மேகலா இராமமூர்த்தி

 

11096973_812600832127451_1724852484_n

திருமிகு. ஆர். லக்ஷ்மி அவர்களின் கைவண்ணத்தில் மிளிரும் ’மாடும், மாதும் ஒற்றையடிப் பாதையில் நடைபயிலும்’ இப்புகைப்படம், கவிதை வடிப்பதற்கு அழகானதோர் களத்தைக் கவிஞர்கட்குத் தந்திருக்கின்றது.

முன்னே மாட்டை நடக்கவிட்டுப் பின்தொடரும் அம்மங்கை, தன் கையிலுள்ள கோலை மாட்டை அடிப்பதற்காக உயர்த்திப் பின்பு அதன்மீது அடிவிழா வகையில் இறக்கியிருப்பதைக் காண்கையில் ‘கடிதோச்சி மெல்ல எறிக!’ எனும் வள்ளுவம் என் நினைவில் நிழலாடக் காண்கிறேன்.

முன்பு, நம் மக்களின் செல்வமாகத் திகழ்ந்தவை இம்மாடுகளே அல்லவா? வீட்டிலிருக்கும் மாடுகளின் எண்ணிக்கையை வைத்துத்தான் முல்லைநில மக்களின் செல்வச்செழிப்பு அக்காலத்தில் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதனாலன்றோ ’மாடு’ எனும் சொல்லே அன்று ’செல்வம்’ எனும் பொருளைத் தந்தது. வான்புகழ் வள்ளுவரும்,

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. (குறள்: 400) எனும் குறளில் மாட்டை, ’செல்வம்’ எனும் பொருளில் பயன்படுத்தியிருப்பதைக் காண்க.

இனி, கவிஞர்களின் படைப்புக்களுக்கு வருவோம். கிட்டத்தட்ட 25 கவிதைகள் இவ்வாரப் படக்கவிதைப்போட்டிக்கு வந்திருப்பது வல்லமை வாசகர்கள் இப்போட்டிக்குத் தரும் பேராதரவைத் தெளிவாய்ப் புலப்படுத்துகின்றது.

கவிதைகளைக் கவனித்ததில், ஒரு சில கவிதைகள் தவிர்த்துப் பெரும்பாலானவை பசுமையற்ற வறட்சி, அவ்வறட்சியால் உயிர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவலநிலை, அதிவேக நகரமயமாதலால் விரைந்து அழிந்துவரும் உழவுத் தொழில் இவற்றைப் பற்றியே கவல்கின்றன. சமூக அக்கறையோடு கூடிய இச்சிந்தனைகள் வரவேற்பிற்குரியவையே என்றபோதிலும் அளவுக்கதிகமான அவலச் சுவையை இவை கவிதைகட்கு ஊட்டிவிடுகின்றன என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும்.

இவ்வுத்தியை விடுத்து, ஒருசிலரேனும் வேறுவகையில் சிந்தித்து, மங்கையும் மாடும் தத்தம் பணிகளைச் செவ்வனே முடித்துவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்புவதாகவோ, அல்லது மாடு தன் கன்றுக்குப் பாலூட்ட வேண்டுமென்ற வேட்கையில் மங்கையை முந்திக்கொண்டு விரைந்து செல்லுகின்றது என்ற வகையிலோ தங்கள் கவிதைகட்கு உவகைச் சுவை ஊட்டியிருக்கலாம், கவிதையின் போக்கை மாற்றியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. எனினும் உங்கள் முயற்சிகட்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து, என் கருத்தைக் கவர்ந்த கவிதை வரிகள் உங்கள் பார்வைக்கு…

கொடுவெயில் எரித்து என் பாதம் கருக்கியே
கடுக்கின்ற கால்கள் இரண்டும் – வெந்தாலும்
பாடுபட்டு உழைக்கும் பாமரப் பெண் நான்
விடுபடாதென் நெஞ்சுரம் என்றும்! என்று பாமரப் பெண்ணின் நெஞ்சுரம் பேசும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

*********************

களிறைக் கட்டி
கலநெல் அடித்து
களிப்பாய்க் கூடி
வாழ்ந்த காலமெங்கே?
கையால் அடித்து
வரும்நெல் சேர்த்து
வயிறு வளர்க்க
வாழும் காலமிங்கே! எனும் திரு. சுரேஜமீயின் அக்கால இக்கால ஒப்பீட்டு வரிகள்…

********************

வான் பொய்ப்பினும், தான் பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
கானல் நீரெனப் பொய்ப்ப…….
….
பசுந்துளிர் தேடும் நீள்பயணம்,
மங்கைக்கும் மாட்டுக்கும்
விடியலில் முடியட்டும்! எனும் திருமிகு. ஞா. கலையரசியின் நம்பிக்கை வரிகள்…

*********************

மாடு கண்ணு காடு கழனியில
புல்லு தின்ன காலம் மாறி
நெகிழி பையை தின்னுற
நிலைமை தான் ஆச்சுது! என்று மாட்டின் இன்றைய அவலம் கூறும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

*********************

தாகமான மாட்டுக்கு
தண்ணிதேடி போறியா- இல்லை 
பசியெடுத்த மாட்டுக்குப் 
புல்லுதேடிப் போறியா- இல்லை 
மாமனுக்கு சீதனமாய்
மாட்டைத்தரப் போறியா? என்று கேள்விக்கணைகளை மங்கையிடம் தொடுக்கும் திரு. எஸ். பழனிச்சாமியின் வரிகள்…

**********************

அறுப்புக்குப் போடாமல் அன்போடு மேய்க்கும் 
பொறுப்பில் இருக்கும் கருணை வடிவமே  
ஆண்டவன் வாழும் அமைப்பு… என்று மாட்டிடம் அன்பு பாராட்டும் மங்கையைப் பாராட்டுகின்ற திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

***********************

இல்லாமை வெள்ளாமை
ஆகும் போது 
வேளாண்மைத் தொழில்
பொல்லாமை ஆகுது !…
வறுமை நீக்கா உரிமை நாடு
வாழ்வை அரிக்கும்
நரகக் காடு! என்று மக்களைக் காவாத நாட்டை இடித்துரைக்கும் திரு. ஜெயபாரதனின் வரிகள்…

***********************

என்ஜோட்டு 
பொண்ணுங்கள்ளாம் 
கல்யாணம் கட்டிக்கிட்டு 
ஓடிப் போக 
நான் மட்டும் 
உன் வாலைப் 
பிடிச்சிக்கிட்டு  
ஊரு மேயறேன்! என்று படிப்பு வராததால் மாடுமேய்ப்பதாக மங்கையவள் புலம்பும் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரின் வரிகள்…

************************

வரலாறு பதிந்து கொண்டிருக்கா 
இந்த ஒற்றையடிப் 
பிரபஞ்சங்கள்… அழுகவுமில்லை..
இடிந்துவிட்டிருக்கவும் இல்லை…என்று நம்பிக்கைக் கீற்றைக் கவிதையில் நட்டிருக்கும் திரு. நல்லை. சரவணாவின் வரிகள்…

*************************

கால் நடையா போற எனக்கு
இந்த கால்நடையை தவிர
வழித்துணையா யாரும் இல்லை…என்று சோகத்தினூடும் வார்த்தை விளையாட்டு நிகழ்த்தியிருக்கும் திரு.திருமலைசோமுவின் வரிகள்…

*************************

இப்படி, நல்ல ஓட்டமும் சொற்செட்டும் கொண்ட கவிதைகள் பல நம் இரசனைக்கு விருந்து படைத்தாலும், சுருக்கமும், கருத்தாழமும் கொண்ட நம்பியவள் நடக்கின்றாள்’ எனும் கவிதையை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகவும், சொல்லவந்ததை ’நச்’சென்று சொல்லி விளங்க வைத்திருக்கும் திரு. ஜெயராம சர்மாவை இவ்வாரப் போட்டியின் சிறந்த கவிஞராகவும் தேர்ந்தெடுக்கிறேன்.

நம்பியவள் நடக்கின்றாள்
———————————————

நீரற்ற நெடுந்தரை நெஞ்சமெலாம் பெருங்கனவு
காரற்ற நெடுவானம் கற்றரையில் நடைப்பயணம்
வேரற்ற வாழ்வினிலே விடிவுதனை எதிர்பார்த்து
நார்போன்ற பெண்ணவளும் நரம்புதெரி எருதோட்டி
நம்பிக்கை மனமேற்றி நம்பியவள் நடக்கின்றாள்!

பாராட்டுப்பெற்ற, பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்கட்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து படக்கவிதைப் போட்டிகளில் ஊக்கத்தோடு பங்குபெறுக! சிறந்த கவிஞராய்த் தேர்வு பெறுக! என வல்லமை வாசகர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி – 6-இன் முடிவுகள்

  1. வாழ்த்துகள் ஜெயராம சர்மா அவர்கட்கு

  2. நம்பியள் நடக்கின்றாள் என்ற தலைப்பில் அழகான வரிகளுடன் கவிதை புனைந்து இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வு பெற்ற திரு. ஜெயராம சர்மா அவர்களுக்கும், பாராட்டுப் பெற்ற மற்ற கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    போட்டிக்கு வந்த பல கவிதைகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுத்த மேகலா ராமமூர்த்தி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

  3. சிறந்த கவிஞராகத் தேர்வு பெற்றிருக்கும் திரு சர்மா அவர்களுக்கும் சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுத்த  மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

  4. அன்புள்ள பவளசங்கரி, 

    முக்கலைஞர் பங்கேற்பின் முழுக் கருத்தோட்டம்.

    படக்கவிதைப் போட்டித் தேர்ந்தெடுப்பில் மேகலாவின் முடிவுரையோடு, படக்கலைஞர் ஆர். லட்சுமியின் உரையும், சாந்தி மாரியப்பன் கூற்றும் கலந்திருந்தால், மூவர் பங்கேற்ற விளைவின் கருத்தோட்ட முழுமையை வாசகர் அறிய வாய்ப்பிருக்கும்.

    சி. ஜெயபாரதன்

  5.        படக்கவிதைப் போட்டி 6 இல் ” நம்பியவள் நடக்கின்றாள் ” என்னும் கவிதையை 
    தேர்ந்தெடுத்து .. அதற்கான விளக்கத்தை வள்ளுவர் பாணியில் சுவைபடச் சொல்லி 
    போட்டியை நல்ல முறையில் பரிசீலனை செய்த .. மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு
    எனது மனமார்ந்த நன்றி.
       எனது தெரிவால் மகிழ்ச்சியுற்று என்னை வாழ்த்திய .. புனிதா கணேசன் , கே.எஸ் . சுதாகர் 
    எஸ். பழனிச்சாமி , ஞா. கலையரசி ஆகிய அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றி.

         எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்.

  6.     சிறந்த கவிஞராக தேர்வு பெற்றிருக்கும்  ஜெயராம சர்மாவுக்கும்,தேர்ந்தெடுத்த

    மேகலா ராமமூர்த்திக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்—-சரஸ்வதிரசேந்ததிரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.