்தகாலக் குறும்புகளைச் சொல்லிமகிழ்கிறாயோ?’ என்று தந்தையிடம் வினாத்தொடுக்கும் திரு. அமீரின் அசத்தல் வரிகள்…

ஊனும் உயிரும்
உனக்கு உன்மகனோ?
உள்ளும் புறமும்
அவனுக்கு நீதானோ?
ஒன்றானது உங்கள்
உணர்வோ?
பிள்ளையிடம் சொல்வதெல்லாம்
உந்தன் பழைய நினைவோ?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மகன்பெற்ற இன்பமே தான்பெற்ற இன்பமாய்க் குதூகலிக்கும் தந்தையின் உணர்வுகளைச் சொல்லும் திருமிகு. தமிழ்முகிலின்  இன்பத்தமிழ் வரிகள்…

..உன்னை சுமந்து சுற்றுவதிலேயே
இன்பம்
காண்கிறேன் நானுமே !
உன் பிறப்பாலேயே நானும்
தந்தையென
பிறப்பெடுத்தேன் !
புது வாழ்வு காண்பித்த பிள்ளையே
நீயே
எந்நாளும் எந்தன் வாழ்க்கையே !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மகன் தந்தைக் காற்றும் உதவியை வள்ளுவப் பேராசானின் வழிநின்று விளக்கியிருக்கும் திருமிகு. நாகினியின்  நயமிகு வரிகள்…

இம் மகனை(ளை)ப் பெற 
இவர் என்ன தவம் செய்தாரோ’ என 
ஊர் உலகம் மெச்சும் வண்ணம்
உலக அளவை மிஞ்சும் 
உன்னத பண்பில் உயர் 
நேர்மையாளன் இவனெ(ளெ)னும்  
பாராட்டால் தலைசிறக்கும்  
நன்நடத்தை உலகையே உமக்கு 
கைம்மாறாய் வழங்கிடுவேன்
அன்புமிகு மகனா(ளா)ய் என்றென்றும்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

’ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனும் புறநானூற்றுப் புலவரின் பொன்வரிகளை அடியொற்றித் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன் வடித்துத் தந்திருக்கும் வைர வரிகள்…

தாய்  உன்னை   ஈன்றாலும்
தந்தை  யான    என்கடமை
தரமான  கல்வி   யையும்
உரமான  மன    தையும்
திடமான உடலையும் தந்து
….
என் வாய் உன்  தூய
நடத்தை  யையும் கேட்டு
இறும்பூ தெய்தவும் விழையும்…

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நான் மேற்குறிப்பிட்டவை அனைத்துமே சிறந்த கவிதை வரிகளாய் ஒளிர்கின்றன; மிளிர்கின்றன! எனினும், இக்கவிதைகள் பலவற்றில் ஒன்றின் சாயலை மற்றொன்றில் தெளிவாகவே காணமுடிகின்றது. இக்குறையை இனிவரும் போட்டிகளில் கவிஞர்கள் கவனத்துடன் களைவார்களாக!

இவற்றினின்று மாறுபட்டுத் தன்தோளில் அமர்ந்திருக்கும் மகன் எவ்வாறு வாழவேண்டும் என்பதைப் புலவர்கள் அரசர்கட்குச் சொல்லும் ’செவியறிவுறூஉ’ பாணியில் தந்திருக்கும் ஓர் இலட்சியத் தந்தையை இங்கே கண்டேன். ’வரம் வேண்டும்…’ எனும் தலைப்பில் அவர் வடித்திருக்கும் கவிதையை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகவும், கருத்துச்செறிவுள்ள அக்கவிதையைப் படைத்தளித்திருக்கும் திரு. கொ. வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகவும் தேர்ந்தெடுக்கிறேன்.

…என் அனுபவ உயரத்தில்
அவன் அகிலத்தைக் கண்டு
தனக்கொரு வழியினை
தானே அமைத்து 
தலை நிமிர்ந்து
நடந்திட வேண்டும்!

ஊர் கோவில் திருவிழாவை
உயரத்தில் இருந்துப் பார்த்தாலும்
தானுயரும் நிலை வரும்பொழுது
வானோக்கி நடக்காத
வரமவனுக்கு வாய்க்க வேண்டும்!

தள்ளாடி நான் நடக்கும்
பொல்லாத காலம்
புலருகின்றபொழுது
எல்லோரும் போற்றும் வண்ணம்
என் இரு கரம் பற்றி
மெல்ல அழைத்துச் செல்லும்
நல்ல மனம் நாளு மவன்
நாதனருளால் பெற
வேண்டும்!

இக்கவிதையேயன்றி, (படத்திலிருக்கும்) குழந்தையையும், தந்தையையும் மவுனமாக்கி அருகிருக்கும் மரத்தைப் பேசவிட்டிருக்கும் புதுமைக் கவிஞர் ஒருவரையும் சந்தித்தேன். இப் புதியமுயற்சி என்னை வெகுவாய்க் கவர்ந்தது. சாதாரண மனிதனைப்போல் அல்லாமல் ஓர் மாமனிதனைப்போல் அல்லவா அந்தமரம் தத்துவங்களை உதிர்த்துள்ளது!!
திரு. சுரேஜமியின்மரம் பேசியது’ எனும் அக்கவிதையை இவ்வாரத்தின் ’பாராட்டத்தக்க கவிதை’யாய்ச் சுட்ட விரும்புகிறேன்.

அம்மரம் பேசியதை நாமும் செவிமடுப்போம்…

…எவர் தந்த விதையோ
இன்று நான் மரமானேன்;
எத்தனை இன்னல்கள்
ஏற்ற மரமாக?
…வாழும் வரை
உயிர்க்காக;
வீழும்போது
உனக்காக!!
என்னிடம் கற்றுக்கொள்!
தன்னிடமிருந்து கொடுத்தால்
தர்மம்!
தான் மடிந்து கொடுத்தால்
தானம்!
சொல்வாயா தாங்கி
நிற்கும் குழந்தைக்கு?

இத்தகைய புதுமைச் சிந்தனைகள் தொடர்க!

பாராட்டுப் பெற்ற கவிஞர்களுக்கும், சிறப்பான பங்களிப்பை நல்கியிருக்கும் கவிஞர்களுக்கும் என் நெஞ்சுநிறை வாழ்த்துக்கள்! தொடர்ந்து ஊக்கத்தோடு பங்குபெறுக! சிறந்த ஆக்கங்களைத் தருக!

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி 7-இன் முடிவுகள்

 1. இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக தேர்ந்தெடுத்தமைக்கு மகிழ்வினையும நன்றி யினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 2. என்றோ நான் பதிந்த காட்சி, இன்று நண்பர்களின் கண்ணுக்கும் சிந்தனைக்கும் விருந்தாகி விட்டிருப்பதில் மகிழ்ச்சி. 

  அருமையான கவிதைகளைப் படைத்த அத்தனை பேருக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும்.

  படத்தைத் தேர்வு செய்த சாந்தி அவர்களுக்கும், கவிதைகளைத் தேர்வு செய்த மேகலா அவர்களுக்கும், வல்லமை ஆசிரியர் குழுவிற்கும் நன்றி.

  வெற்றி பெற்ற கவிஞர் கொ.வை. அரங்கநாதன் அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

 3.  வெற்றி பெற்ற கொ.வை. அரங்க நாதனுக்கும், சுரேஜமீ க்கும் வாழ்த்துக்கள்–சரஸ்வதி  ராசேந்திரன்

 4. “அம்மாவோ அரையில் வைப்பாள்
  அப்பாவோ உயர வைப்பார்
  என்னிளம் பருவம் தன்னை
  இங்கு நான் காணுகின்றேன்” இந்தவரிகளைப் பாராட்டிய மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு
  எனது மனமார்ந்த நன்றி.
  இந்தவாரத்தின் சிறந்த கவிஞ்ஞராகத் தெரிவு செய்யப்பட்ட கொ.வை. அரங்கநாதனுக்கு
  எனது வாழ்த்துகள்.
   
  மேகலா அவர்களின் தேர்வுகள் சிறப்பாக இருக்கின்றன.
     யாவருக்கும் மன்மதவருட வாழ்த்துகளை வழங்கி மகிழ்கின்றேன்.
  எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா.

 5. நண்பர்களே, 

  கவிதைக்கு விருது பெற்ற அருமை நண்பர் கொ.வை. அரங்கநாதன் மற்றும் பங்கெடுத்த அனைத்துக் கவிஞர்களுக்கும், கவிதாயினிகளுக்கும் அடியேனின் மடை திறந்த வெள்ளம் போல், மனம் திறந்த வாழ்த்துக்கள்!   

  கவிதாயினி சரஸ்வதி ராசேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்களும்; நன்றிகளும்!

  அன்புடன்
  சுரேஜமீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *