இலக்கியம்கவிதைகள்

எரியும் வேதனை..

நாகினி

 

அரசுப்பள்ளி மாணவரும் ஆங்கிலம்
நுனி நாக்கில் பேசுகிறார்…
வீட்டுக்கொருவர் படிப்பாளர் என
கல்வி நிலைப் பல்கித் தான் வருகிறது…
அடுப்படியே கதிஎனும் நிலை பெண்களும்
விமானம் ஓட்டி விண்ணையே எட்டுகிறார்…
கிராமத்தின் மண் சாலைகளும்
பளபள சிமெண்ட் பூச்சாகியது…
ஓலைக் குடிசையிலும் ஒளிவிளக்கோடு
டிவி,மிக்சி,மின்விசிறி என அறிவியல்
சாதனங்கள் சாதாரணப் புழக்கமாகியது…
தொன்னையில் டீ தருமளவிற்கு
சாதியால் ஒதுக்கப் பட்ட நிலையும்
சற்று ஒதுங்கித்தான் போய் விட்டது….
ஆம்…நினைக்கவே பிரமிப்பாக!

சமூகத்தின் நற்பிம்பக் காட்சியைக்
காலக் கண்ணாடி காட்டினாலும்..
வாழ்க்கை வானில்
நீங்கா வறுமைக் கோடுகள்..
பெண்சிசுக் கொலை…
பாலியல் வன்கொடுமை…
சாதிமதக் கலவரமென
இன்றளவும் மறையாத நிரந்தர
வன்முறைக் கேடுகள்
உலவுவதை உற்று நோக்குங்கால்…
மன மூலையில் இனம்புரியா
வேதனை வலி தீயாய்
எரியத் தான் செய்கிறது!!

— நாகினி

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க