நான் அறிந்த சிலம்பு – 160

-மலர் சபா

மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

கவுந்திக்கு மதுரையின் காட்சியையும் அரசனின் கொற்றத்தையும் கோவலன் உரைத்தல்

நிலத்திற்குப் பலவகைச் செல்வங்களும் தரும்
அருள்மிக்க ஆணையையும் முறைமையும்
மேற்கொண்டு செலுத்தும்
பாண்டியர்களின் சிறப்புவாய்ந்த செங்கோலும்   man
குடையின் குளிர்ச்சியும்
வேலின் வெற்றிச்சிறப்பும்
இவையெல்லாம் விளங்கிநிற்கும்
சிறப்பான நகரம் இந்த மதுரை.

இந்த நகரில் வாழ்வதில் மகிழ்ந்து
வேறு எந்த இடத்துக்கும் சென்று
தங்க விரும்பாத
சிறப்பான நகரம் இந்த மதுரை,
மூதூரான மதுரை நகர்
கண்டுகளித்த கோவலன்
அங்கே
அறத்தினைப் பலருக்கும் அறிவுறுத்தும்
உள்ளமுடைய அறவோர்கள் வாழும்
புறமதிலின் இடத்து உள்ள
மூதூர்ச் சோலையுள் புகுந்து
தீமைகள் நீங்கிய
மதுரை நகரின் சிறப்பையும்
பாண்டியனது அரசாட்சியின் சிறப்பையும்
கவுந்தியடிகளுக்குக் கூறினான்.

மாடல மறையவன் வர, கோவலன் அவனை வணங்குதல்

தாழ்ந்த நீரை வேலியாகக் கொண்ட
தலைச்செங்காடு எனும் ஊரில் உள்ள
நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்து
நன்மையை விரும்பும் கொள்கையுடைய
மறையோர்களின் தலைவனாகிய
மாடலன் என்பவன்
தவத்தில் சிறந்த அகத்திய முனிவரின்
பொதிய மலையை வலம் வந்து
குமரியின் பெரிய துறையில்
முறையான கொள்கைப்படி நீராடி
அங்கிருந்து,
தன் சுற்றத்தார் இருக்கும் இடத்துக்குச் சென்று
திரும்பி வந்தான்.
திரும்பி வரும் வழியில்
நடந்து வந்ததால் உண்டான
களைப்பு நீங்கும்வண்ணம்
நல்ல நிழல் படிந்த சோலையில்
கவுந்தியடிகள் இருந்த தவப்பள்ளிக்கு
வந்து சேர்ந்தான்.
கோவலன் அவனிடம் சென்று
அவன் தாள் பணிந்தான்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 201 – 218
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

படத்துக்கு நன்றி: கூகுள்

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *