திரு வி க அவர்களைச் சந்தித்தேன்……
எஸ் வி வேணுகோபாலன்
அன்பின் வி எஸ் கல்யாணராமன் சார்….
ஆஹா…அஹா…
இன்று (ஏப்ரல் 11) மாலை நிகழ்ந்த அற்புதமான சந்திப்புக்கு என்ன தலைப்பு கொடுப்பது…
திரு வி கவைச் சந்தித்திருப்பவரும், அ சீ ரா என்றழைக்கப்படும் பேராசிரியர் அ ஸ்ரீனிவாச ராகவன் அவர்களது மாணாக்கருமான உங்களை எங்கே நாங்கள் சந்தித்தோம்….
நேரே திரு வி கவை சந்தித்தோம்…
அசீரா அவர்களைச் சந்தித்தோம்
எந்த கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையை நீங்கள் வானொலி பேச்சு மூலம் மட்டுமே கேட்டறிய முடிந்ததோ அந்தக் கவிமணியை அல்லவா சந்தித்தோம்..
இன்னும், சொல்லுக்குச் சொல் மேற்கோள் காட்டி நீங்கள் ரசித்துக் கொண்டிருந்த
(பண்டைக் காலத்துப் பயித்தியங்களில் ஒன்றெனவே கண்டு நானும் ஆளாகிக் கொண்டுவிட்ட) பாரதியை தரிசித்தோம்….
இன்னும் இன்னும்……
பட்டினிக்குத் தீனி, கேட்டபின்பு ஞானி என்ற அபிமான கவியரசு கண்ணதாசனும் அல்லவா இன்று நம் கூடவே இருந்தார்….
அப்புறம், ஜே கே? அவரது கதைகளை, நாவலை மட்டுமல்ல….
வேறு இடம் தேடித் போவாளோ இந்த
வேதனையில் இருந்து மீள்வாளோ
நூறு தரம் இவள் புறப்பட்டாள் விதி
நூலிழையில் இவள் அகப்பட்டாள்
என்று சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் தனது அற்புதக் கதையின் திரைப்படமாக்கலில் தானே அற்புதப் பாடல் எழுதிய ஜே கே…
மாட்டையும் சேர்த்துக் கொண்டு போய் நிறுத்தி எனக்கு வாடகைக்கு வீடு கொடுங்கள் என்று அசத்திக் கொண்டிருந்த ஸ்ரீ தேவி உபாசகர் லா ச ரா,
தனது இறுதிக் காலத்தில் மிகுந்த உடல் வேதனைக்கு உள்ளாகி மறைந்துபோன நவீன தமிழ் சிறுகதையாளன் சுஜாதா,
யார்தான் இல்லை….இன்றைய சந்திப்பின்போது……?
முக்கியமாக இலக்கிய திறனாய்வாளர் தி க சி…அவரை நினைவுகூரத்தானே நிகழ்ந்த இலக்கிய சந்திப்பு அது…….
81 வயதில் தளராத மனவுறுதியும், தாள மாட்டாத இலக்கிய தாகமும், அசாத்திய நினைவாற்றலும், அன்பின் கொண்டாட்டத்தில் துள்ளும் உள்ளமுமாக…
உங்களை தனது இல்லத்திற்கு அழைத்து அறிமுகம் செய்வித்த செம்மொழி தி சுபாஷினி அவர்களை வாழ்த்திக் கொண்டே இருக்கலாம்…
அவரது அண்ணன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் விப்ர நாராயணன் தனது மிதமான ஆர்ப்பாட்டமற்ற மொழியில் மறைந்த லாச்சா என்ற வித்வான் ல. சண்முக சுந்தரம் அவர்களது அன்பைப் பற்றி, தமிழ் தாகத்தைப் பற்றி, இலக்கிய ரசனை பற்றி…என்னமாகப் ..பேசினார்..
(ல சண்முக சுந்தரம் அவர்களைப் பற்றி மேலும் அறிய….பின்வரும் இணைப்புகளை வாசிக்கலாம், அவரைப் பற்றி அறிய விரும்பும் அன்பர்கள்)
https://www.vallamai.com/?p=42140
http://www.dhinasari.com/latest-news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-006358.html
இலக்கிய ரசனை, வெறும் கடனே என்று ஒப்பித்தல் அல்ல, உள்ளார்ந்த ரசிப்போடு இலக்கிய வாசிப்பும், பகிர்வும், பரப்பலும் கூட ஒரு பிரும்மானந்த நிலையைக்க் கொண்டுவருமா என்று நான் லாச்சாவிடம் ஒரு முறை நேரே கேட்டேன், ஆமாம், டி கே சி அவர்கள் அப்படியான பேரானந்த நிலையை எட்டியவர் என்று அவர் பதில் அளித்தார். அதே நிலையை அவரும் எய்தினார் என்று சொன்னாரே விப்ர நாராயணன்…(கடந்த மாதம் காந்தி நிலையத்தில் உப்பு வெளி என்னும் மொழிபெயர்ப்பு நூல் குறித்து விப்ரநாராயணன் சிறப்பான அறிமுகம் செய்திருந்தார்)
சிறந்த ரசனை எங்கிருந்தாலும் கொண்டாடப்படவேண்டியதுதானே என்று எல்லோருமே பேசிக் கொண்டோம்….
எல்லையோர படைவீரர்களை உற்சாகப் படுத்தி நிகழ்ச்சி முடித்துக் கொண்டு தில்லி சென்று அப்போதைய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தார்களாம் தமிழக திரை உலகினர். அதில் சந்திரபாபு முக்கிய இடம் வகித்தவர். அவரை அறிமுகம் செய்தபோது, அவரது பாடலை தான் கேட்டு மிகவும் ரசிப்பதுண்டு என்று சொன்ன ராதாகிருஷ்ணன் தனக்கு மிகவும் பிடித்த பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் என்ற பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டாராம்.. சந்திரபாபு பாடப் பாட கண்ணில் நீர் பெருக்கெடுத்தோடிய குடியரசுத் தலைவரைக் கண்டு குதியாட்டம் போட்ட சந்திரபாபு ஓடிச் சென்று அவரது கன்னத்தைத் தட்டிக் கொடுத்து, ரசிகன்மா கண்ணு நீ ரசிகன் என்று மோவாயைத் தொட்டுக் கொஞ்சி முத்தமிட்டு ரசித்திருக்கிறார்….பாதுகாவலர்கள் அதிர்ந்தபோது அவர்களை குடியரசுத் தலைவர் சமாதானப் படுத்தி, சந்திரபாபு ஒரு மாபெரும் கலைஞன், கலைஞன் ஒரு குழந்தை மாதிரி என்றாராம், என்று எப்போதோ வாசித்ததை நான் நினைவு கூர்ந்தேன்.
அப்படியே கம்பனுக்குள் மூழ்கினீர்கள் நீங்கள்…தோழமை என்றவன் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ…
ஆணவம் இன்றி தன்னை ஒப்புக் கொடுத்து ரசிக்கும் மனத்திற்கு, விப்ரநாராயணன், எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ என்ற ஆண்டாளின் 15வது பாசுரத்தில் வரும், வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக என்ற இடத்தைச் சுட்டிக் காட்டி, அந்த நானே தான் ஆயிடுக என்ற பொறுப்பைத் தன்மீது ஏற்றிக் கொண்டு விட்டுக் கொடுத்துப் போகும் ஞானம், பாரதி சொன்ன பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே எனும் பரிபக்குவ நிலை, டி கே சி அவர்களிடத்து இருந்தது என்றார்….
அது அப்படியே லாச்சாவிடம் மிளிர்ந்தது என்று உணர்ச்சி வசப்பட்டார் இளைஞர் காஞ்சி சரவணன்.
தனது சொத்து விஷயம் கோர்ட்டுக்குப் போனபோது, நீதிபதி முன் நின்று, எனக்கென்று பங்கு வேண்டாம்,எனது இளையவர் மொத்த சொத்தையும் எடுத்துக் கொள்ளலாம், இதற்கு எதற்கு உங்களிடத்து வந்தார் அவர் என்று கேட்டு நீதிபதியே அசந்து போகும்படி சொல்லும் உளத் திண்மை டி கே சி அவர்களுக்கு இருந்தது. வாழ்க்கையில் எத்தனையோ துயரங்களை சந்தித்த லாச்சாவிடம் அந்தப் புன்னகை, துணிச்சல் நடை, யார் வந்தாலும் உபசரித்து தனது கையால் சமைத்த அறுசுவை உணவளித்து இலக்கியமும் பகிர்வு செய்து அனுப்பும் அவரது வாழ்க்கை அனுபவம் அற்புதமானது என்றார் விப்ரநாராயணன்.
தி க சி அவரைக் குறித்த நினைவுகளையும் விப்ரநாராயணன் பகிர்ந்து கொண்டார்.
ஸ்டேன்லி மருத்துவமனை ஓவியராக பணியாற்றும் பாலசுப்ரமணியன் அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இந்த சந்திப்பில் பெருமிதம் பொங்க கலந்து கொண்டிருந்தார்.
கலகக் குரல்கள் பற்றிய வரிசையில், மீரா எனும் மீ ராஜேந்திரன் அவர்களது,
திருக்குறளில் தேர்வு எழுதப் போனார்
பாவம் வள்ளுவர் ஃ பெயில் ஆனார்
அவர் படிக்கவில்லை கோனார்
என்ற வரிகளையும்,
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாளும் திருப்பித் தா
நீ கொடுத்த சங்கத் தமிழ் இந்தா
என்ற பகடி கவிதை வரிகளையும்
நான் நினைவு கூர்ந்தது, தனக்கு அந்த நாட்களில் மீ ராவுடன் செலவிட்ட பொழுதுகளை மீண்டும் நெஞ்சில் நிறுத்தியது என்றார் ஓவியர் பாலு.
காஞ்சி சிவா எனும் சிவசங்கரன், தி க சிவசங்கரன் (தி க சி) அவர்களை நினைவுகூரும் முகமாக நிகழும் சந்திப்பில் அதே பெயரில் தானும் வந்து கலந்து கொண்டிருக்கிறேன் என்றார். தரை என்ற பெயரில் மாதம் தவறாது அயல் நாட்டு முக்கிய திரைப்படங்களை விருப்பம் உள்ளோர்க்கு இலவச திரையிடலை காஞ்சியில் செய்து கொண்டிருக்கும் அவரை தளம் பா இரவி பெருமையோடு அறிமுகம் செய்வித்தார்.
ரசனையை மேலும் பெருக்கிய ரசகுல்லா,
சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த என்ற பாரதியைக் கொண்டாடிய வாய்களுக்கு ஒரு பணியாரமும்
பழரசமும் வேறு கொடுத்து மகிழ்வித்த தி சுபாஷினி அவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல….
பெங்களூரு திரும்பிச் செல்லும் எங்கள் அன்பின் அன்பான கல்யாணராமன் அவர்களே, உங்களை எப்படி மறப்போம்….
எத்தனை நகைச்சுவை உணர்வு…..எத்தனை ரசனை…..
உங்களோடு படிக்கும் காலத்தில் படிப்பைக் கை கழுவி வெளியேறிப் போய் கடை வைத்து, கவுன்சிலர் ஆகி, பின் எம் எல் ஏவும் ஆகி பெரிய ஆள் ஆன தங்கவேல், கணிதத்தில் பிளந்து கட்டி சரித்திரம் படைத்த வெறும் கணக்கர் வேலைக்குப் போன தாங்கள், அறிவியலும்-இன்ன பிறவுமாக நகர்ந்த வாழ்வில் அருமையான் இலக்கிய நுகர்வின் மூலம் வாழ்வுக்குப் பொருள் சேர்த்துக் கொண்ட உன்னதம்….
எதை விவாதிக்க, எதை சொல்லாது விட….
திரைப்படப் பாடல், நகைச்சுவை துணுக்கு, பத்திரிகை வாசிப்பு, அங்கதம் என்ற ருசி….ஆஹா…ஆஹா…
எத்தனையோ பெரிய ஆளுமைகளை நேரில் சந்தித்து உரையாடி மகிழ்ந்த உங்கள் காலங்களை எங்களுக்குமாக ஆக்கிக் கொடுங்கள்……என்று கேட்கையில், கவிஞர் வாலியின்,
பொதிகை மலை தோண்டிப்
புதையல் எனக் கண்டெடுத்து
மதுரைப் புலவர்தம்
மனவீட்டில் பூட்டி வைத்த
நிதியாம் நற்றமிழை
நிறுத்தறியாப் பெருஞ்சொத்தை
மதியால் களவாட
முயற்சிக்கும் திருடன் நான்
என்ற கவிதை வரிகளை நினைவு கூர்ந்தேன்…உங்கள் மன வீட்டில் பூட்டி வைக்காது எங்களுக்கும் எழுதி அளியுங்கள், உங்கள் அனுபவங்களை….
வாழ்க நீங்கள் எம்மான், பல்லாண்டு பல்லாண்டு…..
திரு வி கவைச் சந்தித்த ஒருவரை நேரில் பார்த்த ஆனந்தம் ஒன்று போதாதா, என் வாழ்வின் மீதிக் காலத்தை மெருகேற்றித் தர….
வாழ்க பல்லாண்டு….
எஸ் வி வேணுகோபாலன்