தி. சுபாஷிணி

tkc

ரஸிகமணி டி.கே. சி. அவர்களின் 60 வது நினைவு நாளை ஒட்டிய சிறப்புக் கட்டுரை.

 

                          அன்னைபோல் என்னை

                                  அருவியில் நீராட்டி

                               இன்னமுதும் பக்கத்(து)

                                  இருந்தூட்டி–தன்னொடு

                               தங்கு தங்கு என்று சொன்ன

                                   தங்கக் குணத்தானை

                               எங்கு நான் காண்பேன் – இனி

என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் தங்கக் குணத்தானைப் போற்றுகிறார்.யார் இந்தத் தங்கக் குணத்தான் என்று திகைக்கிறீர்களா?கவிமணியே  அவர் யாரென்று சொல்கிறார்.

                                                   கன்னித்தமிழ் போல் கம்பன் கவிபோல் 

                                                    மன்னும் பொதிகை மலையே போல்–பன்னுநம்

                                                      நாடு மகிழச் சிதம்பரநாத நண்பா       

                                                           நீடுநீ வாழ்க நிலைத்து

கவிமணியை உலகறியச் செய்த பெருமகனார் தான் இவர்–டி கே  சிதம்பரநாத முதலியார்.இவரை ரஸிகமணி என்றுதான் அழைப்பர் தமிழுலகம். ரஸனையை வாழ்வின் அடிநாதமாய்க் கொண்டு வாழ்ந்த மாமனிதர்.நல்ல கவியென்றால் அதில் மூழ்கித்  திளைத்தவர் அவர்.’உணர்ச்சியோடு சொல் , இசை,கட்டுக்கோப்பு இவைகளோடு ஒத்த உருவத்தில் வந்துவிட்டதென்றாலே கவி; அதுவே அற்புத சிருஷ்டி’ என்று கவிமணியின் பாடல்களைப் பற்றிப் போற்றுவர் டி.கே,சி அவர்கள்

15tkc

டி,கே,சி   அவர்களின் புதல்வன் தீத்தாரப்பன்(தீபன்) அவர்கள் அகால மரணமடைந்ததைக் கேட்டு கவிமணி அவர்கள் ஒரு இரங்கற்பா எழுதி அனுப்பியிருந்தார், அதைப் படித்துவிட்டு தன் துக்கத்தையும் மறந்து “இத்தகைய வெண்பா தங்களால்தான் எழுத முடியும் கவீக்கும் உயிரையேக் கொடுக்கலாம் என்பது நம்மரபு.தங்கள் கவி உயிரைக் கொடுத்து வந்த மாதிரியே இருக்கிறது.”என்று அவருக்குக் கடிதம் எழுதினார் .’இதோ அந்தப் பாடல்

                                      எப்பாரும் போற்றும் இசைத் தமிழ்ச் செல்வா !என்  

                                                 அப்பா அழகிய செல்லையா–இப்பாரில் 

                                                              சிந்தை குளிர  சிரித்தொளிரும்  நின்முகத்தை

                                                                      எந்தநாள்  காண்பேன் இனி.

 டி.கே.சி அவர்கள்  18-8-1881 ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஜயந்தியன்று பிறந்தார்.தென்காசியில் வளர்ந்தார். குற்றாலம்தான் அவரை ரசனை என்னும் அருவியில் மூழ்கச் செய்து அவ்வின்பத்தைப்  பலரும் துய்க்கச் செய்த புண்ணியத் தலம்.வக்கீலுக்குப் படித்த அவர் தமிழ் இலக்கிய ரசனையின் பக்கம் சாய்ந்து அதில் பிரம்மானுபவத்தைக் கண்ட பிரம்ம ஞானி. ஒரு இரத்ன வியாபாரி ரத்தினக் கற்களைச் சோதித்துப் பார்த்து அவற்றினின்று உண்மையான கற்களைத் தேர்ந்தெடுப்பது போல் தமிழ்ப் பாடல்களைத் தட்டிப் பார்த்து பொய்க் கவிதைகளை புறம் தள்ளி உண்மையான பாடல்களைத் தந்த அன்னப் பறவை அவர்.

தமிழை நினைத்தால் போதும்; தமிழ்ப் பண்பாட்டை, சமய நெறியை,கவியை நினைத்துப் பார்க்க ரசிகமணி நம் எதிரில் நின்று காட்சி கொடுப்பார். தமிழிசை,, நாடகம் ,நடனம்,ஓவியம்,கோவில்,பக்தி இவ்வாறு எல்லாத் துறைகளீலும் அவர் விற்பன்னர்.தமிழ் உரைநடை,தமிழர் வீரம், அவர்தம் வாழ்க்கை ,கொடை, பண்பட்ட உழைப்பு என்று எல்லாவற்றையும்அலசிப் பார்த்த  ஆராய்ச்சியாளர் அவர்.

நமக்கு முறுக்குச் சுற்றுவதும் இட்டிலி செய்வதும் சாதரணமாக இருக்கலாம்.ஆனால் ரசிகமணியோ ஒரு பெரிய கட்டிடம் கட்டும் அளவிற்கு  முக்கியத்துவம் கொடுத்து  இவற்றை விளக்குவார்.ஏனென்றால் சமையல் செய்வதிலும் ஒரு ரசனை வேண்டும் என்பார்.ஆன்மிகம்,விஞ்ஞானம்,மருத்துவம், பொறியியல்  எதுவாயினும் தமிழில் விளக்க முடியும் என்பார் எப்பொழுதும் நண்பர்கள் சூழ அமர்ந்து தமிழ்ப் பாடல்கள் சொல்லி அவர்களைக் குதூகலப் படுத்துவார்.

                                சார்ந்தாரை எவ்விடத்தும்

                                     சார்வனவும் சார்ந்தன்பு

                               கூர்ந்தார்க்கு    முத்தி

                                      கொடுப்பனவும் –கூர்ந்துள்ளே

                              மூளத்    தியானிப்பார்

                                     முன்வந்து    நிற்பனவும்

                             காளத்தி    யார்தம்

                                     கழல்

காளத்தி நாதர்போல் தன்னைச் சார்ந்தோர்க்கு பாடல்களை ரசிப்பதன் மூலம் முக்தியே கொடுத்து விடுவார் நம் ரசிகமணி அவர்கள்.

கவிதானுபவமே அவரை ஆழ்ந்த தியான நிலைக்கு  இட்டுச் சென்று விடும்.அதனால் கவியில் கடுகளவு பிழை இருந்தாலும் அணு அளவு பிறழ்ந்தாலும் டி.கே,சி அவர்களுக்குத் தெரிந்து விடும்.அதனால்தான் கம்பராமாயணத்தின் பாடல்களைப் படித்து ஆராய்ந்து  தமிழுலகுக்கு அவரால் அளிக்க முடிந்தது .இவரைத் தமிழ்ப் புலவர்கள் சாடினாலும் அதைப் பொருட்படுத்தாது  கம்பன் பாடல்களைப் பிரித்தெடுத்து கம்பனுக்கு மகுடம் சூட்டியவர் அவர்.

நாயகனைப் பிரிந்து துடிக்கிறாள் நாயகி.மன்மதனே தன்னைத் துன்புறுத்துவதாக எண்ணுகிறாள்.திடீரென நாயகன் வந்துவிட்டான் .அவளுக்கோ எல்லையில்லா ஆனந்தம்.மன்மதனும் நாணிக் கோணி வருகிறான். மன்மதனைப் பார்த்து எக்காளத்தோடு பாடல் பாடுகிறாள்.இதோ அந்தப் பாடல்;

                                எய்ய வந்த காமா நீ

                                       இங்கு வர வேண்டாம் காண்

                                       உய்ய வந்தானோடு

                                        உறவானேன்-பையவே

                                      தேரை விடு  பூவைமுடி

                                         தின்றுவிடு  மென்கரும்பை

                                       மீனை ஒரு காசாக

                                         வில்

இந்தப் பாட்டைப் படிப் பாடிப் பார்க்கிறார். ரசிகமணியின்  வகுப்பில் பாடல் படிக்கும் முறையே தனி .ஒவ்வொரு அடியாக பிரித்துப் படிப்பார். முன்னுரையாக  ஒரு கதை வரும்.முடிவில் நமக்குள்    பாடல் போய்விடும். இந்த மாய வித்தை அவரால்தான் செய்ய முடியும்.இது எப்படி எனக்குத் தெரியும் என்று எண்ணுகிறீர்களா?.நான் அவருடைய சீடர் திரு ல.சன்முக சுந்தரம் அவர்களிடம் பாடல் சொல்லக் கேட்டிருக்கிறேன்.அவர் இன்று நம்மிடையே இருக்கிறார்.அவருக்கு வயது 93 ஆகிறது.என் தந்தையும் அவரும் ஒரே சமயத்தில்(1946-ல் ) டி கே சி யிடம் சேர்ந்தனர்.

மேற்சொன்ன பாடலைப் படிக்கிறார்.சொல் தட்டுகிறது, பிழைகள் நீக்கப் பட்டு புதிய பாடல் ஒன்று துள்ளி வருகிறது

                                                  எய்ய வந்த காமா!

                                               இனி உனக்கு வேலை இங்கென்!

                                                   உய்ய வந்தான் தன்னோ(டு)

                                                உறவானேன் –பையவே

                                                  தேரை விட்டு மென்கரும்பைத்

                                                தின்றுவிட்டுச் செய்ய வந்த

                                                  போரை விட்டுப் பூ முடித்துப்

                                               போ

இப்படித்தான் பாடல்களுக்கு  உயிர் கொடுத்தார் ரசிகமணி அவர்கள் இதுதான் அவர் தமிழுக்குச் செய்த தொண்டு.

விருந்தோம்பலில் பிரம்மானுபவத்தைக் கண்டவர் மாமுனி ரசிகமணி அவர்கள்.அவருடைய இல்லத்தில் விருந்தினர்கள் நண்பர்கள் , உறவினர்கள் குழாம் எப்பொழுதும் இருந்தவண்ணம் இருக்கும். ரசிகமணியின் கவிதானுபவத்தைக் கேட்டு மகிழவே  தமிழ்ப் புலவர்கள் ,அறிஞர்கள்,அரசியலறிஞர்கள் , சாதாரன வேலைக்காரர்கள் என்று பலதரப்பட்டவர்கள் வருவார்கள்.காபிபொடி விற்பவரும் கவர்னர் ஜெனரலும் அவர்முன் சமம்.செவியின்பத்திற்குப்பின்  பசியாற உணவு பரிமாறப்படும். பந்தியிலும் எல்லோரும்  சமமாக உட்கார்ந்திருப்பார்கள்.தினமும் பலர் உண்பார்கள்.திடீரென்று நண்பர்கள் வந்தாலும் அவர் மனைவி பிச்சம்மாள் அவர்கள் மனம் சலியாமல் மகிழ்ச்சியுடன் உணவு தயாரித்து பரிமாறுவார்கள். எல்லோரும் எவ்வாறு உண்கிறார்கள்  என்று பார்த்துவிட்டு பலவகை உணவுகளை  எவ்வாறு ரசித்து உண்ண வேண்டும் என்று பிரசங்கமே செய்வார். ஏனெனில் வாழ்க்கையே ஒரு ரசனையான அனுபவம் தானே என்பது அவர் கருத்து. வாழ்க்கையில் ஒரு லயம் இல்லையெனில் அது வாழ்க்கையாகாது, மாடு தண்ணீர் குடிப்பதுபோல பாயாசத்தை குடிக்கக் கூடாது; அதை ரசித்து  ரசித்து இலையிலிருந்து எடுத்து உண்ண வேண்டும் என்பார்.இடையிடையே பாடலும் சொல்லுவார்.உண்பதை மறந்து அனைவரும் ரசிப்பார்கள்.அப்பொழுது அம்மையார் அவர்கள் மற்றொரு பாடல் சொல்லுங்கள். டிபன் நேரமும் வந்து விடும். எல்லோருக்கும் டிபன் பரிமாறிவிடலாம் என்பார்கள்.இத்தகையதொரு குதூகலமான குடும்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா ?தான் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெற வேண்டும் என்று உண்மையாக நினைத்தவர் ரசிகமணி அவர்கள்.இது பிரம்ம ஞானிகளின் நிலைதானே.

இலக்கியத்தை ரசித்தவர்கள் பலர் இருக்கலாம். இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கலாம்.ஆனால் ரசணையின் உண்மைப் பொருளை உனர்ந்து தானே மெய்மறந்து ரசித்து ஆழ்ந்த தியான நிலைக்குச் சென்ற ஞானிதான் இந்த ரசஞ்ஞானி.ரசிகமணியும் அவரது சீடர் திரு.ல.சண்முக சுந்தரம் அவர்களும்  தென்காசியில் ஒரு வீட்டிற்குச் சென்று அந்த வீட்டு நபரை அழைக்கிறார்கள்.அவர் வரவில்லை.ஆனால் அவர்கள் இருவரும் வீட்டுத் திண்ணையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து பெசிக் கொண்டிருந்தார்கள்.அரைமனி நேரங்கழித்து வந்த அந்த வீட்டு நபர் இவர்கள் இருவரையும் பார்த்து  சிரித்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.மேலும் அரைமணிநேரம் காத்திருந்து விட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.சிறிது தொலைவு சென்றபின் சண்முக சுந்தரம் அவர்கள் ரசிகமணியிடம்   ”என்ன அநியாயம் அவன் உங்களை மதிக்கவில்லை; சும்மா அவன் வீட்டில் அமர்ந்து விட்டு வந்ததன் நோக்கமென்ன? என்று கேட்டார்.அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை;என்னை நகையாடிக் கொண்டிருந்தான்;அவன் என்னை அவமானப் படுத்த வேண்டும் என்று எண்ணினான். அவனுக்கு ஆனந்தத்தைத் தரலாம் என்றுதான் வந்தேன் என்றார். நகையாடியவனுக்கு இப்படியொரு மரியாதையா என்று நீங்கள் நினைக்கலாம்.கவர்னர் ஜெனரல் , ஜவஹர்லால் நேரு, கல்கி, பெரியார் .உ,வே சா போன்ற  பெரிய மனிதர்களுடன் பழகிய மாமேதை இந்தச் செயலைச் செய்யலாமா? என்று நீங்கள் நினைக்கலாம். ”தம்மை வெறுத்தாரை தாம் உகத்தல்என்பது ஞானிகளின் நிலை.அந்த நிலையை உணர்ந்தவர் ரசிகமணி அவர்கள்.அந்த நிலையை அவருக்கு அளித்தது ரசனைதான்,  இத்தகைய பண்பு துறவிகளிடத்திலும் முனிவர்களிடத்திலும் நாம் எதிர்பார்க்கலாம்.ஆனால் ஒரு இலக்கிய வாதியிடம்  நாம் காண முடியுமா. அதுதான் ரசிகமணியின் உன்னத பண்பு.

வழக்கறிஞருக்குப் படித்தவர் ரசிகமணி அவர்கள். ஆனால் வழக்கறிஞர் தொழில் பார்க்கவில்லை.பிரம்ம ஞானி அல்லவா அவர் .பொய் சொல்லத் துணியாது அவர் மனம்.குடும்பச் சொத்து  டி.கே.சி யின் பொறுப்பில் இருந்தது.சொத்து பிரிக்கப் படவில்லை.அதனால் அவரை எதிர்த்து அவர் தமையனார் மகன்  சொத்து வழக்கு ஒன்று பதிவு செய்தார்.வழக்கு விசாரணைக்கு வந்தது.ரசிகமணி அவர்கள் நீதிபதிமுன் நின்று”சொத்துக்களின் மீது எனக்கு நாட்டம் இல்லை.என் சகோதரன் அவர் பங்கை கேட்பது நியாயம்.என்னிடம் நேரிடையாகக் கேட்டிருக்கலாம்அவர்கள் சொத்து முழுவதையும் அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன்.அவர் எடுத்துக் கொண்டது போக மீதியை நான் எடுத்துக் கொள்கிறேன்”என்று சொன்னார்.நீதிபதி அவர்கள் ஆச்சரியப்பாட்டார், நீதிமன்றமே அதிசயித்தது இக்காலத்தில் இம்மாதிரி ஒரு மனிதனா?என்றார் அவர்.இப்பண்பு அவருக்கு ரசனை அளித்த கொடை

வாழ்க்கையை ரசிக்கப் பழக வேண்டும். அணு அணுவாக ரசிக்க வேண்டும்.அந்த ரசனையை பள்ளிகள் தருவதில்லை.பாடத்தை மாணவர்கள் தலையில் திணிக்கிறார்கள் என்பாரவர். அது இன்றும் நிகழ்கின்ற விஷயம்தான்.அதனால் தன் மகன்களுக்கு வீட்டிலேயெ கல்வி போதித்தார்.பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கும் தன் பிள்ளைகளுக்கும் புரிதலில் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுவார். மகாத்மா காந்தி, வினோபா,நேரு. போன்ற அரசியல்வாதிகளைச் சந்தித்தாலும் தமிழ்க் கவி இன்பத்தை அவர்களுக்கு அளித்து தமிழின் பெருமையை விளக்காமல் இருக்கமாட்டார்.இவரது கம்ப ராமாயண ரசனையில் மோகித்து வீழ்ந்தவர் இராஜாஜி அவர்கள்.கல்கி அவர்களை தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தியவர் ரசிகமணிதான்.”பண்பாடு’,’வாய்க்குருவி’என்ற சொற்களைஅறிமுகப் படுத்தியவர் இவர்தான்.

இக்கட்டுரையை எழுதியதன் நோக்கம் தமிழகத்தில் இத்தகையதொரு அரிய மாணிக்கம் தமிழை வளர்த்தார் என்று நம் இளைஞர்களுக்கு தெரிய வேண்டு மென்பதே.  இசை,இயல்,நாடகம் முதலிய மூன்று துறைகளிலும் தமிழ் சிறக்க வேண்டும் என்று தமிழ்  இசை ஆராய்ச்சி மன்றத்தை நிறுவிய முதல் தமிழர்.கம்ப இராமாயணம் உலகமெங்கும் பரவ வேண்டும் என்று முதன் முதலில் கம்பன் கழகத்தை  அமைத்தவர்.வட்டத்தொட்டி என்ற அமைப்பை உருவாக்கி வட்டமாக பல அன்பர்களை அமரவைத்து தமிழ்ப் பாடல்களில் தான் பெற்ற அனுபவத்தை அவர்களிடம் பரிமாறி ஆனந்தத்தில்  திளைக்க வைத்த மாமுனிவர். எதையும் நாம் உண்மையாக உணர்ந்து உண்மையாக செயல்பட்டால் அது உயரிய ஆன்மநிலைக்கு  இட்டுச் செல்லும்  என்பதற்கு டி.கே,சி யின் வாழ்க்கை ஓர் எடுத்துக் காட்டு மரணத்தையும் ஆனந்தமாக அணைத்துக் கொண்டவர். மரணிக்கும் தருவாயில் பிற்பகல் 12 மணி வெய்யிலை அவர் குளிர்ந்த நிலவொளியாக உணர்ந்து மரணத்தைத் தழுவினார் 1954ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் நாள்.தங்கக் குணத்தானின் ரசானுபவத்தை நம் தமிழுலகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகமணியின் அன்பர்களின் விருப்பமாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தங்கக் குணத்தான்!

 1. ரசிகமணியின் கோடானுகோடி  ரசிகர்களில் நானும் ஒருத்தி. அவரைப் பற்றி எங்கு எழுதி இருந்தாலும் படிக்க ஆவல். திரு கி  ராசநாரயணன் வழியாகப் பல செய்திகளை அறிந்தேன் . இன்று உங்கள் பதிவு அமிர்தமாக வந்தது.  மிக     இனிமை. வாராது போல வந்த மாமணிக்கு அஞ்சலிகள்.

 2. இத்தகைய இலக்கிய சுவை போற்றும் கட்டுரைகள் வருவதில்லை என்பதாலேயும், அவற்றை படித்து, நுகர்ந்து, அனுபவித்து, கருத்துத் தெரிவிக்கும் கூட்டம் மறைந்து போனதாலேயும், நான் அதிகம் எழுதுவதில்லை. தேடி, தேடி படிப்பதுடன் சரி. திருமதி. தி.சுபாஷிணி எழுதுகிறார். சுவை கூடுகிறது. மற்றவர்கள் படிப்பார்கள் என்று நம்ப விரும்புகிறேன்.
  வாழ்த்துக்கள், திருமதி. தி.சுபாஷிணி

 3. இரசிகமணி ஐயாவைப் பற்றிய கட்டுரை என்பதால், அவரைப் பற்றிய ஒவ்வொரு வரியும் மிகுந்த ரசனையுடன் வெளிப்பட்டிருக்கிறது.

  பொருளாதாரம் சார்ந்த இலக்கை அடைவதே குறிக்கோள் என்று அமைத்துக் கொண்டு, இரசனை என்பதற்கு சிறிதும் இடம் அளிக்காத வாழ்க்கை முறையால், ஏதேனும் ஒரு காலகட்டத்தில் வாழ்க்கை மேல் ஒரு சலிப்பு வந்துவிடும்.

  அவ்வாறு இல்லாமல் வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்வது எப்படி என்பதற்கு இரசிகமணி ஐயாவின் வாழ்க்கை ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணம்.

  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *